• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

சின்னா 'தி ரோமியோ' - 23

STN - 39

New member
சின்னா - 23

“சாரிப்பா! கொஞ்சம் அசந்து தூங்கிட்டேன்" என்று அந்தப்பெண் சின்னாவிடம் குழந்தையை ஒப்படைக்க,

“அப்பாவும் இன்னைக்கு லேட்டா எந்திரிச்சிட்டேன் டா. இல்ல அப்பவே எழுப்பி விட்ருப்பேன். இன்னும் வரலையேன்னு உங்கம்மா பயந்து தேடிக்கிட்டு இருக்கா” என்றவர்,

“வா அப்பா உன்னை விட்டுட்டு வந்துடுறேன். பள்ளிக்கூடம் போக வேற நேரமாச்சில்ல" என்று குழந்தையை ஒப்படைத்தவர், மருமகளது முகத்தை அனுமதி வேண்டி பார்க்க, ‘போய்ட்டு வாங்க வச்சிக்கிறேன்’ என்றது ஊர்மியின் பார்வை.

"சுந்தரி புருஷன் வந்து சண்டை போட்டதை மட்டும் சொல்லிட்டு நம்ம சரஸா புருஷன் சண்டை போட்டத விட்டுட்டியே நிகிலா" என்று இடையிட்ட குரலில் வெளியில் எட்டிப் பார்த்தான் மணிகண்டன்.

கண்ணில் கூலிங் க்ளாஸ் சகிதம் நின்றிருந்தது மூவர் படை.

என்னை விட்டு ஓடிப்போக முடியுமா… முடியுமா? நீங்கள் இருவரல்ல நாம் ஐவர் இனி தெரியுமா தெரியுமா…”

“இதில் பாட்டு வேற” மணிகண்டன் தலையிலடித்துக்கொள்ள சிரித்தான் அரவிந்தன்.

“ஏன்டி சரஸா! மாடு எது சாணி எதுன்னு தெரியாம குடிச்சிப்புட்டு விழுந்துகிடக்குற உம் புருஷன் டிப்டாப்பா குழலு மாட்டிக்கிட்டு ஊர்மி முன்னாடி போய் பயங்காட்டல” என்றார் பெரியாத்தா.

“அந்த டிப்டாப்புல விழுந்தவதான். கல்யாணம் ஆகி நாப்பது வருஷமா எந்திரிக்கல” பகடி அடித்தார் பார்வதி.

‘இந்தா ஆரம்பிச்சாட்டாங்கல்ல’ என மணிகண்டன் தலையிலடிக்க, "முள்ளம்பன்றி அழகா இருக்குன்னு தலைக்கு முட்டுக்குடுத்து படுக்கவா முடியும்” என்றார் சரஸ்வதி தன் கணவரை சாடையாக.

“எதாவது புரியுதா பாரு…" வெளிப்படையாக நொந்தான் மணி.

ஒருநாள், “இந்தாம்மா பொண்ணே! எங்க என் ஊட்டு பால்காரி? கூப்பிடு அவளை. என் பொண்டாட்டிய உன் மாமனார்தான் படத்துக்கு கூட்டிட்டுப் போவானா? இங்க பார் இரண்டு டிக்கட்டு. அடிமைப் பெண் ரீ ரீலீஸ்” என்று கண்ணில் கூலிங் கிளாஸூடன் ஊர்மியிடம் டிக்கட்டை கையில் தட்டிக் காட்டினார் சரஸ்வதியின் கணவர்.

“சாரி தாத்தா! நீங்க ரொம்ப லேட். உங்க ஊட்டு பால்காரி இப்போ என் மாமனாரோட தோஸ்த்துக்காரி. அக்கட சூடு நைனா” என்று அவர் முகத்தைப் பிடித்து திருப்பிக் காட்ட,

“யோவ் இங்க என்னய்யா பண்ற? அடிமைப் பெண்ண நீயே பாரு! நான் மங்காத்தா ரீ ரீலீஸ் போறேன்யா. நீ மாடுங்கள பார்த்துக்கய்யா…" என்ற சரஸா, "ராமன் ஆண்டாளும் இராவணன் ஆண்டாளும் எனக்கொரு கவலையில்ல’ என டாட்டா காட்டிவிட்டு சின்னாவுடன் புல்லட்டில் பறந்தார்.

