• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

காதல் ராஜ வீதியில் - 3

Vishakini

Moderator
Staff member

3

இடது கையில் ஏதோ புதிய பை இருக்க, தனக்காகக் காத்து நின்ற அண்ணனைப் பார்த்து வலது கைக் கட்டை விரல் விரல் உயர்த்தி ஏதோ சாதனை செய்தது போல் மகிழ்வாகச் சுழன்று ஆடி வந்தாள் வனி. பதிலுக்கு அவளைப் பார்த்து புன்னகைத்தவன் அது அவள் கண்களுக்குப் புலப்படாது என்று தலையசைத்தான்.

ஆட்டத்தை விட்டு வேகமாக நடந்து வந்து அண்ணனின் தலைக்கவசத்தில் கொட்டியவள், “நீ குருவம்மான்னு சொன்னதும் கேட்டுச்சு. செல்லத்தாயீன்னு சொன்னதும் கேட்டுச்சு” எனச் சிரித்தாள்.

“என்ன? சிரிச்சதும் பார்த்தே, தலையாட்டுனதும் பார்த்தே அவ்வளவு தானே? அதுக்கு எதுக்கு இம்புட்டு பெரிய வார்த்தை? நான்லாம் அதுக்கு ஒர்த் இல்லை” என்ற அண்ணனைக் குழப்பமாகப் பார்த்தாள் வனி.

அவள் பார்வைக்குப் பதுங்கி, “அதை விடு. வண்டில ஏறு” என வண்டியைக் கிளப்பினான் அண்ணங்காரன்.

“இல்லியே? ஏதோ நெருடுதே?” என யோசித்துக் கொண்டே அண்ணன் பின்னே ஏறியவள் அதிர்ந்து அவன் தலையில் கொட்டுவதாக நினைத்து தலைக்கவசத்தில் வேகமாகக் கொட்டி வலியில் கையை உதறினாள்.

“எரும மாடே! என்ன பேச்சு பேசுற?” என்றபடி கலகலவென்று சிரித்தாள். “உனக்கு ஒரு பொண்ணுக்கே வழியில்லை. இதுல குருவம்மாவாம்! செல்லத்தாயாம்! நினைப்பைப் பாரு!”

அண்ணனும் தங்கையும் சிரித்து பேசிக் கொண்டே வீட்டுக்கு வண்டியை விரட்டினார்கள்.

இருவரும் அவளுக்குத் தைக்க கொடுத்து இருந்த புது ரவிக்கையை வாங்க வந்து இருந்தார்கள். அதை வாங்கிவிட்டு வரும் வரை அவன் அவனுடைய வேலையைப் பார்த்துக் கொண்டு நின்று இருந்தான். அதாவது பராக்கு பார்ப்பது.

நேற்று தமிழ் இவள் தனியாக ஷாப்பிங் போனதற்கு கும்மி அடித்ததில் இன்று இவளாக முடிவு செய்து அண்ணனைத் துணைக்குக் கூட்டிக் கொண்டு வந்து இருந்தாள் வனி. அவனும் இன்று மருத்துவமனைக்கு தாமதமாகச் சென்றால் போதும் என்பதால் வந்து இருந்தான்.

“இதே வழக்கமா வச்சிக்காத” என மிரட்டியும் இருந்தான்.

“ஏதோ வயசான காலத்துல உளறி வச்சு இருக்கார். அதுக்கு எதுக்கு இத்தனை பில்டப்? ஏதோ சொல்ற. எனக்கும் ஒரு சேஞ்சா இருக்கும்னு வர்றேன்“ என்றபடி வண்டியைக் கிளப்பியவனின் கோபத்தை அவன் தங்கை, “ நீ வேற ஏதாவது சைட் அடிக்கலாம்னு.. இந்தா பொருளைச் சொன்னேன் பொருளைச் சொன்னேன, ஏதாவது உனக்குப் பிடிச்ச பொருளை லுக் விடுவியோன்னு கேட்டேன். அதை விட்டு சேஞ்சு சில்லறைங்கிறியே? அதைச் சொன்னேன். வேற ஒன்னும் இல்ல. நீ டென்ஷன் ஆவாத“ என்று கூட்டி குறைத்து குறளி வித்தைக் காட்டி எப்படியோ இருவரும் ஊர் சுற்றக் கிளம்பி வந்து இருந்தனர்.

