சின்னா 'தி ரோமியோ' - 14

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

STN - 39

Member
Nov 30, 2025
76
59
18
Chennai
சின்னா -14

அடிபட்ட அரவமாய் அமர்ந்திருந்தார் கருணாகரன்.

தன் மகளுக்காக என்ன வேண்டுமென்றாலும் செய்வான் என்று சின்னாவைப் பற்றி தப்புக் கணக்கு போட்டு கோட்டை ஒன்றை கட்டி வைத்திருக்க அதைச் சில்லுச் சில்லாய் சிதறடித்திருந்தான் சின்னா.

அவர் சஞ்சீவி மலையைக் கொண்டு வா என்றாலும் அத்தை மகளுக்காக மீண்டுமொரு அவதாரம் எடுத்திருப்பான்தான். ஆனால் அவர் கேட்டது ஆயிரக்கணக்கான உயிர்கள். இலட்சத்தி இலட்சக்கணக்கான நெல் மணிகள்.

நீ போட்ட கணக்கின்விடை தவறென்றுகூட அல்ல நீ போட்ட கணக்கே தவறு! என்றல்லவா காட்டிவிட்டுப் போய்விட்டான். உள்ளம் குமைந்தது.

இருபதுவருட ஆசை, தவம் அத்தனையும் தவிடுபொடியானதை அவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. முன்பே தன்னை மருமகன் கண்டுகொண்டிருக்கிறான் என்பதையே அவரால் ஒப்புக்கொள்ள முடியவில்லை.

கண்முன் சின்னா சவால் விட்டுச் சென்றதே நினைவில் ஆடியது.

‘அப்பனுக்கிருக்கும் அதேத் திமிர்’ உடலெல்லாம் தீப்பிடித்தாற் போல் ஒரு எரிச்சல்.

‘உங்கப்பன் தூக்கிச்சென்றது எனக்கு மனைவியாகப் போறவளை. ஆனால் இது என்மகள், என் இரத்தம்! ஆங்காரம் தலை தூக்கியது.

வெடித்துச் சிதறும்முன் எரிமலை அதன் அழுத்தத்தை உள்ளே புதைத்துக் கொள்ளுமாம் அதே நிலையில்தான் இருந்தார் கருணாகரனும்.

வியர்வை ஆறாக வழிய, புஷ் புஷ் என மூச்சுவிட்டபடி அமர்ந்திருந்த கணவரின் அருகில் நெருங்கினார் மரகதம்.

“என்னங்க, அதுங்க சின்ன புள்ளைலருந்து ஆசைப்படு…” என்று தயங்கி தயங்கி மரகதம் ஆரம்பிக்க,

“வாயை மூடு மரகதம்” என்றார்.

“ஏன் சின்ன புள்ளைலர்ந்துதான் நானும் ஆசை வச்சிருந்தேன். உன்கூட நல்லா வாழமையா போய்ட்டேன்" என்று எரிந்து விழுந்தவர் ஒன்றை மறந்திருந்தார், அவர் அத்தை மகள் விரும்பியது குணசேகரனைத்தான் அவரை அல்ல.

அவர் சென்றது ஒருவழிப்பாதை. இங்கு இணைந்தது இரு உள்ளங்கள்.

தன்னை மீறி தன் மாமனால் என்ன செய்துவிட முடியும் என்ற சின்னாவின் அலட்சியம், கருணாகரனை கொதிகலனாய் சூடேற்ற, தான் வாழவில்லையா? என்ற அலட்சியமான நினைப்பு அவரின் மனதில் பல்வேறு புள்ளிகளை கோடுகளாக இணைத்துக் கொண்டிருந்தது.

‘என்னால் என்ன செய்துவிடமுடியும் என்ற நினைப்பில்தானே உன் அப்பனும் அன்று பெண்ணைத் தூக்கினான். வரலாறு திரும்புகிறது’ ஏளனமாகச் சிரித்தார்.

