குழல் யாசிக்கும் புயலே - 24

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Vishakini

Moderator
Staff member
Nov 7, 2025
1,634
6,876
113


புயல் 24

ஊட்டி சென்று வந்து மூன்று மாதங்கள் ஓடி விட்டன, ஆர்யாவிற்கு இது எட்டாவது மாதம் தொடங்கியது. அதில் அவளது வயிறு நன்றாகத் தெரிந்திருந்தது. வயிற்றின் மேல் கை வைத்து அவள் ஆடி அசைந்து வருவதைக் காதலோடு பார்த்து ரசிப்பான் பிருத்வி.

தங்கையைக் காப்பாற்ற எண்ணி அழைத்து வந்தவனின் மனதில் என்றோ புகுந்துவிட்டாள் ஆர்யாங்கா! ஆனால் அவளிடம் காதலைச் சொல்ல முடியாமல் தத்தளிக்கிறான்.

நெஞ்சில் புதிதாகத் தோன்றிய காதலை அவனால் தான் என்ன செய்ய முடியும்? ஆனாலும் அவளிடம் காதலைச் சொல்லி அவளையும் குழந்தையையும் தன்னோடு வைத்துக் கொள்வதெல்லாம் நடக்குமா? அவனது நிலையை எண்ணித் தனக்குள் சிரித்துக் கொண்டவன், அதற்கெல்லாம் ஆசைப்படக் கூடாதென்று தன் மனதிற்குள் கடிவாளம் போட்டுக் கொண்டான். இருந்தாலும், அவளைக் கண்டாலே அவன் போட்டுக் கொண்ட கடிவாளம் சிறு ஆட்டம் கண்டது. அவளால் மட்டுமல்ல... அவள் வயிற்றில் வளரும் குழந்தையும் அதற்கு ஒரு காரணம்!

குழந்தையின் அசைவை உணர்ந்ததிலிருந்து அவன் இவ்வாறுதான் இருக்கிறான். அவளோடு இருக்கும் நேரமோ பேசும் நேரமோ குழந்தை அசைவதை உணர்ந்தாலே அவனிடம் சொல்லிவிடுவாள். அவனும் உரிமையாக அவள் வயிற்றில் கை வைத்து உணர்வான். அவள் கொடுத்த அந்த அனுமதி, அவனது கடிவாளமிட்ட நெஞ்சை ஆட்டிப்படைத்தது.

மாலையில் அவளே அவனது கையைப் பிடித்து அந்தப் புல்வெளியில் சுற்றி வருவதும், வெளியே கடைக்குச் சென்று சாப்பிடும் போது பகிர்ந்து உண்பதும், படம் பார்க்கும்போது உரிமையாக அவன் தோளில் சாய்ந்து பார்ப்பதும் உறங்குவதும், அவனுக்கு மடி தந்து தலை கோதி விடுவதுமாக அவர்களுக்குள் உரிமைகளைப் பகிர்ந்து கொண்டனர்.

இருவரும் நட்பு ரீதியாகக் கொண்ட உரிமை என வெளிப்படையாக எண்ணிக் கொண்டாலும், அகத்தில் காதலோடுதான் இந்த உரிமை அளிக்கப்பட்டிருக்கிறது என்பது அவர்கள் வாய்மொழியாகப் பகிரும் வரையில் இருவருக்குமே தெரியப்போவதில்லை.

அவன் மீது அவளுக்கும், அவள் மீது அவனுக்கும் இருப்பது தூய காதல் மட்டும்தான்!
மொத்த உறவாக நானே இருப்பதாகச் சொல்லி, காதலிக்க வைத்து, திருமணம் போல ஏதோ நாடகம் அரங்கேற்றி, வயிற்றில் பிள்ளையைக் கொடுத்துவிட்டு, மனைவி என்கிற உரிமையை அளிக்காது அவளது காதலைக் கொச்சை செய்து தவிக்க விட்டுச் சென்றான் வித்யூ!

அவ்வாறு காதலில் அடிவாங்கிய ஆர்யாவின் மனது மீண்டும் காதல் கொண்டதை நினைத்து, முதலில் தன்னைத் தானே அசிங்கமாக நினைத்துக் கொண்டாள். ஆனால் போகப் போக பிருத்வியின் தூய அன்பால் அவள் மீண்டும் காதலில் விழுந்தாள்.
அவளால் அவளது மனதைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அவன் செய்யும் சிறுசிறு செயல்களில் கூட முழுமையான அன்பைக் கண்டு வியந்து போகிறாள். யாரோ ஒருவரின் குழந்தை என்று நினைக்காமல், தன் குழந்தை என்று அவன் காட்டும் அக்கறையில் அவளுக்குள் போட்டுக் கொண்ட கட்டுப்பாடெல்லாம் தகர்ந்து போயின. எத்தனை கட்டுப்பாடுகள் போட்டாலும், அவை உடைந்து அவன் பால் காதலில் விழத்தான் செய்கிறாள்.

