• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

காதல் ராஜ வீதியில் - 5

நிதனிபிரபு

Administrator
Staff member
5

இது போன்ற மூட நம்பிக்கையில் மலருக்கு விருப்பம் இல்லை என்றாலும் பிரச்சனை அத்தோடு நிற்காமல் மதிவதனிக்கு உடம்பு முடியாமல் போகவும் மீண்டும் தமிழ் மட்டும் ஜம்புவை போய் பார்க்க, அப்போது தான் அந்த அனர்த்தம் அரங்கேறியது. இந்த முறையும் இன்னொரு பிள்ளை பெற்றுக் கொள் என்று சொல்லிவிட்டால் என்ன செய்வது என்ற கவலையில் மலர் பேசியதை நினைத்து சிரித்துக் கொண்டே போனவர் ஜம்பு சொன்ன பரிகாரம் கேட்டு அதிர்ந்துவிட்டார்.

“இது அவ பிறக்கும் போதே எனக்குத் தெரியும். உன் மகளா அவ நல்லாவே இருப்பா. அதாவது குழந்தையா இருக்கறவரை. எப்போ பெரியவள் ஆகிறாளோ அப்போவே அவ உயிரை பாதுகாக்கிற சக்தி உனக்கு இல்லை”

ஜம்புவின் உயிர் என்ற வார்த்தை பிரயோகத்தில் தமிழ் நிலைகுலைந்து போனார்.

“அவ உயிரை காப்பாத்த நான் என்ன செய்யணும் சாமி?”

“யார் உயிரை யார் காப்பாத்த முடியும்? உயிர் போறதை தள்ளிப் போடலாம்! அடுத்து அது போக வேண்டிய இடத்துக்கு போய் சேர்ந்தே தீரும்” என்று மேன்னோக்கி விரல் சுட்டிய ஜம்பு, “அப்படி தள்ளிப் போடணுமா?” என்றும் வினவினார் தமிழிடம்.

“என் மக தீர்க்காயுசா சந்தோசமா இருக்கணும். அதுக்கு என்ன பண்ணணும்? சொல்லுங்க சாமி” தழு தழுத்தார் தமிழ்.

அவரையே பார்த்துக் கொண்டு இருந்த ஜம்பு சொன்ன பரிகாரமும் அதை இவரும் அவசரப்பட்டு செய்ததும் இன்னும் அவர் மனதை கொடுவாள் கொண்டு அறுத்துக் கொண்டு இருக்கின்றன.

மகளின் இருபத்து நான்காம் வயதில் மீண்டும் அவரால் சமாளிக்க முடியாத சமாளிக்க விரும்பாத பிரச்சனை வந்ததும் அவருக்கு ஆழ் மனதில் புதைந்து கிடந்த ஜம்புவின் முகம் நினைவுக்கு வந்தது.

இப்போது ஜம்பு கோவையில் இருக்கும் ஒரு குக்கிராமத்தில் இருப்பதை தமக்கை பூங்கோதை மூலம் அறிந்து கொண்டவர் தன் சின்ன பிரச்சனையை தீர்க்க வேண்டி பெரும் சிக்கலுக்குள் விழ கிளம்பிவிட்டார் தமிழ்.

தமிழ் ஜம்புவின் வீட்டை அடையும் போது அவர் தலையில் இடி விழுந்தது போல அதிர்ந்தார். ஆம்! அன்று..அப்போது..ஜம்புவின் சவ ஊர்வலம் அங்கே அவரின் வீட்டில் இருந்து புறப்பட்டுக் கொண்டு இருந்தது.

எதிரே வந்த இவரைத் தாண்டிக் கொண்டு சென்றது அந்தக் கூட்டம். இவரை இடித்துக் கொண்டு கொஞ்சம் பருமனான உடல் வாகுடன் ஒருவர் செல்ல சுயவுணர்வு வந்த தமிழ் தடுமாறினார். பின் சுதாரித்துக் கொண்டு,

“சாமிக்கு … ஜம்புலிங்கம் அய்யாவுக்கு என்ன ஆச்சு?” என மெதுவாக வினவினார். அவர் மனமோ அடுத்து தன்னுடைய பிரச்சனை என்ன ஆகும்? என்ற பெரும் கேள்விக்கு விடை தெரியாமல் இருட்டில் தனித்து நின்றது.

