புயல் 22
"ஆதித்யா வெட்ஸ் வாசுகி" என வண்ண மலர்களால் தொடுக்கப்பட்டு, அப்பெரும் மண்டபத்திற்கு வெளியே பிரம்மாண்டமான பேனர் வைக்கப்பட்டிருந்தது.
மண்டபம் முழுவதும் ஆட்களால் நிரம்பி வழிந்தது. வி.ஐ.பியிலிருந்து தொழிற்சாலையில் வேலை செய்யும் கடைக்கோடி ஊழியன் வரை அனைவரும் அங்குதான் இருந்தனர். யாரையும் அழைக்காமல் விடவில்லை அவன். அவனுக்காக அத்தனை பேரும் வந்திருந்தனர்.
முன்வரிசையில், மெல்ல எட்டிப்பார்க்கும் தன் வயிற்றின் மேல் கைவைத்து, மேடையில் நடக்கும் எதிலும் கலந்துகொள்ள முடியாத ஏக்கத்தோடு வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தாள் ஆர்யா.
அவளை அங்கிருந்து நகரக் கூடாதென்று அன்புக் கட்டளை போட்டிருந்தான் பிருத்வி! அவளுக்கோ அண்ணனின் கல்யாணத்தில் தங்கையாக ஓடிஓடி வேலை செய்ய வேண்டும் என்று ஆசை. ஆனால், பிருத்வியின் கட்டளைக்கு இணங்கி, அமைதியாக மேடையையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
உடலை வருத்தாமல், மேனியில் ஆடையே இல்லாதது போன்ற மெல்லிய உணர்வைத் தரும் வகையில், அவளுக்கென்றே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட சேலையைத்தான் உடுத்தியிருந்தாள் ஆர்யா! அதுவரை வாசுகிக்குத் துணையாக அவளோடு அறையில் இருந்தவள், வேகமாக வேலை செய்யும் ஆவலோடு மேடையேற முயன்றபோது, ஒரு வலிய கரம் அவளைப் பிடித்து நிறுத்தியது.
"என்ன பிருத்வி?"
"என்ன பண்றீங்க மேடம்?"
"வேலை பார்க்கணும்... அம்மா அங்கே தனியா கஷ்டப்படுறாங்க பாருங்க," என்று மேடையைக் காட்டினாள். அங்கே ஆதித்யாவின் அத்தை, சித்தி, ஒன்றுவிட்ட அக்கா என அனைவரையும் மேடையில் நின்று வேலை ஏவிக் கொண்டிருந்தார்.
"அத்தை ஒன்றும் தனியாகக் கஷ்டப்படவில்லை! அவங்க எல்லாரையும் வேலை ஏவிக்கிட்டுதான் இருக்காங்க."
"நானும் போய் பார்க்கிறேனே!"
"உனக்கு இப்போ வேலை பார்க்கணும், அவ்வளவுதானே!" என்றதும் அவளும் ஆமென்று தலையசைத்தாள்.
"வா," என்று அவள் கையை விடாமல் அழைத்து வந்தவன், முன் சீட்டில் அமர வைத்து, "இங்கே பாரு! இங்கிருந்தே அவங்க செய்யுற வேலையை நல்லாவே பார்க்கலாம்," என்றான்.
அவனை முறைத்தவள், "ஐயோ! வேலை பார்க்கிறதுன்னா... வேலை செய்யுறேன்னு அர்த்தம், விடுங்க!" என்று எழ முயன்றாள். உடனே இருபக்க நாற்காலியின் கைப்பிடியைப் பிடித்து அவளருகே நெருங்கியவன், "இந்த இடத்தை விட்டு நகர்ந்த... அப்புறம் 100 கிளாஸ் ஜூஸ் குடிக்க வச்சு உன்னைக் கொடுமைப்படுத்துவேன், ஜாக்கிரதை!" என்று மிரட்டினான். அவனை அசட்டை செய்தவள், "ஆமா, எப்பவும் செய்யுற கொடுமைதானே... போங்க!" என்று உதட்டைச் சுளித்தாள்.
"ஓ... மேடமிற்குப் பயமெல்லாம் விட்டுப்போச்சா?" என்று எழுந்தவன், "அண்ணா... ஜூஸ்!" என்றான். உடனே, "தெய்வமே!" எனக் கையெடுத்துக் கும்பிட்டவள், "நான் அமைதியா இங்கேயே இருக்கேன்," என்று அவன் வழிக்கு வந்தாள்.
"இருந்தாலும் நீ என்னைச் சீண்டிட்ட, உனக்கு ஒரு பனிஷ்மென்ட் இருக்கு," என்று பெரியவர் கொண்டு வந்த ஜூஸை அவளிடம் நீட்டினான். பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு அதை வாங்கி அவள் குடிக்க, "குட் கேர்ள்," என்று கன்னத்தைத் தட்டிவிட்டு நகர்ந்தான்.