ஆனால் அவனிடம் இதைப் பகிரத்தான் பயம்! எங்கே தன்னைத் தவறாக நினைத்துக் கொள்வானோ, வித்யூ சொன்னது போல 'பணத்தைப் பார்த்துதான் காதல் வந்ததா?' எனக் கேட்டு விடுவானோ என்ற பயத்தில் காதலை மறைத்து வைத்திருக்கிறாள். ஆனால், தன் செயல்களால் காட்டிக்கொண்டுதான் இருக்கிறாள். ஆனாலும் அவனுக்கு அது புரிந்ததா என்றுதான் தெரியவில்லை.

அவனுக்குப் பிடித்த உணவைச் சாந்தி அக்கா மூலம் கேட்டுச் செய்வது, அவன் கேட்கும்போதெல்லாம் தன் மனதை வெளிப்படுத்துவது போலப் பாடுவது, அவன் மடியில் சாய்ந்தால் அவனை ரசித்தபடி தலைக்கோதுவது, குழந்தையிடம் கொஞ்சிப் பேசும்போது அவனை ஒரு குழந்தையைப் போல ரசிப்பது என அவன் எதிர்பார்க்கும் தாயன்பை அருகில் இருந்து அவனுக்குத் தருகிறாள்.

மௌலி முதலில் ஆர்யங்காவை நினைத்துப் பயந்தாலும், இப்போது அவள் மீது அதீத நம்பிக்கை வைத்திருக்கிறார். மகனுக்காக அவள் ஒவ்வொன்றையும் செய்வதிலும், அவளுடன் இருக்கும் போது மகனின் முகத்தில் மிளிரும் புன்னகையும் அவருக்கு அவனது சிறு வயது ஞாபகத்தைக் கொண்டு வந்தன. ராஜேஸ்வரியிடம் முன்பெல்லாம் புலம்பியவர், இப்போது பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் சொல்கிறார். அதை கேட்டபின் ராஜேஸ்வரியின் முகத்திலும் புன்னகை வந்து செல்லும். ஆனால் வெளியே காட்டிக்கொள்ள மாட்டார்.

எத்தனை கோபங்கள் இருந்தாலும் மகனின் வாழ்க்கை ஏதோ ஒரு விதத்தில் சீராகச் செல்வதை நினைத்து அவருக்கும் நிம்மதிதான். ஆர்யாவை மருமகளாக ஏற்காவிட்டாலும், தாயில்லாத பெண் கர்ப்பமாக இருக்கிறாள் என்ற கரிசனத்தோடு உண்டான உணர்வு, கொஞ்சம்கொஞ்சமாக அவள் மீது அன்பாக மாறியிருந்தது. வெளிப்படையாகக் காட்டாவிட்டாலும், மறைமுகமாக அன்பைக் காட்டிக்கொண்டுதான் இருக்கிறார்.

அன்றும் கூட அனுவுடன் ஆர்யா அமர்ந்து பேசிக்கொண்டிருந்த நேரம், அனு ராஜேஸ்வரியின் கைப்பக்குவத்தைப் பெருமையாகச் சொல்லிக் கொண்டிருந்தாள்.

"அதுவும் பெரியம்மா பண்ற பிரியாணிக்கு சான்ஸே இல்லை..." என்றாள்.

"உங்க பெரியம்மா எனக்காக பிரியாணி செஞ்சு தருவாங்களா?" எனக் கேட்டது ராஜேஸ்வரியின் காதில் நன்றாகவே விழுந்தது.

"கேளுங்க, செஞ்சு கொடுப்பாங்க!" என்றாள் அனு.

"பயமா இருக்கு! நான் அம்மா கையால சாப்பிட்டதே இல்லை, எப்பவும் பாட்டி சமையல்தான். அதுவும் அவ்வளவு நல்லா இருக்காது. பிரியாணியெல்லாம் வருஷத்துல ஒரு தடவைதான் சாப்பிடுவேன். நான் கேட்டா பிருத்வி செஞ்சு கொடுப்பார். ஆனா அத்தை கையால சாப்பிடணும்னு ஆசை," என்று ஒரு பெருமூச்சுடன் சொல்லியிருந்தாள் ஆர்யா.

