புயல் 17
பிருத்வியின் திடீர் அணைப்பில் திகைத்து நின்றாள் ஆர்யங்கா! அவளது இதழ்கள் அவனது நெஞ்சில் முதல் முத்தத்தடத்தைப் பதித்தன.
அவன் குனிந்து அவளது காதோரம் இதழ் உரச, "சாரி ஆர்யா! என்னை தப்பா எடுத்துக்காதே! வித்யூகாகத்தான் உன்னை அணைச்சு நிக்கிறேன். பால்கனியில இருந்து நம்ம ரெண்டு பேரையும் பார்க்கிறான்," என்றான்.
அதெல்லாம் அவள் காதில் விழுந்ததா என்று தெரியவில்லை... ஆனால், ஏதோ ஒரு குறுகுறுப்பும் அவன் விரல்கள் தந்த அழுத்தமும் அவளை அவனுக்குள் கட்டுண்டு கிடக்கச் செய்தன.
சட்டென அவனிடமிருந்து அவளால் விலக முடியவில்லை. அவனோ, நடிப்பிற்காகவே அவள் தனது அணைப்பைப் பொறுத்துக் கொண்டிருக்கிறாள் என்று எண்ணிக்கொண்டிருந்தான்.
ஆர்யங்கா தனியாக பால்கனியில் நின்றபோதே கவனித்துவிட்ட வித்யூ, அவளிடம் பேச முயற்சி செய்தான். அதற்குள் பிருத்வி வந்து அவளிடம் பேசுவதையும், இப்போது அணைத்து நிற்பதையும் கண்டு தனக்குள் முஷ்டியை இறுக்கினான். கோபத்துடன் அவ்விடம் விட்டு அவன் செல்ல, பிருத்வி தனது அணைப்பிலிருந்து அவளை விடுவித்தான்.
அவள் அவனை நிமிர்ந்து பார்க்காமல் விறுவிறுவெனச் சென்றுவிட்டாள். 'மறுபடியும் கோபித்துக் கொண்டாளோ, எப்படிச் சமாதானம் செய்வது?' என்று அவன் யோசிக்கும் நேரத்தில், ஆதித்யா அழைத்து வாசுகியிடம் தன் காதலைப் பகிர்ந்த விஷயத்தைப் பேசினான். இவனும் ஆர்யாவை மறந்து அவனோடு பேச்சில் இணைந்தான்.
உள்ளே வந்தவள் மெத்தையில் அமர்ந்தாள். தனக்குள் தோன்றிய புதிய உணர்வை எண்ணி பயம் கொண்டாள். அவனது அணைப்பு அவளுக்கு அருவருப்புத் தரவில்லை. அதில் ஒரு கணம் மனம் கட்டுண்டு போனதில், தன்னைத்தானே கேவலமாக உள்ளுக்குள் திட்டிக் கொண்டாள்.
பாண்டி கைப்பிடித்ததுமே அருவருப்பு கொண்டவள், பிருத்வியின் அணைப்பில் இருந்தபோது அந்த அருவருப்பை உணரவில்லை. மாறாக, அவளது மனது புதிதாக லயித்துப் போக, அவள் அதிர்ந்து போனாள்.
'அவன் நடிக்கிறான். அவனது நடிப்பிற்கு மட்டுமே ஒத்துழைக்க வேண்டும். மனம் அவனோடு ஒன்றிவிடக் கூடாது. இது என்ன... ஒருவனை நினைத்த மனது இன்னொருவரை நினைக்குமா? ஏற்குமா? காதலிக்குமா? இல்லை, இது ஹார்மோன்களின் செயல்பாடா?' என்று குழம்பிப் போனாள்.
'அவன் தொடுதலுக்கெல்லாம் குழைந்து நின்றால் அவன் என்ன நினைப்பான்? அவனை விடுத்து இப்போது தன்னைத் தொட்டவனைப் பிடித்துக்கொண்டாள் என்று தன்னைத் தவறாக நினைக்க மாட்டானா? வந்த வேலையை முடித்துக்கொண்டு கிளம்ப வேண்டும்,' என்று தனக்குள் உறுதியாகச் சொல்லிக் கொண்டாள். ஆனால், எத்தனை நாள் அந்த உறுதி நிலைக்கும் என்று தெரியவில்லை.