இதற்கிடையில் சின்னா மாப்பிள்ளையை விரட்டியடித்த விசயம் ஊரெல்லாம் பரவியிருக்க கோபத்தோடு திலகவதியின்முன் வந்து நின்றார் மனோவின் தாய்.

‘தகப்பனில்லா பெண்ணின் கல்யாணத்தை சின்னா எப்படி நிறுத்தலாம்’ என்று ஆரம்பித்த பஞ்சாயத்து இருவருக்கும் பெரிய வாய்த்தகறாராக, கல்லூரியிலிருந்து தன் மாமனைத் தேடி வந்திருந்தாள் அன்பிலரசி.

உண்மை தெரியாமல் என்னவென்று சொல்வார் திலகவதி!

கணவரும், சின்னாவும் வீட்டில் இல்லாததில் திணறிக்கொண்டிருந்த தன் அத்தையைப் பார்த்தவளுக்கு புன்னகை. ‘அதெல்லாம் மாப்பிள்ள பார்க்க வரமாட்டாங்கடி’ என்று தன் மாமன் சொன்னது நினைவில் வர,

“என் மாமன் எது செஞ்சாலும் அது நல்லுதுக்காத்தான் இருக்கும் பெரியம்மா. நீ போ! என் மாமன் தலைமையில நம்ம மண்ணுக்குட்டி கல்யாணம் ஜாம் ஜாம்னு நடக்கும். அதுக்கு நான் கியாரண்டி” என்று சமாதானப்படுத்தி அனுப்பி விட்டாள்.

உடையவளே கோபம் கொள்ளாமல் சமாதானமாக பேசவும் அவரும் சென்றுவிட அவள் ஒற்றை ஜடையைப் பிடித்திழுத்து நறுக்கென்று மெல்லக் கொட்டினான் சின்னா.

“ஏய் ராக்காச்சி! என் முடிவ நீ எடுக்காதன்னு உனக்கு எத்தனை தடவைடி சொல்றது" உதடுதான் அவளிடம் காய்ந்ததே தவிர, உள்ளம் காட்டாற்று வெள்ளமாய் மனதிலிருந்த சஞ்சலங்களை அடித்து நொறுக்கி அவளுடன் இழுத்துச் சென்றுகொண்டிருந்தது.

இந்த விசயத்தை வைத்து எவ்வளவு பேசிவிட்டான் அவள் அப்பன்? தகப்பன் செய்த காயத்தில் மகள் தன் வார்த்தைகளால் மருந்திட்டதை மறைந்திருந்து கேட்டுவிட்டே வந்திருந்தான்.

சும்மாவா சொல்லிவிட்டு வந்தான் அவளுக்கு என்னைத் தெரிஞ்சா போதுமென்று!

“கொட்டாத மாமா வலிக்குது’ என்று சிணுங்கியவளோ,
“அத்தை கார அடை பண்ணியிருக்கு உனக்காகதான் வெயிட்டிங் வா மாமா" என்று அவன் கைக்குள் கையைவிட்டு கோர்த்துக்கொண்டு இழுத்துப் போனாள்.

ஒருவார்த்தை ‘ஏன் செய்தாய்’ என்று அவனிடம் கேட்கவில்லை. அவள் இழுத்த இழுப்புக்குச் சென்றவனின் இதழ்களில் குறும்புப் புன்னகை.

“ஏன்டி நீ பாட்டுக்கு என் மாமன் கல்யாணத்த பண்ணி வைக்கும்னு சொல்லிட்டு வந்துட்ட, மாப்பிள்ளையவே தடுத்தது நான்தான் தெரியுமா?” என்றான் அவனாகவே.

"அதைத்தான் அந்தம்மா ஊரே கேட்க கத்திச்சே! ஏன் மாமா அவன் குடிகாரனா? விடு மாமா மண்ணுக்குட்டி மனசுக்கேத்த வேற மவராசனா பார்ப்போம்” என்றாள் மிகச் சாதாரணமாக.

தன்மாமன் எது செய்தாலும் சரிதான் என்ற அவளது அசாத்திய நம்பிக்கையில் உள்ளம் குளிர்ந்தான்.

