• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

சின்னா 'தி ரோமியோ' - 25 (FINAL - 2) முடிவுற்றது.

STN - 39

New member
அத்தியாயம் - 25 (FINAL - 2) முடிவுற்றது.

நாட்கள் கடந்திருந்தது. அரவிந்தனின் ஜீப் பசபதிகோவிலின் மண்ணைத் தொட அரவிந்தனுக்குள் புது இரத்தம் பாய்ந்தாற் போலொரு பரவசம்.

தான் மிகவும் சந்திக்க ஆசைப்பட்ட தன் ஆஸ்தான நாயகனை இன்று சந்திக்கப் போகும் ஆவல் அவன் கண்களில் மிகையாய்.

“என்ன சார் வருங்கால மாமனார சந்திக்கப்போற குஷியோ!

நான்கு முதியவர்களை சந்திக்க அஞ்சி இன்ஸ்பெக்டர் அரவிந்தன் தலைமறைவு!

மருத்துவ விடுப்பில் சென்றார்னு நாளைய வரலாறு பேசும் மறந்துடாதீங்க” என்றவனிடம்,

“அங்க மட்டும் என்ன வாழுதாம்" என்றான் திருப்பி.

“தலை இருக்கும்போது வால் ஆடக்கூடாதுல்ல சார்" என்று சிரித்த மணிகண்டன், “பெருமாள் சார்தான் பாவம்" என்றான்.

ஒற்றையாய் ரவுடி பேபீஸிடம் சிக்கியது அவர்தானே! சின்னா அவர் ஊரில் பாதுகாப்பாய் இருப்பதை மட்டுமே தெரிவிக்கச் சொல்லியிருந்தான். மீதி சின்னா பாடு அவர்கள் பாடு என்பது அவன் எண்ணமாய் இருந்தது.

இருவருமே மருத்துவ விடுப்பு முடிந்து நேராக பசுபதி கோவிலுக்குத்தான் வந்திருக்கின்றனர்.

நேரே ஜீப் அன்பிலரசிக்காக சின்னா கட்டி எழுப்பிய மரக்குடிலில்தான் போய் நின்றது. அங்குதான் சின்னா இருக்கக்கூடும் என்பது அவனது யூகம்.

அவனது யூகங்களுக்கு அப்பாற்பட்டவர் அவர் என அறியவில்லை அவன்.

சரித்திரம் முடிந்து விட்டதென சாய்ந்துவிடும் அர்த்தமற்ற சரீரமா சின்னா!

சுற்றிலும் மரமல்லி மரங்களுக்கு நடுவே குடிலுக்குள் அமைதியாக உறங்க வைக்கப்பட்டிருந்தாள் அன்பிலரசி.

அந்த இடமே அமைதியாக இருக்க, எங்கோ ஒரு மூலையில் ‘சரக் சரக்’ என பெருக்கும் சத்தம் மட்டும் ஒரே சீராய்…

தேகம் ஒடிந்து நைந்த சரீரத்துடன் காய்ந்த மரமல்லி மலர்களை சுத்தப்படுத்தி குப்பையில் அள்ளிப் போட்டுக் கொண்டிருந்தார் கருணாகரன்.

மற்றொரு பக்கம், ஒரு கூடை நிறைய அப்போது உதிர்ந்த வாடாத மரமல்லி மலர்கள்.

வாடாத மலர்களை தன் பெண்ணின் கல்லறையைச் சுற்றி பரப்பி விட்டவர், யாரையும் ஏறெடுத்தும் காணவில்லை.

எல்லாம் முடிந்ததும் தன் பெண்ணின் கல்லறையின்முன் தோளிலிருந்த துண்டை விரித்து படுத்து கண்மூடிக்கொண்டார்.

தன் மகள் தனியாக இருக்க பயங்கொள்வாளே!

“பார்க்க முடியல. வாங்க சார் போகலாம்” என்றான் மணிகண்டன் சின்னக் குரலில்.

“என்ன சார் இங்கயும் இல்ல" இருவரும் சுற்றும் முற்றும் பார்த்தபடி சின்னா கட்டிய கோவிலின்முன் நின்றனர்.

அப்போது அரவிந்தனுக்கு புதிய எண்ணிலிருந்து காணொளி அழைப்பு வர, யோசனையாய் எடுத்தான்.

அலைபேசி திரையில் அவனது அன்னை கமலா சிரித்துக் கொண்டிருந்தார்.

