• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

சின்னா 'தி ரோமியோ' - 21

STN - 39

New member
சின்னா - 21

“சிவமதியோட லோகேஷன் கண்டுபிடிக்கச் சொன்னனே ட்ரேஸ் பண்ணியாச்சா?”

“மூணாரிலிருந்து 40 - 45 கிலோ மீட்டர் டிஸ்டன்ஸ்ல இருக்க மறையூர் காமிக்குது சார் லோகேஷன் ஸ்டேபிளா இல்ல. அது கேரளாவோட ரிமோர்ட் பார்டர் வில்லேஜ். அங்கல்லாம் செல் டவர் சிக்னல் ரெகுலரா கிடைக்காது.

எக்ஸாக்ட்டா சொல்லணும்னா கடைசியா மறையூர்ல இருக்கிற ஒரு மனநல காப்பகத்தோட சிங்க் ஆகுது சார்” என்றது எதிர்பக்கம்.

அரவிந்தனின் புருவம் யோசனையுடன் சுருங்கியது. அவனது கணிப்பு வேறு ஆயிற்றே! ‘சம்திங் ஃபிஷ்ஷி’ மனம் அடித்துச் சொல்லியது.

“சரி! நான் சில போட்டோஸ் அனுப்பறேன். அதில் இருக்கவங்கல்ல யாராச்சும் ஒருத்தர் அங்க இருந்தாலும் இம்மிடியட்டா ரிப்போர்ட் பண்ணுங்க… கேரளா டிப்பார்ட்மெண்ட் ஹெல்ப் வாங்கிக்கோங்க… இந்த போட்டோஸ அங்க இருக்க லோக்கல் ஸ்டேஷனுக்கு ஃபேக்ஸ் பண்ணி உடனே சர்ச் பண்ண சொல்லுங்க… அண்ட்” என்றவன் நிறுத்தி

“இதுக்கும் முன்னால தட் மீன்ஸ் ஒன் மன்த் பிஃபோர் அந்த போன் எந்தெந்த டவர்ல கனெக்ட் ஆகி இருக்குன்னு செக் பண்ணுங்க. சூன் ஐ வில் பி தேர்!” என்றான்.

அலைபேசியில் அன்பிலரசியும் சின்னாவும் ஒன்றாக இருந்த இளவயது புகைப்படத்தை அனுப்பி வைத்தான். கூடவே சின்னாவின் தற்போதைய புகைப்படமும். இரண்டும் சின்னாவின் வீட்டில் சுருட்டியதே!

அன்பிலரசி தற்போது எப்படி இருப்பாரென தெரியாது. ஆனால் சின்னா விசுவாசம் அஜித் தோற்றத்தில் இருந்தார். சிறிதுநேரம் சின்னாவின் புகைப்படத்தையை இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான். அந்த கண்ணில் என்ன ஒளிந்திருக்கிறது. கருணையா? வலியா? அவனால் பிரித்தறிய முடியவில்லை.

‘இத்தனையும் கடக்க உங்களால் எப்படி முடிந்தது?’ அவனுள் பிரமிக்க வைத்த கேள்வியை புகைப்படத்தைப் பார்த்து கேட்டுக்கொண்டிருந்தான்.

அதுவும் எத்தனைப் பெண்களை கடந்திருக்கிறார். ஒவ்வொருத்தரிடமும் ஒவ்வொரு பரிணாமம்.

‘A Man of Love’ அரவிந்தனின் இதழ்கள் முனுமுனுக்க, “வாவ்! விசுவாசம் அஜித் போல இருக்கார்ல. கலர்தான் கொஞ்சம் கம்மி" என்று அருகில் வந்து அமர்ந்தான் மணிகண்டன்.

“மணி! சின்மயாக்கு ட்ரை பண்ணியா? என்னாச்சு!”

"ஸ்டில் நாட் கனெக்டட் சார். நானும் நேற்றிலிருந்து ட்ரை பண்றேன். சீக்கிரம் சின்னாவ கண்டுபிடிங்க சார். இல்ல இது போலீஸ் ஸ்டேஷனா இல்ல முதியோர் காப்பகமான்னு எனக்கே சந்தேகம் வந்துடும். அங்க பாருங்க போலீஸ் ஸ்டேஷன் திண்ணைல உட்கார்ந்து வெத்திலை இடிச்சிட்டு உட்கார்ந்திருக்கிறத” என்று வெளியில் பித்தளைக் குழவியில் வெத்திலையுடன் சேர்த்து ஊர் கதையையும் இடித்துக்கொண்டிருந்த சரஸ்வதி பாட்டியைக் காட்டினான்.

