செதுக்கிய சிற்ப பாவையே - 17

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Vishakini

Moderator
Staff member
Nov 7, 2025
1,634
6,876
113
சிற்ப பாவை - 17

சுடர் அவசர அவசரமாகச் சாப்பிடுவதைப் பார்த்து, "பொறுமையா சாப்பிடு சுடர்... நானே உன்னை காலேஜ் ல விடுறேன்," என்றாள்.

எல்லாரும் சாப்பிட்டு முடித்ததும், சுடரையும் கவியையும் அழைத்துக் கொண்டு கீழே இறங்கினாள் நகை.

"அக்கா... நாங்க போயிட்டு வரோம்," என்று அவர்கள் கிளம்ப முற்பட,

"ஏய் இருங்க... உங்களை இன்னைக்கு நான் அழைச்சிட்டு போறேன். அப்படியே நில்லுங்க," என்று சொல்லிவிட்டு, தான் தயார் செய்த புல்லட் ஸ்டார்ட் செய்து கொண்டு வந்தாள்.

அதை பார்த்ததும் அந்தத் தங்கைகள் இருவரும் வாயைப் பிளந்து நின்றனர். அவர்கள் மட்டுமல்ல, அந்த ஏரியாவே ஸ்தம்பித்து போனது. லோயர் பேண்ட், டீ-ஷர்ட் அணிந்து கொண்டு, கெத்தாக புல்லட்டில் அமர்ந்திருந்த நகையைப் பார்த்து அந்த காலனியே பிரமிப்பில் உறைந்து நின்றது.

அந்த இரண்டு தங்கைகள் முகத்திலும் அப்படி ஒரு பிரகாசம். அக்காவுடன் செல்வதே ஒரு தனி சந்தோஷம் தான் அவர்களுக்கு.

தந்தையின் மறைவுக்குப் பிறகு, ஒரு பாதுகாப்பான கரத்தைப் பற்றிக் கொண்டு செல்வது போன்ற உணர்வு. அப்பா இருந்தபோது கடைசியாக இப்படி இந்த வண்டியில் ஏறியது, அதன் பிறகு இன்றுதான். சக்கரம் சுழலச் சுழல, அவர்களின் ஏக்கங்களும் மெல்லக் கரைந்தன. இத்தனை சீக்கிரம் இப்படி ஒரு சொகுசான பயணத்தை அவர்கள் கனவிலும் எதிர்பார்க்கவில்லை.

நகை முதலில் கவியை பள்ளிக்கூடத்தில் இறக்கிவிட்டாள். வாசலில் நின்ற மற்ற பிள்ளைகள் வியப்போடு பார்க்க, கவி ஒரு பெருமிதத்தோடு உள்ளே சென்றாள். அடுத்ததாகச் சுடரையும் அவள் கல்லூரியில் இறக்கிவிட்டாள்.

"அக்கா... சத்தியமா சான்ஸே இல்லைக்கா! இந்த மொத்தத் தெருவே அப்படியே வாயை பொளந்துகிட்டு பார்த்துச்சு தெரியுமா? செம கெத்தா இருக்கு! உன் கூட வரும்போது எனக்கே ஒரு கம்பீரம் வருது. எதிர்காலத்துல நாங்களும் உன்னைப் மாதிரிதான் ஆகணும். நீதான் எங்களுடைய மிகப்பெரிய ரோல் மாடல். சோ ஸ்வீட் அக்கா நீ!" என்று நெகிழ்ச்சியில் உருகினாள் சுடர்.

அவளுடைய பிஞ்சு கன்னங்களை மென்மையாகக் கிள்ளி முத்தமிட்டு, "பாய் கா!" என்று அந்தத் தங்கை உற்சாகமாகத் துள்ளிச் சென்றனர்.

நகை, தன் இதழ்களில் ஒரு மெல்லிய புன்னகையைச் சுமந்தபடி மீண்டும் வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தாள். அவளுடைய பைக் வீட்டை நெருங்குவதற்கு முன்பே, எதிரே பிரனேஷ் வந்தான். அவளைக் கண்டதும் தன் பைக்கை ஓரம் கட்டினான். ஏதோ பேசத் துடிக்கும் கண்களோடு அவளுக்காகக் காத்திருந்தான். ஆனால், நகையின் மனமோ கல்லாய் இறுகியிருந்தது. அவனைப் பார்த்தும் பார்க்காதது போல, ஒரு அந்நியனைப் கடப்பது போல விறுவிறுவென கடந்து சென்றாள்.