“வந்துட்டாரு தும்பை விட்டு வாலைப் புடிக்க. வயசுல நல்லா வச்சி பார்த்திருந்தா என் மாமனார ஏன் அந்தம்மா தேடப்போவுது. இந்த மனுஷனும்தான் இந்த ரவுடி பொம்பளைங்களோட சுத்தாதீங்கன்னா கேட்கிறாரா…

போய்யா! போய் ஒழுங்கா மாட்டை போய் பாரு.. அப்புறம் குடிக்கிற கஞ்சிக்கும் ஆப்படிக்கப் போகுது அந்தம்மா" என விரட்டியடித்தாள் ஊர்மி.

அத்தோடு நின்றுவிடவில்லை ஊர்மியின் போராட்டம். பள்ளி பிள்ளைகளின் அலைபேசி, மின்னஞ்சல்களில் எங்கெங்கிருந்தோ அழைப்புகளும் செய்திகளும் வருவதாக பெற்றோர் புகார்கள் வேறு. அத்தனையும் ஒற்றை ஆளாக சமாளித்தவள், “ஏம்பா இப்படி பண்றீங்க" என்று சின்னாவிடம் காய்வதும் அவர் சிரித்தே சமாளிப்பதும் வழக்கமான ஒன்று.

மகளின் சேட்டைகள் அவளை சோர்வடைய செய்ததில்லை. மாறாக, தன் மகளை கவனித்துக் கொண்ட தலைமகனின் சேட்டையில்தான் சோர்ந்து போவாள்.

பெரியாத்தாவின் மக்கள் அவரது சொத்தை பிடுங்கிக் கொண்டு வீட்டுத் திண்ணையில் போனால் போகட்டும் இருந்து கொள் என்பது போல் அநாதையாய் விட்டு வைத்திருக்க, கலெக்டர் ஆஃபீஸில் பெரியாத்தாவின் மூலம் புகார் அளிக்கப் போவதாக மிரட்டி அவருக்கென அவர் வாழ்ந்த வீட்டை மீட்டுக் கொடுத்த சின்னா, நாலைந்து ஆட்டுக் குட்டிகளையும் அவர் வாழ்வாதாரத்திற்கென வாங்கி விட்டார்.

ஒரு வாய் கஞ்சி பிள்ளைகளிடம் வாங்கிச் சாப்பிட கூனிக்குறுகிய பெரியாத்தா கோவிலில் கிடைத்த உணவை சாப்பிட்டு உண்டு மரணத்தை எதிர்பார்த்திருக்க, அதே கோவிலில் அன்னதானம் வழங்கும் அளவுக்கு நெஞ்சை நிமிர்த்தி வாழ வைத்திருந்தார் சின்னா.

அதற்கும் அவரது பிள்ளைகள் நிகிலனையும் ஊர்மியையும்தான் திட்டிவிட்டுச் சென்றனர்.

வெளிநாட்டில் வசிக்கும் மகன் பணத்தை மட்டும் பார்வதிக்கு அனுப்பிவிட்டு வர மறுக்க, ‘வாழ்க்கை வாழ்வதற்கே’ என்று நினைத்த போது ஒரு படம், தோழிகளோடு விளையாட்டு என அவருக்கு வாழ்வின் வேறு பக்கத்தை காட்டியதும் சின்னாதான்.

“இப்படி சின்னா பண்ற அத்தனை குசும்புக்கும் மாட்டுறது என்னவோ ஊர்மிதான். என்னவோ பிறந்தநாளும் அதுவுமா கோவிலுக்கு போய்ட்டு வரேம்மான்னு அந்த பிள்ளைக்கிட்ட சொல்லிட்டுப் போன மனுஷன் இதோ ஒரு மாசமாகப் போகுது” என்று பெரியாத்தா பெருமூச்சிவிட,

"பிறந்தநாள் அன்னைக்கா?” என்ற அரவிந்தனுக்கு பொட்டிலறைந்தது.

“சார் அந்த பேப்பர்” என்ற மணிகண்டன் அவசரமாய் சின்னாவின் அறைக்குள் நுழைந்து பேப்பர்களை புரட்ட, ஜல்லி கரண்டி ஒன்று சுளீர் என அவன் முதுகில் பாய்ந்தது.

