செதுக்கிய சிற்ப பாவையே - 12

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Vishakini

Moderator
Staff member
Nov 7, 2025
1,634
6,876
113
சிற்ப பாவை - 12

இப்படி ஒரு நிலை வரும் என்று முன்பே யாராவது அவளிடம் சொல்லி இருந்தால், அந்தச் சொல்லின் ஏளனத்தை நினைத்து சத்தம் போட்டு சிரித்து இருப்பாள் அவள்.

ஆனால், காலத்தின் கோலமும் விதியின் விளையாட்டும் மிகவும் கொடியது. அனைத்தையும் ஒரு மூலையில் அமர்ந்து கேட்டுக் கொண்டிருந்த காத்தவராயனுக்குத் தான் மனதளவில் அப்படியே முடங்கிப் போனார்.

முதுகுத்தண்டு முறிந்து உடலளவில் அவர் முடங்கியதை விட, தன் குடும்பத்தின் நிலையை எண்ணி அவர் மனதளவில் சிதைந்து முடங்கியது தான் மிக அதிகம்.

வீட்டின் மூன்று பெண்களும் புயலில் சிக்கிய சிறு செடிகளாய் தங்களால் முடிந்தவரை போராடிச் சம்பாதித்து, தள்ளாடும் குடும்பத்தைத் தாங்கிப் பிடித்து வந்தனர்.

நகை, கடந்த இரண்டு மாதங்களாக கண்டங்களுக்கு வட்டி மட்டுமே கட்டி வந்தாள். அசலில் ஒரு பைசா கூடக் குறைக்காமல், அந்தப் பணத்தை எல்லாம் ஒவ்வொரு ரூபாயாகச் சேர்த்து வைத்து, தன் தங்கை சுடரின் காலேஜ் பீஸை ஒரு வழியாக கட்டி முடித்துவிட்டாள்.

போனில் தன் தங்கையிடம் , "சுடர்... நல்லபடியா எக்ஸாம் எழுது. நீ நல்லா படிச்சிட்டு ஒரு நல்ல வேலைக்கு போகணும். பாப்பாவ நம்ம ரெண்டு பேரும் தான் இனிமே பாத்துக்கணும்," என்று தன் கனவுகளைத் தங்கையின் கனவுகளாக பார்த்தாள்.

அக்கா கொடுத்த அந்த தைரியத்தில் சுடரின் கண்கள் மின்னின.

"அக்கா நீ எதைப்பத்தியும் பயப்படாதே... நான் நல்லபடியா படிப்பேன். நான் படிப்புல எந்தக் குறையும் வைக்க மாட்டேன். ஃபர்ஸ்ட் கிளாஸ்ல பாஸ் பண்ணுவேன் பாரு. கேம்பஸ் இன்டர்வியூல செலக்ட் ஆகி ஒரு நல்ல வேலைக்கு போவேன்," என்று தன் அக்காவுக்கு நம்பிக்கை ஊட்டினாள்.

"அதுதான் எனக்கும் வேணும்... நீங்க எல்லாரும் நல்லா இருக்கணும்," என்று தழுதழுத்த குரலில் சொன்னாள் நகை.

நாட்கள் நகர நகர, நகை ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்துத் தன் குடும்பத்தை முன்னோக்கிச் சுமந்து சென்றாள்.

ஒருவரின் பின் ஒருவராக இருந்த கடன்களைத் தீர்க்கத் தொடங்கினாள். ஆறு மாத கால கடுமையான பயிற்சிகள் முடிந்து, ஒரு வழியாகத் தன்னுடைய பயிற்சி காலத்தை வெற்றிகரமாக முடித்தாள்.

அவளின் பயிற்சி காலம் முடியும் நாளில், அங்கிருந்த பலரின் குடும்பங்களும் பெருமையோடு வந்திருந்தனர். ஆனால், இவளின் குடும்பம் மட்டும் அங்கே வரவில்லை. உண்மையில் இவள் யாரிடமும் சொல்லவே இல்லை. தள்ளாடும் தந்தையைத் தனியாக விட்டுவிட்டு, அவர்கள் மட்டும் இங்கே வருவதில் இவளுக்குத் துளிக்கூட விருப்பமில்லை.

பயிற்சி காலம் முடிந்த கையோடு, அவளைத் தொலைதூர மணிப்பூருக்கு பணி நிமித்தமாக அனுப்பி வைத்தனர்.