“அய்யாவுக்கு பாரிச வாயு. கடந்த ரெண்டு வருசமா படுக்கையில தான் இருந்தார். ‘மணி மணி‘ன்னு குழறலா புலம்பிட்டே இருப்பார். மகன் மேலே அவ்வளவு பாசம்! செல்வமணியும் அப்பாவை நல்லாவே பார்த்துகிட்டான். அவனை அவங்க அப்பா மணின்னு தான் சொல்லுவார். ஆனா இதுக்கு மேலே அவரைப் பிடிச்சு வைக்க முடியலை. யாரை யார் காப்பாத்த முடியும்? அவங்க அவங்க போய் சேர வேண்டிய நேரம் வந்தா போய் தானே ஆகணும்?” ஜம்பு சொல்லி இருந்த அதே தத்துவத்தை கொஞ்சம் மாற்றி உதிர்த்து விட்டு அந்த நபரும் அவசரமாக நகர்ந்துவிட்டார்.

அடுத்து என்ன செய்ய என தமிழ் மனத் தள்ளாட்டத்துடன் நிற்கும் போது அவரின் காதுகளில் வந்து விழுந்தன அந்த வார்த்தைகள் :

“இனி அவர் வேலையை அவர் பையன் தான் எடுத்து செய்யணும். செல்வா நல்ல பையன். கண்டிப்பா செய்வான்”

“எப்படியோ செல்வா போல ஒரு புள்ளை கிடைச்சிட்டான். அவர் கட்டை நிம்மதியா வேகும்”

யார் செல்வா? இவர் இருபத்து நான்கு வருடங்கள் முன்பும், அதன் பிறகு பத்து பனிரெண்டு வருடங்கள் முன்பும் ஜம்புவை சந்திக்கும் போதெல்லாம் இந்த செல்வாவை பார்த்ததில்லையே? அது போக ஜம்புவுக்கு மனைவி, குழந்தை போன்ற கட்டுக்கள் இருந்ததாக இதுவரை அறிந்ததில்லையே?

யோசித்துக் கொண்டு தமிழ் மரம் போல் நிற்க மற்றவர்களும் பேசிக்கொண்டே இவரையும் இவர் கையில் இருந்த ப்ரிப்கேசோடு மாயானத்துக்கு தள்ளிக் கொண்டு சென்றனர். அதுவும் சரி தான். இவ்வளவு தூரம் வந்துவிட்டு அவரின் கடைசி யாத்திரையில் பங்கேற்காமல் எப்படி இருக்க முடியும்?

ஜம்புவின் பூத உடலை அவர் விருப்பப்படி நேரே நிற்க வைத்து புதைத்ததை பார்த்து வியந்தார். அந்தப் பணியில் பலரும் ஈடுபட்டதில் கொள்ளி வைப்பதை பார்த்து மகனை அறிந்து கொள்ளலாம் என்ற தமிழின் திட்டம் தகர்ந்தது.

மீண்டும் எல்லோரும் செய்ததைப் பின்பற்றி தமிழும் குளித்துவிட்டு ஈர உடையுடன் ஊருக்குக் கிளம்ப தலைப்பட்ட போது ஒரு குரல் தடுத்து நிறுத்தியது.

“சார் நீங்க யாரு? இங்கே முன்ன பின்ன பார்த்தது இல்லையே?” என முன்னர் இவரை இடித்த அதே மனிதர் கேட்டுக் கொண்டிருந்தார்.

“அது நான் வேற ஊர் தான். ஜம்பு அய்யாவை ஒரு வேலையா பாக்க வந்தேன். சரி கிளம்பறேன். இப்போ போனாதான் வீட்டுக்கு போய்ட்டு ரெஸ்ட் எடுத்துட்டு நாளைக்கு காலையில ஆபீஸ் போக சரியா இருக்கும்”

இனி போய் அவரின் நொந்த பிரச்னையையும் பார்க்க வேண்டுமே?

“என்ன வேலை?”

“நான் ஒரு கம்பெனியில சீனியர் அக்கவுண்டண்ட்”

“அப்டின்னா? கணக்கு புள்ளையா? அதான் இப்போ எல்லாதுக்கும் கம்ப்யூட்டர் வந்துச்சே?”

“அது வந்தா அதுக்கு ஏத்த வேலை எங்களுக்கு இருக்கு. கம்ப்யூட்டர் ஒரு மெஷின். அதுக்கு நாமதான் வேலை குடுக்கணும். வேலை வாங்கணும். அது நமக்கு வேலை தானே? என்ன வேலை செய்யணும்னு அடுத்தவங்களுக்கு அது கம்ப்யூட்டரோ மனுசங்களோ சொல்லத் தெரிஞ்சு இருக்கணும் இல்லியா?”

