• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

சின்னா 'தி ரோமியோ' - 24 (PRE - FINAL)

STN - 39

New member
சின்னா - 24 (PRE - FINAL)

அரவிந்தனின் ஜீப் மூனாறை தொட்ட அதேவேளையில் பசுபதி கோவில் ஊரின் எல்லையில் நுழைந்தது மகிழுந்து ஒன்று.

அதன் பின்னிருக்கையில் சின்னா அமர்ந்திருக்க, சின்னா கட்டிய மாங்கல்யம் நெஞ்சில் பிரகாசிக்க, தழையக் கட்டிய பச்சைப் பட்டில், சின்னாவின் விரல்கள் தலை கோத அவரது மடியில் நிம்மதியான உறக்கம் கண்டிருந்தாள் அன்பிலரசி.

மூனாறு கடந்து ராஜ்மலாவை நெருங்கியதும் அரவிந்தனின் வாகனம் வனச்சரக அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டது.

எடைமலைக்குடி பாதுகாக்கப்பட்ட சுற்றுச்சூழல் மலைப்பகுதி என்பதால் அங்கு வனத்துறையின் அனுமதி பெற்றே செல்ல முடியும். அதுவும் இரவில் வனவிலங்குகள் நடமாட்டம் இருப்பதால் பாதுகாப்பு கருதி இரவு நேர அனுமதி முற்றிலும் மறுக்கப்படும்.

இடையில் ஜீப் பழுதடைந்ததின் காரணமாக அரவிந்தன் மூனாறு நெருங்கவே உச்சி பொழுது சாய்ந்திருக்க, ராஜ்மலா வந்த போது இரவாகியிருந்தது.

வேறு வழி இல்லாது அன்றைய இரவு செக் போஸ்ட் குவாட்டர்ஸில் தங்கிக் கொண்டான்.

மறுநாள், அரவிந்தன் தனது நோக்கமும் அடையாள அட்டையையும் காண்பிக்க, அதற்குமேல் அவனது ஜீப்பில் செல்ல முடியாது என்பதால் மலையேறுவதற்காக வடிவமைக்கப்பட்ட பிரத்யேக ஜீப்புடன் லோக்கல் கைட் ஒருவனையும் அனுப்பி வைத்தார் வனத்துறை அதிகாரி.

செம்மண்ணோடிய மலைப்பாதை, இடையில் வழிமறித்து சலசலத்த ஓடைகள், குறுக்கிட்ட குறும்பாறை குன்றுகள் என அந்த வழி காட்டுவழி ட்ரக்கிங் செய்வது போலத்தான் இருந்தது. சில இடங்களில் ஜீப்பை விட்டு இறங்கியும் நடக்க வேண்டியிருந்தது.

அத்தனையும் தாண்டி சொக்கத்தின் சொற்பத்தை எடுத்து வந்து அந்த மலையரசியின் மேல் போர்த்து விட்டதுபோல் அவர்களை இனிதே வரவேற்றது ஒரு நந்தவனம்.

“நேச வனம்"

பெயரே சிவநேசனின் நேசத்துக்குரியவளின் சொந்த வனம் என்பதை சொல்லாமல் சொல்ல,

பெயர்ப்பலகையின் கீழிருந்த ‘எய்ட்ஸ் நல மறுவாழ்வு இல்லம்’ என்ற வாக்கியம் மனதைப் பிசைந்தாலும் கடந்த 24 மணிநேரத்தில் மனது ஓரளவுக்கு ஏற்கப் பழகியிருந்தது.

அதுவும் அரவிந்தன் ஏற்கனவே யூகித்த ஒன்றுதான்.

வரவேற்பறை தாண்டி, நோயாளி ஒருவரை பரிசோதித்துக் கொண்டிருந்த அன்னப்பறவை ஒன்று அரவிந்தனைக் கண்டதும் அவசரமாய் தலைகுனிந்தது.

காப்பாளன் கண்ணில் தப்புமா? யோசனையாய் புருவத்தைச் சுருக்கினான்.

அவன் இருமுறை டேபிளில் தட்டியபிறகே எஸ் என்றாள் விழிகளைச் சிமிட்டி. அவனைக் கண்டதும் விழியோரத்தில் கரைமுட்டும் வலியின் சுவடுகள்.

