• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

காதல் ராஜ வீதியில் - 7

நிதனிபிரபு

Administrator
Staff member
7

பதின் மூன்று வருடங்களுக்கு முன்பு சட்டத்துக்கு புறம்பாக, நியாய தர்மங்களை அனுசரிக்காத அந்த திருமணம் மதிப்பில்லாததாக இருந்தாலும் வளரிளம் பருவத்தில் இருந்த மணிமொழியின் மனதில் சிறு சலனத்தை ஏற்படுத்தி இருந்தது.

அந்த சமயத்தில் அவள் கழுத்தில் ஒரு மாலையை மட்டும் போட்டு இருந்தான். ஆனால் அவள் வலது கால் விரலில் மெட்டி அணிவிக்க சொல்லி இருந்தார் ஜம்பு. இன்னமும் அவள் கால் விரலில் இருக்கும் அந்த மெட்டி அவன் உரிமையை பறைசாற்றிக்கொண்டு இருப்பதாகவே மொழியின் ஆழ்மனத்தில் ஒரு குளுமை உண்டு. எந்த சூழ்நிலையிலும் அந்த மெட்டியை அணிவதை மட்டும் வதனி விடவில்லை. அதற்கான காரணம் அவளுக்கும் தெரியவில்லை.

இதெல்லாம் ஒரு திருஷ்டி பரிகாரம் என்றே மொழியிடம் அப்போது சொல்லி இருந்தார் தமிழ். அவனின் பதினாறு வயதில் நடந்த இந்த திருமணத்திற்குப் பின் இரண்டு வருடங்கள் நிலாக்காலம் இல்லத்துக்கு மதிவதனியை தமிழ் அழைத்து வரவில்லை.

வதனியும் சிறிது சிறிதாக முன்னேறிய தன் உடல் நிலையை கண்காணித்துக் கொண்டு நல்ல பிள்ளையாக வீட்டில் இருந்து கொண்டாள். ஒரு சில மாதங்கள் கழித்து பள்ளிக்குச் சென்றாள். அங்கே அவள் மிகவும் சுறுசுறுப்பான மாணவி. ஆகவே அவள் பொழுதெல்லாம் படிப்பிலும் விளையாட்டிலும் இதர கல்வி கலைகளிலும் சென்றது.

இரண்டு வருடங்கள் கழித்து அவள் எட்டாவது படிக்கும் போது பள்ளிவாசலில் மணிமொழியை கண்டாள். தனது பதினெட்டாவது வயதில் இல்லத்தில் இருந்து வெளியேறி தனியார் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்து அப்படியே தொடர்ந்து படித்து என்று வாழ்க்கையில் தனது அடுத்த போராட்டத்தை ஆரம்பித்திருந்த மணிமொழிக்கு அவனின் அடிமனதில் இருந்த வெட்டிவேர் போன்ற மதிவதனியைக் காணும் ஆசையை மறக்க, மறைக்க முடியாமல் வாய்ப்பு கிடைத்த முதல் நாள் அவளைத் தேடி வந்திருந்தான்.

அப்போது அவன் மனதில் எந்த கொண்டாட்ட இளமை எண்ணங்களும் இல்லை. ஆனால் அவள் மீதான ஏதோ ஒரு பொறுப்போ கடமையோ அல்லது இரண்டுமோ இருந்ததுடன் அதையும் தாண்டிய ஒரு விருப்பமும் ஆழமாக மொழியிடம் இருந்தது. ஆனால் அவனைப் பொறுத்தவரை அதற்கு எந்த மொழியிலும் பெயர்தான் இல்லை.

பள்ளியில் இருந்து வெளியே வந்த வதனி மணிமொழியை முதலில் கண்டு கொள்ளவில்லை. அவளுக்கு அவனை அடையாளமும் தெரியவில்லை. ஆனால் தன்னையே உற்றுப் பார்க்கும் அந்தப்பையனின் பார்வையில் எந்த தவறையும் பெண்ணாக அவள் உணரவில்லை. எந்த வயதிலும் பெண்ணின் ஆழ்மனம் அவளை எச்சரித்துக் கொண்டே இருக்கும் அல்லவா? அதில் தேர்வாகிவிட்ட மொழியிடம் எதுவும் பேசாமல் எந்த உணர்வையும் காட்டாமல் அவனைக் கடந்து சென்றாள். அவளுக்கும் சின்னஞ்சிறிய வயது தானே? ஆகவே பெரிதாக எந்த சிந்தனையும் அவளுக்கு அவனைப் பற்றி இருக்கவில்லை. வீட்டுக்குப் போனதும் அம்மா கொடுக்கும் சிற்றுண்டியை அண்ணனை விட அதிகமாக சாப்பிட்டு அவனைவிட உயரமாக வளரவேண்டும் வேண்டும் என்ற லட்சியம் தான் அவளிடம் அப்போது ஓங்கி இருந்தது.