அவள் எங்கோ வெறித்தவாறு அமர்ந்திருக்க, ஆதித்யாவிடம் பேசிவிட்டு வந்தவன், அவள் ஏதோ இறுகிய நிலையில் அமர்ந்திருப்பதைக் கண்டான். 'தான் அணைத்ததில்தான் கோபம் கொண்டு இறுகிப் போய் இருக்கிறாள்' என்று நினைத்தவன், எப்படியாவது தன் நிலையை விளக்கிச் சமாதானம் செய்ய வேண்டும் என்று அவள் அருகே வந்தான். அதற்குள் சாந்தி அக்கா வந்து கதவைத் தட்டினார்.
"எஸ், கம் இன்," என்றான் பிருத்வி.
உள்ளே வந்தவரோ, "தம்பி! ஐயா உங்களையும் பாப்பாவையும் கீழே கூப்பிடுறார்..." என்று சொல்லிவிட்டுச் செல்ல, இருவரும் யோசனையுடன் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.
ஆர்யாவின் முகத்தில் சிறு கலக்கம் தென்பட, "வா," என்று கண்களை மூடித் திறந்து தைரியம் கொடுத்தவாறே அவளை அழைத்துக்கொண்டு கீழே இறங்கி வந்தான். கீழே சிரித்த முகமாக அமர்ந்திருந்தார் மௌலி. அவர் அருகே கடுகடுவென அமர்ந்திருந்தார் ராஜேஸ்வரி. அவர் மட்டுமில்லை, பிரணவியும் தான்.
செல்வராணியின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது. பவித்ராவும் மேகனும் கூட அமைதியாக இருந்தனர்.
"என்னப்பா? எதுக்கு வரச் சொல்லியிருந்தீங்க?"
"வித்யூவும் பிரணவியும் வெளிய போறாங்களாம். நீயும் ஆர்யங்காவும் கூட வரணும்னு வித்யூ ஆசைப்படுறான்... நீங்களும் ரூமே கதினுதானே இருக்கீங்க! கூட போயிட்டு வாங்களேன்!"
"நாங்க எதுக்குப்பா அவங்க ரெண்டு பேருக்கும் நடுவுல? அவங்க போகட்டும்."
"என்ன மச்சி இப்படி சொல்ற? நாங்க மேரேஜ் பண்ணிக்கப் போற கப்பிள்னா, நீங்க நியூவா மேரேஜ் பண்ணிக்கிட்ட கப்பிள். நானும் வந்ததுல இருந்து பார்க்கிறேன், நீங்க ரெண்டு பேரும் வெளிய தனியா போன மாதிரியே தெரியல! சோ, எங்களோட வாங்களேன், ஜாலியா போயிட்டு வரலாம்..." என்றான் வித்யூ நல்லவனைப் போல.
"மச்சி, உனக்குத் தெரியாதது இல்ல! பிரணவியோட ஹாப்பியா போயிட்டு வா! நாங்க எதுக்கு?" என இறுகிய முகத்துடன் பிருத்வி சொல்ல,
"இன்னும் எத்தனை நாள் எல்லாரும் இப்படி இருக்கப் போறீங்க? என்ன இருந்தாலும் இவன் எனக்கு மச்சான், இவ உனக்குத் தங்கச்சி; அது மாறாதுதானே! ஏதோ நமக்குள்ள சில கசப்புகள் நடந்துபோச்சு, அதையே பிடிச்சுத் தொங்கிட்டே இருப்பீங்களா? பிரணவி, உன் அண்ணன் நம்ம கூட வர்றதுல உனக்கு ஏதாவது பிரச்சினை இருக்கா?!" எனக் கேட்க, மற்றவர்களிடம் வாதாடுபவளால் ஏனோ அவனிடம் முடியவில்லை. "இல்லை," என்று பல்லைக் கடித்துக்கொண்டு சொன்னாள் பிரணவி.
