குழல் யாசிக்கும் புயலே - 14

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Vishakini

Moderator
Staff member
Nov 7, 2025
1,634
6,876
113
புயல் 14

பால்கனியில் அமர்ந்து மடிக்கணினியில் மிகத் தீவிரமாக வேலை செய்து கொண்டிருந்தான் பிருத்வி! அறைக்குள் ஆர்யங்கா உறங்கிக் கொண்டிருந்தாள்; அவளைத் தொந்தரவு செய்யாமல் இருப்பதற்காகப் பால்கனியில் அமர்ந்து வேலை செய்து கொண்டிருந்தான்.

மேசையில் இருந்த அவனது அலைபேசி அதிர்ந்தது. எடுத்துப் பார்த்தான். திரையில் தந்தையின் எண் மிளிர, அழைப்பை ஏற்றுச் செவியில் வைத்தான்.

"தூங்கிட்டியா பிருத்வி?"

"இல்லைப்பா, கொஞ்சம் வேலை இருந்தது, அதைப் பார்த்துட்டு இருக்கேன். நீங்க இன்னும் தூங்கலையா?"

"தூக்கம் வரலப்பா! உன்கிட்ட கொஞ்சம் பேசணும்" என்றார்.

ஆர்யா கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை அன்னை சொல்லியிருப்பார், அதைப்பற்றிக் கேட்கத்தான் அழைக்கிறார் என்று யூகித்தவன், "வர்றேன் பா" என்று அழைப்பைத் துண்டித்தான்.
வீட்டின் முன் புல்வெளியில் அவர் நடந்து கொண்டிருக்க, அவன் அவருக்குப் பின்னே சென்று நின்றான்.

"சாப்பிட்டியா பிருத்வி?" என மகனை வாஞ்சையுடன் கேட்டார்.

"யெஸ் பா... நீங்க?"

"ம்ம்..." என்றவர் கதிரையில் அமர்ந்து, அவனையும் அருகே அமர்த்தினார்.

"இப்பெல்லாம் அப்பாவையும் ஒதுக்கி வச்சிட்டியா பிருத்வி?"

"உங்களுக்கு அப்படித் தோணுதாப்பா?"

"எனக்குத் தெரியல பிருத்வி! ஆனா சமீபமா நீ எதையோ என்கிட்ட மறைக்கிறன்னு தோணுது. கல்யாண விஷயத்துல ஆரம்பிச்சு, அந்தப் பொண்ணு கர்ப்பமா இருக்கிற வரைக்கும் என்கிட்ட தாமதமாச் சொல்லக் காரணம் என்ன? நான் சம்மதிக்க மாட்டேன்னா? எதையும் அப்பாகிட்ட ஆலோசனை கேட்டுச் செய்யுற நீ, இப்போ செஞ்சு முடிச்சிட்டுச் சொல்றது உள்ளுக்குள்ள உறுத்தலா இருக்கு. அவங்களைப் போல என்னையும் ஒதுக்கி வச்சிட்டியா?" என அவனது கைகளைப் பிடித்து ஏக்கமாகக் கேட்டார் மௌலி!

"அப்பா!" என அழுத்தமாக அவரது இரு கைகளையும் பிடித்துக் கொண்டு, "எனக்காக அக்கறைப்பட, கவலைப்பட, பாசம் காட்ட ஒரு உறவுன்னா அது நீங்க மட்டும்தான். உங்களை ஒதுக்கி வைப்பேன் என எப்படிப்பா நினைச்சீங்க? நிச்சயமா இல்லைப்பா! என் கல்யாண விஷயம், ஆர்யா கர்ப்பமா இருக்கிறது இதெல்லாம் உங்ககிட்ட ஆலோசனை கேட்காம நானே எடுத்த முடிவுகளா இருக்கலாம்... இதுக்கெல்லாம் ஒரு காரணம் இருக்குப்பா! உங்ககிட்ட ஏன் சொல்லாம செஞ்சேன்னு போகப்போக புரியும். ப்ளீஸ், இந்த இரண்டு காரணத்துக்காக உங்களை ஒதுக்கி வச்சிட்டேன்னு நினைக்காதீங்க. எனக்கு அம்மாவும் நீங்கதான், அப்பாவும் நீங்கதான்! உங்களை ஒருநாளும் ஒதுக்கிட மாட்டேன், டிரஸ்ட் மீ பா!"

