• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

குழலில் காற்றாகினாள் - 9

STN - 29

Member
குழல் - 9

சில அடிகள் தூரத்தில் அவன்.

கண்ணாடி மறைக்காத அவன் கண்களைப் பார்க்கிறாள் திலோ.

youtube சேனலில் நீல நிற கண்களுடன் வசீகரித்து கொன்றவன்தான். அது அவனது நிஜ கண்ணின் நிறம் அல்ல… லென்ஸ் அணிந்து கொள்கிறான் என்பதை இளங்கோ கூறித்தான் தெரிந்து கொண்டாள்.

இன்று நிஜமான கண்களை சுழற்றியபடி பக்கவாட்டில் நின்றிருந்தான். எதிரில் நிற்கும் மங்கலான அவளது பிம்பத்தின்மேல் அவன் விழிகள் பதிந்திருந்தன.

வறண்ட வெள்ளை நிற விழிகள்… கருவிழிப்படலம் தன் தன்மை இழந்து பூனைக்கண் போன்று மாறியிருந்தது.

அந்த விழிகளையே பார்த்துக் கொண்டிருந்தவளின் இதயம் இற்று விழுந்தது. தளுக்கென கண்களில் கண்ணீர் கோடு வரைந்தது. பார்வை குறைபாடு உள்ளவன் என்பதை பறைசாற்றும் விழிகள்.

எந்நேரமும் கூலர்ஸ் அணிந்து சுற்றுவதற்கான காரணம் தெளிவாகவே விளங்கிப் போனது.

ஒன்று அவன் விழிகளை பார்ப்போரின் விழிகளில் வேறு பரிமாணம் எழும். அது அவனது தன்னம்பிக்கையை வெட்டி வீழ்த்திவிடும் அல்லவா.

மற்றொன்று வெளியில் நடமாடும்போது பார்வைத் திறனை மேம்படுத்தும் பிரத்தியேக மேக்னிபயர் வகை கண்ணாடியை அணிகிறான்.

தடுமாற்றமின்றி சுற்றுப்புறத்தை ஓரளவு கையாள முடியும். ஆனாலும் அவன் விழிகளுக்கு அனைத்துமே மங்கலான வெளிச்சப் புள்ளிகள்தான்.

அசைவற்று அவனையே பார்த்தபடி அவள் நின்றிருக்க “கேக்குறேன்ல… யாரு..?” அவனது தடித்த குரல் மீண்டும் சத்தமாக வெளிவந்தது.

“நான்தான்டா…” என்றபடியே அவளை ஒரு கையால் நகர்த்தி முன்னே வந்தான் இளங்கோ

“நீ 50 அடி தள்ளி நின்னாலும் உன்னை எனக்கு தெரியும்டா நாயே… உன் பக்கத்துல இருக்கறது யாரு.?”

எரிச்சலோடு சத்தமிட்டவனை நெருங்கி வந்தாள் திலோத்தமா.

“நா..நான் நான்தான் சார்… திலோத்தமா… நே..நேத்து நைட் மீட் பண்ணினோமே…”

அவளது சாந்தமான குரலில் இவனது முகம் எரிச்சலில் சுழிந்தது.

“என்ன வேணும்..?” தோட்டா போல் சீறிப் பாய்ந்தது குரல்.

“சு..சும்மாதான்… இ..இளா அண்ணாவை பாத்துட்டு போலாம்னு வந்தேன்…”

அவனது நெற்றிச்சுழிப்பில் இவளது குரல் தடுமாறியது.

முறைத்த முகத்துடனே அவன் நின்றிருக்க தன் கையில் இருந்த உணவுப் பாத்திரத்தை டைனிங் டேபிளில் வைத்து இளங்கோவிடம் கண்களால் சொல்லி தன்னவனையும் அழுத்தமாய் ஒரு பார்வை பார்த்து அங்கிருந்து வெளியேறி இருந்தாள் திலோத்தமா.

கேட் திறந்து மூடும் சத்தம் கேட்டு அவள் கிளம்பி சென்று விட்டாள் என்பதை ஊர்ஜீதம் செய்து இளங்கோவை திட்டி தீர்த்திருந்தான் அமரன்.

சவுண்ட் சிஸ்டத்தில் பாடலின் ஒலியை சற்று அதிகரித்து வைத்து குளியலறை நோக்கி ஓடி இருந்தான் இளங்கோ. எரிச்சலோடு தானும் தனது அறைக்குள் நுழைந்து கொண்டான் அமரன்.

