சின்னா 'தி ரோமியோ' - 22

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

STN - 39

Member
Nov 30, 2025
76
59
18
Chennai
சின்னா - 22

“எந்த சொந்தமும் இல்லாம சின்னா எப்படி உங்க வாழ்க்கைல வந்தார்? அதுவும் அப்பா ஸ்தானத்துல வச்சி பார்த்த…”

"அப்பா ஸ்தானத்துல என்ன சார். அநாதையான எனக்கும் அநாதையாக்கப்பட்ட இவளுக்கும் அப்பாவே அவர்தான்” அரவிந்தன் முடிக்கும்முன் நெகிழ்ச்சியுடன் சொன்னான் நிகிலன்.

ஊர்மிளா கலங்கினாலும் முன்னர்போல் அல்லாமல் கொஞ்சம் தெளிந்திருந்தாள்.

“நீங்களே இங்க வந்ததும் பார்த்திருப்பீங்களே சார்! சாதி வெறி தலைவிரிச்சாடுற கிராமங்களில் எங்களோடதும் ஒன்னு. கொலை பண்ணக்கூட அஞ்சாத ஊர்” என்றாள் ஊர்மிளா.

சரவணப் பெருமாளிடம் அவ்வப்போது அந்தத் தீண்டத் தகாமையை உணர்ந்திருக்கானே!

"அப்பா படிக்காதவர்ங்கிறதால உரம் சம்மந்தமா இவரை அடிக்கடி நான்தான் பார்க்க போவேன். அப்படிதான் நாங்க காதலிக்க ஆரம்பிச்சோம்”

"இவ உயர் சாதி. ஆனா யார்னே தெரியாம அநாதை ஆசிரமத்துல வளரந்த என்னை இவ வீட்ல ஏத்துக்கல. ஆனா இவளோட பிடிவாதம் கல்யாணத்துல கொண்டு வந்து நிறுத்திச்சி” என்றான் நிகிலன் ஊர்மிளாவை தொடர்ந்து.

“கலப்பு கல்யாணம்லாம் இந்த ஊர்ல அதிசயத்திலும் அதிசயம் சார். எப்பாடு பட்டாவது பிரிச்சிடுவாங்க. இவ குடும்பமுப் அதுக்கு விதி விளக்கல்ல” என்றவன் கசப்பாய் புன்னகைத்தான்.

“இவளோட பிடிவாதத்துக்காக ஒத்துக்கிறாமாதிரி ஒத்துக்கிட்டு கல்யாணத்தன்னைக்கு பிரச்சனை பண்ணி அதே மேடையில இவ சொந்தக்கார பையனை மாப்பிள்ளையாக்கி எங்களுக்கே தெரியாம முன்னேற்பாடா கூட்டிட்டு வந்திருந்தாங்க சார்.

அந்த கல்யாணத்துக்கு சின்னாவும் வந்திருந்தார்” என்றவனின் முகம் நெகிழ்ந்தது.

"எரிஞ்சி போன தன்னோட மண்ணை எடுத்துட்டு வந்து அதை திரும்ப எப்படி வளமா மாத்துறதுன்னு எங்கிட்ட வந்திருந்தார் சின்னா” அப்படித்தான் எங்களுக்குள்ள பழக்கம்.

“அதேப்போல வளமான நிலம் எங்க கிடைக்கும்னு அவர் தேடினப்போ, எனக்கு தெரிந்த சில இடங்கள் நான் காட்டினேன்.

ஆனா, ‘என்னால ரொம்ப நாள் ஒரே இடத்துல இருக்க முடியாது கொஞ்ச நாளைக்கு குத்தகைக்கு கிடைச்சா போதும்னார்’

சோழவரம் ஏரி பாசனம் பக்கத்துலயா ஓரக்காடு கிட்ட அப்படி ஒரு இடத்தை நான்தான் அவருக்கு முடிச்சிக் குடுத்தேன். அது சம்மந்தமா அடிக்கடி பேசினதுல என் விருப்பத்தின் பெயரில் சின்னா என் கல்யாணத்துக்கு வந்திருந்தார்”

சின்னா கருடன் சம்பாவை ஓரக்காடு அருகில் நிகிலன் காண்பித்த இடத்தில்தான் மீள் உருவாக்கம் செய்திருக்கிறார் அத்தோடு அவ்வப்போது சொந்த ஊருக்குச் சென்று தன் எரிந்த வயலையும் மீட்டெடுத்திருக்கிறார் என்று புரிந்து கொண்டான் அரவிந்தன்.