அப்போதுதான் மேகன் மற்றும் மௌலியின் குடும்பத்தினர் திருமணத்திற்கு வந்தனர். அனைவரும் முதல் வரிசையில்தான் அமர்ந்தனர்.
அங்கே ஜூஸைக் கையில் வைத்திருந்த ஆர்யா, அவர்கள் வருவதைக் கண்டதும் மரியாதையின் நிமித்தமாக எழுந்து நின்றாள். ஆனால், அவர்கள் அவளைச் சட்டே செய்யாமல், அவளுக்கு வலது பக்கமாக அமர்ந்துகொண்டனர்.
அழகான பேபி பிங்க் நிறச் சேலையுடுத்தி, அதற்கு ஏற்றாற்போல் உடம்பை உறுத்தாத நகைகளை அணிந்து, லேசாக எட்டிப்பார்க்கும் வயிற்றை மறைத்தபடி எழுந்து நின்றவளைப் பார்வையாலேயே விழுங்கினான் வித்யூ! அவனைக் கண்டதும் ஆர்யா முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.
"ஹாய் மா, எப்படி இருக்க? பிருத்வி பொண்டாட்டிதானே நீ?" என்றபடி ஒரு வயதான பெரியவர் அவளிடம் கேட்க, "ஆமாங்கம்மா! நல்லா இருக்கோம்," என்றாள். அவர் அவள் வயிற்றைப் பார்த்ததும், "மாசமா இருக்கியா?" என அன்பாகக் கேட்டார்.
"ஆமா, ஐந்தாவது மாசம்," என்றாள். "உன் அத்தை உன்னை நல்லா பார்த்துக்கிறாளா?" எனக் கேட்டதும், அவள் திரும்பி ராஜேஸ்வரியைப் பார்த்தாள். அவருக்கும் அவர் கேட்ட கேள்வி காதில் விழுந்திருந்தது.
"அத்தைதானே! அம்மா மாதிரி பார்த்துக்கிறாங்க. எனக்கு அம்மாவே இருந்திருந்தா கூட இந்த அளவுக்குப் பார்த்திருக்க மாட்டாங்க. அவங்க இடத்தை அத்தையே நிரப்பிட்டாங்க," என்று பெருமையாகச் சொன்னவளுக்கு, நினைவுகள் பின்னோக்கிச் சென்றன.
அன்று சாந்தி அக்கா வரவில்லை. கோவிலுக்குப் போவதாகச் சொல்லி விடுமுறை கேட்டிருந்ததால், இவர்களும் கொடுத்திருந்தனர்.
"ஆன்லைனில் ஆர்டர் செய்கிறேன்," என்று அலைபேசியைத் தூக்கிய பிருத்வியைத் தடுத்தவள், "நானே சமைக்கிறேன்! ஹோட்டல் சாப்பாடு வேண்டாம், ப்ளீஸ்," என்றாள்.
"எனக்கு இப்போ மீட்டிங் இருக்கு. எனக்காக நீ சமைக்க வேண்டாம்! உனக்கு என்ன வேணுமோ சொல்லு, நான் செஞ்சு வச்சுட்டுப் போறேன்."
"மீட்டிங் வச்சுட்டு நீங்க சமைக்க வேண்டாம்... நான் செஞ்சு சாப்பிட்டுக்கிறேன், நீங்க மீட்டிங் கிளம்புங்க," என்றாள்.
"நான் போறேன்! ஆனா ஒரு ஆள்தானே இருக்கோம்னு சமைக்கத் தயங்கிட்டுச் சாப்பிடாமல் இருக்கக் கூடாது, புரியுதா?" என்று எச்சரித்துவிட்டுத்தான் சென்றான்.
அவளும் மெல்லக் கீழே இறங்கி வந்து சமையலறைக்குள் நுழைய, அங்கே ஆறுமுகம் சமைத்துக் கொண்டிருந்தார். அவர் சமைத்து முடிக்கட்டும் என்று தோட்டத்திற்கு வந்து உலாவியவளுக்கு, சட்டென மயக்கம் வந்துவிட்டது. அவளே எதிர்பார்க்காத தருணத்தில், கீழே விழப்போனவளைத் தாங்கிப் பிடித்துக்கொண்டார் ராஜேஸ்வரி.
"ஹேய் எந்திரி! என்னாச்சு உனக்கு? ஹேய் எந்திரி..." என்று கன்னத்தைத் தட்டிப் பார்த்தார். அவள் எழவில்லை என்றதும், "ஹேய் சுந்தரி... தண்ணீர் கொண்டு வா!" என்று கத்தினார். அடுத்த இரண்டு நிமிடத்தில் தண்ணீரோடு வந்து நின்றாள் சுந்தரி.
