• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

குழலில் காற்றாகினாள் - 28

STN - 29

Member
குழல் - 28

அந்த இரண்டாம் தளத்தின் அறையில் உள்ள பால்கனியில் நின்று ரஞ்சனியுடன் பேசி முடித்து அறைக்குள் நுழைந்தான் இளங்கோ. படுக்கையில் அமர்ந்து மடியில் ஒரு தலையணையை வைத்து அதில் முழங்கையை ஊன்றி கன்னத்தை தாங்கி எதிரில் இருந்த சுவற்றை அமைதியான முகத்தோடு பார்த்துக் கொண்டிருந்தான் அமரன்.

“என்னடா பேசி முடிச்சிட்டியா..? என்னை கழுவி கழுவி ஊத்தினாளா ரஞ்சனி..?” என்றவனின் இதழ்களில் ஒரு மெல்லிய புன்னகை. ஆனால் விழிகள் எதிர்ப்புறம் இருந்து அசையவே இல்லை.

“நீதான் என் வாயை மொத்தமா கட்டிப் போட்டு வச்சிருக்கியே… நான் என்ன பேசி அவளை சமாளிக்கட்டும்..? நல்ல நாளிலேயே ஜதி சொல்லாமலே ஆடுவா… இப்போ காலுல சலங்கையும் கட்டி விட்டாச்சு… போனை எடுத்து காதுல வச்சாலே ஒரே நாட்டிய ஒலிதான்…”

இதனை கேட்டு பக்கென சிரித்திருந்தான் அமரன். ஏனோ அந்த சிரிப்பில் இளங்கோவின் முகத்திலும் ஒரு நிம்மதியான புன்னகை. அழுத்தங்களை கடந்து இப்பொழுதுதான் புன்னகை சிரிப்பாக மாறிக் கொண்டிருக்கிறது. இந்த மாற்றங்கள் தேவை என்றுதானே இருவரும் தனித்தீவில் இருப்பதுபோல் அந்த தனியறையில் அமர்ந்து கிடக்கின்றனர்.

அது ரேஷ்மா மருத்துவமனையின் இரண்டாம் தளத்தில் உள்ள ஒரு தனி அறை. அவர்களுக்காகவே பிரத்தியேகமாக ஒதுக்கி கொடுக்கப்பட்டிருந்தது.

“நாம இங்கே வந்து எத்தனை நாள் ஆச்சுடா..?”

இன்னும் விழிகள் எதிரில்தான்.

“ஒரு நாளைக்கு எத்தனை தடவை இதையே கேட்ப..?”

“சொல்லுடா…”

“33 நாள் முடிஞ்சது… இன்னும் ஒரு வாரத்தில நாம் இங்கே இருந்து கிளம்பலாம்…”

கண்கள் சுழற்றி ஏதோ கணக்கு போட்டு மீண்டும் பார்வையை எதிரில் பதித்துக் கொண்டான் அமரன்.

“கண்ணுக்கு அடிக்கடி ஓய்வு கொடுக்கணும்டா… சிமிட்டணும்… பத்து நிமிஷம் கண்மூடி இருக்கணும்… எதையும் ஆழமாக அழுத்தமா பார்க்கக் கூடாது… இதெல்லாம் ஞாபகம் இருக்கா..?” அவன் கண் போன திசையில் தானும் பார்த்து புன்னகையோடு கேட்டான் இளங்கோ.

“அங்கே பார்க்கும்போது என் கண்ணுக்கு என்ன பாதிப்பு வந்துடப் போகுது..?”

கண்களில் இப்போது காதல் தனித்து மிளிர்ந்தது. அவனுக்கு எதிரில் நீள அகலமாய் பெரிய புகைப்படச் சட்டத்திற்குள் கண்ணை கொத்தும் அழகுடன் சிரித்துக் கொண்டிருந்தாளே திலோத்தமா.

இந்த 33 நாட்களாக அவனை உயிரோடு, உணர்வோடு, நிதானத்தோடு, நிம்மதியோடு வைத்திருக்கும் ஒரே விஷயம் அந்த புகைப்படம் மட்டும்தானே.

