• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

குழல் யாசிக்கும் புயலே - 18

நிதனிபிரபு

Administrator
Staff member


புயல் 18

அவனது அதிரடியில் சற்றும் எதிர்பாராதவள், அவனிடமிருந்து தன்னை விடுவித்துக்கொள்ளப் போராடினாள். அவனோ அவளது இதழில் வன்மையாக முத்தம் வைக்க முயன்றான். தன் முழு பலத்தையும் திரட்டி அவன் நெஞ்சில் கை வைத்துத் தள்ளிவிட்டாள்.

"என்னடி இப்போதெல்லாம் நான் கிட்ட வந்தால் உனக்கு பிடிக்கிறதில்லை! அவன்கிட்ட வந்தா உனக்கு பிடிக்குமோ?!"

"ஆமாம், அவன்கிட்ட வந்தா பிடிக்கும்! ஏன்னா அவன் என் புருஷன்," என்றாள் பல்லைக் கடித்துக்கொண்டு.

"அப்போ நான் யாருடி?"

"நீ யாருன்னு உனக்குத் தெரியாதா? நான் சொல்லணுமா?"

"ஏய்!! என்னடி திமிரா?! அன்னைக்கு ஏதோ 'உன் பணம் வேண்டாம், நீ வேண்டாம்'னு சொல்லிட்டு வீராப்பா வந்த? இப்பவும் என்ன, ஒரு பணக்காரனைத்தானே கல்யாணம் பண்ணியிருக்க? என்னடி, என்னைவிட அதிகமா பணம் தரேன்னு சொன்னானா?"

நக்கலாகச் சிரித்தவள், "பொண்டாட்டின்னு உரிமை தரேன்னு சொன்னான்," என்று முகத்தில் அடித்தாற்போலப் பதில் சொல்ல, விழிகள் சிவக்க நின்றான் வித்யூ.

"அவனைப் பத்தி உனக்கு என்ன தெரியும்? எதுக்கு அவனை கல்யாணம் பண்ணிக்கிட்ட? அவன் யாருன்னு உனக்குத் தெரியுமா?"

"அவரைப் பத்தி எனக்கு எல்லாமே தெரியும். அவர் என்கிட்ட எல்லாவற்றையும் சொல்லிட்டார்... என்னைப்பத்தின எல்லா உண்மையையும் அவருக்குத் தெரியும். தெரிந்துதான் கல்யாணம் பண்ணிக்கிட்டார். எங்களுக்குள்ள எந்த ஒளிவு மறைவும் இல்லை," என்றாள்.

"சோ! இது என் குழந்தைன்னு தெரிஞ்சும் உன்னை ஏத்துக்கிட்டானா? என்னவோ இடிக்குதே!! என்ன, இந்தத் கல்யாணத்தை நிறுத்த பிளான் பண்றானா? சொல்லுடி, எதுக்கு நீ அவனை கல்யாணம் பண்ணிக்கிட்டேன்னு சொல்லு! என்னைப்பழிவாங்கவா?"

"உன்னைப்பழிவாங்கினா மட்டும் எனக்கும் என் குழந்தைக்கும் என்ன கிடைச்சிடும்? இல்லை, அவருக்குத்தான் என்ன கிடைச்சிடும்? வாழ்க்கையே வேண்டாம்னு சாகப்போன எனக்கு ஒரு அங்கீகாரம் கொடுத்திருக்கார். உன்னைப்போல 'எப்படியோ போகட்டும்'னு போகாமல், உன்னால் பாதிக்கப்பட்ட எனக்குப் பொண்டாட்டின்னும், என் குழந்தைக்கு அப்பான்னும் உரிமை கொடுத்தாரே... அவர்தான் ஆம்பளை!" என்றாள்.

"அவன் ஆம்பளையா?"

"பிள்ளை கொடுத்துட்டா மட்டும் ஆம்பளை இல்லை. எத்தனை எதிர்ப்பு வந்தாலும், எது விட்டுப்போனாலும் கடைசி வரைக்கும் பொண்டாட்டியையும் பிள்ளையையும் வச்சுக் காப்பாத்துகிறவன்தான் ஆம்பளை!"