அப்படி வந்தும் வாயைக் கட்டாமல் எப்போதும் தைக்கும் தையல்காரப் பெண்ணிடம் கொடுத்திருந்த புதிய ரவிக்கையை வாங்கி போட்டுப் பார்த்துவிட்டு பெருமிதமாக வந்தவள்தான் மதிவாணனிடம் முதலில் கண்ட இத்தனையும் பேசியது. அத்தோடு விடாது “என் டெய்லர் கூட ரொம்ப அழகு தெரியுமா? நீ ஏன் அவங்களக் கேக்கக் கூடாது?…அட சட்டை தைக்கக் கேக்கிறது பத்திக் கேட்டேன்” என இன்னும் வாய் ஓயாமல் பேச, வாணன் புன்னகைத்தபடி அவளுக்கு சாரதி ஆனான்.

ஒரு இரண்டு மணி நேரம் அண்ணனுடன் ஊரைச் சுற்றிவிட்டு தங்கள் வீட்டில் இறங்கிக் கொண்டாள் வனி. மதிவாணன் வீட்டில் கால் கூட ஊன்றாமல் வண்டியை எடுத்து விட்டான். இன்று ஞாயிறுதான். ஆனாலும் பொறுப்பு இருக்கிறது என்று ஓடிவிட்டான்.

“சாப்பிட்டு போடா” என்ற தங்கைக்கு “பசியில்ல” என்ற பதிலைக் காற்றோடு கலந்து பறக்கவிட்டுச் சென்றான்.

இன்று எந்த விசேஷமும் இல்லை என்றாலும் கோவிலுக்குச் சென்ற அன்னையும், தந்தையும் இன்னும் வராததால் சமையல் அறைக்குள் சென்று திருட்டுப் பார்வை பார்த்துவிட்டு ஓரமாகப் பதுக்கி வைத்து இருந்த தேன் பாட்டிலை எடுத்து வைத்தவள், ப்ரெட்டை அடுப்பில் வாட்டி அதில் தேனை மனம் கொண்ட மட்டும் வழிய ஊற்றி சாப்பிட ஆரம்பித்தாள். அவ்வளவுதான் அவள் திருட்டுத்தன லட்சணம்!

முழு உணவும் இல்லாது சிற்றுண்டியும் இல்லாது நொறுக்குத் தீனியும் இல்லாது இப்போது அவள் சாப்பிட்டது அவளுக்குப் பிடித்த உணவுகளில் ஒன்று. அடுத்து பசிக்கும் போது அவளின் அன்பு அம்மா வந்து விடுவார். அப்புறம் சாப்பாட்டுக்குப் பஞ்சம் ஏது?

தேன் பிரட் சாப்பிட்டு வயிறு நிறைந்ததால் மனதும் மகிழ்ந்திருக்க ஹோம் தியேட்டரை உயிர்பித்தாள். அப்படியே ஆடிக்கொண்டு தன் கைப்பையை எடுத்து கைச்செலவுக்குப் பணம் இருக்கிறதா? என ஆராய்ந்து கொண்டு இருக்கும் போது மலர் வீட்டுக்கு வந்து சேர்ந்தார். ஆட்டோவில் வந்து இறங்கியத் தாயை அதிசயமாகப் பார்த்த வனி, “அப்பா உங்க கூட வரலியாம்மா?” என்றாள். ஏதோ யோசனையில் இருந்த மலரின் முகம் மகளைப் பார்த்துக் கலங்கியது போல் இருந்தது. ஆனால் இல்லாத மாதிரியும் இருந்தது.

அவர்கள் குறை தீரப் பிறந்த அவரின் அருமை மகளைப் பார்த்துச் சிரித்தவர்,
“ஏன்? அவர் என்ன என் பின்னாடியேவா சுத்துவார்? வேலைக்குப் போயிருக்கார்” என மிதப்பாக பதில் சொன்னார்.

“அடே! ஒரு பீத்த கம்பெனியில கணக்குப் பிள்ளை உத்தியோகம் பார்த்துகிட்டு உங்களுக்கு இவ்வளவு ஏத்தம்? அப்போ எங்களுக்கு? நாங்க எல்லாம் தொழில் அதிபர் தெரியும்ல?” சொல்லிக் கொண்டே அன்னையை கைத்தாங்கலாக வீட்டுக்குள் அழைத்து வந்தாள் வனி.

“ஆமா, அண்ணனை எங்க?”

“அவரு அவர் ஆஸ்பத்திரிக்கு முட்டு குடுக்கப் போயிருக்காரரு. இவன் இல்லன்னா அந்த ஆஸ்பத்திரி என்னாவறது?”