“பாண்டி தெரியும்ல! அவன் அந்தப்புள்ளைய விரும்புறான். அந்தப் புள்ளையும்தான்" என்றான், அடையை தட்டில் வைத்த தன் தாய்க்கும் சேர்த்து பதிலாய்.

அவர் ஒன்றும் பேசவில்லை. இருவரையும் பார்க்க பார்க்க அவரின் மனது கனத்துக்கிடந்தது.

“அன்னைக்கு பாண்டி அண்ணனுக்குதான் அவ ஐ லவ் யூ சொன்னாளா மாமா" என்றவள் வாய் பொத்திச் சிரிக்க, "ராக்காச்சி ராக்காச்சி” என்று அன்று நடந்ததை நினைத்து அவனும் சிரித்தான்.

அவர்களின் கள்ளமில்லாச் சிரிப்பில் ‘இதுங்கள என்னைக்கும் இப்படியே வச்சிரு இறைவா’ என்ற திலகவதியின் வேண்டுதல் நூலறுந்த பட்டமாய் இறைவனடி சேரவில்லை போலும்.

அன்பிலரசி கடைசி பரீட்சையன்று காருடன் அவள் கல்லூரி வாசலில் நின்றிருந்தார் கருணாகரன்.

‘பரீட்சை முடிச்சதும் குலதெய்வ கோவிலுக்கு வருவதாக வேண்டுதல்’ என்ற தந்தையை வியப்பாகப் பார்த்தாள்.

உள்ளே தாயும் இருக்க, “மாமா வரலையாப்பா? கோவிலுக்கு போறதாருந்தா எப்பவும் மாமாதானே கார் ஓட்டும். அத்தை மாமாவையும் காணோம்” என்றாள், கேள்விமேல் கேள்வியாக.

“உன் மாமனுக்கு வேலை இருக்காம். நாளைக்கு நேரா கோவிலுக்கு வரேன்னுட்டான். சும்மா நச்சு நச்சுன்னாம ஏறு" எரிந்து விழுந்தார்.

தாயின் முகம் பார்த்தாள். அவர் முகத்தைக் காட்டாது ஜன்னல்புறம் திரும்பிக் கொண்டார். அடித்ததில் தடித்து வீங்கியிருந்ததை மகள் கண்டுகொண்டால்? அதற்கும் அவர்தானே வாங்கிக்கட்ட வேண்டும்.

மகளின் பார்வையில், “உங்கம்மைக்கு உடம்பு சரியில்ல. தூங்கட்டும் தொந்தரவு பண்ணாத” முயன்று குரலில் கனிவை வரவழைத்திருந்தார்.

அன்பிலரசி காரில் ஏறியதும் உதட்டோரம் தோன்றிய அலட்சியப் புன்னகையுடன் கார் திருகருகாவூர் நோக்கிப் பயணப்பட்டது. இரவாகிவிட கோவிலுக்கு அருகில் அறை எடுத்துத் தங்கிக்கொண்டனர்.

வழக்கமாக குடும்பமாக வரும்போதும் இப்படி தங்குவதால் அவளுக்கு ஒன்றும் தோன்றியிருக்கவில்லை. ஏன் விடியலில் எழுந்து பட்டுச்சேலை கட்டச்சொல்லும்போதுங்கூட சந்தோஷமாகக் கட்டிக்கொண்டாள்‌.

“அந்த டார்க் ப்ளூ பார்டர்ல மயில் வண்ண பட்டுச்சேலை கொண்டு வந்திருக்கலாம்லம்மா. அதுன்னா மாமாக்கு ரொம்பப் பிடிக்கும்” என்றவளை கண்ணில் வலியோடு பார்த்திருந்தார் மரகதம்.

ஏற்பாடு செய்திருந்த முன் அனுமதியின்படி தரிசனத்திற்கு செல்ல, “சீக்கிரம் கல்யாணம் ஆகணும்னு கண்ணை மூடி வேண்டிக்கோ அப்பத்தா” என்றார் கருணாகரன். எப்போதாவதுதான் இந்த அப்பத்தா என்ற அழைப்பு வரும். அப்படி அழைக்கும்போதெல்லாம் உருகிடுவாள் அன்பிலரசி.