"அப்புறம் என்ன மச்சி? நீயும் வாயேன்," என்றான் வித்யூ.
நெற்றியைத் தேய்த்தபடி பிருத்வி ஆர்யங்காவைப் பார்த்தான். அவளோ யோசனையோடு நின்றிருந்தாள்.
"என்ன மச்சி? உன் ஒய்ஃப் சொன்னாதான் ஓகே சொல்வியா?" என நக்கலாகக் கேட்டான் வித்யூ.
"ஆஃப்கோர்ஸ்! அவளோட கன்வீனியன்ஸ் (Convenience) தான் எனக்கு முக்கியம். அவ வேணாம்னு சொன்னா யோசிக்க மாட்டேன், வரலைன்னு சொல்லிடுவேன்," என அவன் பட்டென்று சொன்னதும், ஆர்யங்கா அவனை நிமிர்ந்து பார்த்தாள். வித்யூவோ பல்லைக் கடித்தான்.
பிருத்வியைப் பார்த்து, "நாம போலாம்ங்க," என்றாள் ஆர்யங்கா.
"சரிப்பா, நாங்களும் வரோம்," என்று அவளை அணைத்தபடி மேலே அழைத்துச் சென்றான் பிருத்வி. அதை எரிச்சலோடு பார்த்த வித்யூ, 'இதை உனக்குத் திருப்பித் தருகிறேன்' என்று மனதிற்குள் சொல்லிக்கொண்டு தன் அறைக்குள் சென்றான். பிரணவி செல்வராணியை அழுத்தமாகப் பார்த்துவிட்டுச் சென்றாள்.
ராஜேஸ்வரி குழப்பத்தோடு அமர்ந்திருக்க, மௌலியின் முகத்தில் நிம்மதி தென்பட்டது. காரணம், வித்யூ பிருத்வியைக் குடும்பத்தோடு சேர்த்து வைப்பதாக அவரிடம் நம்பிக்கை அளித்திருந்தான்.
நால்வரும் கிளம்பி வர, அவர்களை மலர்ந்த முகத்தோடு அனுப்பி வைத்தார் மௌலி.
வித்யூ, "நான் டிரைவ் பண்றேன்," என்று தாமாக முன்வர, பின்னே பிருத்வியும் ஆர்யங்காவும் அமர்ந்துகொள்ள, பிரணவி முன்னிருக்கையில் அமர்ந்துகொண்டாள்.
முன்னாடி இருந்த கண்ணாடி வழியே வித்யூ ஆர்யாவைப் பார்க்க, அவன் பார்வையைத் தவிர்ப்பதற்காக அவள் வேகமாகப் பிருத்வியின் கைகளைப் பற்றிக் கொண்டாள். சட்டென அவளது விழிகளில் ஏதோ பயத்தை உணர்ந்த பிருத்வி, அவளது கையோடு தன் கைகளைக் கோர்த்துக்கொண்டான். இதைக் கண்ட வித்யூவிற்குள் உஷ்ணம் ஏறிட, கோபத்துடனேயே வேகமாக வண்டியைக் கிளப்பினான்.
பிரணவி அவனைப் புரியாமல் பார்க்க, பின்னிருந்த பிருத்வியோ, "ஹே மேன், ஸ்லோவா போ! என் ஒய்ஃப் பிரெக்னன்ட்டா இருக்கா, தெரியும்ல?" என நக்கலாக வினவினான். அவனோ பற்களைக் கடித்து, வெளியே சிரித்தபடி, "ஓ தெரியும் மச்சி! பட் மறந்துட்டேன், இதோ ஸ்லோவா போறேன்," என்று மகிழுந்தின் வேகத்தைக் குறைத்தான்.
வித்யூவும் பிரணவியும் பேசிக்கொண்டே வர, பின்னே அமர்ந்திருந்த இருவரும் அமைதியாக வந்தனர்.
