• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

குழல் யாசிக்கும் புயலே - 9

ரோசி கஜன்

Administrator
Staff member
நாட்கள் செல்லச் செல்ல, தன் முடிவிலிருந்து பின்வாங்காமல் இருந்தாள் ஆர்யங்கா. அவளைத் தன் வழிக்குக் கொண்டுவர, தன் காதலை ஏற்றுக்கொள்ள வித்யூ எவ்வளவோ போராடிப் பார்த்தான்; முடியவில்லை.

தன்னையும் தன் காதலையும் ஆர்யாங்காவிற்குப் புரிய வைக்க நினைக்கிறான், அதுவும் முடியவில்லை. அவளோ அவளது மூளையின் சதியால் காதலை ஏற்றுக்கொள்ள மறுக்கிறாள். அவளது மனதை அடக்கி வைத்து வீம்பு பிடிக்கிறாள். ஆனாலும் விடாது அவளைப் போலவே தன் நிலை மாறாது காதலை வேண்டிக்கொண்டு அவனும் பிடிவாதமாக இருக்கிறான்.

என்னதான் மூளையின் பிடியில் இருந்தாலும் அவளது மனம் கருணை நிறைந்தது. யாருக்கும் ஒன்றென்றால் துடிப்பவள். அவளால் அவன் கஷ்டப்பட்டால் நிச்சயம் மனம் இறங்குவாள் என்று எண்ணியவன், ஒரு வாரம் உணவெதுவும் உண்ணாமல் உண்ணாவிரதப் போராட்டம் இருந்தான். அவனுக்காகக் கொண்டு வரும் உணவு கேரியரைக் கூட வீட்டிற்கே திரும்ப அனுப்பி வைத்தான். மூன்று நாள் அவள் கண்பட இவ்வாறு செய்தான். சரியாக உணவு உட்கொள்ளாததால் உடல் சோர்ந்து காணப்பட்டான்.

அடுத்த நாள் இருவரும் வேலை விஷயமாகப் பேசிக் கொண்டிருக்க, அவன் சொல்லச் சொல்ல இவள் குறிப்பு எடுத்துக் கொண்டிருந்தாள். இடையில் அவனது அன்னை பார்வதி அழைக்க, "ஒன் செக்" என்றவன் அழைப்பை ஏற்று ஸ்பீக்கரில் போட்டான்.

"எஸ் மாம்," என்றான்.

"என்னடா எஸ்? எதுக்கு இப்போ நீ சாப்பிடாம இருக்க? உன் அத்தை போன் பண்ணி ஃபீல் பண்றா. என்னடா ஆச்சு உனக்கு? ஏன் இப்படிலாம் பண்ணிட்டு இருக்க? அப்படி உடலை வருத்திட்டு நீ வேலை பார்த்து எனக்கு நீ கோட்டை கட்டத் தேவை இல்லை... ஒழுங்கா சாப்பிடு! இல்லைன்னா நீ சென்னை வந்திடு! உன் அத்தை சொன்னதிலிருந்து எனக்கு மனசே கேட்கலை! வித்யூ கண்ணா..." என இழுக்கும்போதே, "மாம்! எனக்கு முக்கியமான வேலை இருக்கு அப்புறம் பேசுறேன்," என்று அழைப்பைத் துண்டித்துவிட்டு, "நாம கண்டினியூ பண்ணலாம்," என்று வேலையைப் பற்றி ஏதோ சொல்ல, அவளோ குறிப்பெடுக்காமல் அவனையே பார்த்திருந்தாள்.

"வாட்? என் மூஞ்சில என்ன இருக்கு? எழுதுங்க," என்றான்.

"ஏன் இப்போ சாப்பிடாம உடலை வருத்திட்டு இருக்கீங்க?"

"உங்களுடைய வேலை எதுவோ அதை மட்டும் பாருங்க மிஸ் ஆர்யங்கா! அவசியமற்ற கேள்விகள் வேண்டாம்," என்றான்.

ஆனால் அவளால் அப்படி இருக்க முடியவில்லை. மூளையின் பிடியிலிருந்து சற்றுத் தளர்ந்தாள்.

"வித்யூ சார்! நானும் பார்த்திட்டுதான் இருக்கேன். உங்களுக்குக் கொண்டு வர கேரியரையெல்லாம் வீட்டுக்கே திரும்ப அனுப்புறீங்க! ஒழுங்கா சாப்பிடுறது இல்லை. ஏன் இப்படிப் பண்றீங்க? இப்படிப் பண்ணிட்டு இருந்தால் உடம்புக்கு என்ன ஆகிறது? இப்ப கூட நீங்க ரொம்ப டயர்டா இருக்கீங்க! உங்களுக்கு என்ன பிரச்சனை?"