“இன்னைக்கு பிரட் டோஸ்ட்தான்… அதுவும் நீதான் பண்ணனும்… பிரட் ஆம்லெட் பண்ணிடு… என்னால முடியாது…”

கடுகடுப்பாக சொன்னபடியே கைச்சட்டையை மடித்தபடி கிளம்பித் தயாராகி சோபாவில் வந்து அமர்ந்து கொண்டான் அமரன்.

“வறண்ட ரொட்டியை சாப்பிடணும்னு ஒன்னும் இப்போ அவசியம் இல்ல. வா… சுடச் சுட நல்ல டிபன் இருக்கு…” என்றபடி நண்பனின் கையை பிடித்து இழுத்துக்கொண்டு டைனிங் டேபிளில் சென்று அமர்ந்து இருவருக்கும் பரிமாறிக் கொண்டான் இளங்கோ.

பனீர் கிரேவியின் வாசம் மூக்கை துளைக்க தன்னிச்சையாகவே இருவரின் நாவிலும் உமிழ்நீர் ஊறியது.

“ஏது..?”

ஆசை தோன்றினாலும் அடக்கியபடி புருவம் முடிச்சிட கேட்டிருந்தான் அமரன்.

“முதல்ல சாப்பிடுடா…”

சொன்னவன் சப்பாத்தியை குருமாவில் தோய்த்து ரசித்து உண்ணத் தொடங்கி இருந்தான்.

“கேட்டதுக்கு முதல்ல பதில் சொல்லுடா…”

“அமர்… ரொம்ப பண்ணாதடா… முதல்ல சாப்பிடு…”

“அந்த பொண்ணுதான் கொடுத்துட்டு போனாளா..?”

“தெரியுதுல்ல… அமைதியா சாப்பிடு…”

கோபத்தோடு பட்டென தட்டினை வேகமாய் தள்ள தனது இடக்கையால் அதனை தடுத்துப் பிடித்திருந்தான் இளங்கோ.

“ஏன்டா பைத்தியக்காரா..?”

“உனக்குதான் பைத்தியம் பிடிச்சிருச்சு… நல்ல சோத்துக்கு நாக்கு ஏங்குதுன்னா கல்யாணம் பண்ணித் தொல… அதைத்தானே நானும் சொல்லிக்கிட்டே இருக்கேன்… ஏன் கண்ட பக்கம் இரந்து வாங்கி திங்கணும்னு நினைக்கிற..?”

“அனாவசியமா பேசாதடா… அறைஞ்சு பல்லை எல்லாம் கழட்டிடுவேன்…” தானும் வெகுண்டான் இளங்கோ.

“உனக்கு அவளை பிடிச்சிருந்தா வெளிப்படையா சொல்லேன்… நானே சந்தோஷமா கல்யாணம் பண்ணி வைக்கிறேன்…”

“மெண்டல்… மெண்டல்… அவ எனக்கு தங்கச்சி மாதிரிடா… அண்ணான்னு உன் முன்னாடிதான சொன்னா…”

“அப்புறம் எதுக்கு நெருங்கி வந்து தாஜா பண்றா அவ..?”

“தாஜாவெல்லாம் ஒன்னும் பண்ணல… அவளுக்கு ஒரு ராஜா வேணுமாம்…”

கோபம் தணிந்து புன்னகையோடு பதில் அளித்தான் இளங்கோ.

“என்ன..?”

“காய்ச்சல் வந்து நாக்கு செத்து கிடந்தப்போ இட்லியும் சாம்பாரும் சுழட்டி சுழட்டி சாப்டியே… அது யார் கொடுத்ததுன்னு நினைக்கிற..?”

“இவதானா..?”

“இவளேதான்…”

“ஏன்டா..?”

எரிச்சலோடு ஆதங்கமும் சேர்ந்து கொண்டது.

“புரியலையா..? எல்லாம் உன்மேல இருக்கிற அக்கறைதான்டா…”

வெடுக்கென திரும்பி தனது வறண்ட விழிகளால் முறைத்து தள்ளினான் அமரன்.

