செதுக்கிய சிற்ப பாவையே - 18

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Vishakini

Moderator
Staff member
Nov 7, 2025
1,634
6,876
113
சிற்ப பாவை - 18

சுடரும் மனதளவில் அறவே நொறுங்கிப் போயிருந்தாள். அக்காவின் வாழ்க்கைக்கு ஒரு விடிவு காலம் பிறக்க வேண்டும், அவளுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று மனதுக்குள் வைராக்கியம் பூண்டாள்.

அதனால், தன்னுடன் வேலை செய்தவர்களில் குணத்தால் சிறந்தவர்கள் யார், தகுதி உடையவர்கள் யார் என்று ஒவ்வொருவராகத் தேர்வு செய்து மனதிற்குள் கணக்குப் போட்டுக் கொண்டிருந்தாள்.

நகைக்காக மாப்பிள்ளையை வெண்பா பல இடங்களில் பார்த்தாள். ஆனால், அந்தத் தரப்பு ஆட்களோ, நகை ஆர்மியில் இருப்பதையே பெரிய காரணமாகக் காட்டி திருமணத்தை நிராகரித்தனர்.

அல்லது, "அவள் வேலையை விட்டு வர வேண்டும், முக்காடு போட்டுக் கொண்டு வீட்டோடு முடங்கிக் கிடக்க வேண்டும்" என்று ஏகப்பட்ட சட்டதிட்டங்களை போட்டனர்.

தன்மானத்தை விட்டுக் கொடுத்து அந்த நிபந்தனைகளுக்கு கட்டுப்பட நகை துளியும் ஒப்புக்கொள்ளவில்லை.

இப்படியே நாட்கள் நகர்ந்து கொண்டிருக்க, நகையைப் பெண் பார்க்க வருபவர்கள் எல்லாரும், இளையவளான சுடரையே பெண் கேட்டுக் கொண்டிருந்தனர்.

இது வெண்பாவிற்கு பேரிடியாக இருந்தது.

"மூத்தவள் வாழ்வு என்னவாகுமோ?" என்ற மனபாரம் அவளை உருக்கியது.

அந்த கவலையிலேயே அவள் உடல்நிலை மெல்ல மெல்லப் பாதிக்கத் தொடங்கியது.

அன்று இரவு... எதிர்பாராத விதமாகக் காத்தவராயனின் உடல்நிலை திடீரென மோசமானது. மூச்சு விட முடியாமல் அவர் திணறினார்.

வெண்பா பதறிப்போய் அலறியடித்துக் கொண்டு கணவன் அருகில் ஓடி வந்தாள். அவர் அவள் கையைப் பிடித்துக் கொண்டு மெல்லிய குரலில் பேசத் தொடங்கினார்.

"வெண்பா... எனக்கு நேரம் நெருங்கிருச்சு. உன்னைத் தனியா விட்டுட்டு நான் போகப் போறேன். என்னை அழாம நிம்மதியா வெளியே அனுப்பி வைங்க. இந்த உடல் வலியோட என்னால் இனி போராட முடியல. நீ பசங்களை நல்லபடியா பார்த்துப்பன்னு எனக்குப் பயங்கர நம்பிக்கை இருக்கு. உன்னையும் நகையையும் மத்தவங்க பார்த்துக்குவாங்க என்ற அந்த ஒரு தைரியத்துல தான் நான் போறேன். உங்களுக்காக நான் சொத்து சுகம்னு எதையும் சேர்த்து வைக்கல. ஆனால் அதை எதையும் ஒரு குறையா நினைக்காம, கடைசி நிமிஷம் வரைக்கும் எனக்காக நீங்க இருங்க. என் மூத்த பொண்ணுதான் தன் சந்தோஷத்தை எல்லாம் உதறித் தள்ளிவிட்டு, என் கடனை அடைக்கவும் என் மரியாதையைக் காப்பாற்றவும் வெளியூருக்கு வேலைக்குப் போயிட்டா. இப்படி ஒரு பொண்ணு கிடைக்க நான் கொடுத்து வச்சிருக்கணும். மூணு பொம்பளப் புள்ளைகளைப் பெத்துட்டேன்னு ஊரே என்னைச் சுத்தி நின்னு கிண்டல் பண்ணும்போது கூட நான் கவலைப்பட்டதே இல்லை. ஆனா என் பொண்ணு இன்னைக்கு என் மானத்தைக் காப்பாத்தி, நான் படுத்த படுக்கையா இருந்தாலும் என்னை ஊர் முன்னாடி தலை நிமிர்ந்து வாழ வச்சிட்டா! இந்தப் பிள்ளைகளைப் பெத்ததற்கு நான் பெருமைப்படுறேன் வெண்பா.