"உங்களுக்கு என்ன என் மேல அவ்வளவு அக்கறை? நீங்க ஒன்னும் என் பொண்டாட்டி இல்லை. என் மீது அக்கறைப்பட உங்களுக்கு எந்த அவசியமும் இல்லை."

"அக்கறைப்பட பொண்டாட்டியா இருக்கணும்னு அவசியம் இல்லை... சக மனுஷியா இருந்தா போதும்..." என்ற பதிலால் பல்லைக் கடித்தவன்,

"நீ சக மனுஷி மட்டும் இல்லை; என்னைச் சாகடிக்கிற மனுஷியும்! உன்னாலதாண்டி இப்படி இருக்கேன், இனியும் இப்படித்தான் இருப்பேன். எனக்கு ஏதாவது ஆகி நான் செத்துப்போனாலும் அதுக்கு நீதான் காரணம். எனக்கு ஒண்ணு பிடிச்சுட்டா அதை அடைஞ்சே தீருவேன். இல்லை கிடைக்கலைன்னா சாகக் கூட செய்வேன். என்னால அந்தத் தோல்வியைத் தாங்கிக்க முடியாது. உன் காதல் எனக்குக் கிடைக்கல! அதான் சாப்பிடாம இருந்து கொஞ்சம் கொஞ்சமா தோத்துப் போன என்னைச் சாகடிக்கிறேன்... இது தொடரும்," என்று எழுந்து சென்றுவிட, அதிர்ச்சியின் பிடியில் சிக்கியவளுக்கோ என்ன செய்வதென்று தெரியவில்லை.

அவன் இவ்வாறு உண்ணாமல் உடலை வருத்திக் கொண்டிருப்பதை எண்ணி எண்ணி இரவு முழுக்க இவளுக்குத் தூக்கமில்லை.

இன்னமும் மூளை எச்சரிக்கை செய்வதை விடவில்லை. ஆனால் மனம்தான் அவளைக் கூர்முனையில் நிறுத்தி வைத்து, "உன்னால்தான் அவன் இப்படி இருக்கிறான்" என்றது. மேலும் "அவனுக்கு ஒன்று என்றால் நீதான் காலம் முழுக்க அந்த குற்றவுணர்வைச் சுமக்கப் போகிறாய்! அவனது காதலை ஏற்றுக்கொள்" என்று அவனுக்காக வாதாடியது. குழம்பித் தவித்து பித்து பிடிக்கும் நிலையில் தவித்தாள்.

மறுநாள் அவளது குற்றவுணர்வு மேலும் அதிகரிக்கும் விதமாக, மீட்டிங் சென்று வந்தவன் அங்கே மயங்கி விழுந்தான். உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தனர்.

"சரியா சாப்பிடாததுனாலதான் வீக்கா இருக்கார். இப்படியே சாப்பிடாம இருந்தால் உடல்நிலை இன்னும் மோசமாகும். கேர்ஃபுல்லா பார்த்துக்கோங்க," என்று அவளிடம் சொல்லிவிட்டுச் சென்றார் மருத்துவர். உள்ளுக்குள் எதை வைத்தோ சுருக்கென்று குத்துவது போல இருந்தது. அவன் கண் விழித்துவிட்டான் என்று செவிலியர் கூறிச் சென்றபின் வேகமாக அவனைக் காணச் சென்றவள், அவனது நிலையைக் கண்டு துடித்துத்தான் போனாள்.

அவனுக்கோ அந்த நிலையிலும் தனக்காகத் துடிக்கும் அவளைக் கண்டபின், அவனது கண்களிலும் உதட்டிலும் ஒரு வெற்றிக்களிப்பு. வேகமாக அவனருகே அமர்ந்தவள் சரமாரியாக அடிக்க ஆரம்பித்தாள்.

"அடியே! பேஷண்ட்டி நானு! அடிச்சே கொன்றாதடி!" என்றாலும் அவளது மென்மையான கைகளால் கிடைத்த அடிகளைச் சுகமாக ஏற்றுக்கொண்டான்.

அவள் எவ்வளவு அடிக் கொடுத்தாலும் பதக்கம் போலச் சிரிப்புடன் வாங்கிக் கொள்வதைக் கண்டு அடிப்பதை நிறுத்தினாள். ஆனால் கண்களில் நீர் வழிந்து கொண்டே இருந்தது.