முகத்தில் தண்ணீர் தெளித்ததும் வேகமாக எழுந்து அமர்ந்தாள் ஆர்யா. கர்ப்பகாலத்தில் இதெல்லாம் சகஜம்தானே!
"காலையில் சாப்பிட்டியா?" என்று கேட்டது வேற யாருமல்ல, ராஜேஸ்வரிதான்! மீண்டும் அவள் மயங்கி விழாததுதான் ஆச்சரியம்.
"இல்லை," என்று தலையசைத்தவள், அவரது முறைப்பைப் பெற்றாள். "ஏன் இன்னும் சாப்பிடாமல் இருக்க? சாந்தி உனக்கு இன்னமும் சாப்பாடு கொடுக்கலையா?"
"அக்கா வரலை! சமைக்கலாம்னு போனேன், அங்கே உங்களுக்காக ஆறுமுகம் அண்ணன் சமைச்சுட்டு இருந்தார். அவர் முடிஞ்சதும் சமைக்கலாம்னு வெளியே நடந்தேன், மயக்கம் வந்திடுச்சு," என்று நடந்ததைச் சொன்னாள்.
"உள்ளே வா!" என்றார் கட்டளையாக. அவளும் அவர் பின்னே, தன் கண்களையே நம்ப முடியாமல் நடந்தாள்.
"ஆறுமுகம்!" என்று உரக்க அழைக்க, அவர் வேகமாக வெளியே ஓடிவந்தார்.
"சமைச்சுட்டியா?"
"ஆச்சுங்கம்மா!"
"எடுத்து வை," என்றவர், அவளிடம் "உட்கார்," என்றார் இருக்கையைக் காட்டி. அவரது கட்டளைக்குக் கட்டுப்பட்டு அமர்ந்தாள். ஆறுமுகம் பரிமாற, அவரோ அவளை நிமிர்ந்து பார்த்தார்.
"சாப்பிடு," என்று சொல்லிவிட்டு நகர்ந்து கூடத்தில் அமர்ந்துகொண்டார். அவளால் நம்பவே முடியவில்லை. வயிறு நிறையச் சாப்பிட்டவள் கைகழுவிவிட்டு வந்தாள். இன்னும் முகத்தில் சோர்வு தெரிந்தது; மெல்லத் தடுமாற்றமும் இருக்க, படியில் கால் வைக்க முயன்றபோது லேசாகத் தடுமாறினாள்.
"சுந்தரி, அவளைக் கைதாங்கலாக ரூமுக்குக் கூட்டிட்டுப் போ," என்றதும், "வாங்கம்மா," என்று அழைத்து மேலே ஏறினாள் சுந்தரி. அப்போது உள்ளே பிருத்வி வரவும் சரியாக இருந்தது.
அவனைக் கண்டதும் கூடத்திலிருந்து எழுந்த ராஜேஸ்வரி, "ஆறுமுகம்! கல்யாணம் பண்ணிக்கிட்டு, குழந்தை குட்டின்னு வாழ நினைச்சா மட்டும் போதாது; அவங்களைப் பத்திரமாகப் பார்த்துக்கவும் செய்யணும், புரிஞ்சதா?" என்று ஆறுமுகம் மூலம் பிருத்வியிடம் மறைமுகமாகச் சொன்னார். ஆறுமுகமோ புரியாமல் தலையைச் சொறிந்தார்.
பிருத்வியோ புரிந்து புரியாதது போல, இரண்டு இரண்டு படிகளாக எடுத்து வைத்து மேலே ஏறித் தன் அறையை அடைந்தான். சுந்தரி வெளியே வந்ததும் உள்ளே சென்று நடந்ததைக் கேட்க, ஆர்யா விபரத்தைச் சொன்னாள். உடனே அவன் அவளைத் தீயாக முறைத்தான்.
"சாரி! நீங்க சாப்பிட்டீங்களா? என்ன போன வேகத்திலேயே வந்துட்டீங்க? மீட்டிங் இல்லையா?"
"போஸ்ட்போன் ஆயிடுச்சு! அங்கே சாப்பிட்டேன் நான்..." என்றபடி சாதாரண உடைக்கு மாறினான்.
"நீங்க வேலைக்குக் போகலையா?" என ஆர்வமாகக் கேட்டாள். "இல்லை, இன்னைக்கு லீவ்!" என்றதும் அவளுக்குள் ஒரு குஷி பிறந்தது.
இருவரும் சேர்ந்து படம் பார்த்தனர். இடைவெளி விட்டுப் பேசிச் சிரிப்பது நன்றாக இருந்தது.