உங்களைப் பாதியிலேயே தவிக்க விட்டுட்டுப் போறேன்னு நினைச்சா வேதனையாகத்தான் இருக்கு… மூத்தவள் பாவம் கடைசி வரை பிள்ளைக்கு துணையா இரு. நானும் உங்க கூட தான் இருப்பேன்." என்று அவர் திக்கித் திணறி, மூச்சை இழுத்துப் பிடித்துக் கொண்டு பேசிக்கொண்டிருந்தார்.

வெண்பா அவர் கைகளை இறுகப் பற்றிக் கொண்டாள். "என்னங்க... என்னென்னமோ பேசுறீங்க? ஹாஸ்பிடலுக்குப் போகலாம் வாங்க. உங்களுக்கு ஒன்னும் ஆகாது" என்று கதறினாள்.

அவர் இருப்பது இறுதி நிலை என்று அவள் உள் மனம் சொன்னாலும், அந்த உண்மையை ஏற்க மறுத்து அவருக்காகப் போராடத் தயாராக இருந்தாள்.

அவர் மெல்லச் சிரித்தார். "உன்னைக் கல்யாணம் பண்ணதுதான் என் வாழ்க்கையில நான் செஞ்ச ஒரே நல்ல விஷயம். எனக்கு நீ கிடைச்சது ஒரு வரம். என் பொண்ணுங்க எனக்குக் கிடைச்சது பெரிய பாக்கியம். அவங்ககூட இன்னும் கொஞ்ச நாள் வாழ முடியலையேங்கிற ஏக்கம் இருந்தாலும், காலம் முழுக்க இந்த வலியோடு வாழ்ந்து நான் கஷ்டப்பட்டு உங்களையும் கஷ்டப்படுத்த விரும்பல. அதை நினைக்கும் போது சந்தோஷமா இருக்கு.

சத்தியமா நான் வலியோட போகல வெண்பா... நிம்மதியா போறேன். என் பெரிய பொண்ணு எல்லாத்தையும் பார்த்துப்பாங்கற நம்பிக்கையில போறேன்" என்றார். அவர் கவி குட்டியை புன்னகையோடு பார்த்தார்.

அவள் “அப்பா…” என்று அழுதாள்.

அந்த நள்ளிரவில் கவியும் வெண்பாவும் மட்டுமே வீட்டில் இருந்தனர். என்ன செய்வது என்று திக்குத் தெரியாமல் நின்றவர்கள், உடனே பரந்தாமனுக்கு அழைத்தனர்.

தகவல் தெரிந்த அடுத்த நிமிடம் அவன் அங்கே வந்து சேர்ந்தான்.

காத்தவராயனைத் தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு காரில் விரைந்தான். ஆனால் போகும் வழியிலேயே... ஐயோ! அவர் உயிர் பிரிந்து போனது.

அவர் நாடி அடங்கியதை உணர்ந்த பரந்தாமன், கனத்த இதயத்தோடு பாதி வழியிலேயே காரைத் திருப்பிக்
கொண்டு வீடு வந்து சேர்ந்தான்.

வெண்பாவிடம் மெதுவான குரலில், "சத்தம் போட்டு அழாதீங்க... வழியில யாராவது போலீஸ் பிடிச்சிட்டா போஸ்ட்மார்ட்டம் அது இதுன்னு சொல்லி உடலைத் தர மாட்டாங்க. சுத்த விட்டுடுவாங்க. காலனி போற வரைக்கும் கொஞ்சம் கண்ட்ரோல் பண்ணிக்கோங்க" என்று ஆறுதல் சொல்லிக் கொண்டே வந்தான்.

அதற்குள் அந்தத் தெருவில் செய்தி பரவ, மக்கள் கூட்டமாகத் திரண்டனர்.

வெண்பா தன் கணவனை நெஞ்சோடு அணைத்துக் கொண்டு கதறி அழுது கொண்டிருந்தாள். கவியும் தந்தை நெஞ்சில் முகம் புதைத்து தேம்பி கொண்டிருந்தாள்.

