• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

குழலில் காற்றாகினாள் - 19

STN - 29

Member
குழல் - 19

அழகழகாய் விடிகின்றன திலோத்தமாவின் விடியல்கள்.

காதல் தருணங்கள் கைக்கு அருகில்… கண்ணுக்கு எதிரில்… இப்பொழுதெல்லாம் இன்னும் கூடுதலாய் கையோடு கைகோர்த்து…

விழிகளும் கூடத்தான் கோர்த்துக் கொள்கின்றன… ஒளியற்ற அவன் விழிகளும் அவள் விழிகளின் வீரியத்தை உணர்ந்து ஜொலிக்கின்றன. அருகில் அவள் அமரும் போதெல்லாம் தன் விரல் கொண்டு அவளது முகவடிவை தொட்டு தொட்டு ஆராய்ந்து பூரித்து புன்னகைப்பான்.

“உங்க மனசுக்குள்ள கற்பனையா எனக்குன்னு ஒரு உருவம் வரைஞ்சு வச்சிருக்கீங்களா அமர்..?” கேட்டபடியே உரிமையாய் அவன் தோளில் சாய்வாள்.

“பத்து வருஷம்வரைக்கும் எனக்கும் முழுமையான பார்வை இருந்ததே.. உருவங்கள் எப்படி இருக்கும்னு எனக்கும் தெரியுமே… ஆனாலும் உனக்கு தனியா எந்த வடிவமும் கொடுக்கல… கொடுக்கவும் முடியல… ஒரு மாதிரி மாயபிம்பமா என் மனசுல பதுக்கி வச்சிருக்கேன்… அதைத்தான் ரசிக்கிறேன்…”

புன்னகையோடு சொல்பவனை புருவம் உயர்த்திப் பார்ப்பாள். இவனுக்கு இப்படி எல்லாம் பேசத் தெரியுமா என்று ஆச்சரியம் எழும்.

தினமும் காலையும் மாலையும் அவளது வாசம் வேண்டும், விரல்கள் கோர்க்கும் ஸ்பரிசம் வேண்டும், கொஞ்சு மொழி பேசும் அவள் குரல் வேண்டும், அவள் மீதான அடிக்சன் அவனுக்குள் இறங்கி இருந்தது.

நண்பனின் மாற்றங்கள் பார்த்து, அவன் முகத்தில் தெரியும் புது பொலிவு கண்டு, இதழ்களில் எப்போதும் வீற்றிருக்கும் மாறாத நிஜ புன்னகையை கண்டு, மனம் பூரித்து மகிழ்கிறான் நட்பின் இலக்கணமான நண்பன் இளங்கோ.

சில பொழுதுகளில் அவளை ஆச்சரியப்படுத்தும்படி அவனே ரோடு தாண்டி மாடி ஏறி வீட்டிற்கு வந்து அவள் கூடத்தில் நின்று ஆனந்த அதிர்ச்சிக்கு ஆளாக்குகிறான்.

இனி அவளன்றி அவனால் வாழவே முடியாது என்ற நிலைக்கு சிறிது சிறிதாக தள்ளப்பட்டுக் கொண்டிருந்தான் அமரன்.

கணேஷ் சாந்தி தம்பதியருக்கு மூக்கு வியர்க்காமல் இருக்குமா..? விஷயம் தெரியாமல் போய்விடுமா..? அவன் இங்கே வருவதும் இவள் அங்கே ஓடுவதும் என்று அனைத்தையும் கவனித்தவர்கள் நேரடியாகவே திலோவிடம் விபரத்தை கேட்டிருந்தனர்.

குழப்பமோ தடுமாற்றமோ இன்றி தெளிவாக தனது காதலை வெளிப்படுத்தி இருந்தாள் அவளும்.

கேக்கவே ரொம்ப சந்தோஷமா இருக்கும்மா… ரொம்ப நல்ல பையன்… வாழ வேண்டிய வயசு..
அவனை நினைச்சு நாங்ககூட ரொம்ப வருத்தப்பட்டதுண்டு… ஆனா அவனுக்கு இப்படி ஒரு வாழ்க்கை காத்திருக்குன்னு நினைக்கும்போது சந்தோஷமா இருக்கு. தாமதம் பண்ணாம சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கிட்டு அவன்கூட சந்தோஷமா வாழு…”

நிறைவாக வாழ்த்து கூறியிருந்தனர் இருவரும்.

