குழல் யாசிக்கும் புயலே - 23

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Vishakini

Moderator
Staff member
Nov 7, 2025
1,634
6,876
113
புயல் 23

திருமணம் முடிந்த கையோடு ஆதித்யா வாசுகியை அழைத்துக்கொண்டு ஹனிமூன் என்று வெளிநாட்டிற்குப் பறந்துவிட்டான்.

பிருத்விதான் இப்போது ஆதித்யாவின் வேலைகளையும் சேர்த்துப் பார்க்கிறான்.
அவனுக்குத் துணையாக வேலைகளைப் பகிர்ந்து கொள்கிறாள் ஆர்யா. எப்போதும் மேற்பார்வையாக மட்டுமே வேலை பார்ப்பவள், அவர்கள் தேனிலவு சென்ற முதல் இரண்டு நாளிலுமே வேலைப்பளு காரணமாகக் கண்கள் எரிச்சலோடு மிகச் சோர்வாக வந்த பிருத்வியைப் பார்க்க இவளுக்குக் கஷ்டமாக இருந்தது. மூன்றாம் நாள் ஆதித்யாவின் வேலைகளைக் கேட்டு அவனது வேலைப்பளுவில் பங்கு கொண்டாள். முதலில் எச்சரித்தாலும், பின் வேலைகளைப் பிரித்துக் கொண்டு பார்க்கச் சொன்னான்.
இவ்வாறு பதினைந்து நாள்களும் இருவரும் சேர்ந்து வேலைகளைப் பகிர்ந்து கொண்டு பார்த்துக் கொண்டனர்.

பின் தேனிலவு சென்றவர்களும் வந்துவிட, சிறைப் பறவைகளாக இருந்த இருவர் இப்போது சிறகடித்துப் பறந்தனர்.

ஆதித்யாவும் வாசுகியும் இப்போது தொழிற்சாலையில் பொறுப்பேற்றுக்கொள்ள, ஒரு வாரம் ஆர்யா, பிருத்விக்கு விடுப்பு தந்திருந்தனர்.

பிருத்வி ஆர்யாவிடம் ஊட்டி செல்லப்போவதாகக் கூறி, "நீயும் வர்றியா?" என்று தயக்கத்தோடு கேட்டான். அவளோ சிறிதும் தயக்கமில்லாமல் "வருகிறேன்" என்று குதூகலமாகச் சொன்னாள்.

மருத்துவரிடம் ஆலோசனை கேட்டுவிட்டு ஊட்டிக்குச் செல்ல ஏற்பாடு செய்து கிளம்பியும் விட்டனர்.

தந்தையிடம் சொல்லிவிட்டு, சாந்தி அக்காவிற்கு விடுமுறை தந்துவிட்டுச் சென்றனர். அவர்கள் கைகோர்த்துச் செல்வதைக் கோபமும் ஏக்கமுமாகப் பார்த்துக் கொண்டிருந்தான் வித்யூ!

ஊட்டியிலே அழகான சிறு கிராமத்தில் சமதள இடத்தில் கட்டப்பட்டிருந்த அச்சிறு வீட்டின் முன் கார் நின்றது.

விழிகளை விரித்து அதிசயத்தைப் பார்ப்பது போல அந்த இடத்தைப் பார்த்தாள். அழகான வீடு; அதன் பின்னே சலசலத்து ஓடும் நீர்; சுற்றிப் பச்சைப்பசையென விரிந்த புல்வெளியும், சற்று தொலைவில் பனிமூட்டங்கள் கொண்ட மலை முகடுகளும் என அவ்விடம் மிக அழகாக இருந்தது.

"இது நம்மளோட வீடு ஆர்யா! நான் எனக்காகப் பார்த்துப் பார்த்துக்கட்டின குடில். பெரிய அளவில் கட்டணும்னு எண்ணமில்லை! சின்னதா, இந்த இடத்தை நோகடிக்காதபடி கட்டியிருக்கேன். நான் உன்னை இங்க கூட்டிட்டு வருவேன்னு எதிர்பார்க்கலை! உனக்கு இந்த வீடு பிடிச்சிருக்கா? இல்லை கம்ஃபர்டபிளா இல்லைன்னா சொல்லு, நாம ஹோட்டல்ல ரூம் புக் பண்ணலாம்" என்றான்.