"உனக்கு நீயே கேட்டுக்கோ, 'ஆம்பளையா நீ?'ன்னு," என முகத்தில் துப்பிவிட்டு நகர, அவளது கையைப் பிடித்து இழுத்து, "என்னடி அவன் கூட இருக்கிறோம்கிற திமிரா? எவ்வளவு பணம் வேணும்னாலும் தாரேன், அவனை விட்டுப் போயிடு," என்றான்.

"முடியாது! என் புருஷனை விட்டு நான் போக மாட்டேன். உன்னால் முடிந்ததைப் பார்த்துக்கோ," என்றவள் அங்கிருந்து வேகமாக நடந்தாள்.

அப்போதுதான் அலைபேசியில் யாரிடமோ பேசிவிட்டுத் திரும்பிய பிருத்வியை வேகமாக அணைத்துக்கொண்டாள். அவனும் அவளது இந்த அணைப்பை எதிர்பார்க்கவில்லை.

அவளது இதயம் வேகமாகத் துடிப்பதை உணர்ந்தவன், 'ஏதோ நடந்திருக்கு' என யூகித்து, அவளை ஆதரவாக அணைத்துக்கொண்டான்.

ஆர்யா பிருத்வியை அணைத்திருப்பதைப் பொறாமையுடன் பார்த்துவிட்டு அங்கிருந்து அகன்றான் வித்யூ!

நேரமானதால் நால்வரும் அங்கிருந்து கிளம்பினர். பின்னே அமர்ந்திருந்த பிருத்வி, தன் புஜத்தில் சாய்ந்து கண்களை மூடிக்கொண்டு வரும் ஆர்யாவை அவ்வப்போது பார்த்தபடி யோசனையோடு வந்தான். அவளது மேனி அவ்வப்போது நடுங்கி அடங்குவதை அவன் உணரத்தான் செய்தான்.

வீடு வந்ததுமே அவளைக் கைத்தாங்கலாக அழைத்து உள்ளே நுழைந்தவன், திரும்பித் தங்களுக்குப் பின்னாலேயே வந்த வித்யூவை அழுத்தமாகப் பார்த்தபடி, "நன்றி" சொல்லிவிட்டு உள்ளே சென்றான்.

பிருத்வி உள்ளே சென்றதும், வித்யூவின் பின்னால் வந்த பிரணவி அவனைப் பின்னாலிருந்து அணைத்துக்கொள்ள, இவனோ திகைத்தான்.

"இந்த டே ரொம்ப ஹாப்பியா இருந்தது மாமா! நான் நல்லா என்ஜாய் பண்ணினேன். உனக்கு எப்படி இருந்தது?" எனக் கழுத்தில் முகம் புதைத்துக் கேட்டாள்.

அவனுக்கோ அவளது அணைப்பைச் சகிக்க முடியவில்லை. வேறு வழியில்லாமல் பல்லைக் கடித்துப் பொறுத்துக்கொண்டவன், "எனக்கும் தான் நவி! உன்னோட டைம் ஸ்பெண்ட் பண்ணினது பிடிச்சிருந்தது... தேங்க்யூ," என்றான்.

எக்கி அவன் கன்னத்தில் முத்தம் வைத்தவள், "நெக்ஸ்ட் டைம் நாம மட்டும் போலாம் மாமா, எந்த டிஸ்டர்பன்ஸும் இல்லாம... ப்ளீஸ்," எனக் கெஞ்சினாள்.

"போலாம் நவி! இப்போ டயர்டா இருக்கு, ரூமுக்குப் போறேன்," என அவளைக் கஷ்டப்பட்டுப் பிரித்தெடுத்து, வேண்டா வெறுப்பாக ஒரு முத்தம் கொடுத்துத் தன்னை விடுவித்துக்கொண்டு நகர்ந்தான். அவளோ அவன் முத்தம் தந்த கன்னத்தைத் தடவியபடியே அறைக்குள் நுழைந்தாள்.

"வாஷ்ரூம் போன இடத்துல என்ன நடந்துச்சு? நீ ஏன் ஒரு மாதிரி இருக்க? ஏன் இப்படி நடுங்குற ஆர்யா?" என்று பிருத்வி கேட்டான்.