பின் மதியம் அவளை அழைத்துக் கொண்டு சமையலறைக்கு வந்தவன், ஆறுமுகத்தை வெளியே அனுப்பிவிட்டு, அவளை அமரச் செய்துவிட்டு இவன் சமைக்கத் தொடங்கினான்.
"உங்களுக்குச் சமைக்கத் தெரியுமா?" என ஆர்வமாகக் கேட்டாள்.
"ம்ம்..." என்றவன் சமையலில் தன் வித்தையைக் காட்டினான். இருவரும் பேசிச் சிரித்தபடி சமையல் செய்துகொண்டிருப்பதை, எதேச்சையாகப் பார்த்த ராஜேஸ்வரி அங்கே ஸ்தம்பித்து நின்றார்.
வருடங்களுக்குப் பிறகு தன் மகனின் சிரிப்பை இப்போதுதான் அவர் பார்க்கிறார். அவன் யாரிடமும் மனசு விட்டுப் பேசும் ஆள் இல்லை.
'அவனுடைய நண்பனைத் தவிர யாரிடமும் சகஜமாகப் பேச மாட்டேங்குறான்... குடும்பத்தோடு இணைய மாட்டேங்குறான்' எனப் பலமுறை மௌலி ஆதங்கப்படும்போது, அன்னையாக உள்ளுக்குள் வேதனை கொண்டாலும் அதை வெளியே காட்டிக் கொள்ளவில்லை. அவன் மீது கோபம்தான், ஆனால் பாசம் இல்லாமல் இல்லை; அதை எப்படிக் காட்டுவது என்று தெரியாமல் மறுக்கிறார். மகனின் சிரிப்பையும், அதற்குப் காரணமானவளையும் ஆதுரமாகப் பார்த்துவிட்டு நகர்ந்தார்.
அன்றிலிருந்தே சாந்தியிடம், 'அவள் சாப்பிட்டாளா?' என்று கேட்பதோடு, உடல் நலத்தையும் விசாரித்துக் கொள்வார். 'இதைச் செஞ்சு கொடு, அதைச் செஞ்சு கொடு' என்று அவர்களுக்குத் தெரியாமல் சொல்லுவார். ஆனாலும், இதைத் தெரிந்து கொண்ட ஆர்யாவிற்குள் ஒரு மெல்லிய புன்னகை அரும்பியது.
'அன்பானவங்க, பாசமானவங்க... ஆனாலும் ஏன் இவ்வளவு கோபமாக இருக்காங்கன்னு புரியலை! பிருத்வி சொன்னது மட்டுமே இதற்குக் காரணமாக இருக்கும்னு தோணலை. வேற ஏதோ இருக்கு,' என்று எண்ணிக் கொண்டாள்.
அந்த நினைவிலிருந்து வெளியே வந்தாள் ஆர்யா. அவர்கள் ராஜேஸ்வரியிடம் பேசிவிட்டுச் செல்ல, இருவரின் பார்வையும் தழுவிக் கொண்டன.
மேடையில் அமர்ந்து மந்திரங்களைச் சொல்லிக் கொண்டிருந்தான் ஆதித்யா! வேகமாக வந்த விஷ்ணு அவன் காதில் ஏதோ சொல்ல, அதே வேகத்தில் மணமேடையை விட்டு இறங்கியவன் மணமகள் அறைக்குள் செல்ல, ஆர்யாவும் பின்தொடர்ந்தாள். கல்யாண மண்டபமே பரபரப்பானது.
"என்னாச்சு அக்கா? என்ன சுகி?" எனக் கேட்டபடி அவர்களை நெருங்கினான்.
"இந்த ஹியரிங் மெஷின் எதுக்குன்னு கழட்டச் சொன்னேன்டா! அதுக்கு உன் பொண்டாட்டி ஆர்ப்பாட்டம் பண்றா... இருக்கட்டும்னு சொல்றா! நைட்டு போட்டுக்கோ, இப்போ வேணாம்னு சொன்னா கேட்க மாட்டேங்குறா!"
"நீங்க வெளியே போங்க, நான் பார்த்துக்கிறேன்," என்றதும் அவர்கள் வெளியே செல்ல, மூவர் மட்டுமே அந்த அறையில் இருந்தனர்.
ஹியரிங் மெஷினில் கை வைக்கச் செல்ல, "நீயும் இதைக் கழட்டப் போறியா தயா?" எனப் பாவமாகக் கேட்டாள் வாசுகி. "ச்ச... அதை ஒழுங்கா மாட்டிவிடப் போறேன்! பாரு, நீ அடம்பிடிச்சதுல அது கழன்று இருக்கு," என்று அதைச் சரிசெய்தான்.
"உனக்கு நான் இதைப் போட்டிருக்கிறதுனால அவமானமா இருக்கா தயா?!"
"அப்படி நினைச்சேன்னு வையேன்! யாருடி அப்படிச் சொன்னது? நான் சொன்னேனா?"