“சின்னாது தொடத பாப்பா சொல்லிருக்கேன்ல” என்று கரண்டியை பிடித்தபடி நின்றிருந்தாள் குட்டி அன்பிலரசி.

ஒரு கையில் முதுகையும் மறுகையில் செய்தித்தாளையும் கசக்கிப் பிடித்தபடி வெளியில் வந்த மணிகண்டன், “பந்திக்கு மட்டும்தான் முந்தனும்னு புரிஞ்சிடுச்சி சார்" என்றான் வலியுடன்‌.

“உனக்கு தேவதாம்ல" என்ற பெரியாத்தாவின் தலையிலும் ஒன்று வைக்கச் சொன்னான் குட்டி அன்பிலரசியை. அது “அப்பத்தா பாவம்" மறுத்துத் தலையாட்டியது.

அரவிந்தன் செய்தித்தாளை அவசரமாகப் புரட்டினான். அதில் குறிப்பிட்டப் பகுதி மட்டும் கிழிக்கப் பட்டிருக்க, அவனது சந்தேகம் ஊர்ஜிதமானது.

“இங்க வேற யார் வீட்ல இந்த பேப்பர் வாங்குவாங்க?"

“மோஸ்ட்லி யாரும் இல்ல சார். சின்னாவே இதை பஸ் ஸ்டாண்ட்ல போய்தான் வாங்கிட்டு வருவார்" என்றான் நிகிலன்.

சரவணப் பெருமாளுக்கு அழைத்து குறிப்பிட்ட தேதியில் அந்தச் செய்தித்தாளை எங்கேனும் லைப்ரரியில் வாங்கிவரச் சொல்லிப் பணித்தவன் அலைபேசியை துண்டிக்க,
தயங்கியபடி உள்ளே எட்டிப் பார்த்தாள் சுந்தரி.

“உள்ளே வாங்க!" என்று ஊர்மிளா அழைத்த பின்னரே உள்ளே நுழைந்தாள்.

“மன்னிச்சிடுங்க சார்! நீங்க அன்னைக்கு தேடி வந்தப்போ என் பொண்ணோட பாதுகாப்புக்காக என்னால எதையும் சொல்ல முடியல” என்று அரவிந்தனிடம் கையெடுத்துக் கும்பிட்டாள்

"இதுக்கு முன்னாடி இருந்த இன்ஸ்பெக்டர்கிட்ட எவ்ளோ கம்ப்ளைண்ட் குடுத்தும் என்னை கேவலமா பார்ப்பாரே தவிர என் புருஷன் மேல எந்த நடவடிக்கையும் எடுத்ததில்ல. அதனாலதான் உங்களையும் முதலில் நம்பல” என்றாள்.

“என் பொண்ணையும் என்னை மாதிரியே இந்த சாக்கடைல தள்ளப் பார்த்தான் சார் எம் புருஷன்” என்று கொதித்தவள்,

“ஒவ்வொரு மாசமும் எனக்கு பீரியட்ஸ் வரும்போது செத்து செத்து பொழைச்சேன் சார். அந்த டைம்ல எனக்கு பதிலா என் பொண்ணக் கூட்டிக் குடுக்க நாயா அலைஞ்சான் சார் அந்த படுபாவி.

அப்படி ஒருநாள் எனக்கு பதிலா என் பொண்ணை தரதரன்னு இழுத்துட்டு போகும்போதுதான் அவனுக்கு ஒரு அறை விட்டு விரட்டி விட்டார் சின்னா.

‘உனக்கு காசுதானே வேணும். இந்த மூணு நாளும் இவகூட நான் இருக்கேன்னு’ அந்த ஆள் மூஞ்சில காச தூக்கி வீசுனார்.

இராவெல்லாம் வயிறு வலில துடிச்ச எனக்கு சுடு தண்ணி வச்சிக் குடுத்து சுக்கு காப்பி போட்டுன்னு அம்மாவா கிட்டருந்து பார்த்துக்கிட்ட ஒரு ஆம்பிளைய அதுவரை என் வாழ்க்கைல நான் பார்த்ததே இல்ல” என்றவள் வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள்.