கலங்கிய செங்கடல்கள் கவனத்தில் பதிய இதே நீல நயன விழிகள் எங்கோ அவன் நினைவடுக்கில்…

யோசிக்க நேரமின்றி கடமை கட்டுப்படுத்தியதில், “மிஸ்டர் சின்னா அன்பிலரசி?” என்றான் கேள்வியாய்.

“அம்மா உங்களுக்காகத்தான் காத்திருக்காங்க” என்று குறிப்பிட்ட அறையைச் சுட்டிக் காட்டியவள் மீண்டும் குனிந்து கொண்டாள்.

எந்த கேள்வியுமின்றி சுட்டிக் காட்டியவளில், நான் யார்? இங்கே வருவேனென முன்பே தெரியுமா?’ என்ற கேள்விகளைத் தாண்டி முன்னேற போனவனின் விழிகளில் அவள் முன்னிருந்த பெயர்ப்பலகை சிக்கியது.

“டாக்டர் ஷிவமதி" என்ற பெயரில் சற்றே பின் வாங்கியவன், “மேடம்தான மெண்டல் ஹாஸ்பிட்டல்ல போனை வச்சி எங்களை அலைய விட்டது?” என்றான் எள்ளல் குரலில். முழுதாக ஒருநாளை வீணாக்கி அலைய விட்டவளில் கோபம்.

“நீங்க போக வேண்டிய இடம்தானேன்னு வச்சிட்டு வந்தேன். இவ்ளோ சீக்கிரம் தப்பிச்சி வருவீங்கன்னு எதிர்பார்க்கல” என முனங்கியவளில் அவன் "வாட்" என்று அதிர..

“நான் போய்ட்டு வர இடம்தானேன்னு மறந்து வச்சிட்டேன்… நீங்க தப்பா வருவீங்கன்னு எனக்கெப்படி தெரியும்” நிமிர்ந்து அலட்சியமாய் தோளை குலுக்கினாள்.

அப்படியே வார்த்தையைத் திருப்பிப் போட்டவளில் அதிர்ந்தவன், “டாக்டருக்கு பதிலா வக்கீலுக்கு படிச்சிருக்கலாம்” அவளைப் போலவே தோளைக் குலுக்கிவிட்டு அகன்றான்.

"போலீஸ்காரருக்கு அதுதான் வருத்தமோ” என்றவளின் மெல்லிய முனகல் அவன் காதில் விழவும் தவறவில்லை.

அதேநேரம், "சார் இவங்களை எங்கேயோ பார்த்திருக்கேன்” என்றான் மணிகண்டனும். அரவிந்தனில் மின்னல் கீற்றுகள்.

அவளின் அலட்சியத்திற்கும் நொடிக்கு நொடி மாறிய முகபாவத்திற்குமான காரணங்கள் பிடிபட மெலிதாய் புன்னகைத்தான். ‘ஏன் டாக்டரென்றால் பிடிக்காதா என்ன?’

அவள் சுட்டிக்காட்டிய அறையில் அன்பிலரசியை எதிர்பார்த்து போக, அவர்களை வரவேற்றது சாட்சாத் சின்மயா. சின்மயா குரூப் ஆஃப் இண்டெஸ்ட்ரீஸின் ஒற்றை வாரிசு.

பாய் கட்டில் சற்றே நரைத்த தலை நேரமர்ந்த பார்வை, வரவேற்பாய் மெல்லிய தலையாற்றல் அவரின் ஆளுமையை பறைசாற்ற சற்றே இந்திரா காந்தியை நினைவுப் படுத்தினார் பெண்மணி.

“சாரி! நீங்க கால் பண்ணினப்போ அட்டெண்ட் பண்ண முடியாத சூழல்" என்று சின்னதாய் தன் வருத்தத்தை தெரிவித்தவர், “சொல்லுங்க அன்பிலரசியைப் பத்தி நீங்க என்ன தெரிஞ்சிக்கனும்?” என்று பட்டுத் தெறித்தார் போல் விசயத்துக்கு வந்தார்.

அவன் பதில் அளிக்கும் முன்னரே, “மரகதம்மாவ ரொம்பவே மிரட்டிட்டிங்க போலவே” என்று மெலிதாய் சிரித்தவர், "அன்பிலரசிக்கு இந்த நோயை பரிசளித்தவன் மூலமா ஈஸியா யூகிச்சிட்டிங்க இல்லையா மிஸ்டர் அரவிந்தன்” என்றார்.

மணிகண்டன் முன்னவே தெரியுமா என்பதுபோல் அரவிந்தனை அதிர்ச்சியாய் ஏறிட்டான்.