“அப்போ கருடன் சம்பா நம்ம கிராமத்துலதான் இருக்கா சார்" என்றான் ஆர்வமிகுதியாய் மணிகண்டன்.

“முதலில் இங்க தேடாமயா பசுபதி கோவில் வரை தேடி போயிருப்பேன்" என்ற அரவிந்தன், “இங்க வளர்த்துருக்கலாம். ஆனா அறுவடை பண்ணி முடிச்சிட்டார். இல்லையா? நிகிலன்" என்றான்.

“எனக்கு அவர் என்ன பயிரிட்டார்னு எதுவும் தெரியாது சார். அவர் வயலுக்கு யார் போறதையும் ஏனோ அவர் விரும்பினதில்ல. அதனால அவருக்கான பிரைவஸிய குடுத்து நான் தலையிட்டதில்ல" என்றான் அவன்.

"அதுவும் போச்சா! இந்த கருடன் சம்பா கிடைக்கிறதுக்குள்ள கருகருன்னு இருக்க என் மொத்த முடியும் கொட்டிடும்” என்ற மணிகண்டன், " யூ கண்டினியூ சார்” என்று நிகிலனிடம் கல்யாணக் கதையை தொடரச் சொல்ல, தன்னை மறந்து சன்னமாய் சிரித்தாள் ஊர்மிளா.

“சொல்லி வச்சா மாதிரி என் பையன் இருக்கும்போது ஒன்னுமில்லாத பயலுக்கு அதுவும் யார்னே தெரியாத அநாதைக்கு பொண்ணு குடுக்க ஒத்துக்க மாட்டேன்னு மண்டபத்துல பிரச்சனை பண்ணி தாய்மாமன் ஸ்தானத்துல உட்கார்ந்து என்னை தாரை வார்த்து குடுக்க மாட்டேன்னுட்டார் என்னோட சொந்த மாமன்.

முதல்லயே தெரிஞ்சிருந்தா நாங்க ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணி இருப்போம். இப்படி நம்ப வச்சி கழுத்தறுப்பாங்கன்னு தெரியாம நான் திணறிட்டு இருந்தப்ப என்னைய மணமேடைலருந்து இழுத்துவிட்டுட்டு அவரோட பிள்ளைய உட்கார வச்சபோதுதான் இது சதின்னே என்னால புரிஞ்சிக்க முடிஞ்சிது” என்ற நிகிலன் அந்த நாளுக்கே சென்றிருந்தான்.

யாரும் எதிர்பாரா வண்ணம்,

“யார்ரா சொன்னது என் அண்ணன் பையனை அநாதைன்னு” மீசையை முறுக்கிக் கொண்டு எழுந்த சின்னாவை அந்த மண்டபமே அதிசயமாக பார்த்திருக்க நிகிலனுக்கும் அதிர்ச்சியே!

இதை சற்றும் எதிர்பாராத மணமகள் வீட்டார் அதிர்ந்து நிற்க, அந்தக் கணத்தை தனக்கு சாதகமாக்கிக் கொண்டார் சின்னா.

"சின்னதுல வளர்க்க காசில்லைன்னு ஆசிரமத்துல விட்டு வச்சிருந்தா இஷ்டத்துக்கு பேசுவியலோ! இப்போ சம்பாதிச்சி வச்சிருக்கேன்ல கோடி கணக்குல சொத்து எல்லாம் என் அண்ணன் பையனுக்குதான்” என்று எழுந்து மேடேயேறி வந்தவர்,

“என்னடே திடீர் மாப்ள! உனக்கு தனியா சொல்லணுமோ? தைரியமிருந்தா என் அண்ணன் பையனுக்கு பதிலா உட்காரு பார்ப்போம்" என்று சீற, அவர் சிம்மக் குரலில் தானாக எழுந்திருந்தான் அந்த அவசரத்துக்கு உதித்தவன்.

