• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

சின்னா 'தி ரோமியோ' - 2

STN - 39

New member
சின்னா : 2

சி..ன்..னா சி..ன்..னா” கூவிக்கொண்டே சிறுவன் ஒருவன் குட்டி நாய் ஒன்றை துரத்திக்கொண்டே ஓட, முன்னால் பெரிய சரிவான பள்ளம்.

முன்னால் துள்ளிக்குதித்து ஓடிக்கொண்டிருந்த குட்டி நாய் திடீரென பள்ளத்தில் பாய,

சற்றும் யோசியாது கூடவே
பாய்ந்திருந்தான் அச்சிறுவனும்…

படக்கென கண்விழித்தான் அரவிந்தன்.

‘என்ன கனவு இது ச்ச’ அருகிலிருந்த தண்ணீரை ஒரே மடக்கில் குடித்து முடித்தான்.

‘யார் சொல்வதோ யார் சொல்வதோ…

தம் தம் தம்பிம் தம் தம்… தம் தம் தம்பிம் தம் தம்…

மொட்டு ஒன்று மலர்ந்திட துடிக்கும்.. முட்டும் தென்றல் முட்டி முட்டித் திறக்கும்…

சற்று ஆசுவாசமடைந்த பிறகே அலைபேசி வெகுநேரமாய் ஒலித்திருந்தது கவனத்தில் பட, எட்டி எடுப்பதற்குள் அணைந்திருந்தது.

கிட்டத்தட்ட அன்னையிடமிருந்து ஒன்பது தவறிய அழைப்புகள்.

‘ரொம்ப நேரமா அடிச்ச இந்த ரிங்டோன் எஃபக்ட்தான் நமக்கு வந்த கனவா இருக்குமோ’ தலையை உதறிக்கொண்டான்.

இரவு ட்ரவுசர் பாண்டியையே நினைத்தபடி உறங்கியதில் அவனும் அவனது நாய்க்குட்டியும் இந்த பாட்டில் விஜய் பஞ்ஜி ஜம்ப்பிங் அடிப்பதுபோல் கனவாய் வந்துவிட்டிருந்தனர்.

அறிவியல்படி அது சாத்தியம்தான். மென் புன்னகை எழ, அன்னைக்கு அழைத்தான்.

முழுதாய் ஒலித்து முடிந்தும் அன்னை எடுக்கவே இல்லை.

‘அதுக்குள்ள இராஜமாதாக்கு கோபம் வந்துருச்சா’ செல்லமாய் அழுத்துக்கொண்டு திரும்ப அழைத்தான்.

எப்போதுமே இப்படித்தான். இவன் திரும்ப அழைக்கும் வரை அழைப்பு வந்த வண்ணமிருக்கும். இவன் திரும்ப அழைத்தால் முறுக்கிக் கொள்வார் அவனது அன்னை.

“போடா எருமை. செம்ம கோவத்துல இருக்கேன் என்கிட்ட பேசாத!”

எடுத்ததும் பொரிந்து தள்ளிய அன்னை சண்டையிட்டு அடம்பிடிக்கும் குழந்தையாய் தெரிய, இதழில் புன்னகை வந்து ஒட்டிக்கொண்டது.

“உன்னை பண்ணெண்டு மணிக்கு அலாரம் வச்சி எழுப்பி விடச் சொன்னனா இல்லையா?” என்ற தாயிடம்,

"அதை நீங்களே பண்ணலாமே மிஸஸ் கமலம்" என்றான் புன்னகையுடன்.

அன்னை கோபமாக இருக்கும்போது இப்படி அழைத்து தாஜா செய்வது இவன் வழக்கம்.

"அந்த வெங்காயம் எங்களுக்கு தெரியாது பாரு! என்னோட போன் ரிங்டோன் சரியா கேட்டா உன்னை ஏன்டா நான் கெஞ்சப் போறேன்"

"போன மாத்தித் தரேன்னாலும் கேட்கிறதில்ல!
அப்படி பண்ணெண்டு மணிக்கு எழுந்து என்ன பண்ண போறீங்க கமலம்மா” என்றான் கேலியாக.

“என்னோட ஆள் ப்ரூனோ மார்ஸ் 12 மணிக்கு சாங் ரீலீஸ் பண்றான் தெரியும்ல. அதை முதல் ஆளா கேட்கணும்னு இருந்தேன். எல்லாம் உன்னாலதான் கெட்டுப்போச்சி…
நீ எல்லாம் ஒரு புள்ளையாடா?” நிஜமாகவே கோவத்தில் கடுப்படித்தார் கமலம்மா.