அந்த பெண்மணியோ அவர் வயதுக்கு பக்குவப் பட்டிருந்தார் போலும்! இல்லை இத்தனை வருடங்களில் கசப்பை செரிக்கப் பழக்கப் படுத்தியிருந்தாரோ!
குரலில் வருத்தம் இருந்ததே தவிர திடமாகவே பேசினார்.

“கடைசியா அன்பாக்கு வயிறுவலின்னு ஃபுல் செக்அப் பண்ணினபோது அவளுக்கு எய்ட்ஸ் இருக்கிறது உறுதியாச்சி” என்றவரிடம் சின்னதாய் பெருமூச்சு.

அவளோட நல்ல நேரமா இல்ல சின்னாவோட கெட்ட நேரமா தெரியாது. சின்னா கல்யாண வேலையில் பிஸியா இருந்ததால ரிப்போர்ட் நேரடியா வாங்கினது அவதான். அங்கிருந்துதான் எனக்கு போனும் பண்ணினா.

ஏற்கனவே கல்யாணத்துல விருப்பமில்லாம இருந்தவ அந்த நிமிஷமே தீர்க்கமா முடிவெடுத்து என்னை ஹாஸ்பிட்டலுக்கு வரவச்சா. பொதுவா எய்ட்ஸ் பேஷண்ட் பற்றிய விவரங்கள் அந்த நோயாளிகிட்ட மட்டும்தான் தெரிவிக்கணும்ங்கிறது மருத்துவமனை விதி.

அதனால அன்பிலரசி மட்டுமே டாக்டரை பார்க்க அனுமதிக்கப்பட வெளியிலிருந்த மரகதம்மாக்கு உண்மை தெரியாது. அதன் காரணமாதான் சின்னா ஹாஸ்பிட்டல்ல விசாரிக்கும்போதும் அந்த மருத்துவர் உண்மையைச் சொல்லியிருக்க மாட்டார்” என்று அவனின் சந்தேகங்களை கேட்காமலே தெளிவுபடுத்தினார்.

“அப்புறம் எப்படி மரகதம்மாவுக்கு தெரியவந்தது.”

“எங்க ப்ளான் படி நர்ஸ்கிட்ட லட்டர் எழுதி மரகதம்மாகிட்ட குடுத்துட்டு நாங்க வேற வழியா வெளியேறினோம். ஆனா எப்படியோ மரகதம்மா எங்க கார் முன்னாடி வழிமறிச்சிட்டாங்க.

ஏற்கனவே தான் ஒருநாள் அருகில் இல்லாததாலதான் தன் அன்பாகுட்டி வாழ்க்கையே சீரழிஞ்சி போச்சின்னு குற்ற உணர்ச்சில தவிச்சிட்டு இருக்கிற தன் மாமா இதுவும் தெரிஞ்சா உயிரையே விட்டுரும்னு அவ பயந்தா…

சின்னாவோட மீதி வாழ்க்கையும் தன்னை கவனிச்சிக்கறதுலயே போய்டக்கூடாதுன்னு அவங்கம்மாகிட்ட உண்மையைச் சொல்லி சத்தியம் வாங்கிட்டா. அப்பவும் மரகதம்மா அவளைப்பத்தி கவலைப்பட்டு தயங்கவும், தோட்டத்தை விக்கிறேன்னு சொல்லு மாமா குடுக்கிற பணத்துல என் மீதி வாழ்க்கையை வாழ்ந்துடுவேன்னு ஒத்தைக் காலில் நின்னு என்கூட கிளம்பிட்டா…

மரகதம்மாவுக்கு இன்னொரு பயமும் இருந்தது. புள்ளிமானாட்டம் அந்த ஊரையே சின்னா கைப்பிடிச்சி வலம் வந்தவ அன்பா. அப்படிப்பட்டவள இப்படியொரு கொடிய நோய் தாக்கிச்சின்னு தெரிஞ்சா அந்த ஊரே தன் பொண்ணைத் தள்ளி வச்சிடுமோன்னு பயந்தாங்க…

அந்தகாலத்து ஆள் இல்லையா? அவங்களுக்கு எய்ட்ஸ்ங்கிறது தீண்டத் தகாத நோய்ங்கிற வரைதான் புரிஞ்சது. தலைநிமிர்ந்து வாழ்ந்த இடத்துல தன் பொண்ணு அசிங்கப்பட்டு வாழணுமேன்ற பயம்… ஏன் அன்பாவுமே சின்னாவோட சுத்தி வந்த அதே ஊரில் இப்படி நிக்க பிரியப்படல.