“அவனுக்கு இருக்கற அக்கறையில பாதியாது தொழில் அதிபர் உனக்கு இருக்காடி? எப்ப பாரு கடையை இழுத்து சாத்திட்டு ஊரை சுத்துற!”

“யாரு? நான் ஊரைச் சுத்துறனா? நான் நல்லப்பிள்ளையா கடை விட்டா வீடு, வீடு விட்டா கடைன்னு இருக்கேன். இவன் தான் சத்தமில்லாம ஊர சுத்திட்டு இருக்கான். நம்பாதம்மா… இவன் ஒரு ஊமை குசும்பன்!”

“போதும் போடி!” சிரிப்பும் சலிப்புமாக வந்தது மலரின் குரல். ஆயினும் உள்ளுக்குள் அவர் கணவரின் வார்த்தைகள் சுழன்றன.

‘அவனைச் சுண்டைகாய்னு நினைச்சேன். இப்போ என் மண்டையை உடைக்கிறான். நம்ம புள்ள சரியா இருந்தா போதும். எங்க? இவன் முழியே சரியில்லையே?சாய்ச்சிருவானோ’ என அங்கலாய்த்தவர் நேரே மகளிடம்
விஷயத்தை சொல்லவும் மிகவும் பயந்தார்.

“புள்ள என் பேச்சை மீற மாட்டா. ஆனா சரி தப்புன்னு இவன் பாடம் எடுத்து அதையும் இவ கேட்டுட்டா?” தமிழ் தானும் குழம்பி மனைவியையும் குழப்பினார்.

“பல வருஷம் முன்ன நடந்துதுன்னு என்கிட்டயே இன்னிக்குதான் சொல்லி இருக்கீங்க. என் ஈரக்குலையே நடுங்குது. நினைக்கக் கூடப் பதறுது. நீங்க கடுகு கூட பயம் இல்லாம எனக்கும் தெரியாம இவ்ளோ பெரிய காரியத்தை..”

நடுக்கத்துடன் படபடத்த அவரின் பேச்சை எரிச்சலாகப் பார்த்தார் தமிழ். தனக்கு தேறுதலாக எதுவும் சொல்லுவார் என்று பார்த்தால்…

“இதப்பார்! நான் எது செஞ்சாலும் உங்க எல்லோர் நல்லதுக்குத்தான் செய்வேன். இனியும் அப்படித்தான் இருப்பேன். நாட்டுல ஒவ்வொருத்தனுக்கு ஒவ்வொரு போதை. எனக்கு என் குடும்பம்தான் போதை. என் குடும்பத்துக்காக நான் கொலையும் செய்வேன். அவ்ளோதான்” என்ற அவரின் இனிய கணவரை பயத்துடன் பார்ப்பதா? பரிதாபத்துடன் பார்ப்பதா? என்றே புரியாமல் விழித்தார் மலர்.

“ஆனா அவ..”

“அவளுக்கு என்ன தெரியும்? குழந்தை அவ. அவகிட்ட இதுபத்தி மூச்சு விடக் கூடாது! புரிஞ்சுதா?” கணவரின் கடினக் குரலிலேயே மலரின் மனம் தவித்திருக்க, தான் சொன்னதைப் புரிந்து கொண்டாரா என்று தமிழ் அவரைப் பார்த்து விட்டு மனைவியின் முகத்தில் தெரிந்த வருத்தத்தில் மனதுக்குள் மென்மையாக சிரித்துக் கொண்டார்.

“ஒன்னும் சொல்லிறக் கூடாது! ஒரு வார்த்தை அழுத்தமா சொன்னாலும் சங்கடப்படுறது! சரி சரி! இங்கேயே நின்னு முழிச்சது போதும். சீக்கிரம் வீடு போய்ச் சேரு. பாப்பா தம்பி கூடப் போயிருக்கால்ல? வந்திருவா. சீக்கிரம் போய் புள்ளைங்களுக்கு எதுவும் சாப்பிட, வைக்க செஞ்சு குடு. நான்… எனக்கு ஒரு வேலை இருக்கு. நீ முதல்ல வீட்டுக்குப் போ. நான் இதோ பின்னாடியே வர்றேன். கிளம்பு. கிளம்பு” எனத் துரத்தி இருந்தார் மனைவியை.