"அது...!" எனத் தயங்கி, நடந்த அனைத்தையும் சொல்லி முடித்தாள். அவள் சொல்லி முடித்ததும் கடுங்கோபம் கொண்டான். "அவனை...!" எனச் சீறிக்கொண்டே கிளம்பியவனைத் தடுத்து,

"ப்ளீஸ், பிரச்சினை வேண்டாம். நீங்க சண்டை போடப் போய் எல்லாருக்கும் உண்மை தெரிஞ்சா, அதுக்கப்புறம் என்ன நடக்கும்னு உங்களுக்குத் தெரியும். நான்தான் அக்னிப் பரீட்சை செய்ய வேண்டியது வரும். சொல்ல முடியாது, அந்த நெருப்பைக் கூட விலை கொடுத்து வாங்கிடுவாங்க! என்னால போராட முடியாது, தெம்பில்லை," எனச் சோர்வாகப் பேசினாள்.

"அப்போ நீ என்னை நம்பலையா? அப்படி ஒரு சூழ்நிலையில உன்னைத் தவிக்க விட்டிடுவேனா ஆர்யா?" என அழுத்தமாகக் கேட்டான். அவள் நிமிர்ந்து அவனது கண்களைப் பார்த்தபோது, அதில் தெரிந்த தீவிரத்தையும் உண்மையையும் அவளால் உணர முடிந்தது.

"எனக்கு புரியுது. உனக்கு எல்லாம் செய்வேன், ஆனால் என்னால உனக்கு நியாயம் வாங்கித் தர முடியாதுன்னு சொன்னவனால என்ன செஞ்சிட முடியும்னுதானே யோசிக்கிற?" எனக் கேட்டதுமே, அவள் பதில் பேசாது தலைதாழ்த்தினாள்.

அவள் தாடையை இரு விரலால் நிமிர்த்தி, "இப்ப சொல்றேன்... உனக்கு நியாயம் வேண்டும்னாலும் நான் வாங்கித் தருவேன். உன்னை அக்னிப் பரீட்சையில நிக்க விட மாட்டேன். இனி இதுபோல நடக்காது! வித்யூவின் நிழல் கூட உன் மேலே படாதபடி நான் பார்த்துக்கிறேன், தூங்கு! நான் இருக்கேன்," என்று ஆறுதல் சொல்ல, அவனது வார்த்தைகள் தெம்பையும் நம்பிக்கையையும் அளித்தன. தலை அசைத்தவள் அப்படியே மெத்தையில் சாய்ந்தாள்.

அவனும் நீள் இருக்கையில் யோசனையோடு அமர்ந்திருந்தான். உறங்கிப்போனவளை விழி அகற்றாது பார்த்துக்கொண்டிருந்தவன் லேசாகக் கண்ணயர, ஆர்யா சட்டெனப் பதறிக்கொண்டு எழுந்து அமர்ந்தாள். வித்யூ தன் கனவில் வந்து அவளது கழுத்தை நெரிப்பது போலக் கெட்ட கனவு கண்டிருந்தாள்.

அவள் எழுந்த அரவத்தைக் கேட்டு இவனும் விழித்திறந்தான். கழுத்தைப் பிடித்துக்கொண்டு, வியர்வை வழிய அமர்ந்திருந்தவளைக் கண்டு பதறி அருகே சென்று, "என்னாச்சு மா? ஏன் இப்படி பதறிப்போய் உக்காந்திருக்க? ஏதாவது கெட்ட கனவு கண்டியா?" எனக் கேட்க, 'ஆமாம்' என்பது போல் தலையசைத்தாள்.

அருகே இருந்த தண்ணீர் பாட்டிலை எடுக்க அவன் எத்தனிக்க, வேகமாக அவனது கையைப் பற்றி, "ப்ளீஸ் போகாதீங்க, பயமா இருக்கு," என்றாள்.

"நான் இருக்கேன் மா," என்று அவளது கைகளைப் பற்றிக்கொண்டே எட்டித் தண்ணீர் பாட்டிலை எடுத்து அவளுக்குக் குடிக்கக் கொடுத்தான். மடக்கென்று, சிந்திச் சிதறக் குடித்தாள். "ரிலாக்ஸ் மா," என்று அவளது கைகளை அழுத்தினான். இருவருக்குள்ளும் சிறிது நேரம் அமைதி நிலவியது.

"இப்படியே நீயும் நானும் முழிச்சு இருந்தா உடம்புதான் கெடும்! சோ, தூங்கலாம்..."