“நீ தான் கூட்டிட்டுப் போக மாட்டேன்னுட்ட, நான் என் இன்ஸ்டா ஃப்ரண்ட்டோட காசி இராமேஷ்வரம் டூர் கிளம்பிட்டேன்" என்றவர்

"நீ என் இன்ஸ்ட்டா ஃப்ரண்ட்ட பார்த்ததில்லையே” எனவும் வாய் விட்டுச் சிரித்தான் அரவிந்தன்.

ஷிவமதியை மனைவியாக வரித்தபோதே கண்டுகொண்டான்.

‘இருக்கும் இடத்தை விட்டு எங்கெங்கோ அலைகிறார் ஞானத் தங்கமே! அவர் ஏதும் அறியாரடி ஞானத் தங்கமே…’ எங்கோ டீக்கடையில் திரையிசைப் பாடல் ஒலிக்க,

அவன் பார்க்க ஏங்கியிருந்த முகம் கனிவாய் ஒளித் திரையில்.

“என்னப்பா ரொம்ப அலைய வச்சிட்டனோ?" அந்தக் கம்பீரக் குரலில்தான் எத்தனைக் கணிவு.

“தெரிஞ்சிருந்தா அலைய வச்சிருக்க மாட்டீங்க" பளிச்சென சிரித்த கட்டுக்கடங்காத காளையின் விழியோரத்தில் ஒற்றை நீர் முத்து.

அவரை இப்படிக் காணத்தானே ஆசைகொண்டான்.

“கருடன் எங்கிருக்கும் தெரியுமா?" கேள்வியுடன் சிரித்தார்.

தன் அன்பிலரசியிடம் கேட்ட அதே கேள்வியை அரவிந்தனிடமும் கேட்டார்.

இத்தனை நாட்களில் தன் மருமகனின் சாமர்த்தியத்தை அறிந்து வைத்திருந்தார் போலும்.

அலைபேசியை உயர்த்திப் பிடித்து, அரங்கநாதர் கோதை நாட்சியார் பள்ளிகொண்ட சன்னதியின் கோபுரக் கலசத்தைக் காட்டினான் அவன்.

‘நானும் சளைத்தவனில்லை’ என்பதாய்,

“கருடன் அரங்கநாதரான பெருமாளிடம்தானே தஞ்சம்" என்றான்.

சிரித்தபடி தன் மாமனாரிடம் கேட்டவனை பெருமிதத்தோடு பார்த்தார்.

மருத்துவ விடுப்பிலிருந்த நாட்களில் சின்னாவின் பயிர்களைப் பற்றிய ஆராய்ச்சித் தாள்களை புரட்டியிருந்தான். அதில் சில அரிய வகைப் பயிர்களை அழியாமல் காக்க கோவிலின் கோபுரக் கலசங்களில் வைத்து பாதுகாப்பது நம் முன்னோர்களின் வழக்கம் என்றும். அப்படி சில பயிர்வகைகள் சின்னாவுக்கு கிடைத்த குறிப்பும் இருக்க அரவிந்தனின் மூளை பளிச்சிட்டது.

எதிரிகளால் தான் ஒருவேளை அழிந்துவிட்டாலும் வருங்கால சந்ததிகளுக்காக கருடன் சம்பாவை காக்கவென புதிதாக ஒரு கோவிலையே கட்டி எழுப்பியவரின்மேல் பிரமிப்பி தோன்றியது.

அதுவும் தன் அன்பிலரசிக்கு காதலை புரிய வைக்கவென சூடிக்கொடுத்த சுடர்கொடியாளின் கதையைச் சொன்னவர், அந்த சுடர்கொடியாளையே அவள் ஆசைப்பட்ட அரங்கநாதருடன் அங்கு பள்ளி எழச் செய்திருக்கிறார்.

‘எத்தகைய காதல் இது’ அரவிந்தனால் வியக்காமல் இருக்க முடியவில்லை.

“உன்னோட சுடர்கொடியாள் அடுத்த வாரம் சென்னைக்கு வரா" என்றார் அவன் மனதைப் படித்து.

‘பத்திரமா பார்த்துக்கோ’ என்ற வேண்டுதல் அவர் கண்களில் தெரிய,

“நிச்சயமா" என்றவனிடமிருந்து அலைபேசி பறிக்கப் பட்டது.

“நீங்களே பேசிட்டு இருந்தா எப்படி. நீங்க இல்லாதப்போ நீங்க வளர்த்துவிட்ட ரவுடீ பேபிஸ எல்லாம் ஒற்றை ஆளா சமாளிச்சது நான்தான் தெரியுமா?” என்றான் மணிகண்டன். தன்னை கண்டுகொள்ளவில்லை என்ற பொய்க் கோபத்தில்.