“அவளுக்குத்தான் மூளை இல்ல… உனக்குமா மூளை சுத்தமா இல்லாம போயிடுச்சு…”

“அமர்… நான் சொல்றதை கொஞ்சம் பொறுமையா கேளு…”

தணிந்த குரலில் அவன் கை மேல் தன் கை வைத்தான் இளங்கோ.

“கால்பங்கு காலம்கூட நீ இன்னும் வாழ்ந்து முடிச்சிடல… உன் வாழ்க்கையோட இனிமையான இன்பமான தருணங்கள் எல்லாமே இனிமேதான் இருக்கு. அதை எல்லாம் வாழ்ந்து பார்க்கணும் சுவைச்சு பாக்கணும்னு உனக்கு ஆசையே இல்லையா..? உனக்குள்ள எதுக்குடா தேவை இல்லாத ஒரு நெருப்பு வேலி..? இருக்கலாம்… இதுக்கு முன்ன சில பொண்ணுங்க அப்படி இப்படி இருந்தாங்கதான்… ஆனா யார்கிட்டயும் நீ மனசை பறிகொடுத்து தவிச்சு நிக்கலையே… அவங்களோட நிறம் தெரிஞ்சது… அவ்வளவுதானே… அதுக்காக எல்லா பொண்ணுங்களும் தப்பானவங்களா இருந்திடுவாங்களா..? உன்னைப்பத்தி முழுசா தெரிஞ்சுதான் அவ உன்கிட்ட நெருங்கி வர்றா… இந்த பொண்ணு உன்னை உண்மையா நேசிக்கிறாடா…”

டமார் என தரையில் சிதறி விழுந்தது தண்ணீர் குவளை.

“எப்போ இருந்துடா நீ மாமா வேலை பார்க்க ஆரம்பிச்ச..?”

இதழ் கோணி வெறிச் சிரிப்பு சிரித்தபடி அமர் கூற அடுத்த நொடி பளார் என அவன் கன்னத்தில் ஓங்கி அறைந்திருந்தான் இளங்கோ.

அதன்பின் அங்கு நிற்கவே இல்லை… விறுவிறுவென வெளியேறி தன் இரு சக்கர வாகனத்தை உதைத்து கிளப்பிக்
கொண்டு பறந்திருந்தான்.

அறைபட்ட கன்னம் தீயாய் எரிந்தாலும் அதைவிட இதயம் பேயாய் அலறியது. ஒன்று தன் நண்பனை கோபத்தில் அவன் கேட்ட அந்த வார்த்தை… மற்றொன்று அவன் இவனை அடித்தது.

இவன் கேட்ட வார்த்தை தவறு என்று உதிர்த்த அடுத்த நொடியே உணர்ந்து கொண்டான். சுட்ட வார்த்தையின் வீரியத்தில்தான் இளங்கோவும் அவனை அடித்திருந்தான். எல்லாம் புரிந்தது.

தலையை பிடித்தபடி கண்களை மூடி அதே இடத்தில் அமர்ந்து கொண்டான் அமரன்.

“உள்ள நுழைஞ்சு தேவையில்லாததை கிளப்பி எனக்கும் என் நண்பனுக்கும் இடையில இவ்வளவு பெரிய சங்கடத்தை உருவாக்கிட்டியேடி… யாருடி நீ..? நீ மட்டும் இப்பே என் கையில கிடைச்ச…”

பற்களை கடித்தபடி உறுமிக் கொண்டிருந்தவன் கைமுஷ்டியை இறுக்கியபடியே அமர்ந்திருந்தான்.

கோபத்தோடு வண்டியை முறுக்கி எங்கெங்கோ பயணப்பட்டவனின் மனம் ஆறுவேனா என்றது. அவனின்றி தனிமையில் எங்கும் பயணப்பட தெரியாதே அவன் நண்பனுக்கு. இன்று முக்கியமான ஒத்திகைக்குச் செல்ல வேண்டும். இன்னும் இரண்டே நாட்களில் குக்கூ நிகழ்ச்சியின் இறுதிச்சுற்று… நேரடி நிகழ்ச்சியும்கூட.

வண்டியை ஓரம் கட்டி நிறுத்தியவன் அவர்களது இசைக்குழுவில் கிட்டாரிஸ்ட்டாக இருக்கும் மற்றொரு நண்பனான திலீபனுக்கு அழைத்தான். அமரனைப் பற்றி அவனுக்கும் தெரியும்.