புதிதாக ஒருவன் தன்னருகில் அமர்ந்ததுமே மாலையுடன் எழுந்த மணமகளை அவளது தாய்மாமன் மனைவி அழுத்தி பிடித்திருக்க, அவரிடமும் நெருங்கிய சின்னா,

“உங்க கணவர் தாரை வார்த்து தரலைன்னா என்ன? நிகிலனுக்கு அப்பான்னா நானும் இவளுக்கு மாமன்தானே!

ஏன்டா உனக்கு ஒன்னும் ஆட்சபனை இல்லையே?” என்று அவரிடமிருந்து திரும்பி ஊர்மிளாவிடம் கேட்க, அவள் தலை ‘இல்லை’ என் நீர் நிறைந்த விழிகளுடன் தலையாட்டியது.

அடுத்த நொடி அவளை தன் மடியில் அமர்த்தி நிகிலனுக்கு தாரை வார்த்துத் தந்திருந்தார் சின்னா. அவரது மடியில் அமர்த்தி நிகிலனும் தாலியை கட்டி முடித்து ஊர்மியை மனைவியாக்கிக் கொண்டான்.

அநாதை இவனை எளிதாக விரட்டி விடலாம் என்றே நினைத்திருந்த ஊர்மிளாவின் உறவினர்கள், அப்படியும் நிகிலன் பிரச்சனை செய்தால் மண்டபத்துக்கு வெளியே அரிவாள் தடிகளுடன் ஆட்களை வேறு நிறுத்தி வைத்திருந்தனர்‌.

அவர்கள் நிலைகுலைந்திருந்த சமயத்தில் திருமணத்தை முடித்திருந்தார் சின்னா.

மண்டபத்தைவிட்டு வெளியேற விடாமல் அடியாட்கள், நிகிலனை சூழ்ந்து தாக்க வர, வேஷ்டியை மடித்துக் கட்டிய சின்னா, போட்டிருந்த பந்தக்காலை பிடுங்கி சுழற்றிய சுழற்றில் ஒருவராலும் மணமக்களின் அருகில்கூட நெருங்க இயலவில்லை.

தன் திருமணநாளை நினைத்துப் பார்த்த நிகிலனின் முகத்தில் புன்னகை.

அப்படி கலாட்டாவாக நடந்து முடிந்த நிகிலனின் கலப்பு திருமணம் அன்றைய செய்தித்தாளில் கூட வந்திருக்க, அதை எப்போதோ அரவிந்தனும் கேள்வி பட்டிருந்தான். இந்த ஊருக்கு பணியிடமாற்றம் என்றபோது முதல்முறை கலப்பு கல்யாணம் நடந்த ஊர் என்றொரு ஆர்வம் இருந்தது. அதற்கும் காரணமானவர் தன்னுடைய அபிமானங்களுக்கு உடைய சின்னாதான் எனும்போது அவனுக்கு பெருமகிழ்ச்சியே.

“அதுக்கு அப்புறமும் இவ பேரண்ட்ஸ் சும்மா இருப்பாங்கன்ற நம்பிக்கையில்ல. ஏன்னா எங்க ஊரோட வரலாறு அப்படி. எத்தனையோ ஓடிப்போன பிள்ளைங்களகூட இழுத்து வந்து வேற திருமணம் பண்ணி வச்சி அதுங்களும் பயந்து வேற வழியில்லாம வாழ்ந்திருக்காங்க.

பாதுகாப்புக்காக கொஞ்சநாள் எங்ககூடவே இருங்களேன்னு கேட்டப்போ சின்னா மறுக்கல. ‘எனக்கும் சொந்தம்னு சொல்லிக்க பெருசா யாருமில்லன்னு’ ஒத்துக்கிட்டார். அதுக்கு அவர் குத்தகைக்கு எடுத்திருந்த வயல் ஓரக்காடு பக்கம் இருந்ததும் ஒரு காரணம்.

