• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

சுடரி - என்னுரை

ரோசி கஜன்

Administrator
Staff member
வாசகர்களுக்கு இனிய வணக்கம்!

எனது 25 வது நாவல் 'சுடரி', முற்று முழுதாக இலங்கை வடபகுதியைக் களமாகக் கொண்டதாகும்.

இலங்கையில், போதைப்பொருள் பாவனை என்பது, இப்படித் தலைவிரித்தாடும் என்று கனவில் கூட நினைத்திருக்கவில்லை. கனவிலும் நினையாத நல்ல விடயங்கள் நிகழ்கையில் மகிழ்வு தான்! இது? போதைப்பொருள் பற்றியதான அச்சம் உலகுக்கே உண்டு என்றாலும், மேற்கத்திய நாடுகளில் வாழ்வோரில் பெரும்பான்மையினர் , அதனருகாலேயே, மிக இலாவகமாகக் கடந்து போகிறார்கள், தம்மைக் காத்துக்கொண்டு! இதைக் கண் கூடாகவே காண்கிறேன், நான்.

அதுவே, வளர்ந்து வரும் நாடுகளை எடுத்துக்கொண்டால், போதைப்பழக்கத்துக்கு முன்னால் இயல்பு தொலைத்துப் போகின்றன. என் நாட்டில், நான் வாழ்ந்த பகுதிகள் போதைப்பொருளின் மாயைக்குள் சிக்கித் தத்தளிப்பதைச் செய்வதறியாது பார்த்து நிற்பவர்களில் நானும் ஒருத்தி. இது சம்பந்தமாக 'சுடரி' கதைக்கிறது.

இது கதை ; என் கற்பனையில், போதைப்பொருள் பாவனையற்ற, விழித்துக்கொண்ட இலங்கையைக் கண்டிருக்கிறேன்; உண்மையிலும், அப்படியொரு நாடாக வேண்டும் என்ற பேராவலோடு!

அதோடு, உழைப்பு, ஒவ்வொருவரும் தத்தம் தேவைகளுக்காக இன்னொரு கையை எதிர்பாராது சுயமாக உழைத்தல் என்பது, பற்பல பிரச்சினைகளுக்குத் தீர்வாக அமையும். அது தெரிந்தும், கவனத்தில் கொள்ளாத சமுதாயமாக மாறுகிறோமோ என்ற கேள்வி என்னுள் உண்டு.
'இனாம்', நம் இயல்பைத் தொலைந்து போக வைக்கும் பரிசில்கள் என்பனவற்றால் அந்த நேரத்தில் மனத்தில் மகிழ்ச்சி உருவாகிறது. நீண்ட கால நோக்கில்? பெரும்பாலும், எதிர்மறையான தாக்கமே! நம்மைச் சுற்றி நிதானமாகப் பார்த்தால் வாழும் உதாரணங்களைக் காணலாம்.

"நம்மைச் சார்ந்தவர்கள் ஊரில் சிரமப்படுகிறார்கள். இதெல்லாம் ஒரு காசா?" என்று, வெளிநாட்டினர் வழங்கும் பணம் ஊரில் நல்ல வழியில் செலவாகிறதா? மிகப்பெரும் கேள்வி இது!

அதுவே, தன்னையும் கடும் உழைப்பையும் நம்புகிற, இப்படித்தான் வாழவேண்டும் என்ற தீர்மானத்தில் நடப்பவன், இக்கதைக்கு நாயகனாகிறான். அவன் மூலம், காளான் செய்கை பற்றிப் போகிற போக்கில் அறிந்து கொள்ளலாம். அது, எனக்கு மிகவும் சுவாரசியமாகவும் இருந்தது. அப்போ உங்களுக்கு ? செல்லுங்களேன்.

வெக்கைக்குள் ஊடுருவும் மென் குளிர்ச்சி போல், இக்கதையில், மென்மையான நேசமும் பிரயாணிக்கிறது. அந்தவகையில், கதைக்கு மேலும் மெருகேற்றுகிறாள், நாயகி பைரவி!

இனி, வாசித்துவிட்டு உங்கள் கருத்துகளைச் சொல்லுங்களேன்.

பிரியங்களுடன்,
ரோசி கஜன்
 
Top Bottom