"என்ன மச்சி! உன் ஒய்ஃப் பேசவே மாட்டாங்களா? அமைதியா வர்றாங்க!"
"யா மச்சி! கொஞ்சம் ஷை டைப் . நீங்கெல்லாம் இருக்கிறதால அமைதியா இருக்காங்க. இல்லைன்னா அவங்க பேச்சை நிறுத்தவே முடியாது! எவ்வளவு வேணாலும் கேட்டுட்டே இருக்கலாம்," எனக் கண்ணாடி வழியே அவனைக் கண்டு கண்ணடித்தபடி சொன்னான் பிருத்வி.
சென்னையின் அந்த மிகப்பெரிய மாலுக்கு முன் வண்டியை நிறுத்தினான் வித்யூ. அவர்கள் இறங்கிவிட, இவனும் வாகன நிறுத்தத்தில் வண்டியை நிறுத்திவிட்டு அவர்களுடன் இணைந்து கொண்டான். நால்வராக உள்ளே சென்றனர். விளையாட்டு, கடைகள், உணவகம், தியேட்டர், கிளப் என அனைத்தும் அடங்கிய மிகப்பெரிய மால் அது.
நால்வரும் முதலில் துணிக்கடைக்குள் நுழைந்தனர். பிரணவி கண்மண் தெரியாமல் ஆடைகளை அள்ளிக் குவிக்க, ஆர்யாவோ சுற்றிச் சுற்றி வந்தாளே தவிர, விலையைப் பார்த்துவிட்டு எதையும் எடுக்க மறுத்தாள்.
"உன்னை வேடிக்கை பார்க்கக் கூட்டிட்டு வரல! உனக்குப்பிடிச்சதை எடு, நான் பே (Pay) பண்றேன்," என்றான் பிருத்வி.
"வேணாங்க, இங்க எல்லாமே விலை ரொம்ப ஜாஸ்தியா இருக்கு!"
"அங்க பாரு," என்று பிரணவியைக் காட்டினான். அவளோ டிராலியை நிறைத்துக் கொண்டிருந்தாள்.
"அவளைப் பாரு, வேணுமா வேணாமான்னு யோசிக்காம குவிச்சுக்கிட்டே போறா! நீயும் உனக்கு என்ன வேணுமோ வாங்கிக்கோ."
"எனக்கு இதெல்லாம் பழக்கம் இல்லை! பத்து ரூபாயையும் பார்த்துப் பார்த்துச் செலவு பண்ற ஜாதி நான்... பணத்தைக் கண்டதும் அள்ளிக் குவிக்கிற ஆள் இல்லை. எனக்கு நீங்க வாங்கிக் கொடுத்ததே நிறைய இருக்கு, அது போதும்," என்று மீண்டும் வேடிக்கை பார்க்கத் தொடங்கினாள். அவளது நெற்றியைத் தேய்த்துக் கொண்டே, தன் வழிக்கு அவளைக் கொண்டுவர நினைத்தவன்,
"ஆர்யா! வித்யூவும் பிரணவியும் கூட இருந்தாலும், அவனோட பார்வை நம்ம பக்கம் தான் இருக்கு. சோ, அவன் முன்னாடி நாம நெருக்கமா இருக்கிறது போல நடிக்கணும்... சோ ப்ளீஸ், நீ வேணாம்னு சொன்னா அவன் நக்கலா பார்ப்பான், கேலியா பேசுவான். ப்ளீஸ் கோ-ஆபரேட் பண்ணு," என்றவன், அவள் சுதாரிக்கும் முன்னே அவளை இழுத்து, ஆடைகளை வாங்கித் திணித்தான்.
இருவரும் பில் (Bill) போட்டுவிட்டு உணவகம் சென்றனர். அவர்களுக்குத் தேவையானதை ஆர்டர் செய்ய, ஆர்யாவின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு மிதமான உணவை அவளுக்காக ஆர்டர் செய்தான் பிருத்வி.
