• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

குழல் யாசிக்கும் புயலே - 21

Vishakini

Moderator
Staff member
புயல் 21

மறுநாள் காலையில் கூடத்தில் அனைவரும் கூடியிருக்க, அவர்களுடன் அதிசயமாக பிருத்வியும் ஆர்யங்காவும் இருந்தனர். சாப்பிட வந்தவர்களைத் உள்ளிழுத்துக் கொண்டார் மௌலி.
செல்வராணிக்கும் பிரணவிக்கும் அவர்கள் இருவரும் அங்கே அமர்ந்திருப்பதை க் கண்டு உடம்பில் மிளகாய் தடவியது போலக் காந்தியது. அதற்கு மேல் இருவரும் ஜோடியாக அமர்ந்திருப்பதைப் பார்த்த வித்யூவிற்கு, தீயில் குளித்தது போல இருந்தது. ராஜேஸ்வரி எதுவும் சொல்லாமல் கடுகடுவென்ற முகத்துடன் கணவனின் அருகே அமர்ந்திருக்க, மற்றவர்கள் அவர்கள் அமர்ந்திருப்பதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

ஜோசியர் கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றிப் பார்ப்பது போல இருவரின் ஜாதகத்தையும் பார்த்தார். பின் ஓரக்கண்ணால் வித்யூவைப் பார்க்க, அவனும் கண்ணசைத்தான். இவர்களின் பார்வையை மற்றவர்கள் கவனித்தார்களோ இல்லையோ, பிருத்வி கவனித்துவிட்டு விசித்திரமாகச் சிரித்துக் கொண்டான்.

"கட்டம் சரியில்லை... நேரமும் சரியில்லை இப்போதைக்கு கல்யாணம் பண்ண வேணாம்" என்று ஒரு போடு போட்டார் ஜோசியர். அனைவரும் அதிர்ந்துவிட்டனர்.

"இந்தப் பெயர்ச்சி வந்ததுல மாப்பிள்ளைக்கு நேரம் சரியில்லை. இப்போதைக்கு கல்யாணம் பண்ணாதீங்கோ. மீறி இந்தக் கல்யாணத்தை நடத்தினால் மாப்பிள்ளையும் பொண்ணும் பிரிய வாய்ப்பு இருக்கு. அந்தப் பிரிவு எப்படி வேணாலும் இருக்கலாம், என் வாயால சொல்ல முடியாது... மாப்பிள்ளைக்கு இது கஷ்ட காலம். அதனால் இந்த நேரத்துல கல்யாணம் நடந்தால் மேலும் கஷ்டத்துல போய் முடியும். ஒரு பத்து மாசம் கல்யாணத்தைத் தள்ளி வைங்க..." என்று இடியைத் தூக்கிப் போட, வித்யூவைத் தவிர மற்ற அனைவரும் பயந்து போனார்கள்.

"முன்னாடி பார்த்தப்போ ரெண்டு பேருக்கும் நேரம் நல்லா இருக்கு, பொருத்தமும் நல்லா இருக்குன்னு சொல்லித்தானே தேதி குறிச்சீங்க? இப்போ என்ன மாத்திச் சொல்றீங்க!"

"இப்பவும் சொல்றேன், உங்க ரெண்டு பேருக்கும் பொருத்தம் நல்லா இருக்கும். ஆனா நேரம் தான் சரியில்லை. இந்த நேரத்துல இந்தக் கல்யாணம் வேணாம்னுதான் சொல்றேன்... நான் சொல்ல வேண்டியதைச் சொல்லிட்டேன், அப்புறம் உங்க இஷ்டம். அதை மீறி கல்யாணம் பண்ணினீங்கன்னா ரெண்டு பேரும் சேர்ந்து வாழப் போறது இல்லை" என்று சொல்லிவிட்டு அவர் கிளம்பிவிட, மற்றவர்கள் அனைவரும் குழப்பத்தில் ஆழ்ந்தனர்.
ஆர்யா கூட பிருத்வியைப் பார்க்க, ஏதோ சாதித்தது போல அவனது கண்கள் மின்னின. 'ஒருவேளை இவர் வேலையாக இருக்குமோ!' என யோசித்தாள் ஆர்யா.