நேரில் பார்க்காமல் துரத்தி அடித்து புகைப்படச் சட்டமாக மாற்றி வைத்து உறங்கும் நேரம் தவிர எந்நேரமும் அவளைத்தான் மனதிற்குள் முழுமையாக ஏற்றி நிறைத்துக் கொண்டே இருக்கிறான்.

இது ஒரு விதமான தவம்… வேள்வி… தியானம்…

தவித்து தடுமாறி உணர்வுகளின் உந்துதலில் ஆட்பட்டு சிறிது சிறிதாக தன்னை நிலைப்படுத்தி சமன் செய்து சிரிப்போடு அவள் புகைப்படத்தை பார்க்கும் அளவிற்கு தன்னை முன்னேற்றி இருக்கிறான் அமரன்.

விழிக்கு வழி செய்தவளை நேரில் பார்க்காமல் இது என்ன புதுவிதமான புரட்சியா..?

இல்லை… நிச்சயமாய் இல்லை…

அவனுக்குள் தெளிவுபடுத்திக் கொண்ட சில விஷயங்களை ஈடேற்றிக் கொள்ளும் முன் எடுத்துக் கொள்ளும் ஒரு வார்ம் அப்.

அவளை நேரில் சந்திக்கும் நொடியில் உடைந்த துகள்களாக சிதறப் போவது உறுதி. ஆனாலும் மீண்டும் உருப்பெற்று உயிர் பெற்று நிற்க அன்றாடம் மேற்கொள்ளும் ஜீவப் போராட்டம்.

அன்றைய நாள் உண்மைகள் அனைத்தும் தெரிந்து அவன் கொண்ட ரணங்களும் கண்ணீரும் அவனுக்காக அல்ல… அவளுக்காக.

இரவு முழுக்க நிறைய யோசித்து தனக்குள் ஒரு முடிவை எடுத்திருந்தான்.

விழிகள் திறந்து இளங்கோவை பார்த்த நொடியில் அவனுக்குள் ஏற்பட்ட உடல்ரீதியான மனரீதியான மாறுதல்களே அவனை பெரும் பாதிப்பிற்கு உள்ளாக்கி இருந்தன.

“அமரன்… நீங்க இவ்ளோ எமோஷனல் ஆனா இவ்ளோ கண்ணீர் கண்ணுல வந்தா அது கண்டிப்பா விழித்திரையை பாதிக்கும். ஒன்ஸ் பண்ணியாச்சு… திரும்பவும் கண்ணுல கை வைக்க முடியாது… நீங்க எந்த அளவுக்கு பாதுகாத்துக்கறீங்களோ அந்த அளவுக்கு லைஃப் லாங் எந்த பிரச்சனையும் வராது. குறைஞ்சது 40 நாள் நாங்க சொல்றபடி நீங்க கேட்டு இருந்தா மட்டும்தான் காலத்துக்கும் பிரச்சனை இல்லாம இருக்க முடியும்…”

அவன் கண்ணுக்கு மருந்து ஊற்றி பொறுமையாக சில விஷயங்களை எடுத்துக் கூறி இருந்தார் ரேஷ்மா. ஒரு மருத்துவராக அவர் எதிர்பார்ப்பதும் சொல்வதும் சரியாக இருந்தாலும் ஒரு சராசரி மனிதனாக அத்தனை எளிதாக சில விஷயங்களை கடந்து வர முடியாது. அது அவருக்கும் தெரியும்தான் என்றாலும் ஒரு உயிரைப் பலி கொடுத்து உருவான பார்வை அதை காலம் முழுக்க பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அவனுக்கு இருப்பது போல் அவருக்கும் அதற்கான பொறுப்பு இருப்பதாக நினைத்தார்.

கண்மூடி படுத்திருந்தவன் நிதானமாக பல விஷயங்களை அசை போட்டான்.

‘என் உயிரில் கலந்தவளும் என் உயிரணுவில் உருவான தங்கமும் தியாகத்தில் உருவாக்கிக் கொடுத்த இந்த வெளிச்சத்தை மீண்டும் இருளுக்குள் தள்ளாமல் நான் பாதுகாத்தே ஆக வேண்டும். அத்தனை உண்மைகளையும் அறிந்த நான் அவளை பார்த்த நொடியில் சல்லி சல்லியாக உடைவேன். இது நிச்சயமாக நடக்கும்… இந்த உணர்ச்சிப் போராட்டத்தில் இருந்து என்னை பாதுகாக்க, என் கண்களை பாதுகாக்க, என்னவளை பாதுகாக்க நான் மேற்கொள்ளப் போவது என்ன..?’