“அதுவரைக்கும் என் பொண்ணுக்கு என்னைப் பத்தி எதுவுமே தெரியாது. என் அம்மா வீட்ல வச்சி வளர்த்தேன். அன்னைக்கு எனக்கு உடம்பு முடியலைன்னதும் சொல்லிக்காம என்னை பார்க்க வந்தவ அந்த மிருகத்து கண்ல மாட்டிக்கிட்டா. அதுவரை பொண்ணுன்னு எட்டியே பார்க்காதவன் கண்ணுக்கு என் பொண்ணு குதிரையா வளர்ந்து நின்னதுதான் தெரிஞ்சிருக்கு. அதுக்கப்புறமும் என் பொண்ண அம்மாகிட்ட விட்டு வைக்கிறது ஆபத்துன்னு என் கூடவே வச்சிக்கிட்டேன்.

அந்த நாய்க்கு தினமும் ஆயிரம் ரூவா வாக்கரிசி போட்டுட்டா அது எங்களை சீண்டாது சார். என் பொண்ணு ஸ்கூலுக்கு போற நேரம் தொழில் பார்த்து அவன் மூஞ்சில வீசியெறிஞ்சன்.

சின்னா இந்த தொழிலை விட்டுடச் சொல்லி எவ்வளவோ என்கிட்ட கெஞ்சினார். என்னை ஹாஸ்பிட்டல் எல்லாம் கூட்டிக் கொண்டு ஏதேதோ செக்கப்லாம் பண்ணினார்.

வேற தொழில் வச்சித் தரேன்னுகூட சொன்னார்.
ஆனா நான் இதை பண்ணமாட்டேன்னு சொன்னா என் பொண்ண இழுத்துட்டு போய்டுவானோன்னு பயந்தே இந்த சாக்கடைல உழன்றுட்டு இருந்தேன்.

எங்கிருந்தாலும் சொல்லி வச்சா மாதிரி அந்த மூணுநாளும் என்னைத் தேடி வந்திருவார் சின்னா. என் வாழ்க்கைல அந்த மூணுநாளும்தான் சார் நான் நிம்மதியா தூங்கின இரவுகள்.

ஆனா அந்த மூணு நாளும் அன்பா பாப்பா தனியா தூங்குமேன்னு தவிச்சி போவார் சின்னா.

என் பொண்ணுதான் ‘உங்களுக்கு பதிலா நான் அங்க இருக்கேன்பா’ ன்னு இங்க நிகிலன் அண்ணா வீட்ல வந்து படுத்துப்பா.

இப்போ சின்னா என் பொண்ண சென்னைல ஹாஸ்டல்ல சேர்த்து விட்டுட்டார். அப்பான்னு கையெழுத்து போட்டதும் அவர்தான். நானோ சின்னாவோ போனா மட்டும்தான் என் பொண்ண பார்க்க முடியும்” என்ற சுந்தரியின் முகத்தில் நிம்மதி தெரிந்தது.

"சின்னாகிட்ட அவசரத்துக்கு காசு இல்லன்னு உங்க அக்கவுண்ட்ல இருந்த ஒன்னரை இலட்சத்ததாம்மா எடுத்து ஸ்கூல்ல கட்டி இருக்கார் அதை எப்படியும் திருப்பிக் குடுத்துடுவேன்" என்றாள் சரஸ்வதி பாட்டியிடம்.

"அடப்போடி இவ ஒருத்தி. என் புருஷன் மாட்டு தீவனத்துக்கு கூட காசில்லாம் அம்புட்டையும் குடிச்சிப்புடுறான்னுதான் சின்னா பேங்க்ல பணத்த போட்டுச்சி… இன்னைக்கு என் மாடும் நானும் அந்த மனுஷன் புண்ணியத்துல வயிறாற சாப்பிடுறோம் அது போதும் போ. நீ உடம்ப வித்து தரதுலதான் பொழைக்க போறனா.. பிள்ளை படிப்புக்குதானே விடு” என்றார் சரஸ்வதி.

“இல்லம்மா நான் இப்போ பஸ் ஸ்டாண்ட் கிட்ட இட்லி கடை வச்சிருக்கேன். என்ன பழைய சோக்குல சில காவாலி பசங்க வம்பிழுக்கானுவ” என்றாள்.

