• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

சமாளிக்கலாம்

நிதனிபிரபு

Administrator
Staff member
எனக்கும் சிறுகதைக்கும் பொருந்தவே பொருந்தாது. எழுத மிகுந்த விருப்பம். ஆனா என்ன வராது.

அப்படி இருந்தும் சிலவற்றை தலைகீழாக நின்று முயற்சி செய்து பாப்பேன். அப்படியான ஒரு முயற்சி தான் இது.

எப்படி இருக்கு என்று சொல்லுங்கோ


சமாளிக்கலாம்

நிதனிபிரபு


வெளிக்கிட்டாச்சு! ரஞ்சனி பயணம் வெளிக்கிட்டாச்சு.

“மனுசனையும் பிள்ளைகளையும் விட்டுட்டுப் போறது கவலையாத்தான் இருக்கு. ஆனா, காசுக்கு எங்க போறது?” தனக்குள் முணுமுணுத்துக் கொண்டவளுக்கு மனதில் சின்னதாகக் கவலை இருந்தாலும் சந்தோசத்துக்குக் குறைவில்லை.

பின்னே! வந்து பதின்மூன்று வருடங்களுக்குப் பிறகு ஊருக்குப் புறப்படுகிறாள். மூன்று பெண் பிள்ளைகள், ஒரு தம்பி. இது அவளின் குடும்பம். அத்தனைபேருக்கும் மூத்தவள் ரஞ்சனிதான்.

காங்கேசன்துறையில் பிறந்து வளந்த ரஞ்சனிக்குப் படிப்பு என்றால் உயிர். அவள் எல்லாம் படிப்பை இடையில் நிறுத்துவாள் என்றோ, வெளிநாடு வருவாள் என்றோ, கனவிலும் எண்ணியதில்லை. நன்றாகப் படிக்கவேண்டும், சிவபாலன் மிஸ் மாதிரி சமூகக்கல்வி ஆசிரியையாக வரவேண்டும் என்பதுதான் பெரிய இலட்சியமாக இருந்தது. மிஸ் வரலாறு எடுத்தால், அந்தக் காலகட்டத்துக்கே போய்விடுவாள் ரஞ்சனி.

ஆனால், இரண்டு தங்கைகளுக்கும் தம்பிக்கும் மூத்தவளாகப் பிறந்துவிட்டாளே. அப்பா விறகு வியாபாரி. சனம் எல்லாம் காஸ் அடுப்புக்கு இடம் பெயர்ந்ததில் அப்பாவின் வியாபாரம் விழுந்து, படுத்துப்போனது.

வேறு எந்த முதலீடும் இல்லாது போனதில் ரஞ்சனிதான் அவர்களின் முதலீடாக மாறிப்போனாள். அதற்கு வலுச் சேர்த்தது பதினெட்டு வயதும், பொன்மஞ்சள் நிறமும், வாளிப்பான அழகும்! வெளிநாட்டு மாப்பிள்ளைக்கு அவளைக் காட்டியதும் பிடித்துவிட்டது. சிவபாலன் மிஸ் போல் ஆசிரியையாக வந்து, வரலாறு படிப்பிக்க முடியவில்லையே என்கிற கவலை அரித்தாலும், வெளிநாட்டுக்குப் போகப் போகிறோம் என்கிற எண்ணம், அந்தப் பதினெட்டு வயதில் பெருமையாகத்தான் இருந்தது.

“அங்க போயும் படிக்கலாம் தானே!” என்கிற அம்மாவின் வார்த்தையும் மனதில் பதிந்து போயிற்று!

மாப்பிள்ளை குணசீலனும் குறை சொல்வதற்கு இல்லை. தொலைபேசியில் முழுக் காதலையும் கொட்டினான். அவள் வந்ததும் எப்படி எப்படியெல்லாம் வைத்திருப்பான் என்று கதை கதையாகச் சொன்னான். அவனைத் தாண்டிய அத்தனை விசயங்களுமே அவளிடமிருந்து அகன்றிருக்க, அவனே முற்றிலுமாக அவளின் நினைவுகள் கனவுகள் அனைத்திலும் இடம் பிடித்திருந்தான்.

அவளின் மாமியார் வீடு வந்து பார்த்துப் போனார்கள் தான். முறை எல்லாம் முறையாக நடந்தது. அவ்வளவுதான். மற்றும்படி பெரிதாக ஒன்றையும் காணோம். அவனுடைய இரண்டு தங்கைகளும் இவர்களின் வயதை ஒத்திருந்தாலும் ஒட்டுதல் காட்ட மறுத்தனர். தயங்கித் தயங்கி குணசீலனிடம் அவள் அதைத் தெரிவித்தபோது, “விடு! அது புது மருமகளை ஏற்க கொஞ்ச நாளாகும்.” என்றுவிட்டான்.