"மணிகண்டன்தானே! நான் உன்னைத்தான் பார்க்கணும்னு ஆசைப்பட்டேன்” என்றவரின் ஒற்றை வார்த்தையிலயே அவன் மனது நிறைந்து விட்டது.

அவரைப் பார்க்கவென அவர்கள் ஓடித்திரிய அந்த மனிதர் பார்க்க ஆசைப்பட்டாரெனில் அது சும்மாவா.

“அது யார்ல எங்களை பார்த்துக்கிட்டது" அலைபேசித் திரையில் திடிரென பெரியாத்தா முறைத்துக் கொண்டிருந்தார்.

அடுத்தடுத்து சரஸ்வதி பாட்டி, பார்வதி பாட்டியுடன் இரத்தினம் பாட்டியும்.

கூடவே புதிதாய் இன்னொருவரின் வாயை இறுக்க மூடியபடி பிடித்துக் கொண்டிருந்தார் பெரியாத்தா. அவர்கள் இருந்தது ஒரு மினி பஸ்.

“அச்சோ ரவுடி பேபி! யாரை வாயைப் பொத்தி கடத்திட்டுப் போறீங்க" என்றான் மணிகண்டன் அதிர்ந்து.

"அதுவாப்பு. இவதான் நம்ம சரவணப்பெருமாள் ஆத்தா.
இவ அங்க இருக்கிறவரை அந்தப் புள்ளைங்கள வாழ விடமாட்டா. அதான் திரும்பி வரதுக்குள்ள நம்ம சின்னா சொல்கேட்டு திருந்தினா சரி இல்ல அப்படியே காசில கரைச்சிட்டு வந்திடுறேன்” என்றார் பெத்த ரவுடியாய்.

"அய்யோ பாட்டி அது தப்பு" என்று அரவிந்தனும்

"பாவம்” என்று மணிகண்டனும் ஒரே நேரத்தில் பதற,

“பாவத்த கரைச்சா தப்பில்ல” என்றவர் கருப்பு கண்ணாடியை அணிந்து சின்னாவுடன் கெத்தாக போஸ் வேறு கொடுக்க,

“பெரிய பில்லா அஜித், நயன்தாரான்னு நினைப்பு” என்ற மணிகண்டனில் சின்னாவே வாய்விட்டுச் சிரித்துவிட்டார்.

இருவரும் முதல்முறையாய் வாய்விட்டுச் சிரித்த சின்னாவைக் கண்டதில் ஆ வென பார்த்து நின்றனர்.

இந்த வயதிலும் எத்தனை வசீகரம். இந்த மனிதரின் பின்னால் இளமையிலும் சரி முதுமையிலும் சரி பெண்கள் சுற்றாமலிருந்தால்தான் அதிசயம். பார்த்திருந்த இருவரின் மனக்குரலும் இதுவாகத்தான் இருந்தது.

இருவருக்கும் பொதுவாய் சின்னா தான் பார்த்துக் கொள்வதாய் விழி மூடித் திறந்தார்.

‘சின்னாவின் அடுத்த மிஷன் சரவணப் பெருமாளின் தாய் போலும்’ உள்ளுக்குள் சிரித்துக் கொண்டான்.

“இன்னும் என்னென்னல்லாம் பண்ணி வச்சிருக்கீங்க! அதையும் பட்டியல் போட்டுருங்க" என்று அரவிந்தன் சிரிக்க,

"அய்யோ! ஊர்ல எத்தனை தாத்தா பாட்டிய காணோம்னு கம்ப்ளைண்ட் வரப்போகுதோ தெரியலையே” என தலையில் கை வைத்தான் மணிகண்டன்.

“பெருசால்லம் இல்ல. இவ மோளம் அடிச்சாதானே அந்த பய ஆடுவான். அதான் இவளை விட்டே ‘உன்‌ பொண்டாட்டிய எங்கேயும் டூர் கூட்டிட்டுப் போ’ன்னு மிரட்டி சொல்ல வச்சிருக்கோம்யா நீ கொஞ்சம் அந்த பெருமாள் பயலுக்கு லீவு மட்டும் குடுத்து விட்டுரு” என்று சரவணப் பெருமாளுக்காய் அவனிடமே வக்காலத்து வாங்கினார் பார்வதிப் பாட்டி.

“ஆத்தாடி" என இருவரும் அதிர்ந்து நிற்க அலைபேசி மீண்டும் கமலம்மாவிடம் வந்தது.