"கண்ணா! அப்பா கேட்கிறேன்னு தப்பா எடுத்துக்காத. ஆர்யங்கா எப்படி? நீ தேர்வு செஞ்ச பொண்ணுதான், இருந்தாலும் உன் வாழ்க்கை நல்லா இருக்கணும். எங்களைவிட கடைசி வரைக்கும் உன்னோடு வரப்போற உறவு அது. அந்த உறவு உனக்குச் சரியா அமையணும். அவ உன்னை ஏமாத்திடக் கூடாது, அதுக்காகத்தான் கேட்கிறேன்" என்றார் மகனின் வாழ்க்கையை நினைத்த பயத்துடன்.

"அப்பா! ஆர்யங்கா ரொம்ப நல்ல பொண்ணுப்பா. எல்லாம் தெரிஞ்சும் என்னை ஏத்துக்கிட்டா. எனக்காகக் குழந்தையைச் சுமக்கச் சம்மதிச்சிருக்கா. இதுக்கு மேல என்ன வேணும்? என் மேல அவளுக்கும், அவ மேல எனக்கும் காதல் நிறையவே இருக்கு. நான், அவ, எங்களுக்கு ஒரு பாப்பா என ஒரு குடும்பமா வாழணும்னு ஆசைப்பட்டேன். வேற எந்த நோக்கமும் இல்லைப்பா" என்று விளக்கினான்.

"எனக்கு உன் மீது நம்பிக்கை இருக்குப்பா! நான் உன்னை நம்புறேன், உன் முடிவு சரியா இருக்கும். மருமகளை மருத்துவமனைக்குக் கூட்டிட்டுப் போனியா பிருத்வி? பாப்பா எப்படி இருக்கு?"

"இன்னும் இல்லைப்பா. மருத்துவர் சொன்ன தேதி வரல, இனிமேதான் போகணும்."

"மருமகளையும் குழந்தையையும் பத்திரமாப் பார்த்துக்கோ. நான் வர்றேன்" என்று கூறி அங்கிருந்து சென்றார். அவருக்கு மருமகளைப் பற்றி ஆராய அரை மணி நேரம் கூட ஆகாது, ஆனாலும் மகன் மீதிருந்த நம்பிக்கையில் ஆர்யங்காவைப் பற்றி அதிகம் விசாரிக்கவில்லை.
மௌலி சென்றதும் பெருமூச்சு விட்டவன், அறைக்குள் சென்று மீண்டும் மடிக்கணினியை எடுத்துக்கொண்டு அமர்ந்தான்.
மறுநாள் காலை விடிய, ஒருவருக்குப் பின் ஒருவராகக் குளித்துவிட்டுத் தயாராக இருந்தனர். "நீ கீழ போ ஆர்யா, இதோ வந்துடுறேன்" என்றான் பிருத்வி.

"தனியாவா? நீங்களும் வாங்க! இல்லைன்னா உங்களோடவே வர்றேன்" என்று நேற்றைய நிகழ்வை நினைத்துப் பயந்து, எச்சில் விழுங்கியபடிச் சொன்னாள்.

"ஆர்யா! நான் இருந்தாலும் இல்லையென்றாலும் நீ ஒவ்வொரு சூழ்நிலையையும் எதிர்கொண்டுதான் ஆகணும். பயந்துகிட்டே இருக்கிறது அழகல்ல. கீழப் போ, நான் வர்றேன்" என்றான் அழுத்தமாக. அவளும் கீழே இறங்கினாள்.

கூடத்தில் யாரும் இருப்பதாகத் தெரியவில்லை.
சாந்திதான் சமையலறைக்கும் உணவு மேசைக்குமாக ஓடிக்கொண்டிருந்தார்.
அவள் மெதுவாக ஒவ்வொரு படியாக இறங்கி வந்தாள். அவளைக் கண்ட சாந்தி, "வாங்கம்மா சாப்பிடலாம்" என்றழைத்தார்.