“மச்சான்… எனக்கு கொஞ்சம் உடம்பு சரியில்ல… இன்னைக்கு ரிகர்சல்ல கலந்துக்க முடியாது. அமர் வீட்லதான் இருக்கான். நீ போகும்போது அவனை வந்து கொஞ்சம் கூட்டிட்டு போயிட்றியா..?”

“ஒன்னும் பிரச்சனை இல்லடா… நான் பார்த்துக்கிறேன்… உன் உடம்புக்கு என்ன..?”

“ஒரு பக்க தலைவலியா இருக்கு… ஹாஸ்பிடல் வந்துட்டேன்… இடையில வந்து அப்படியே ஜாயின் பண்ணிக்கிறேன்… ராஜாண்ணாட்ட சொல்லிடு…”

இணைப்பை துண்டித்தவன் வண்டியில் அமர்ந்தபடியே டேங்க் கவரின்மேல் தலை கவிழ்த்துக் கொண்டான்.

என்னதான் மன அழுத்தம் இருந்தாலும் காதல் என்ற வார்த்தையில் வெறுப்பு இருந்தாலும் என்னை பார்த்து அந்த வார்த்தையை இவன் எப்படி கேட்கலாம்..? அப்படியும் தன்னை மீறி வார்த்தை உதிருமா..?

அதே ஆற்றாமைதான் அவன் இதயம் முழுக்க.

ஹாரன் ஓசையுடன் அவன் வண்டியை உரசினாற் போன்று மற்றொரு வண்டி வந்து நிற்பது தெரிய தலை நிமிர்த்தினான் இளங்கோ.

ஹெல்மெட்டை கழட்டியபடி “அண்ணா…” என்று கூவி இருந்தாள் திலோ.

அவள் பின்னே வேறு ஒரு பெண் அமர்ந்திருந்தாள். வேறு யார்..? அவள் தோழி ரஞ்சனிதான். அலுவலகம் சென்றபின் ப்ராஜெக்ட் வேலையாக வெளியில் கிளம்பிய இருவரும் அந்த வழியாக வரும்போதுதான் வண்டியை ஓரம் கட்டி தலையை கவிழ்த்துப் படுத்தபடி இருந்த இளங்கோ தென்பட பதறிக் கொண்டு அருகில் வந்திருந்தாள் திலோத்தமா.

“என்னாச்சுண்ணா..? உடம்பு ஏதாவது சரியில்லையா..?”

பதறியபடி வண்டியில் இருந்து வேகமாக இறங்கினாள்.

“அதெல்லாம் ஒன்னும் இல்லம்மா…”

அவன் குரல் பிசிறடித்து கரகரப்பதுபோல் தோன்றியது.

“என்னாச்சுண்ணா..?” இவளது குரல் மொத்தமாக இரங்கி இருந்தது.

ஒன்றும் இல்லை என்பதுபோல் அவன் தலையாட்ட அவனது முகம் மொத்தமாக வாடி ஏதோ வேதனையை சுமந்து இருப்பதை அவளால் உணர முடிந்தது.

அவனை வற்புறுத்தி அழைத்துக் கொண்டு ரஞ்சனியோடு இணைந்து அருகில் இருந்த காபி ஷாப்பிற்குள் நுழைந்தாள்.

“அண்ணா இவ ரஞ்சனி… என் பிரண்ட்… அமருக்கு நீங்க எப்படியோ… அப்படித்தான் இவ எனக்கு…”

ஒரே வார்த்தையில் தனது நட்பின் ஆழத்தை உணர்த்தி இருந்தாள்.

மெல்ல புன்னகைத்துக் கொண்டவன் அவளிடம் சிநேகமாக தலையை மட்டும் ஆட்டினான். அவளும் மெல்ல புன்னகைத்துக் கொண்டாள்.

“ஏதாவது பிரச்சனையாண்ணா..?”

அவன் கரத்தின் மீது தன் கரத்தை வைத்து மெல்ல அழுத்தம் கொடுத்து கேட்க அவளது அக்கறையான அந்த வார்த்தையில் அனைத்தையும் கொட்டித் தீர்த்துவிடச் சொல்லி மனம் இரைந்தது.

உதடு குவித்து மூச்சுவிட்டவன் அவளிடம் அனைத்தையும் கூறியிருந்தான்.

“பெரிய அப்பாடக்கரா உங்க ஃப்ரெண்டு..?”