"என்ன பிருத்வி? ஏதோ நான் பெரிய இடத்துப் பொண்ணு போல பேசுறீங்க! நீங்க அடிக்கடி வர்ற குடில்லதான் நான் பிறந்து வளர்ந்தேன்... ஏதோ கொஞ்ச நாள் சொகுசா ஏசி ரூம்ல இருக்கேன்றதுக்காகப் பழசை மறந்திடுவேனா என்ன?! சொல்ல முடியாது, எனக்கு இந்தக்குடிசைகூட நிரந்தரமாகலாம் யார் கண்டா?" என்று தோளைக் குலுக்க, அவளை வெறித்தவன் ஒன்றும் சொல்லாமல் கதவைத் திறந்து கொண்டு உள்ளே சென்றான்.
ஊர்த் தலைவரிடம் அங்கு வரப்போகும் விஷயத்தை அலைபேசியில் சொன்னதுமே, அவரிடம் உள்ள சாவியை வைத்துத் திறந்து ஆட்களை வைத்துச் சுத்தம் செய்து வைத்திருந்தார்.

அழகான சின்ன அறை, ஒரு ஹால், பின்னாடி கிச்சன். பின் கதவைத் திறந்து எட்டி வைத்தாலே சலசலவென ஓடும் நீர்... அழகாய் இருந்தது அந்த வீடு! யாருடைய தொந்தரவும் இல்லாமல் நிம்மதியாக, இதமாக இருந்தது.

அவள் வெளியே வேடிக்கை பார்த்து நிற்க, குளித்துவிட்டு வந்தவன், "உனக்கு இந்த இடம் பிடிச்சிருக்கா ஆர்யா?" என்று கேட்க... திரும்பியவள், "காதலிக்கிறதுக்கு முன்னாடி எப்படி ஒரு நிம்மதியான வாழ்க்கை வாழ்ந்தேனோ, அந்த வாழ்க்கையை நியாபகப்படுத்துது பிருத்வி" என்றாள்.

அவனுக்கு அவளது வலி புரிந்தாலும், ஆறுதல் என்று சொல்லி மேலும் அவளை ரணமாக்க விரும்பாமல் அவளைத் திசை திருப்ப, "மேடம்! உங்களை இங்க சோக கீதம் வாசிக்கவா கூட்டிட்டு வந்தேன்! இது வேறொரு உலகம்னு நினைச்சுக்கோ ஆர்யா! இந்த உலகத்துல ஒன்லி ஹாப்பி மட்டும்தான் இருக்கணும். இங்க ஸ்ட்ரிக்ட் ரூல்ஸ்... அதான்" என்றதுமே அவள் பளிச்சென புன்னகைக்க, அதுதான் வேண்டும் என்பது போல அவனும் முறுவலித்தான்.

"மேடம் போய் ரெஃப்ரெஷ் ஆயிட்டு வாங்க! நான் சாப்பிட என்ன செய்யலாம்னு பார்க்கிறேன்" என்று உள்ளே சென்றவனைப் பார்த்தவளுக்கு, தான் செய்த தவறிலிருந்து தன்னை ரட்சிக்க வந்தவன் போலத் தெரிந்தான்.

முதலில் அவனைத் தவறாக, தன் சுயநலத்துக்காகத் தன்னை அழைத்து வந்திருக்கிறான் என்று எண்ணிக் கொண்டிருந்தாள்.

ஆனால், இந்த இரண்டு மாதத்தில் அவன் மீதான பார்வையும் எண்ணமும் மாறிப்போயிருந்தது. இந்த அவசியமற்ற, பெயரற்ற உறவு ஒன்று போதும் என்ற எண்ணம் அவ்வப்போது மனதில் தோன்றாமல் இல்லை. அது சரியா, தவறா என்று தெரியவில்லை... காலம் போன போக்கில் போய்க்கொண்டிருக்கிறாள்.

அவள் குளித்துவிட்டு வந்து அமர, சமையலறையில் இருவர் மட்டுமே அமர்ந்து சாப்பிடக்கூடிய சிறு உணவு மேஜையில் அவன் கிண்டி வைத்த கிச்சடியை உண்டு, வழக்கம் போலவே அவள் மெத்தையிலும் இவன் சோபாவிலும் உறங்கிப்போயிருந்தனர்.
இரவில் குளிர் தேகத்தை ஊடுருவி ஊசியாய் இறங்க, அவளுக்காகக் கொண்டு வந்த பெரிய ஜாக்கெட்டைப் போட்டுக் கொள்ளக் கொடுத்தான். தானும் ஒன்றை அணிந்துகொண்டு, அந்த இரவின் அழகை ரசித்துப் பேசியபடி அமர்ந்திருந்தனர். அடுத்த காலையில் சுற்றிப் பார்க்கச் சென்றனர்.