"இதை நான் ஒத்துக்க மாட்டேன். நீங்க வேற ஜோசியரைப் பாருங்க! இல்லைன்னா யாரையும் பார்க்க வேணாம். காலண்டர்ல ஒரு நல்ல முகூர்த்த நாளா பார்த்து மேரேஜ் ஃபிக்ஸ் பண்ணுங்க" என ஆத்திரத்துடன் சொன்னாள் பிரணவி.

"அப்படிலாம் பண்ணக் கூடாது மா! இதுல என் பையனோட உயிர் சம்பந்தப்பட்டிருக்கு! உனக்காக அவசரப்பட்டு என் புள்ளையை நான் இழக்க விரும்பல மா" எனப் பார்வதி முடிவாகச் சொல்ல,
"அப்போ இவர் வேணாம், வேற ஜோசியரைப் பாருங்க" என்று பல்லைக் கடித்தாள் பிரணவி.
"பிரணவி! இவர் நம்ம குடும்ப ஜோசியர் மா! இவர் கணிச்சுச் சொன்னதுதான் இதுவரை பலிச்சிருக்கு. ஒரு பத்து மாசம் தானே, பொறுத்துக்கோயேன்" என ராஜேஸ்வரி கெஞ்சினாள்.

"என் கல்யாணம் எப்ப நடக்கணும், எப்படி நடக்கணும்னு நான் தான் முடிவு பண்ணணும்! இடையில இவர் யாரு? எதுக்கு இவர் பேச்சை நான் கேட்கணும்? முடியாது, முன்னாடி குறிச்ச தேதியில கல்யாணம் நடந்தே ஆகணும்..." என்று பிடிவாதமாகக் கூறினாள்.

பார்வதி மறுக்க, இவள் அடம்பிடிக்க என்று அவ்விடமே போர்க்களமாக மாறியது.

"நவி..." என்றான் வித்யூ. பிடிவாதமாகக் கத்திக் கொண்டிருந்தவள் அப்படியே அடங்கிப்போய் அவனைப் பார்த்தாள்.

"நவி! ப்ளீஸ் காம் டவுன்! எனக்கும் அந்த ஜோசியர் சொன்னதுல விருப்பம் இல்லை. ஆனா அவரோட வார்த்தைகளை அலட்சியம் பண்றது சரியில்லைன்னு தோணுது. அவர் சொன்னது போல நாளைக்கு எனக்கு ஏதாவது ஆகிட்டா... உன்னால தாங்கிக்க முடியுமா?"

"மாமா! அப்படிப் பேசாத! உனக்கு எதுவும் ஆகாது!"
"எனக்கு எதுவும் ஆகாதுதான். ஆனா ஜோசியர் தான் சொல்றாரே, எனக்கு நேரம் சரியில்லைன்னு. புரிஞ்சுக்கோ நவி மா! பத்து மாசம் தானே, சட்டுனு போயிடும்... எத்தனை மாசம் கடந்தாலும் நம்ம காதல் மாறிடாது. நம்ம கல்யாணம் நிச்சயம் நடக்கும், ஆனா கொஞ்சம் லேட்டா நடக்கும். அதுவரைக்கும் ஒருத்தரையொருத்தர் நல்லாப் புரிஞ்சுட்டு லவ் பண்ணிட்டு இருக்கலாமே! கல்யாணம் நடந்தாலும் நடக்கலைனாலும் நீதான் என்னோட பொண்டாட்டி! காதலிக்க ஆரம்பிச்ச நாட்கள்ல இருந்து உன்னை அப்படித்தான் பார்க்கிறேன்" என்றவனின் பார்வை ஆர்யாவைத் தழுவ, அவளோ கண்கள் சிவக்க அவனைப் பார்த்திருந்தாள்.