அம்மையப்பன் திருமணக்கோலத்தில் உடனுறைந்திருக்க, அப்படியே உருகி கண்மூடி நின்றாள்.

அந்நேரம் உச்சஸ்தாயில் மல்லாரி இசை முழங்க, அவள் கழுத்தில் எதுவோ விழுந்தது.

கண்திறந்தவளின் எதிரே கற்றை மீசையும் ஏறிய புருவமுமாய் ஒருவன் அவளைப் பார்த்து சிரிக்க, தன் கழுத்திலிருந்த மஞ்சள் கயிற்றைக் கண்டு துனுக்குற்றாள். அந்த புதியவன் அருகில் தந்தை வாயெல்லாம் பல்லாக மீசையை முறுக்கினார்.

அவள் அதிர்ந்து நின்றது ஒருநொடிதான் அடுத்த நிமிடம் தலைவழியே அந்தக் கயிற்றை கழற்றப்போக, எதிர் நின்ற ஐய்யர், “இது அம்பாள் சன்னதி" என்று பதற, தடுத்து கோவிலுக்கு வெளியே மகளை இழுத்து வந்தார் மரகதம்.

வெளியே இழுத்து வந்த நொடியே அந்தக் கயிறு அவிழ்ந்து மரகதத்தின் காலடியில் விழுந்தது.

“என்னப்பா இதெல்லாம்? மண்ணுக்குட்டி அன்னைக்கு சொல்ல வந்ததெல்லாம் உண்மைதானா? உனக்கும் மாமனுக்கும் ஏதோ பிரச்சனைன்னு ஏதோ சொல்ல வந்தா…

நான்தான் பைத்தியக்காரி என் மாமன் எனக்குத் தெரியக்கூடாதுன்னு நினைச்சது தெரியாமலே போகட்டும்னு அவ வாயை மூடச்சொன்னேன்” என்றவளின் கண்ணிலிருந்து துளிநீர் தரையைத் தொட எண்ணி வரிசைக்கட்ட, ஆங்காரமாய் அதைத் துடைத்தெறிந்தாள்.

“என்ன நினைச்சிட்ட! என் சம்மதமில்லாத இந்த வெத்து மஞ்சக் கயிறு என்னைக் கட்டுப்படுத்தும்னா? அப்படி ஒரு கோழையாவா என் மாமன் என்னை வளர்த்து விட்ருக்கும்?” என்று கேட்டவள் திரும்பியும் பாராமல் விறுவிறுவென கோவிலுக்கு வெளியே நடந்தாள்.

"கொஞ்சம் நின்னு இதைப் பார்த்துட்டுப் போ” என்றவரின் கையில் பயிர்களுக்கு தெளிக்கும் விஷமருந்து. திரும்பிப் பார்த்தவள் எள்ளலாகச் சிரித்தாள்.

“இதெல்லாம் பழைய டெக்னிக் பா! ஆம்பளைங்க பிரச்சனைய ஆம்பளையோட பேசித் தீர்க்கத் தெரியாத கோழையான நீ அதைக் குடிக்கலாம். தப்பில்ல!” என்றவள், தாயின் அழுகுரலையும் பொருட்படுத்தாது திரும்பி நடக்க, எக்காளமிட்டுச் சிரித்தார் கருணாகரன்.

“இது எனக்கில்ல உங்கம்மாவுக்கு” என்றதும் அதிர்ந்து நின்றாள்.

“உனக்கே தெரியும், நான் சொன்னா உங்கம்மா கண்ணைமூடிக்கிட்டு கடகடன்னு குடிப்பா" என்றதும் தந்தையை எரிப்பதுபோல் அவள் பார்த்து நிற்க,

“அவன் வளர்ப்பாச்சே! இதுக்கெல்லாம் நீ அடங்கமாட்டன்னு தெரியாமலா இருப்பேன்!” என்ற கருணாகரன் தனது பட்டன் அலைபேசியை எடுத்து யாரையோ தொடர்பு கொண்டார்.