அங்கு வந்த ஏழு நாட்களும் பிருத்வி ரசித்த இடங்களுக்கெல்லாம் அவளை அழைத்துச் சென்றான். அவள் ஆசைப்பட்டதையெல்லாம் வாங்கிக் கொடுத்தான். அனைத்தையும் மறந்துவிட்டு வேறு உலகில் வசிப்பது போல இருவரும் இருந்தனர்.

இங்கோ வித்யூவோ பைத்தியம் பிடிக்காத குறையாக இருந்தான்... ஆர்யா பிருத்வியின் கைப்பிடித்துச் செல்வதைக் கண்டவனுக்கு உடம்பெல்லாம் திகுதிகுவென எரிந்தது. ஒவ்வொரு இரவும் அவர்கள் இருவரும் கட்டிப்பிடிப்பது போல, முத்தம் கொடுத்துக் கொள்வது போல, தேகம் பரிமாறிக் கொள்வது போலக் கனவு கண்டு தூக்கம் கெட்டுத் திரிந்தான்...

அவனால் ஆர்யாவை மறக்க முடியவில்லை. அவளைக் கடந்து செல்ல முடியவில்லை. இப்போதுதான் கூடுதலாகக் காதலிக்கிறான். அவளைப் பிருத்வியிடம் இழக்க விருப்பமில்லை. அதேநேரம், உண்மையைச் சொல்லி இந்தச் சொத்தையும் இழக்க மனமில்லை. அவளைக் காதலித்தாலும், அவளைத் திருமணம் செய்து கொள்ளக் கூடாதென்ற நிலையிலிருந்து மாறாமலே இருக்கிறான்.

இவ்வாறு ஒவ்வொரு நாளும் நெருப்பின் மேல் நிற்பது போலக் கடந்தான். அவர்கள் என்ன செய்கிறார்கள், எப்படித் தெரிந்து கொள்வது என்ற ரீதியில் தன்னிலை மறந்து திரிந்தான்.
இதற்கிடையில் பிரணவியின் தோழிகளெல்லாம் அவர்களது காதலர்களுடன் ஊர் சுற்றி வந்த கதையோடு, கட்டில் வரை சென்று வந்ததையும் பேசிச் சிரித்தனர். அவர்கள் பேசிக்கொள்வதெல்லாம் பதினெட்டு வயதிற்கு மேற்பட்ட பேச்சுகளாக இருக்க, பிரணவிக்கும் வித்யூவுடன் இவ்வாறு இருக்க வேண்டும் என்ற ஆசை! அவனிடம் திருமணத்திற்கு முன் தன்னை இழக்கக்கூடத் தயார் என்ற நிலையில் அவனைப் பைத்தியமாக் காதலிக்கிறாள் இவள். பாவம், வித்யூவின் மனதில் இருப்பதைத் தெரிந்து கொள்ளாது அவன் மீது வெறித்தனமான காதலைக் கொண்டிருக்கிறாள்.
வேலை முடித்து வந்ததுமே குளித்துவிட்டு உடை மாற்றி வந்தவள், வேகமாக வித்யூவின் அறைக்குள் நுழைந்தாள். அவனோ ஆர்யாவை எண்ணிக்கொண்டு பால்கனியில் நின்றிருந்தான்.

அவனைப் பின்னிருந்து அணைத்துக் கொண்டாள் பிரணவி! எக்கி அவன் கன்னத்தில் முத்தம் வைத்தாள். எந்த எதிர்வினையும் காட்டாது நின்றான்.

"மாமா! வெளிய போலாமா? நடுச்சாமத்துலதான் வீட்டுக்கு வரணும், வாங்க எங்கயாவது போலாம்" என்று கழுத்தில் முகம் புதைத்துச் சிணுங்கினாள்.

அவளது கைகளைப் பிரித்துவிட்டுச் சற்று தள்ளி நின்றவன், "ப்ச் நவி! எனக்கு விருப்பமில்லை, என்னை விட்டுடு! நான் இப்போ தனியா இருக்கணும்னு ஆசைப்படுறேன். ப்ளீஸ் லீவ் மீ அலோன்" என்றான்.

