செதுக்கிய சிற்ப பாவையே - 13

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Vishakini

Moderator
Staff member
Nov 7, 2025
1,634
6,876
113
சிற்ப பாவை - 13

அவள் ஒரு நொடி கூடத் தாமதிக்கவில்லை. துடிதுடித்த அந்தத் தருணத்தில், கையில் இருந்த அந்தப் பணத்தை அப்படியே சங்கருக்கு அனுப்பி வைத்திருந்தால்...

தந்தை இருந்து இருந்தால் இன்று விதியே மாறியிருக்குமோ? ஆனால், காலம் கடந்துவிட்டது. இருந்தாலும், தன் தந்தைக்கு ஒரு நல்ல மகளாகத் தன்னால் முடிந்த உதவிகளை இன்று வரை இவள் ஓயாமல் செய்து கொண்டுதான் இருக்கிறாள்.

கடமைக்கும், அன்பிற்கும் இடையே அவள் மனம் ஊசலாடிக் கொண்டே இருந்தது.

மகளிடம் பேசிய வெண்பாவுக்கு நெஞ்சம் பாரமாக இருந்தது. வேதனை தாளாமல் படிகளில் இறங்கி கீழே வந்தாள் வெண்பா.

'இங்கேயே நின்றால் கணவன் முன்பும், பெற்ற மகள்கள் முன்பும் கதறி அழ வேண்டிய சூழல் வந்துவிடுமே' என்ற அச்சம் அவளைத் துரத்தியது. அந்த அழுகையை ஊர் பார்க்கக் கூடாது என்பதற்காக, கொஞ்சம் காற்றோட்டமாக இருக்கட்டுமே என்று வாசலுக்கு வெளியே வந்தாள்.

அதே சமயம், பிரனேஷ் கடைக்குச் சென்று இரவு உணவை வாங்கிக் கொண்டு வந்தான். எதிர்பாராத விதமாக எதிரே வந்தவளைக் கண்டதும், இடி தாக்கியது போல் அப்படியே சிலையாக நின்றான். அவன் கண்கள் அவளைக் கண்டதும் நிலை குத்தின.

ஒரே தெருவில் வசித்தாலும் இத்தனை நாள் கடந்து சென்றது போல் இன்றும் பார்க்காதத்து போல் பேசாமல் போக முடியவில்லை அவனால்.

சுற்றியிருந்த உலகம் சட்டென நின்றது போல் ஓர் உணர்வு.

மௌனத்தைப் கலைத்து கொண்டு, "அத்தை..." என்று மிக மெல்லிய குரலில் அழைத்தான்.

பல மாதங்களுக்குப் பிறகு அந்த அழைப்பு அவன் நாவிலிருந்து வெளிப்பட்டது.
வெண்பா நிமிர்ந்து அவனைப் பார்த்தாள். ஒரு காலத்தில் உறவாக இருந்தவன் இன்று அந்நியமாக நிற்பதைக் கண்ட அவள் கண்கள் கலங்கின.

ஆனாலும் மனதை கல்லாக்கிக் கொண்டு, "சொல்லுப்பா..." என்று மிகவும் சாதாரணமாகப் பேசினாள்.

அவள் பேசிய அந்த 'சாதாரண' வார்த்தை இருக்கிறதே... அது பிரனேஷின் உள்ளத்தை ஆயிரம் ஈட்டிகள் கொண்டு ஒரே நேரத்தில் குத்தியது போல் இருந்தது. அவளது அலட்சியம் அவனைக் கொன்றது.

தொண்டையை நனைத்துக் கொண்டு, "மாமா எப்படி இருக்காரு?" என்று மெதுவாகக் கேட்டான்.

"அவர் நல்லா இருக்காருப்பா..." - வெண்பாவின் குரலில் எந்தச் சலனமும் இல்லை.

"நகை... நகை எப்படி இருக்கா?" தன் உயிராக நினைத்தவளைப் பற்றித் தவிப்போடு கேட்டான்.

"என் பொண்ணு நல்லாதான் இருக்கா."

"அவ... வீட்டுக்கு வரமாட்டாளா?" ஏக்கத்தில் அவன் குரல் கம்மியது.