மணிமொழி அவன் வாழ்நாளில் கிடைத்த மிகச்சிறிய இளைப்பாறுதலான வதனியை பார்க்கும் சந்தர்ப்பத்தை இழக்கத் தயாராக இல்லை. அதன் பொருட்டு அப்பகுதிக்கு அடிக்கடி வர ஆரம்பிக்க, அதுவும் அவள் பள்ளிக்கு வெளியே இருக்கும் சந்தர்ப்பங்களில் வர ஆரம்பித்தான். அப்போதே அத்தனை உயரமாக திருத்தமாக களையாக இருந்த அவனை சில சிறுசுகள் பார்வையிட்டாலும் வயது படிப்பு பெற்றோர் பள்ளியின் பெயர் என்று தங்கள் ஆர்ப்பாட்டத்தை மறைத்துக் கொண்டனர்.

வதனி அந்த வட்டதுக்குள் எல்லாம் போகவே இல்லை. மொழியை கவனித்தாலும் அவன் அவள் மனதில் மிக சாதாரணமாக கூட
நிற்கவில்லை. அவள் எண்ணங்கள் பள்ளி விட்டால் வீடு, அங்கிருந்து டியூசன் அதை விட்டால் மீண்டும் வீடு, மறுபடியும் பள்ளி, கூடவே உயரமான அண்ணனை விட உயரமாக வளரவேண்டிய கட்டாயம் (!)என்று மட்டும் இருந்தன.

மொழி அவளைப் பார்க்க சும்மா வராமல் ஏதாவது வேலையை வைத்துக் கொண்டு அங்கே வந்ததில் அவன் வரவு யாருக்கும் உறுத்தவும் இல்லை.
இப்படியே போக காலம் விடவும் இல்லை. அடுத்த ஐந்து வருடங்களில் அவளது பதினெட்டாவது வயதின் தொடக்கத்தில் அவனுக்கு இருபத்து மூன்று வயது இருக்கும்போது அந்த நிகழ்ச்சி நடந்தது.

வதனி பள்ளியில் மூன்றாம் இடத்தில் தேர்ச்சி பெற்று அப்பள்ளியில் இருந்து வெளியேறினாள். அன்று மொழி அடைந்த மகிழ்ச்சி மிகப்பெரியது. இதெல்லாம் வதனி அவள் மாற்று சான்றிதழ், மதிப்பெண் பட்டியல் ஆகியவற்றோடு நன்னடத்தை சான்றிதழும் வாங்கிக் கொண்டு தமிழின் காரில் ஏறி “வீட்டுக்கு போறேன். காலேஜில பாக்கலாம்” என்று தோழிகளிடம் சந்தோசமாக சொல்லிவிட்டு புறப்படும் வரை தான்.

அவன் முகத்தில் புழுதியை வாரி இறைத்துக்கொண்டு சென்ற காரை பார்த்துக் கொண்டே நின்றான் மணிமொழி. அடுத்து அவள் கல்லூரிக்கு போய் பார்ப்பதா? இப்படியே எத்தனை வருடங்கள் அவளை பார்த்துக் கொண்டே இருப்பது?அவளை அவனுடன் வைத்துக் கொள்ள என்ன செய்ய வேண்டும்?

அவன் நிலை உயர வேண்டும்!

அதற்கு என்ன செய்ய வேண்டும்? அப்படி யோசித்துதான் சிறிது சிறிதாக முயற்சி செய்து இந்த நிறுவனத்தை ஆரம்பித்தான். முதலாளியும் ஆகிவிட்டான். இதற்கு நடுவே நடந்ததை தான் காலத்தின் கோலம் என்பது.