சுர்ரென அம்புபோல் பாய்ந்தது ரஞ்சனியின் குரல்.

“ஏய்… என்னடி..?”

குரலை தழைத்து தோழியின் தோளை இடித்தாள் திலோத்தமா.

“பின்ன என்னடி..? இத்தனை வருஷமா பக்கத்துல இருந்து கண்ணுக்கு கண்ணா பார்த்துக்கிற ஃப்ரண்டை அப்படி ஒரு வார்த்தை கேட்டிருக்கார். உன்னோட காதலை புரிஞ்சுக்காம அசிங்கமா போர்ட்ரெய்ட் பண்ணி இருக்கார்… என்ன மனுஷன் இவர்..?”

“ஹலோஓஓ… அவன் இடத்தில இருந்து அவன் யோசிக்கிறது எந்த வகையிலும் தப்பு கிடையாது. நிறைய பாத்துட்டு வந்திருக்கான். அவனுக்கு திலோவைப் பத்தி என்ன தெரியும்..? எப்படி தெரியும்..? உங்க இஷ்டத்துக்கு பேசுறீங்க…”

அடித்துப் புரண்டாலும் தன் நண்பனையும் நட்பையும் விட்டுக் கொடுத்துவிடுவானா இளங்கோ .அவனைப் பற்றி ரஞ்சனி தவறாக பேசியவுடன் ஜிவ்வென கோபம் கிளர்ந்திருந்தது.

“அடடடா… நீங்க ரெண்டு பேரும் நட்புக்காக சரத்குமார் விஜயகுமார் பாருங்க. சாகும்போதும் கட்டிப்புடிச்சுக்கிட்டே செத்துப் போயிடுவீங்களோ..? அவர் வாழ்க்கை நல்லா இருக்கணும்னு நினைச்சா உங்களை மாமாவான்னு கேள்வி கேட்டிருக்கார். அவருக்கு சப்போர்ட் பண்ணிட்டு வர்றீங்க…”

முன்பின் அறிமுகம் இல்லாத ஒருத்திதான். அமரனின்மேல் உள்ள கோபத்திலும் தன் தோழியை அவன் எண்ணிக் கொண்ட விதத்திலும் ஏதோ ஒரு வகையில் இளங்கோவிற்கு ஆதரவாக பேசிக் கொண்டிருப்பதை இருவருமே அங்கு மறந்து போயிருந்தனர்.

“அவன் என் ஃப்ரெண்ட்… என்னை என்ன வேணும்னாலும் கேட்பான்… மாமான்னு சொல்லுவான்… சித்தப்பான்னு சொல்லுவான்… தாத்தான்னுகூட சொல்லுவான்… அது என் பிரச்சனை… உங்களுக்கு என்ன வந்தது..?”

குரலை உயர்த்தி இருந்தான் இளங்கோ.

“நீங்க கொள்ளு தாத்தாவாகூட இருந்துட்டு போங்க… ஆனா உங்க பிரச்சனைக்கு இடையில நிக்கிறது என் ஃப்ரெண்ட்… அவளைப்பத்தி எப்படி அவர் தப்பா பேசலாம்..?”

இருபுறமும் மாறி மாறி அம்புகள் பாய்ந்து கொண்டிருக்க

“ஐயோ… ரெண்டு பேரும் கொஞ்சம் அமைதியா இருக்கீங்களா..?”

இரு கைகளாலும் தலையை பிடித்து சற்று உரத்த கூறினாள் திலோ.

“அவரை அடிச்சதும் இல்லாம தனியா விட்டுட்டு வந்துட்டீங்க… இது தப்பு இல்லையா..?”

இளங்கோவை கோபமாய் பார்த்தபடியே கேட்டாள் திலோ.

‘அடிப்பாவி நாங்க ரெண்டு பேரும் உனக்காக இங்க மாங்கு மாங்குன்னு சண்டை போட்டுக்கிட்டு இருக்கோம்… நீ இப்பவும் அந்த ஆளுக்குதான் சப்போர்ட் பண்றியா..?’ என்ற ரீதியில் ரஞ்சனி அவளை முறைக்க,

தோழிகள் இருவரையும் முறைத்தபடியே எழுந்து கொண்ட இளங்கோ விறுவிறுவென வெளியேறி வண்டியை கிளப்பி பறந்திருந்தான்.

(தொடரும்)
 
Top Bottom