"அதைத் தெரிஞ்சுகிட்டு நீ என்னப்பா பண்ணப் போற? போ... போய் சாப்பிடு. அவ்வளவுதான்!" என்பது போல் வெண்பா சட்டென்று அங்கிருந்து நகர்ந்து சென்றார்.

'முடிந்தது எல்லாம்' என்கிற அந்த ஒற்றை வார்த்தை அவன் தலையில் அடித்துச் சொன்னது. பிரனேஷ் கண்கள் கலங்க, வழிந்தோடும் கண்ணீரை மறைக்க முடியாமல் வெண்பாவையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.

'பணத்தை விடக் காதல் தான் முக்கியம்' என்று அன்று ஒரே ஒரு நொடி அவன் யோசித்திருந்தால்... இன்று இத்தனை ரணங்கள் இருந்திருக்காது.

அவன் நிம்மதியாக வாழ்ந்திருப்பான் என்பது அவனுக்கே தெரியும். ஆனால் இன்று? ஒவ்வொரு நாளும் அவன் மனசாட்சி அவனையே தின்று தீர்த்துக் கொண்டிருந்தது.

மன பாரத்தோடு பிரனேஷ் வீட்டிற்குள் கால் எடுத்து வைத்தான். அவன் உள்ளே நுழைந்ததும், "அவங்ககிட்ட என்ன கேட்டுட்டு வர்ற நீனு? உன் பழைய காதலி எப்ப வர்றான்னு வாசல்ல நின்னு வேடிக்கை பார்க்கிறியா?" என்று வாசவியின் குரல் அதிகாரத்தோடு, விஷம் தோய்ந்த அம்பாக வந்து தைத்தது.

பிரனேஷ் அவமானத்தால் குறுகிப்போய் அவள் முகத்தைப் பார்த்தான். "இந்தா... இதுல பரோட்டா இருக்கு, சாப்பிடு" என்று நீட்டினான்.

"எந்தக் கடையில வாங்கிட்டு வந்த?" அவள் குரலில் எள்ளல் தெறித்தது.

"தெருமுனையில் இருக்கிற கடையில தான் வாங்கினேன்."

"அங்கெல்லாம் வாங்கிக் கொடுத்தா மனுஷன் திங்க முடியுமா? நான் உன்னை எங்கே போய் வாங்கிட்டு வரச் சொன்னேன்?" என்று வாசவி எகிறினாள்.

"நீ சொல்ற இடத்துக்கு தான் போய் வாங்கணும்குறது என்னால முடியாது வாசவி. ஏற்கனவே வேலைக்கு போயிட்டு வந்து ரொம்ப டயர்டா இருக்கு. இதுல நீ அதை வாங்கிட்டு வா, இதை வாங்கிட்டு வான்னு சொல்லிட்டே இருந்தா நான் என்னதான் பண்ண முடியும்? மனுஷன் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்க வேண்டாமா?" என்று ஆதங்கப்பட்டான்.

"அப்படி என்ன நீ வேலை செஞ்சு கிழிச்சிட்ட? உன்னை விட நான் அதிகமா சம்பாதிக்கிறேன். எனக்கு இல்லாத டயர்டா உனக்கு வந்துடப் போகுது? நான் வீட்டுக்கு வந்து வேலை செய்யலையா? நீ வாங்கிட்டு வந்து கொடுக்கிறதை தின்னுட்டு சும்மா உட்கார்ந்திருக்கேனா? ஆசையா ஒன்னு கேட்டதுக்கு இப்படி மூஞ்சில அடிச்ச மாதிரி பதில் சொல்ற... இந்தா, நீயே தின்னு! எனக்கு வேண்டாம்!" என்று அந்தப் பரோட்டாவை அவன் முகத்திலேயே வீசி எறிந்தாள்.

உணவு தரையில் சிதறியது போல் அவன் மானமும் சிதறியது. அறைக்குள் விறுவிறுவெனச் சென்ற அவளைப் பார்த்து அவன் பொறுமை எல்லை மீறியது.

"வாசவி! தேவையற்ற பிரச்சனை பண்ணாதே. ஒழுங்கு மரியாதையா அதை எடுத்துட்டுப் போய் சாப்பிடு!"