இந்த முப்பது நாள் விடுமுறை எப்படி சிட்டாய் பறந்தது என்று அவளுக்கே புரியவில்லை. நேற்றுதான் ஊருக்குள் கால் வைத்தது போல இருந்தது, ஆனால் அதற்குள் கிளம்பும் நேரம் வந்துவிட்டது. இந்த முப்பது நாட்களும் அவள் ஒரு மகளாக மட்டும் இருக்கவில்லை; அந்தக் குடும்பத்தின் அச்சாணியாக மாறினாள். வீட்டின் ஒவ்வொரு தேவையையும் தன் கண்ணின் இமை போல் கவனித்துக் கொண்டாள்.

குறிப்பாக, தன் தந்தைக்காகவே வாழ்ந்தாள். உடல் அசைவில்லாமல் நோயிலும் வாடிய தந்தையை ஒரு தாயாக மாறிப் பராமரித்தாள்.

அவருக்குத் தலை சீவி விடுவது, உணவு ஊட்டுவது என ஒவ்வொரு நொடியும் அவருக்குத் தாயாக மாறிய அந்த முப்பது நாட்களும் அவளுடைய வாழ்வின் பொற்காலங்கள்.

கிளம்பும் நேரம் வந்தபோது இதயம் கனத்தது. "அம்மா... அப்பா... போயிட்டு வரேன். பத்திரமா இருங்க. அப்பா, தேவையில்லாம எதையும் போட்டு மண்டைய குழப்பிக்காதீங்க, கவலைப்படாதீங்க... எல்லாத்தையும் நான் பார்த்துக்கிறேன்," என்று தன் தந்தையின் கைகளைப் பற்றிக் கொண்டு தைரியம் ஊட்டினாள்.

தங்கைகளை பிரிய மனமில்லாமல் தவித்தாலும், கடமை அவளை அழைத்தது.

பரந்தாமன் ஆட்டோ வாசலில் வந்து நின்றது. "ஏன் ஆட்டோ வந்திருக்கு?" என்பது போல நகை பார்க்க,

"நகை, நான்தான் வரச் சொல்லியிருந்தேன். ஸ்டேஷன் வரைக்கும் இவரே கொண்டு போய் விட்டுடுவாரு," என்று வெண்பா கூறவும், மெல்லத் தலையசைத்தாள்.

அவளுடைய கனமான பெட்டிகளைத் தூக்க அவன் உதவி செய்தான். வழிநெடுக அவன் ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை. ஸ்டேஷனில் இறக்கிவிட்டான். அன்று முதல் முறை சென்ற போது எப்படித் தண்ணீரும் தின்பண்டம் வாங்கிக் கொடுத்தானோ, அப்படியே இன்றும் கொடுத்தான்.

"தேங்க்யூ..." என்று மெல்லிய, கரகரப்பான குரலில் அவள் சொன்ன போது, அதில் ஒரு பாரம் தெரிந்தது. அந்த ஒரு வார்த்தையில் ஏதோ ஒரு மாற்றம் இருப்பதை உணர்ந்த அவன், அவள் ரயிலில் ஏறும் வரை சிலையென நின்று அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.

பழைய நகையை விட, இன்று குடும்ப பாரத்தை சுமக்கும் இந்தத் தைரியமான நகையை அவனுக்கு இன்னும் அதிகமாகப் பிடித்திருந்தது.


காத்தவராயன் இப்போதுதான் கொஞ்சம் தேறி இருந்தார். மூத்த மகள் சம்பாதிக்கத் தொடங்கியதும் குடும்பச் சுமை குறைய, அவர் மனதிலிருந்த குற்ற உணர்ச்சி மெல்ல விலகியது. அதற்குள் இளைய மகள் சுடரும் தன் படிப்பை முடித்தாள். கேம்பஸ் செலக்சனில் முப்பதாயிரம் சம்பளத்தில் சென்னையில் ஒரு பெரிய கம்பெனியில் வேலை கிடைத்தது.

அவளாலேயே நம்ப முடியவில்லை. ஆனால், அவளுடைய 'ஃபர்ஸ்ட் கிளாஸ்' மதிப்பெண்களும், அவள் செய்த அந்த 'ப்ராஜெக்ட் டும் அவளுக்கு அந்த வாய்ப்பைத் தேடித் தந்தன.