"ஏன்டா எங்கெங்கயோ தேடுனியே ஒரு தடவை என் இன்ஸ்டா அக்கவுண்ட்ட பார்த்திருந்தா எப்பவோ அண்ணனைக் கண்டுபிடிச்சிருக்கலாம்ல. குட்டி அன்பிலரசியைத்தான் ஃப்ரோபைல் பிக்சரா வச்சிருக்காராம்” என்று மகனை கேலி செய்தார் கமலம்மா.

கேட்டதும், "கமலி…" என்று பல்லைக் கடித்தவன்,

“பாஸ்வேர்ட மாத்தி வச்சிட்டு பேச்சைப் பாரு" என்று முறைக்க,

"ஒரு பாஸ்வேர்ட ஹேக் பண்ணத் தெரியல நீ எல்லாம் என்ன போலீசோ” என்றதும் பக்கென்று சிரித்தான்‌ மணிகண்டன்.

அரவிந்தனின் முறைப்பில் வாயில் விரல் வைத்தும் அவன் சிரிப்பு தொடர,

“இப்படி இன்ஸ்டால சம்பந்தம் பேசி முடிப்பீங்கன்னு தெரிஞ்சிருந்தா ஹேக் பண்ணிருப்பேன்” என்ற மகனில் குரலில் வெட்கத்தின் சாயலடிக்க சந்தோஷமாய் சிரித்தார் கமலம்மா.

“உங்க மகளை என் பையன் பத்திரமா பார்த்துப்பான்னு அன்பிலரசிக்கு வாக்கு குடுத்திருக்கேன் டா. அதைக் காப்பாற்று!” என்றவரை வியப்பாய் பார்த்தான்.

“என்னடா பார்க்கிற, இதேப்போல வீடியோ காலில் அவங்ககிட்ட அண்ணா பேச வச்சார்" என்றார்.

"இதுக்குதான் அம்மாகிட்ட அப்பப்போ பேசி இருக்கணும்… கேஸ்பத்தி சொல்லி இருந்தா நானும் சொல்லி இருப்பேன்ல” முறைத்தார்.

தனக்குத் தெரியாமல் எவ்வளவு நடந்திருக்கிறது. ஒருபக்கம் அவரைத் தேடி அவன் நாயாய் ஓடிக்கொண்டிருக்க, அவனது தாயோ அவரிடம் அவனுக்காய் சம்மந்தம் பேசி இருக்கிறார்.

நினைக்கும்போது சிரிப்பு வந்தது.

இருந்தும் அவரை சீண்ட எண்ணியவன், “எனக்கு பொண்ணு பிடிக்கலைன்னா என்ன பண்ணிருப்பீங்களாம்" என்றான் வேண்டுமென்றே.

“எங்க சொல்லித்தான் பாரேன்" என்ற குரல் பின்னனியில் கோரசாய் ஒலிக்க,

“பார்த்தல்ல! ரவுடீ பேபீஸ வச்சி கொத்தா தூக்கி என்‌ மருமக கழுத்துல தாலிக்கட்ட வச்சிருப்பேன்” என்ற தாயைப் பார்த்து சிரித்தான்.

"அப்போ சிவா கிட்ட உனக்கு புடிக்கலையாம்னு சொல்லிடவாப்பா” என்ற சின்னாவின் குறும்பு சிரிப்பில்,

"நீங்க சொன்னாலும் அவ நம்பமாட்டா மாமா” என்றான் சிரித்தபடி.

"பார்ரா” என்ற குரல் கோரஸாய்க் கேட்க,
"ரொம்பத்தான்" என்று ஷிவமதியைப் போலவே இடுப்பை வளைத்துக் காண்பித்தனர்‌ ரவுடி பேபீஸ்.

அதில் அரவிந்தன் வெட்கச் சிரிப்பு சிரிக்க, “ஒரு சின்னப்புள்ளை இருக்கானே அவனுக்கும் ஒரு பொண்ணை பார்ப்போம்னு பொறுப்பு இருக்கா ரவுடி பேபீஸ்…

உங்களை எல்லாம் அப்படியா வளர்த்தேன்” என்று வராத கண்ணீரை மணிகண்டன் சுன்டி விட,

“காசியா…இராமேஷ்வரமா? தமிழ்நாட்டுல எங்கிருந்துலே பொண்ணத் தூக்கட்டும்” என்ற பெரியாத்தாவிடம் பெரிய கும்பிடாய் போட்டான்.

“போதும் போதும்… க்ரைம்‌ரேட் இன்க்ரீஸ் ஆகிட்டே போகுது. நானே எனக்கு பொண்ணு பார்த்துக்கிறேன் ஆத்தாங்களா சந்தோஷமா போய்ட்டு வாங்க” என்று கையைத் துக்கி கும்பிடு போட்டவன், “டாட்டா பை பை" என்று அலைபேசியை துண்டித்தான்.