வதனி அதனை அடுத்து கல்லூரியில் சேர்ந்தாள். இப்போது அவளுக்கு அவனை மிகவும் நன்றாகவே தெரிந்தது. சிலமுறைகள் நிலாகாலத்தில் வைத்து இவனைப் பார்த்து இருந்தாள். ஒருமுறை நேரே வந்து பேசினாள். அதிலிருந்து அவனை அவளுக்கு நன்கு தெரிந்தது

அதன் பின்பு அடிக்கடி சந்திக்கும் போது புன்னகைக்க ஆரம்பித்தாள். இவளை பார்க்கும் மொழி அத்தோடு நில்லாமல் சுற்றும் முற்றும் ஆராய்ச்சியாக பார்ப்பதை கேள்வியாக பார்த்தாள் வதனி.

இவனிடம் கண்களால் ‘என்ன?’என்று கேட்டு பார்க்க, அதே போன்று கண்களால் ‘ஒன்றும் இல்லை’ என்று சொல்லி இருந்தான் மொழி. அந்த ஒரு பார்வை பரிமாற்றத்தில் எப்படியோ இருவர் மனமும் நெருக்கம் ஆனது இறைவன் செயல் என்பதா? அல்லது இயற்கையின் முடிவு என்பதா? அல்லது இளமையின் இனிமை என்பதா?

அப்படி ஒரு நாள் சுற்றிலும் அவன் பார்த்தபோது வதனியை ஒருவன் கூர்ந்து கவனிப்பது மொழியின் கண்களில் துல்லியல்மாக விழுந்தது. இத்தனை நாட்களாக இதைத்தான் மொழி கண்காணித்து இருந்தான். குறிப்பிட்ட நான்கு பேர் ஒருவர் மாற்றி ஒருவர் அவளை பின் தொடர்வது அவன் அவளின் பள்ளி காலத்திலேயே காண்பிடித்து இருந்தான்.

அதனால் தான் தினமும் அவள் வீடு போய் சேரும் வரை அவள் பின்னே அலைந்து திரிந்தான். இந்த விஷயத்தை தமிழிடம் சொல்லியிருக்க அவனால் முடியும். ஆனால் அதை அவர் நம்பவில்லை என்றாலோ அல்லது அவளை வேறு பள்ளியில் - அவனால் போய் பார்க்க முடியாத இடத்தில் சேர்த்து விட்டாலோ அவளுக்கு நேர இருக்கும் பிரச்சனைகள் அவனுக்கு தெரியாமலே போய்விடும். அத்தோடு அவளை அவனால் அந்த பிரச்சனைகளிலிருந்து காப்பாற்ற முடியாமல் போய்விடலாம்.

பெற்றவனை விடவா அவளை அவன் பாதுகாத்து விடுவான்? என்ற கேள்வியே அவனுக்கு வரவில்லை. அதற்கு காரணம் அவனுக்கு புரியவில்லை. மேலே வேறு எந்த பெரியவர்களிடமும் இதைச் சொல்ல அவன் வயதும் விடவில்லை. இதைப்பற்றி பேச ஒருவித தயக்கம் அவனை ஆட்கொண்டது. அவன் பேச்சை யாரும் நம்புவார்களா? இந்த சந்தேகத்தில் அவன் மனது உளன்றது. இருந்தபோதிலும் மொழி இந்த விஷயத்தை மதிவாணனிடம் எடுத்துச் சென்றான். அப்போது மதிவாணனும் மருத்துவ படிப்பில் தீவிரமாக படித்துக் கொண்டு இருந்ததால் “எல்லாம் அப்பாவுக்குத் தெரியும். அப்பாகிட்ட சொல்லு. நானும் சொல்றேன்” என்பதோடு முடித்துக் கொண்டான். கூடவே “ஆமா, இதெல்லாம் உனக்கு எப்படி தெரியும்?” என்று சந்தேகமாக வேறு கேட்டான். அதில் மனதுக்குள் தலையில் அடித்துக் கொண்ட மொழி, “அது..வந்து..யாரோ பார்த்தவங்க சொன்னாங்க” என்று உளறி கொட்டி கிளறி மூடி வைத்திருந்தான்.