"மாமா, வெளிய போனா எல்லாம் சரியாயிடும்... உங்களுக்கும் எனக்கும் எங்கேஜ்மென்ட் ஆகிடுச்சு, இனி நீங்க அலோனா இருக்கணும்னு அவசியமில்லை. என்கிட்ட உங்க ஃபீலிங்ஸ ஷேர் பண்ணுங்க... நீங்க எப்படி இருந்தாலும் நான் எல்லாத்தையும் அக்செப்ட் பண்ணிக்கத் தயார். வாங்க மாமா போலாம்" என்று அவனை இழுக்க, சட்டெனக் கைகளை உதறியவன், "உனக்கு ஒரு தடவை சொன்னா புரியாதா? எனக்கு இப்போ தனியாதான் இருக்கணும். எனக்கு இப்போ உன்னோட எங்கேயும் வரத் தோணலை நவி, தயவுசெய்து இங்கிருந்து போடி!" என்று கத்தியிருந்தான்.

அவ்வளவுதான்! அவனது நிராகரிப்பை அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. கண்களில் நீருடன் கோபமாகக் கீழே இறங்கியவள், அத்தனை பொருட்களையும் போட்டு உடைத்தாள். சத்தம் கேட்டு அனைவரும் வெளியே வந்தனர்.

"என்ன பிரணவி? என்னாச்சு, ஏன் இப்படி எல்லாப் பொருளையும் போட்டு உடைச்சுட்டு இருக்க?" என ராஜேஸ்வரி வந்து கேட்டார்.

"எனக்கு என்னாச்சா? பைத்தியம் பிடிச்சிருக்கு, அதான் எல்லாத்தையும் போட்டு உடைக்கிறேன்... போதுமா?" என்று மீண்டும் போட்டு உடைக்க, "என்ன பேசுற பிரணவி? ஏன் இப்படி பிஹேவ் பண்ற?" என்று அவளைத் தடுக்க நினைத்தும் பயனில்லை.

"பைத்தியம் எப்படி பிஹேவ் பண்ணுமோ அப்படித்தான் பண்றேன்."

"இப்போ என்ன நடந்துச்சுன்னு நீ கோவமாக எல்லாப் பொருளையும் போட்டு உடைக்கிற? யாரு என்ன சொன்னா உன்னை? என்ன பிரச்சனை உனக்கு?"

"உங்க மருமகன் தான் பிரச்சனை! நான் வெளிய கூப்பிட்டதுக்கு அவன் வரமாட்டேன்னு சொல்லிட்டான். என்னால என் கோபத்தைக் கண்ட்ரோல் பண்ண முடியலை... ஏன் அவன் என் கூட வெளிய வரமாட்டேன்னு சொல்லிட்டான்? அவனுக்கு என் மேல இன்ட்ரெஸ்ட் இல்லை, என் மேல காதல் இல்லை... லீவ் மீ அலோன்னு சொல்லிட்டான். எப்படி அந்த வார்த்தையை அவன் சொல்லலாம்?" என்று மேலும் ஒரு பொருளை உடைக்க... அனுவோடு இருந்த வினையா வித்யூவிடம் இங்கு நடப்பதைச் சொல்ல, அவன் விறுவிறுவென வந்துவிட்டான். மேகனும் பார்வதியும்கூட வந்து மருமகளின் செயலைக் கண்டு பயந்துபோனார்கள்.

"வித்யூ! என் மருமகள் கூப்பிட்டா போக வேண்டியதுதானே! அதைத் தவிர உனக்கு வேற என்ன இங்க வேலை?" எனக் கேட்டு அவனை அவமானப்படுத்தியிருந்தார் மேகன்.

"அப்பா! எனக்கு இங்க எந்த விருப்பமும் இல்லை, தலைவலிக்குது, இன்னைக்குப் போக வேணாம்னு சொல்லக்கூட எனக்கு உரிமையில்லையா?? உங்க மருமகள் சொல்றதைக் கேட்கணுமா? என்ன நியாயம்ப்பா இது?" என்று குதித்தான்.

"ஆமா கேட்கணும், நான் சொல்றதை நீ கேட்கணும், கேட்டுத்தான் ஆகணும். நான் சொல்ற எதுக்கும் நீ மறுப்புச் சொல்லக் கூடாது" என வெறிபிடித்தவள் போலக் கத்தினாள் பிரணவி. அவனே ஒரு கணம் ஆடிப் போனான்.

"இப்போ என்னோட நீ வர்றியா, இல்லை என்னை நானே காயப்படுத்திக்கவா?" என்றவள், கீழே உடைந்த கண்ணாடித் துண்டை எடுத்து கையைக் கிழிக்கச் சென்றாள்.