"இனி என் அக்கா கஷ்டப்படக் கூடாது, அவள் சுமையைக் குறைப்பேன்" என்று வைராக்கியத்தோடு வேலைக்குச் சென்றாள்.

வாரா வாரம் ஞாயிறு மட்டும் ஊருக்கு வருவாள். இந்த வாரம் திங்கட்கிழமையும் விடுமுறை என்பதால் வீட்டில் தங்கியிருந்தாள்.

அப்போதுதான் அந்தச் சம்பவம் நடந்தது. கவிதாவைப் பள்ளிக்கு அனுப்பிவிட்டு வெண்பா உள்ளே வர, ஒரு குடும்பமே அவர்களைப் பின்தொடர்ந்து வந்தது.
"நீங்க யாருங்க?" என்று வெண்பா கேட்க, அந்தப் பெண்மணி திமிராகப் பேசினார்.

"நாங்க பொண்ணு கேட்டு வந்திருக்கோம். உங்க வீட்ல பொண்ணு இருக்குன்னு சொன்னாங்க, அதான் வந்தோம்."
வெண்பா அவர்களை உள்ளே அழைத்துச் சென்றாள். தன் கணவனிடம் மெல்லிய குரலில்,

"நகையைப் பொண்ணு கேட்டு வந்திருக்காங்க போல இருக்கு, என்ன சொல்லட்டும்?" என்று கேட்டாள்.

"நீயே போய் பேசு," என்று அவர் சொல்ல, வெளியே வந்தாள் வெண்பா.

சுடர் அவர்களுக்குத் தண்ணீர் கொடுத்துக் கொண்டிருந்தாள். அந்தப் பெண்மணி தன் மகனை அறிமுகப்படுத்தினார்.

"இவன்தான் என் பையன். ஃபுட் சேஃப்டி டிபார்ட்மென்ட்ல இருக்கான். கவர்மெண்ட் வேலை. உங்க பொண்ணு ஆர்மி-ல இருக்காளாமே... நல்லா படிச்சு வேலைக்கு போறான்னு கேள்விப்பட்டு தான் வந்தோம்," என்றார்.

"என் பொண்ணுகிட்ட கேட்காம நான் எந்த முடிவும் எடுக்க முடியாதுங்க," என்று வெண்பா உறுதியாகச் சொல்ல,

அந்த மாப்பிள்ளையோ அங்கிருந்த சுடரைக் கை காட்டி, "நீங்க அவ கிட்ட கேளுங்க... இங்கதான் நிக்கிறாங்க!" என்றான்.

சுடர் அதிர்ந்து போனாள். "நீங்க என்னைப் பார்க்க வந்தீங்களா?" என்று நேரிடையாகக் கேட்டாள்.

"நான் உன்னைப் பார்க்க வரல, உங்க அக்காவைப் பார்க்கத்தான் வந்தேன். ஆனா, நேர்ல பார்த்தா உன்னைப் பிடிச்சிருக்கு," என்று அவன் வக்கிரமாக சிரித்தான்.

"மரியாதையா எழுந்து வெளியே போடா!" என்று சுடர் கர்ஜித்தாள்.

வெண்பா அவளை அடக்க முயல, "அம்மா! அக்காவைப் பார்க்க வந்துட்டு, என் முன்னாடியே நின்னு தங்கச்சியைப் பிடிச்சிருக்குன்னு சொல்றான். இவனுக்கு எப்படி மரியாதை கொடுக்க முடியும்? அக்காவுக்குக் கல்யாணம் ஆகாம நான் எப்படிப் பண்ணிக்க முடியும்? இவங்களை முதல்ல வெளியே போகச் சொல்லு!" என்று சத்தமிட்டாள்.

அந்த மாப்பிள்ளையும் விடவில்லை. "உன் அக்காவைக் கட்டிக்கிட்டு நான் என்ன பண்றது? வருஷத்துல ரெண்டு முறைதானே வருவா? அந்த 60 நாளை வச்சுக்கிட்டு நான் எப்படி ஒரு குடும்பம் நடத்துறது? ஆர்மியில் இருக்கிறவளைக் கல்யாணம் பண்ணி என்னால சந்தோஷமா இருக்க முடியுமா?" என்று அவன் எகிற, சுடருக்கு ரத்தம் கொதித்தது.