அவளும் உணவு மேசையில் அமர்ந்தாள். தட்டைத் திருப்பி வைத்துப் பக்கத்தில் தண்ணீர் ஊற்றி வைத்தவர், தோசையை வைக்கப் போக, "அவரும் வரட்டும் அக்கா, சேர்ந்து சாப்பிடுறோம்" எனப் புன்னகையுடன் சொன்னாள்.

"சரிங்கம்மா" என்று அவர் ஒதுங்கி நின்றார்.

அமிர்தாவும் அனுப்பல்லவியும் அங்கு வந்தனர். அவர்கள் ஆர்யாவிற்கு எதிராக அமர, இவள் பயந்துதான் போனாள்.
ஆனால் அவர்களோ மிக இயல்பாக, சிரித்த முகத்துடன், "இப்போ உடம்பு எப்படிம்மா இருக்கு?" எனக் கேட்டனர்.

"ம்ம்... பரவாயில்லைங்க..." என்றவளுக்கு அவர் என்ன உறவுமுறை என்று தெரியவில்லை. திருதிருவென விழித்தாள். அதைப் புரிந்துகொண்ட அமிர்தா அதே புன்னகையுடன், "நான் அமிர்தா, பிருத்வியோட சித்தி. உன்னோட சின்ன மாமியார். இவ அனுப்பல்லவி, என் பொண்ணு, உன் சின்ன நாத்தனார்" என்று அறிமுகம் செய்ய, ஆர்யங்கா புன்னகையுடன் சரி எனத் தலையசைத்தாள்.

"எந்த டாக்டர் கிட்ட ட்ரீட்மென்ட் பார்க்குறீங்க?" என்றதும், 'என்ன சொல்வது? யாரைச் சொல்வது? அவளுக்கு இங்கு யாரையும் தெரியாதே?' என மீண்டும் பதில் சொல்லத் தடுமாறினாள். அப்போது அங்கு வந்தான் பிருத்வி!

"சாந்தி அக்கா" என்று அழைத்தான். அவர் வந்து பரிமாற, இருவரும் சாப்பிட்டனர்.

"பிருத்வி! உன் மனைவிக்கு நாங்க யாருன்னு கூட அறிமுகம் செய்து வைக்க மாட்டியா? நாங்க என்ன அவ்வளவு அந்நியமாப் போயிட்டோமா?"
உணவை வாயில் வைக்கச் சென்றவன், கண்களை மூடித்திறந்தான். "நான் எந்த அளவுக்கு இங்க அந்நியமா இருக்கேன்னு இப்போ தெரிஞ்சதா... உங்களுக்கு?" என்று மாற்றினான்.

"சித்தின்னு கூப்பிடக் கூடத் தயாரா இல்லையா நீ?"
"கூப்பிட்டேன்... பலமுறை கூப்பிட்டேன், கெஞ்சினேன். அப்போதெல்லாம் உங்க முகத்தைக் கூடக் காட்டல. என்னை நீங்க நம்பல, உங்க அக்கா கூடத்தானே இருந்தீங்க!"

"நான் அந்த இடத்துல இருந்தது என் தப்பாவே இருக்கட்டும். என்னை நீ மன்னிக்க மாட்டியா? உன் அமிர்தாவை மன்னிக்க மாட்டியா?"

"எனக்குன்னு சொல்லிக்கிற உறவா இருந்தால் மன்னிக்கலாம். உறவுன்னு சொல்லிக்க எனக்கு இங்க யாரும் இல்லை."

"பிருத்வி" எனக் கண்ணீரோடு அவர் அழைக்க,

"அண்ணா! ஏன் இப்படிச் சொல்ற? நான் இல்லையா உனக்கு?" என அனுப்பல்லவி தேம்பி அழ, பிருத்வியின் கண்கள் சிவப்பேறின. முகம் இறுகிக் காணப்பட்டாலும், தங்கைக்காகக் கனிந்து, "அழாத அனுமா, எனக்குப் பிடிக்காது" என்று அவளைப் பார்க்காமலேயே சொன்னான்.