"எனக்குத் தூக்கம் வரும்னு தோணலை, பயமா இருக்கு."

"ஓகே! இப்ப நீ தப்பா எடுத்துக்கலைன்னா நான் ஒன்னு சொல்லட்டுமா?"

"ம்ம்," என ஆர்வமாகப் பார்த்தாள்.

"என்னை ஒரு பையனா நினைச்சுக்காம, ஃபிரெண்டா நினைச்சுக்காம... அம்மாவா நினைச்சு அணைச்சுக்கோ! அம்மாவா நினைச்சு உன் பக்கத்துல இருக்க எனக்கு அனுமதி கொடு! நான் உன் கூட இருந்து உன்னைத் தூங்க வைக்கிறேன். சப்போஸ் என்னோட அணைப்பு உனக்கு அசௌகரியமா (Uncomfortable) இருந்தா சொல்லு, நான் விலகிடுறேன்," என்றான்.

முதலில் அவன் சொன்னதைக் கேட்டு உடல் அதிர்ந்தவள், பின் 'சரி' என்றாள். அவனும் மெத்தையின் விளிம்பில் படுத்துக்கொள்ள, அவளோ அவனை அணைத்து அவன் நெஞ்சில் முகம் புதைத்தாள்.

தாயின் அணைப்பில் சுகமாக உறங்கும் குழந்தையைப் போல உறங்கிப்போனாள் ஆர்யா! அவனும் அதே போல் எண்ணிக் கொண்டு உறங்கிப்போனான். இருவருக்குமே சுகமாகக் கழிந்தது அந்த இரவு.

நேற்றைய நிகழ்வின் பாதிப்பு ஏதும் இல்லாது, புத்துணர்ச்சியாகத் தயாராகி நிற்கும் ஆர்யாவைப் பார்க்க அவனுக்கு நிம்மதியாக இருந்தது. இருவருமே ஒருவரை ஒருவர் புன்சிரிப்புடன் எதிர்கொண்டனர்.

இருவரும் சிரித்துப் பேசியபடி உண்பதைக் கண்ட வித்யூவிற்கு மீண்டும் வெறி உண்டானது. நேற்று அவன் தந்த பாதிப்பும் மிரட்டலும் அவள் முகத்தில் குழப்பமாகவும் பயமாகவும் தென்படும் என்று எண்ணியவனுக்கு, முற்றிலும் மாறாக எந்தச் சலனமும் இல்லாது புன்னகையுடன் வருபவளைக் காண உள்ளுக்குள் கொலைவெறி உண்டானது. இப்போது அவன் மட்டும்தான் தேவையற்ற எண்ணங்களோடும் பழிவெறியோடும் திரிகிறான்.

இருவரும் வழக்கம் போலவே ஃபேக்டரி சென்றனர். வரும் வழியில் ஆதித்யா வாசுகியிடம் காதல் சொன்ன விஷயத்தைப் பிருத்வி சொல்ல, ஆர்யா கோபப்படுவாள், முகம் சுளிப்பாள், அல்லது சலித்துக்கொள்வாள் என்று அவன் எண்ணியதற்கு மாறாக, கண்களை விரித்து ஆச்சரியமாக எதிர்கொண்டாள்.

"உனக்கு நான் சொன்ன விஷயத்துல கோபம் இல்லையா?"

"ஏன் கோபப்படணும்? நீங்க சொன்னது போல எல்லாரும் ஒண்ணு கிடையாது. எல்லாப் பணக்காரங்களும் ஒண்ணு கிடையாது. ஆதித்யா அண்ணாவோடது உண்மையான காதலா இருக்கலாம். என் கணிப்பு தப்பா இருக்கலாம். நான் கடவுள்கிட்ட வேண்டுகிறது ஒண்ணுதான்... அவங்க சேர்ந்தா ஒற்றுமையா இருக்கணும், அது போதும்... எல்லாரையும் ஒண்ணு போல பார்க்கிற என் பார்வையை நான் மாத்திக்கணும்," என்றாள். அவனுக்கும் அவளது பதில் நிறைவாக இருக்க, "தட்ஸ் குட்," என்று மனநிறைவோடு பயணித்தான்.