என்கூட கனடாக்கு எவ்வளவோ கூப்பிட்டேன். ஆனா என்னை கண்டுபிடிக்கிறதுக்கான சின்ன துரும்பு கிடைச்சாகூட என்‌மாமா விடாதுன்னா. அவ சொன்னா மாதிரியே சின்னா அவளைத்தேடி கனடா வந்து நின்னபோது ஒரு நிமிஷம் அவ இருக்க இடத்தை சொல்லிடலாமான்னு துடிச்சேன். ஆனா என்கிட்டருந்தும் ஓடிடுவாளே!”

“சின்னா குடுத்த மொத்த பணத்துல பாதிய சின்மயா இண்டஸ்ட்ரீஸ்ல சைலண்ட் பார்ட்னரா இன்வஸ்ட் பண்ணினா மீதி பணத்துலயும் என் அப்பாவோட ஃப்ரண்ட்ஸ் குடுத்த ஃபண்ட்ஸ்லயும் உருவானதுதான் இந்த எய்ட்ஸ் மறுவாழ்வு மையம்” என்றவர் சின்ன இடைவெளியுடன் தொடர்ந்தார்.

“ஆனா அவ நினைச்சாமாதிரி சின்னா வாழ்க்கை அமையல. அவ ஆடுன சடுகுடு ஆட்டத்தை தேன்மதிய வச்சி சின்னா அதிரடியா முடிச்சி வைப்பார்னு அவ எதிர்பார்க்கல.

‘என் மாமா காதல்ல ஜெயிக்கிறேன்னு வாழ்க்கைல தோத்து போய்டுச்சின்னு’ துடிச்சி போய்ட்டா. ஆனா தேன்மதி அவ உயிராயிற்றே!

நோயாளியான தன்னை காலத்துக்கும் குழந்தை மாதிரி தூக்கி சுமக்கனுமோன்னு சின்னாகிட்டருந்து விலகி வந்தா. ஆனா ‘நீ என்னடி எனக்கு செக் வைக்கிறதுன்னு’ சின்னா அதேப்போல ஒரு குழந்தையை தூக்கிச் சுமக்கத் தயாராகிட்டார்” மென்மையாய் சிரித்தார்.

“ஒரு பொண்ணுக்கு என்னங்க வேணும்? உடலால் இணையறதா! உலகத்திலயே ஒருத்தன் நினைவாலயே தன்னை தூக்கிச் சுமக்கிறாங்கிறதை விட சுகம் என்ன இருக்கு?

அதைச் சின்னா அள்ள அள்ள குறையாம குடுத்தபோது தன் மொத்த வாழ்க்கையையும் நிறைவா வாழ்ந்து முடிச்சிட்டா அன்பா.

ஒருவேளை அன்பா பதினாறும் பெற்று பெருவாழ்வு அவ கணவனோட வாழ்ந்திருந்தா காலப்போக்குல சின்னாவும் எல்லாத்தையும் கடந்திருக்கலாம். இன்னொரு வாழ்க்கைக்கும் தயாராகியிருக்கலாம்.

ஆனா விதி எல்லாருக்கும் எல்லாமும் அமைஞ்சிடுறதில்லையே!

அன்பிலரசி இந்த உண்மையைச் சொல்லி இருந்தாலும் சின்னா வேற வாழ்க்கையை தேர்ந்தெடுத்திருக்க மாட்டார்.

ஏன் அவ தன்னைத்தானே அழிச்சிட்டு இருந்தாக்கூட இப்போ வாழ்ந்துட்டிருக்கிற பொது வாழ்க்கைக்குதான் தன்னைத் தயார் படுத்தியிருப்பார்.

உண்மை தெரிஞ்சி குற்ற உணர்ச்சியோட என் மாமா வாழ்றதைவிட, கேவலம் உடம்புக்காக விலகிட்டேன்கிற கோபத்தோட என் மாமா வீராப்பா வாழட்டும்னு தன்னைத்தானே சமாதானப் படுத்திக்கிட்டா…

தேன்மதி, இளவரசின்னு சின்னாவோட அடுத்தடுத்த பரிமாணங்களில் உண்மையாவே பூரிச்சு நின்னா.

