• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

செதுக்கிய சிற்ப பாவையே - 11

Vishakini

Moderator
Staff member
சிற்ப பாவை - 11

“புருஷன் அங்கே செத்த பிணமா படுத்த படுக்கையா கிடக்கும்போதே இவளுக்கு எவ்வளவு கொழுப்பு பாத்தியா? இங்கெல்லாம் பொண்ணுங்களை வச்சுச் சம்பாதிக்கலாம்னு நினைப்பு” கீழ்த்தரமாக முணுமுணுத்தாள்.

ஒரு காலத்தில் உறவு என்று கொண்டாடிய ஆனந்தி அத்தை, தங்கள் வீட்டுப் பிள்ளை என்ற ரத்த பாசம் துளியும் இல்லாமல் வீசிவிட்டுப் போன அந்த வார்த்தைகள், வெண்பாவின் நெஞ்சில் நஞ்சாய் இறங்கின.

அந்தச் சொற்கள் தந்த அவமானத்தை விழுங்கிக்கொண்டு, கனத்த இதயத்தோடு தன் கணவனைத் தேடிச் சென்றாள் வெண்பா.

வழியில் கண்ட அந்த கசப்பான சந்திப்பைப் பற்றி ஒரு வார்த்தை கூட அவள் கணவனிடம் சொல்லவில்லை. சொன்னால் அந்த ஜீவன் தாங்குமா?

"கவி குட்டி... ஏதாவது சாப்பிட்டியாடா?" - தன் சோகத்தை மறைத்துக்கொண்டு மகளிடம் கேட்டாள் வெண்பா.

"அம்மா... நானும் சாப்பிட்டேன். அப்பாவுக்கும் பால் இருந்தது, அதை மெதுவா ஊட்டி விட்டுட்டேன். நீங்க முதல்ல போய் சாப்பிடுங்கம்மா, முகம் எல்லாம் வாடிப் போயிருக்கு," என்றாள் சின்னஞ்சிறு சிறுமி கவி.

தன் தந்தை அருகில் அமர்ந்து, அவருக்குப் பிடித்த ஏதோ ஒரு புத்தகத்தை மெல்லிய குரலில் படித்துக் கொண்டிருந்தாள் கவி.

கண்கள் நிலைகுத்தி போயிருந்தாலும், மகள் படிப்பதை அவர் கேட்டுக் கொண்டுதான் இருந்தார். எப்போதாவது ஒருமுறை வறண்ட தொண்டையிலிருந்து ஒன்று, இரண்டு வார்த்தைகள் கஷ்டப்பட்டுப் பேசுவதோடு சரி; மற்றபடி மௌனமே அந்த அறையை ஆக்கிரமித்திருந்தது.

வெண்பா உணவைத் தட்டில் எடுத்துக் கொண்டு கணவன் அருகில் வந்து அமர்ந்தாள். தன் கையே நடுங்கினாலும், அதை மறைத்துக் கொண்டு தன் அன்பான கையால் கணவருக்கு இரண்டு வாய் ஊட்டி விட்டாள்.

"போதும்" என்பது போல் அவர் கண்கள் கெஞ்ச, வெண்பா எந்திரத்தனமாக தானும் ஒரு பிடி சாப்பிட்டாள். பசிக்காக அல்ல, தான் செத்து மடிந்தால் தன் பிள்ளைகளுக்கு யார் பாதுகாப்பு? தான் உயிர் வாழ்ந்தால் தானே தன் பெண் பிள்ளைகளுக்கு ஒரு நிழல் இருக்கும்?

அந்த ஒரே காரணத்திற்காக, ஏதோ கசப்பு மருந்தை முழுங்குவது போல உணவை வலுக்கட்டாயமாகத் தொண்டைக்குள் தள்ளினாள்.

வெண்பாவிற்கும் இப்போது ஒரு வேலை அமைந்துவிட்டது. மூத்த மகள் ஒரு பக்கம் கஷ்டப்பட, இங்கே சுடரின் கல்லூரிப் படிப்புக்குக் கட்டணம் செலுத்த வேண்டிய நெருக்கடி.

அறுபதாயிரம் ரூபாய் கட்ட வேண்டும்! கையில் ஒரு பைசா இல்லை. யாரிடம் போய் கையேந்துவது? யாரிடம் கடன் கேட்பது? என்று தெரியாமல் வெண்பா திகைத்துப் போயிருந்தாள்.