"ஐயோ! பிரணவி அப்படி பண்ணாத! ப்ளீஸ்! வித்யூ உன்னோட வருவான். கையைக் கிழிச்சுக்காதடி, அவன் உன்னோட வருவான்டி. ப்ளீஸ் பாப்பா!" ராஜேஸ்வரி கண்ணீருடன் கெஞ்சியவர், "வித்யூ, ப்ளீஸ் அவளோட போ! ப்ளீஸ் வித்யூ!" எனக் கண்ணீரோடு கையெடுத்துக் கும்பிட்டுக் கேட்டார்.

"நா... நான் அவளோட போறேன் அத்தை! போ... போறேன்" என்று வேகமாக உள்ளே சென்றான்.

சட்டென அவளது முகம் மாறியது. "ஆறுமுகம், இதெல்லாம் கிளீன் பண்ணு" என்று உத்தரவிட்டு, அறைக்குள் சென்று உடை மாற்றி வந்தாள்.

பார்வதிக்கோ மகனின் வாழ்க்கையை நினைத்துக் கவலையாக இருந்தது. அவனை நினைத்துக் கவலைப்படும் ஜீவன் அவர் ஒருவர் மட்டுமே!

இருவரும் கிளம்பிச் சென்றதும் தான் வீடு அமைதியாக மாறியது. ராஜேஸ்வரி தலையில் கை வைத்து அமர்ந்துவிட, அருகே அமர்ந்தார் மேகன்.

"ராஜி! இது பெரிய விஷயம் இல்லை! ஃபீல் பண்ணாத, எல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம் சரியாகிடும்டா" என்று ஆறுதல் சொன்னார்.

"பயமா இருக்கு அண்ணா! இவளோட ஒவ்வொரு நடவடிக்கையைப் பார்க்கும் போதும்... இந்தச் சின்ன விஷயத்துக்குக்கூடவா இப்படி அமர்க்களம் பண்ணணும்? இவ கேரக்டர் மாறிக்கிட்டே வருது அண்ணா! வித்யூ மேல பைத்தியமா இருக்கா! அவனோட சின்ன ரிஜெக்ஷனைக்கூட ஏத்துக்க மாட்டேங்கிறா... மேரேஜுக்கு அப்புறம் என்ன நடக்கும்னு பயமா இருக்கு."

"அதெல்லாம் வித்யூ பார்த்துப்பான். நீ ஃபீல் பண்ணாத ராஜி" என்று சமாதானம் செய்ய, பார்வதி கணவனை நினைத்துச் சலிப்பாகத் தலையை அசைத்தார். அவருக்கு மகனின் வாழ்க்கையை நினைத்துக் கவலை. 'இந்த ராட்சசியையா கட்டி வைக்க வேண்டும்?' என்ற எண்ணம்தான் அவருக்கு.

"ராஜி, சொல்றேன்னு தப்பா நினைக்காத! பிரணவிய நல்ல சைக்கியாட்ரிஸ்ட்கிட்ட கூட்டிட்டுப் போகலாம்" என்றதுமே, "அண்ணி!" கத்தியிருந்தார் ராஜேஸ்வரி.

"என் பொண்ணைப் பைத்தியம்னு சொல்ல வர்றீங்களா அப்போ?"

"ஐயோ இல்லை ராஜி! இப்படி ரொம்ப அக்ரஸிவா பிஹேவ் பண்றா! நாளைப் பின்ன என் பையன் சின்னதா ஏதாவது ஒரு விஷயத்துக்கு 'நோ' சொன்னாலும் இப்படித்தானே நடந்துப்பா! என் பிள்ளையோட வாழ்க்கையும் இதுல அடங்கியிருக்கு. உன் பொண்ணைக் கட்டி வைக்கிறது அவனும் சந்தோஷமா இருக்கணும்னுதான். உன் பொண்ணு மட்டுமே வாழறது வாழ்க்கை இல்லை...! என் பிள்ளைக்கும் விருப்பு வெறுப்பு இருக்கு, அதெல்லாம் இல்லாம ஜடமா இருக்கணுமா என் பிள்ளை? விருப்பமே இல்லாம பயந்து போய் என் பிள்ளை போயிருக்கான். இது நீடிச்சா கல்யாணமே வேணாம்னு சொல்லிட்டுப் போயிடுவேன்" என்று தனது ஆத்திரத்தைக் கொட்டிவிட்டார்.

"ஓ! கல்யாணம் வேணாம்னு சொல்லிடுவீங்களா? அவ்வளவுதான்... ஆத்தாளும் மகனும் வீட்டை விட்டுப் போயிடுங்க, சொத்துல உங்களுக்கு ஒரு பைசாகூட கிடைக்காது, போங்க!" என்றார் மேகன்.