“இதுகூட சேர்த்து போயிலை வேற போடுது. அது லைட்டா போதை வஸ்துதான” என்று கண் சிமிட்டியவன், “புடிச்சி உள்ள போடுங்க சார்” என்றான் சந்தானம் ஸ்டைலில்.

அரவிந்தனும் சிரிக்க,

"சின்னாவ கண்டுபிடிக்காம நகர மாட்டாங்களாம். காலைலருந்து இங்கதான் மாநாடு. இதுல ஊர்ல இருக்க கதையெல்லாம் வேற சட்டில போட்டு வறுக்குதுங்க. பார்வதி பாட்டி மட்டும்தான் காலைலயே பால கறந்து வீட்டுக்கு வீடு ஊத்திட்டு வரேன்னு போயிருக்கு. எல்லாம் நீங்க குடுக்கற இடம் இந்த ஆட்டம் போடுதுங்க” என்ற மணிகண்டனின் காதைப் பிடித்துத் திருகினான்.

“காலைலயே அந்த சின்மயாவ லைன்ல புடின்னா அவங்ககூட உட்கார்ந்து ஊர்கதையெல்லாம் பேசினதுமில்லாம என் பெயர்ல கடன சொல்லி டீயையும் வாங்கிக்குடுத்து உற்சாசப் படுத்திட்டு இங்க வந்து நாடகமா ஆடுற” என்று மேலும் காதைத் திருக, “ஸ்டேஷன்லயே வன்கொடுமை நடக்குது இதை கேட்க நாதியில்லையா நாயன்மாரே…” என்று ரவுடீ பேபிஸை துணைக்கழைத்தவனின் வாயை சட்டென பொத்தினான் அரவிந்தன். தற்போது ரவுடீ பேபிஸின் செல்லப் பிள்ளையே மணிகண்டன் தானே!

“அது அந்த பயம் இருக்கணும் சார்" என்று காக்கிச் சட்டைக் காலரைத் தூக்கிவிட்டவனை பொய்க்கோபத்துடன் அரவிந்தன் முறைக்க, “காடு கழனி ஊர்னு அத்தனையும் விட்டுட்டு சின்னா ஏன் சார் எங்கயோ இருக்க இந்த ஓரக்காடு கிராமத்தை தேடி வரனும்” என்றான் விளையாட்டை கை விட்டு.

“நிகிலன்" என்றான் அரவிந்தன் ஒற்றை வார்த்தையில்.

“நிகிலனா!!" மணிகண்டனின் வியந்த பார்வையில்,

"எஸ் நிகிலன்! KVK ஆஃபிஸர். செண்ட்ரல் கவர்மெண்ட்டோட விசாயிகளுக்கான டிப்பார்ட்மெண்ட்
கிருஷ்ஷி விஹான் கேந்திரா.

இதுலதான் நிகிலன் சீஃப் ஆபீஸர் போஸ்டிங்ல இருக்கார். இவங்களோட வேலையே மண்ணின் தரம், எந்தமாதிரியான மண்ணுக்கு எப்படியான விதைகள் பயிரிட முடியும். பூச்சிக் கொல்லி மருந்துகள் பற்றிய அறிவுரை மற்றும் எச்சரிக்கை இதுபற்றியெல்லாம் விவசாயிகளுக்கு ட்ரெயினிங் குடுக்கறதுதான்” என்றான்.

" அப்போ சின்னா?”

"எஸ் மணி! யூ ஆர் ரைட் அப்படி ஏதோ தகவலை அறியத்தான் சின்னா நிகிலனை தேடி வந்திருக்கனும்” என்றான்.

"அதை அவர் ஊர்லயே செஞ்சிருக்கலாமே? அங்கேயும் KVK இருக்கும்ல” என்ற மணிகண்டனுக்கு கசப்பான சிரிப்பொன்றை பரிசளித்தான் அரவிந்தன்.