கொஞ்சம் மிதப்பு தட்டிவிட்ட அவர் குரலில் அங்கே இன்னும் மிச்சம் இருந்த ஒரு சிலரில் ஒருவன் மட்டும் திரும்பி கேள்வியாக இவரைப் பார்த்துவிட்டு நட்பு போல தலையசைத்தான். தன்னியல்பாக அதைப் பார்த்த தமிழும் தலையசக்க,
தமிழிடம் மல்லுக்கட்டிக் கொண்டு இருந்தவரும் இவர் பார்வையின் பக்கம் திரும்பி பார்த்துவிட்டு பெருமூச்சு ஒன்றை வெளியேற்றினார்.

“ம்! தாயில்லா பிள்ளை. இப்போ தகப்பனும் போயாச்சு. ஒரு தாலி சீலையும் இல்லை (மணமாகவில்லை). எப்படித்தான் பொழைக்க போகுதோ? அப்பா அப்பான்னு அப்பாவையே சுத்திட்டு இருந்தான். இனி யாரு அவனுக்கு ஒரு நல்லது கெட்டதை எடுத்து செய்வாங்க?”

அவர் பேசிக் கொண்டே கிளம்பி விட்டார். இறப்பு வீட்டில் சொல்லிக் கொண்டு போகக் கூடாதாம். அப்படித்தான் பெரும்பாலானோர் அங்கிருந்து மறைந்து இருந்தனர். செல்வாவும் அவர்களை பார்த்தும் பார்க்காமலும் தான் இருந்து கொண்டு இருந்தான் என்பதை தமிழ் உணர்ந்திருந்தார்.

செல்வாவுக்கு முப்பது வயது இருக்கும். கச்சலாக இருந்தான். வயது முகத்தில் தெரிந்தது. மற்றபடி இருப்பத்தி ஆறு வயது சொல்லலாம். வெள்ளை வேட்டியும் மேலே வெற்று உடம்புமாக இருந்தான். பற்கள் சீராக இருந்தன. கட்டையாக மீசை வைத்து இருந்தான்.

தமிழுக்கு இந்த கட்டை மீசை பிடிப்பதில்லை. நல்ல கம்பீரம் போல் மேன்னோக்கி வளைத்து விட்டால் ரொம்ப பிடித்தம். தொங்கு மீசையும் ஒத்துக் கொள்ளலாம். அவருக்கும் அதுதான்.

இந்த மணிமொழி தான்- முறுக்கு மீசையும் முரட்டு மூஞ்சியுமாக பார்க்கவே சகிக்காது. அவனை எல்லாம் கட்டி எப்படித்தான் குடும்பம் நடத்துவாளோ? அவளுக்கு ஏற்கனவே இப்படிப்பட்ட மீசையை பிடிக்…

எண்ணத்தின் திசையை மாற்ற நினைத்தாலும் அது என்னவோ மீண்டும் மீசையில் போய்தான் நின்றது. அதாவது மணி மொழியின் அந்த மீசை அவருக்குப் பிடித்து இருந்தாலும், அவன் முகத்திற்கு அது இவருக்கு எரிச்சலைத்தான் தரும். எங்கேயோ கிடந்த அனாதைப் பயல்! இப்போது மாடு மாதிரி வளர்ந்து கிடா மீசையும் வைத்து ஒரு வீட்டையும் வண்டியையும் வாங்கிப் போட்டு விட்டால் பெரிய இவன் ஆகி விடுவானா? கம்பெனி வேறு வைத்து இருக்கிறானாம்! பிசாத்து கம்பெனி! இவர் பார்க்காததா? இவன்கள் அவரை மாதிரி ஒரு அக்கவுண்டண்ட் இல்லை என்றால் நாக்குதான் வழிக்க வேண்டும். யாரிடம் சவால் விடுகிறான்?

ஆனால் அவரால் இப்போது ஒன்றும் செய்ய முடியாது போலவே? ஜம்புவைத்தான் மலை போல் நம்பி வந்தார். அவரும் இவரைக் கைவிட்டு விட பேசாமல் வீட்டுக்குப் போய் நிதானமாக அடுத்தது யோசிக்கலாம் என முடிவு செய்து கொண்டு பார்த்தால் நடுவே இந்த செல்வா!