மறுநாளே ராஜேஸ்வரி என்ன நினைத்தாரோ, அவரே ஆறுமுகத்தின் உதவியோடு கிச்சனில் நின்று பிரியாணி சமைத்தார். எல்லாருக்கும் ஆச்சரியம்தான்! பிரணவி கூட அவர் அருகே வந்து, "என்னம்மா நீங்க சமைக்கிறீங்க?" என்று கேட்டாள்.

அவரோ, "எனக்கு என் கையால உனக்கு பிரியாணி செஞ்சு தரணும்னு ஆசை," என்றிட, தாயைக் கட்டி அணைத்து முத்தமிட்டாள் பிரணவி. ஆனால் உண்மையாகவே அவர் ஆர்யாவிற்காகத்தான் சமைத்தார். கர்ப்ப காலத்தில் ஆசைப்பட்டுக் கேட்டதைச் செய்ய வேண்டும் என்று சமைத்தார்.

அவர் சமைத்து முடித்ததும், மகனுக்கும் மருமகளுக்கும் தனியாக எடுத்து வைத்துவிட்டு, ஆறுமுகத்திடம் கொடுத்துப் பரிமாறச் சொல்ல, அனைவரும் அவரைப் புகழ்ந்தபடி சாப்பிட்டனர்.

அன்று சாந்தி உடல்நலக் குறைவால் விடுமுறை எடுத்திருக்க, மெல்லமாக இவள் கீழே இறங்கி வந்தாள். அனைவரும் சாப்பிட்டு முடித்திருந்தனர். அனு மட்டும் ராஜேஸ்வரியின் கட்டளைக்காக ஆர்யாவிற்காகக் காத்திருந்தாள்.

"அண்ணி வாங்க சாப்பிட!" என்று அழைத்து அமர வைத்து அவளே பரிமாறினாள்.

"அண்ணி! எங்க பெரியம்மா கையால பிரியாணி சாப்பிடணும்னு ஆசைப்பட்டீங்களே, இன்னைக்கே நிறைவேறிருச்சு பார்த்தீங்களா? கோயின்சிடென்ஸ்னு நினைக்கிறேன்..." என்றாள்.

ஆனால் ஆர்யாவிற்கு இது எதிர்பாராமல் நடந்த விஷயமாகத் தெரியவில்லை. தனக்காகவே செய்தது போலத்தான் தோன்றியது. அதற்கு ஏற்றது போல அவரும் அவள் சாப்பிடுவதை ஓரக் கண்ணால் பார்ப்பதைக் கண்டவள், சிரித்துக்கொண்டே சாப்பிட்டாள்.
சாந்தி இல்லாததால் ஆர்யா என்ன செய்கிறாள் என்று தெரிந்துகொள்ள பாதியிலேயே இல்லம் வந்துவிட்டான் பிருத்வி. இவள் சாப்பிட்டு முடிக்கவும் அவன் வரவும் சரியாக இருந்தது.

"ஆர்யா சாப்பிட்டியா? என்ன சாப்பிட்ட?"

"சொல்றேன், நீங்க ஃப்ரெஷ் ஆயிட்டு வாங்க," என்று அனுப்பி வைத்தாள். அவனும் மாடியேறியவன், தன்னைச் சுத்தம் செய்துகொண்டு கீழிறங்கி வந்தான். வந்தவனுக்குப் பிரியாணியைப் பரிமாறிச் சாப்பிடச் சொன்னாள். இதை ராஜேஸ்வரி எதிர்பார்க்கவில்லை. முதலில் அதிர்ந்தவர் அங்கிருக்க முடியாமல் எழுந்து செல்ல எத்தனித்தவர், அடுத்து ஆர்யாவின் பேச்சைக் கேட்டு அப்படியே அமர்ந்தார்.

"சாப்பிட்டுப் பார்த்து எப்படி இருக்கு? யார் செஞ்சதுன்னு சொல்லுங்க," என்றாள்.

ராஜேஸ்வரியின் கையால் சமைத்த உணவைச் சாப்பிட்டு வருடங்களானது என்று அவனுக்கும் தெரியும், அவருக்கும் தெரியும். மகன் தன் கைப்பக்குவத்தை மறந்திருப்பானா? அம்மாவின் சமையலைக் கண்டுபிடித்துவிடுவானா? என்று ஆவலோடு புத்தகத்தைப் புரட்டுவதோடு, ஓரக் கண்ணால் மகனின் முகத்தைப் பார்த்தார் ராஜேஸ்வரி.
ஒரு வாய் வைத்தவன் அப்படியே உறைந்து சிலையாகிப் போனான்!