இப்போதுபோல் பத்து வருடங்களுக்கு முதல் மொழி படிக்கவேண்டிய அவசியம் இல்லாததால், ‘குணசீலனின் நண்பி’ என்கிற முத்திரையின் கீழ், அவள் வெளிநாட்டுக்குத் தயாரானாள். அடிக்கடி கொழும்புப் பயணம், குணசீலன் அனுப்பிய காசில் புது உடுப்புச் செருப்பு, அடிக்கடி கடைகளுக்கு விஜயம் என்று, தட்டியதும் எரியும் மின்விளக்கைப் போல், அவர்களின் வாழ்க்கையே மாறிப் போயிற்று!

முதன் முதலில் குடும்பமாக அந்தக் காலத்திலேயே வான் பிடித்துக்கொண்டு கொழும்பு வெளிக்கிட்டபோது, அவர்கள் வீட்டினர் எல்லோருக்கும் என்னவோ சொந்த விமானத்தில் புறப்படும் பெருமை. பின்னே, ஒரேயொரு சைக்கிளை வைத்து நான்கு பிள்ளைகளும் ஓடியவர்கள், வாடகைக்கு வான் பிடிப்பது என்றால் சும்மாவா? அப்பாவின் துள்ளலான நடை, ‘எல்லாம் எடுத்து வச்சாச்சா? மறந்திடாத. திரும்பி வரேலாது’ என்றபடி, அங்குமிங்கும் பரபரத்து ஓடிக்கொண்டிருந்த அம்மாவின் முகத்தில் கவலையையும் மீறித் தெரிந்த பூரிப்பு, தங்கைகளின் முகமெங்கும் தெரிந்த சிரிப்பு, வாகனத்தைச் சுற்றியே ஓடிக்கொண்டிருந்த சின்னத் தம்பி என்று, எல்லோரையும் பார்த்தபோது மெல்லிய சிரிப்புக் குமிழியிட்டது.

இவர்களையெல்லாம் விட்டுவிட்டுப் போகப்போகிறோம் என்கிற கவலை ஒருபுறம் என்றால், இனி இவர்கள் முகத்தில் இந்தச் சந்தோசத்தை நிலைக்க வைத்தே ஆகவேண்டும் என்கிற வைராக்கியமும் தோன்றியது.

கட்டுநாயக்கா விமானநிலையத்தைக் கண்டதும் தங்கைகளும் தம்பியும் வாயைப் பிளந்தபோது, அவளுக்கு இன்னுமே பெருமையாக இருந்தது. அவளால் தானே அவர்கள் இதையாவது பார்க்கிறார்கள்.

“அக்கா, அத்தானிட்ட போனதும் எங்களை மறந்திடுவாய் என்ன? இப்பவே சிலநேரம் உன்னக் கூப்பிட்டாலும் கேக்காதவள் மாதிரி இருப்பாய்.” என்று செல்லமாக ஊடல் கொண்டாடினாள் பெரிய தங்கை.

அவளுக்கு வெட்கமாகப் போய்விட்டது. குணசீலனின் நினைவில் ஆழ்ந்திருக்கும் வேளைகளில் இப்படி நடந்துவிடுவது உண்டுதான். அதற்காகத் தம்பி தங்கைகளை மறப்பாளா, என்ன?

“விசரா உனக்கு? நல்லா படிக்கவேணும். நான் மாதம் மாதம் காசு அனுப்புவன். அம்மா, மூண்டுபேரையும் நீங்கதான் படிப்பிக்க வேணும். அப்பா, இனி வேலைக்குப் போகவேணாம். நான் பாத்துக்கொள்ளுவன். தம்பி தங்கச்சிமாரை கவனமா பாருங்கோ, என்ன..” என்று கண்கள் கலங்க எல்லோருக்கும் முத்தமிட்டு, கட்டித் தழுவி, கண்ணீர் வழியப் புறப்பட்டவள் இன்றுதான் திரும்பிப் போகப்போகிறாள்.

அதுவும், கடைசித் தங்கையின் திருமணத்திற்கு!

ஜேர்மன் வந்து இறங்கியபோது, டிசம்பர் மாத குளிரில் நடுங்கி விறைத்தே போனாள் ரஞ்சனி. “ஜக்கெட் போட்டுக்கொண்டு வா. உள்ளுக்குப் புல்லோவர் போடு. தொப்பி, ஹாண்ட் ஷு எல்லாம் கொண்டுவா. இல்லாட்டிக் குளிரும், ” என்று குணசீலன் சொன்னான்தான். அவளும் வாங்கிப் போட்டுப் பார்த்தாள் தான். தம்பி தங்கைகள் விழுந்து விழுந்து சிரிக்கத் தொடங்கிவிட்டார்கள்.

