குழல்…6
ரஞ்சனியின் மடியில் படுத்து முதுகு குலுங்க அழுது கொண்டிருந்தாள் திலோ.
நெடுநேரமாக அழுகிறாள்… எந்த சமாதானங்களையும் ஏற்றுக் கொள்ளவில்லை. அழுது ஓயட்டும் என்று அவள் முதுகை வருடியபடி அமைதியாக அமர்ந்திருந்தாள் ரஞ்சனி.
“எ..என் அமர்… என் அமர்…”
விசும்பலோடு ஆரம்பித்து அவள் சொன்ன விஷயங்களை அசை போட்டபடி அழுபவளின் கன்னத்தை வருடிக் கொண்டிருந்தாள் ரஞ்சனி.
“சரிடி… போதும்… இருக்கிற மொத்த கண்ணீரையும் இன்னைக்கு ஒரே நாள்ல தீர்த்துடப் போறியா..? உன் அழுகையால அவருக்கு பார்வை கிடைச்சிடும்னா எவ்வளவு வேணாலும் அழலாம்… முதல்ல எழுந்து உட்காரு…”
அவளை வலுக்கட்டாயமாக எழுப்பி அமர்த்தி முகத்தை அழுந்த துடைத்துவிட்டாள் ரஞ்சனி.
கண்களும் மூக்கும் சிவந்து வீங்கி இருந்தன.
இன்னுமே ஏற்றுக்கொள்ள முடியாமல் உதடு பிதுங்கி கண்களில் மீண்டும் கண்ணீர் தெப்பமிட்டு நின்றது.
“எல்லாம் சரி… அந்த ஆள் கண்டபடி பேசி இருக்கான்… அவனைப் பேசவிட்டு அமைதியா வந்துட்டியா..? பொண்ணுங்கன்னா அவ்வளவு கேவலமா அவனுக்கு..?” பல்லை கடித்தாள் ரஞ்சனி.
“அவர்மேல கோபப்பட என்னடி இருக்கு..? அவர் நண்பன்மேல இருக்கிற உண்மையான அன்பு, அவர் சந்தித்த கசப்பான விஷயங்கள் இதனாலதான் அப்படி பேசினார். அதுல தப்பு எதுவும் இருக்கிறதா எனக்கு தோணல. அதுவும் இல்லாம அவர் சொன்ன விஷயங்கள் என் நெஞ்சை குத்தி ரத்தம் வடியும்போது அவர் பேசினதை எல்லாம் என் மைண்ட் எடுத்துக்கவே இல்ல…என் அமர் காயங்களோடதான் வாழ்ந்துட்டு இருக்காருடி…” ஒற்றை விரலால் கண்ணீரை துடைத்தபடி கூறினாள்.
“நானே இதை எதிர்பார்க்கல திலோ… மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு… ஆனா இதுக்காக நீயும் நானும் என்ன பண்ணிட முடியும்..? அவரோட குறைபாட்டையே நேர்மறையா மாத்தி அவருக்குன்னு ஒரு தனி அடையாளத்தை உருவாக்கி வச்சிருக்காரே… அவருக்கு கண்ணு தெரியாதுன்னு யாராலும் நம்பவே முடியாது… அப்படித்தானே அவர் நடந்துக்கிறார்… அவரோட தன்னம்பிக்கையை பாராட்டணும்… ஆனா.. ஆனா…”
ஏதோ பேச வந்து தயங்கியபடி தன் விரல்களால் தொடையில் தட்டியவளை கூர்ந்து பார்த்தாள் திலோ.
“என்ன சொல்ல வந்த..?”
“காலம்… முழுக்க… அவர்கூட… வாழ்றது… கஷ்டமான… விஷயம்தானடி…”
ஒவ்வொரு வார்த்தைக்கும் இடைவெளி விட்டு மெல்லிய குரலில் கேட்டவளை பொசுக்கும் விழிகளால் பார்த்தாள் திலோ.