அவனது கண்களில் ஒரு துளி கண்ணீர் வடிந்தது. தாய் சமையல் ருசியை அறியாதவனா அவன்? இல்லை மறக்கக்கூடியவனா? ஒரே வாயில் அறிந்துகொண்டான். அதை அவரும் கண்டுகொண்டு கலங்கிப் போனார்.

எதுவும் சொல்லாமல் சாப்பிட்டான், நன்றாகவே சாப்பிட்டான். அதைக் கண்டவளுக்குமே கண்கள் கலங்கிப் போயின. அவர் எழுந்து உள்ளே செல்லவும், இவர்கள் வரவும் சரியாக இருந்தது. அவரை கடந்துதான் செல்ல வேண்டும். அவரைக் கடக்கும் வேளையில், "தேங்க்ஸ்" என்றதோடு அவளை அழைத்துக்கொண்டு மேலே ஏறினான் பிருத்வி. இவரோ அதிர்ந்து நின்றார்.

மகன் பேசியதற்காகவா, இல்லை நன்றி சொன்னதற்காகவா? தெரியவில்லை. சந்தோஷப்படவும் முடியவில்லை, வருத்தப்படவும் முடியவில்லை. ஆனால் மகனைக் கடந்து சென்றதும் ஏதோ ஒரு உணர்வு அவரைத் தாக்கியது.

அறைக்குள் வந்ததுமே ஆர்யாவின் மடியில் படுத்துக்கொண்டு, சிறு பிள்ளையைப் போலக் கண்ணீர் வடித்தான் பிருத்வி. அவளும் தலைகோதி விட்டு ஆறுதல் சொன்னாள்.

அவருக்குமே ஏன் மகன் மீது அநாவசியமான கோபம்? எதற்காக அவனை இப்படி நினைத்துக் கொண்டிருக்கிறோம்? என்று ராஜேஸ்வரி யோசிக்க ஆரம்பித்தார். அவரது மூளையைச் சலவை செய்து மகனை முற்றிலுமாக வெறுக்க வைக்கக் காரணமானவர்கள் வேறு யாருமில்லை... பிரணவியும் செல்வராணியும்தான்!

பிரணவிக்குத் தான் மட்டுமே அந்த வீட்டு இளவரசியாகவும், அவள் மட்டுமே முதன்மையாகவும் இருக்க வேண்டும் என்கிற எண்ணம். செல்வராணிக்கோ இந்தச் சொத்து முழுவதையும் தன் மகன் மட்டுமே ஆள வேண்டும் என்கிற எண்ணம். அதற்காகத்தான் பிருத்வியைத் இருவரும் சேர்ந்து துரத்திவிடப் பல திட்டங்கள் தீட்டி, அவனைக் குடும்பத்தின் அவமானச் சின்னமாக அனைவரின் மனதிலும் பதிய வைத்துவிட்டனர். அதுவும் ராஜேஸ்வரியின் மனதிலும் அவன் மீது கோபத்தையும் வெறுப்பையும் விதைக்க, மகன் மீது தீராத கோபத்தைத் திரை போட்டு விலகி இருக்க வைத்துள்ளனர்.

ஆனால் ஆர்யாவின் வருகைக்குப் பிறகு, கொஞ்சம் கொஞ்சமாகக் கோபத்தால் போட்டுக் கொண்ட திரை மெல்ல மெல்ல விலக ஆரம்பித்து, மகன் மீது பழைய பாசம் வெளியே எட்டிப் பார்க்கிறது.

ராஜேஸ்வரியின் கவனிப்பில், தாய் வீட்டில் இருந்து பிரசவத்திற்கு வந்த உணர்வில் இருக்கிறாள் ஆர்யா! இதையெல்லாம் பிரணவிக்குத் தெரியாமல்தான் செய்துகொண்டார். ஆனாலும் அனுவின் வாய் சும்மா இருக்காமல் அனைத்தையும் சொல்லிவிட, செல்வராணிக்கும் பிரணவிக்கும் சந்தேகம் வர ஆரம்பித்தது. அதை ஊர்ஜிதம் செய்யும் விதமாக, அவர் கையால் செய்த களியைச் சாந்தி மூலம் கொடுத்து அனுப்புவதைக் கண்டு கொண்டனர் இருவரும். ராஜேஸ்வரியின் செயலைத் தடுக்க, ஆர்யாவையும் அவனிடமிருந்து பிரிக்க, மறுபடியும் அவன் மீது பழி சுமத்தித் தனித்து விட இருவருமே நேரம் காலம் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

அதற்கு வாய்ப்பு தராமல் பிருத்வியும் ஆர்யாவும் காதலோடு இன்னும் ஒருவரையொருவர் நெருங்கிக் கொண்டிருக்கின்றனர். இதற்கிடையில் பிருத்வி லண்டன் செல்ல வேண்டிய கட்டாயச் சூழ்நிலை வந்தது. அவன் போயே ஆக வேண்டும். அதை ஆர்யாவிடம் சொல்ல, ஏனோ அவனை ஒரு வாரம் பிரிந்திருக்க வேண்டும் என்று நினைப்பதிலேயே அவளுக்குக் கண்ணீர் வந்துவிட்டது.