"எதுக்கு அழற யங்கா?"

"அழ வச்சிட்டீங்க என்னை! உங்களுக்கு ஏதாவது ஆகியிருந்தால்?"

"நீ நிம்மதியா இருந்திருப்ப!" என்றதற்கும் அடி கிடைத்தது அவனுக்கு.

"இப்பவாவது சொல்லு, எதுக்கு இப்போ எனக்காகத் துடிக்கிற? எதுக்கு எனக்கு ஏதாவது ஆகிருமோன்னு பயப்படுற? என்னோட இந்த நிலையிலாவது உண்மையைச் சொல்லு! நீ என்னை விரும்புறியா? இல்லையா? இந்த விளிம்பிலும் உன்னை நான் ஏமாத்திடுவேன்னு நினைக்கிறீயா? உண்மையைச் சொல்லு, உனக்கு என் மேலே காதலே இல்லையா?"

"வித்யூ! உங்களை எனக்குப் பிடிக்கும். சமீபகாலமா எனக்குத் துணையா இருக்கிறது நீங்கதான்! பாட்டி இறந்ததுக்கு அப்புறமா அனாதையா இருந்த எனக்கு ஒரு ஆறுதலா உங்க நட்பு கிடைச்சது. தனியா இருந்தாலும் ஏதோ உணர்வு என்னைச் சந்தோஷமா வச்சிருந்தது. ஆனா அதுவே நீங்க காதலைச் சொன்னதும் பயம் வந்தது.

உங்க மேலே எனக்கு நம்பிக்கை இருந்தாலும், உங்களுக்கும் எனக்குமான தகுதி வேற வேற இல்லையா! நிச்சயம் நீங்களும் நானும் உண்மையா காதலிச்சாலும் இந்தத் தகுதி நம்மளைப் பிரிச்சுடுமோன்ற பயம்தான். என் மனசை நான் அடக்கி வச்சுக்கிட்டேன். காதலிச்சதுக்கு அப்புறம் சேர முடியாம பிரிவோட வலியை அனுபவிக்கிறதை விட, காதலை மூடி வைக்கிற வலி மேல்! அதான் என் காதலை எனக்குள்ள மூடி வச்சேன். ஆனால் எனக்காக நீங்க உடலை வருத்தி, என் காதலுக்காக இந்த அளவுக்குப் போவீங்கன்னு நான் நினைக்கல. ப்ளீஸ்... இதுபோல் இனி பண்ணாதீங்க வித்யூ! என்னால தாங்கிக்க முடியல," என்று அழுதாள்.

"அப்போ இவ்வளவு காதலை உள்ளுக்குள்ள வச்சு என்னை நிராகரிக்கும்போது நான் எவ்வளவு வலியை அனுபவிச்சிருப்பேன்? இன்னும் உன்னை நான் கைவிட்டுருவேன், நாம பிரிஞ்சுடுவோம்னு நினைப்பு இருந்தால் ப்ளீஸ் என் காதலை ஏத்துக்காத யங்கா! உனக்கு எப்போ என் மேலே நம்பிக்கை வருதோ அப்போ நீ என் காதலையும் என்னையும் ஏத்துக்கோ. இப்போ போகலாம்... நீ வீட்டுக்குப் போகலாம்," என்றான் முகத்தைத் திருப்பி வைத்துக் கொண்டு.

அவளோ வேகமாக அவனது வலது நெஞ்சில் தலையை வைத்து அவனைக் கட்டியணைத்துக் கொண்டாள்.

அவளது அதிரடியான இன்ப அணைப்பைக் கண்டு ஆடிப் போனான். அவளை இறுக்க அணைத்துக் கொண்டவன், "மேடம் என்னை நம்புறீங்கதானே?"

அவளும் ஆமென்று தலையை அசைத்தாள். அவளது உச்சியில் இதழ் பதித்தவன், "லவ் யூ யங்கா!" என்றான்.

அவளும் "லவ் யூ வித்யூ" என்று மேலும் அவனுக்குள் புதைந்தாள். அதன்பின் காதல் பறவைகள் காதல் வானில் சுதந்திரமாகப் பறக்க ஆரம்பித்தன.

வேலை விஷயமாக வெளியே செல்லும்போது காரியதரிசியாக வித்யூவுடன் செல்பவள், மீண்டும் திரும்பி வரும்போது அவனுடன் கைகோர்த்துத் தோளில் சாய்ந்து காதலியாக வருவாள்.