அவளுக்கு விடுமுறை கொடுக்கப்பட்டும் கூட, அந்தச் சில நாட்களுக்காக அவள் தன் வீட்டிற்குப் போகவில்லை. வீட்டிற்குச் சென்றால் பயணச் செலவு அதிகமாகும், அந்தப் பணத்தைச் சேர்த்து வைத்தால் இன்னும் ஒருவரின் கடனையாவது அடைக்கலாமே என்று எண்ணினாள்.

தன் ஆசைகளைத் தூக்கி எறிந்து விட்டு, நேராக மணிப்பூர் சென்று தன் பணியில் அமர்ந்தாள்.

வீட்டிலும் இந்தத் தகவலைச் சொல்லி விட்டாள். தன் மகள் வராதது ஒரு தாயாக வேதனையாக இருந்தாலும், இன்று அவள் தன்னிச்சையாக முடிவெடுக்கும் அளவுக்கு ஆளுமையாக வளர்ந்திருப்பதை பார்த்து அவளைக் கட்டாயப்படுத்த அந்தத் தாயால் முடியவில்லை.

அவள் முடிவு செய்தால் சரியாக இருக்கும் என்ற மரியாதை தோன்றியது.

ஆரம்பத்தில், "பெத்த மகளை வேலைக்கு அனுப்பிட்டு நீ என்னடான்னா வீட்ல உட்கார்ந்து சாப்பிடுறியே... உனக்கு அசிங்கமா இல்லையா?" என்று கேட்ட ஊர் வாய்கள், காலப்போக்கில் அந்த ஏளனத்தை மறந்து போயின.

இவர்களின் முதுகுக்குப் பின்னால் ஜாடை மாடையாக பேசியவர்கள் கூட, இன்று இவர்களைப் பார்த்தால் மரியாதையாகப் பார்க்க தொடங்கியிருந்தனர்.

நகை வேலைக்குச் சென்று முழுதாக ஒரு வருடம் ஓடிவிட்டது. இந்த ஒரு வருடத்தில் அவள் தன் மண்ணை மிதிக்கவே இல்லை. அங்கே வெண்பா இப்போது மாதம் 14,000 ரூபாய் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தாள். அந்தப் பணத்தை வைத்துத் தன் குடும்பத்தையும், தன் கணவனையும் கண் இமை போலப் பார்த்துக் கொண்டாள்.

சுடருக்கும் மாதம் 6,000 ரூபாய் கிடைத்தது. அதை வைத்துத் தன் பஸ் செலவுக்கும், காலேஜுக்குத் தேவையான பொருட்களையும் வாங்கிக் கொண்டாள். எந்தச் சூழ்நிலையிலும் அவள் தன் வீட்டையோ அல்லது அக்காவையோ ஒருபோதும் தொந்தரவு செய்யவில்லை.

இப்படி அனைவரும் ஒரு பக்கம் போராடிக் கொண்டிருக்க, நகையோ குடும்பச் செலவுக்காக மாதம் பத்தாயிரம் அனுப்பிவிட்டு, மீதமிருந்த ஒவ்வொரு காசையும் சேமிப்பில் வைத்திருந்து, மொத்தக் கடன்களையும் அந்த ஒரே வருடத்தில் அடைத்து முடித்தாள்.

அவளுக்கென்று ஒரு ரூபாய் கூட செலவு செய்யவில்லை. அவளுக்கு உணவு இருப்பிடம் இருக்கவே மாதம் வெறும் 1000 மட்டுமே அவளுக்கென்று செலவு செய்வாள்.

ஒரு நாள் இரவு, அலைபேசியில் எதையோ தேடிக் கொண்டிருந்த பொழுதுதான் முகநூலில் ஒரு குறிப்பைப் பார்த்தாள்.

"தமிழைப் பிழை திருத்தம் செய்து தர ஆட்கள் தேவை. தமிழ் தெளிவாகப் பேசவும் எழுதவும் தெரிந்திருக்க வேண்டும்" என்று அந்த விளம்பரம் இருந்தது. அவளுக்குத் தமிழ் நன்றாகத் தெரியும்; சிறுவயதிலிருந்தே தமிழ் மீது அவளுக்குப் பற்று அதிகம்.

"சும்மா ட்ரை பண்ணிப் பார்க்கலாம்" என்று அந்த ஐடிக்கு ஒரு மெசேஜ் போட்டுவிட்டு, அன்றைய களைப்பில் உறங்கிப் போனாள்.

அதிகாலை 4:00 மணிக்கு எழுந்து ரன்னிங் சென்று விட்டு, அங்கே கொடுக்கப்பட்ட பணிகளை முடித்துவிட்டு 7:00 மணிக்குத் திரும்பியவள், போனை எடுத்துப் பார்த்தாள்.