‘நாங்க சேர்ந்திருந்தா எங்க காதல் நாலு சுவத்துக்குள்ள முடிஞ்சிருக்கும். இப்போ பாரு என் மாமா ஆயிரம் அன்பிலரசியை ஆராதிக்குது’ன்னு பெருமை பட்டுக்குவா.

எல்லாருமே தான், தன் குடும்பம்னு மட்டும் வாழ்ந்திருந்தா காமராஜர் நமக்கு கிடைச்சிருக்க மாட்டார். ரத்தன் டாட்டா கிடைச்சிருக்க மாட்டார் இல்லையா?” என்று இடையில் கேள்வியாய் அரவிந்தனை ஏறிட்ட பெண்மணியின் கண்களில் பெருமிதம்கூடித் தெரிய,

“அப்படித்தான் அன்பாவோட சின்னாவும்” என்றார்.

‘உண்மைதானே! சின்னா அன்பிலரசியோடு நின்று போயிருப்பார்தான்.‌ அன்பிலரசியின் மீதான அவரது காதலைத்தான் ஊரோடு உணர்வோடு அனுபவித்து வந்திருக்கிறானே!

ஏன் சின்னா இத்தகைய வலியிலிருந்து தன்னை மீட்டுக்கொண்டு இத்தனை பயிர்களை மீட்டிருப்பாரா என்பதே சந்தேகம் தான். அன்பிலரசியை கவனித்துக் கொள்வதிலேயே தன்னைத் தொலைத்திருக்கக் கூடும்.

அன்பிலரசியின் இந்த முடிவுக்காக அன்று மரகதத்திடம் ஆதங்கப்பட்டவன், இன்று அவர் எடுத்தது சரியான முடிவென்று திருப்தியுற்றான்.

ஏன் ரத்தன் டாட்டாவும் கூட தன் காதல் கைகூடாததில் மற்றொரு திருமணமே செய்துகொள்ளவில்லை என எங்கோ படித்திருக்கிறானே!

சின்னா போன்று அன்பானவர்களை கடவுள் எப்போதும் ஊருக்காக நேர்ந்து விட்டுவிடுவான் போலும்’ தன் அபிமானத்துக்குரிய அந்த மனிதரை பெருமையாக நினைத்துக் கொண்டான் அரவிந்தன்.

அரவிந்தனின் நினைவுகளைக் கலைத்தது தொடர்ந்தன சின்மயாவின் வார்த்தைகள்.

“நின்னா நடந்தா சின்னா சின்னான்னு அவர் நினைவாவே கடத்தின அன்பாவோட வாழ்க்கைல வசந்தமா வந்தவதான் ஷிவமதி!”

“நேற்று உங்க ஆளுங்க வந்து தேடுனாங்கல்லையா மெண்டல் ஹாஸ்பிட்டல். என் அப்பாவோட அம்மா வாழ்க்கையோட இறுதிநாட்களில் மனநிலை பிறழ்ந்துதான் கழிச்சாங்க. அவங்களோட நினைவா எங்க அப்பா ஆரம்பிச்சதுதான் அந்த ட்ரஸ்ட். அங்கதான் ஷிவமதியோட அம்மா வந்து சேர்ந்தா. மனநிலை சரியில்லாதவளை போய் எந்த தறுதலைங்களோ…” என்றவர் அதோடு நிறுத்தினார்.

கண்கள் லேசாக கலங்க, “டெஸ்ட் பண்ணதுல அந்த பெண்ணுக்கு எய்ட்ஸ் பாதிப்பு இருக்கிறது உறுதியாச்சு. வயித்துல மூனு மாத சிசு. இங்க கூட்டிட்டு வந்தப்போ
அன்பாவோட உயிரே கலங்கிப் போச்சி.

‘ஒருபாவமும் அறியாத அந்த சிசு காலம் முழுமைக்கும் இந்த பாவத்தைச் சுமக்கணுமா’ன்னு கதறி அழுதா.

ஷின்மயா இண்டஸ்ட்ரீஸ்லருந்து அவளுக்கு கிடைச்ச பர்சண்டேஜ்லருந்து வந்த பணம் மொத்தத்தையும் அந்த சிசுவுக்கு அந்த கொடிய நோய் பரவவிடக் கூடாதுன்னு செலவு பண்ணினா அன்பா. எல்லா தற்காப்பு ட்ரீட்மெண்டும் ஏற்பாடு செஞ்சா.

உலகத்துல இருக்க அத்தனை ட்ரீட்மெண்டும் அந்த பொண்ணுக்கும் அவ சிசுவுக்கும் குடுத்தோம்.