அவனுக்குத் தேவையான அனைத்தையும் எடுத்து வைப்பதை வெறித்தபடி பார்த்திருந்தாள். ஒரு வாரம் அவனைப் பிரிந்து இருக்க முடியுமா? இதென்ன உணர்வு என்று தெரியாமல் தன்னைத் தானே புதிதாகப் பார்க்கிறாள். அவனுக்கும் அதே நிலைமைதான். ஆனாலும் செல்ல வேண்டும். அவனும் கிளம்பிய நிலையில் இவள் கண்ணீர் துடைத்து நிற்க, அவளை அமர வைத்து அவள் முன்னே மண்டியிட்டு அமர்ந்தான் பிருத்வி.

"என்ன இது சின்னப் பிள்ளைத்தனமா அழுதுட்டு? ஒரு வாரம்தானே, சட்டுனு போயிடும் ஆர்யா!"

"ஒரு வாரம்தான் சொல்லியிருக்கீங்க பிருத்வி! அதுக்கு மேலே ஆச்சுன்னா என்ன பண்றதாம்?" என முகத்தைத் தூக்கி வைத்துக் கேட்டவளை முத்தமிட ஆசை வந்தது அவனுக்கு. ஆனால் கட்டுப்படுத்திக் கொண்டான்.

"ஒரு வாரம்தான் மேடம், அதுக்கு மேலே ஆகாது! பிராமிஸ்," என்று நெட்டி முறித்து முத்தம் வைத்தான். அவள் மெல்ல விசும்பினாள்.

"கவனமா இருக்கணும். நைட் தூங்கும்போது சாந்தி அக்காவைத் துணைக்கு வச்சுக்கோ! உடம்புக்கு ஏதாவது செய்தால் சித்திகிட்ட சொல்லு! சாப்பிடாமல் இருக்கக் கூடாது. கீழே இறங்கும்போது மெல்ல கவனமா இறங்கு! நேரத்துக்குச் சாப்பிடு! ரொம்ப நேரம் ஸ்கிரீன் டைம் எடுத்துக்காம புக்ஸ் படி, என்ன? ஒரு வாரம்தான், ஓடியே போயிடும்," என்று அறிவுரை பட்டியல் நீண்டு கொண்டே போக,

"இதுக்கு நீங்க இங்கே என் கூடவே இருக்கலாம்," என்றிருந்தாள். அவளைச் செல்லமாக முறைத்தவன் நெற்றியில் முத்தம் வைத்துவிட்டு எழ இருந்தவனைத் தடுத்து,

"நீங்களும் கவனமா இருங்க! ஒரு வாரம் வேலைதான், இருந்தாலும் சாப்பிடாம தூங்காம இருக்கணும்னு அவசியம் இல்லை. போன் பண்ணுங்க, பிஸின்னு காரணம் சொன்னா உதைப்பேன்! பாப்பாவைப் போல," என்றவள் அவன் முகமேந்தி நெற்றியில் முத்தம் வைத்தாள். ஆச்சரியமாக அவளைப் பார்த்தான்.

உள்ளே பாப்பாவும் தனது அசைவைக் காட்ட, "உதைக்கிறா! அவகிட்ட பேசாம போறீங்கன்னு சொல்லாமல் சொல்றா!" என்றாள்.

அவளது வயிற்றுக்கு நேராகத் தன் இதழ்களைக் கொண்டு வந்தவன், "பாப்பா! சமத்தா இருக்கணும். நான் ஒரு வாரத்துல வந்துடுவேன். அதுக்கப்புறம் பாப்பாவை விட்டு எங்கேயும் போகவே மாட்டேன்," என்றான். மீண்டும் ஒரு உதை! இருவர் கண்களிலும் ஆச்சரியம் தத்தளித்தது. அவளது வயிற்றில் முத்தம் வைத்துவிட்டு எழுந்து சென்றான். இவளும் பின்தொடர்ந்து கண்ணீருடன் வழியனுப்பி வைத்தாள்.