"பிரணவி," என வித்யூ அழைக்க, "என்ன மாமா?" என வாய்திறந்தவளின் வாயில் உணவை ஊட்டி அவளது பேச்சை அடக்கினான்.
அவள் சற்றும் எதிர்பார்க்கவில்லை. அவனது பார்வை எதிரே இருந்த இருவரிடம் இருந்தாலும், உணவை அவளுக்கு ஊட்டினான். வெட்கத்தோடு தலைகுனிந்து கொண்டவள், அவனுக்கும் ஊட்ட, அவனும் அதை வாங்கிக் கொண்டான்.
சிறு முறுவலுடன் அவர்களைப் பார்த்திருந்தான் பிருத்வி.
"நீங்க ரெண்டு பேரும் ஊட்டி விட்டுக்கலையா பிருத்வி?" என இயல்பாகக் கேட்டாலும், அதில் வித்யூவின் நக்கல் ஒளிந்திருந்தது.
"உங்களைப் போல ஸ்பூன்ல நாங்க ஊட்டி விட்டுக்க மாட்டோம்... நாங்க ஊட்டி விட்டுக்கிற ஸ்டைலே வேற! இது பப்ளிக் பிளேஸ், இங்க அது முடியாது... என்ன ஆர்யா?" எனக் கண்ணடித்தான் பிருத்வி.
"ப்ச்... போங்க தவி!" எனச் செல்லமாக அவனது புஜத்தில் இடித்தாள் ஆர்யா. ஏற்கனவே மிளகாய் தின்றவனைப் போல இருந்த வித்யூவுக்கு, அவளது செல்லப் பெயரைக் கேட்டதும் உதடும் நாக்கும் மேலும் காந்தியது. அவனால் அதற்கு மேல் சாப்பிட முடியவில்லை, ஸ்பூனை வைத்துவிட்டான்.
இருவரும் ஏதோ பேசியபடி சாப்பிடுவதை ஆராய்ச்சியோடு பார்த்தாள் பிரணவி!
கடைசியாக வித்யூ அவர்களை அழைத்து வந்தது ஒரு கிளப்பிற்குத் தான். அங்கே ஆண்கள், பெண்கள் என்ற பேதமில்லாமல் குடித்துக் கொண்டும் ஆடிக்கொண்டும் இருக்க, வேண்டுமென்றேதான் அவர்களை அங்கு அழைத்து வந்தான். அதுவும் அவ்விடம் ஆர்யாவிற்குப் பிடிக்காது என்று தெரிந்துதான் கூட்டி வந்தான்.
முன்னொரு முறை இங்கு வந்தபோது யாரோ ஒருவர் அவள் கைகளைப் பிடித்ததற்கு, வேகமாக வெளியே வந்து வித்யூவைக் கட்டிப்பிடித்து அழுததெல்லாம் இருவருக்குமே நினைவில் வந்து போனது.
'அன்று ஒருவன் கைபிடித்ததற்கே அழுதவள், இன்று இன்னொருவனின் அணைப்பிற்குள் இருக்கிறாயே!' என்று குற்றம் சாட்டும் வித்யூவின் பார்வையை எதிர்கொண்ட ஆர்யாவின் நிமிர்ந்த பார்வை, 'உன்னால்தான் இந்த நிலைமை!' என்று அவனைத் திருப்பிக் குற்றம் சாட்டியது.
"ஷால் வி டான்ஸ்?" என்று ஒரு கையை நீட்டி வித்யூ பிரணவியிடம் கேட்க, "ஸ்யூர் (Sure)," என்று அவன் கையில் கை வைத்தாள். பாடலுக்கு ஏற்றவாறு அவனோடு இசைந்து இணைந்து ஆடினாள். அவனது கைகள் அவளது இடையில் தீண்டி அழுத்தம் கொடுக்க, அதில் துவண்டு அவனுக்குள் மயங்கிப் போனாள் பிரணவி.
பிரணவிக்குள் நடக்கும் அந்த வேதியியல் மாற்றத்தை அறியாமல், ஓரக்கண்ணால் ஆர்யங்காவைப் பார்த்தபடியே ஆடினான் வித்யூ.
