• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

குழலில் காற்றாகினாள் - 13

STN - 29

Member
குழல் - 13

ரஞ்சனியின் விழிகள் இளங்கோவை ஆச்சரியத்துடன் ஆழ்ந்து உள்வாங்கிக் கொண்டிருந்தன. விளையாட்டுப் பையன்போல் அவளை வம்பிழுத்து வயிற்றை பிடித்து சிரித்து எரிச்சலூட்டி ஏதேதோ செய்தவனா இத்தனை திறமைகளை தனக்குள் வைத்திருக்கிறான் என்று ஆச்சரியக்காமல் இருக்க முடியவில்லை.

அமரனுக்கு சளைத்தவன் இல்லை என்பதை தனது வயலின் இசையால் நிரூபித்துக் கொண்டிருந்தான் இளங்கோவும். நண்பர்கள் இருவரும் சாமானியர்கள் அல்ல நிறைய திறமைகளை தங்களிடம் கொண்டவர்கள் என்பதை தலைவணங்கி ஏற்றுக் கொண்டது மொத்த கூட்டமும்… அதில் ரஞ்சனியும் ஒருத்தியே.

நேரம் செல்வதே தெரியாமல் இசைக் கடலுக்குள் அனைவரும் மூழ்கிக் கிடந்தனர். ஏனோதானோ என்று தன் தோழிக்காக மட்டுமே அங்கு வந்திருந்த ரஞ்சனியும் தன்னை மறந்து ரசித்து மொத்த நிகழ்ச்சியிலும் முழுதாக லயித்திருந்தாள்.

நிகழ்ச்சி முடிவுக்கு வந்து வெற்றியாளரின் பெயரும் அறிவிக்கப்பட தொடர்ந்து ஆரவாரத்திற்கு மத்தியில் வரிசையாக ஒவ்வொருக்கும் பரிசுகளும் அளிக்கப்பட்டுக் கொண்டிருந்தன.

“இனி என்னடி..? கிளம்பலாமா..? கூட்டம் முண்டியடிச்சுட்டு வெளியே வரும். இங்கே இருந்து கிளம்பி வெளியே போகவே ஒரு மணி நேரம் ஆயிடும்… டிராபிக் ஜாமும் ஆகும். ஆர்கெஸ்ட்ரா அவங்க இன்ஸ்ட்ருமென்ட்ஸை எல்லாம் பார்சல் கட்டுற வரைக்கும் நீ உக்காந்துட்டுதான் இருப்பேன்னு சொன்னா விடிஞ்சுதான் வீடு போய் சேரமுடியும்…” என்றபடி எழுந்து கொண்டாள் ரஞ்சனி.

“இன்னும் கொஞ்ச நேரம்டி…” கண்கள் சுருக்கி கெஞ்சினாள் திலோத்தமா.

“ஆறு மணி நேரமா உன் ஆளைத்தானடி பாத்துக்கிட்டே இருந்த. அதுலயும் அவரோட ஸ்பெஷல் ப்ரோக்ராமை ரெண்டு கண்ணு பத்தலைன்னு உடம்புக்குள்ள இருக்கிற நரம்புவரைக்கும் உறிஞ்சி உறிஞ்சி பார்த்தேதானே. அப்புறம் என்ன..? போதாக்குறைக்கு தினமும் காலையிலேயும் ராத்திரியும் பக்கத்துல இருந்தே மென்னு தின்னுட்டேதான் இருக்க… எந்திரிடி மொதல்ல…”

வம்படியாய் அவள் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு கூட்டத்தைக் கடந்து நடக்கத் தொடங்கினாள் ரஞ்சனி.

திலோத்தமாவின் கைப்பேசி அழைக்க இளங்கோ அழைப்பதைக் கண்டு வேகமாக இணைப்பை ஏற்றாள்.

“எங்கேடா இருக்கீங்க..?”

“கிளம்பிட்டோம்ணா…”

“வெளியே போய்ட்டீங்களா..?’

“இன்னும் இல்ல… இப்போதான் எழுந்து நடந்து போயிட்டு இருக்கோம்…”

“லெப்ட் சைடுல ஒரு கேட் இருக்கும்.. அங்கே போய் வெய்ட் பண்ணுங்க… சேர்ந்தே போயிடலாம்…”

“என்ன..?” என்றவளுக்கு கட்டுக்கடங்காத ஆச்சரியம்.