அதை நோட்டமிட்ட வித்யூவிற்கு, அவன் ஒரு வாரம் வெளியூர் செல்வது தெரிந்துபோனது. 'இதுதான் நேரம், ஆர்யாவிடம் பேசி தன் வழிக்குக் கொண்டு வர வேண்டும்' என்ற முடிவுடன், அவள் தனியாக இருக்கும் நேரத்தை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தான்.
இரண்டு நாட்களாகச் சாந்தி அக்கா அவளோடுதான் இருந்தார். மூன்றாவது நாள் சாந்தி அக்கா விடுமுறையில் இருக்க, அவள் மட்டுமே தனியாக அறையில் இருப்பதை கணித்தவன், பால்கனி வழியாக உள்ளே நுழைந்தான்.

படம் பார்த்துக் கொண்டிருந்தவள், தன்னை மறந்து உறங்கிப் போயிருந்தாள். சட்டென அவளருகே வந்தான். அவள் முகத்தில் விழுந்த முடி்க்கீற்றைக் காதோரம் ஒதுக்கியவன், நெற்றியில் இதழ் பதித்தான்.

"பிருத்வி..." என அவள் வாய் முனங்கிட, அதிர்ந்து போனான்! தன்னை மறந்துவிட்டாள் என்ற கோபம் அவனுக்குள் எழுந்தது. 'தான் மட்டுமே அவளை நினைத்துப் பைத்தியமாக இருக்கிறோம், இவள் பிருத்வியின் பெயரைச் சொல்கிறாளே' என்ற ஆத்திரத்தில் கையை முஷ்டியாக இறுக்கித் தரையில் குத்தினான்.

அந்தச் சத்தம் கேட்டு விழித்துக் கொண்டவள், அவனைக் கண்டு அதிர்ந்தாள். ஆவெனக் கத்த ஆரம்பிக்க, அவள் வாயைப் பொத்தி அமைதியாக இருக்கும்படி சொன்னான்.

"அமைதியா இரு யங்கா! நான் பேசணும், கொஞ்சம் அமைதியா இருடி," என்றான். அவள் அடங்கிய பிறகே வாயிலிருந்து கையை எடுத்தான்.

"இங்க எதுக்கு வந்த? உனக்கு என்ன வேணும்? எப்படி வந்த நீ? வெளிய போ! இங்க இருந்து வெளிய போ!" எனப் பயத்தில் கத்தினாள்.

"உன் கூட பேசணும் ஆர்யா! ப்ளீஸ், நான் சொல்றதை கொஞ்சம் கேளு."

"என்ன பேசணும்? என்ன சொல்லப் போற? இனி என்ன இருக்கு சொல்ல? உனக்கும் எனக்கும் என்ன உறவு?"

"நான் தான் உன் புருஷன், மறந்துட்டியா? இது என் குழந்தை, ஞாபகம் இருக்கா?"
நக்கலாகச் சிரித்தவள், "அதெல்லாம் மறந்து ரொம்ப காலம் ஆச்சு! இது என்னோட புது வாழ்க்கை! இந்த வாழ்க்கையில பிருத்விதான் என் புருஷன். இது எங்களோட குழந்தை! இப்போ என்ன வேணும் உனக்கு?"

"அப்போ என்னை மறந்துட்டு மூவ் ஆன் ஆகிட்ட, அப்படித்தானே?"

"ஆமா, கடந்து வந்துட்டேன். இப்போ அதுக்கென்ன?"

"ஆனா இன்னமும் நீதான் என் மனசுல இருக்க ஆர்யா! உன்னை மட்டும்தான் காதலிக்கிறேன்," என்றான்.

"அப்படியா? அப்போ வா, எல்லார் முன்னாடியும் இந்த விஷயத்தைச் சொல்லு! இந்தக் கல்யாணத்தை நிறுத்து, நான் ஒத்துக்கிறேன்," என்றாள். அவனால் முடியவில்லை, தலைகுனிந்தான். "சோ, இப்பவும் உனக்கு நான் வைப்பாட்டியா இருக்கணும், அப்படித்தானே?" என்றதும் அதற்கும் அமைதியாக இருந்தான், தலை நிமிரவே இல்லை.

"இங்க இருந்து போ வித்யூ!"

"இல்ல இல்ல ஆர்யா! எனக்கு நீதான் வேணும். நாம இங்க இருக்க வேண்டாம், வா எங்கயாவது போயிடலாம். இவங்க யாரும் வேண்டாம் நமக்கு! போயிடலாம் இங்க இருந்து."

"போயி என்ன பண்றது?"

"ஏதாவது செஞ்சு வாழலாம்."