“இளங்கோ பேசினதுக்கு அத்தனை கோபப்பட்டியே… இப்போ நீயும் அவர் சொன்ன பொண்ணுங்க மாதிரிதானடி பேசுற. அப்போ அவருக்கு குடும்பம் குழந்தைகள்னு வாழ தகுதியே இல்லைன்னு சொல்ல வர்றியா..?” கேட்கும் போதே தொண்டை அடைத்துக் கொண்டது.
“இல்லடி… நான் அப்படி சொல்லல… காதலை தாண்டி நடைமுறை எதார்த்த வாழ்க்கைன்னு ஒன்னு இருக்கு இல்லையா. சராசரியான ஒரு சந்தோஷமான வாழ்க்கையை அவர்கூட உன்னால வாழ முடியும்னு நினைக்கிறியா..?”
ரஞ்சனி ஆதங்கத்தோடு கேட்க ஒரு பக்கமாக இதழ் வளைத்து கசப்பாய் புன்னகைத்தாள் திலோத்தமா.
“என் நண்பன்கிட்ட எதை பார்த்து உனக்கு காதல் வந்துச்சுன்னு அந்த இளங்கோ கேட்டார். உண்மைய சொல்லப்போனா எனக்கு சரியா பிரிச்சு காரணம் எல்லாம் கண்டுபிடிக்க தெரியலடி. எனக்கு அமரை பிடிக்கும்… ஏதோ ஒரு வகையில ஆழமா என் உயிருக்குள்ள ஊடுருவிப் போயிட்டார். நானே என்கிட்ட இருந்து அவரை பிரிக்கணும்னு நினைச்சாலும் பிரிக்க முடியாது. எப்போ அவருக்கு பார்வையில குறைபாடு இருக்குன்னு தெரிஞ்சதோ அந்த நொடியில இன்னும் ஆழமா எனக்குள்ளாக இறங்கி நின்னுட்டார் ரஞ்சு. அவரை விடவே கூடாது அவரோட பார்வையா நான்தான் இருக்கணும்னு அந்த நொடியே எனக்குள்ள தீர்மானிச்சிட்டேன்டி…”
தீர்க்கமாக சொன்ன தோழியை ஆச்சரியமாய் பார்த்தாள் ரஞ்சனி.
“இதுக்கு முன்ன தயக்கம் இருந்தது… அவரை எப்படி நெருங்கப் போறேன்னு நிறைய குழப்பம் இருந்தது… இப்போ எல்லாத்தையும் தொடச்சு தூக்கிப் போட்டாச்சு. இனி மொத்தமா அவர்கிட்ட நெருங்கி நிக்கப் போறேன்… என் மனசை சொல்லப் போறேன்…”
“ஆனா இதெல்லாம் அவருக்கு பிடிக்காது அப்படின்னுதானே அந்த இளங்கோ சொன்னார்…”
“அதைப்பத்தி எல்லாம் எனக்கு கவலை இல்ல… அவரோட மனசுல நான் இடம்பிடிக்கணும்… அவரோட வாழ்க்கை முழுக்க அவருக்கு எல்லாமுமா நான் இருக்கணும். என்மேலயும் என் காதல் மேலயும் அவருக்கு நம்பிக்கையை கொண்டு வரணும்… இனிமேலும் விலகி தள்ளி நிக்கிற எண்ணம் எனக்கு இல்லடி…”
உறுதியாகச் சொன்னவள் தன் எண்ணத்தில் பின்வாங்க மாட்டாள் என்பது ரஞ்சனிக்கு நன்றாகவே தெரியும். தன் தோழியை நினைத்து பெருமைப்படாமல் இருக்க முடியவில்லை. எதிர்பார்ப்பற்ற காதல் என்பது இதுதானோ… இளங்கோவின் கூற்றுப்படி தெய்வீகக் காதலோ..!