"ஊரில் இருக்க முடியாம எதுவோ ஒன்னு அவரை மூச்சு முட்ட செய்திருக்கலாம்!” என்றான்.

“அதான் கோவில் கும்பாபிஷேகத்தோட அவர் நெல்லை வாங்கலன்னு சண்டை போட்டதா சொன்னாங்களே?"

“அன்பை மட்டுமே விதைச்சி வாழ்க்கைல விட்டுக்குடுத்தே பழகின மனுசனுக்கு அது அவ்ளோ பெரிய விசயமா என்ன? ஊரை விட்டு வெளியேறவோ இல்ல வேற எதோ காரணமாவோ அதுவும் சின்னா நடத்திய நாடகமா இருக்கலாம் மணி!” என்றான்.

பக்கத்திலிருந்து பார்த்ததைப்போல் சின்னாவின் அரிச்சுவடி வரை ஒப்பித்த அரவிந்தனின்மேல் மணிகண்டனுக்கு வியப்பே தோன்றியது.

‘விட்டா சின்னா மேல பிஹேச்டியே பண்ணுவாரு போல! யாரு கண்டா அந்த மனுஷனை லவ் பண்ற லேடீஸ் லிஸ்ட்ல இவரும் சேர்ந்தாலும் சேர்ந்திருப்பாரு’

“ஏன் அதுனால உனக்கெதும் பிரச்சனையா? லவ் பண்ணா தப்பொண்ணும் இல்லையே!’ என்று அரவிந்தன் நகைத்தபடி நகர,

‘அச்சச்சோ மைண்ட்வாய்ஸூன்னு நினைச்சி மங்கி வாய்ஸ்ல பேசி இருக்கனே’ என்று பதறியவன் அவனும் பின்தொடர்ந்தான்.

“பெருமாள் சார்! ஃபிலோமினாவ டாக்குமெண்ட் வாங்கிக்க வரச்சொல்லி சொல்லச் சொன்னனே சொல்லிட்டீங்…?"

கேட்டபடியே சரவணப் பெருமாளிடம் நெருங்கியவன் அவர் யாரிடமோ அலைபேசியில் பேசிக்கொண்டிருக்கவும் மௌனம் காத்தான்.

“ஏய் என்ன? சுயமா காலில் நிக்கப் போறேன்னு வேலைக்கு போகணும்னு ஒத்த காலில் நின்னு வேலைக்கு போனல்ல. இப்ப பிள்ளைக்கு ஃபீஸ் கட்டணும்னு எதுக்குடி எனக்கு போன் பண்ற… ஏன் நீ சம்பாதிக்கிறத உங்கப்பன் வீட்ல குடுக்கப் போறியோ? ஒத்த பைசா தரமாட்டேன். நீயாச்சி உன் புள்ளையாச்சி. வைடி போனை!” மனைவியிடம் காய்ந்தவரைக் கண்டு இதழ்கள் கேலியாய் வளைய தலையை இடவலமாக ஆட்டினான் அரவிந்தன்.

“இந்தாளு சாகுறவரை திருந்தமாட்டான் சார். ஒட்டுண்ணி மாதிரி அந்தம்மாவோட கடைசிச் சொட்டு இரத்தம்வர உறிஞ்சி எடுப்பான்.” அரவிந்தனின் மன ஓட்டத்தை அப்படியே அரவிந்தனின் காதுக்குள் இரகசியம் படித்தான் மணி.

“இவரோட அம்மாக்கு தமிழ்நாடு ஃபுல்லா சுற்றுலா போக டூர்ஸ் அண்ட் ட்ராவல்ஸ்ல லம்பா ஒரு அமௌண்ட் கட்டியிருக்கார்னு இப்பதான் டிக்கெட்ட ஸ்டேஷன்ல வந்து குடுத்துட்டு போனாங்க. ஆனா பிள்ளைக்கு ஃபீஸ் கட்ட முடியாதாம். நீங்க வந்தப்புறம்தான் சார் ஸ்டேஷனுக்கே ஒழுங்கா வராரு… இல்ல இவரும் மெடிக்கல் லீவு போட்டுட்டு ஒருபக்கம் தாய்லாந்து சிங்கப்பூர்னு டூர் சுத்துவாரு. இதுல கிளப்பு சூதாட்டம் வேற…

பத்து ரூபாய்க்கு பல்லிமிட்டாய் பிள்ளைக்கு வாங்கிக் குடுக்கணும்னாலும் பொண்டாட்டிகிட்ட எங்கம்மாவ கேளுன்னுவான் சார்.