“கால்மணி நேரம் மட்டும் வெயிட் பண்ணுங்க… நாங்களும் வந்துடுவோம்…”

“அந்த கேட் பக்கம் விசிட்டர்ஸை அலோவ் பண்ணலையே அண்ணா…”

“அது செலிப்ரிட்டி பாஸ் இருக்கிறவங்களுக்கான கேட். கூட்டமும் இருக்காது… எங்களுக்கு அது வழியா போக அனுமதி இருக்கு. சோ நீங்களும் வெயிட் பண்ணுங்க போயிடலாம்…”

“ஓஓ… செலிப்ரிட்டி… சூப்பர்… வாங்க வாங்க… எப்படினாலும் அந்த மெயின் கேட் வழியா போறதுக்கு எங்களுக்கு இன்னும் முக்கால் மணி நேரம் ஆயிடும். அதுக்கு வெயிட் பண்றது ஒன்னும் கஷ்டம் இல்ல. அதுவும் என் அமர்கூட ட்ராவல் பண்ணப் போறேன்…” இந்த வார்த்தையை மட்டும் ஹஸ்கி குரலில் ஒற்றைக் கண்ணை மடக்கியபடி கூறியவள் “வெயிட் பண்றோம்ணா… வாங்க வாங்க…” என்று துள்ளலாய் கூறி இணைப்பை துண்டித்திருந்தாள்.

முன் கை கட்டியபடி அவளையே முறைத்து பார்த்துக் கொண்டிருந்தாள் ரஞ்சனி.

“பேசினதெல்லாம் கேட்டேல்ல… வா… அப்டிக்கா போய் ஓரமா உட்காருவோம்… உன் ஆளும் என் ஆளும் வந்துடுவாங்க…”

“ஏய்… என்ன சொன்ன..? இப்போ என்ன சொன்ன..?” சுர்ரென்ற கோபத்துடன் மூக்கைச் சுருக்கி கொண்டு அவளிடம் பாய்ந்தாள் ரஞ்சனி.

“சாரி… சாரிடி.. அப்படியே ஃப்லோல வந்துருச்சு… ஹிஹி…”

அசடு வழிந்து அங்கேயே அமர்ந்து கொண்டவளை முறைத்தபடியே தானும் அருகில் அமர்ந்து கொண்டாள் ரஞ்சனி.

கூட்டம் கலைந்து முன்வாசல் வழியாக முண்டியடித்து சென்று கொண்டிருந்தது. 20 நிமிடங்கள் கழிந்தும் அவர்கள் வந்திருக்கவில்லை.

“இது தேவையாடி… அப்பவே கிளம்பிப் போயிருந்தா கூட்டத்துக்கு முன்னாடி ஈஸியா போயிருக்கலாம். ஆட்டோ ரெடியா இருக்கும்… அழகா ஏறி வீட்டுக்கு போய் இருக்கலாம்… அந்த ஆளு சொன்னாருன்னு நீயும் இலவு காத்த கிளி மாதிரி இங்க வந்து உட்கார்ந்திருக்க…”

“15 நிமிஷம்னு சொன்னாரு… அஞ்சு நிமிஷம் கூடுதலா ஆயிடுச்சு… அதனால என்னடி..? எல்லாம் முடிச்சுட்டு அவங்களும் வரணும்ல… இப்போ வீட்டுக்குப் போய் நீ என்ன பண்ணப் போற… தூங்கத்தானே போற… வெயிட் பண்ணு…”

“உனக்கு உன் ஆள்கூட கார்ல போற குஷி. எனக்கு அந்த இளங்கோவை ஃபேஸ் பண்ணனுமேன்னு எரிச்சல்…” என்றவளின் முகத்தில் இன்னும்கூட கோபம்.

“உன்னை நேர்ல பார்த்த உடனே சாரி கேட்டுடுவார்டி. அதுக்காக கூட நம்மளை வெயிட் பண்ண சொல்லி இருக்கலாம். அந்த அண்ணனும் ரொம்ப நல்லவர்தான்…”

“அடடா… அந்த அடைமொழியை நீயே வச்சுக்கோ… நல்லவர்தான் கீழே விழுந்து உருண்டு வலியோட நிக்கிற ஒரு பொண்ணை பார்த்து கைகொட்டி சிரிச்சாரோ..? சரியான சைக்கோ…”

இன்னும்கூட அவனது ஏளனச் சிரிப்பு அவளுக்குள் உறுத்திக் கொண்டேதான் இருந்தது.