“சரிடி… நீ இவ்ளோ ஸ்ட்ராங்கா இருக்கும்போது நான் என்ன எதிர்ப்பு சொல்லப் போறேன்… என்னால உனக்கு எந்த வகையில உதவி பண்ண முடியுமோ எல்லா உதவிகளும் பண்ணுவேன். ரொம்ப நாள் கழிச்சு இங்கே வந்திருக்க. நாளைக்கு நமக்கும் லீவுதான். நாம ரெண்டு பேரும் ஒன்னா சேர்ந்து சுத்தி ரொம்ப நாளாச்சு. நீயும் மெண்டலி டிஸ்டர்ப்டா இருக்க. நாளைக்கு எங்கேயாவது வெளியில போய் சில் பண்ணிட்டு இங்கே இருந்தே ஆபீஸ்க்கு போயிட்டு ஈவினிங் அப்படியே உன்னோட வீட்டுக்கு போய்க்கோ… ஓகேவா…”
ரஞ்சனி கூற அதுவே அவளுக்கும் சரி என்று தோன்றியது. தன் மனதை அமைதிப்படுத்தி தன்னை முழுதாக தயார் படுத்த தனக்கும் ஒரு ஆசுவாசம் தேவை என்று தோன்றியது. ரஞ்சனியுடனே தாங்கிக் கொண்டாள் திலோத்தமா.
தன் வீட்டு பால்கனியில் நின்று எதிர்வீட்டை பார்த்து ஏளனமாய் சிரித்துக் கொண்டிருந்தான் இளங்கோ.
கடந்த இரண்டு நாட்களாக வீடு இறுக்கி பூட்டிக் கிடக்கிறது. அன்று இரவு அமரனை பற்றிய உண்மைகளை சொன்னபோது அவள் அதிர்ந்து நின்ற அந்த தோற்றத்தை பார்த்து வந்ததோடு சரி. மறுநாள் காலை இவன் எழுந்து வரும்போது வீடு பூட்டிஅ கிடந்தது. ஸ்கூட்டியும் அங்கு இல்லை. இதோ இரண்டு நாட்களாக ஆள் அரவமே இல்லை.
“ஒரு வாரம் தாக்குப்பிடிப்பான்னு பார்த்தேன்… ஒரே நாள்ல ஓடிட்டா… நல்லவேளை… அமரனுக்கு இதைப்பத்தி எதுவும் தெரியாது. அன்னைக்கு நான் சொன்னதையும் அவன் பெருசா காதுல வாங்கிக்கல… அதுவரைக்கும் நல்லது… காதலாம்… கத்திரிக்காயாம்… வந்துட்டாளுங்க… பொம்பளைகளே சந்தர்ப்பவாதிங்கதான்…”
எரிச்சலாய் முணுமுணுத்தவன் மீண்டும் வீட்டிற்குள் நுழைந்திருந்தான்.
வீட்டிற்கு உள்ளேயே சிறியதாக ஸ்டூடியோ போல் அமைக்கப்பட்ட ஒரு ரெக்கார்டிங் ரூம் அவர்களுக்கு உண்டு. youtube வீடியோக்கள் அனைத்தும் அங்குதான் பதிவு செய்யப்படும். கூடுதலாக இருவரும் இணைந்து நிறைய பாடல்களுக்கான இசையை அங்குதான் ஒத்திகை பார்த்துக் கொள்வதும் உண்டு. அவர்களுக்கான இதமான சூழலை உருவாக்கும் இடமும் அதுதான்.
ஒருக்கால் இசையை தேர்ந்தெடுத்ததால் தானோ என்னவோ தனது குறையை ஓரம் தள்ளி நிறைவாக தன்னை உணர்கிறான் அமர். கூடுதலாக அவனுக்கு தோள் கொடுக்கும் ஆத்ம நண்பன் அருகில். தனிமை துயரை உணர்ந்து கொண்டதில்லை இருவரும்.