அவளோ விரக்தியாகச் சிரித்தாள். "இதைத் தானே அன்னைக்கு நான் சொன்னேன்? நீ கேட்காம, சொத்துதான் முக்கியம்னு சொன்ன! இப்போ அந்தச் சொத்துக்கு என்ன ஆச்சு? உனக்குக் கிடைக்காதா என்ன? சொத்து இருக்கும்போது உனக்கு நான் எதுக்கு?" என்றவள், "ஓ... சொத்து உனக்குச் சுகம் தரல, அதுக்காக நான் வேணுங்கிற! அப்படித்தானே?"

"ஆர்யா அப்படி இல்ல! இப்போதான்..." எனச் சொல்லும்போதே,

"இப்போதான் என் மேலே காதலே வருதா உனக்கு? அப்போ முன்னாடி இருந்தது வெறும் லஸ்ட்தானே ! எப்படி இருந்தாலும் நீ என்னை ஏமாத்திருக்கத்தானே செய்தாய்! எப்படி உன்னோடு வரச் சொல்ற? உன்னை நம்பி வந்து, மறுபடியும் பிள்ளையை வாங்கி என்னை நடுத்தெருவில விட்டுட்டு, மறுபடியும் சொத்துதான் வேணும்னு போயிட்டா நான் என்ன பண்ணுவேன்?"

"உன்னால நான் பட்ட அவமானம் போதும் வித்யூ! உன்னால நான் அனுபவிச்ச வலி போதும்! எனக்கு நீ வேண்டாம், எனக்கு நீ எப்பவும் வேண்டாம். இங்க இருந்து போ, இங்க இருந்து போ!" என்று கத்த ஆரம்பித்தாள்.

"ஆர்யா நான் சொல்றதைக் கேளு! ப்ளீஸ் ஆர்யா," என்று கைகளைப் பிடித்துக் கொள்ள, அவளோ அவனிடமிருந்து கைகளை உருவ முயன்றாள்.

"ஆர்யா ப்ளீஸ்!" என அவளை அணைக்க, அவனிடமிருந்து விடுபட எண்ணியவள் அவனது அணைப்பிலேயே அமைதியாக அடங்கிப் போக, வித்யூவோ புன்னகை செய்தான். அதைத் திரை வழியே கண்ட பிருத்விக்குக் கண்கள் கலங்கிப் போக, சட்டென மடிக்கணினியை அணைத்துவிட்டான்! அதுதான் அவன் செய்த மிகப்பெரிய தவறு!

ஆர்யா அணைப்பில் அடங்கியது தன் வழிக்கு வந்துவிட்டாள் என்று எண்ணிப் புன்னகைத்தான் வித்யூ. ஆனால் அடுத்த நொடியே அவளது வார்த்தைகளில் அந்தப் புன்னகை மறைந்து போனது.

"நான் பிருத்வியை மனசால விரும்புறேன் வித்யூ! இப்போ எனக்கு அவர் மட்டும்தான் வேணும். அவரைத்தான் காதலிக்கிறேன். எனக்கும் என் குழந்தைக்கும் அவர்தான் வேணும். ப்ளீஸ், என் வாழ்க்கையில இனி வராத, எப்பவும் வராத! போயிடு," என்றதுமே சட்டென விலகிவிட்டான் வித்யூ.

அவள் கையெடுத்துக் கும்பிட்டு, "போயிடு! என்னை நீ உண்மையா விரும்பினேன்னா எங்களை இப்படியே விட்டுடு! நான் பிருத்விகூட வாழணும், ரொம்ப நாள் வாழணும்," என்றாள். விரக்திச் சிரிப்போடு அங்கிருந்து சென்றுவிட்டான் வித்யூ.

ஆனால் பிருத்வியோ, அவள் இன்னமும் வித்யூவைத்தான் காதலிக்கிறாள் என்று தவறாக எண்ணிக் கொண்டு அழுது கரைந்தான். ஒன்பதாம் மாதம் நெருங்கிய நிலையில் அறைக்குள் இருக்கும் கவனமாக இருக்க அவளுக்காக அவளுக்குத் தெரியாமலேயே அறையில் கேமரா வைத்திருந்தான். அவ்வப்போது அவள் என்ன செய்கிறாள் என்று பார்த்துக் கொள்வான். அப்படித்தான் இரவில் அவள் என்ன செய்கிறாள் என்று பார்க்கும்போது, வித்யூ வருவதும், அவளிடம் கெஞ்சுவதும், அவள் சண்டை போடுவதும், கடைசியாக அவனது அணைப்பில் அடங்கிப் போனதும், அவன் உதட்டில் தவழ்ந்த புன்னகை வரையிலும் கண்டுகொண்டவனுக்கு, அதற்கு மேல் பார்க்கச் சக்தி இல்லாமல் போகவே மூடி வைத்துவிட்டான்.