அவனது முக மாற்றத்தைக் கண்டு ஆர்யங்கா ஆச்சரியம் கொண்டாள். 'மொத்த குடும்பமும் வேண்டாம் என இவன் விலகி நிற்க, அவன் சொன்னது மட்டும் காரணமா இருக்காது எனத் தோணுதே! வேற என்னவா இருக்கும்?' என யோசித்தபடிச் சாப்பிடாமல் இருந்தாள்.

"ஆர்யா, என்ன யோசனை? சாப்பிடு" என்றான் அதட்டலாக. அவளும் சாப்பிட்டபடியே எதிரே இருந்தவர்களையும் அவனையும் மாறி மாறிப் பார்த்தாள்.

இருவரும் சாப்பிட்டு முடித்துவிட்டு, கை கழுவி வெளியே வந்தனர். பிருத்வி சாந்தி அக்காவிடம்,

"அக்கா! நான் ஆர்யாவைக் கூட்டிட்டு ஃபேக்டரி போறேன். இனி தினமும் ரெண்டு பேரும் ஃபேக்டரிக்குத்தான் போவோம். நான் கொடுத்த டயட் சார்ட் படி சாப்பாடு கொடுத்து விடுங்க" என்றான்.

"ஏன் மருமகளைக் கஷ்டப்படுத்துற பிருத்வி? அவ வீட்டிலேயே இருக்கட்டுமே, நாங்க பார்த்துக்கிறோம்" என்றவரை ஏளனச் சிரிப்போடு பார்த்தான்.

"நேத்து உங்க அக்கா இவளைக் கொடுமை செய்யும் போது நீங்க எங்க இருந்தீங்க?" எனக் கேட்க, அவர் வாயடைத்துப் போனார்.

"அக்கா! நீங்களே சாப்பாட்டைக் கொண்டு வந்து கொடுங்க, உங்களுக்குக் கார் வந்திடும்" என்று சொல்லிவிட்டு, "வா ஆர்யா" எனத் தோளோடு அணைத்துச் சென்றான். முதலில் அவள் நெளிந்தாள். பிருத்வி அவளைப் பார்த்துவிட்டு வேறெங்கோ பார்க்க, அவன் பார்வை சென்ற திசையில் வித்யூ இருப்பதை உணர்ந்தவள், அவனது நாடகத்தில் இணைந்து கொண்டாள்.

இருவரும் காரில் ஏறிச் செல்வதைக் கண்டு வித்யூவுக்குக் கோபம் வந்தது. 'ச்ச! அவன் வேலைக்குப் போவான், அந்த நேரத்தில் அத்தையை வைத்து இவளைத் துரத்தி விடலாம்னு பார்த்தா, கூடவே கூட்டிட்டுப் போறானே! இவளும் கூச்சமே இல்லாம அவன் கூடப் போறா! ஒரு நாள் நீ தனியா மாட்டுவடி, அப்போ உன்னை வச்சிக்கிறேன்' என மனதிற்குள் கருவிக் கொண்டான்.

"ஸ்மைல் ப்ளீஸ்" எனப் பெரிய கரும்பலகையில் பொறிக்கப்பட்டிருந்த தொழிற்சாலைக்குள் அவனது கார் நுழைந்தது.

பெரியவர்கள் சிலர் பூங்கொத்துடன் புதிதாகத் திருமணமான பிருத்வி - ஆர்யங்கா தம்பதியினரை வரவேற்கக் காத்திருந்தனர். பிருத்வியின் உயிர் நண்பன் ஆதித்யாதான் திருமணச் செய்தியை அவர்களிடம் பகிர்ந்து, இன்று அவர்கள் வரப்போகும் விஷயத்தைச் சொல்லியிருந்தான்.
இருவரும் காரிலிருந்து இறங்க, அங்கிருந்த தொழிலாளர்கள் கைதட்டி உற்சாகமாக வரவேற்றனர். அவர்களுக்கு எதிரே நின்ற தொழிலாளர்களைக் கண்டு ஒரு கணம் அதிர்ந்து போனாள் ஆர்யங்கா!