இதே வார்த்தைகளைச் சொல்லித்தானே தன்னை ஏமாற்றினான்? இப்போது இன்னொரு பெண்ணையும் ஏமாற்றுகிறான். அதைப் பார்த்துக் கொண்டு அவளால் அமைதியாக இருக்க முடியவில்லை. அமர்ந்திருந்த இருக்கையை இறுக்கமாகப் பற்றிக் கொண்டு தன்னைச் சமநிலைப்படுத்தினாள்.

வித்யூவின் மயக்கு வார்த்தைகளில் மயங்கிப்போன பிரணவி அடங்கிப் போனாள்.

"சரி மாமா, நீ சொல்றதுக்காக நான் இதுக்குச் சம்மதிக்கிறேன். ஆனா இதுக்கு மேலே கல்யாணத்தைத் தள்ளிப் போட்டா நான் மனுஷியாவே இருக்க மாட்டேன்" என்று விறுவிறுவெனச் சொல்லிவிட்டு அவள் நகர்ந்ததும், அனைவருக்கும் உயிரே வந்தது போல இருந்தது.

'உஃப்' என உதட்டைக் குவித்து மூச்சுவிட்ட வித்யூ, பிருத்வியைப் பார்த்தான்.

"பேபி! வா சாப்பிடப் போலாம்! டைம் ஆச்சு, டாக்டர்கிட்ட போகணும் இல்லையா?" எனச் சத்தமாகக் கூறிக்கொண்டு, நக்கல் புன்னகையோடு வித்யூவைக் கடந்து சென்றான் பிருத்வி! வித்யூவின் அலைபேசி அலறவே, அவனும் வேகமாக வெளியேறினான்.

பிருத்வியும் ஆர்யாவும் உண்டு முடித்து வெளியே வந்தனர். மௌலியிடம், "அப்பா! இன்னைக்குச் செக்கப் இருக்கு, ஆர்யாவைக் கூட்டிட்டுப் போயிட்டு வரேன்" என்றான் பிருத்வி.

"சரிப்பா, பத்திரமா போயிட்டு வாங்க! மருமக ஹெல்த் எப்படி இருக்கு, என்ன சாப்பிடக் கொடுக்கணும், குழந்தை எப்படி இருக்குன்னு எல்லாத்தையும் நல்லா விசாரிச்சுட்டு வா பிருத்வி."
"சரிப்பா," என்றான் சிரிப்புடன். இருவரும் அவரிடம் விடைபெற்று வீட்டிலிருந்து வெளியேறி, ஒரு தெருவைக் கடக்கும்போது, அங்கே வித்யூ அந்த ஜோசியரிடம் பணத்தைக் கொடுப்பதைப் பிருத்வி கண்டுகொண்டான் அவனது காரைக் கண்டதும் அந்த ஜோசியர் மறைந்து கொண்டார்.

"இது உங்க வேலையா பிருத்வி? நீங்க ஜோசியரை விலைக்கு வாங்கி இப்படிச் சொல்லச் சொன்னீங்களா?" எனச் சீற்றத்துடன் கேட்டாள் ஆர்யா.

"இதுல நீ ஹாப்பியா இருக்கணும், அதை விட்டுட்டு ஏன் கோபப்படுற? கல்யாணம் தள்ளிப் போனதுல உனக்குச் சந்தோஷம் தானே, அப்புறம் ஏன் கோபப்படுற?"

"கல்யாணம் நின்னா சந்தோஷம்தான். தள்ளிப் போனதுல கொஞ்சம் நிம்மதியும் கூட! ஆனா இந்தக் கோபம் அதுக்காக இல்லை."

"வேற எதுக்காக?"

"அந்த ராஸ்கல்... உங்க தங்கச்சிகிட்ட எவ்வளவு உருக்கமாப் பேசினான்! என்னையும் இப்படித்தான் பேசி ஏமாத்தினான். இப்போ உங்க தங்கச்சி! இவன் திருந்தவே மாட்டானா?!! இவன்கிட்ட இருந்து உங்க தங்கச்சியைத் தயவுசெய்து காப்பாத்துங்க!"