"சண்முகவேல் அய்யாகிட்ட சொல்லிட்டு ஊருக்கு கிளம்பலாம் மணி” என்றவனிடம்,

"நீங்க மட்டும் போய் சொல்லிட்டு வாங்க சார். நான் இங்கயே இருக்கேன்” என்றவனின் பார்வை சின்னா கட்டிய கோவிலின்‌ மணியை அடிப்பதற்காக எம்பி முயற்சித்திருந்த இளம்பெண்ணின்மீது படிந்தது.

“யாருகிட்டயோ வசமா வாங்கிக் கட்டப் போற மணி" என்று எச்சரித்த அரவிந்தன் சண்முகவேல் பாண்டியைத் தேடிச் செல்ல, ஆர்வத்துடன் கோவிலை நோக்கி நடந்தான் மணிகண்டன்.

அதேநேரம் சரவணப் பெருமாள், அவர் மனைவியிடம், “எடு எடு பெட்டியக் கட்டி பையனை ரெடி பண்ணிவை கோவாக்கு போகலாம்…” என்றவரின் குரலில் ஆர்வம் பளிச்சிட்டது.

ஷர்மிளாவும் கணவன் அவர் தாயுடன் பேசியதை கேட்டுக்கொண்டுதானே இருந்தார்.

எதிர்பார்த்த அழைப்புதான். அங்கு அனுமதி கிடைத்தால்தானே மனைவியும் பிள்ளையும் கண்களுக்கு தெரியும். கசப்பான புன்னகை இதழ்களில் நெளிய, “நான் வரல" என்றார் திடமாய்.

“ஏன்" என்றார் நம்ப முடியாமல்.

எப்போதும் எங்காவது கூட்டிச்செல்ல கெஞ்சும்‌ மனைவியைத்தானே கண்டிருக்கிறார். அதற்கும் உதாசீனப்படுத்திதானே அவருக்குப் பழக்கம்.

மாறாக,
முதல்முறை மனைவியின்‌ மறுப்பில் திகைத்தார்.

அவருக்கும் மனைவியை பிடிக்கும்தான். ஆனால் வெளிப்படையாய் காட்டிக்கொண்டால் அவர் அன்னைக்கு பிடிக்காதே! தாய்க்கும் அவருக்குமே முட்டிக் கொள்ளும்.

தாயை திருப்தி படுத்துகிறேன் பேர்வழி என்று மனைவியை கேலி பேசியும் ஏளனப் படுத்தியும் பழகிவிட்டார்.

“ஏன் வரல”

‘நான் சொல்லி இவள் மறுப்பதா’ கோபத்தில் இரைந்தார்.

"நானும் என் பையனும் எங்க அம்மா வீட்டுக்கு போறோம்ங்க” வார்த்தையில் கோபமில்லை. ஆனால் தெளிவாய் வந்தது பதில்.

"அம்மா வீட்டுக்கா? யாரைக் கேட்டு போற"

“யாரைக் கேட்கனும்” என்றவளின் நிதானம் யோசிக்கச் செய்தது.

“புருஷன் என்னைக் கேட்கனும். போகக் கூடாது” என்றார்.

“அம்மா வீட்டுக்கு போறதை தடுக்க யாருக்கும் உரிமை இல்லன்னு உங்க சட்டம்தாங்க சொல்லுது”

“என்ன சம்பாதிக்கிற திமிரா? என்கிட்டயே சட்டம் பேசுற…”

“இதுக்கு பெயர் திமிர் இல்லைங்க. சுய மரியாதை"

“ஓ…" என்றார் கேலிக்குரலில்.

அதிராமல் கூட கூட பேசிய மனைவி புதிதாகத் தெரிந்தாள்.

குட்ட குட்ட குனிந்து கிடந்தவள். தாய் வீட்டுக்கு போகக்கூடாதென்றால் அழுது சாப்பிடாமல் இருப்பவள், எதிர்த்து பேசாமல் கண்ணீர் வடிப்பவள் என மனைவியின் இந்த பரிமாணங்களைத்தான் இதுவரை கண்டிருக்கிறார்.

கண்ணுக்குத் தெரியாத அந்த அடிமைச் சங்கிலியை அவள் உடைத்துவிட்டாள் என்பதை அவர் அறியவில்லை.

அதில், “இத்தனை நாள் அந்த சுயமரியாதை எங்க போச்சு" என்றார்.