சின்னாவுக்கு அடுத்தபடியா அன்பா கடவுள்கிட்ட வேண்டுதல் வச்சான்னா அது அந்த ஒரு பாவமும் அறியாத சிசுக்காகத்தான்.

காட்ஸ் கிரேஸ் அவ வேண்டுதல் வீண் போகல. எய்ட்ஸ்ஸோட சிறு துளி பாதிப்பும் இல்லாம கறந்த பாலோட தூய்மையா பிறந்தா அந்தக் குழந்தை.

துரதிருஷ்ட வசமா அந்தக் குழந்தையோட அம்மா இறந்திட, தன் வாழ்வுக்கு ஓர் அர்த்தம் கிடைச்சதுன்னு தாய்க்கு தாயா நின்னு ரொம்ப ரொம்ப கவனமா வளர்க்க ஆரம்பிச்சா அன்பா.

சின்னாவோட பெயர்ல பாதியையும் தேன்மதியோட பெயர்ல பாதியையும் சேர்த்து அவளுக்கு ஷிவமதின்னு பெயர் வச்சா.

காலம் அப்படியே வேகமா ஓடிருச்சி ஷிவமதியும் ஹாஸ்டல் படிப்புன்னு அன்பா ஆசைப்பட்டாமாதிரி டாக்டர் ஆகிட்டா. மரகதம்மாவோட ஒரே பிடிப்பு அவதான்.

சின்னா அந்த ஊரில் இருந்தவரை மரகதம்மாவ அன்பா பார்க்க அனுமதிக்கவே இல்ல. அப்புறமும் இரண்டு தடவை வந்து பார்த்தாங்க. ஆனா அன்பா பேச மறுத்துட்டா…

ஷிவமதிக்கு தன்னோட வாழ்க்கை சின்னாவோட காதல்னு எல்லாத்தையும் சொல்லித்தான் வளர்த்தா, ஷிவமதிதான் மரகதம்மா உடைஞ்சி போகாம இன்னைவரை பார்த்துகிட்டு இருக்கா” என்றார் சிறு பெருமை மேலிட.

அரவிந்தனுக்கு தான் பசுபதி கோவிலுக்கு சென்ற விசயம் அறிந்ததும், வெளியில் கண்ட வெள்ளைப் புறா செல்போனை மெண்டல் ஹாஸ்பிட்டலில் வைத்து திசைமாற்றியிருக்கிறது என்று புரிந்தது.

தான் சீக்கிரம் இங்கு வந்துவிட்டால் தந்தையை தாயிடமிருந்து அழைத்துச் செல்வேன் என பயந்திருக்கிறாள்.

‘டாக்டருக்கு படிச்ச கேடி’ புன்னகையுடன் இதழ்கள் முனுமுனுக்க, “என்ன மிஸ்டர் அரவிந்தன்?" என்றார் சின்மயா.

"இல்ல. நான் இங்க வந்ததுமே எதிர்பார்த்ததுபோல வரவேற்றாங்களே, இதோ என் பெயர் உட்பட..” என்றவனின் கேள்வியில் சிரித்தார்.

நீங்க நினைச்சா மட்டும் இங்க வந்திருக்க முடியாது மிஸ்டர் அரவிந்தன். ஷிவமதி நினைச்சதாலதான் இன்னைக்கு நீங்க இங்க இருக்கீங்க.

செக் போஸ்ட்ல பார்த்தீங்களே ஒரு ஃபாரஸ்ட் ரேஞ்சர். அவரோட அம்மாவுக்கு ஷிவமதிதான் டாக்டர். எப்ப தன் அப்பாவோட உயிருக்கு ஆபத்திருக்குன்னு தெரிஞ்சிக்கிட்டாளோ அப்பயிருந்து இந்த மலைக்கு வழக்கமா வந்து போறவங்களைத் தவிர புதுசா வரவங்களை ஃபில்டர் பண்ணித்தான் அனுப்பனும்னு அன்பான உத்தரவு போட்டு வச்சிருக்காங்க அம்மணி. சோ நேற்று நைட் நீங்க வந்து இறங்கினபோதே எங்களுக்கு நியூஸ் வந்துருச்சி" என்றார் கையை விரித்து.

‘ஓ! அதான் நேற்றைய இரவு விருந்துடன் அந்த கவனிப்பா! காலையில் லோக்கல் கைட் வேறு’ உதட்டோரம் துளிர்த்த புன்னகையை மறைத்துக்கொண்டான்.