இங்கே முன்கூட்டியே வந்த வாசுகி, வேலை செய்துகொண்டிருந்தாலும் நேற்று தன் தாயுடன் பேசியதையே நினைத்துக்கொண்டிருந்தாள்.

இருண்ட வானத்தை வெறித்தபடி நின்றிருந்த வாசுகியின் தோளைத் தட்டி, "என்னடி என்னாச்சு? ஏன் தனியா வந்து நிக்கிற?" என்று கேட்டார் அவளது தாய்.

தாயிடம் எதையும் மறைப்பதில்லை அவள். அவ்வாறு மறைக்க நினைத்தாலும் அவள் முகம் காட்டிக் கொடுத்துவிடும். அவரே கண்டுபிடிக்கும் முன் அவளே ஒப்புவித்து விடுவாள்.

"அம்மா..." என்றவள், அன்று நடந்த அனைத்தையும் சொன்னாள். எந்த உணர்வையும் காட்டாது மிக நிதானமாக இந்த விஷயத்தைக் கையாள நினைத்த அவளது தாய், முதலில் கேட்ட கேள்வி: "உனக்கு ஆதித்யா தம்பியைப் பிடிச்சிருக்கா வாசு?"

அவரது அதிரடிக் கேள்வியில் தாயை நிமிர்ந்து பார்த்தாள். "பதில் சொல்லு வாசு."

"பிடிக்கும் மா."

"அப்போ காதலிக்கிறியா?"

"தெரியாது."

"சரி விடு! உன் மனசுல என்ன ஓடுது? உன் முடிவு என்ன?"

"அவருக்கு நான் கொஞ்சமும் எந்த விதத்துலயும் தகுதி இல்லாதவள். அவர் என்னை கல்யாணம் பண்ணிட்டு கஷ்டப்பட வேண்டாம். எனக்கு இந்த வாழ்க்கை, நீங்க, விஷ்ணு... இதுவே போதும் மா! காதல் வேண்டாம்," என்றாள் கண்ணீருடன்.

"சரி, காதல் வேண்டாம்! உனக்கு நாங்க போதும். ஆனா அந்தத் தம்பி கேட்டா என்ன பதில் சொல்லுவ?!" எனக் கேட்க, திருதிருவென முழித்தாள்.

"நீ இப்ப என்கிட்ட சொன்னதை அங்க சொல்ல முடியாது. ஏன்னா, அதை ஒரு காரணமா சொல்லக் கூடாதுன்னு முன்கூட்டியே அந்தத் தம்பி சொல்லிடுச்சே! அப்போ தம்பிகிட்ட என்ன பதில் சொல்லுவ?" எனக் கைகளைக் கட்டிக்கொண்டு கேட்க, அவளிடம் பதில் இல்லை.

"நீயே சொல்லு மா."

"அம்மா பார்க்கிற பையனைத்தான் கல்யாணம் பண்ணுவேன்னு சொல்லு," என்றார். அவளும் சரியெனத் தலையசைத்தாள்.

"இதுல உன் விருப்பம் என்ன மா?"

"எனக்கென்னம்மா இருக்கப்போகுது?! நீ உனக்கு பிடிச்ச வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்துச் சந்தோஷமா வாழணும், அதுதான் எனக்கு வேணும்... நீ எடுக்கிற முடிவுக்கு ஒருநாளும் நான் தடையா இருக்க மாட்டேன்... ஆனா உன் முடிவு சரியானதா, தவறானதான்னு சொல்ல எனக்கு உரிமை இருக்கு. உனக்கு பிடிச்ச வாழ்க்கையை நீ தேர்ந்தெடுத்தாலும் எனக்குச் சந்தோஷம்தான், ஆதித்யாவை கல்யாணம் பண்ணிக்கிட்டாலும் இன்னும் சந்தோஷம்தான். குழம்பிக்கிட்டே இருக்காம போய் தூங்கு. நல்லா தூங்கி எழுந்தா உனக்கே ஒரு நல்ல தீர்வு கிடைக்கும்," என்று சொல்லிவிட்டுச் செல்ல, தெளிந்த முகத்துடன் உறங்கப் போனாள்.

அதே நேரம், தெளிவான முடிவுடன் அவனிடம் பேசக் காத்திருக்க... ஆதித்யாவோ அவளிடம் போக்குக் காட்டிக்கொண்டு இருக்கிறான்.
 
Top Bottom