யோசித்தான்… திடமாக ஒரு முடிவு எடுத்தான்… இளங்கோவை அழைத்தான்.

“திலோவை ஊருக்கு அனுப்பி வச்சிடு. இப்போ நான் இருக்கிற மனநிலையில அவளை பார்க்கக்கூடாது… பார்க்கவும் முடியாது…’

“ரொம்ப எமோஷனல் ஆயிடுவேன்னு பயப்படுறியாடா..?”

“இல்ல எனக்குள்ள வேற ஒரு வைராக்கியத்தை உருவாக்கி வச்சிருக்கேன். இங்க இருந்து முழுசா ட்ரீட்மென்ட் முடிஞ்சு ஊருக்கு போய்தான் அவ முகத்தை பார்க்கணும்னு நினைச்சு இருக்கேன்…”

“அவ முகத்தை பார்க்கணும்னு உனக்கு ஆசை இல்லையா..?”

“இப்போ இல்ல… அவளை கிளம்பி போகச் சொல்லு…”

தொண்டைக்குள் பல விஷயங்களை அடக்கிக் கொண்டு அவன் திடமாக கூற அவனது ஆழ்ந்த அந்த முகத்திற்குள் ஏதோ காரணம் இருப்பதாக இளங்கோவிற்கும் தோன்றியது. டாக்டர் கூறிய காரணங்களையே அவர்களுக்கு சாதகமாக கூறி அவளையும் அனுப்பி வைத்திருந்தான்.

“இளங்கோ… என்னோட போன்ல நிறைய போட்டோஸ் எடுத்து வச்சிருக்கா… அதுல அவ மட்டும் இருக்கிற ஒரு அழகான போட்டோவை எடுத்து ஃப்ரேம் பண்ணி இன்னைக்கு எடுத்துட்டு வா…”

ஏனோ போனை எடுத்து அவள் முகம் பார்க்க விரும்பவில்லை.

“டேய்… அவளை நேர்ல பார்க்காம போட்டோல பார்க்கிறேன்னு சொல்ற. இது உனக்கே தப்பா தெரியலையா..?”

“நான் சொன்னதை மட்டும் செய்டா…”

அன்றே ஃப்ரேம் செய்யப்பட்ட பெரிய புகைப்படம் அவனது அறைக்கு வந்து சேர்ந்திருந்தது.

அதனை கைகளில் வாங்கியவன் அந்த முகத்திலேயே தனது விழிகளை உறைய வைத்திருந்தான். தன்னிச்சையாக அவன் விரல்கள் அந்த முகவடிவை அளந்தன பொட் பொட்டென கண்ணீர் துளிகள் அதில் பட்டுத் தெறித்தன.

“டேய் நீ அழக்கூடாது…”

“நாலு சொட்டு விழலாம்… தப்பில்ல…” வேதனையோடு புன்னகைத்துக் கொண்டவன் அந்த புகைப்படத்திலேயே கண்களை பதித்துக் கொண்டான்..

துரத்தி துரத்தி காதலித்து அவனையே கைப்பிடித்து அவன் வாழ்க்கைக்கு வழி கொடுத்து விழியும் கொடுத்த அவன் தர்மபத்தினியை முதன்முறையாக பார்க்கிறான் புகைப்படமாக.

அவள் உருவத்தை மனதிற்குள் கற்பனை செய்து கொண்டதில்லை. எந்த வடிவமும் கொடுத்துக் கொண்டதில்லை. அந்த குரல் அந்த வாசம், அவள் அருகாமை அனைத்தும் அவன் மூளைவரை நிரம்பி அவன் உடம்பில் உள்ள திசுக்கள்வரை மொத்தமாக நிறைந்து இருக்கிறது. இன்று அந்த முகவடிவையும் பார்த்துவிட்டான். மனம் முழுக்க நிறைந்து போனாள்… தனது கட்டிலுக்கு எதிரில் மாட்டி வைத்துக் கொண்டான்.