அவனுக்காகப் பார்த்துப் பார்த்துச் சமைத்து எடுத்து வந்து கொடுப்பாள். சில நேரம் இருவரும் திருட்டுத்தனமாக வெளியே சுற்றுவதுண்டு. அவ்விருவரும் இடுக்கி மாவட்டத்தில் சுற்றாத இடமே இல்லை.

அவளது பக்கத்து வீட்டு அரசிக்கு மட்டும் காதல் விஷயம் தெரியும். முதலில் இந்தக் காதல் வேண்டாம் என்று எச்சரிக்கை செய்தவர், பின் அவர்களது காதலை ஏற்றுக்கொண்டதோடு, "திருமணம் வரை எல்லையோடு இரு!" என்று பெற்ற அன்னை போல எச்சரிக்கை செய்தார்.

அவளும் "திருமணத்திற்குப் பின்..." என்று சில தடைகளை போட, அவனுக்குச் சில நேரம் எரிச்சலாக இருக்கும்.

எஸ்டேட்டில் ஒரு வாரம் விடுமுறை அளித்திருக்க, இருவரும் மட்டுமே இடுக்கியிலுள்ள பழங்குடியினர் வசிக்கும் இடத்திற்குச் சென்றனர். அங்கே அவர்களுக்கும் மசாலா கம்பெனி தொடர்பு இருந்த நிலையில், அங்கு விடுமுறையைக் கழிக்கச் சென்றிருந்தனர்.

நீரோடும் இடத்தில், அதன் கரையில் ஆங்காங்கே குடிசை கட்டி குடும்பம் குடும்பமாக இயற்கை வளங்களைப் பாதுகாத்து அதனோடு இணைந்து வாழ்ந்து கொண்டிருந்தனர் அம்மக்கள். விடுமுறைக்குச் சென்ற நாட்களில் வேலை, ஊர் என அனைத்தையும் மறந்து இயற்கையோடு இயற்கையாக அவர்களோடு கழித்தார்கள்.

இதற்கிடையே அங்கே திருமண வைபவம் நடைபெற, அதைக் கண்டு ரசித்தவர்கள் அங்கே ஊர் தலைவர் முன் நின்று, "நாங்களும் உங்கள் முறையில் திருமணம் செய்ய நினைக்கிறோம்," என்று சொல்ல, அவர்களுக்கும் ஆர்ப்பாட்டத்துடன் திருமணம் நடந்தது. பாசிகள் நிறைந்த கயிற்றை வித்யூ, ஆர்யங்காவிற்கு அணிவித்தான். திருமணம் நல்ல முறையில் முடிந்து அவர்கள் முறையில் விருந்து வைத்தனர். பின் இரவில் அவர்களுக்குத் தனிமை வழங்கினர்.

ஏகாந்த இரவில் மனைவியாய் அவன் அருகே உரிமையோடு அமர்ந்திருக்க, மெல்லக் குனிந்து அவளது இதழைச் சிறையெடுத்தான். இருவரின் தேகமும் குளிரில் நடுங்க, இதமான முத்தம் இருவரின் தேகத்தைப் பற்றிக்கொள்ளச் செய்ய, மனைவி என்று அவன் அவளிடம் முழு உரிமை எடுத்துக்கொள்ள, அவளது கண்களில் சம்மதத்தைக் கேட்டிட, முத்தத்தின் மோகத்தில் தன்னிலை இழந்தவள் சம்மதம் தர, அவளை மொத்தமாகக் கொள்ளையிட்டிருந்தான். அங்கு தங்கிய நாட்கள் முழுதும் அவர்கள் இருவரும் கணவன் மனைவியாக வாழ்ந்துவிட்டுத்தான் திரும்பினார்கள்.

மீண்டும் வேலை, காதல் என்று அவர்களது நாட்கள் அழகாகச் சென்று கொண்டிருக்க, அதற்குத் தடை போடும் விதமாக அவர்களது காதல் விஷயம் அறிந்த மோகன், வித்யூவிடம் காதலைக் கைவிடுமாறு சொல்ல, அவனோ மறுத்தான். அவனது மனதை மாற்ற ஏதேதோ சொல்ல, வித்யூவோ குழம்பி நின்றான். அதே சமயம் ஆர்யாங்காவும் தாய்மையடைந்திருந்தாள்.
 

Gowri Karthikeyan

Well-known member
இவனும் உண்மையா தான் லவ் பண்ணி இருக்கான்....பட் எப்பவும் போல குடும்பம் குழப்பி விட்டது
 
Top Bottom