அடுத்த சில நிமிடங்களில் ‌பக்கவாட்டுப் பகுதியில் இருந்து இருவருமே வந்திருந்தனர். திலோவின் கண்கள் அமரனை ஆசையாய் தழுவ ரஞ்சனியின் விழிகளோ இளங்கோவை கோபமாய் வெறித்தன.

“ட்டூ மினிட்ஸ்… காரை மட்டும் எடுத்துட்டு வந்துடுறேன்…” திலோவிடம்தான் கூறினான் இளங்கோ. ஆனால் அவன் விழிகள் ரஞ்சனியிடம்தான் பதித்திருந்தன. கண்கள் சுருக்கி அவளிடம் சில நொடிகள் கெஞ்சியும் நின்றன அந்த விழிகள்.

அவளோ அவனைப் பார்ப்பதை தவிர்த்து விழிகளை திருப்பிக் கொண்டாள்.

அமரனை நெருங்கி நின்றாள் திலோத்தமா. அவளது பிரத்தியேக வாசம்… நெருங்கி நின்ற பிம்பத்தை உணர்ந்தவனுக்குள் ஏதோ சொல்ல முடியாத சிலிர்ப்பு.

“அமர்…” அவளது ஆழ்ந்த காதலான அழைப்பு.

பதில் கூறாமல் அமைதியாக நின்றான் அமரன்.

“இன்னைக்கு ப்ரோக்ராம்ல கலக்கிட்டீங்க. உங்க சோலா பர்ஃபாமன்ஸ் அப்படியே மொத்த கூட்டத்தையும் கட்டிப் போட்டு வச்சுடுச்சு. உங்க கையில வாயில நிறைய வித்தை இருக்கு. அப்படியே மெஸ்மெரைஸ் ஆயிட்டேன்…”

மனம் திறந்து மகிழ்வோடு பாராட்டினாள்.

“ம்ம்… தேங்க்ஸ்…” அவ்வளவுதான் அவனது ரியாக்ஷன்.

“நல்லா பண்ணினீங்க… வாழ்த்துகள் சார்…”

ரஞ்சனியும் பக்கவாட்டில் இருந்து கூற அவளிடம் மெல்லிய புன்னகையோடு ஒரு சிறு தலையசைப்பு அவ்வளவே.

கண்களோடு புருவத்தை உயர்த்தி ஆயாசமாய் தலையாட்டியபடி தன் தோழியை பார்த்தாள் ரஞ்சனி. எப்படித்தான் இந்த ஆளை வழிக்கு கொண்டு வரப்போறியோ என்றுதான் அவளது பார்வை உணர்த்தியது.

காரினை அவர்களது அருகில் வளைத்து நிறுத்தினான் இளங்கோ. முன் இருக்கையில் அமரன் ஏறி அமர்ந்து கொள்ள பெண்கள் இருவரும் பின்னே ஏறி அமர்ந்து கொண்டனர். கூட்டமும் நெரிசலுமற்ற பாதை வழியே எளிதாக வெளிவந்து முக்கியச் சாலையில் விரைவாகவும் பயணிக்கத் தொடங்கி இருந்தனர்.

அமரனின் காரில் அவனோடு இணைந்த முதல் பயணம். புன்னகை இழையோட மகிழ்ச்சியாக அமர்ந்திருந்தாள் திலோத்தமா. இதற்கு அவனிடம் சம்மதம் வாங்குவதற்குள் இளங்கோவிற்கு போதும் போதும் என்று ஆன கதை எல்லாம் அவனுக்குத்தானே தெரியும்.

“ரெண்டு மூனு தடவை அவ கையால சாப்பிட்டு இருக்கோம்… அந்த நன்றிக்காவது கூட்டிட்டு போகலாம்டா… உனக்கு பிடிக்கலையா நீ பேசாத… அமைதியா உட்கார்ந்துக்கோ. பாவம்தானே… தனியா ரெண்டு பொண்ணுங்களும் இந்நேரத்துக்கு மேல போகணும்…நாமளா சுமக்கப் போறோம்… நம்ம கார்தானே…”

“அப்படி பார்த்தா இன்னைக்கு ஏகப்பட்ட பெண்கள் வந்திருப்பாங்க… எல்லாரையும் வீடு வீடா கொண்டு போய் விட்டுட்டு வருவியா நீ..?” எகிறினான் அமரன்.