“எனக்கு பார்வை எப்படி வந்துச்சுன்னு உனக்கு தெரியுமாடா..?”

அந்த புகைப்படத்தை வருடியபடி கேட்டவனை இது என்ன புது கேள்வி என்பதுபோல் பார்த்தான் இளங்கோ.

“எனக்கு பார்வை கொடுத்தது யார் தெரியுமாடா..?”

பதில் பேசாமல் புருவம் சுருக்கி அவனையே பார்த்துக் கொண்டிருந்தான் இளங்கோ.

“எ..எ..என் கு..குழந்தை…”

குரல் உடைந்து தொண்டைக்குழி ஏறி இறங்க கூறியவனை அதிர்ந்து பார்த்தபடியே இருக்கையில் இருந்து படக்கென எழுந்து நின்றிருந்தான் இளங்கோ.

அந்த செவிலியர்கள் பேசியவற்றை அப்படியே இவனிடம் கூறி இருந்தான்.

“இந்த விஷயம் எனக்கு தெரிஞ்சிடவே கூடாதுன்னு ஏதேதோ வேலை பண்ணி அவ நினைச்சதை சாதிச்சுட்டாடா..? டாக்டரை நம்ப வச்சு என்னை நம்ப வச்சு உங்ககிட்ட எல்லாம் உண்மையை மறைச்சு எத்தனை போராட்டம் அவளுக்கு..? எங்க நேசத்துல உருவான மு..முதல் குழந்தை… எ..எங்களுக்கு ரொம்ப ஸ்பெஷல்தானடா. எல்லாருக்கும் அப்படித்தானே… அ..அந்த குழந்தையை எ..எனக்காக தூக்கி குடுத்துட்டாடா என் திலோ…”

தடுமாறியபடி பேசியவன் வெடித்து அழத் தயாராக ஓடிச் சென்று அவனை இறுக்கி அணைத்துக் கொண்டான் இளங்கோ.

“வேணான்டா… எமோஷனல் ஆயிடாதே ப்ளீஸ்…”

அவன் முதுகை வருடியவனின் விழிகளில் இருந்து நிற்காமல் கண்ணீர் வடிந்தது.

“மாட்டேன்… கண்டிப்பா எமோஷனல் ஆகமாட்டேன். எல்லாத்தையும் எனக்குள்ள மொத்தமா தேக்கி வச்சுப்பேன்… இந்த 40 நாள் முழுக்க முழுக்க எனக்கு தவக்கோலம்தான். இதோ எதிர்ல என் திலோ இருக்கா… அவளைப் பார்த்து என்னை கொஞ்சம் கொஞ்சமாக சமன்படுத்தி சரிப்படுத்தி என்னை தயார்படுத்தி வச்சிக்குவேன்… டாக்டர் சொன்ன மாதிரி இந்த 40 நாளும் எந்த குழப்பமும் இல்லாம சரி பண்ணிட்டு கிளம்பிட்டா அதுக்கு அப்புறம் எந்த பிரச்சனையும் இல்ல. இப்ப நான் தேக்கி வச்சிருக்கறது எல்லாத்தையூம் மொத்தமா அவகிட்ட வெளிப்படுத்தணும். என் கண்ணுல என் குழந்தையோட உயிர் இருக்குடா… என் மூலமா என் குழந்தை இந்த உலகத்தை பார்த்துட்டு இருக்கு… காலம் முழுக்க அது பார்க்க வேண்டாமா..? அப்போ என் கண்ணை நான் பாதுகாக்கணும்தானே. என் குழந்தையோட உயிரை நான் காப்பாத்தி வைக்கணும்தானே… என் திலோவோட தியாகத்தை நான் மதிக்கணும்தானே…”

“இந்த விஷயத்தை என்கிட்ட சொல்லி இருந்தா கண்டிப்பா இதுக்கு நான் சம்மதிச்சிருக்கவே மாட்டேன். எனக்கு பார்வையே இல்லைன்னாலும் என் குழந்தையை அழிக்க நான் சம்மதிச்சு இருக்கவே மாட்டேன் அதனால்தான்டா அ..அவளே இ..இப்படி ஒரு முடிவை…”

அதற்குமேல் பேச முடியாமல் தொண்டை அடைத்துக் கொள்ள அமைதியாக கண்களை அழுந்த மூடிக்கொண்டான் அமரன்.