பொறுத்து பொறுத்து பார்த்துட்டுதான் அந்தம்மா வேலைக்கே போகுது போல. அதுக்கும் ஆப்படிக்குறான்” என்றான்.

“பெரு….மாள் சார்”

அழுத்தி அழைத்தவனில் படபடப்பாய் திரும்பினார் சரவணப் பெருமாள்.

“ஃபிலோமினாக்கு கால் பண்ணிட்டீங்களான்னு கேட்டேன்" என்றான் அதே அழுத்தம் மாறாமல்.

“இதோ சார்" என்றவர் திரும்ப,

“கப்பல் எவ்ளோ தாங்குமோ அவ்ளோ எடையைத்தான் ஏத்தனும் பெருமாள் சார். அது பாரம் தாங்காம உடைஞ்சிதுன்னா சேர்ந்து கடல்ல மூழ்கப் போறது நீங்களும்தான்” என்றான் பூடகமாக.

"அதை கப்பல் உங்ககிட்ட சொல்லும்போது பார்த்துக்கலாம் சார்!" என்றார். புரிந்தும் புரியாததுபோல் நகைச்சுவை தொணியில். அதில் ‘இது என் சொந்த விசயம்’ என்ற இருமாப்பும் இருந்தது.

“அந்தக் கப்பல் என்கிட்ட வந்து கம்ப்ளைண்ட் பண்ற நிலை வந்தா அன்னைக்கு நீங்க இந்த ஸ்டேஷன்ல இருக்க மாட்டீங்க!" அதே நகையான தொணியில் அரவிந்தனும் எச்சரித்தான்.

“என்னப்பு அடுத்து கப்பல்ல போறமா சின்னாவ தேட" அரைகுறையாக காதில் விழுந்ததை வைத்து வெளியில் அமர்ந்திருந்த பெரியாத்தா ஆர்வமாகக் கேட்டார்.

“ஆமா, அந்தமானுக்கு கப்பல்ல போறோம்! அங்க மனுஷங்கள சாப்பிடுற ஆதிவாசிங்க தீவு இருக்காம். மொத்தமா இறக்கி விட்ரலாம்னு ஐடியா” என்றவனோ,

"விட்டா புதிய வானம் புதிய பூமின்னு மூனுபேரும் கவர்மெண்ட் செலவுல தேசாந்திர பயணம் கிளம்பிடுவிங்களே!” என்றான் மணிகண்டன்.

“அந்தமானும் வேண்டாம் கௌரிமானும் வேண்டாம். காசி இராமேஷ்வரம் கூட்டிட்டு போ. சின்னாதான் கூட்டிட்டு போறேன்னுச்சி. இருந்திருந்தா இந்நேரம் கூட்டிட்டு போயிருக்கும். அதையும் கண்டுபிடிக்க உனக்கு துப்பில்ல!” பெரியாத்தாவும் பதிலுக்கு வெளுத்து வாங்கினார்.

"சார் இந்த திட்டு எனக்கில்ல உங்களுக்குதான்” என்று சிரித்தபடி திசைதிருப்பியவனை, "பேசாம வாடா! வாயைக் குடுத்து வாங்கிக் கட்டி என்னையும் கோர்த்து விடற” என்று இழுத்துச் சென்றான் அரவிந்தன்.

“லே மணி! எங்கள விட்டுட்டு எங்கடே போறிய? இனி சின்னாவ கண்டுபுடிக்கிற விசயமா எங்க போனாலும் எங்களையும் இழுத்துட்டுதான் போகணும்!” என்றார் பெரியாத்தா சட்டமாக.