அன்று ஞாயிற்றுக்கிழமை… காலையே குளித்து முடித்து தன்னவனின் வீட்டிற்கு ஓடி இருந்தாள் திலோத்தமா.

“அண்ணா…”

ஆசையாக ஓடி வந்தவளை சிரிப்போடு எதிர்கொண்டான் இளங்கோ.

“இன்னைக்கு காலையில டிபன், மதியம் லஞ்ச், நைட் டின்னர் மூனுமே நான்தான் பண்ணப் போறேன்… இங்கேதான் பண்ணப் போறேன்… இன்னைக்கு எங்கேயும் அவுட்டிங் கிடையாது… வீட்டிலேயே செலிபரேட் பண்ணப் போறோம்…”

துள்ளலோடு கூறியவள் தன்னவனை தலையை திருப்பி தேடினாள்.

“மாடியில எக்சர்சைஸ் பண்றான்…” துண்டினால் முகத்தை துடைத்தபடியே கூறினான். இவன் முடித்து இறங்கி வந்திருக்க அவன் இன்னும் தொடர்ந்து கொண்டிருப்பான் போலும்.

“நான் எதுக்கு உங்க ரெண்டு பேருக்கும் இடையில கரடி மாதிரி..? நான் வேணா கழண்டுங்கிறேன்… நீங்க என்ஜாய் பண்ணுங்க…” என்று கண்சிமிட்டி சிரித்தான் இளங்கோ.

“நோ நோ… அப்படியெல்லாம் எங்க என்ஜாய்மென்ட் எல்லையை நாங்க இன்னும் விஸ்தரிச்சுக்கல… நாங்க ரெண்டு பேரும் சந்தோஷமா இருந்தா எங்களைவிட நீங்கதானே அண்ணா சந்தோஷமா இருக்கீங்க… டோன்ட் ஒரி… நம்மகூட கம்பெனி கொடுக்க இன்னொரு ஆளும் வர்றாங்க…”

“அது யாருடா..?” என்றவன் சாவகாசமாக சோபாவில் சாய்ந்து அமர்ந்து கொண்டான்.

“ரஞ்சனி…”

அவள் சிரிப்போடு கூற புன்னகைத்திருந்த இவனது முகம் சட்டென்று இறுக்கமாக மாறி இருந்தது.

அன்று கைப்பேசியில் அவளோடு கோபமாக பேசியவன்தான். நாட்கள் பல கடந்து ஓடியும் அதன்பின் அவளை பார்க்கவும் இல்லை… பேசவும் இல்லை. அவளைப் பற்றிய எண்ணங்களில் அவ்வப்போது மனம் தன்னையும் மீறி பயணிக்கும்போது கடிவாளமிட்டு அமைதிப்படுத்தி விடுவான்.

இன்னமும்கூட அன்று அவள் பேசிய வார்த்தைகளை மனம் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. சட்டென அமைதியாகி அமர்ந்திருந்தவனை புரியாமல் பார்த்தாள் திலோத்தமா. அவர்களுக்குள் நடந்த சம்பாஷணைகள் பற்றி இவளுக்கு ஒன்றும் தெரியாதே.

“என்ன ஆச்சுண்ணா..?”

“ஒ..ஒன்னும் இல்லம்மா…”

இதற்குள் மாடியில் இருந்து இறங்கி வந்திருந்த அமரன் அவள் குரல் கேட்டு புன்னகைத்தபடியே அவர்கள் இருந்த திசை நோக்கி வந்தான். ஓடிச் சென்று அவன் விரல்களை பற்றிக் கொண்டவளை மெலிதாக தோளோடு அணைத்துக் கொண்டான். உடல் முழுக்க வியர்வை… அவன் அணிந்திருந்த ஆர்ம் கட் பனியன் ‌அவன் உடலோடு ஒட்டிக் கிடந்தது.

“ரொம்ப ஸ்வெட்டிங்கா கசகசன்னு இருக்கேன் திலோ… நான் குளிச்சிட்டு வந்துடறேன்…” என்றபடியே விலகப்போனவனை விலக விடாமல் அவன் கையை தூக்கி தன் தோளில் அழுத்தமாக போட்டுக் கொண்டாள் திலோத்தமா.

“ஏய் என்னடி பண்ற..?” சிரித்தபடியே அவள்புறம் திரும்பினான்.