ஆரம்பத்தில ஊர்மிக்கு பயமிருந்தாலும் சொந்த பந்தமெல்லாம் ஒதுக்கிட்ட அவ, தாயாகி நின்னப்போ தாய்க்கு தாயா நின்னு கவனிச்சிட்ட மனுஷன தன் சொந்த அப்பாவாவே ஏத்துக்கிட்டா…

ஊர்மி தாயாகவும் எங்களுக்காக நிரந்தரமா எங்ககூடவே தங்கிட்டார். அப்பப்போ சொந்த ஊருக்கு போய்ட்டு வருவார். மத்தபடி அவரைப் பத்தி கேட்டா, ‘என்னோட வலி என்னோடயே போகட்டும் டா. மாசமா இருக்க நீ அதெல்லாம் தெரிஞ்சிக்க வேணாம்னுடுவார்’ நாங்களும் அதுக்கும்மேல அவரை வற்புறுத்தினதில்ல.

அன்பிலரசியை பெத்தது மட்டும்தான் ஊர்மிளா. கிட்டயிருந்து அவளோட அம்மா பார்த்திருந்தாகூட அப்படி ஊர்மிளாவையும் குழந்தையையும் பார்த்திருப்பாங்களா தெரியாது.

குழந்தைய எப்படி தூக்கணும்னுகூட தெரியாது ஊர்மிக்கு. ஆனா அனுபவம் வாய்ந்த மனுஷன் போல இராவெல்லாம் கண்முழிச்சி அழும்போது தாலாட்டி சிரிக்கும்போது கோமாளியாகி அன்பாவ வளர்த்தது எல்லாம் சின்னாதான்” என்றபோது நிகிலனின் கண்கள் கொஞ்சம் கலங்கியிருந்தது.

‘அனுபவமா! பெரிய அன்பிலரசி முதல் தேன்மதியிலிருந்து இளவரசி வரை அவர் வளர்த்தது அத்தனையும் குழந்தைகள் தானே! அவருக்கில்லாத அனுபவமா?’ மெலிதாய் சிரித்தான் அரவிந்தன்.

“எல்லாம் நல்லாதான் போய்ட்டு இருந்தது சுந்தரியோட புருஷன் எங்க வீட்டு வாசலை மிதிக்கிற வரைக்கும்" என்ற நிகிலன் நிறுத்தினான்.

அன்று விடிந்ததும் வாசல் தெளித்துக் கொண்டிருந்தாள் ஊர்மிளா‌.

“ஏய் இந்தாம்மா என் பொண்ண வெளில வரச் சொல்லு" இரவு அடித்த சரக்கு தெளிந்தும் தெளியாத போதையில் வந்து நின்றான் சுந்தரியின் கணவன்.

“யார் பொண்ணு எங்க வந்து தேடுற?" ஊர்மிளா அதட்டினாள்.

“அதான் இந்த வீட்டு பெரிய மனுஷன் நைட்டெல்லாம் என் பொண்டாட்டியோட கூத்தடிக்க என் பொண்ண இங்க அனுப்பிடுறான்ல, எதும் தெரியாத மாதிரி நடிக்கிறியா" என்றவனை ஊர்மி புரியாமல் பார்க்க
உள்ளே நுழைந்தார் சின்னா.

“இந்தா வாரார் பாரு பெரிய மனுஷன் நைட்டெல்லாம் ஆட்டம் போட்டுட்டு. யோவ் என் பொண்ண எங்க?"

“உன் பொண்ண ஏன்பா என்வீட்ல வந்து தேடுற? என் பையன் வந்தா தோல உரிச்சி தொங்க விட்ருவான் கிளம்பு” என்று சொல்லவும் நடைபயிற்சி முடித்து நிகிலனும் திரும்பி வந்திருந்தான்.

“என்னைக்காவது வசமா மாட்டமயா போய்டுவ அன்னைக்கு வச்சிக்கிறேன்" என்றவன் நிகிலனைக் கண்டதும் ஓடிவிட்டான். திருதிருவென முழித்தபடி வாசலிலேயே நின்றிருந்தாள் ஊர்மிளா.

‘சாற்றியிருந்த கதவுக்குள் மூடிக்கொண்டு தூங்குவது தலையணையால் இவர் செய்து வைத்த செட்டப்பா? கதவை திறந்து பார்த்துவிட்டுத்தானே வந்திருந்தாள். வெளியிலிருந்து வந்த சின்னாவை கண்டு புரியாது முழித்தாள் ஊர்மி.