“அவர் மூலமாதான் இளவரசியோட மாமனார் அனுப்பின ஆளை முட்டிக்கு முட்டி பேர்த்து அனுப்பினோம்" என்றவரை அவன் வியப்புடன் நோக்க,

“எஸ்! இளவரசி முதலில் தன் மாமனாரை நம்பினதால் அவ அப்பாவோட காதல் கதையும் சொல்லி இருக்கா… அவருக்கும் வருஷா வருஷம் பேப்பர்ல வர பர்த்டே நியூஸ் இந்தியால இருக்க அவரோட ஆளுங்க மூலமா தெரிஞ்சிருக்கு.

இந்த வருஷம் பேப்பர் நியூஸ் பார்த்துட்டு சின்னாவை தேடி வந்தவங்களை செக் போஸ்ட்லயே மடக்கி அடிச்சித் தூக்கி உள்ள வச்சிட்டோம்” என்றார்.

‘தான் அனுப்பிய ஆட்களிடமிருந்து தகவல் இல்லையென்றதும்தான் அன்று இளவரசியின் மாமனார் கண்டறிந்ததும் சொல்லச் சொல்லி படபடத்தார் போலும்’ என நினைத்துக் கொண்டான்.

“சின்னாவிற்கும் பேப்பர் பார்த்ததும்தான் உண்மை தெரியுமா?” என்றான். அவருக்கு முன்னமே தெரிந்திருக்க வேண்டுமென்பது அவனது கணிப்பு.

அதை மெய் என்று நிருபிக்கும் வகையில் ‘இல்லை’ என மறுத்துத் தலையாட்டினார்.

“அன்பாவுக்கு இந்த நோயை பரிசளித்த அந்த அனிமல் தன்னோட உடைஞ்ச கால் சரியானதுமே அடுத்த கல்யாணத்துக்கு ரெடி ஆகிட்டான். கேள்வி பட்ட சின்னா மறுபடியும் அவன் காலை உடைச்சி படுக்க வச்சிட்டார்.

அவன் எந்திரிக்க எந்திரிக்க அன்பா கிடைக்காத மொத்த ஆத்திரத்தையும் அவன் மேல தீர்த்துக் கிட்டார். அவன் ஆசைப்பட்டு இனி ஒருத்தியையும் தொடக்கூடாதுன்னு நினைச்சார். ஆனா ஒரு தடவைகூட அவர் கை அவன்மேல படல.

அன்பா தன்கூட இல்லைன்னாலும் அவ வாங்கின சத்தியத்தைக் காப்பாற்ற, தன் நண்பன் மூலமாதான் ஒவ்வொரு தடவையும் அவன் கையைக் காலை முறிச்சித் தூக்கிப் போட்டார்.

அந்தம்மா கடைசி நேரத்துலயாவது தன் அன்பாவ காப்பாத்தி கூட்டி வந்ததால அந்தம்மாவுக்கு எந்த குறையும் இல்லாம கடைசிவரை பார்த்துக்கிட்டார் சின்னா.

அப்படி கடைசியா அவனை அடிச்சி போடும்போதுதான் அவனுக்கு எய்ட்ஸ் இருக்கிற விவரமே சின்னாக்கு தெரியவந்திருக்கு.

தெய்வாதீனமா சின்னா செஞ்ச வேலையால அவனால வேற எந்த பொண்ணும் பாதிக்கப்படாம காப்பாத்தி வந்திருக்கார்.

அந்த உண்மை தெரிஞ்சப்புறம் அவரால அந்த ஊர்ல இருக்க முடியல.

அந்த காமாட்சியம்மாகிட்ட எந்தக் காரணம் கொண்டும் இந்த உண்மை ஊர்ல யாருக்கும் தெரியக்கூடாதுன்னு கேட்டுக்கிட்டதோட இன்றுவரை அவனுக்கும் சேர்த்து கஞ்சி ஊத்திட்டு இருக்கார்.

பெத்த புள்ளையாச்சே. கருணைக்காகவாது அந்தம்மா தான் குடிக்கிற கஞ்சில அவனுக்கும் குடுத்து பார்த்துக்கிறாங்க” என்றதும் அரவிந்தனுக்கு அன்று அந்த மூதாட்டி தான் நீர் அருந்திய போத்தலை அருந்தி முடித்ததும் தூக்கி எறிந்தது நினைவிற்கு வந்தது.