அவர்களிடமிருந்து பதில் வந்திருந்தது.
"வணக்கம்! உங்களுக்குத் தூய தமிழ் தெரியும் என்றால் இந்த நம்பருக்குத் தொடர்பு கொள்ளவும். நானும் ஒரு பெண் தான், நம்பிக்கையாகத் தொடர்பு கொள்ளலாம்" என்று இருந்தது.

இந்தப் ராணுவ வேலையில் சேர்ந்ததாலோ என்னவோ, நகைக்கு இப்போது பயம் என்பதே மருந்துக்கும் இல்லாமல் போனது. தைரியமாக அந்த எண்ணை அழுத்தி அவர்களைத் தொடர்பு கொண்டாள்.

அவர்கள் கேட்ட சில கேள்விகளுக்கு இவள் மிகத் தெளிவாகப் பதிலளித்தாள். அவளின் தமிழ் ஆளுமை அவர்களுக்கு மிகவும் பிடித்துப் போனது.

"மேடம், நாங்க வந்து உங்களுக்கு பேஜ் வைஸ் கொடுத்திருவோம். அதை நீங்க கரெக்ஷன் பண்ணித் தரணும். ஒரு பக்கத்துக்கு ஐந்து ரூபாய் வச்சுக்கலாம். இப்போதைக்கு இதை மட்டும் பண்ணிக் குடுங்க. அதுக்கப்புறம் ஒர்க்கைப் பொறுத்து நாங்க ரேட் கூட்டிக் கொடுப்போம்," என்றார்கள்.

"ஓகே, எனக்கு நீங்க அனுப்பி வைங்க. நான் எனக்குத் தெரிஞ்ச வரை எல்லா மிஸ்டேக்ஸையும் கரெக்ஷன் பண்ணிக் கொடுக்கிறேன். உங்களுக்குப் பிடிச்சிருந்தா மேற்கொண்டு நம்ம தொடர்பு கொள்ளலாம்," என்று சுருக்கமாக முடித்துக் கொண்டாள்.

சும்மா இருக்கும் நேரங்களில் இன்னொரு வருமானம் கிடைத்தால் குடும்பத்திற்குப் பயனுள்ளதாக இருக்குமே என்று நினைத்து, கூலி குறைவாக இருந்தாலும் பரவாயில்லை என்று அந்த வேலைக்கு ஒப்புக்கொண்டாள்.

அவர்கள் ஒரு கட்டுரை போன்ற உரையை அனுப்பியிருந்தனர். அதில் 70 பக்கங்கள் இருந்தன.

அவளுக்கு டியூட்டி நேரம் போக மிச்சமிருந்த நேரத்தில், அந்த 70 பக்கங்களையும் எழுத்துப் பிழை, ஆச்சரியக் குறி, கமா போன்றவைகளைச் சரிபார்த்து மூன்றே நாட்களில் மீண்டும் அனுப்பி வைத்தாள்.

இவள் பிழை திருத்தம் செய்திருந்த அந்த நேர்த்தியும் தெளிவும் அவர்களுக்குப் பிரமிப்பைத் தந்தது. கொடுக்க வேண்டிய பணத்தை உடனடியாக அவளுக்கு ஜி-பே செய்திருந்தனர்.

நகை அந்தப் பணத்தைத் தனியாகச் சேமிக்கத் தொடங்கினாள்.

அடுத்தடுத்து வேலைகள் வந்து கொண்டே இருந்தன. ஒரு பக்கம் டியூட்டி, இன்னொரு பக்கம் பிழை திருத்தும் வேலை எனச் சுழன்று கொண்டிருந்தாள்.

அன்றைய தினம் என்னவோ தன் தந்தையுடன் பேச வேண்டும் என்று அவளுக்கு மனம் ஏங்கியது. நேரத்தைப் பார்த்தால் மாலை 5 மணி.

"இந்நேரம் அம்மா வீட்டுக்கு போயிருக்க மாட்டாங்களே" என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே, அவள் போன் சிணுங்கியது.

அம்மா தான் அழைத்திருந்தாள். "அம்மா... எப்படி இருக்கீங்க?" என்று கேட்டாள்.

"நான் நல்லா இருக்கேன்... நீ எப்படி இருக்க?" -அவர் குரலில் எந்த உணர்ச்சியுமே இல்லை.

"அம்மா ஏதாவது பிரச்சனையா?" என்று நகைக்குப் பதற்றம் தொற்றிக் கொண்டது. மறுமுனையில் வெண்பாவின் விசும்பல் சத்தம் கேட்டது.