"என்னங்க, சொத்தைக் காட்டியே மிரட்டுவீங்களா நீங்க? உங்க சொத்து வேணாம், போக எங்களுக்கு அவ்வளவு நேரமாகாது! என் பிள்ளையோட வாழ்க்கையை விட எங்களுக்கு சொத்து பெரிசில்லை" எனக் கிட்டத்தட்ட கத்தியே விட்டார் பார்வதி.

"ஏய்!!" என மேகன் எகிறிக்கொண்டு வர,

"அண்ணா! கொஞ்சம் அமைதியா இருங்க! அண்ணி சொல்றது சரிதான், இதுல வித்யூ வாழ்க்கையும் சம்பந்தப்பட்டிருக்கு! இரண்டு பேரும் சேர்ந்து வாழ்றதுதான் வாழ்க்கை. என் பொண்ணு மட்டுமே வாழ்றது வாழ்க்கை இல்லை! அண்ணி, நான் பிரணவிகிட்ட பேசுறேன். அவளை நான் மாத்த முயற்சி செய்றேன் அண்ணி! கல்யாணத்தை நிறுத்தணும்னு அவ கேட்கும்படி பேசிடாதீங்க... நான் பார்த்துக்கிறேன் அண்ணி" என்று கூறி ராஜேஸ்வரி உள்ளே சென்றுவிட்டார். மனைவியை முறைத்துவிட்டு மேகனும் சென்றுவிட்டார். பாவம், பார்வதிக்கு மகனின் வாழ்க்கையை நினைத்துக் கவலையாக இருந்தது.

இங்கோ அவள் சென்ற இடத்துக்கெல்லாம் அவனையும் கைப்பாவை போல அழைத்துச் சென்றாள். அவனும் முகத்தில் எந்த உணர்வையும் காட்டாது பொம்மை போல உடன் சென்றான்.

இறுதியாக அந்தப் பப்பில் அவனோடு ஆடிக் கழித்து, அவனைக் குடிக்க வைத்துத் தள்ளாடியபடியே காரில் அமர்த்தினாள். ஆனால் காரை எடுக்கவில்லை... வித்யூவையே பார்த்திருந்தாள்.

"மாமா!! நீ ஹாப்பியா இருந்தியா?"

"ரொம்ப ஹாப்பியா இருந்தேன்" எனக் குடிபோதையில் கத்தியிருந்தான்.

"என்னை உனக்கு பிடிக்குமா மாமா?" எனக் கேட்டாள். நிமிர்ந்து அவளைப் பார்த்தான்... அங்கே பிரணவிக்குப் பதிலாக ஆர்யாவே தெரிந்தாள்.

"பொண்டாட்டி..." என்றிருந்தான்.

"பொண்டாட்டியா?" எனக் கேட்டவளுக்கு உச்சியிலிருந்து பாதம் வரை ஜிவ்வென்று இருந்தது.

"நான் உனக்கு பொண்டாட்டியா மாமா?" என ஆசையாகக் கேட்டாள். அவளது பிடரியை ஒரு கையால் பிடித்துத் தன் பக்கம் இழுத்து,

"ஆமா!! நீ எனக்கு பொண்டாட்டி... எனக்கு மட்டும்தான் பொண்டாட்டி! உன்னை வேற யாருக்கும் விட்டுக் கொடுக்க மாட்டேன்" என்றவன் அவளிதழைக் கவ்விக்கொண்டான்.
மதுவின் வாடை அடித்தாலும் அதைப் பொறுத்துக்கொண்டு இவளும் முத்தமிட ஆரம்பித்தாள். அவனது கைகள் அவளுடலில் அத்துமீறத் தூண்ட ஆரம்பித்தது. ஆனாலும் அவள் தடுக்கவில்லை... அவளுக்கு இணங்க ஆரம்பித்தாள். இதழிலிருந்து இறங்கிக் கழுத்தில் இடறி, அதில் புதைந்து குட்டிக்குட்டி முத்தம் வைக்கத் துவண்டு போனாள்! கையில்லாத ஸ்லீவ்லெஸ் டாப் தான் அணிந்திருந்தாள், ஒரு பக்க கையை கீழே இறக்கிவிட்டுக் கழுத்தின் கீழே இறங்கினான். நெஞ்சில் முத்தம் வைத்து அவன் அத்துமீற, "மாமா, கெஸ்ட் ஹவுஸ் போலாமா?" எனக் கேட்க, முத்தம் வைத்தவன் "ம்ம்" என்றபடியே போதையில் மயங்கி அவள் நெஞ்சில் விழுந்தான்.