"இது..."
"தெரியும்... உன் அப்பா உன் கூடவே இருக்கிறது போலவும், உன்னை ஆசிர்வதிக்கிறது போலவும் இருக்கும், அதானே?" என்றதும் ஆமென்று தலையாட்டியவள், வேகமாக அவனைக் கட்டிப்பிடித்து அவனது நெஞ்சில் சாய்ந்து கொண்டாள்.
"என்னடி, என் மேலே உனக்கு நம்பிக்கை இல்லையா? நான் உன்னை அப்படியே ஏத்துக்கிட்டேன்னு சொன்னேன் தானே... அப்புறம் ஏன் இந்த அழுகை?!"
"அதை உடனே கழட்டச் சொன்னதும் என்ன பண்றதுன்னு தெரியலை தயா!"
"ம்ம்... இனி இப்படி எந்தச் சூழ்நிலை வந்தாலும், உன் விருப்பத்திலேயும் முடிவிலேயும் உறுதியா இருக்கணும், புரியுதா!" என முகத்தைத் தாங்கிச் சொன்னவன், அவளது நெற்றியில் முத்தமிட்டு, "ஐ லவ் யூ," என்றான்.
"ஐ லவ் யூ டூ தயா," என்று அவன் கன்னத்தில் முத்தமிட்டாள்.
"சரி சரி, நான் மந்திரத்தைப் பாதியிலேயே நிறுத்திட்டு வந்துட்டேன். நான் போய் கன்டினியூ பண்றேன், சீக்கிரமா வந்திடு!" என்று தன் வேட்டியைப் பிடித்துக்கொண்டு ஓடினான்.
கண்களைத் துடைத்துக்கொண்டு மெல்லச் சிரித்தாள் வாசுகி.
"நீ ரொம்பக் கொடுத்து வச்சவ வாசு! உனக்காக, உன் விருப்பத்துக்காக எல்லாமே செய்யுற புருஷன் கிடைச்சிருக்கார்," என்றாள் ஆர்யா ஆதுரமாக.
"உங்களுக்கும் தானே அண்ணி?!" என்றதும், ஆர்யா அவளைக் கண்கள் சுருங்கப் பார்த்தாள்.
"என்ன பார்க்கிறீங்க? பிருத்வி அண்ணனைப் பத்தித்தான் சொல்றேன். நீங்க நிஜமான கணவன் மனைவி இல்லைதான்... அவரோட தங்கச்சி வாழ்க்கையைக் காப்பாற்ற நீங்க நடிக்க வந்தீங்கதான்... ஆனா ஏன் இந்த வாழ்க்கையை நிஜமாத் தொடரக் கூடாது?" என வினவ, ஆர்யா அதிர்ந்து அவளைப் பார்த்தாள்.
"எனக்குத் தெரிஞ்சு பிருத்வி அண்ணா தனக்குன்னு ஒரு வாழ்க்கை அமைச்சுக்கப் போறது இல்லை. வீட்லயும் அவங்க அப்பாவைத் தவிர அக்கறைப்பட யாரும் இல்லை. உங்க எதிர்காலத்துக்கு அவர் உத்தரவாதம் கொடுத்தது போல, நீங்க ஏன் அவருக்கு ஒரு வாழ்க்கை கொடுக்கக் கூடாது?! அவரை விட்டு நீங்க போகக் கூடாது. நீங்க, பாப்பா, அண்ணா எல்லாரும் ஒரு குடும்பமா சந்தோஷமா வாழணும்ங்கிறது என்னோட ஆசை; தயாவோட ஆசையும் அதான்... நான் உங்களைக் கம்பல் பண்ணலை, ஆனா ரெண்டு பேரும் ஒருத்தருக்கொருத்தர் ஆறுதலா இருக்கணும்னு ஆசைப்படுறோம்!" என்று வாசுகி சொல்லி முடிக்கவும், பெண்ணை அழைக்க ஆட்கள் வந்துவிட்டனர்.
வாசுகியை அழைத்துச் செல்ல, இவளோ பலத்த யோசனையுடன் பின்னே சென்றாள்.
அப்போது அவள் கைப்பிடித்து இழுக்கப்பட, திடுக்கிட்டு யாரென்று பார்த்தாள்.
"ஹேய் ரிலாக்ஸ்! நான் தான். என்ன யோசனை மேடம்?"
"ஒன்றுமில்லை பிருத்வி!"
"சரி வா! நீதானே நாத்தனார் முடிச்சுப் போடணும்? உன்னை ஆதித்யா மேடைக்குக் கூப்பிடுறான், வா," என்று அழைத்துப்போனான். அவன் இழுத்த இழுப்புக்குச் சென்றாலும், ஆர்யாவின் மண்டைக்குள் வாசுகி சொன்ன வார்த்தைகளே ஓடிக்கொண்டிருந்தன.