"மிஸஸ் கமல்! இதெல்லாம் அநியாயம் தெரியுமா? ப்ரூனோ மார்ஸ் சாங் கேட்கிற வயசா கமலாம்மா? இதுல எழுப்பி விடலைன்னு கோவம் வேற வருதோ!” என்றவன் அடுப்பில் காப்பியை தயாரித்தபடி தாயிடம் வம்பளக்க,

“ப்ரூனோ மார்ஸ் கேட்க இரண்டு கண்ணும் காதுமிருந்தா போதும் மை சன்” என்றவர்,

“சரி! ப்ரூனோவ விடுங்க! உங்க கேள்விக்கே வரேன். இந்த அம்மாவோட வயசாவது உங்களுக்கு ஞாபகமிருக்கா? அட அவங்க பர்த் டேவாது உங்களுக்கு ஞாபகமிருக்கா மை சன்?” கமலம்மாவின் குரல் ஏக நக்கலாய் ஒலித்தது.

‘ஓ மை காட்’ தலையிலடித்துக் கொண்டு நாற்காட்டியைப் பார்த்தான் அரவிந்தன்.

இன்றுதான் அன்னையின் பிறந்தநாள். ‘எப்படி மறந்தேன்!?’

இதற்குதான் நேற்று இரவே அழைத்து பணிரெண்டு மணிக்கு எழுப்பிவிடு என்று அத்தனை தரம் சொன்னாரா!

அவர் சூசகமாக ஞாபகப் படுத்தியும் ‘முட்டாள்… முட்டாள்’ தன்னைத்தானே திட்டிக் கொண்டிருக்க, எதிர்பக்கம் அலைபேசி துண்டிக்கப் பட்டிருந்தது.

“சாரி செல்லக்குட்டி! ஹேப்பி பர்த் டே டு மை டியர் கமலி” என்றான் மீண்டும் அழைத்து கெஞ்சலாய்.

" உன் சாரி..பல்லி கமலி எல்லாத்தையும் நீயே வச்சிக்க… போன வச்சிட்டு போய் உன் வேலையைப் பாரு போடா…”

அலட்சியமாய் வந்த பதிலில் நிஜமாகவே தாய் கோபமாக இருப்பது புரிய அரவிந்தனின் முகம் வாடிற்று.

“நிஜம்மா சாரிம்மா மறந்துட்டேன். என் செல்லமில்ல. நான் வேணுமின்னா இன்னைக்கு கிளம்பி வரவா? நைட் டின்னர் வெளிய போகலாம்!”

“நீ ஒன்னும் ஐஸ் வைக்கத் தேவையில்லை மை சன். நீ விஷ் பண்ணாட்டி என்ன?

என்னோட இன்ஸ்ட்டா ப்ரண்ட்ஸ்கிட்டருந்து சரியா 11 மணி 59 நொடிக்கு பர்த்டே விஷ் வந்துருச்சி தெரியுமா!”

மகனின் முகம் வாடியது தாங்காத அன்னை, அரவிந்தனை வெறுப்பேற்றி இயல்புக்கு கொண்டுவர முயல,

"நான் க்ரியேட் பண்ணி குடுத்ததுதான இருங்க அக்கவுண்டயே டெலீட் பண்ணிடுறேன்” அவர் நினைத்தாற் போலவே மகனும் இயல்பாகி தாயை மிரட்டினான்.

"போடா பொறாமைக்குப் பிறந்தவனே அக்கவுண்ட் பாஸ்வேர்டயே மாத்திட்டேன்” என்றார் தன் வெண்கலக் குரல் கலகலக்க.

" க…ம..லி" என்றிவனின் இந்த பக்கக் கத்தல் கம்லம்மாவின் சிரிப்பில் காணாமல்தான் போனது.

அரவிந்தன் ஸ்டேசன் வந்தபோது அவன் கண்களையே அவனால் நம்ப முடியவில்லை.

“என்ன மணிகண்டன்! நம்ம ஸ்டேஷனா இது?!"

கேட்டபடியே அரவிந்தன் தன் புல்லட்டிலிருந்து இறங்க,

“அதான் சார் எனக்கும் தெரியல! வந்ததிலிருந்து நொச்சு நொச்சுன்னு பேசிக்கிட்டே இருக்காங்களே தவிர சொல்றது ஒன்னும் புரியல” என்றான் அவன்.

மணிகண்டன் அரவிந்தனைப் போலவே புதிதாக அந்த ஸ்டேஷனுக்கு வந்திருக்கும் ரைட்டர். அவனது முதல் பணி நியமனமும் இதுவே!

அரவிந்தனை கண்டதும் எழுந்துகொள்ள முயன்ற மூதாட்டிகளை தன் செய்கையால் தடுத்திருந்தவன்,

"பெருமாள் சார் இன்னும் வரலையா?” என்றான்.

அரவிந்தன் கேட்டபோதே "வந்துட்டேன் சார்” என்றபடி வந்து நின்றார் பெருமாள்.

"அட! நம்ம ஸ்டேஷனா இது!” பெருமாளும் அதே கேள்வியை வியப்புடன் மணிகண்டனிடம் கேட்டிருந்தார்.

அரவிந்தன் இந்த ஊருக்கு வந்த இந்த மூன்று மாதங்களில் இன்றும் நேற்றும்தான் வாசலில் மனித நடமாட்டமே! அதில் வந்த வியப்புதான் அனைவருக்கும்.