“உங்க காலடியிலதாங்க அடகு வச்சிருந்தேன். உங்க அன்பு கிடைச்சிடாதான்னு…” என்ற ஷர்மியின் குரல் பிசுறு தட்ட விழிகளில் வத்திப்போன நீர் இன்னமும் எச்சமாய் எட்டிப் பார்த்தது.

“ஏன் இப்ப என் அன்பு தேவைப்படலையா. வேலைக்கு போற இடத்துல வேற எவனையும் பார்த்துட்டியோ?” என்றதும் விரக்தியாய் சிரித்தாள்.

“ஒரு பொண்ணை அடிமையா வைக்க உங்க இனம் காலம் காலமா பயன்படுத்துற பிரம்மாஸ்திரம். இந்த வார்த்தைக்கு பயந்துதானே இத்தனைநாள் சீரழிஞ்சேன்.

போதும்ங்க… நான் மட்டுமே ரொம்பநாளா கையைத் தட்டிக்கிட்டு இருக்கேன். ஒருக்கையை மட்டும் தட்டினா ஓசை வராதுன்னு புரிஞ்சி போச்சுங்க… எனக்கும் இதுக்கும்மேல தட்ட தெம்பில்ல கை வலிக்குது” என்றாள்.

ஷர்மியின் இந்த உணர்வுகளெல்லாம் புரிந்தால்தான் அவர் எப்போதோ மனிதனாய் மாறி இருப்பாரே!

“அப்ப என்கூட வரமாட்ட?"

அவள் சொன்னது எதையும் புரிந்து கொள்ளாமல் தன் பேச்சிலேயே நின்றார்.

“தாராளமா வரேன். உங்கம்மா ஊரிலிருந்து வந்ததும் என் மனைவியைக் கூட்டிட்டு டூர் போறேன்னு சொல்லிட்டு வாங்க.. உங்ககூட தலைநிமிர்ந்து நடந்து வரேன்.

தாலி கட்டிக்கிட்டுதானே வந்தேன். உங்ககூட ஓடி வரலையே… இல்ல நான் உங்க கள்ளக் காதலியா? உங்கம்மாக்கு மறைச்சி மறைச்சி காதல் பண்ண…

அட டூர்கூட வேண்டாங்க. உங்க அம்மாகிட்ட சொல்லிட்டு ஒரு சினிமாக்கு கூட்டிட்டுப் போக முடியுமா உங்களால… அட்லீஸ்ட் பக்கத்தில இருக்க கோவிலுக்கு…”

இத்தனைநாள் பேசாததுக்கும் சேர்த்து வைத்துப் பேசினாள்.

“இப்போ எதுக்கு தேவை இல்லாததெல்லாம் பேசுற…
கடைசியா கேட்கிறேன்டி… நல்ல சான்ஸ்.. எங்க அம்மா திரும்பிவர பத்துநாள் மேல ஆகும்” என்றவரில் "ச்சீ" என்றானது.

“கண்டிப்பா மாட்டேங்க” உறுதியாக மறுத்தாள்.

எல்லாவற்றையும் பேசிவிட்டு கூப்பிட்டதும் நாய்க்குட்டி போல் இத்தனைநாள் பின்னால் ஓடியதால் தானே இவ்வளவு பிரச்சனையும்.

“இந்த முறை கண்டிப்பா நான் எங்க வீட்டுக்குதான் போறேன்.. அதை நீங்க இல்ல யார் நினைச்சாலும் தடுக்க முடியாது."

"போனா… அப்படியே போய்டு. இங்க திரும்பி வரக்கூடாது”

கைத்தட்டி சபாஷ் போட்டாள்.

“இப்படியே நான் ஆமாஞ்சாமி போட்டுட்டே இருந்தாலும் என்னைக்கும் ஒருநாள் அதுதாங்க நடக்கும். எல்லா பொறுமைக்கும் ஒரு அளவு இருக்கு அது மீறும்போது உடைஞ்சிடும்.. இல்ல யாரோ ஒருத்தர் உடைச்சிடுவோம்.