இருவரும் ஆதித்யா-வாசுகிக்கு பின்னால் வந்து நின்றனர்.
மேடையில் நின்றவாறே நிமிர்ந்து பார்த்தவளுக்கு வித்யூவின் முகம் சற்று மங்கலாகத் தெரிய, அருகே பக்கவாட்டில் நிற்கும் பிருத்வியைப் பார்த்தாள். சிரித்த முகமாக அவளைக் கண்டு அவன் புருவமுயர்த்த, "ஒன்றுமில்லை" என்று தலையசைத்தாள்.
நல்ல நேரத்தில் ஆதித்யா வாசுகியின் கழுத்தில் இரண்டு முடிச்சிட, மூன்றாவது முடிச்சாக ஆர்யா முடிச்சிட்டாள். அக்கினியை வலம் வந்தும், மெட்டி அணிவித்தும் இதர சடங்குகள் முடிய, பெரியவர்கள் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினார்கள். பின் வந்தவர்கள் பரிசைத் தந்து, புகைப்படம் எடுத்துவிட்டுச் சாப்பிட்டுக் கிளம்பினர். தொழிற்சாலையின் ஊழியர்கள் அனைவரும் ஒன்றாகப் பணம் சேர்த்து ஒரே பெரிய பரிசாக வாங்கிக் கொடுத்தனர். பிருத்வி-ஆர்யா, ஆதித்யா-வாசுகி சேர்ந்து நின்று புகைப்படம் எடுத்தனர்.
பின் பிருத்வி-ஆர்யா ஜோடியை மட்டும் தனியாக நிற்க வைத்துப் புகைப்படம் எடுக்க முயன்றனர். முதலில் தயங்கினாலும், பின் ஆர்யாவின் தோளில் கைவைத்து அவன் புகைப்படம் எடுக்க, அதைக் கண்ட வித்யூவின் வயிறு எரிந்தது.
அனைவரும் சாப்பிட்டுக் கிளம்பியதும், மணமக்கள் சாப்பிட்டுவிட்டு மீண்டும் வளைத்து வளைத்துப் புகைப்படம் எடுத்தனர். பின் நல்ல நேரத்தில் மண்டபத்திலிருந்து பெண் வீட்டிற்குச் சென்றுவிட்டு, பாலும் பழமும் சாப்பிட்டனர். பின்னர் மாப்பிள்ளை வீட்டிற்கு வந்து, வலது காலை எடுத்து வைத்து உள்ளே வந்தனர். வழக்கம்போல விளக்கேற்றிப் பூஜை செய்து, மீண்டும் பாலும் பழமும் கொடுத்தனர். இரவு உணவை அங்கே முடித்து, முதலிரவு அறையைத் தயார் செய்து, மணமக்களை அறைக்குள் அனுப்பி வைத்த பின்புதான் பிருத்வியும் ஆர்யாவும் அங்கிருந்து கிளம்பினார்கள்.
அறைக்குள் பயந்து பயந்து வந்த வாசுகியை நெருங்கி வந்த ஆதித்யா, அவன் கையிலிருந்த பாலை வாங்கி மேஜை மீது வைத்துவிட்டு, அவளை மெத்தையில் அமர வைத்தான்...
"பேசப் போறோமா?" என அவன் செய்கையைக் கண்டு கேட்டாள் வாசுகி.
"உனக்கு என்ன பண்ணணும்?"
"எனக்கு என்ன?"
"அப்போ எனக்கு மட்டும்தான் பீலிங் இருக்கா? மேடமிற்கு இல்லையா?"
"அது..." என்று வெட்கப்பட்டுச் சிவந்து போனாள்.
"சுகி..." எனக் கிறங்கிய குரலில் அவன் அழைக்க, உடல் சிலிர்த்துப் போனவள், நிமிராமல்
"ம்ம்..." என்றாள்.
"இப்போ நீ எனக்கு வேணும்! ஆனா நான் உனக்கு இப்போ வேணுமா? இல்லை... கொஞ்ச நாள் போகட்டுமா? உன் விருப்பம்தான் எனக்கு முக்கியம்... என்ன சொல்றே?" என மிகக் கனிவாகக் கேட்டான்.
அவனது அன்பிலேயே விழுந்தவள், "எனக்கும் நீங்க வேணும்... இப்போவே!" என்றாள்.
"அப்போ..." என நெருங்கியவன், அவள் மேனி வலிக்காமல் மிக மென்மையாக ஆடைகளைக் களைய, அவனது மெல்லிய தீண்டலிலேயே துடித்துப் போனாள். காதிலிருந்த ஹியரிங் மெஷினையும் கழற்றினான்.