"டோன்ட் வொர்ரி, இந்தக் கல்யாணம் நடக்காது. நடக்கவும் விட மாட்டேன். எப்படி அவனை வச்சே, அவனையே வச்சு கல்யாணத்தைத் தள்ளிப் போட வச்சேனோ... அடுத்து அவனை வச்சே இந்தக் கல்யாணத்தையும் நிறுத்திடுவேன்" என விசித்திரமாகச் சிரித்துக் கொண்டான்.

"ஏன் கல்யாணத்தைத் தள்ளிப் போட்டான்? எதுக்கு இப்படிச் செஞ்சான்?"

"உன் மேலே இருக்கிற காதல் தான் காரணம்" என்றான் அழுத்தமாக.

"ப்ளீஸ் பிருத்வி! 'காதல்'னு சொல்லி அதைக் கொச்சைப்படுத்தாதீங்க! அது காதலே இல்லை. உண்மையான காதலை நான் ஆதித்யா அண்ணன்கிட்ட பார்த்தேன். அதுதான் காதல். கேவலம் சொத்துக்காக என்னை வப்பாட்டியாக இருக்கச் சொன்னவன்கிட்ட எப்படி காதல் இருக்கும்? என் மேலே அவனுக்கு இருக்கிறது லஸ்ட் தான். காதல் எப்பவோ அழிஞ்சு போச்சு! இனி இதைப் பத்திப் பேசி என்னை டென்ஷன் ஏத்தாதீங்க" என்றாள். அவனும் "சாரி" என்று மன்னிப்புக் கூறினான்.

இருவரும் புகழ்பெற்ற மருத்துவமனைக்குள் நுழைந்தனர். மருத்துவர் ஆர்யாவைப் பரிசோதித்துவிட்டுப் புன்னகையுடன் வந்தார்.

"மதரும் பேபியும் நல்லா இருக்காங்க! பிரஷர் எல்லாம் நார்மலா இருக்கு, இப்படியே மெயின்டெய்ன் பண்ணுங்க... நெக்ஸ்ட் மன்த் வாங்க" என்றார்.

இருவரும் புன்னகையுடன் வெளியே வந்தனர். "என்ன, ரொம்ப ஹாப்பியா இருக்கீங்க போல?" என்றாள் ஆர்யா.

"ஆமாம்."

"ஏன்?"

"போன முறை நீ டிப்ரஷன்ல இருக்கிறதா டாக்டர் சொன்னாங்க, உன்னை நல்லாப் பார்த்துக்கச் சொன்னாங்க! ஆனா இந்த முறை எல்லாம் நார்மலா இருக்குன்னு சொன்னாங்க, அதான் சின்ன ஹாப்பி."

"அதுக்குக் காரணம் இந்தப் பாப்பாவோட வெல்விஷர் (Well-wisher) தான் காரணம்" என்றாள். அவனும் பற்கள் தெரியப் புன்னகைத்தான்.

"நீ ஹாப்பியா இருக்கியா ஆர்யா?"

"ஆமா பிருத்வி! கர்ப்பகாலத்துல ஒரு பொண்ணு தாய் வீட்டுல இருந்தா எப்படி இருக்குமோ, அப்படி ஃபீல் பண்றேன்... உண்மையிலேயே எனக்கு அம்மா இருந்திருந்தா கூட உங்களைப் போலப் பார்த்திருப்பாங்களான்னு தெரியல! ஆனா நீங்க அதுக்கும் மேல... உங்களைக் கல்யாணம் பண்ணிக்கப் போற பொண்ணு கொடுத்து வச்சவள் (Blessed)" என்றாள். அவன் சிரிப்பு முற்றிலுமாக வடிந்து, முகம் இறுக்கமடைந்தது.

அதைக் கண்டவள் தன்னைத்தானே கடிந்து கொண்டாள். "சாரி! நான் தப்பா ஏதாவது சொல்லியிருந்தா என்னை மன்னிச்சிடுங்க" என்று பயந்தபடி மன்னிப்புக் கேட்க, "நோ வொரீஸ்" என்றான். அதன்பின் இருவரும் சகஜமாகப் பேசிக் கொண்டனர்.