"எனக்கு வேண்டாம்டா! நீ சொல்லித் தான் நான் சாப்பிடணும்னு அவசியம் இல்லை. எனக்குத் தெரியும் என்ன பண்ணணும்னு!" என அவளும் பதிலுக்குக் கத்தினாள்.

ஆத்திரத்தில் அங்கிருந்த பெரிய நிலைக்கண்ணாடியை ஓங்கி குத்தினான் பிரனேஷ். ரத்தம் சொட்டியது, ஆனால் அந்த வலி அவன் மன வலியை விடக் குறைவாகவே இருந்தது.

திருமணமான நாளிலிருந்து ஒரு நாள் கூட அவன் நிம்மதியாகத் தலை சாய்த்த தில்லை. தன் மனைவியுடன் ஒரு நிமிடம் கூடச் சாதாரணமாகப் பேசியது கூட இல்லை.

"நான் கம்மியா சம்பாதிக்கிறேன்... இதுதான் என் வேலைன்னு தெரிஞ்சு தானே நீ கல்யாணம் பண்ணிக்கிட்ட? இப்போ என்ன உனக்குக் கொடையுது?" என்று பிரனேஷ் ஆக்ரோஷமாகக் கேட்டான்.

"நான் ஒன்னும் உன்னை ஆசைப்பட்டு கல்யாணம் பண்ணிக்கல பிரனேஷ்! எங்க வீட்ல கட்டாயப்படுத்தி கல்யாணம் பண்ணி வச்சாங்க. வேற வழி இல்லாம தான் உன்னைத் தாலி கட்டிக்கிட்டேன். உன்கிட்ட ஒரு பர்சன்டேஜ் கூட ரொமான்ஸ் இல்ல, ஈர்ப்பு இல்ல. எனக்கு சுத்தமா உன்னைப் பிடிக்கல. உன் கூட வாழவே எனக்கு விருப்பம் இல்லாம தான் அட்ஜஸ்ட் பண்ணிட்டு இருக்கேன்!" என்று அவள் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் அவன் ஆண்மையைச் சுட்டெரித்தது.

"என் கூட வாழ விருப்பம் இல்லாம நீ இங்க இருக்கணும்னு அவசியம் இல்லை வாசவி. நீ மரியாதையா உங்க அம்மா வீட்டுக்கே போயிடலாம்!" உடைந்து போன மனதுடன் கூறினான்.

வாசவி பேய்த்தனமாக சிரித்தாள். "நான் எங்க அம்மா வீட்டுக்கு போகணுமா? நீ இருக்கிறதே என்னுடைய வீட்டுல! இந்த வீடு என் அப்பாவும் அம்மாவும் வாங்கிக் கொடுத்தது. அப்படின்னா இதுதான் என் வீடு! நீ ஒண்ணுமே இல்லாத அன்னக்காவடியா வந்து என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டவன். பத்து பைசாவுக்கு நீ பிரயோஜனம் கிடையாது. நீதான் இந்த வீட்டை விட்டு வெளியில போகணும்... போடா வெளியே!" என்று கத்தினாள்.

அவர்கள் இருவரின் சண்டையும் சுவர்களைத் தாண்டி தெரு வரை கேட்டது. தெருவில் நின்றிருந்த அனைவரும் அவர்கள் வீட்டையே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.

வெண்பாவிற்கு வாசவியின் அந்த சொற்கள் கேட்டன. நெஞ்சு வலித்தது. ஆனால், 'உறவே இல்லை' என்று முறிந்து போன பிறகு, இப்போது நடக்கும் சண்டைக்குள் சென்று என்ன பஞ்சாயத்து செய்ய முடியும்? தன் குடும்பத்தையே அவளால் கவனிக்க முடியாமல் தவித்துக் கொண்டிருக்கும் போது, அடுத்தவர் வீட்டுப் பிரச்சனையில் தலையிட அவளுக்கு மனம் வரவில்லை.

"அம்மா... இங்க என்ன பண்றீங்க?" சுடரின் குரல் கேட்டுத் திரும்பினாள்.

"வா சுடர், வேலை முடிஞ்சுதா?"

"முடிஞ்சதும்மா, வாங்க வீட்டுக்கு போகலாம்."
அதற்குள் வாசவி வெறி பிடித்தவள் போல் உள்ளிருந்து பிரனேஷின் துணிமணிகளையும் பொருட்களையும் எடுத்து வீதியில் வீசிக் கொண்டிருந்தாள்.