"ஏன் அதைக் கழட்டுறீங்க?" எனப் பதறிக்கேட்க, "இந்த நேரத்துல உங்க அப்பா நம்ம கூட இருக்கணுமா என்ன?" எனக் கேட்கவும், அவனது புஜத்தில் அடித்தாள்.
"இதைக் கழட்டிட்டா நீங்க பேசுறது எப்படி கேட்கும்?"
"நாம என்ன பேசவாடி போறோம்?!" அதற்கு மேல் அவனும் பேசவில்லை, அவளையும் பேச விடவில்லை... முத்தங்களும் மெல்லிய முனகல் சத்தங்களும் மட்டுமே அந்த அறையை நிரப்பின!
குளித்துவிட்டு இரவு உடைக்கு மாறிய ஆர்யா, நீள் இருக்கையில் (Couch) அமர்ந்து தன் காலைப் பிடித்துக் கொண்டிருப்பதை, தலையைத் துவட்டியவாறே குளியலறையிலிருந்து வெளியே வந்த பிருத்வி பார்த்துவிட்டான்.
அவன் மெல்ல அந்த இருக்கையில் அவளருகே அமர்ந்தான். சற்றும் எதிர்பாராதவள் விழிக்க, வேகமாக அவளது கால்களைத் தன் மடியில் தூக்கி வைத்தான். ஆர்யா சட்டெனக் காலை இழுத்துக் கொள்ள, அவனுக்கு முகம் சுருங்கிவிட்டது.
"சாரி! தப்பா எதுவும் கை வச்சுட்டேனா?"
"ஐயோ பிருத்வி! அதுக்காகக் கால் எடுக்கலை... உங்க மடியில போய் என் காலை வச்சுட்டு..."
"அன்னைக்கே சொன்னது போல என்னை உன் அம்மாவா பாரு! உனக்குக் கால் வலி இருக்கிறது நல்லாவே தெரியுது. காலைப் பிடிச்சுட்டு அமர்ந்திருக்கிறதைப் பார்த்தேன். சோ, உனக்குக் கால் பிடிச்சு விடலாம்னு நினைச்சேன், வேற எந்த நோக்கமும் இல்லை," என்று விளக்கினான்.
"ப்ச்! இத்தனை மாசமா இங்கே உங்க ரூம்ல ஒண்ணாத்தானே இருக்கோம், நான் என்ன பயந்து பயந்தா இருக்கேன்? நீங்க உங்களை எப்படிப் பார்க்கச் சொல்றீங்களோ அப்படித்தான் பார்க்கிறேன். உங்க மடியில எப்படி கால் வைக்கிறதுன்னுதான் எடுத்தேன். உடனே உங்களைத் தப்பா எடுத்துக்கிட்டேன்னு அர்த்தமில்லை. நீங்களே அமுக்கி விடுங்க," என்று தன் பாதத்தை அவன் மடியில் மீண்டும் எடுத்து வைத்துவிட்டு வாகாகச் சாய்ந்தாள்.
அவனும் புன்னகையுடன் பிடித்து விட்டான். "ஆக்சுவலா நீங்கதான் நிறைய அலைஞ்சீங்க! என்னை ஒரு வேலையும் பார்க்க விடாமல் உட்காரவே வச்சுட்டீங்க. இப்போ எனக்குக் கால் வலிக்குதுன்னு அமுக்கி விடுறீங்க! உங்களுக்குத்தங்க கால் வலிக்கும்... நான் வேணா பிடித்து விடவா?"
"ப்ரெக்னன்ட்டா இருக்கிற பொண்ணை எப்படிம்மா வேலை வாங்குறது?"
"அப்பாடா! கால் அமுக்குறது பெரிய வேலையா? வைங்க," என்று தன் தொடையைத் தட்டினாள். அவனுக்கோ சங்கடமாக இருந்தது.
"நான் ஒன்றும் தப்பான நோக்கத்துல தொட மாட்டேன்னு நம்பிக்கை இருந்தால் வைங்க," என்றாள். அவன் வார்த்தையையே அவனிடம் திருப்பி விட, சட்டெனத் தன் கால்களை அவள் மடியில் வைத்தான். அவனுக்குக் கால் வலி இருக்கத்தான் செய்தது.
"நான் ஒன்று கேட்கட்டுமா?"
"என்னம்மா?"
"உங்க தங்கச்சி கல்யாணம்தான் தள்ளி போயிடுச்சே... இன்னமும் நான் இங்கே இருக்கணுமா?" என இழுத்தபடி கேட்டாள்...
"கல்யாணம் தள்ளிப் போயிருக்கு மொத்தமா நிறுத்தலையே!" என்று சற்று கடுமையாகப் பதில் தந்தான். அவனுக்கு உண்டான கடுமைக்குக் காரணம் சடங்குகள் முடிந்தது அல்ல; அவள் 'போகட்டுமா?' என்று கேட்டதுதான்.