அங்கிருந்த ஒவ்வொரு தொழிலாளியும் ஏதோ ஒரு வகையில் மாற்றுத்திறனாளியாகவே இருந்தனர். ஆனால் அனைவரும் தன் வீட்டுப் பிள்ளையின் திருமணத்தை வரவேற்பது போன்ற மகிழ்ச்சியில் இருந்தனர்.

வயதான பெரியவர் ஒருவர் மாலையைப் பிருத்வியின் கழுத்தில் போட்டு, இன்னொரு மாலையை ஆர்யாவின் கழுத்தில் போடச் சொன்னார். பிருத்வி தயங்க, அவர்களின் சந்தோஷத்திற்காக அவளே மாலையை வாங்கத் தலைகுனிந்தாள். அவளை ஆச்சரியமாகப் பார்த்துவிட்டு, அவன் மாலையை அணிவித்தான்.

"எல்லாருக்கும் ரொம்ப நன்றி! எல்லாரும் என்னை மன்னிக்கணும், உங்ககிட்ட சொல்லாமலே கல்யாணம் பண்ணிக்கிட்டேன். என்னோட சூழ்நிலை உங்களுக்குப் புரியும்னு நினைக்கிறேன். எல்லாரும் இப்போ போய் வேலை பாருங்க, மதியம் எல்லாருக்கும் கல்யாண விருந்து உண்டு" என்றான். அனைவரும் உற்சாகமாகக் கலைந்து சென்றனர். சிலர் கொடுத்த பூங்கொத்தை வாங்கிக்கொண்டு, அவர்களின் வாழ்த்துகளைப் புன்னகையோடு ஏற்றுக் கொண்டனர்.

அவர்கள் சென்ற பின் ஆதித்யா பூங்கொத்தைக் கையில் கொடுத்து, "வாழ்த்துக்கள் மிஸ்டர் அண்ட் மிஸஸ் பிருத்வி!" என்றான்.

"நீயுமாடா!" என்றவன் பூங்கொத்தை வாங்கிக்கொண்டு அவனை அணைத்துக்கொண்டான்.

"ஆர்யா! இது ஆதித்யா, என்னோட உயிர் நண்பன். நானும் இவனும் தான் இங்க பார்ட்னர். எனக்கு எல்லாமே இவன்தான்" என்று அணைப்பை இறுக்கிக் கூற,

"ரொம்ப இறுக்காத, அப்புறம் சிஸ்டர் பொறாமைப்படப் போறாங்க" எனக் கேலி செய்தான் ஆதித்யா. "போடா!" என அவனது தலையில் தட்டினான் பிருத்வி.

"சரி சரி, வாங்க உள்ள போலாம். வாங்க சிஸ்டர்" என இருவரையும் உள்ளே அழைத்து வந்தான். அலுவலகத்தைப் பற்றியும், அவர்களது நட்பைப் பற்றியும் ஆதித்யா ஆர்யாவிற்கு விளக்கிக்கொண்டிருக்க, பிருத்வி அமைதியாகப் புன்னகையுடன் கேட்டுக் கொண்டிருந்தான்.

அப்போது கதவைத் தட்டும் சத்தம் கேட்டது. "எஸ், கம் இன்" என்றான் பிருத்வி. மீண்டும் தட்டும் சத்தம் கேட்கவே, பிருத்வி ஆதித்யாவைப் பார்த்தான்.

"அவளாதான் இருப்பா! இரு வர்றேன்" என்று ஆதித்யா கதவைத் திறக்க, தேவதை போலப் பூங்கொத்தோடு நின்றிருந்தவளைக் கண்டு, விழி அசைக்க மறந்து, மூச்சு விடவும் மறந்து, கதவிலேயே சாய்ந்து அவளை ரசிக்கத் தொடங்கினான் ஆதித்யா!
 
Last edited:

Author: Vishakini
Article Title: குழல் யாசிக்கும் புயலே - 14
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Gowri Karthikeyan

Well-known member
May 5, 2026
1,290
384
83
Chennai
ஆதி ஓட ஜோடியா வந்து இருக்கறது🤩🤩🤩🤩
Hmm எனக்கும் அவன் விலகி நிற்க வேற காரணம் இருக்குனு தான் தோணுது