அவள் தனக்கில்லை என்று எண்ணும்போதே நெஞ்சில் ஈட்டியை இறக்கியது போல இருந்தது. அவனுக்கென்று துணையாக அவளை நினைக்க ஆரம்பித்த நொடி, அவளோடு கூட இருந்து கழித்த நொடிகள் யாவும் மறக்க முடியாதவை. அதெல்லாம் வெறும் நினைவுகளாக மாறிப்போகும் என அவன் எண்ணிப் பார்த்திருக்கவே மாட்டான். ஒரு வாரம் கழித்து அவளிடம் தன் காதலைப் பகிரும் எண்ணத்தில் இருந்தவனுக்கு, அந்தக் காட்சி பேரிடியாக விழுந்தது. மேலும், தனது காதலைப் புதைத்துக் கொண்டு அவர்களைச் சேர்த்து வைக்க வேண்டும் என்று தவறாக முடிவெடுத்துவிட்டான்... அவளிடம் மனசு விட்டுப் பேசாமலேயே!

அவன் மனதில் இருப்பதை அறியாதவள் அவனது வருகைக்காகக் காத்திருந்தாள். மேலும் அவளது பிறந்த நாளன்று அவனிடம் தன் காதலைச் சொல்ல வேண்டும் என்ற முடிவுடன் இருந்தாள். அவனுக்குச் சர்ப்ரைஸ் பண்ண நினைத்தவள், அவனது சிறு வயது போட்டோவைத் தேடிப் பார்க்க, அது எங்கேயும் கிடைக்கவில்லை. அவனது அறை முழுவதும் தேடிப் பார்த்துக் கலைத்துவிட்டாள், கிடைக்கவே இல்லை.
கீழே இறங்கியவள் கண்ணில் பட்டது மௌலிதான். அவரிடம் சென்றாள்.

"மாமா," என்று அவர் முன்னே நின்றாள்.

"என்னம்மா?"

"உங்ககிட்ட ஒண்ணு கேட்கணும்."

"முதல்ல உட்காரும்மா, அப்புறம் என்ன கேட்கணுமோ கேளு," என்றார்.

அவளும் அமர்ந்து அவரிடம், "பிருத்வியோட சின்ன வயசு போட்டோ இருக்கா மாமா? ரூம் முழுக்கத் தேடிட்டேன், கிடைக்கவே இல்லை. அதான் உங்ககிட்ட இருக்கான்னு கேட்க வந்தேன்," என்றாள்.

"ஏன்மா கேக்குற?" எனச் சந்தேகத்தோடு கேட்டார்.

"அவரோட பிறந்த நாள் வருதுல்ல... சின்ன சர்ப்ரைஸ் பண்ணத்தான்," என்றாள்.
அவரது புருவங்கள் சுருங்க, யோசனையுடன் அமர்ந்திருந்தார் மௌலி.

"என்ன மாமா? என்ன யோசனையில இருக்கீங்க?"

"இல்லம்மா! நீ தெரிஞ்சுதான் கேக்குறியா, இல்ல தெரியாம கேக்குறியான்னு எனக்குப் புரியலம்மா!"

"நீங்க கேக்குறது எனக்குப் புரியல மாமா!"

"அவனைப் பத்தி உனக்கு எல்லாம் தெரியும் தானேம்மா! அப்புறம் ஏன் அவனோட சின்ன வயது போட்டோவைக் கேக்குற?" இவளுக்குப் பதில் சொல்லத் தெரியவில்லை.

"அவன் மறக்கணும்னு நினைக்கிற பக்கங்களை நீ ஏன்மா திரும்ப ஞாபகப்படுத்துற?"

"அப்படி என்ன அவர் மறக்க நினைக்கிற பக்கங்கள் மாமா?" என்று கேட்டாள் ஆர்யா.

"அப்போ உனக்கு விஷயம் தெரியாதா? உன்கிட்ட அவனப் பத்தி எல்லா விஷயத்தையும் சொன்னதா அவன் சொன்னான்?" என அதிர்ந்து கேட்க, இவளோ ஒன்றும் புரியாமல் பார்த்தாள்.
 

Author: Vishakini
Article Title: குழல் யாசிக்கும் புயலே - 24
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Gowri Karthikeyan

Well-known member
May 5, 2026
1,290
384
83
Chennai
அப்படி என்ன விஷயம்???
எப்பா வித்யு இப்பவாது புரிஞ்சிக்கிட்டானே