“சாத்தப்பா! இன்னும் அரைமணி நேரத்துல சின்னா கிணத்து தண்ணில அந்த இரண்டு பேரல் பூச்சி மருந்தையும் கலந்திடு” என்றதும், “அப்பா" என்றாள் அதிர்ந்து.

வழக்கத்திற்கு மாறாக வயலில் காணப்பட்ட அந்த உருளைகள் இதற்குத்தானா! உள்ளம் நடுங்கிற்று.

அவள் ஆசைப்பட்டாளென எத்தனை மீன் குஞ்சுகள். அத்தனையும் அவள் காலை முத்தமிட்டுச் சென்றிருக்கிறதே!

“என்ன பார்க்கிற? இத நீ பொறக்கிறதுக்கு முன்னாடியே எனக்கு செய்யத் தெரியாதா? ஆயிரம் இருந்தாலும் நானும் ஒரு விவசாயிதான். இத கலந்துட்டு நானும் அதே கிணத்துலதான் விழுந்து சாகப்போறேன். அப்புறம் உங்கம்மா மட்டும் எதுக்கு உயிரோட இருந்துக்கிட்டு…” என்றார்.

"இவ்ளோ வன்மமாப்பா உனக்கு? மாமா அடிக்கடி சொல்லும், உனக்கு அந்தக் கிணத்துமேல ஒரு கண்ணுன்னு. அப்பல்லாம் நான் பெருசா எடுத்ததே இல்லையே!” என்றவளின் கண்கள் துணைக்கு வந்துவிடமாட்டானா என்று தன் மாமனை ஏக்கத்துடன் தேடிற்று.

அவள் தேடுபவனோ வருடாவருடம் நடக்கும் நெல்திருவிழாவில் அல்லவா இருந்தான். பரீட்சை நேரம் அவள் வருந்தக்கூடாதென அவளிடம் சொல்லாமல் அல்லவோ சென்றிருந்தான்.

எதை மறந்தாலும் தன் மருமகன் நெல் திருவிழாவில் கலந்து கொள்ள மறக்கமாட்டான் என்றுதானே இந்த நாளையே ஏற்பாடு செய்திருந்தார் கருணாகரன்.

நெல் திருவிழா முடிந்ததும் இருவரின் திருமணத்திற்கு, அதுவும் இதேக் கோவிலில் நாள் குறித்திருப்பதை அதே கிணற்றடியில் வைத்தல்லவா தன் மாமனிடம் சவால்விட்டுச் சென்றிருந்தான் சின்னா. அலட்சியமாய்ச் சிரித்தார்.

“நீ என்ன தேடினாலும் உன் மாமன் வரமாட்டான். உனக்கு வேற மாப்பிள்ளை பார்க்கச் சொன்னதே அவன்தான்” என்றதும் அவள் தலை இல்லையென்று மறுத்து ஆடியது.

“நான் அப்படி என்ன கேட்டுட்டேன். ஒரு சாதாரணக் கிணறு! அதை வச்சி அந்த குணசேகரனை எங்கிட்ட கையேந்தி நிக்கவைக்கத்தான் ஆசைப்பட்டேன்.

ஆனா, உன் மாமனுக்கு உன்னைவிட அந்தக் கிணறுதான் பெருசுன்னு சொல்லிட்டான். அவனேதான் வேறு மாப்பிள்ளை பார்க்கச் சொன்னதும்” என்றவர் முடிக்கும்முன், "உன் தப்ப மறைக்க கேவலமா பொய் சொல்லாதப்பா” என்றாள்.

"மாமா உன்னை வெட்டிப்போடுமே தவிர என்னைக்கும் என்னை விட்டுக்குடுக்காது” என்றவள் அவர் கையிலிருந்த விஷப் பாட்டிலை புடுங்கினாள்.

"நீ குடிச்சிட்டு சாகப்போறியா? நீ செத்தாலும் அவன் கிணத்துல விஷத்தை கலப்பேன். நீயே போனதுக்கப்புறம் எது போனா எனக்கென்ன?” என்றார். விரக்தியாய் சிரித்தாள்.