இன்னும் இரண்டு மாதங்களே அவகாசம் இருக்கிறது. அதற்குள் எப்படியாவது பணத்தை ஏற்பாடு பண்ணியாக வேண்டும், பிள்ளையின் படிப்பு மட்டும் எந்தக் காரணத்தைக் கொண்டும் பாதியில் நின்று விடக் கூடாது என்று மனதிற்குள் புழுங்கிய படியே வேலைக்குச் சென்று வந்தாள்.

வெண்பாவின் பயத்தை விட, வெளியூரில் இருக்கும் மூத்த மகள் நகைக்கிற்குத்தான் குடும்பத்தைப் பற்றிய பயம் அதிகமாக இருந்தது.

மூத்த பிள்ளையாக தன் தங்கைகள் ஒவ்வொருவரையும் ஒகரை சேர்க்க வேண்டும் என்று அவள் தன் பிஞ்சு மனதிலேயே ஆழமாக எழுதி வைத்திருந்தாள்.

இரண்டாவது தங்கையின் படிப்புச் செலவுக்காகப் பணம் கட்ட வேண்டும் என்பதைத் தன் டைரியில் முன்னதாகவே குறித்து வைத்து, அதற்காகவே உழைத்துக் கொண்டிருந்தாள்.

அங்கே நகைக்கிற்குத் தரப்படும் கடுமையான பயிற்சியை விட, இந்தி மொழியைப் புரிந்து கொள்வதுதான் பெரும் போராட்டமாக இருந்தது.

தமிழ் மண்ணிலேயே வளர்ந்தவள், தனக்குத் தெரிந்த அரைகுறை ஆங்கிலத்தை வைத்து எப்படியோ சமாளித்துக் கொண்டிருந்தாள். ஆனால், அங்கே இந்தி பேச வேண்டியது கட்டாயமாக இருந்தது.

மொழி அறியாத தேசத்தில் தனித்து நின்றாலும், தன் குடும்பத்திற்காகத் தத்தித் தத்தி கூகுள் உதவியுடன், கூட இருப்பவர்கள் மூலமும் கொஞ்சம் கொஞ்சமாக அந்த மொழியைக் கற்கத் தொடங்கினாள்.

"வீட்டுக்கு போன் பண்ணி ஒரு மாசம் ஆகுது... இன்னைக்கு அம்மா கிட்ட பேசியே ஆகணும்" என்ற தவிப்புடன் தன் அம்மாவிற்கு அழைத்தாள் நகை.

போன் ஒலிக்கத் தொடங்கியதும் வெண்பாவிற்கு கண்கள் குளமாயின.

மகளின் குரலைக் கேட்டால் கண்ணீர் வந்துவிடும் என்று கண்களைத் துடைத்துக் கொண்டு, போனை எடுத்து ஸ்பீக்கரில் போட்டுத் தன் கணவன் அருகில் அமர்ந்தாள்.

"நகை... எப்படிடா இருக்க? வேலை எல்லாம் எப்படிப் போகுது? நேரத்துக்குச் சாப்பிடுறியாமா?"

"அம்மா, நான் நல்லா இருக்கேன்மா. எனக்கு இங்கே எந்தக் குறையும் இல்லை. ஏற்கனவே மூணு மாசம் ட்ரைனிங் முடிஞ்சிருச்சு, இன்னும் ஒரு மூணு மாசம்தான் பாக்கி. அதுவும் முடிஞ்சிட்டா வேலையில சேர்ந்துடுவேன்."

"பத்திரமா இருமா... அங்க ரொம்பக் குளிருமே?"

"ஆமாம்மா, குளிர் அதிகமாத்தான் இருக்கு. ஆனா இப்போ அது எனக்குப் பழகிடுச்சு."

"சாப்பாடு எல்லாம் செட் ஆயிடுச்சாடா?"

"எல்லாம் சரியாகிடுச்சுமா. இந்த மாசத்துக்கான வட்டிப் பணத்தை எல்லாருக்கும் அனுப்பிட்டேன். உங்க கைச் செலவுக்கு இந்த மாசம் கொஞ்சம் பணம் அனுப்பி இருக்கேன், அப்பா அக்கவுண்ட்ல இருக்கு, எடுத்துக்கோங்க."