அந்த அவமானத்தைத் தாய் மகள் இருவரும் பார்த்துக் கொண்டுதான் இருந்தனர்.

'இவனுக்கு இதெல்லாம் தேவைதான்! என் அக்கா மனசைச் சுக்குநூறாக உடைச்சவன் தானே இவன்? காதலை விடப் பணம் முக்கியம்னு போனான் இல்ல? அதனாலதான் தினமும் இவன் வீட்ல சத்தம் மட்டும் கேட்குது. நல்லா அனுபவிக்கட்டும்!' என்று சுடர் மனதிற்குள் வன்மத்தோடு நினைத்துக் கொண்டாள்.

"அம்மா வாங்க... அவங்க சண்டை எல்லாம் நாம பார்க்கணும்னு அவசியம் இல்லை. அத்தைக்கு இருக்கிற வாய்க்கு எல்லாச் சண்டையும் வேடிக்கை பார்க்கணும்னு தோணும்" என்று தன் தாயை அங்கே நிற்க விடாமல் மேலே அழைத்துச் சென்றாள்.

"அம்மா... என்னம்மா கீழ ஒரே சத்தமா இருக்கு?" எனக் கவி கேட்டாள்.

"அது ஒன்னும் இல்லைடா... சும்மா தான். இந்தா கவிக்குட்டி, உனக்காக பன் கேக் வாங்கிட்டு வந்தேன்" என்று பேச்சைத் திசை திருப்பினாள் வெண்பா.

கவி ஆசையாக அதைப் பிரித்து, முதல் வாயை அம்மாவுக்கும், இரண்டாவது வாயை அக்காவுக்கும் ஊட்டிவிட்டாள். பின்பு தந்தை அருகில் அமர்ந்து, ஒரு பருக்கை கூடச் சிந்தாமல் சிதறாமல் ரசித்துச் சாப்பிட்டாள்.

முன்பெல்லாம் அவள் தந்தை அடிக்கடி இப்படி வாங்கி வருவார், ஆனால் சமீபகாலமாக அதுவும் குறைந்துவிட்டது.

பெரிய மகள் நகை, எப்போதாவது அம்மாவுக்கு போன் செய்து, "தங்கச்சிக்கு ஏதாவது வாங்கி கொடுங்கம்மா" என்று சொன்னால் மட்டுமே வெண்பா வாங்கித் தருவார். அவரும் வேலையில் மறந்துவிடுவார்.

இப்போது வீட்டில் கடன் சுமை கொஞ்சம் குறைந்திருந்ததால், சுடர் வேலை முடிந்து வரும்போதே தன் செல்லத் தங்கைக்காக எதையாவது வாங்கி வருவாள்.

"அம்மா... இன்னைக்கு நானே சமைச்சுட்டேன்!" என்று கவி குதூகலமாகக் கூற, மற்ற இருவருக்கும் தூக்கி வாரிப் போட்டது.

"நீ சமைச்சியா? எதுக்கு அடுப்பு கிட்ட போன? கையைச் சுட்டுக்கிட்டா நான் என்ன பண்ணுவேன்?" என்று வெண்பா பதறிக் கொண்டு ஓடினாள்.

"நீங்க போன்ல பேசிக்கிட்டே கீழே போயிட்டீங்க. அக்கா வந்தா பசிக்கும்ல? அதான் நானே சமைச்சேன். கை எல்லாம் சுட்டுக்கல பாருங்க... உப்புமாதான் செய்தேன். எனக்கு வேற எதுவும் செய்யத் தெரியலையே!"

சுடர் நெகிழ்ச்சியில் தங்கையை வாரி அணைத்து முத்தமிட்டாள். அவள் செய்த அந்த உப்புமா ஒன்றும் பிரமாதமாக இல்லை; உப்பு கொஞ்சம் குறைவாகவே இருந்தது. ஆனால், அந்த பிஞ்சு உள்ளத்தின் அன்பில் அந்த உப்புமாவே அன்று அவர்களுக்கு அமிர்தமாகத் தெரிந்தது.
 

Author: Vishakini
Article Title: செதுக்கிய சிற்ப பாவையே - 13
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
  • Like
Reactions: Magizh kutty