"ஒருவேளை நீ வளர்த்திருந்தா இதைக் குடிச்சிட்டு செத்துப் போயிருப்பேனாயிருக்கும். காட்டுல போட்டாலும் கள்ளிச்செடியா முளைக்கனும்னு தாம்ப்பா மாமா எனக்கு கத்துக் குடுத்திருக்கு…

மாமாகிட்ட அது உயிரா இல்ல ஆயிரக்கணக்கான பயிரான்னு நீ கேள்விய வச்சிருக்கப்பா…

உனக்கு ஒன்னு தெரியுமாப்பா?” என்றவள் தன் தந்தையின் கண்களை நேருக்கு நேராய் சந்தித்தாள்.

“எப்பவுமே மாமா என் முடிவ நீ எடுக்காத எடுக்காதன்னு சொல்லும். இப்போ தெரிஞ்சே நான் தப்பான முடிவத்தான்பா எடுக்கப்போறேன். அதுவும் உன் தலைகணம் ஜெயிக்கிறதுக்காக இல்ல.

என் மாமன கொலைகாரனா பார்த்துடக்கூடாதுங்கிறதுக்காக…!

இங்க நடந்தது என் மாமனுக்கு தெரிஞ்சா உன் தலையும் இருக்காது. என் கழுத்துல தாலி கட்டினவன் தலையும் இருக்காது” என்றவள் கண்ணில் முதல்முறையாக நீர் கோர்த்துக் கொள்ள, கழுத்தெழும்பு விக்கி உள்ளேச்செல்லக் கதறினாள்.

பின், கண்ணீரைத் துடைத்துக்கொண்டவள் நிமிர்ந்து தூக்கியெறிந்த தாலியை தைரியமாகக் கையிலெடுத்தாள்.

“இந்தத் தாலி என் சம்மதத்தோட என் கழுத்துல இருந்தா மட்டும்தான் என்மாமன் உங்கள உயிரோட விடும். இது உங்க பாதுகாப்புக்காக இல்ல. என் மாமனோட பாதுகாப்புக்காக” என்றவள் தனக்குத் தானே அந்தத் தாலியை கட்டிக்கொண்டாள்.

ஒருபக்கம் அவளையும் மீறி கண்ணீர் உடைப்பெடுக்க, “என் ஒரு உயிர காப்பாத்த ஆயிரம் பயிர சாகடிக்க என் மாமனுக்கு மனசு வராதுப்பா. அதுக்கு முன்னாடி அது செத்துரும்” என்றவளின் வார்த்தைகள் உயிரற்ற காற்றோவியமாய் வெளிவந்தது.

அன்றொருநாள் அவளை கட்டிக்கொண்டு அவன் ஆராய்ச்சியின் பலனாய் முளைவிட்டிருந்த குழியடிச்சான் பயிர்களைக்காட்டி ‘அடுத்த நெல்திருவிழாவுக்கு இந்த நெல்மணிதான் என் பரிசு அன்பா’ என்று கண்கள் மின்ன அவன் சொன்னது நினைவில் ஆடியது.

குலுங்கிக் குலுங்கி அழுதாள். அந்தப் பயிர்களும் அல்லவா அந்தக் கிணற்று நீரை நம்பியிருக்கிறது. எப்படித் தோற்க விடுவாள் தன் மாமனை? தாயை நோக்கி வெறியுடன் திரும்பினாள்.

“உன் அன்பா தப்பான முடிவை தெரிஞ்சே எடுத்துட்டான்னு என் மாமன்கிட்ட சொல்லும்மா!" என்றாள் சீற்றமாக.

பின், தன் மாமனின் நினைவில் தன்னையறியாமல் அவள் குரல் தழைந்தது.