அவளும் ஆசையாகக் கெஸ்ட் ஹவுஸ் செல்ல விரும்பிய நேரத்தில், அதற்குள் ராஜேஸ்வரி அழைக்க, அதைக் கண்டதும் சலித்துக் கொண்டு அழைப்பை ஏற்றாள். வீட்டிற்கு வரக் கட்டளையிட்டிருந்தார். வேறு வழியில்லாமல் அவனைச் சீட்டில் அமர வைத்துச் சீட் பெல்ட் அணிவித்து, தனது ஆடையைச் சரிசெய்தவள், அவன் இதழில் முத்தம் வைத்துவிட்டுப் காரை எடுத்தாள். நேரத்திற்கு வீட்டுக்கு வந்துவிட்டாள். போதையில் இருந்தவனை ருத்விக்கின் அறையில் படுக்க வைத்து முத்தமிட்டுவிட்டு வந்தாள்.

அதே நேரம் இங்கோ, புல்வெளியில் ஆர்யாவின் மடியில் பிருத்வி படுத்து விண்வெளியைப் பார்த்திருந்தான். அவளுக்குள் அன்னையாக மாறி தலைகோதினாள் ஆர்யா.

ஊரெல்லாம் சுற்றிவிட்டு இருவரும் அந்தப் புல் தரையில் காலை நீட்டிப் பேசிக் கொண்டிருந்தனர்.

ரம்மியமான அந்த ஏகாந்த வேளையை இருவரும் சுகித்தனர்.

"நான் ஒன்னு கேட்கட்டுமா?" எனப் பீடிகை போட்டாள்.

"எல்லாருக்கும் பிடிக்கிற உங்களை, ஏன் உங்க குடும்பத்துக்கு மட்டும் பிடிக்கலை! ஏன் உங்களை வெறுக்கிறாங்க?! நீங்க அன்னைக்குச் சொன்னது மட்டுமே காரணமா இருக்காது பிருத்வி! வேற ஏதோ இருக்கு? என்ன காரணம்?"

"சாரி ஆர்யா! என்னால இப்போ சொல்ல முடியாது... இந்த மொமெண்ட்டை முழுசா என்ஜாய் பண்ணனும்னு நினைக்கிறேன். ப்ளீஸ், என்னை தப்பா எடுத்துக்காதே!" என்று கெஞ்சிக் கேட்க, அவளும் சரியென்றாள்.

பின் பேச்சை மாற்றும் விதமாக, "உனக்கு என்ன குழந்தை வேணும் ஆர்யா?" என ஆர்வமாகக் கேட்டான்.

"எந்தக் குழந்தையா இருந்தாலும் ஓகேதான் பிருத்வி! பெண் குழந்தையா இருந்தா தைரியமா எல்லாத்தையும் ஃபேஸ் பண்ணக் கத்துக் கொடுப்பேன். பையனா இருந்தா பெண்கள் கிட்ட எப்படி நடந்துக்கணும்னு சொல்லிக் கொடுத்து வளர்ப்பேன்! எந்தச் சூழ்நிலை வந்தாலும் எதிர்கொள்ளும் தைரியத்தை என் குழந்தைக்குச் சொல்லிக் கொடுப்பேன்..." என்று ஆசையாக வயிற்றைத் தடவியபடி கூறினாள். அவளை விட்டு கண்களை விலக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் பிருத்வி.

"என்ன பார்க்கிறீங்க பிருத்வி?" அந்தப் பார்வையில் என்ன இருக்கிறதென்று அவளால் உணர முடியவில்லை.

"அம்மான்ற உறவு அவ்வளவு ஸ்பெஷல் இல்ல! எத்தனை உறவுகள் வந்தாலும் அம்மா அன்புக்கு ஈடில்லை... எனக்கு எங்க அம்மான்னா ரொம்பப் பிடிக்கும். என் மேல கொள்ளை பாசம் வச்சிருந்தாங்க, எனக்கு ஒண்ணுன்னா துடிச்சுப் போயிடுவாங்க! மூத்த பிள்ளைன்னு ரொம்ப கேர், செல்லம்னு அப்படித்தான் வளர்த்தாங்க என்னை. ஒரு கட்டத்துல என்னோட விதி அவங்க பாசத்தை இழக்கிற சூழ்நிலை... அதுல மனித சதியும் இருக்கு! எனக்கும் என் அம்மாவுக்கும் நடுவுல ஒரு பிளவு வந்துடுச்சு! அந்தப் பிளவு குறையுமா, நீடிக்குமா? தெரியாது. ஆனா எனக்கு அவங்களோட இருக்கணும், நான் கட்டுன வீட்டைக்காட்டணும், அவங்க மடியில படுத்துக் கதை பேசணும்னு இன்னும் நிறைய இருக்கு. அதெல்லாம் எனக்குள்ளேயே புதையப்போகுமே தவிர ஒருநாளும் நிறைவேறாது ஆர்யா!" ஏக்கத்துடன் குரல் தழுதழுக்கக் கூறினான்.