"அப்பாவ ஹாஸ்பிடல்ல அழைச்சிட்டு போனோம்... அப்பா ஹெல்த்ல எந்த முன்னேற்றமும் இல்லை. அவர் ரொம்ப நாள் இருக்க மாட்டாருன்னு சொல்லிட்டாங்க. அப்பா உன்ன பாக்கணும்னு ஆசைப்படுறாரு," என்று சொல்லித் தேம்பினாள் தாய்.

நகை சில நொடிகள் அப்படியே உறைந்து போனாள். அமைதியாக இருந்தவள், "அடுத்த மாசம் நான் ஊருக்கு வரேன் அம்மா. அப்பா இருக்கிற வரைக்கும் தான் நமக்குச் சொந்தம்னு தெரிஞ்சு தான் அவரை நம்ம வீட்டுக்குக் கூட்டிட்டு வந்தோம். அவர் முன்னாடி அழுதுட்டே இருக்காதீங்க. அவர் நமக்கு பாரமா இருக்காருன்னு ஒவ்வொரு நாளும் ஃபீல் பண்ணிட்டு இருக்காரு. நம்ம அழுது அழுது அவரை இன்னும் கில்ட்டியா ஃபீல் பண்ண வைக்கக் கூடாது," என்று சொல்லித் தேற்றினாள்.

"எனக்குத் தெரியுது நகை... அவர் முன்னாடி நான் அழவில்லை. ஆனா மனசு கேட்கல... கண்ணு முன்னாடி அவர் கஷ்டப்படுவதைப் பார்க்க முடியல," என்றார் தாய்.

போனை அணைத்துவிட்டு, பாத்ரூமுக்குள் சென்று கதவைப் பூட்டிக்கொண்டு பொங்கி அழுதாள் நகை.

"அவர் எப்படியாவது உயிர் பிழைத்து விட மாட்டாரான்னு ஒவ்வொரு நாளும் அவருக்குத் தேவையானதைப் பார்த்துப் பார்த்துப் பண்றோம். ஆனாலும் கடவுள் ஏன் எங்களை இப்படிச் சோதிக்கிறாரோ?" என்று அழுது அழுது அவளுக்குக் கண்ணீரே வற்றிப்போனது.

ஊருக்குப் போகக் கூடாது என்கிற எண்ணமெல்லாம் அவளுக்கு இல்லை. இன்னும் மூன்று லட்சம் ரூபாய் மட்டும் ஒருவருக்குத் தர வேண்டியிருக்கிறது. மற்ற அனைத்துக் கடன்களையும் அவள் உயிரை கொடுத்து ஒரு ரூபாய் விடாமல் அடைத்துவிட்டாள்.

சங்கர் என்பவருக்கு மட்டுமே இன்னும் பாக்கி இருக்கிறது. அதற்கான பணத்தைத் தான் அவள் உயிரைத் தந்து சேர்த்துக் கொண்டிருக்கிறாள். அந்தத் தடையையும் மொத்தமாகத் தகர்த்துவிட்டு நிம்மதியாக ஊருக்குப் போக வேண்டும் என்பது தான் அவளின் ஓராண்டு கால தவம்.

நகை தன் போனில் அக்கவுண்ட் திறந்து பார்த்தாள். 85,000 ரூபாய் இருந்தது. உடனே சங்கரின் எண்ணுக்கு அழைத்தாள்.

"அண்ணா... இப்போதைக்கு என்கிட்ட 80 ஆயிரம் பணம் இருக்கு. அதை நான் உங்களுக்கு அனுப்பிடுறேன். பேலன்ஸ் இருக்குறதை நான் பொறுமையா கொடுக்கவா? இல்ல மொத்தமா தான் உங்களுக்கு வேணுமா?" என்று கேட்டாள்.

"நீ இப்போ இருக்கிற பணத்தை எனக்கு அனுப்பு நகை. நீ மொத்தமா தான் குடுக்கணும்னு நான் எப்பவும் சொல்லல. கைல இருக்கிற பணத்தை என்கிட்ட கொடுத்துவிடு. கடனை அடிச்சுரு... இனிமேல் நீ எனக்கு வட்டி கொடுக்க வேண்டாம், அசல் மட்டும் கொடுத்தா போதும்," என்றார் சங்கர்.

"நன்றி அண்ணா... நீங்க உங்க போனை செக் பண்ணிட்டே இருங்க, நான் உடனே அனுப்பி விடுறேன்," என்று சொல்லித் தன் சுமையை ஒரு பக்கம் இறக்கி வைத்தவளாய் நிமிர்ந்தாள்.
 

Author: Vishakini
Article Title: செதுக்கிய சிற்ப பாவையே - 12
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
  • Like
Reactions: Magizh kutty