ஆதித்யா - வாசுகி திருமணம் முடிவாகியிருந்த நிலையில், தேதி குறித்துப் பத்திரிகை அடித்து, அதைக் கொடுப்பதற்கான வேலைகள் துரிதமாக நடந்து கொண்டிருந்தன.

கோவிலில் வைத்துப் பூஜை செய்த பின், முதல் பத்திரிகையை மௌலி வீட்டிற்கும் மேகன் வீட்டிற்கும் வைக்க வேண்டும் என்று ஆதித்யா தன் குடும்பத்துடன் வந்திருந்தான்.

மேகன் குடும்பமும் மௌலி குடும்பமும் அவர்களை வரவேற்றன. கண்ணன், மேகன், மௌலி மூவரும் நெருங்கிய நண்பர்கள். அவர்களின் நட்பு அடுத்த தலைமுறையிலும் தொடர்ந்தது.

"வா கண்ணா! வாம்மா, வா ஆதி!" என அவர்களை வரவேற்றார் மௌலி. கண்ணனை இருவரும் வரவேற்றனர். பின் நலம் விசாரித்த கையோடு இரு குடும்பங்களும் சேர்ந்தே பத்திரிகையைப் பெற்றுக் கொண்டனர்.

"பொண்ணு யார்? அவங்க குடும்பம் எப்படி? நம்ம வசதிக்குச் சரிசமமாடா?" மேகன் பத்திரிகையைப் பிரித்தபடியே கேட்டார்.

கண்ணன் சிரித்துக் கொண்டே, "நாங்க வசதியெல்லாம் பார்க்கல. பையனுக்குப் பிடிச்சிருக்கு. நல்ல பொண்ணா, குடும்பப் பெண்ணா பார்த்துதான் முடிச்சோம். பொண்ணு ரொம்ப நல்ல பொண்ணுடா! விட மனசில்லை. என்கிட்ட இல்லாத பணமா, சொத்தா? எனக்கு அது தேவையில்லை. குணமான பொண்ணுதான் வேணும், அது அந்தப் பொண்ணுகிட்ட இருக்கு" என்றார். தந்தையைப் பெருமையாகப் பார்த்தான் ஆதித்யா.

"வாசுகின்னா... பிருத்விகிட்ட பி.ஏ-வா (P.A.) வேலை பார்க்கிற பொண்ணா?" என அதிர்ச்சியுடன் கேட்டார் மௌலி.

"ஆமா! அந்தப் பொண்ணுதான் என் மருமகள்!"

"வசதிதான் பார்க்கலன்னு சொன்னே, பொண்ணையுமா பார்க்கல நீ? அந்தப் பொண்ணுக்குக் காது கேட்காதே! குறையோடு இருக்கிற பொண்ணையா பையனுக்குக் கட்டி வைக்கிற?" எனக் கேட்டதுமே ஆதித்யாவிற்கு க் கோபம் சுள்ளென்று வந்தது.

அடக்கிக் கொண்டவன், "அவளுக்குக் காது கேட்கும் அங்கிள்" என்றான் அவளை விட்டுக்கொடுக்காமல்.

"மிஷின் வச்சுத்தானே கேக்குறா?"

"எனக்கு அது பெரிய குறையா தெரியல அங்கிள்."

"காதலுக்குக் கண் இல்லைன்னு சொல்றது உண்மைதானோ!" என மேகன் சிரிக்க,

"காதலுக்கு இரண்டு இதயம் இருந்தா போதும் அங்கிள்! எனக்கு அவளை ரொம்பப் பிடிச்சிருக்கு" என்றான் ஆதித்யா விடாமல்.

மேகனால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
"என்ன கண்ணன் இதெல்லாம்? வசதிதான் இல்லைன்னா, குறையிருக்கிற பொண்ணையா வீட்டு மருமகள் ஆக்கணும்னு நினைக்கிற? உன் பையன் என்ன சொன்னாலும் கேட்கிறதா? நம்ம லெவலுக்குப் பார்க்க வேண்டாமா?" என்று கடிந்து கொண்டார்.