இதயத்திற்குள் ஏக்கங்களும் வலிகளும் தேங்கி கிடக்கின்றனவோ என்னவோ… இருவருமே வெளிக்காட்டி கொண்டதில்லை… நிறைவாகத்தான் நாட்களை நகர்த்துகின்றனர்.
நான்கு நாட்களாக காய்ச்சலில் படுத்து எழுந்தவனுக்கு உடல் முழுக்க அத்தனை சோர்வு. ஒப்புக்கொண்ட சில நிகழ்ச்சிகளுக்குகூட கலந்து கொள்ள முடியவில்லை முதல் நாள்தான் இளங்கோ மட்டும் தவிர்க்கவே முடியாமல் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வந்திருந்தான். இன்று ஓரளவு தேறி அமர்ந்திருந்தான் அமர்.
“குக்கூ ப்ரோக்ராமோட பைனல் இருக்குடா. அதுவும் லைவ் டெலிகாஸ்ட்… ரிகர்சல் எப்படியும் ஒரு வாரம் இருக்கும்… நாளைக்கு உன்னால வர முடியுமா..? ராஜண்ணா நீ இப்போ ஓகேவான்னு கேட்டார் …”
அவனுக்கு சூடாக சுக்கு காபி தயாரித்து எடுத்து வந்து கையில் கொடுத்தபடியே கேட்டான் இளங்கோ.
“அவர்கிட்ட பேசிட்டேன்டா… இப்ப நான் ஓகேதான். போகாம எப்படி..? நாளையில இருந்து நம்ம வேலையை ஆரம்பிச்சுடலாம்… என்ன நாக்குதான் இன்னும் கசக்குது… காரசாரமா சாப்பிடணும்னு ஆசையா இருக்கு… ஆனா முடியல. கஞ்சி, ரசம் சாதம், பிரட் இதையெல்லாம் பார்த்தாலே குமட்டிக்கிட்டு வருது…”
முகத்தை சுளித்தபடி கூறியவன் சுக்கு காப்பியையும் எரிச்சலோடுதான் பருகினான்.
“இட்லியும் சூடா சாம்பாரும் சாப்பிடணும் போல இருக்கு…”
சொன்னவனை சிரிப்புடன் பார்த்தான் இளங்கோ.
“இட்லின்னு சொன்னாலே மூஞ்சி மூனு கிலோ மீட்டர் தூரத்துக்கு திரும்பும்… இப்ப இட்லி மேல ஆசையா..?”
“அதான் பாருடா… கசந்த நாக்கு இப்ப அதுக்கெல்லாம் ஆசைப்படுது…”
இவர்கள் பேசிக் கொண்டிருக்க அழைப்பு மணியோசை கேட்டு எழுந்து சென்றான் இளங்கோ.
கேட்டிற்கு வெளியே கையில் கூடையுடன் நின்றிருந்தாள் திலோ.
‘இவ என்ன திரும்ப..? பெரிய கும்பிடா போட்டுட்டு போறதுக்காக வந்திருக்காளா..? பையும் கையுமா நிக்கிறா…’
யோசனையோடு வெளியே சென்றவன் கேட்டை நீக்காமல் அவளையே பார்த்தான்.
“ஹாய் அண்ணா… அமர் இப்போ எப்படி இருக்கார்..? இப்ப கொஞ்சம் பெட்டரா இருப்பார். ஆனா வாயெல்லாம் ஒரு மாதிரி நமநமனு இருக்கும்… நல்ல சாப்பாட்டுக்கு ஏங்கும் இல்லையா… அவருக்காகவே சூடா இட்லி பண்ணி சாம்பார் வச்சேன். இதை அவருக்கு கொடுத்துட்டு நீங்களும் சாப்பிடுங்க…”
கேட்டை தாண்டிக் கொண்டு கூடையை நீட்டியவளை அதிர்ந்து பார்த்தான் இளங்கோ.