"உங்களுக்கும் உங்க அம்மாவுக்கும் இடையே இருக்கிற பிளவை அவங்ககிட்ட பேசி குறைக்கலாமே! மனசு விட்டுப் பேசி சரி பண்ண நினைக்கலாமே! ஏன் தள்ளி நின்னு அவங்க அன்புக்கு ஏங்கணும்? உங்களுக்கு இல்லாத உரிமையா சொல்லுங்க! அம்மாக்கிட்ட பேசுறதுல என்ன இருக்கு?"

"தள்ளி நிற்கிறது நான் இல்லை ஆர்யா, அவங்கதான். நான் நெருங்கினா விலகிப் போனாங்க! இப்போ அவங்க சந்தோஷத்துக்காக நான் விலகி நிற்கிறேன்..."

"ஒரு நாள் நிலைமை மாறும் பிருத்வி! நீங்க ஆசைப்பட்ட எல்லாமே நடக்கும்!" என்றவள் கொஞ்சம் தயக்கத்தோடு, "பிருத்வி" என்று அழைத்தாள்.

"ம்ம்..." என்றவன் கண்களில் நீர் துளியை உள்ளிழுத்துக் கொள்ள, அவளைப் பாராமல் பதில் சொன்னான்.

"என் மடியில படுத்துக்கோங்க! இப்போ என்னால இந்த ஒரு ஆசையை நிறைவேத்த முடியும்" என்றாள்...

விழிகள் பிதுங்கும் அளவிற்கு அவளை ஆச்சரியமாகப் பார்த்து விழித்துக் கொண்டிருந்தான் பிருத்வி!

"ஏன், நீங்க மட்டும் உங்களை ஒரு அம்மாவா பார்க்கச் சொல்லும்போது நான் சொல்லக்கூடாதா? உங்களுக்கு நான் அம்மாவா இருக்கக்கூடாதா? வந்து மடியில படுத்துக்கோங்க" என்றாள்.

மேலும் கண்கள் கலங்க, நீரை உள்ளிழுத்துக் கொண்டவன் தயக்கமின்றி அவள் மடியில் படுத்துக்கொண்டான். அவளது விரல்களோ அவனது தலையைக் கோதின!
கண்களை மூடி மெல்லிய புன்னகையுடன் படுத்திருந்தான். அதே புன்னகை அவள் உதட்டிலும் பிரதிபலித்தது. சட்டென அவள் வயிற்றில் குழந்தை அசைவதை உணர்ந்தாள்.

"குழந்தை அசையுது" என்று ஆச்சரியத்துடன் வயிற்றில் கை வைத்துச் சொன்னாள்.
வெறும் தலையை மட்டும் தூக்கி "என்ன?" என்பது போலப் பார்க்க,

"உள்ளே குழந்தை அசையுது பிருத்வி" என்றாள்.

'எப்படித் தெரிந்து கொள்வது' என்று வயிற்றையும் அவளையும் பார்த்தான். அவளோ கூச்சம் கொள்ளாமல் அவனது கையைத் தன் வயிற்றில் வைத்தாள். அவனும் உள்ளிருக்கும் சிசுவின் அசைவை உணர்ந்தான். தேகம் சிலிர்த்தது. இருவரும் புன்னகையுடன் ஒருவரை ஒருவர் தழுவிக் கொண்டனர். அவளை நெஞ்சில் தாங்கிக் கொண்டான். அந்த அழகான தருணத்தைக் கண்டு நட்சத்திரங்கள் கண்களைச் சிமிட்டிப் புகைப்படம் எடுத்துக் கொண்டன.
 

Author: Vishakini
Article Title: குழல் யாசிக்கும் புயலே - 23
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Gowri Karthikeyan

Well-known member
May 5, 2026
1,290
384
83
Chennai
ரொம்ப கஷ்டம் தான் டா வித்யு இவ கூட குடும்பம் நடத்தறது 🤦🤦🤦🤦
எதே guest house போலாமா வா 😳😳😳😳😳😳
சரியான கேடி நீ.....எல்லாம் ராஜி கொடுக்கற செல்லம்🤦🤦🤦🤦