"என் அக்கா ஆர்மியில் இருக்கான்னு தெரிஞ்சுக்கிட்டு தானே இங்க வந்தீங்க? அப்புறம் எதுக்கு வீட்டுக்குள்ள வந்து இப்படி கேவலமா பேசுறீங்க?" என்று அவள் கத்தினாள்.

சுடரின் விஸ்வரூபம் கண்டு
அந்தப் பெண்மணி தன் மகனை அழைத்துக்கொண்டு வெளியே சென்றார்.

பால்கனி பக்கம் நின்றிருந்த வெண்பாவிற்கும் சுடருக்கும் அவர்கள் கீழே பேசிக் கொண்டது தெளிவாகக் கேட்டது.

"டேய், கவர்மெண்ட் சம்பளம் தான் நமக்கு முக்கியம். நீ அக்காவையே கட்டிக்க. கொஞ்ச நாள் போச்சுன்னா, அப்புறம் இவளையும் நீயே கல்யாணம் பண்ணிக்கலாம். இந்த வீட்ல நீதான் ஒரே ஆம்பளையா இருப்ப. ஒன்னுக்கு ரெண்டு பொண்ணு கிடைக்கும். அவ என்னவோ வருடத்தில் ரெண்டு வாட்டி தான் வருவா? பிள்ளை குட்டிகளைப் பார்த்துக்க ஆள் இல்லைன்னு சொல்லி இந்தத் தங்கச்சியையும் வச்சுக்கலாம். காரியத்தைக் கெடுத்துக்காதே!"
அந்தத் தாய் சொன்ன வார்த்தைகளைக் கேட்டதும் வெண்பாவின் இதயம் சுக்கு நூறாக உடைந்தது.

சுடர் புயலென கீழே இறங்கினாள். அவர்கள் முன்பு காளியாக நின்றாள்.
சுடர் அவன் கன்னத்தில் "பளார்!" என்று அறைந்தாள்.

"வெளியே போடா! உன் முகரைக்கட்டைக்குக் கவர்மெண்ட் சம்பளம் கேக்குதா? ஒன்னுக்கு ரெண்டு பொண்ணு கேக்குதா? அசிங்கமா இல்லை உனக்கு? உன்னை ஒருத்தி கல்யாணம் பண்ணிட்டு, உன் தம்பியைச் சேர்த்து வச்சுக்கிட்டா உனக்கு எப்படி இருக்கும்டா? தேங்காய் மட்டை மாதிரி ஒரு மூஞ்சியை வச்சுக்கிட்டு நீ எல்லாம் பொண்ணு கேட்க வந்துட்டியா? இனிமே இந்த ஏரியா பக்கம் உன்னைப் பார்த்தேன், உன் மூஞ்சியில ஆசிட் ஊத்திருவேன். அப்புறம் உன்னை எவரும் திரும்பிப் பார்க்க முடியாது!"

அவள் கத்திய கத்தில் அந்தத் தெருவே கூடிவிட்டது. அவர்களை ஓட ஓட விரட்டினாள்.

ஊர் மக்களும் விஷயம் தெரிந்து அவர்களை அசிங்கப்படுத்தி துரத்தினர்.

வெண்பா அப்படியே தரையில் அமர்ந்து கண்ணீர் விட்டார். "இப்போதுதான் குடும்பம் கொஞ்சம் நிம்மதியாக இருக்கிறது, மூத்த மகளுக்கு ஒரு வாழ்க்கை அமையும் என்று நினைத்தால், இப்படிப்பட்ட மனிதர்களா வருவார்கள்?" என்று அவர் இதயம் ரத்தக் கண்ணீர் வடித்தது. அவர்கள் பேசிய ஒவ்வொரு சொல்லும் ஒரு விஷ அம்பாக அவர் மனதைத் துளைத்துக் கொண்டிருந்தது.

கணவரிடம் அங்கு நடந்த எதையும் அவள் சொல்லவில்லை. “அவர்களை பார்க்க நல்லவர்கள் போல் இல்லை. பிடிக்கவில்லை" என்று மட்டும் ஒரு பொய் சொல்லி மறைத்து வைத்திருந்தாள் வெண்பா.
 
Last edited:

Author: Vishakini
Article Title: செதுக்கிய சிற்ப பாவையே - 17
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
  • Like
Reactions: Magizh kutty