“என் மாமன் எப்பவுமே சொல்லும். பொண்ணுங்க முதுகெலும்பில்லாம இருக்கக் கூடாது அன்பான்னு…

உன்னைய திடீர் மணப்பொண்ணாக்கி நிக்க வச்சப்பவும் நீ ஏன்னு கேட்கல…

பெத்த மகளை இன்னொருத்தன்கிட்ட தூக்கிக்கொடுத்து வளர்த்தப்பவும் நீ ஏன்னு கேட்கல…

இதோ என்னைக்கோ நடந்து முடிஞ்ச வஞ்சத்துக்கு உன் பொண்ண பலியிடத் துணிஞ்சப்பவும் நீ ஏன்னு கேட்கல…

இப்படி முதுகெலும்பே இல்லாம இருந்து என் முதுகெலும்ப உடைச்சிட்டியேம்மா!” என்று கதறி அழுதவள் கண்ணீரைத் துடைத்து, திரும்பியும் பாராமல் முன்னேறி நடக்க, முதல் முறையாக தனக்கு தாலி கட்டியவனை திரும்பிப் பார்த்தாள்.

அதுவரை பக்கத்து இலையில் வைத்த பாயாசம்போல் அவளைப் பார்த்திருந்தவன் ஆசையுடன் ஓடிவந்து அவளது கரத்தைப் பற்றிக்கொள்ள, அன்பாவின் உடல் அதிர்ந்து குலுங்கியது.

அதுவரையிருந்த தைரியம் காணாமல் போக கிருஷ்ணனாய் தன்னைக்காக்க வந்துவிடமாட்டானா என்ற ஏக்கத்துடன் இறுதி மூச்சாய் தன் மாமனைத் தேடினாள்.

துணிலும் துரும்பிலும் தன் மாமனின் உருவம் தெரிந்து மறைய பாவை உடைந்தாள்.

“ஏம்பா, நான் உன் நெஞ்சில படுத்துத் தூங்கினதைவிட என் மாமன் நெஞ்சில படுத்துத் தூங்கினதுதானேப்பா அதிகம்… “ விம்மி வந்தன வார்த்தைகள்.

“நான் வயசுக்கு வந்தப்புறம்கூட அம்மா வெசனப்படுமேன்னு மாமாவாதான் அர்த்த இராத்திரில உன் வீட்ல தூக்கிக்கொண்டு வந்து போட்டு நம்ம வீட்டயே பழக்கப்படுத்திச்சி…

அப்படிப்பட்ட மாமனுக்கு துரோகம் பண்ண உனக்கு எப்படிப்பா மனசு வந்துச்சி!” வெடித்துச் சிதறினாள்.

“வேலியே பயிரை மேயக்கூடாதுன்னு கட்டிக் காத்துவந்த மாமனுக்கு நீ காட்டுற நன்றி விசுவாசமாப்பா இது!”

“கேடிப்பா நீ! மாமனுக்குள்ள காதலையும் வளர்த்து காதலிக்கு காவலா என் மாமனையே நிறுத்தியிருக்கப் பார்த்தியா… கேடிப்பா நீ!

சாதாரண அத்தைப் பெண் மாமன் மகனா நாங்க வளர்ந்திருந்தா அக்கம் பக்கம் பார்த்து முதல்லயே என் மாமன் என்மேல அச்சாரம் போட்டு வச்சிருக்கும்லப்பா? எனக்கும் இந்த நிலமை வந்திருக்காதுல்லப்பா” என்று குழந்தையாய் மிழற்ற தலையில் அடித்துக் கொண்டு அழுதார் மரகதம்.

தன்னை மறந்தநிலையில் அத்தனை உணர்வுகளையும் வெளிப்படுத்தி நின்றவளைக் கண்டு பைத்தியம்தான் பிடித்துவிட்டதோ என்று அச்சத்தில் உழன்றார்.

“என் மாமன் மேல எவ்வளவு நம்பிக்கை இருந்திருந்தா நீ தைரியமா இன்னொரு மாப்பிள்ள பார்த்திருப்ப? அங்கயே என் மாமன் ஜெயிச்சிட்டாருப்பா…

நீ தோத்துட்ட…” என்றாள் விழிநீர் வழிந்த புன்னகையுடன்.