"நான் எடுத்துக்கிறேன்டா... என்கிட்டயும் காசு இருக்குடா," சொல்லக்கூடாத உண்மையை அவசரத்தில் வெளிப்பட்டு விட, வாய் தவறி உளறிவிட்டாள் வெண்பா.

சுடர் வேலைக்குச் செல்வதோ, வெண்பா வேலைக்குச் செல்வதோ இதுவரை நகைக்கிற்குத் தெரியாது.

"உங்ககிட்ட ஏதுமா காசு?" நகையின் குரலில் சந்தேகம் தொனித்தது.

வெண்பா பதற்றத்தில் தன் நாக்கைக் கடித்துக் கொள்ள, அதே நேரம் சுடரும் தன் வேலையை முடித்துவிட்டு சோர்வோடு உள்ளே வந்தாள்.

"அம்மா! இன்னைக்கு மெடிக்கல் ஷாப்ல வச்சு ஆனந்தி அத்தையைப் பார்த்தேன். மாத்திரை வாங்க வந்திருந்தாங்க. நான் அவங்ககிட்ட எதுவும் பேசல. ஆனா அவங்க, 'நீதான் இங்க வேலை செய்யறியா?'ன்னு கேட்டாங்க. நான் பதில் சொல்லாம வந்துட்டேன்," போனில் அக்கா இருப்பது தெரியாமல் சுடர் படபடவென உண்மையை உளறிவிட, அறைக்குள் ஒரு நிமிடம் நிசப்தம் நிலவியது.

"சுடர்! நீ வேலைக்குப் போறியா?" நகையின் குரல் இடி போலக் கேட்க, சுடர் திருதிருவென விழித்து உறைந்து போனாள்.

வெண்பா தன் கண்களாலேயே மகளைக் கண்டிக்க, சுடரும் தன் தவறை உணர்ந்து கண்களாலேயே மன்னிப்புக் கேட்டாள்.

இனி எதையும் மறைக்க முடியாது, நாம் என்ன தப்பு காரியமா செய்கிறோம்? உழைக்கத்தானே செய்கிறோம்? என்று முடிவெடுத்த வெண்பா மெல்லப் பேசத் தொடங்கினாள்.

"ஆமா நகை... சுடர் பக்கத்துல இருக்குற மெடிக்கல் ஷாப்ல ஒரு ஷிப்ட் வேலை பார்க்குறா. நானும் சும்மா இருக்காம இங்க இருக்குற ஒரு சூப்பர் மார்க்கெட்ல வேலைக்குச் சேர்ந்து இருக்கேன். அதனால இப்போ இந்த மாசம் எங்க கையில கொஞ்சம் காசு இருக்கு. நீ அனுப்புற உன் சம்பளத்தை உனக்காகப் பத்திரமா வச்சுக்கோ."

"அம்மா! அப்பாவை அப்படித் தனியா விட்டுட்டு எப்படிப் போனீங்க? அப்பாவை யார் பார்த்துப்பா? சுடர், உனக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலை? காலேஜ் முடிச்சுட்டு வந்து படிக்கணுமா இல்லையா? படிக்காமல் எதுக்கு வேலைக்குப் போற? படிப்பு பாதியில போயிடுச்சுன்னா என்ன பண்றது?" என்று நகை ஆத்திரத்திலும் ஆதங்கத்திலும் கத்தினாள்.

"நான் ஒன்னும் உங்களை விட்டுட்டுத் தூரமா போகலையே? நான் தான் வேலைக்குப் போறேன், உங்க எல்லாரையும் பார்த்துக்கிறேன்னு சொல்லிட்டுத்தானே இங்க வந்தேன்? அப்புறம் எதுக்கு நீங்க எல்லாரும் தனித்தனியா வேலைக்குப் போறீங்க?" - நகையின் குரல் உடைந்தது.

"நகை... அம்மா வீட்ல சும்மா தானே இருக்கேன்? அப்பாவும் இப்போ கொஞ்சம் பரவாயில்லை. கவி ஸ்கூல் முடிஞ்சு வந்து அப்பாவைப் பார்த்துக்கிறா. நானும் பக்கத்துலதான் இருக்கேன், ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை வந்து அப்பாவை நேர்ல பார்த்துட்டுத் தான் போறேன். வட்டிப் பணமும் கடனுக்கே உன் சம்பளம் சரியா இருக்கு. அப்பாவுக்கு மருந்து வாங்கணும், வீட்டுச் செலவு இருக்கு... இதெல்லாம் நாங்க தானே பார்க்கணும்? நீயும் கொஞ்சம் புரிஞ்சுக்கோடா. யாரும் ரொம்பத் தூரம் போகல, பஸ் ஏறி எங்கேயும் போகல. நம்ம வீட்டைச் சுத்தி இருக்குற கடையில தான் வேலை செய்யுறோம். எங்களுக்காக நீ அவ்வளவு தூரம் போய் கஷ்டப்படும்போது, நாங்க உனக்கு உதவியா இருக்கக் கூடாதா?"