பிருத்வி ஆர்யாவிடம், "உனக்குக் கஷ்டமா இருக்கா?" என்று கேட்டான்.
"ம்ம்... ஆமா!" என்றதும் அவன் அவளை உற்றுப் பார்த்தான்.
"இன்னும் அவனை லவ் பண்றியா? அவனோடு சேரணும்னு விரும்புறியா?"
"இல்லை," என்று இடவலமாகத் தலையாட்டினாள்.
அவனோ குழப்பமாக, "பின்ன ஏன் கஷ்டமா இருக்குன்னு சொன்ன?" என்றான்.
"கண்ணு முன்னாடி ஒரு பொண்ணோட வாழ்க்கை அழியப் போறதைப் பார்த்துட்டு அமைதியா இருக்கிறது நினைச்சு கஷ்டமா இருக்கு," என்று அவள் சொல்ல, அவனோ சிரித்தான்.
"எதுக்குச் சிரிக்கிறீங்க?"
"இல்ல... நீ உனக்காக ஃபீல் பண்றியோன்னு நினைச்சேன். ஆனா நீ என் தங்கச்சிக்காக ஃபீல் பண்ற!"
"அவளும் ஒரு பொண்ணுதானே!"
"ம்ம்... அப்போ உனக்குப் பொறாமை இல்லையா? வலிக்கலையா?"
"வலி இருக்கு! ஏமாந்துட்டேன்ற வலி இருக்கு! எப்போ என்னை வைப்பாட்டியா இருன்னு சொல்லாமல் சொன்னானோ, அப்பவே அவன் மேலே துளி காதல் இல்லாம போயிடுச்சு! இப்போ உங்க தங்கச்சிக்காக மட்டும்தான் இங்க இருக்கேன்... எனக்கு அவன் கூட வாழ விருப்பம் இல்லை," என்று தீர்மானமாகச் சொன்னாள். அதை அவன் தன் மனதில் குறித்துக் கொண்டான்.
"ஓகே! வா டான்ஸ் ஆடலாம்," என்றான் பிருத்வி. அவளோ அவனை கேள்வியாகப் பார்த்தாள்.
"உன் வலியை மறக்க, உன் நெஞ்சுல இருக்கிற சுமையைக் கொஞ்ச நேரம் இறக்கி வச்சுட்டு ரிலாக்ஸ் பண்ண வா!" என்று அவன் அழைத்ததில் அவளது மனது புத்துணர்ச்சி பெற்றது.
ஆர்யங்கா பிருத்வியுடன் இசைந்து ஆட, பிரணவியுடன் ஆடிக் கொண்டிருந்த வித்யூவுக்கு அவர்கள் ஆடுவதைக் கண்டு கோபம் தலைக்கேறியது. அவன் பிரணவியை விட்டு மெதுவாக விலகினான். அவர்கள் சிரித்த முகத்துடன் ஆடுவதைக் கண்டு அவனது முகம் கோபத்தில் சிவந்தது.
ஆர்யா கொஞ்சம் சோர்வாக, "ரெஸ்ட் ரூம் போகணும்," என்று பிருத்வியின் காதில் சொல்ல, அவன் அவளை அழைத்துச் சென்றான்.
வித்யூ விலகியதும் கேள்வியாக அவனைப் பார்த்தாள் பிரணவி.
"ரெஸ்ட் ரூம் போகணும்," என்று சொல்லிவிட்டு, அங்கிருந்து அவசரமாக அவர்கள் பின்னே ஓடினான் வித்யூ.
அவளை உள்ளே அனுப்பிவிட்டு, பிருத்வி வெளியே அலைபேசியோடு சற்று விலகிச் செல்ல... உள்ளே இருந்து வெளியே வந்த ஆர்யங்காவை வித்யூ மறைவான இடத்திற்கு இழுத்துச் சென்று சுவற்றில் சாய்த்தான். அவளது உதட்டில் முத்தமிடக் குனிந்தான்.