“உங்க வியர்வை வாசம் ஒரு மாதிரி போதை ஏத்துது அமர்… கொஞ்சநேரம் இப்படியே இருங்க… ம்ம்… லவ்லி ஸ்மெல்…வாவ்… டெம்ப்டிங் மீ…” கண்கள் மூடி மூச்சிழுத்து கிறங்கிய குரலில் ஹஸ்கியாக அவள் கூற அவனோ வெட்கச் சிரிப்புடன் நெளிந்தான்.

பேப்பர் படிப்பதுபோல் சோபாவில் அமர்ந்து பாவ்லா செய்து கொண்டிருந்தவனோ சத்தமாக தொண்டையை செருமினான்.

“இதுக்குத்தான் என்னை விட்டுடுங்க நான் கிளம்பி ஓடிப் போயிடறேன்னு சொன்னேன். நீங்க நடத்துங்க… நான் திரும்பவும் செடிகளுக்கெல்லாம் தண்ணி விட்டுட்டு கணேஷ் அங்கிள்கூட உட்கார்ந்து அரசியல் பேசிட்டு இருக்கேன். மூனு வேளையும் சமையல் பண்ணி சாப்பிடற நேரத்துக்கு மட்டும் எனக்கு கால் பண்ணி கூப்பிடு திலோ…”

சிரிப்புடன் சொன்னபடியே எழுந்து வாசல்வரை சென்றவன் படியை விட்டு இறங்காமல் அங்கேயே நின்றான். தனது ஸ்கூட்டியில் கேட்டை தாண்டி உள்ளே நுழைந்திருந்தாள் ரஞ்சனி. இதற்குள் சத்தம் கேட்டு திலோத்தமாவும் வேகமாக அங்கு வந்திருந்தாள்.

“இதோ உங்களுக்கு கம்பெனி கொடுக்க ஆளும் வந்தாச்சு… நீங்க ஒன்னும் புரியாத அரசியலை கஷ்டப்பட்டு பேச வேண்டாம். எங்க தப்பிச்சு ஓடுறீங்க..? வாங்கண்ணா…”

செல்ல முறைப்போடு அவன் கையை பிடித்து இழுத்துக் கொண்டு அவள் உள்ளே நுழைய அவர்களை பார்த்தபடியே அமைதியாக பின்னே நுழைந்தாள் ரஞ்சனி.

“அமர்… ரஞ்சனி வந்திருக்கா…”

இங்கிருந்தே குரல் கொடுத்தாள் கிலோ. வாசல் பக்கமாக தலையை திருப்பி புன்னகையோடு “வாங்க…” என்று அழைத்திருந்தான் அமரன்.

மெல்லிய புன்னகையுடன் தலையாட்டிக் கொண்டவளின் விழிகள் இளங்கோவின் மீதுதான் படிந்திருந்தன. அவள்புறம் அவன் திரும்பவே இல்லை… அவளை பார்த்த நொடியில் அவன் முகம் இறுகி நின்றதை இவளும் கவனித்தபடிதான் உள்ளே நுழைந்தாள்.

வீட்டிற்கு வந்தவளை சம்பிரதாயமாக வா என்றுகூட அவன் அழைக்கவில்லை. சட்டமாக வேறு ஒரு இருக்கையில் சென்று அமர்ந்தவன் அங்கு இருந்த புத்தகம் ஒன்றை எடுத்து கையில் வைத்துக் கொண்டான். புருவங்கள் நெறிந்து தாடைகள் இறுகி இருந்தன.

“ஏய்… நான் சொன்ன சாமான் எதுவும் வாங்கிட்டு வரலையாடி…”

இடுப்பில் கை வைத்தபடி கேட்டாள் திலோத்தமா.

“எல்லாமே வாங்கிட்டு வந்துட்டேன்டி… வண்டியில இருக்கு…” என்றபடியே செல்லப் போனவளை அங்கிருந்து இருக்கையில் அமர்த்திவிட்டு தானே சென்று அங்கிருந்த இரண்டு பெரிய கவர்களை எடுத்து வந்திருந்தாள் திலோத்தமா.