“மறுபடியும் வேண்டாத வேலை எதுவும் பார்த்து வைக்காதீங்க. கண்டவனையும் போய்ப் பார்த்துட்டு இருக்காதீங்க” தன்னை எச்சரித்த தன் வாழ்க்கைத் துணையைக் விளையாட்டுக் கோபமாகப் பார்த்தார் தமிழ்.

“இன்னிக்கு அவன் கண்டவன்! அன்னிக்கு அவனைத் தானே தெய்வம்னு இதே வாயால சொன்ன?”

“அதுக்கு? எல்லா நாளும் ஒரே மாதிரி இருக்கணும்னா எல்லோரும் சிலையாத்தான் இருக்கணும். பையனுக்காகப் பார்த்தப்போ அன்னிக்கு சரியா இருந்துது. சரியானதாவும் இருந்துது. ஆனா நீங்க செஞ்சது என்னிக்கும் தப்புத்தான். சட்டப்படியும், ஞாயப்படியும்!”

“சரி. விடு. உன்கிட்ட பேசி என்னால ஜெயிக்க முடியாது. அது எனக்குத் தேவையும் இல்ல. வீட்டுக்குப் போ “

“இப்ப எதுக்கு என்னைத் துரத்துறதுலயே குறியா இருக்கீங்க? உண்மையைச் சொல்லுங்க“

“ ஒன்னும் இல்ல மகாராணி! ஒரு சின்ன செக் அப். அதுக்குத் தான் போறேன்”

“செக் அப்பா! என்ன செய்யுது? ஏன் முதல்லயே சொல்லலை? வாங்க டாக்டர் கிட்ட போவோம்!”

மனைவியின் பதட்டத்தில் வாய்விட்டுச் சிரித்தார் தமிழ்.

“கம்பெனில ஒரு அக்கவுண்ட் ஆன்லைன்ல செக் பண்ணனும். ஹார்ட் காப்பியும் ஆன்லைனும் டாலி ஆவணும். மத்த நாள் இதைப் பாக்க முடியாது. அதான் இன்னிக்குப் போய் செக் பண்ணிட்டு வந்திர்றேன். இன்னிக்கு ஓ.டி பாக்கிறவங்களும் இருப்பாங்க. தனியா இருப்பேன்னும் நீ பயப்பட வேண்டாம். அப்புறம் நம்ம பையனும் டாக்டர்தான். அதுவும் கை
ராசியான டாக்டர்தான். நினைவு இருக்கா?” என்ற போது அவர் குரலில் இருந்த பெருமிதம் மகன் மருத்துவர் என்பதற்கானது அல்ல. மனைவி ..அவர் மீது கொண்ட அன்பில் மகனையே மறந்ததுதான். இப்படிப்பட்டக் குடும்பத்துக்காக இன்னும் இன்னும் என்ன பழியும் ஏற்பாரே?

“போதும் என்னை ஓட்டுனது. போய் வேலையைப் பாருங்க. நான் கிளம்புறேன்” என்று கிளம்ப,

“ஆக, உன் கன்னத்தில் சந்தனம் தடவியும் மணக்கவில்லை இல்லையா” என்று கேட்டார் தமிழ்.

“அப்டின்னா?”

“கீழ விழுந்தும் மீசையில மண் ஒட்டலைங்கிற மாதிரி!” எனப் புன்னகைத்தார்.

எப்போதும் போல அப்போதும் அவர் சிரிப்பில் மயங்கிய அவர் மனைவி அதைக் காட்டிக் கொள்ளாது “ம்க்கும்!” என்று வேகமாகக் கனைத்துவிட்டு அவர் பிடித்துக் கொடுத்த ஆட்டோவில் ஏறி, பிறகு சஞ்சலமான மனதுடன் இவரை ஏறிட்டார்.

“ஒன்னும் பிரச்சனை இப்போ இல்லை. நீ வீட்டுக்குப் போயிட்டு போன் பண்ணு” என வழியனுப்பி வைத்துவிட்டு சிந்தனையில் ஆழ்ந்தியிருந்தார் தமிழ். அதையும் பார்த்துக் கொண்டே கிளம்பி வந்திருந்த மலரும் சிந்தனையில் தான் இருந்தார்.

அப்படியே வீடு வந்து சேர, இதோ அவர்கள் வீட்டு இளவரசியின் லொட லொட!மகள் எப்போதும் இப்படி கவலையின்றி வாழ இறைவனை இப்போதும் மனதில் வேண்டினார் மலர்.


.







 
Top Bottom