“மத்தவங்களும் அவங்களும் எனக்கு ஒன்னும் கிடையாது… வாயை மூடிட்டு நீ அமைதியா இருந்தா போதும்…”

இளங்கோவின் அழுத்தமான வார்த்தைகளில் அதற்குப் பிறகு மறுப்பு தெரிவிக்கவில்லை அமரன். முன்னிருக்கையில் அமர்ந்திருந்தாலும் பின் இருக்கையில் இருந்து அவளுக்கே அவளுக்கான பிரத்தியேக வாசம் அவனுக்குள் இறங்கிக் கொண்டுதான் இருந்தது. உள்ளுக்குள் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் சஞ்சலங்களை அவனாலும் உணர முடிகிறது. ஆனாலும் பலவற்றையும் யோசித்து தன்னை நிதானப்படுத்துகிறான்.

காரினை செலுத்திக் கொண்டிருந்த இளங்கோவின் விழிகள் தனக்கு முன் இருந்த கண்ணாடியின் வழியே பின்னே இருந்த ரஞ்சனியை அடிக்கடி ஆராய்ந்து கொண்டே இருந்தன. பாதையில் கவனம் பதித்திருந்தாலும் அவ்வப்போது அவளையும் பார்த்தபடிதான் வந்தான். ஆனால் அவளோ முகத்தை ஜன்னல் புறமாக திருப்பி இறுக்கமாக அமர்ந்திருந்தாள். சுழிந்திருந்த அவளது புருவம் அவளது கோபத்தின் சாயலை தெரிவித்தது.

அவளோடு பேச வேண்டும் ஒரு மன்னிப்பையாவது கேட்டுவிட வேண்டும். ஆனால் அது தனிமையாக இருந்தால் நன்றாக இருக்குமே என்று சிந்தித்தான் இளங்கோ. அந்த தனிமையை ஏன் தேடுகிறான் என்பது அவனுக்கே தெரியவில்லை. மன்னிப்புதானே… அனைவரின் முன்னிலையில் கேட்ககூட செய்யலாமே… உடன் இருப்பவர்கள் நெருக்கமானவர்கள்தானே… ஆனாலும் ஏனோ ஒரு சிறு தனிமை அவனுக்கு தேவைப்பட்டது.

திலோவிற்கு ஏதேதோ பேச வேண்டும் என்று நிறைய ஆசை. ஆனால் வார்த்தைகள் வெளிவரவில்லை. இவள் 100 வார்த்தைகள் பேசினாலும் அமரனிடமிருந்து வெளிப்படப் போவது ஒற்றை வார்த்தை அல்லது ஒரு சிறு தலையசைப்பு அதுவும் இல்லை என்றால் பேரமைதி. இழுத்து பெருமூச்சுவிட்டு அமைதியாகவே அமர்ந்து கொண்டாள்.

வீட்டின் காம்பவுண்டின் அருகே காரை கொண்டு சென்றவன் தலையை பின்னால் திருப்பி “திலோ… கேட்டை மட்டும் திறந்து வைடா…” என்றான் உரிமையாய்.

அவளும் இறங்கி ஓடிச் சென்று கேட்டை அகலத் திறக்க காரினை போர்டிகோவில் கொண்டு நிறுத்தினான்.

கார் நின்றவுடன் அதே வேகத்தில் கதவை திறந்து கொண்டு வேகமாய் வீட்டை திறந்து உள்ளே நுழைந்திருந்தான் அமரன். திலோவின் அருகாமை அவனுக்கு மூச்சு அடைப்பதுபோல் தோன்றியது. ஏனோ அவனது நாசியும் மூளையும் அவளது வாசத்தை உறிஞ்சிக் கொண்டே இருக்க ஆசை கொண்டதுபோல் ஓர் பயம்.

“ஓகேண்ணா… நாளைக்கு பாக்கலாம்… ரொம்ப டயர்டா இருப்பீங்க… நாளைக்கு எதுவும் சமைக்காதீங்க… நான் சமைச்சு எடுத்துட்டு வரேன்…”

உரிமையாகச் சொல்லி ரஞ்சனியை அழைத்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பினாள் திலோத்தமா.

“ரஞ்சனி…”

இளங்கோவின் அழைப்பில் இருவருமே திரும்பினர்.

“திலோ… ட்டூ மினிட்ஸ்…”

கண்கள் சுருக்கி இரு விரல்களை அவளிடம் காட்ட சிறு அகலமான புன்னகையுடன் தலையை அழுத்தமாக சாய்த்து நிமிர்த்தி கண் மூடித் திறந்து அங்கிருந்து சென்றிருந்தாள் கிலோ.