தன்னை சிறிதும் கண்டுகொள்ளாத இளங்கோவை சங்கடமாக பார்த்தபடியே அமர்ந்திருந்தாள் ரஞ்சனி. அன்று வார்த்தைகளை கொட்டியபின் அது குறித்து அவள் வருந்தாத நாளே இல்லை. அதுவும்கூட நட்பின் வேறுவிதமான பரிமாணம்தான். தன் தோழி இத்தனை தூரம் நிஜமான நேசத்தை கொட்டிக் கொடுத்தும் அதனை உணர மறுக்கிறானே இந்த அமரன் என்ற கோபத்தில் கொட்டிய வார்த்தைகள். ஆனாலும் மிகவும் பலமான வார்த்தைகள் அல்லவா.

ஒரு நிஜ நண்பனாக இளங்கோவின் கோபம் புரிந்தது. இத்தனை நாட்களில் சினம் குறைந்திருப்பான் என்று எதிர்பார்த்து வந்தவளுக்கு இன்னும் அந்த கோபத்தில் இருந்து அவன் கொஞ்சம்கூட வெளியே வரவில்லை என்பதை தெளிவாகவே உணர்த்தி இருந்தான் இளங்கோ.

சமையலறைக்குள் புகுந்து கொண்ட திலோ காலை உணவு தயாரிப்பதற்காக மும்முரமாக வேலையில் இறங்கி இருந்தாள். தான் வாங்கி வந்திருந்த பொருட்களை எடுத்துச் சென்று அவளிடம் கொடுத்து தானும் உதவுவதற்காக அருகில் நின்று கொண்டாள் ரஞ்சனி.

“திலோ…”

இளங்கோவின் அழைப்பில் அவளோடு சேர்ந்து ரஞ்சனியும் திரும்பினாள்.

“உங்க மூனு பேருக்கு மட்டும் சமைச்சுக்கோ… எனக்கு வேலை இருக்குடா… நான் வெளில போறேன்… வர்றதுக்கு நைட் ஆயிடும்…”

கனியாத குரலில் கூறியவன் அவள் பதிலையும் எதிர்பார்க்காமல் வேகமாய் திரும்பி நடந்தான்.

“என்னாச்சு இந்த அண்ணனுக்கு..? இவ்வளவு நேரம் ஜாலியாதானே இருந்தார்… போகட்டும்… சமையல் எல்லாம் முடிச்சுட்டு போன் பண்ணி லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கினா ஆட்டோமேட்டிக்கா வந்துடப் போறார்…”

சத்தமாக முணுமுணுத்தபடியே திலோ தனது வேலையை தொடர்ந்திருக்க வாசலில் இறங்கிச் சென்றவனை துரத்தியபடி வேகமாக வெளியே ஓடி வந்தாள் ரஞ்சனி. அமரன் அங்கு இல்லை… குளிப்பதற்காக தன் அறைக்கு சென்றிருந்தான்.

“இளங்கோ...”

தனது வண்டியின் அருகே சென்றவனை வேகமாக அழைத்தபடி அவன் அருகில் சென்று நின்றாள் ரஞ்சனி.

அவள்தான் அழைக்கிறாள் என்று தெரிந்தும் அவள்புறம் திரும்பாமல் வண்டியில் ஏறி அமர்ந்திருந்தான்.

“என்மேல உங்களுக்கு கோபம் குறையவே இல்லைன்னு நல்லா தெரியுது. ஐ அம் சாரி… எக்ஸ்ட்ரீம்லி சாரி… அதுக்கு அப்புறம் உங்ககிட்ட மன்னிப்பு கேட்கணும்னு பல தடவை யோசிச்சேன். ஆனா போன் பண்ணி மன்னிப்பு கேட்கிறதுல எனக்கு உடன்பாடு வரல. உங்கள நேர்ல சந்திச்சு கேக்கணும்னு நினைச்சிட்டு இருந்தேன். ஆபீஸ் வேலை ரொம்ப டைட்டா இருந்ததால திலோவை பாக்கவும் என்னால வர முடியல. உண்மைய சொல்லணும்னா இன்னைக்கு உங்கள நேர்ல பார்த்து மன்னிப்பு கேட்கணும்தான் ஓடி வந்தேன்…”

அவன் முகத்தை பாவமாய் பார்த்தபடியே இரங்கிய குரலில் அவள் பேசிக்கொண்டே இருக்க அவள் முகத்தை நிமிர்ந்தும் பார்க்காமல் தலையை வேறுபுறமாக திருப்பியபடி கால்கள் இரண்டையும் கீழே ஊன்றி கைகள் இரண்டையும் மார்பிற்கு குறுக்கே கட்டிக்கொண்டு வண்டியின் மீது அமர்ந்திருந்தான் இளங்கோ.