என்னோட இத்தனை வருட பொறுமைக்குப் பிறகு கிடைக்கிற பரிசு உங்க பிரிவுன்னா அது என் சுயமரியாதைக்காக இருக்கட்டுமே… அட்லீஸ்ட் எனக்கு வருத்தமாவது மிஞ்சாது”

“அதென்னங்க என் பெட்ரூம்க்குள்ள நான் வரதுக்கும்கூட எங்கம்மாட்ட சொல்லிட்டு வந்தியான்னு எத்தனை நாள் கேட்டுருக்கீங்க…

வெட்கமாயில்ல…

கல்யாணம் ஆன புதுசுல இதெல்லாம் எனக்கு புரியலைதாங்க..‌ ஆரம்பத்துலயே பிரச்சனை வேண்டாம்னு நான் நினைச்சதோட விளைவு என்னால நினைச்சபோது நிமிரவே முடியலைங்க…

விட்டுக்குடுத்து போனதுக்கு எனக்கு பரிசா கிடைச்சது என்னங்க?

உங்க அன்பா? அதுதான் இன்னைவரை எனக்கு கேள்விக்குறியாதானே இருக்கு” என்று கசப்பாய் சிரித்தாள்.

“நானும் என் புருஷனுக்கு எங்கேயோ ஒரு மூலையில அன்பிருக்கு. அது போதும்னுதாங்க நீங்க பண்ணதுக்கெல்லாம் விட்டுக்குடுத்து தலையாட்டிக்கிட்டு இருந்தேன்…

ஆனா மறுக்க வேண்டிய இடத்துல மறுக்கனும்னு லேட்டாதாங்க புரிஞ்சிக்கிட்டேன்.

“அன்னைக்கே நான் மறுத்துருந்தா இவ்ளோ அவமானத்தை நானும் என் குடும்பமும் சந்திச்சிருக்காது.

பெண்களுக்கு அச்சம், மடம், நாணம், பயிர்ப்புன்னு நால்வகை குணம்தாங்க சொல்லி இருக்காங்க. கூடவே மறுப்புன்னு ஒரு குணமும் அவசியம்னு இத்தனை வருஷத்தில் புரிஞ்சிக்கிட்டேன்” என்றவள் மகனை கையில் பிடித்துக்கொண்டாள்.

"நான் இந்த லீவுல அம்மா வீட்ல இருந்துட்டு வரேன்” என்று திருமணமாகி இத்தனை வருடங்களின்பின் கிளம்பியவள் நின்று கணவனிடம் திரும்பினாள்.

“உங்களுக்கு எங்ககூட வெளிய போகணும்னு உண்மையாவே விருப்பம் இருந்தா நீங்க எங்க அம்மாவீட்டுக்கு எப்ப வேணும்னாலும் தாராளமா வரலாம்.

உங்கம்மா மாதிரி சொல்லிக் காட்ட மாட்டாங்க. மாப்பிள்ளைங்கிற மரியாதை என்னைக்கும் இருக்கும்” என்று திரும்பிப் பாராமல் நடந்தவளை திகைத்தபடி பார்த்திருந்தார் சரவணப் பெருமாள்.

அதெநேரம் கோவிலில் வெளிர் மஞ்சள் நிற பாவாடைச் சட்டைக்கு எடுப்பாய் கரும்பச்சை நிற தாவணியில் கண்ணைப் பறித்தவளிடம் கடலை வறுக்க முயற்சித்துக் கொண்டிருந்தான் மணிகண்டன்.

“நான் முதலில் வந்தப்போ இந்த ஊரில் உங்களை பார்க்கலையே… ஊருக்குப் புதுசா” மணிகண்டனின் கேள்வியில் கல கலவெனச் சிரித்தாள்.

"நான் கேட்க வேண்டிய கேள்வி! இது நான் பிறந்து வளர்ந்த ஊர்” என்றவள் தீபாராதனையை எடுத்துக்கொள்ள, மணிகண்டனும் புதிதாக மாறியிருந்த ஐயரை பார்த்தபடி ஆரத்தியை எடுத்துக் கொண்டான்.

“இவ்ளோநாள் ஹாஸ்டல்ல தங்கிப் படிச்சேன்" அவளாகவே பதில் சொல்லவும் குஷியாகிப் போனான்.

“ஏங்க.. உங்களுக்கு சொந்தமா கிணறு எதும் இல்லையே?” என்றவனை புரியாமல் பார்க்க,

“ஏன் கேட்கறீங்க" என்றாள்.

“உங்ககிட்ட ஒரு விசயம் சொல்லலாம்னுதான். உங்க ஊர்லதான் கிணறை வச்சி காதலை பிரிச்சிருவீங்களே.. அதான் நான் உஷாராகிக்க வேணாம்" என்றவனில் மீண்டும் பட்டாசாய் சிரித்தவள்,

“ரொம்ப நல்லா பேசுறீங்க… இப்போ என்ன லவ் சொல்லப் போறீங்களா?”

"சொன்னா… நோ சொல்லப் போறீங்களா" என்றான் குதர்க்கமாக.