அவளுக்கோ சிறு ஏமாற்றம். 'என்னோடவே இரு' என்று அவன் சொல்லவில்லையே என்ற ஏமாற்றம் அது.
"கல்யாணமும் நின்னதும் நாம பேசின படி நான் போயிட்டா நீங்க இன்னொரு லைஃப் அமைச்சுப்பீங்களா?" என எச்சில் விழுங்கியபடி கேட்டாள் ஆர்யா.
"கடவுள் எல்லாருக்கும் ஒரு வாழ்க்கைதானே கொடுத்திருக்கான். இரண்டாவது ஆப்ஷன் வச்சிருக்கானா என்ன?"
"புரியலை..."
"என்னோட வாழ்க்கையில இனி யாரையும் அனுமதிக்கிறதா இல்லை... இப்படியே தனியா வாழ்க்கையை ஓட்டிட வேண்டியதுதான்! எந்தப் பெண்ணோட வாழ்க்கையும் என்னால வீணாகக் கூடாது. நான் இப்படியே இருந்திடுறது நல்லது," என்றவன், "ஆனா எனக்கு ஒரு ஆசை இருக்கு," என்றான்.
"என்ன அது?"
"ஒரு குழந்தைக்கு அப்பாவா இருக்கணும்," என்றதும் ஆர்யாவின் கண்களும் கலங்கிப் போயின.
"சப்போஸ் நீ இன்னொரு வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்து வாழப் போற ஐடியால இருந்தா... என்கிட்ட இந்தக் குழந்தையைக் கொடுத்துட்டுப் போறியா?" எனக் குழந்தை போல் கெஞ்சிக் கேட்டவனின் மேல் அவளுக்கு அத்தனை கோபம் வந்தது.
"தர மாட்டேன்!" என்றவள், அவனது காலைத் தட்டிவிட்டு விறுவிறுவென எழுந்தாள். "நான் வேணாமாம்... ஆனா குழந்தை மட்டும் வேணுமா?" எனத் தனக்குள் முணுமுணுத்துக் கொண்டவளுக்குப் பின்னேதான் அதிர்ச்சி வந்தது. 'நானா இப்படி முணுமுணுத்தேன்?' என்று.
தன் முணுமுணுப்பு அவன் காதில் விழுந்துவிட்டதோ என்று அதிர்ந்து அவனைப் பார்க்க, அவள் சொன்ன 'தர மாட்டேன்' என்ற பதிலால் வலியுடன் தலைகுனிந்து அமர்ந்திருந்தான் பிருத்வி.
அவனுக்குத் தன் முணுமுணுப்பு கேட்கவில்லை என்றதும் ஆசுவாசம் கொண்டு மெத்தையில் சென்று படுத்துக் கொண்டாள். ஆனால் என்ன நினைத்தாளோ, மீண்டும் எழுந்து, "நானும் உங்களைப் போல ஒரு வாழ்க்கைதான்... இன்னொரு வாழ்க்கை எல்லாம் இல்லை. எனக்கு என் குழந்தை போதும்!" என்று சிறுபிள்ளை போலக் கோபித்துக் கொண்டு படுத்துக் கொண்டாள். அவளது செய்கையைக் கண்டு பிருத்வியும் தன் முக பாவத்தை மாற்றி, புன்னகையுடன் படுத்துக் கொண்டான்.
இருவருக்கும் இப்போது ஒருவரை ஒருவர் தேவைப்படுகிறது... உடல் ரீதியாக அல்ல, மன ரீதியாக!
தனிமையில் வாடிய அவனுக்குத் துணையாய் மனம் விட்டுப் பேச ஓர் ஆள் கிடைத்திருக்கிறாள். வீட்டிற்கு வர வெறுப்பவன், இன்று மிகுந்த ஆசையோடு வருகிறான். தன் உணர்வுகளுக்குத் தணிக்கை போடாமல் அத்தனையையும் கொட்டும் ஒரு துணை நண்பராக இருப்பார்கள், இல்லையெனில் கணவன் மனைவியாக இருப்பார்கள்.
இங்கோ, கணவன் மனைவி என்ற பெயரில் நண்பர்களாகத் தொடங்கிய பயணத்தில், தங்கள் மனதில் ஒரு துளிக் காதல் துளிர்விட்டதை அறியாமலேயே, ஒருவரை ஒருவர் பிரிந்த பின்னான வாழ்க்கையைப் பற்றி யோசித்துக் கொண்டிருக்கின்றனர். இருவரும் இனி ஒரே பாதையில்தான் பயணிக்கப் போகிறார்கள் என்பதை அறியாமலேயே உறங்கிப் போனார்கள்!