அதன் பிறகுதான் ரேஷ்மா திலோவிடம் பேசுவதாக நினைத்து ரஞ்சனியிடம் பேசியது. உண்மையை அறிந்து கொண்ட ரஞ்சனி இளங்கோவிடம் சண்டை பிடித்து அமரனின்மேல் குற்றங்களை வரிசையாக சுமத்தி இருந்தது.

“இந்த உண்மையை ரஞ்சனிக்கும் திலோவுக்கும் புரியிற மாதிரி சொன்னா அவங்க அங்கே சந்தோஷமா நிம்மதியா இருப்பாங்களேடா. இது எதையும் சொல்லாம நீ ஊமையா இருக்கறதாலதானே நீ வெறுத்து ஒதுங்கி இருக்கிறதா அவளும் ரஞ்சனியும் நினைச்சிட்டு இருக்காங்க… அவ மனசு கஷ்டப்படாதா..?”

“அவ மனசு கஷ்டப்படக்கூடாதுதான் வேற மாதிரி சொல்லி அவளை ஊருக்கு அனுப்பி வச்சோம். ஆனா இப்போ வேற மாதிரி டிரிக்கர் ஆயிடுச்சு. உண்மையான காரணத்தை அவ தெரிஞ்சுக்கிட்டானா ஒரு நிமிஷம் அங்கே இருக்க மாட்டா. என்ன நடந்தாலும் பரவாயில்லைன்னு என்னை தேடி ஓடி வந்துடுவா. அவ இப்போ இங்க வரக்கூடாதுடா வரவே கூடாது.
நான்தான் அவளை தேடி போகணும். நான் போற நேரம் எதுவா இருக்கணும் தெரியுமா..?”

சொன்னவன் நிறுத்தி சில நொடிகள் அமைதி காத்தான்.

பின்பு தனக்குத்தானே “ஆமா… அந்த சமயத்திலதான் நான் அவளை பாக்கணும். இந்த கண்ணால அவளை நான் பார்க்கும்போது அவ… அவ…”

அதற்குமேல் அவன் பேசவில்லை. இரு கண்களிலும் கோடாய் வழிந்த கண்ணீருடன் படுக்கையில் அமைதியாக படுத்துக் கொண்டான். இளங்கோவும் அதன்பின் அவனிடம் எதையும் கேட்டு தொந்தரவு செய்யவில்லை. அவன் மனதிற்குள் எதையோ ஆழமாக விதைத்திருக்கிறான் என்று உணர்ந்து அந்த பேச்சை தொடர விரும்பவில்லை.

ரஞ்சனியிடம்கூட இது பற்றி கூறவே வேண்டாம் என்று தெளிவாகவும் கூறியிருந்தான் அமரன்.

“கண்டிப்பா திலோகிட்ட விஷயம் போயிடும்… கொஞ்சநாள் திட்டட்டும் பரவால்ல… திலோவும் வேதனையில இருப்பா… அவளை நல்லா கவனிச்சுக்க சொல்லு… மூனு வேளையும் சாப்பிட வைக்க சொல்லு… எப்படியாவது தூங்க வைக்க சொல்லு… நான் நேர்ல பார்க்கும்போது அவளுக்கு எல்லாமே புரியும்… அவள்பட்ட அத்தனை கஷ்டமும் சரியாயிடும்டா…”

அவன் போட்ட புதிர்கள் எதுவும் அவனுக்கு சரிவர விளங்கவில்லை. ஆனால் ஏதோ பெரிய விஷயத்தை உள்ளே வைராக்கியமாக தேக்கி வைத்திருக்கிறான் என்பது மட்டும் புரிந்தது.

அப்படி எந்த எண்ணத்தை மனதில் தேக்கி வைத்திருக்கிறான்..?

எது நிகழ காத்திருக்கிறான்..?

(தொடரும்)
 
Top Bottom