ஏதோ பேச வந்த கண்ணனைத் தடுத்து நிறுத்திய ஆதித்யா, "வசதி இன்னைக்கு இருக்கும், நாளைக்குப் போயிடும். அதேபோல இன்னைக்கு நல்லா இருக்கிறவங்களுக்கு நாளைக்குக் கை, கால் முடக்கம் வரலாம்; விபத்துல கை, காலை இழக்கலாம். எதுவுமே நிரந்தரம் இல்லை. நான் நல்லா இருந்தாலும் சரி, பணம் இல்லாம ரோட்டுல நின்னாலும் சரி, என் வாசுகி என் கூட இருப்பா! நாளைக்கே எனக்கோ ஏதேனும் வியாதியோ விபத்தோ நேர்ந்தாலும் என்னோட வாசுகி என் கூடவே இருப்பா! எங்க காதல் நிலைச்சிருக்கும் அங்கிள்! நீங்க சொல்லலாம்... மனுஷங்க கூட சில நேரம் மனசு மாறலாம்னு, ஆனா எங்க காதல் எங்களை மாத்தாது. கட்டாந்தரையோ, பஞ்சு மெத்தையோ... அவளோட இருந்தா போதும்" என்று நீண்ட விளக்கம் கொடுத்தான்.

அதற்கு மேல் அவர்களால் பேச முடியாமல் அமைதியாகிவிட்டனர். பெரியவர்கள் அவனது காதலை வியப்புடன் பார்த்தனர். பிருத்வி விசில் அடித்துத் தன் நண்பனைக் கட்டிக்கொண்டான்.
வித்யூவிற்கு அவனது ஒவ்வொரு பேச்சும் இதயத்தைக் கூறு போட்டது போல இருந்தது. தன்னால் தன் காதலில் நிலையாக நிற்க முடியவில்லை என்று தோன்றியது. முதல் முறையாக ஆர்யாவை இழந்ததற்காக வருத்தப்பட்டான். அவனது மனசாட்சி அவனைச் சுட்டது; நெருப்பில் நிற்பது போல உணர்ந்தான். நிமிர்ந்து ஆர்யாவை அவனால் பார்க்க முடியவில்லை.

ஆனால், அவளது கூர்மையான பார்வை அவன் மீதுதான் இருந்தது. அவள் பார்வையை உணர்ந்து அவன் அவளைப் பார்க்க... 'நீயும் ஒரு காதலனா?' என நக்கலாகச் சிரித்தவள், அவனைப் பார்த்துக் காரித் துப்பினாள்.

மேற்கொண்டு பேசிவிட்டு, ஆதித்யா வித்யூவை நோக்கி வந்தான்.

"அப்புறம் மச்சான், எப்படி இருக்க?"

"ஊருக்கு வந்ததும் என்னை வந்து பார்க்கத் தோணல உனக்கு? அதுசரி, நீ என்னை என்றைக்காவது ஃபிரண்டா பார்த்திருக்கியா? எனிவே... என்னோட லவ் கம் மேரேஜுக்கு கண்டிப்பா வந்திடு" என்றவன், அவனை அணைத்தபடி, "நான் பேசின பேச்சைக் கேட்டு ஆர்யா சிஸ்டர் உன்னை மனசாரக் காரித் துப்பியிருப்பாங்க! பரவாயில்லை, இனி அவங்களை விட்டுத் தூரமா போயிடு. என் மச்சி இப்பதான் ஹாப்பியா இருக்கான். அவன் சந்தோஷத்தைக் கெடுக்கணும்னு நினைச்சா நான் சும்மா இருக்க மாட்டேன்! பாத்துக்க மச்சி" என மற்றவர்களுக்குக் கேட்காதவாறு ரகசியத் தொனியில் பேசியவன், கடைசி வரியை மட்டும் சத்தமாகக் கூறிவிட்டுத் தன் குடும்பத்துடன் அங்கிருந்து சென்றான்.
 
Top Bottom