“நம்ம போலீஸ் ஸ்டேஷன் எதிர்க்க கொஞ்ச நாள் கடைய போடுங்க” என்ற அரவிந்தன் ‘பார்த்துக் கொள்’ என்பதாய் மணியிடம் கண்காட்ட,

“ஆமாப்பு, நம்ம அரவிந்தன் தம்பிக்கு அம்மா கிட்ட இல்ல, இந்தா இந்த மணியாட்டி, ஏன் நாங்க கூட அங்கினதான குத்த வச்சிருக்கோம். எல்லாருக்கு உன் கையால சாப்பாடு போடு” என்ற பெரியாத்தா, "கூடிய சீக்கிரமே பொண்டாட்டிய படுத்தற பாட்டுக்கு அந்த பெருமாளும் மொட்ட பயலாகி உன்கிட்ட வந்துருவான்” என்ற பெரியாத்தைவை அரவிந்தன் முறைக்க, அந்த பெருமாளிடமிருந்தே அழைப்பு வந்தது.

“அநேகமா உங்க சின்னா கிடைச்சிடுவார். காலைல பார்க்க போலாம்” என்ற அரவிந்தன் அவசரமாய்
அனைவரிடமிருந்தும் விடைபெற்றான்.

ஸ்டேஷனில் ஃபிலோமினாவுடன் அவளது கணவனும் காத்திருக்க வியப்பாய் புருவத்தை உயர்த்தினான் அரவிந்தன்.

“நீங்க இன்னும் ஃபாரின் கிளம்பல? போயிருப்பீங்கன்னு நினைச்சனே!" என்ற அரவிந்தன் கை குலுக்க,

"என் ஒஃப்போட பாய் பெஸ்டி வராம நான் எப்படி சார் போக முடியும்” மனைவிக்கு தெரியாமல் கண் சிமிட்டினான் ஃபிலோமினாவின் கணவன்.

“டாக்குமெண்ட் வாங்கியாச்சா" என்ற அரவிந்தன், "கூடிய சீக்கிரம் இந்தியா வர பாருங்க. எப்பவும் பாய் பெஸ்டி வந்து உங்க வாழ்க்கைய காப்பாத்த முடியாதில்லையா” என்று சிரித்து வழியனுப்பினான்.

"என்ன நடக்குது சார் இங்க?" என்றான் மணிகண்டன்.

இருவருக்குமான கண்சிமிட்டலும் சங்கேத மொழிகளும் அவனை வியப்பில் ஆழ்த்தியது. மெலிதாய் புன்னகைத்தான் அரவிந்தன்.

“ஸ்டீபனும் ஃபிலோமினாவும் லவ் மேரேஜ் மணி! திடீர்னு அவருக்கு வெளிநாட்டுல வேலை கிடைச்சதும் தனிமைல உடைஞ்சிட்டாங்க ஃபிலோமினா. பத்தாததுக்கு கணவர் குடும்பம் வேற டார்ச்சர் பண்ண, தன்னை பார்க்க வந்த கணவர் திரும்பி போகும்போது ஏர்போர்ட்லயே டைவர்ஸ் கேட்டு ஒரே அழுகை…

அது தன் பொண்ணு இளவரசியை பார்த்துட்டு திரும்பி வந்த நம்ம ரோமியோ சின்னா கண்ணுல சிக்கிடுச்சி. சும்மா விடுவாரா மனுஷன்.

‘ஒரு மூனு மாசம் கழிச்சி டைவர்ஸ் தரேன்னு சொல்லுன்னு’ இரகசியமா ரெஸ்ட் ரூம்ல காதை கடிச்சிருக்கார் நம்மாளு. ஸ்டீபன் அதிர்ந்து பார்க்க, ‘என்னை நம்புன்னு’ உறுதியளிச்சிருக்கார்.

எதைத்தின்னா பித்தம் தெளியும்னு இருந்த ஸ்டீபனும் மனைவி மேல இருந்த காதல்ல நம்பிக்கை இல்லாமயே டைவர்ஸ் தரேன்னு சொல்லிட்டு போயிருக்கார். ஆனா அதிசயத்திலும் அதிசயமா அம்மணி திரும்ப டைவர்ஸ்னு வாயையே திறக்கல” சிம்பிள் என்றான் அரவிந்தன்.