"அம்மா... ஆனா அப்பா?"

"அப்பா பத்திரமா தான் இருக்காங்க. நான் அடிக்கடி வந்து பார்த்துப்பேன். கவி நாலு மணிக்கு வந்துடுவா, அதுக்கப்புறம் அவ அப்பா கூடத்தான் இருக்கா. நீ எங்களைப் பத்திக் கவலைப்படாம, உன் உடம்பைப் பார்த்துக்கோ. பத்திரமா இரு."

தாய் ஆயிரம் சமாதானம் சொன்னாலும், தன் அன்னை வெளியே சென்று வேலை பார்ப்பதை நகையினால் ஜீரணிக்கவே முடியவில்லை. அவளுக்குத் தெரியும், தந்தை காத்தவராயன் நன்றாக இருந்தவரை வெண்பாவை ஒரு கஷ்டமும் தெரியாமல் கண்ணுக்குள் வைத்துப் பார்த்துக் கொண்டார் என்பது.

மகளின் மௌனம் வெண்பாவின் மனதை உறுத்தியது.

"கடன் எல்லாம் அடைஞ்சிடுச்சுன்னா நான் வேலைக்குப் போவதை நிறுத்திடுவேன் நகை. இப்போதைக்கு நீ கடனை மட்டும் பாரு. என்னால முடிஞ்சது, உன் அப்பாவுக்கு மாத்திரை வாங்கவாவது நான் உழைக்கணும். என் புருஷனை நான் பார்த்துக்கணும் இல்லையா?"

"அவர் உங்களுக்குப் புருஷன் மட்டும் கிடையாது அம்மா... எங்களுக்கு அப்பாவும் தான்!" நகையின் அந்த ஒரு வார்த்தையில் ஆயிரம் வலிகள் நிறைந்திருந்தன.

"உங்க அப்பாவுக்காகத் தானே நீயும் அங்கே கஷ்டப்படுற? ஒரு ஆம்பளப் புள்ளை இருந்தா கூட இந்நேரம் பயந்து ஓடி இருப்பான். ஆனா நீ எல்லாத்தையும் தாங்குற... அதுவே எங்களுக்குப் போதும். எனக்கு வீட்ல சும்மா உட்கார்ந்து இருந்தா அழுகையா வருது, அதனாலதான் வேலைக்குப் போறேன். சுடர் ரொம்ப நேரம் வேலை செய்யல, அஞ்சு மணியிலிருந்து ஒன்பது மணி வரைக்கும்தான் போறா. அவளுடைய பாக்கெட் மணிக்கும் பஸ் செலவுக்கும் அந்தச் காசு உதவியா இருக்கும். நீ இதையெல்லாம் போட்டு மனசைக் குழப்பிக்காம பத்திரமா இருமா."

"நீங்களும் பத்திரமா இருங்க... தங்கச்சிகளைப் பார்த்துக்கோங்க, அப்பாவையும் நல்லா கவனிச்சுக்கோங்க," என்று சொல்லி, துக்கம் தொண்டையை அடைக்க போனை வைத்தாள் நகை.

தன் தங்கைகளிடம் கூட மேற்கொண்டு பேச அவளுக்குத் தெம்பில்லை.
அலைபேசித் திரையில் தெரிந்த தன் தந்தையின் புகைப்படத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள் நகை. அந்தப் புகைப்படம் அவளைப் பார்த்துச் சிரிப்பது போலத் தோன்றியது, ஆனால் அவள் கண்களில் இருந்து வழிந்த கண்ணீர் அலைபேசியின் திரையை நனைத்துக் கொண்டிருந்தது.

மொத்த குடும்பமும் துள்ளி திரிந்து தந்தை பாதுகாப்பில் சந்தோஷமாக இருந்த காலங்கள் கண் முன்பே ஓடியது அவளுக்கு.
 
Top Bottom