மொத்த காலனியும் அந்தச் சோகத்தில் மூழ்கிக் கிடக்க, கார் நின்றதும் அங்கிருந்த ஆண்கள் காத்தவராயன் உடலை இறக்கி வீட்டிற்குள் கொண்டு சென்றனர்.

"உங்களுக்கு ஆம்பளப் புள்ளை வேற இல்லையே... இவருக்கு யார் கொல்லி போடறதுன்னு தெரியலையே? பொண்ணுங்களுக்குத் தகவல் சொல்லிட்டீங்களா?" என்று ஒருவர் கேட்க,

வெண்பாவிற்கு அப்போதுதான் தன் பிள்ளைகளிடம் சொல்லவில்லை என்பது நினைவுக்கு வந்தது.

அந்த அகால ராத்திரி என்றும் பாராமல் தன் மூத்த மகளுக்கு முதலில் அழைத்தாள்.

மறுமுனையில் நகை, "அம்மா இந்த நேரத்துல கால் பண்ண மாட்டாங்களே" என்று மனம் படபடக்க, ஏதோ விபரீதம் என்று உணர்ந்து ஒருவித பயத்தோடு போனை எடுத்தாள்.

"அம்மா..." என்று அவள் கூப்பிட, வெண்பாவின் குரல் அழுகையில் சிணுங்கலாக கேட்டது.

"நகை... அப்பா இறந்துட்டாருமா..." அந்த ஒரு வார்த்தையைச் சொல்லி முடிக்கவே வெண்பா பெரும் போராட்டமே நடத்த வேண்டியிருந்தது.

நகை கண்களில் இருந்து கண்ணீர் அருவியாய் கொட்டியது. தந்தை இனி இல்லை என்பதை அவளால் ஜீரணிக்கவே முடியவில்லை.

இரத்தமும் சதையுமாகத் தன்னைச் சுமந்த தந்தை, படுத்த படுக்கையாக இருந்தாலும் ஒரு நிழலாக இருந்தாரே... இன்று அவர் இல்லையே!

"அப்பா!" என்று அவள் அந்த அறையிலேயே மடங்கி விழுந்து கதறி அழுதாள்.

அவளுடன் தங்கியிருந்த தோழிகள் சூழ்நிலையைப் புரிந்து கொண்டு, உடனே மேலதிகாரியிடம் பேசி அன்று இரவே அவளை விமானத்தில் அனுப்பி வைத்தனர்.

அதிர்ஷ்டவசமாக அந்த நேரத்தில் ஒரு பிளைட் இருக்க, அதில் கிளம்பினாள்.

சுடரும் தந்தை இறந்த செய்தியைக் கேட்டுத் துடித்துப் போனாள்.

தன் நண்பர்களுடன் காரில் அங்கிருந்து விரைந்து வந்து கொண்டிருந்தாள்.

அதுவரை பரந்தாமன் தான் ஒரு மகனாக முன்னின்று அனைத்து ஏற்பாடுகளையும் கவனித்தான்.

வீட்டு வாசலில் பந்தல் போட்டு, காத்தவராயன் உடலை வெளியே கொண்டு வந்து வைத்தான். நகை வர நீண்ட நேரம் ஆகும் என்பதால், உடல் கெட்டுப்போகாமல் இருக்க ஐஸ் பெட்டிக்குள் வைக்கப்பட்டது.

அதற்குள் ஓடி வந்த சுடர், அந்தப் பெட்டியின் மீது விழுந்து, "அப்பா... எழுந்து வாங்கப்பா" என்று கத்தி கதறி அழுதாள்.

அவளை யாராலும் தேற்ற முடியவில்லை. "ஒரு பொண்ணு கல்யாணத்தை கூடப் பார்க்காம போயிட்டாரே மனுஷன்" என்று அங்கிருந்த பெண்கள் ஒப்பாரி வைக்க, அது அந்தக் குடும்பத்தின் ரணத்தை இன்னும் அதிகமாக்கியது.

சரியாக அந்த நேரத்தில், காத்தவராயனின் தங்கைகளும் அவர்களின் குடும்பங்களும் ஒரு பெரிய கும்பலாக வந்து சேர்ந்தனர்.