“என்னக்கா இது? சந்திரமண்டலத்துக்குப் போறியா? இல்ல, அத்தானிட்ட போறியா?” என்று கேட்க, அவளுக்கும் வெட்கமாகப் போனதில் எல்லாவற்றையும் கழற்றி வைத்துவிட்டு, முழுக்கை ஆடை ஒன்றை அணிந்துகொண்டாள். அப்படி என்ன பெரிதாகக் குளிர்ந்துவிடப் போகிறது என்கிற எண்ணம். புதிதாக அணிந்த ஜீன்ஸ் வேறு இதோ கழன்றுவிடுவேன் என்று மிரட்டிக் கொண்டிருந்தது.

இங்கு வந்து பார்த்தபிறகுதானே, அவன் சொன்னது எந்தளவு குளிரை என்று தெரிந்தது.

கைகளை மார்புக்குக் குறுக்காகக் கட்டிக்கொண்டு அவள் குளிரில் நடுங்க, அவன் சிரித்துக்கொண்டு அணைத்தான். வெட்கம் ஒருபக்கம் சந்தோசம் ஒருபக்கமாகத் தடுமாறிப் போனாள். யாரும் பார்க்கிறார்களோ என்கிற எண்ணமே இல்லாமல், தன் ஜக்கட்டுக்குள் அவன் அவளை ஒளித்துக்கொள்ளவும் காதலனின் முதல் தொடுகையில் மயங்கியே போனாள்.

குணசீலன் சொந்தமாய்க் கார் வைத்திருந்தது வேறு மிகுந்த சந்தோசத்தைக் கொடுத்தது. அவள் கொண்டுவந்த பெட்டிகளைப் பின்னால் ஏற்றிவிட்டு, முன்கதவைத் திறந்து அவளை ஏறச் சொன்னபோது சந்தோசம் சந்தோசம் சந்தோசம் மட்டுமே.

இதில், அவனே குனிந்து பெல்ட்டை மாட்டியபோது அவன் கண்கள் சிந்திய காதலில் இவள் கரைந்துதான் போனாள். இருவரது தேகமும் உரசிக்கொள்ளும் ஒவ்வொரு கணத்திலும் மின்சாரம் தடையில்லாமல் பாய்ந்துகொண்டே இருந்தது. காரில் ஏறியதும் அவன் தந்த வேகமுத்தத்தில் சித்தம் பிசகாமல் இருந்தது ஆச்சரியம் தான்.

மேக் டோனல்ட்க்கு அவன் கூட்டிக்கொண்டு போனதும், அவள் தொலைக்காட்சிகளில் கூடக் கண்டிராத உணவுகளை வாங்கியதும், ஒருவருக்கு மற்றவர் ஊட்டியதும் என்று சினிமா என்ன சினிமா.. அவள் வானத்தில் பறந்துகொண்டிருந்தாள்.

வீட்டைப் பார்த்ததும் அவள் விழிகள் விரிந்து வெளியே வந்துவிடும் போலாயிற்று

கறுப்பு நிறத்தில் பளபளக்கும் சோபா, அதற்கு முன்னே அவளின் அரைவாசி வருமளவுக்குப் பெரிய தொலைக்காட்சி. அளவான சமையலறை. வெகு அழகான பொருத்தமான சமையலறை செட். அதற்குள் நிரப்பப்பட்டிருந்த சமையல் பாத்திரங்களைப் பார்த்துவிட்டு ‘இவற்றிலா சமைக்கப் போகிறோம்’ என்று மலைத்தே போனாள். பெட்ரூம் செட், பாத்ரூம் செட் என்று எல்லாமே செட் செட் தான். பெருமை பிடிபடவில்லை அவளுக்கு. இருந்த சந்தோசத்தில், தன் சுகமான வாழ்க்கையை அப்படியே படம்பிடித்துக் காட்டும் வகையில், கடிதம் எழுதி, பெற்றவர்களுக்கு அனுப்பிவிட்டாள்.

அன்றே, அவர்களின் வாழ்க்கையும் தொடங்கியது.

நண்பனும் நண்பியாக ஆரம்பித்த வாழ்க்கை, ஒரு மாதத்தில், சட்டப்படியும் சமயப்படியும் கணவன் மனைவியாக மாறியது. அப்போதுதான், மெல்ல மெல்ல யதார்த்தம் புரியத் தொடங்கியது அவளுக்கு.