ஏன் எல்லாவற்றிலும் ஒதுக்கம் காண்பித்ததோடு, அகரன் தாகத்திற்கு நீர் கேட்டபோது நிர்தாட்சண்யமாய் மறுத்து விட்டார். அதில்தானே அவனில் முதல் சந்தேக விதை விழுந்தது. கிராமத்தில் சிறுவனுக்கு நீர் மறுப்பார்களா?

ஊரைவிட்டு வெகுதூரம் தள்ளியிருந்த வீடும், அந்த மனிதன்மேல் இருந்த ஆறாத இரணங்களும் அவன் சந்தேகத்தைக் கூட்ட, ஊரில் மற்றவர்களிடம் மேம்போக்காக விசாரித்தான்.

விசாரித்ததில் அந்த பெண்மணி யாருடனும் எதையும் வாங்குவதுமில்லை குடுப்பதுமில்லை என்று தெரிந்து கொண்டான். அதிலெல்லாம் இந்த நோய் பரவுவதில்லை என்ற அறியாமையில் ஒதுங்கியிருக்கிறார் என்று புரிந்தது.

இறுதியாக, ‘எனக்கு இந்த நோய் இருக்குன்னா உனக்கும் இருக்கும் டி’ என்றவனின் இராட்சதச் சிரிப்பு அரவிந்தனின் சந்தேகத்தை ஊர்ஜிதப் படுத்தி இருந்தது.

“அவனை கண்முன்னாடி பார்த்துகிட்டே அதே ஊரில் நடமாட சின்னாவால முடியல. எப்படியாச்சும் அன்பாவ கண்டுபுடிச்சே ஆகணும்னு டைம் கிடைச்சபோதெல்லாம் ஊர் ஊரா சுத்த ஆரம்பிச்சிட்டார்.

சின்னாக்கு இருந்த ஒரே ஆறுதல், தன்னோட அன்பா வெறும் உடலை முன்னிட்டு தன்னை உதறித் தள்ளல அப்படிங்கிறதுதான்.

அதை அவரோட அப்பற்ற காதலுக்கான அங்கீகாரமா பார்த்தார் சின்னா.

இதுக்கும் மேல நடந்ததுதான் உங்களுக்கே தெரியுமே” என்றார்.

“இவ்ளோ வருஷம் இல்லாம அன்பா தன்னை வெளிப்படுத்திக்க காரணம்? இந்த வருஷம் மட்டும் ஏன் சின்னாவோட பிறந்தநாளை இந்த நேசவனத்தில் கொண்டாடி அதை போட்டோ எடுத்து வாழ்த்துச் செய்தியா பிரசுரிச்சாங்க அன்பா?”

அரவிந்தனின் கேள்விக்கு கசப்பாய்ச் சிரித்தவர் பதில் சொல்ல வில்லை‌.

“இரண்டுபேரும் இங்கதான் இருக்காங்களா? பார்க்கலாமா?" என்றான் ஒருவழியாக.

வந்ததிலிருந்து எப்போதடா பார்ப்போம் என்ற கேள்வி அவன் தொண்டைக் குழிக்குள் சிக்கிக் கொண்டிருந்தாலும் தொடர்ந்து பேசுபவரின் வயதும் மரியாதையும் அவனை தடுத்து நிறுத்தியிருந்தது.

“அன்பிலரசி இப்போ எங்க இருக்காங்க? சின்னாவும் கூடதான் இருக்காரா?"

அவரின் தொடர்ந்த மௌனத்தில் மீண்டும் ஆர்வமாய் கேள்வி எழுப்பிய மணிகண்டனில், “ஹான்… என்ன கேட்டீங்க” என்றார் தூக்கத்திலிருந்து விழித்த பாவனையில்.

பின் அவரே, "அன்பிலரசி அவ ஆசைப்பட்டா மாதிரி, சின்னா கையால கட்டின மாங்கல்யத்தோட, சின்னாவோட மனைவியா அவளுக்காகவே சின்னா கட்டி எழுப்பிய மரமல்லி நிழல்ல நிம்மதியா… நிரந்தரமா தூங்கிட்டிருக்கா” என்றவர் அணிந்திருந்த கண்ணாடியைக் கழற்றி துளிர்த்த ஒருதுளி நீரை சுன்டி விட்டு திரும்ப அணிந்துகொண்டார். மீண்டும் உதடுகளில் ஒட்டவைத்த புன்னகை.
 
Top Bottom