இரண்டு நாட்களுக்கு முன்பு அவன் பேசியதைப் பற்றிய எந்த சங்கடங்களையும் முகத்தில் காட்டாமல் மிகவும் எதார்த்தமாக சாதாரணமாக பேசியவளை புரியாமல்தான் பார்த்தான். அவன் என்ன சாப்பிட ஆசைப்பட்டானோ அதையே எடுத்து வந்து எதிரில் நிற்கிறாள்.
“நீ வீட்டை காலி பண்ணிட்டு போகலையா..?”
களுக் என சிரித்தவள் “ஓ… ரெண்டு நாளா நான் இங்கே இல்லைன்னு ஏரியாவை விட்டே ஓடிட்டேன்னு முடிவு பண்ணிட்டீங்களா..? சூப்பர்ணா… நான் ஏற்கனவே தங்கி இருந்த வீட்டுக்கு போனேன். என் பிரண்டை பாக்குறதுக்காக… மனசுக்கு ரொம்ப அழுத்தமா இருந்தது. கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிக்கலாம்னு போயிட்டு வந்தேன். இப்ப ரொம்ப தெளிவா ஸ்ட்ராங்கா ஸ்டெடியா இருக்கேன். முதல்ல அமர் உடம்பு ரெடி ஆகட்டும்… அவர்கிட்ட வந்து நான் பேசணும்…”
கடகடவென பேசிக் கொண்டிருந்தவளை வார்த்தைகளற்று பார்த்துக் கொண்டிருந்தான் இளங்கோ.
“கூடையை வாங்குங்கண்ணா… கை வலிக்குது..”
எக்கி கூடையை தூக்கி நீட்டியபடி இருந்தவளிடம் இருந்து தன்னிச்சையாக கூடையை வாங்கியவன் கேட்டையும் திறந்திருந்தான்.
“நீ… நீ…”
“நீங்க பார்த்த பொண்ணுங்க லிஸ்ட்ல நான் இல்ல. அமர் எப்படி இருந்தாலும் என்னவா இருந்தாலும் என் காதல்ல பொய் இல்லண்ணா. அவருக்கு குறை இருக்கிறதா எப்போ நீங்க சொன்னீங்களோ அப்போதான் அவர்மேல காதல் இன்னும் அதிகமாச்சு. அவருக்கு நான் எப்பவும் எல்லாமுமா இருக்கணும்னு இங்க ஸ்ட்ராங்கா நின்னுடுச்சு…” என்றவள் தன் நெற்றியை தட்டிக் காட்டினாள்.
“இட்லியும் சாம்பாரும் ஆறிடும். முதல்ல ரெண்டு பேரும் சாப்பிடுங்க. நாம நாளைக்கு பேசலாம். முடிஞ்சா கொஞ்சநேரம் அமரை கூட்டிட்டு பால்கனியில வந்து உட்காருங்களேன். நாலு நாளா அவரைப் பாக்காம ஒரு மாதிரி மனசு ரொம்ப டல்லா இருக்கு. வீட்டுக்குள்ளேயே இருந்தா அவருக்கும் சோர்வாதான் இருக்கும். பால்கனியில வெளிக் காத்தை சுவாசிச்சிட்டு அப்படியே வந்து உட்காருங்க… அவரை பார்த்துட்டுப் போனா கொஞ்சம் நிம்மதியா தூங்குவேன்…”
கொஞ்சமும் பயமோ பதட்டமோ தயக்கமோ தடுமாற்றமோ இன்றி சாதாரணமாக பேசியவளை அதிர்ச்சி விலகாமல்தான் பார்த்துக் கொண்டிருந்தான் இளங்கோ.
“ஓகேண்ணா… பாக்கலாம்… பால்கனிக்கு வரணும்…”
கள்ளமில்லா சிரிப்புடன் கூறி வீதியை கடந்து எதிர் வீட்டுக்குள் ஓடி அவள் மறைந்திருக்க அவனோ சில நிமிடங்கள் அங்கேயேதான் நின்றிருந்தான்.
(தொடரும்)