" ச்ச.. ச்ச..” என்றவள்,

"ஆனா அதுக்கும் முன்னாடி மீசைக்காரரை கேட்கணுமே?” என்றவளில்,

"அது யாருங்க எனக்குத் தெரியாம இந்த ஊரில் மீசைக் காரர்” என்றான்.

“இதோ எங்கப்பா" என்று திரும்பி பின்னால் கைக்காட்ட அருகில் சண்முகவேல் பாண்டி வந்து கொண்டிருந்தார்.

“அய்யய்யோ இவரா உங்கப்பா? எந்திரிக்க எந்திரிக்க காலை உடைப்பாரே… இதுக்கு நீங்க நோன்னே சொல்லியிருக்கலாம்ங்க…”என்று அலறியவனில் வாய்ப்பொத்தி சிரித்தது வண்ணமயில்.

தூரத்தில் அரவிந்தன் ஜீப்பை எடுப்பதை பார்த்திருந்தவன்,

"உங்கப்பாட்டல்லாம் பொண்ணு கேட்கிற தைரியம் எனக்கில்லங்க. எனக்கு வேற வழி தெரியலைங்க… சாரி" என்றவன், “அரவிந்தன் சார் ஜீப்பை எடுங்க" என்று கத்தியபடி பின்னால் திரும்பிப் பாராமல் கையைப் பிடித்தவன்,

சம்போ…சிவ சம்போ… சிவ சிவ சம்போ… உறங்கும் மிருகம் எழுந்து விடட்டும்… தொடங்கும் கழகம் துணிந்து விடட்டும்…. என மூச்சிரைக்க கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு ஓடினான்.

ஜீப்பின் அருகில் வந்ததும் மூச்சிரைக்க, “ஆமா உன் பெயரென்ன?” என்று திரும்பிப் பார்க்க, மீசையை முறுக்கிக் கொண்டு அசையாமல் அவன் கையைப் பிடித்து நின்றிருந்தார் சண்முகவேல் பாண்டி.

‘இந்த கட்டுமரத்தையா இவ்ளோநேரம் இழுத்துட்டு ஓடி வந்தேன். அதான் இவ்ளோ மூச்சிரைக்குதா…’

“சாரி சார்! நீங்க கபடி வீரராச்சே… அதான் உங்க ஹார்ட் பீட் செக் பண்ணேன். பரவால்ல நல்லா ஸ்ட்ராங்காவே இருக்கீங்க” என்றவன் அலறியடித்து ஜீப்புக்குள் தாவப் போக அவனைப் பிடித்து நிறுத்தினார் சண்முகவேல் பாண்டி.

“அது சும்மா லுல்லய்க்கு சார்" என்று சமாளிக்க அடக்கமாட்டாமல் சிரித்தான் அரவிந்தன்.

“சீக்கிரம் இன்ஸ்பெக்டர் ஆகுங்க தம்பி! கல்யாணத்தை வச்சிக்கலாம்" அவர் கெத்து குறையாமல் மீசையை முறுக்க,

“இதுக்கு நீங்க பொண்ணு தரமாட்டேன்னே சொல்லியிருக்கலாம்" என்றவனோ,

“நான் இன்ஸ்பெக்டர் ஆகிட்டா இவரை என்ன பண்ண…” என்றவன் அரவிந்தனை இழுத்து ஜீப்புக்குள் போட்டுக்கொண்டு திரும்பிப் பாராமல் வாகனத்தை இயக்க சண்முகவேலின் வெடித்த சிரிப்புச் சத்தம் ஜீப்பைத் தொடர்ந்தது…

கதை முடிவுற்றது.

அச்சம், மடம், நாணம் பயிர்ப்புடன் தேவையான இடத்தில் மறுப்பும் சொல்லக் கற்றுக்கொள்ளுங்கள் தோழமைகளே!


மரகதம்மா மட்டும் தைரியமாக மறுத்திருந்தால் இந்தக் கதையே உருவாகி இருக்காது.

தேவையான இடத்தில் சொல்லப்படாத மறுப்பு இன்னொரு சின்னாவையோ இன்னொரு அன்பிலரசியையோ உருவாக்கிவிடக் கூடும்…

“விலங்குகள் உடைக்கப் படாதவரை தடைகள் அகற்றப்படுவதில்லை”


இன்னமும் உலகில் எங்கோ ஒரு மூலையில் அறியாமையில் சிக்கித் தவிக்கும் என் சகோதரிகளுக்கு இந்தக் கதை சமர்ப்பணம்…

நன்றி!
 
Top Bottom