மதிவாணன் தன் தகப்பனிடம் இது பற்றி சொன்னானா என்பது இன்றும் கேள்விக்குறிதான். ஒருவேளை இளமையான தன்னுடைய தங்கையை யாரும் சைட் அடித்திருப்பார்கள் என்று நினைத்தானோ தெரியாது. இல்லை இவனையும் சந்தேகப்பட்டனா தெரியாது. சரி போகட்டும். அவன் அப்படி நினைத்தால் இவனுக்கு மகிழ்ச்சிதான். இருந்தாலும் இதை இப்படியே விட மொழியால் முடியவில்லை. அவளை எதற்காக இவர்கள் பின் தொடர வேண்டும்? ஏன் இத்தனை வருடங்கள் அவளை கண்காணிக்க வேண்டும்? அவனால் அதற்கு பதிலை தெரிந்து கொள்ளாமல் எப்படி இருக்க முடியும்?

அந்த சமயத்தில் தான் கல்லூரியில் வைத்து அவர்களுக்குள் விழிகள் பரிமாற்றம் நடந்து இருந்தது. என்னைத் தவிர வேறு யாரை பார்க்கிறாய்? என உரிமையோடு அவள் அதட்டிய பின் அவளைக் குறித்து யாரிடமும் எதற்கும் அனுமதி கேட்க வேண்டிய அவசியம் இல்லை என்று கருதும் அளவு அவள் மேல் உரிமை கொண்டவனுக்கு அப்போதும் அந்த உணர்வின் பெயர் தெரியவில்லைதான்.

அன்றொரு நாள் வதனி கல்லூரியை விட்டு வெளியே வரும்போது அந்த நால்வரில் ஒருவன் அவளுக்கு முன்னால் சென்று நின்றான். தன்னை சுற்றி வந்த மொழியை கண்டுகொண்ட வதனி இந்த நால்வரை இதுவரை கவனிக்கவில்லை என்பதை யாரிடம் சொல்லி அழ?

தன் முன்னே நின்ற அந்நியனை அதிசயமாக கொஞ்சம் பயத்துடன் பார்த்த வதனி உடனடியாக தனது உதவிக்காக பார்த்தது மொழியைத்தான். அவன் அங்கே தான் இருப்பான் என்று அவள் உள்மனம் இத்தனை காலத்தில் நம்பியிருந்தது.

அவள் நம்பிக்கை பொய்க்கவில்லை. அவளின் பார்வையை உடனடியாக சந்தித்த மொழி விரைவாக அவள் இருக்கும் இடத்திற்கு வந்து விட்டான். தன்னை நோக்கி சந்தேகத்திற்கு இடமாக(!) ஒருவன் வருவதை உணர்ந்த அந்த ஒருவன் சட்டென்று அங்கிருந்து அகன்றான்.

அவன் பின்னாடியே போய், “ஹலோ நீங்க யாரு? என்ன விஷயம்? சொல்லுங்க” என கேட்டவாறு பின் தொடர்ந்தான் மொழி.

இத்தனை காலம் தூரத்தில் நின்று தன்னை பின் தொடர்ந்த மொழி அருகில் வந்ததும் வதனியின் முழு தயக்கமும் பறந்து போனது.

“அவன் போகட்டும் விடுங்க. நீங்க எப்போ வந்தீங்க? இவ்வளவு நேரம் எங்க இருந்தீங்க?” என்றவாறு தங்களின் பேச்சு வார்த்தையை ஆரம்பித்து வைத்திருந்தாள் வதனி.

அப்போது ஆரம்பித்தது இப்போது வரை அவள் பேசிக்கொண்டே இருக்கிறார்கள் இவன் கேட்டுக் கொண்டிருக்கிறான் அவன் ஆறுதலும் ஆனந்தமும் அதுதான்.

அதன்பின் மொழி கண்டு கொண்டது வதனியை கடத்த யாரோ திட்டமிடுகிறார்கள் என்பதைத்தான். அது ஏனென்று தெரியாதபோதும் மொழி அவனுடைய பாதுகாப்பு வட்டத்தை அவளிடம் நெருக்கினான். அது வேறு யாருக்கும் தெரியாமல் இருக்க அவன் எடுத்த முயற்சிகள் ஏராளம். அப்படியும் தமிழ் அதை கண்டு கொண்டார். அதுவும் தவறாக.
 
Top Bottom