எத்தனை நாட்களாக இது நடக்கிறது? சேலையை வரிந்து கட்டிக்கொண்டு உள்ளே நுழைய, நிகிலன் காலணிகளை கழற்றிவிட்டு
வருவதற்குள் தந்தைக்கும் மகளுக்கும் ஒரு பிரளயமே ஆரம்பித்திருந்தது.

“என்னப்பா இதெல்லாம்? எங்க போய்ட்டு வர்ரீங்க? அந்த சுந்தரிய பத்தி ஊரே தப்பா பேசுதேப்பா. எதுக்கு உங்களுக்கு இந்த தேவையில்லாத வேலை?” காரசாரமாக சண்டையிட்டவளிடம் சிறு பிள்ளையாய் தலைகுனிந்து நின்றிருந்தார் சின்னா.

“அந்த நாய் சொன்ன காரணத்துக்காக கண்டிப்பா நீங்க அங்க போயிருக்க மாட்டீங்க… ” என்றவளின் விழிகள் உடைப்பெடுக்க அதற்காகவவே காத்திருந்ததுபோல் அவளது கையைப் பற்றிக் கொண்டார் சின்னா.

"அப்பா மேல அந்த நம்பிக்க இருக்கில்லடா”

அவள் அழுகையுடன் “ம்ம்" என தலையாட்ட, "அதுக்கும் மேல எதும் கேட்கக் கூடாது. ஓடு.. ஓடு.. அப்பாக்கு கொஞ்சம் நீர்மோர் கொண்டா” என்றதும் மறந்து உள்ளே ஓடிய மனைவியைக் கண்டு சிரித்தான் நிகிலன்.

இப்படியான செல்லச் சண்டைகள் அவர்களுக்குள் அடிக்கடி நடக்கும்.

என்ன சொன்னாலும் கேட்காமல் பால்வாங்க போகிறேன் என்று கிளம்பும் மனிதர் உச்சி பொழுதுக்குதான் திரும்புவார். சமயத்தில் பால் சொம்பு மட்டுமே யாருடனாவது வீடு வரும்.

“சாப்பிடாமல் கொள்ளாமல் அப்படி என்ன கதை வேண்டியிருக்கு” என்று கண்டபடி வெளுத்து வாங்கும் பெண்ணிடம் சிரித்தபடி வசுவுகளை வாங்கிக் கொள்வார்.

சமயத்தில் நிறைமாத வயிறோடு சரஸ்வதி பாட்டி வீட்டுக்கே சாப்பாடு கூடையோடு செல்பவளை கடிந்து கொள்வார் சின்னா.

“நீங்க வீட்டுக்கு வந்தா நான் ஏன் தேடி வரப்போறேன். நீங்க சாப்பிடலைன்னா உங்க புள்ளை என்னையத்தான் திட்டுவார்” என்று போலி காரணத்துடன் அங்கேயே சண்டை பிடித்து இழுத்து வருபவளைத்தான் இந்த ஊர் கண்டிருக்கிறது.

உண்மையில் நிகிலனை விடவும் சின்னாமீது அதிகம் அன்பு வைத்திருந்தவள் ஊர்மியே. நிகிலனின் உயிரை எடுக்க நினைத்த பெற்றோரை அறவே வெறுத்தவள் சின்னாவின் மீது அந்த பாசத்தைக் கொட்டினாள்.

சின்னா எங்கு சென்றாலும் குறிப்பிட்ட நேரத்துக்குள் திரும்பவில்லை எனில் பதறிப்போவாள். அவர் இருக்கும் இடத்துக்கே சென்று சண்டையிட்டு கூட்டி வருவாள்.

மொத்தமாக ஊரையே விட்டுவிட்டு வந்தவர் எங்கே தங்களையும் விட்டுச் சென்றவிடுவாரோ என்று உள்ளூர பயம் அவளுக்கிருந்தது. அதற்கேற்றார்போல் சின்னாவும் திடிர் திடிரென ஊர் ஊராய் சென்று வருவார்.

அவர் திரும்பியதும் சண்டை பிடிப்பவளிம், “என் உயிரைத் தேடி ஓடுறேன் டா. ஒருநாள் இல்ல ஒருநாள் எனக்காக காத்திருப்பா" என்பார் கண்கள் கலங்க. அதனாலயே உள்ளூர பயம் கொண்டிருந்தாள் ஊர்மி.