“சரிதான்! என்னான்னு கேட்டு வைங்க" என்று சிரித்த அரவிந்தன் தன் இருக்கைக்குச் சென்றுவிட,

“என்ன பெரியாத்தோ! ஸ்டேஷன் பக்கம் வந்திருக்க! உன் ஆட்ட எவனும் களவாண்டுட்டானா?”

பெருமாள்தான் தன் வண்டியினை ஸ்டாண்ட் போட்டு நிறுத்திக்கொண்டே, அங்கிருந்த மூத்த பெண்களில் குறிப்பாய் ஒருவரிடம் கேட்க,

“ஹான்! ஆட்ட அறுத்தவன் ….. அறுத்துர மாட்டேன். இந்த பெரியாத்தா ஆட்டு மேல ஒருத்தன் கை வச்சிருவானா?” என்றார் அவர் அவிழ்ந்த கூந்தலை அள்ளி முடிந்து.

வெள்ளைப் புடவையை பின் கொசுவம் வைத்துக் கட்டி இருந்த பெரியாத்தாளின் பச்சையான பேச்சில் மணிகண்டன் காதை பொத்திக் கொள்ள, அவனின் செய்கையில் அரவிந்தனுக்கு புன்னகை அரும்பியது.

இந்த மூன்று மாதத்தில் இதெல்லாம் அரவிந்தனுக்கு கொஞ்சம் பழகி இருக்க, அவர்கள் பேச்சில் இருக்கும் பச்சையோ வன்மமோ மனதில் இல்லாதவர்கள் என்பதை புரிந்துகொண்டிருந்தான்.

“அதான! உன் கொள்ளையில புகுந்து ஒருத்தன் வெளியேற முடியுமா? பின்ன காலைலயே எதுக்கு இங்க குந்த வச்சிருக்க!" ஊர் மக்களைக் கண்டதும் பெருமாளும் அவர்களில் ஒருவராகியிருந்தார்.

“இவ ஒருத்தி சும்மா கிடந்து சளம்புவா! கிழவிக்கு தாய்க்கிழவி படம் போகணுமாம்! அதுக்குத்தான் இந்த சளம்பு சளம்புறா!” அதை கூறியது இன்னொரு கிழப் பாட்டியேதான்.

"ஏன்டி பார்வதி! நீயும்தான போனமாசம் தோளோடு தோள் உரச சின்னாவோட படம் பார்த்தியாம்ல!”

“உனக்காரு சொன்னது” பெரியாத்தாவிடம் இரண்டாவது கிழவி சண்டைக்கு நிற்க,

“ஆமா ஊரோட இருக்கறது ஒரே கொட்டகை. நீயும் சின்னாவும் பார்த்த முதல்நாளே கமல் கமலினி மாதிரி ஜோடி போட்டு புல்லட்டுல போனத ஊரே பார்த்துச்சே! வந்துட்டா ஏதோ இரகசியம் காத்தவளாட்டம்!”

பெரியாத்தோ என்றழைக்கப்பட்டவர் இரண்டாவது பாட்டியை பதிலுக்குப் பதில் தாக்க,

‘யாரு சின்னா கூடவா’ சிறிது அதிர்ந்த அரவிந்தன் உள்ளிருந்து
எழுந்தே வந்திருந்தான். “சின்னான்னா யாரு? நாய்க்குட்டி இல்லையா!?"

இதுவரை சின்னா என்றால் நாய்க்குட்டி என்றல்லவா நினைத்திருந்தான். தான் கண்ட கனவின் விளைவால், எப்படியும் ட்ரவுசர் பாண்டியிடம் அவனது நாய்க்குட்டியை கண்டுபிடித்து ஒப்படைக்க வேண்டுமென உறுதிவேறு கொண்டிருந்தானே!

“நாய்க்குட்டியோடவா சினிமாவுக்கு போவாவ! இவன் யார் கூறுகெட்ட போலீசு…” பெரியாத்தா என்று சொல்லப்பட்டவர் ஹாயாசாமாக சொல்லிச் சிரிக்க, கூடவே சிரித்தது தோழியர் பாட்டிகள்.

"ஏய் பெரியாத்தா! அய்யா கேட்டதுக்கு பதில் சொல்லுத்தா!" சரவணப் பெருமாளுமே கடுப்பாகினார்.

"இதேதான் சார்! வந்ததிலிருந்து மாத்தி மாத்தி சண்டை போட்டுக்குதுங்களே தவிர விசயம் என்னான்னு ஒன்னும் தெளிவா சொல்ல மாட்டேங்குது” தலையைச் சொறிந்தான் மணிகண்டன்.

"நீ அய்யா போல தெளிவாக் கேட்டியா?” மணிகண்டனைக் கடிந்த பெரியாத்தா,

"எங்க பேய் ஃப்ரண்ட்ட காணோம்! அதான் எல்லாம் சேர்ந்து பிராது குடுத்துட்டு போலாம்னு வந்தோம்” என்றவரை அதிர்ந்து பார்த்தான் மணிகண்டன்.

சின்னா வருவான்...
 
Top Bottom