கார் வைத்திருப்பது ஊரில் சைக்கிள் வைத்திருப்பதற்குச் சமம் என்பதும், ஊரில் எப்படிப் பாய் தலையணை இருக்குமோ அப்படித்தான் இங்கே கட்டில் மெத்தை என்றும், இந்த ‘செட்’ டாகப் பொருட்கள் இருப்பது எல்லாம் சாதாரணம் என்றும் உணரத் தொடங்கினாள். அதனால் என்ன, கணவனின் காதலோடு முதல் குழந்தையைக் கருவில் தாங்கியபோதும் சந்தோசத்துக்குக் குறைவில்லை.

குணசீலனுக்கு ஒவ்வொரு எட்டாம் திகதியும் சம்பளம் வரும். பத்தாம் திகதிக்குள் அவனின் வீட்டினருக்குக் காசு அனுப்பவேண்டும். பத்தாம் திகதி அனுப்பப் பிந்தினால் பன்னிரண்டாம் திகதி ‘நகை அடவு வச்சாச்சு’ என்று தகவல் வரும். பிறகு, வட்டிக்கும் சேர்த்து காசு அனுப்பவேண்டும். இதை, வந்த முதல் மாதமே அறிந்துகொண்டாள் ரஞ்சனி.

அவள் வந்த சந்தோசத்தில் அவன் அனுப்ப மறந்துபோய், பிறகு, வட்டிக்கும் சேர்த்து அனுப்பினான். இவளுக்குக் கோபம் வந்துவிட்டது. “என்னப்பா இது? ரெண்டு நாள் சமாளிக்க முடியாதா? அதுக்கிடைல அடவு வைக்கிறதே? அடவு வச்சதைச் சொல்ல எடுத்த மனுசர் அதுக்கு முதலே காசு இல்லை எண்டு சொல்லியிருக்க வட்டிக்காசு மிச்சம் எல்லோ!”

அவனோ அவளிடமும் கோபப்படவில்லை, அவர்களிடமும் கோபப்படவில்லை. “விடு! இனி மறக்காம அனுப்பிவச்சா சரி!” என்றுவிட்டான்.

அவனுக்கு அவள் மட்டுமே உயிர். மொத்த சந்தோசமும் அவள்தான். வீட்டினரிடம் கிடைக்காத பாசத்தைத் தன்னிடம் தேடுகிறானோ என்று பலமுறை நினைத்திருக்கிறாள். அவளுக்கும் வேறென்ன வேண்டும்? அவன் அவளுக்கும் உயிராகிப் போனான்.

அவன் வாங்கிப்போட்டிருந்த டீவிக்கும், சோபாவுக்கும் மாதாந்த தவணை கட்டச்சொல்லி வந்தபோது, இன்னும் கொஞ்சம், ‘வெளிநாட்டு வாழ்க்கை’ பற்றி விளங்கியது.

“கட்டுக்காசுக்கு ஏன் வாங்கினீங்கள்?”

“நீ வரேக்க சும்மா இருக்கிறதே. விடு! அதெல்லாம் சமாளிக்கலாம்!” என்று அவன் சொன்னபோது கவலையாகப் போயிற்று.

புது மனைவியாக வருகிறவளிடம் நன்றாக இருப்பதாகக் காட்ட ஆசைப்பட்டிருக்கிறான். தன்னைச் சந்தோசமாக வைத்திருக்க நினைத்திருக்கிறான். எப்படிக் கோபப்படுவது? கவலைதான் பட்டாள்.

இதில், அவளின் பெரிய தங்கை வேறு கடிதம் எழுதியிருந்தாள். சந்தோசமாகப் பிரிக்க, “சின்னவளுக்குச் சைக்கிள் வாங்கித் தாறன் எண்டு சொல்லிப்போட்டுப் போனீங்களாம், ‘அக்கா இன்னும் காசு அனுப்பேல்லையா’ எண்டு கேட்டு ஒரே அழுகை.” என்று எழுதியிருந்தாள்.

கணவனின் நிலவரம் தெரியாமல், வாக்குறுதிகளை அள்ளி வழங்கிவிட்ட தன்னையும் நொந்துகொண்டாள் ரஞ்சனி. அவர்களும் பாவம், இங்கிருக்கும் நிலைமை தெரியாது தானே.
 
Last edited:

Sowdharani

Well-known member
அருமை அக்கா.. வெளிநாட்டில் இருந்தா அவுங்களுக்கு எல்லாமே செய்ய முடியும்னு நம்பிக்கை தான்
 

Google Typing

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.

Members online

No members online now.
Top Bottom