எதுவும் பேசாமல் கண்கள் குவித்து அவனையே பார்த்துக் கொண்டு நின்றாள் ரஞ்சனி.

“சா..சாரி… ஐ அம் எக்ஸ்ட்ரீம்லி சாரி…”

அடி மனதில் இருந்து உண்மையான வருத்தத்தோடு கேட்டிருந்தான். பதில் பேசவில்லை… ஆனாலும் அவளது விழிகள் அவனின்மேல் அழுத்தமாக பதிந்திருந்தன.

“நா..நான் சு..சும்மா உன்ன வெறுப்பேத்தணும்னுதான் அ..அப்படி பண்ணினேன். ஆ..ஆனாலும் அதுக்கப்புறம் மனசு ரொம்ப கஷ்டமா போயிடுச்சு… காயம் அதிகமாயிடுச்சா..? இப்போ ஓகேவா..?”

வருத்தத்தோடு கேட்டவன் அவளது முழங்கையை விழிகளால் ஆராய்ந்தான்.

அதற்கும் அவளிடம் பதில் இல்லை.

“நான்தான் சாரி கேட்டுட்டேனே… இன்னும் கோபமா..?”

அவள் விழிகளை பார்த்தபடியே அப்பாவியாக கேட்டவனின் குரல் மொத்தமாக இரங்கி இருந்தது.

“பரவாயில்லையே… அடுத்தவங்களுக்காக வருத்தம் எல்லாம் கூட உங்களுக்கு வருது…” ஏராளமாகத்தான் பதில் அளித்தாள் ரஞ்சனி.

“நான் ஒன்னும் இரக்கமில்லாத கல் நெஞ்சக்காரன் கிடையாது ரஞ்சனி…”

“ம்ம்… தெரிஞ்சுக்கிட்டேன்…” என்றாள் புருவத்தை ஏற்றி.

“இப்போ கோபம் இல்லையே…”

“கோபம் இருந்தா என்ன பண்ணுவீங்களாம்..?”

அவனது வெளிப்படையான யாசிப்பிலும் முகத்தில் தெரிந்த அந்த நிஜமான வருத்தத்திலும் அவளும்கூட இந்த நொடி சற்று இலகுவாகி இருந்தாள்.

“நீயே வெறுத்து போற அளவுக்கு இன்னைக்கு பூரா சாரின்னு ஒரு வார்த்தையை உனக்கு மெசேஜ் பண்ணிட்டே இருப்பேன்… நொந்து நூடுல்ஸ் ஆயிடுவ…”

அவன் சொன்ன தோரணையில் அவளுக்கு சிரிப்பு வந்துவிட அவளது சிரிப்பில் இவனுக்குள்ளும் மகிழ்ச்சி.

“நீங்க ஓகேவாதான் இருக்கீங்க… ஆனா உங்க பிரண்டுதான் ரொம்ப டைட்டா தெரியுறார். திலோ பாவம்… அவளை ரொம்ப கஷ்டப்படுத்திட போறார்… நீங்கதானே அவருக்கு எல்லாமே… அவளைப்பத்தி சொல்லி புரிய வைங்க…”

இலகுவான அக்கறையான அவளது பேச்சில் அவனும் புன்னகைத்துக் கொண்டான்.

“அதெல்லாம் அவன் ஓகே ஆயிடுவான்… எனக்கு நம்பிக்கை இருக்கு…”

“சந்தோஷம்… சரி நான் வரேன்…”

சொன்னவள் திரும்பி நடக்க “ரஞ்சனி…” என்ற அவனது அழைப்பில் மீண்டும் திரும்பினாள்.

ஏதோ சொல்ல வந்து தயங்கியவன் போல் நின்று கொண்டே இருக்க அவள் குழப்பமாக விழிகள் சுருக்கினாள்.

“ஒ..ஒன்னும் இல்ல… கு..குட் நைட்…”

அதைச் சொல்ல அவனுக்கு ஏன் அத்தனை தடுமாற்றமோ. சிரித்துக் கொண்டவள் தானும் குட் நைட் என்று கூறி அங்கிருந்து கிளம்பி சென்றிருக்க அவள் மாடி ஏறி மறையும்வரை அங்கேயே பார்த்தபடி நின்றிருந்தான் இளங்கோ.

(தொடரும்)
 
Top Bottom