“தேன்மதி ஊனமா பிறந்திட்டான்னு நீ முதல்முறையா குடிச்சிட்டு கும்மாளம் போட்டதா அம்மா சொல்லும்போது எனக்கு வலிக்கும். பழி வாங்கறதாப்பா காதல்?”

உண்மையான காதல்னா என்னன்னு என் மாமன் உனக்குக் கத்துக்குடுக்கும் பா! அன்னைக்கு நீ அது காலைப்புடிச்சிட்டு கதறுவ!

இந்தை அம்மையப்பன் சத்தியமா இது நடக்கும்”

அதுவரை ஆழ்கடலின் அச்சம் தரும் அமைதியாய் கருணாகரனை நிற்க வைத்துக் கேள்வி கேட்டவள் கடைசி வரியில் பாறையில் முட்டி மோதித் தெறிக்கும் கடல் அலையின் சீற்றமாக அந்த ஆண்டவனுக்கே ஆணையிட்டாள்.

அந்த அன்பின் தேவதை தர்மத்தின் வழிநின்று தனக்குத்தானே சாபமிட்டுக் கொண்டதுவோ!

அவளது சிறைப்பட்டிருந்த கை அவளது மூச்சுக்கு மூச்சு மாமனைப் பற்றிய பேச்சின் நடுவே தானாக விடுவிக்கப் பட்டிருந்ததைக் கூட உணரவில்லை அவள்.

உணர்வற்று அவள் முன்னே நடக்க எதுவும் பேசாது பின்னே நடந்தான் அவன்.

அதில் மகிழ்ந்துபோன கருணாகரனுக்கு இத்தனைத் தூரம் அவள் பேசியது எல்லாம் வலிக்கவில்லை போலும். மகள் தன் வழிக்கு வந்துவிட்டாள் என்பதில் குரூரமாக மகிழ்ந்து அவள் பின்னால் நடக்க,

“எரியூட்டும் பிணத்தின் கூடவே யாரும் போறதில்லப்பா! நான் செத்த செய்தி வந்தா நீங்க இரண்டுபேரும் வந்தா போதும்…” என்றவளில் மரகதத்தின் முகம் வெளிற,

“அன்னைக்கும், என் பொணத்துமேல போடுற பொறந்த வீட்டு கோடிப்புடவை என் மாமனோடதா மட்டும்தான் இருக்கனும்” என்றாள் நிமிர்ந்த நெஞ்சுரத்துடன்.

கதறி அழுதார் மரகதம். கண்டுகொள்ளவில்லை அவள்.

இருவரையும் அங்கேயே நிறுத்தி திரும்பிப் பாராமல் நடந்தவள் உண்மையில் உணர்வுகளற்ற பிணமாகத்தான் திரும்பி வந்தாள்.

சின்னா வருவான்...
 

Author: STN - 39
Article Title: சின்னா 'தி ரோமியோ' - 14
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

STN - 39

Member
Nov 30, 2025
76
59
18
Chennai
அடபோங்கடா முடிச்சிவீட்டுடீங்க
ஆறுதல்கள் டா...🫂 வேற நான் என்ன சொன்னாலும் ஆப்பு எனக்குதான்😂
 

Gowri Karthikeyan

Well-known member
May 5, 2026
1,289
370
83
Chennai
அடேய் ரைட்டர்.... ஏமி ரா இதி?????
கருமம்....இன்னும் அந்த கருணா திருந்தல ......
அன்பா சொன்னது ரொம்ப சரி. ...மரகதம்.....நீங்களும் ஒரு அம்மாவா
 

STN - 39

Member
Nov 30, 2025
76
59
18
Chennai
அடேய் ரைட்டர்.... ஏமி ரா இதி?????
கருமம்....இன்னும் அந்த கருணா திருந்தல ......
அன்பா சொன்னது ரொம்ப சரி. ...மரகதம்.....நீங்களும் ஒரு அம்மாவா

அந்தம்மா பொண்ணுக்காக நிக்க வேண்டிய நேரத்துல நிக்கலையே