“ரவுடீ பேபீஸ்! எல்லாம் ஒரு அளவுதான் சொல்லிட்டேன்" என்று மிரட்டிய மணிகண்டனை அலட்சியமாய் பார்த்தவர்,

“இனி நாங்க ரவுடீ பேபீஸ் இல்ல. கால் மீ! ஜேம்ஸ் பாண்ட் நாட் நாட் 1, நாட் நாட் 2 அண்ட் நாட் நாட் 3. அண்டர் வேர்” என்ற பெரியாத்தா அட்டென்ஷனில் உடம்பை நேராக்கி நிற்க…

“அண்டர்ல வேர்தான் இருக்கும் ரவுடி பேபி! உச்சியிலதான் பூ பூக்கும். சில்லி கேர்ள்ஸ்” என்று சிரித்து நில்லாமல் ஓடிச்சென்று அரவிந்தனின் ஜீப்பில் ஏறிக்கொண்டான்.

“ஏன் சார் ரவுடி பேபிஸ கழற்றி விட்டுட்டு வரச்சொல்லி கண்காட்டுனீங்க" என்றான் ஜீப்பில் ஏறியதும் மணிகண்டன்.

“இதோ இப்படி கலாட்டா பண்ணுவீங்கன்னுதான். லாஸ்ட் டைம் நீயும் பாட்டியும் பண்ணின கலாட்டால நிகிலனை சரியா விசாரிக்க முடியல” என்றவனை முறைத்தான் மணிகண்டன்.

"சும்மா சொல்லாதீங்க சார். லாஸ்ட் டைம் நிகிலன் ஒய்ஃப் ஊர்மிளா, நீங்க கேள்வி கேட்க கேட்க அழுதாங்கன்னுதானே அவங்கள விசாரிக்காம வந்தீங்க?

ஊரே சின்னா காணாம போக அவங்கதான் காரணம்னு சொல்லும்போது அவங்கள மட்டும் ஒரு கேள்வியும் கேட்காம விட்டு வந்த போதே எனக்கு சந்தேகம்தான்” என்றவனோ,

"பொண்ணுங்க அழுதா சின்னா மாதிரியே உங்களுக்கும் மனசு தாங்கல எப்படியோ சமாதானம் பண்ணிடுறீங்க" என்றவனை ஜீப் ஓட்டியபடியே அரவிந்தன் திரும்பிப் பார்க்க, வாய்பொத்தி சிரித்தான் அவன்.

“பின்ன என்ன சார்! பாட்டிங்க மூணு பேரும் சின்னாவ காணும்னு வரும்போது கிட்டதட்ட மனசளவுல உடைஞ்சி இருந்தாங்க. ஆனா நீங்க எல்லார்கிட்டயும் கண்டிப்பா இருக்கிறமாதிரி சீனை போட்டாலும் அவங்களுக்கு குடுத்து வச்சிருக்க இடம் அது நம்ம ஸ்டேஷனா முதியோர் கோட்டையான்னே தெரியல" என்று சிரித்தான்.

“நானெல்லாம் உங்க கஞ்சி போட்ட விறைப்ப பார்த்திட்டு நீங்க
டெரர் போலீஸ்னு நினைச்சேன் தெரியுமா! உங்க போலீஸ் ரெக்கார்டும் அதைத்தான் சொல்லிச்சி. எத்தனை ரவுடிஸ் மிரட்டல் உருட்டல் எத்தனை பணியிட மாற்றல். ஆனா இன்னைக்கு இந்த ரவுடி பேபீஸ் உருட்டலுக்கு பயந்தா மாதிரி பணிஞ்சி அவங்க சொல்றதுக்கெல்லாம் தலையாட்டுறதெல்லாம் நம்புறா மாதிரியா இருக்கு” என்றவனிடம்

“நம்பலைன்னா இறங்கி போய்டேன் மணி” என்றான் அரவிந்தன்.