அந்த பயத்தின் வெளிப்பாடு கோபமாய் அவரிடம் வெடிக்கும். சிரித்துக் கொண்டே அனைத்தையும் தாங்கிக் கொள்வார் அந்த மனிதர்.

அவர்களது செல்லச் சண்டை என்று அறிந்திருந்தவன் நிகிலன் மட்டுமே! அவனுமே சின்னா தொலைந்தபோது ஊர்மியை பேசிவிட்டு சற்றுத் தடுமாறிப் போனான்தானே!

உள்ளே நுழைந்த நிகிலனும், “அவன் ஆளு ஒருமாதிரி. ஏம்பா உங்களுக்கு தேவையில்லாத பிரச்சனை?" என்றான்.

“உனக்கு அப்பா மேல நம்பிக்கை இல்லன்னா சொல்லு நான் அங்க போகல” என்றவர் ஊர்மி நீர்மோருடன் வருவதைக் கண்டதும், “என்னை ஹோம்ல சேர்த்து விட்ரு. நம்பிக்கை இல்லாத இடத்துல எனக்கென்ன வேலை” என வேண்டுமென்றே முகத்தைத் திருப்ப, “எங்க அவர் சேர்த்துதான் பார்க்கட்டுமே" என்றாள் ஊர்மி.

இருவருக்கும் சேர்த்து கையெடுத்து கும்பிட்டவன், "அப்பாவாச்சி பொண்ணாச்சி என்னை ஆள விடுங்க. நான் என் பொண்ணை பார்க்கப் போறேன்” என்றவன் சின்னாவின் அறையினுள் நுழையப் போக ஓடி வந்து இடைப்புகுந்தார் சின்னா.

"பாப்பா தூங்குறா. நீ போய் குளி போ ஆஃபீஸ்க்கு நேரமாச்சில்ல” என்றவர் திருதிருவென முழிக்க, உள்ளிருந்து குட்டி அன்பிலரசியை தூக்கிக் கொண்டு வந்தது சிறு பெண் ஒன்று.

பள்ளிக்கூட சீருடை அணிந்திருந்த பெண்ணைக் கண்டு, நிகிலனும் ஊர்மியும் அதிர்ந்து நின்றிருக்க, “அக்கா போலாத பாப்பா பாவம்" தூக்கக் கலக்கத்தில் சிணுங்கினாள் இடுப்பிலிருந்த குட்டி அன்பிலரசி.

யாரிடமும் சட்டென ஒட்டிக்கொள்ளாத குட்டி அன்பா அக்கா போகாதே என அடம்பிடிக்கிறாள் என்றால் எவ்வளவு நாளாக இது நடக்கிறது? நிகிலனும் ஊர்மியும் ஒரு சேர முறைக்க கெஞ்சலாய் பார்த்தது அந்த வளர்ந்த சின்னா எனும் குழந்தை.



 
Last edited:

Author: STN - 39
Article Title: சின்னா 'தி ரோமியோ' - 22
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

suji

Member
Aug 29, 2021
30
25
18
germany
ஆகமொத்தம் சின்னாவை ஊருக்கே நேந்துவிட்டாச்சி
 
  • Love
Reactions: STN - 39

STN - 39

Member
Nov 30, 2025
76
59
18
Chennai
ஆகமொத்தம் சின்னாவை ஊருக்கே நேந்துவிட்டாச்சி
ஊருக்கு இரண்டுபேராவது நல்லவர்கள் இருக்கட்டுமேன்னு ஒரு நல்ல எண்ணம்தான்...😝
 

Gowri Karthikeyan

Well-known member
May 5, 2026
1,289
370
83
Chennai
அவன் வாழ்வை அவன் வாழ்வே இல்லையே???? கொஞ்சமாவது சுயநலமா இருந்து இருக்கலாம் இவன்
 
  • Like
Reactions: STN - 39

STN - 39

Member
Nov 30, 2025
76
59
18
Chennai
அவன் வாழ்வை அவன் வாழ்வே இல்லையே???? கொஞ்சமாவது சுயநலமா இருந்து இருக்கலாம் இவன்
ம்ம்... அவனுக்கு அவளைத்தவிர வாழ்க்கைய யோசிக்க தெரியல.. யோசிக்கிற எண்ணமும் அவனுக்கில்ல