"இந்த மனுஷன் ஆக்சிடென்ட் ஆகிப் படுத்த படுக்கையாய் இருந்தப்ப ஒரு நாள் கூட நீங்க யாரும் எட்டிப் பார்க்கல... இன்னைக்கு மட்டும் எதுக்கு வந்தீங்க? எல்லாரும் இங்கிருந்து கிளம்புங்க!" என்று அக்கம்பக்கத்தினர் சண்டையிட,

"எங்க அண்ணனை பார்க்க வந்திருக்கோம். எங்க அண்ணனுக்கு செய்ய வேண்டியதை நாங்க தான் செய்வோம். அவருக்கு ஆம்பளப் புள்ளையே கிடையாது, அதனால என் பிள்ளைதான் கொல்லி வைப்பான்" என்று ஆனந்தி அதிகாரமாக பேசினாள்.

சுடர் ஆவேசமாக எழுந்தாள்.

"யாருக்கு யார் கொல்லி வைக்கிறது? ஒழுங்கு மரியாதையா இங்கிருந்து எல்லாரும் கிளம்பிட்டா உங்களுக்கு நல்லது. இல்லன்னா அசிங்கமாயிடும்!" என்று சத்தம் போட்டாள்.

"அண்ணி... என்ன நீங்க அமைதியா இருக்கீங்க? அவகிட்ட சொல்லுங்க... ஒரு பொம்பளப் புள்ளையா அடக்க ஒடுக்கமா இருக்கச் சொல்லுங்க" என்று கவிதா சத்தம் போட்டாள்.

அவ்வளவு நேரம் அமைதியாக இருந்த வெண்பா வெடித்தாள். "இத்தனை நாள் உங்களுக்கெல்லாம் அண்ணன் ஒருத்தன் இருக்கிறது கண்ணு தெரியலையா? இன்னைக்குத்தான் பாசம் பொங்குதா? சாவு வீட்டுல கூட இப்படிப் பண்ணிட்டு இருக்கீங்களே... என்ன ஜென்மங்களோ நீங்க! உங்களுக்காக என் புருஷன் ஓடி ஓடி உழைச்சு, கடைசியில கடனாளி ஆனதுதான் மிச்சம். இன்னைக்கு அந்தப் பொண்ணுங்க அந்தக் கடனை அடைக்கத் தான் ஊர் ஊரா ஓடிட்டு இருக்காங்க. மனசாட்சின்னு ஒன்னு இருந்தா, ஒரு நாளாவது உன் அண்ணனை வந்து பார்த்திருப்பீங்க. என்ன ஜென்மங்களே... என் கண்ணு முன்னாடி நிக்காதீங்க! என் பொண்ணுங்களைக் குறை சொல்ல உங்களுக்கு எந்தத் தகுதியும் இல்லை. என் புருஷனுக்குக் கொல்லி வைக்கிற உரிமையை உங்களுக்கு யார் கொடுத்தது? ஆம்பளப் புள்ளை இல்லைன்னா என்ன... ஆம்பளப் புள்ளைதான் கொல்லி வைக்கணும்னு ஏதாவது சட்டம் இருக்கா? இத்தனை நாள் என் குடும்பத்தைக் காப்பாத்தி, இன்னைக்கு எங்களை மரியாதையா வாழ வைச்சிருக்க என் மூத்த பொண்ணுதான் வந்து கொல்லி வைப்பா!" என்று அவர் ஆணித்தரமாக சொல்ல, அனைவரும் ஸ்தம்பித்துப் போனார்கள்.

அந்த இடமே ஒரு போராட்டக் களமானது. கணவனின் இறுதிப் பயணத்தில் ஆவது நிம்மதி இருக்க வேண்டாமா என்று வெண்பா உள்ளுக்குள் புழுங்கினாள்.

ஆனால் அந்தத் தங்கைகள் விடுவதாக இல்லை. "பொம்பள பிள்ளை எப்படி கொல்லி வைக்கலாம்? இது என்ன நியாயம்? நாங்க அண்ணன் ரத்தம்... எங்களுக்கு வாரிசு இருக்கு, அதான் முறை" என்று அவர்கள் ஆளுக்கு ஒரு பக்கம் சத்தம் போட்டு தர்க்கம் செய்ய, காலனியே களைப்படைந்தது.

இந்தக் கூச்சல், குழப்பம், சண்டைகளுக்கு மத்தியில்... நொறுங்கிய கோலமாக, கண்களில் வழிந்த கண்ணீருடன் நகை வந்து இறங்கினாள்
 

Author: Vishakini
Article Title: செதுக்கிய சிற்ப பாவையே - 18
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
  • Like
Reactions: Magizh kutty