சரி. அவனுக்கும் ஒரு ஆறுதல் வார்த்தையை சொல்லி வைப்போம் என நினைத்துதான் பேச்சை ஆரம்பித்தார். இவர் அந்த செல்வாவின் பக்கம் திரும்ப ஆரம்பித்ததும் மீதியிருந்த மிச்ச சொச்ச ஆட்களும் இடத்தை காலி செய்ய இவர் அதை உணராது செல்வாவின் முகம் பார்த்துக் கொண்டு இருந்தார். ஆரம்பித்து இருந்த பார்வை பரிமாற்றத்தை முடித்து ஒரு முடிவுக்கு வரவேண்டும் அல்லவா? இறப்பு வீடு வேறு! அப்புறம் அதில் ஏதாவது குறையை யாரும் சொல்லிக் கொண்டு இருக்கும்படி வைத்து விடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தார் தமிழ்.

சில நிமிடங்களாக இருவரும் முகத்தை முகத்தை பார்ப்பதும் மெல்ல ஒருவரைப் பார்த்து ஒருவர் தலையசைத்துக் கொள்வதுமாக இருக்க அப்புறம் அது போராடித்து தமிழ் செல்வாவைப் பார்த்து “சாரி தம்பி. உங்க அப்பாவை ஒரு வேலையா பாக்க வந்தேன். வந்த இடத்துல இப்படி ஆகிருச்சுன்னு தெரிஞ்சு ரொம்ப கஷ்டமா ஆகிருச்சு. அப்பாவுக்கு எப்படி இப்படி ஆச்சு?” என்று முறைப்படி விசாரித்தார்.

அவனும் சுதாரித்துக் கொண்டான். தமிழை பார்த்து, “அப்பாவை எதுக்கு பாக்க வந்தீங்க?” என்றான் சுவாரசியம் இன்றி.

“அது ஒரு சின்ன பரிகாரம் தம்பி”

“அப்டின்னா?” என கேட்டுக் கொண்டே ஒரு பழைய சாய்வு நாற்காலியில் அமர்ந்தான் செல்வா.

முன்பு இருந்தவன் இவன் அல்லன் என்று தோன்றும்படி இருந்தது அவன் செயல்கள். இவரை, அவன் வீட்டுக்கு வந்த இவரை, அவன் அப்பாவின் இறப்பு குறித்து துக்கம் விசாரித்துக் கொண்டு இருக்கும் இவரை அவன் உட்காரவும் சொல்லவில்லை என்பதை தமிழ் கவனித்தாலும் இந்த சமயம் அதை பெரிதுபடுத்தக் கூடாது என அவரே அருகில் கிடந்த ஒரு நாற்காலியில் அமரப் போக அதற்குள் “உக்காருங்க“ என்று சொல்லி இருந்தான்.

“அப்புறம்? அப்பாவை என்ன பரிகாரத்துக்காக பாக்க வந்தீங்க?” அவன் குரலும் கணீர் என்று வர, இவரும் தானாக “அதுவா தம்பி, ஒரு சின்ன பரிகாரம்…” என்று ஆரம்பித்து மேலே சொல்வதா அல்லது இது இவனுக்குத் தெரியுமா? புரியுமா? ஜம்பு இவனை எப்படி வளர்த்து இருக்கிறாரோ? என்று தடுமாறினார்.

செல்வா இவரின் எந்த தடுமாற்றத்தையும் கண்டு கொள்ளாமல், “ என்ன பரிகாரம்? “ என்று கேட்டு பொதுவாக மக்கள் குறையாக நினைக்கும் ஒவ்வொன்றின் தன்மையையும் சொல்ல அவன் சொன்ன இலகுவான தன்மையில் இந்த பரிகார பைத்தியக்காரதனங்கள் அவனுக்கும் தெரியும் அதில் அவனுக்கும் ஈடுபாடு உண்டு என்று புரிந்தது.

தமிழ் தானாக முன்கதை சுருக்கம் சொல்லவும் மீண்டும் “அப்புறம்?” என்றான்.

“பாப்பாவுக்கு முடியலைன்னதும் பரிகாரமா ஒரு அனாதையை அவளுக்கு தாலி கட்டச் சொன்னார். கிட்டத்தட்ட மயக்கமா கிடந்த என் பொண்ணும் அதை உணரலை. அந்தப் பையனுக்கும் அப்போ விவரம் புரியலை. புள்ளையும் குணமாகிட்டா” என்ற தமிழ் மருத்துவரின் அயராத சிகிச்சையை மறந்து விட்டார்.

“நல்லது தானே?”

“இப்போ அவன் திடீர்னு என் பொண்ணை பொண்ணு கேக்கிறான்”

தமிழின் பேச்சில் அதிர்ந்ததாக காட்டிக் கொண்ட செல்வா, “இன்னும் அவன் உயிரோடவா இருக்கான்?” என்றான்.
 
Top Bottom