"சரவணப் பெருமாள் சார் மேட்டர் ப்யூர்லி அவங்க பர்சனல்னு தெரிஞ்சாலும் அவங்க ஒய்ஃப்கு ஆதரவா மறைமுகமா மிரட்டுறீங்க… காலைலயே டீ கடைல பாட்டீங்க என்ன கேட்டாலும் குடுங்க காசு நான் தரேன்னு சொல்லி வச்சிப்புட்டு உங்க அக்கவுண்ட்ல வாங்கிக் குடுத்துட்டேன்னு போலி நடிப்பு வேற…

பசுபதி கோவிலுக்கு போகும்போது ட்ராவல்ல சரஸ்வதி பாட்டி வாந்தி தலைசுற்றல்னு கஷ்டபட்டப்போ பார்த்து பார்த்து நிறுத்தி லெமன்ஜூஸ் இளநீர்னு டீ ஹைட்ரேட் ஆகாம அப்படி கவனிச்சிக்கிட்டீங்க…

உண்மையாவே சின்னா காணோமேங்கிற வலியை தாண்டி அவங்க முகத்துல திரும்ப சந்தோஷத்தை பார்க்கிறேன்…” என்றான் உளமாற மனதிலிருந்ததை எல்லாம் கொட்டி.

“மினி சின்னா சார் நீங்க?” என்றவனிடம் கசப்பாய் புன்னகைத்தான்.

“சின்னாவ மாதிரி யாரும் ஆக வேண்டாம் மணி! அவரோட அளவுக்கு வலி தாங்குற சக்தியும் எனக்கில்ல அந்த வலியவே வலிமையாக்கி அடுத்தவங்க வாழ்க்கைல விளக்கேத்தற திறமையும் எனக்கில்ல" என்ற அரவிந்தனின் கைகளில் ஜீப் சற்று தடுமாறியது.

“என்னாச்சு சார்!" என்று பதறியவனிடம்,

“ஒன்னுமில்ல! என்றவன் கண்களை மூடித்திறந்தான்.

“சின்னா அவர் பொண்ணு எழுதின லட்டர படிச்சிருப்பாரா சார்? அது எங்கிருந்து எடுத்தீங்க. தேன்மதியம்மா போட்டோக்கு பின்னாடி இருந்தா? நிஜம்மாவே கருடன் சம்பாவ மீள் உருவாக்கம் பண்ணி இருப்பாரா?"

“படிக்காமலா அவர் பொக்கிஷமா பாதுகாத்த ஆராய்ச்சி பேப்பர்ஸோட வச்சிருப்பார். அதுவும் சண்முகவேல் அய்யா குடுத்த பெட்டிலதான் இருந்தது மணி! நீ போட்டோக்கு பின்னாடி கலெக்ட் பண்ண சேம்பிள்ஸ நமது நெல் இயக்கத்துக்கு கொரியர் பண்ணிட்ட தானே?” என்றான்.

“வந்ததுமே பண்ணிட்டேன்" என்றவனிடம்,

"அவர் தோல்வியைக் கண்டு துவள்ற மனுஷனில்லை. நிச்சயம் கருடன் சம்பா மீண்டு வந்து நமக்காக பத்திரமா காத்திருக்கும் மணி!" என்றவனின் ஜீப் நிகிலனின் வீட்டின்முன் நின்றது.

ஆம் பத்திரமாகத்தான். இப்போது சின்னாவைப் பற்றி நன்கு அறிந்தவனுக்கு அது பத்திரமாக இருக்கும் என்ற நம்பிக்கை வந்திருந்தது.

முதலில் நிகிலனைத் தேடி
வந்த போது அவசரம் காட்டியதற்கு ஊர்மிளாவும் ஓர் காரணம் என்றாலும் மற்றொரு காரணம் கருடன் சம்பா.

தேச நலனின் காரணமாக அதைத் தேடி ஓடும் முனைப்பில் இருந்தவன் ஊர்மிளாவிடம் எதுவும் கேட்டிருக்கவில்லை. தற்பொழுது ஏனோ சின்னா எனும் சிக்கல் வாய்ந்த நூலின் முனைப்பகுதி இங்குதான் இருப்பதாக உறுதியாக நம்பினான். மேலும்…


நீரும்கூட தான் பாயும் நிலத்தின் தன்மைக்கேற்ப இனிப்பு உவர்ப்பு என தன் சுவையை மாற்றிக்கொள்ளும் பொழுது வாழ்க்கையில் கசப்பை மட்டுமை சுவைத்த மனிதன், தன் காலடி தடமெங்கும் அன்பென்னும் இனிப்பை விருந்தாக்கியதை அறிந்து கொள்ளும் உள்ளார்ந்த ஆர்வமும் அவனை இங்கு இழுத்து வந்திருந்தது.
 
Last edited:
Top Bottom