மெல்ல மெல்ல ஃபிலோமினாவுடன் பழகி அவளது விருப்பு வெறுப்புகளை அறிந்து கொண்ட சின்னா, ஃபிலோமினாவிற்கு பண்ணை வீடு வாங்கி கணவருடன் நிம்மதியாக அங்க வாழ வேண்டும் என்ற விருப்பத்தை அறிந்து அதை நிறைவேற்றி வைத்ததோடு, வீட்டில் முடங்கிக் கிடந்தவளை பல்வேறு பயிர்ச்சிகளுக்கும், கடற்கரை பூங்கா என்றும் அழைத்துச் சென்று அதை புகைப்படம் எடுத்து அவ்வப்போது ஸ்டீபனுக்கும் அனுப்பி இருக்கிறார்.

கூடவே தன் மகள் இளவரசிக்கும் அனுப்பி அவர்கள் கதையை சுவாரஷ்யத்தோடு பகிர்ந்திருக்கிறார்.

தன் மனைவியின் கொஞ்சநாட்களாக தவற விட்ட சந்தோஷம் மீண்டு வந்ததில் ஸ்டீபனுக்கும் மகிழ்ச்சியே! ஆனால் ஸ்டீபனின் உறவுகளை வெறுத்த ஃபிலோமினா சின்னா ஸ்டீபன் மூலம்தான் அவரை நெருங்கினார் என்று தெரிந்தால் சின்னாவுடன் பழகமாட்டாள் என்றெண்ணி இருவரும் இதுவரை அந்த விசயத்தை ஃபிலோமினாவிடம் மறைத்திருந்தனர்.

ஃபிலோமினாவின் கதையைக் கேட்ட மணிகண்டன், “இதெல்லாம் உங்களுக்கு முன்னாடியே தெரியுமா சார்" என்றான்.

“நமது நெல் இயக்கத்துக்கு போய்ட்டு திரும்பி வரும்போது எதேர்ச்சையா ஸ்டீபனை பார்த்தேன் மணி. மனைவி இல்லாம தனியா வந்திருந்தார். அப்போதான் இதெல்லாம் சொன்னார்” என்றான்.

“ரவுடீ பேபீஸ் காத்து வரவர உங்கிகிட்ட பலமா வீசுது சார். எதையும் சொல்றதில்ல" என்று முகத்தைத் திருப்பிய மணிகண்டனிடம்,

“அப்போ நீ வரலையா?" என்றான்.

சுற்றிலும் கவிழ்ந்திருந்த இருளைப் பார்த்தவன், இந்த இரவில்,
"எங்க" என்று புரியாது வினவ,

“சின்னாவை பார்க்க" என்றவனின் கைகளில்
ஜீப் உறுமிக்கொண்டு நின்றது.

“சார், பாட்டிகிட்டெல்லாம் காலைலதான கிளம்பறதா…”

“வேணும்னேதான் அப்படிச் சொன்னேன் மணி” என்றவனின் குரல் கரகரத்திருக்க, ஏறி அமர்ந்த மணியின் கையில் கசங்கிய பேப்பர் துணுக்கை திணித்தான் அரவிந்தன். அவனது கணிப்பு பொய்க்க வில்லையே!

அதைப் பார்த்த மணி அதிர,

“சொல்றதா இருந்தா இவ்வளவு அன்பு வச்சிருக்கவங்ககிட்ட சின்னாவே சொல்லிட்டு போயிருக்க மாட்டாரா!

இன்னைக்கு நீ ரவுடி பேபீஸ்னு கொஞ்சறவங்க, கிட்டதட்ட வாழ்க்கையை வெறுத்து மரணத்தை வா வான்னு கூப்பிட்டவங்க மணி!

சின்னா தன் வலியை மறந்து இயல்பா இருக்கிறதுபோல நடிச்சி அவங்க முகத்துல சந்தோஷத்த மீட்டுக் கொண்டு வந்திருக்கார்னா அது தொடருட்டுமே மணி!” என்றவனின் கைகளில் இரவைக் கிழித்தபடி ஜீப் கேரளாவை நோக்கி வேகமெடுக்க, அலைபேசி துடித்தது.

“சார் நீங்க கேட்ட ஒருமாசம் முன்னாடி அந்த ஷிவமதியோட லொகேஷன்…

“எடைமலைக்குடி” என்று முடித்தான் அரவிந்தன்.
 
Top Bottom