ஏதேனும் பேசுவானா என்று அவனது முகத்தையே பார்த்தபடி நின்றிருந்தாள் ரஞ்சனி. அதற்கான வாய்ப்பு ஒன்றும் தெரியவில்லை.

“என்மேல கோபம் போகலையா..? நான் இங்கே வந்தது பிடிக்கலையா..? என்னை காரணமா வச்சு நீங்க ஏன் கிளம்பி போறீங்க..? நான் வேணா திலோகிட்ட ஏதாவது சொல்லி சமாளிச்சு கிளம்பி போயிடுறேன். உங்களுக்கும் அமரனுக்கும் ஆசையா சமைச்சு கொடுக்கணும்னு ஏதேதோ வாங்கி வச்சிருக்கா. என்னை காரணமா வச்சு நீங்க போக வேணாம்…”

சொன்னவள் வேகமாக திரும்பி நடக்க “நீ அன்னைக்கு என்கிட்ட பேசுனது திலோவுக்கு தெரியுமா..?” முதுகிற்கு பின்னே எழுந்த அவன் கேள்வியில் அவன்புறமாக திரும்பினாள்.

இல்லை என்ற தலை ஆட்டியவளை இதழ் கோணி சிரித்தபடி பார்த்தான்.

“ஒளிவு மறைவில்லாத நட்புதானே.. அப்புறம் ஏன் அவகிட்ட சொல்லல..?”

“தெரிஞ்சா என் முகத்திலகூட முழிக்க மாட்டா…”

படக்கென வண்டியில் இருந்து இறங்கி வேகமாக அவளை நெருங்கி அவள் தாடையை பற்றி வெடுக்கென தன்னை நோக்கி திருப்பினான்.

“மூனு வருஷமா தள்ளி நின்னு பார்த்தவளே முகத்துல முழிக்க மாட்டாதானே. பத்து வயசுல இருந்து அவன் கூடவே இருக்கேன்… இதோ இங்கே அவனை சுமந்துக்கிட்டு இருக்கேன்…” தன் நெஞ்சை வேக வேகமாக தட்டிக் காட்டினான்.

“நான் அவ்வளவு ஈசியா மறந்துடுவேனா..? உன் கண்ணுல ஒரு பொய்யை பூசிக்கிட்டுதானே இப்பகூட இங்கே வந்து நிக்கிற…”

ஆத்திரம் விலகாமல் அவள் கண்களோடு கண்கள் கலந்து கோபமாக பேசியவன் தனது பிடியை இன்னும் அழுத்த வலியோடு முகம் சுணங்கினாலும் அவனிடம் இருந்து விடுபட முயற்சிக்காமல் கலங்கிய விழிகளோடு அவனையே பார்த்திருந்தாள் ரஞ்சனி.

“யூ ஆர் சச் எ கிரேட் ஃபிரண்ட்… குட் சோல்…உங்க நட்போட ஆழத்துக்கு முன்னால நான் திலோ பக்கத்திலகூட நிக்க முடியாது.. எங்க நட்புதான் பெருசுன்னு எனக்குள்ள ஒரு கர்வம் இருந்தது. அதை நீங்க தூள் தூளாக்கி உடைச்சுட்டீங்க.‌ இப்ப உரிமையோட என்னை பிடிச்சிருக்கீங்களே… அதே உரிமையோட என்னை அடிச்சிருங்க… என் மனசுல இருக்குற வலி குறையட்டும்… உங்களுக்குள்ள இருக்கிற வலியும் குறையட்டும்…”

தன் முகத்தை ஒற்றைக் கையால் அழுத்தமாக பற்றி இருந்தவனின் மணிக்கட்டை பிடித்தபடி அவன் விழிகளையே அவள் பார்க்க, அவள் விழிகள் சொன்ன வேறு செய்தியில்
அங்கு கலங்கி நின்ற அந்த கண்ணீரில் இதயத்தில் ஏதோ அதிர்ந்து படக்கென கையை விலக்கிக் கொண்டவன் விறுவிறுவென வீட்டிற்குள் சென்றிருந்தான்.

(தொடரும்)
 
Top Bottom