செதுக்கிய சிற்ப பாவையே - 19

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Vishakini

Moderator
Staff member
Nov 7, 2025
1,634
6,876
113
சிற்ப பாவை - 19

கத்தி கதறி அழ வில்லை அவள்;
ஊரே அதிரும்படி கூப்பாடு போடவில்லை.

உறைந்து போன ஒரு சிலையென நின்றிருந்தாள்.

விரித்த பார்வையோடு, மடைதிறந்த வெள்ளம் எனக் கண்ணீர் கன்னங்களில் வழிந்தோடித் தந்தை முகத்தில் விழ, அந்த முகத்தையே வெறித்துப் பார்த்தபடி நின்றிருந்தாள்.

அவள் நின்ற கோலத்தைப் பார்க்கவே அங்கிருந்தவர்களின் உயிரே அற்றுப் போவது போலிருந்தது.

தந்தை வாங்கிய கடனை அடைக்க, தள்ளாத வயதில் தவித்த குடும்பத்தைக் கரைசேர்க்க, எல்லாவற்றுக்கும் மேலாக தன் தந்தையின் உயிரைக் காக்க... தன் இளமையையும் சந்தோஷத்தையும் ஒரு மூட்டையாகக் கட்டி உதறிவிட்டு, வேலைக்குப் போன பெண் அல்லவா அவள்!

அவள் இன்னும் அந்தப் பழைய பயந்தாங்குளி நகையாகவே இருப்பாள் என்ற நினைப்பில், ஆனந்தி அவள் அருகில் வந்தாள்.

வந்தவள் சும்மா இருக்காமல் விஷத்தைக் கக்கினாள்.

"சம்பாதிக்கிறோங்கிற திமிரா? என் அண்ணனுக்கு என் பிள்ளைதான் கொல்லி வைப்பான். ஆம்பள புள்ள இல்லைன்னா என்ன? நாங்க தங்கச்சிங்க இருக்கோம்!" என்று ஆனந்தி ஊரே கேட்கச் சத்தமிட, நகையின் கண்கள் சட்டெனச் சிவந்தன.

துக்கத்தை மீறி ரௌத்திரம் அவளிடம் தலைதூக்கியது.

"வயசுல மூத்தவங்க எல்லாம் இங்கே அமைதியா இருக்காங்க. இந்த அண்ணன் தங்கச்சி செண்டிமெண்ட் எல்லாம் என் அப்பாவோட முடிஞ்சு போச்சு! அதோட நிறுத்திக்கணும்.

என் அப்பா இறந்ததுக்கு அப்புறம் உங்களுக்கு இங்கே என்ன வேலை? யாரு கேட்டு இந்த வீட்டுக்குள்ளே வந்தீங்க? என் அப்பா சாவுல உங்களுக்கு என்ன காரியம் வேண்டியிருக்கு?" என்று அவள் அக்னி தேவியாக உருவெடுத்து நிற்க, அவளிடம் சண்டையிட யாருக்கும் திராணி இல்லை.

அவள் கையை முறுக்கி, கோபத்தில் நரம்புகள் புடைக்க நின்றிருந்த அந்த விதம், அங்கிருந்த அனைவரையும் அச்சுறுத்தியது. அதன் பிறகு அந்த இடமே மயான அமைதியானது.

மேளச் சத்தம் மட்டுமே அந்தப் பகுதி முழுவதும் மரண ஓலமாய் எதிரொலித்துக் கொண்டிருந்தது.
காத்தவராயன் வேலை செய்த காலங்களில் பழகிய நண்பர்கள் என அங்குப் பெரும் கூட்டமே கூடியிருந்தது.

"ஒரு நல்ல மனிதனின் வாழ்க்கையை அவனோட இறுதி ஊர்வலத்தில் வர்ற கூட்டத்தை வச்சு கண்டுபிடிச்சிரலாம்" என்பார்கள்.

அந்தப் பழமொழி காத்தவராயன் விஷயத்தில் நூறு சதவீதம் உண்மையானது.

அவர் விபத்தில் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையாக கிடந்தபோது, ரத்த உறவுகள் மட்டும் தான் அவரைக் கைவிட்டன. ஆனால், அவரின் நண்பர்களும் பழகியவர்களும் இந்த ஏழைக் குடும்பத்தை கைவிடவில்லை.

"நகைதான் கொல்லி வைக்கணும்" என்று வெண்பா உறுதியாகச் சொன்னாலும்,

"பொம்பளப் புள்ள இதெல்லாம் செய்யக்கூடாது" என்று ஆளாளுக்கு ஒரு நீதியைப் போதித்துக் கொண்டிருந்தார்கள்.

நகை எதையும் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. மூன்று பெண் குழந்தைகளும் தந்தையை சுற்றி அமர்ந்து, அவர் இனி எழ போவதில்லை என்பதை உணர்ந்து அழுது கொண்டிருந்தனர்.

"வெண்பா, என்னதான் முடிவு? காத்தவராயனுக்கு யாருதான் கடைசியில கொல்லி வைக்கிறது?" என்று ஒரு பெரியவர் தயக்கத்துடன் கேட்டார்.

"மொட்டை அடிக்கணும்... கொல்லி வைக்கிறவங்க தான் மொட்டை அடிக்கணும்" என்று இன்னொருவர் வழிமொழிந்தார்.

அதற்காகவே மொட்டை அடிப்பவர் ஒரு பக்கத்தில் தயாராகக் காத்திருந்தார்.
வெண்பா எதைப் பற்றியும் யோசிக்கவில்லை.

சட்டென எழுந்து நகை அருகில் வந்தவர், அவள் கையைப் பிடித்து தூக்கினார். அவளை இழுத்து சென்று அந்த மொட்டை அடிப்பவர் முன்னால் அமர வைத்தார்.

அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தனர். "என்ன காரியம் பண்ணிட்டு இருக்க வெண்பா? ஒரு பொம்பளப் புள்ளைக்குப் போய் யாராவது மொட்டை அடிப்பாங்களா? அறிவை எங்க வச்சிருக்க?" என்று சப்தமிடத் தொடங்கினர்.

வெண்பாவின் குரல் அந்த இடத்தையே கிழித்தது. "என் புருஷன் உடம்புக்கு என் பெரிய பொண்ணு கொள்ளி வச்சா மட்டும் தான் என் ஆத்திரம் அடங்கும்! ஆம்பளப் புள்ள இருந்தாக்கூட பயந்து ஓடிப் போயிருப்பான். ஆனா, இந்தப் பிள்ளைதான் இன்னைக்கு எங்களை மரியாதையா வாழ வச்சது. விருப்பம் இருந்தா இங்கே நில்லுங்க... 'பொம்பளப் புள்ள கொல்லி வைக்கிற இடத்துல நாங்க நிற்க மாட்டோம்'னு நினைக்கிறவங்க தாராளமா இப்போவே கிளம்பலாம்!"

அவள் மூச்சு வாங்கப் பேசினாள். "இங்கே நின்னு குறை சொல்ல நீங்க யாரு? நாங்க கஷ்டப்படும்போது எங்க கூட இருந்தீங்களா? என் புருஷன் படுத்த படுக்கையாக கிடக்கும் போது ஒரு வாய் தண்ணி கொடுத்தீங்களா? என் பிள்ளைகளை நாலு பேரு அசிங்கமா கேள்வி கேட்டபோது வந்து தடுத்தீங்களா? எங்களுக்கு உதவி செஞ்ச யாருமே இங்கே பேசல... நீங்க பேசாதீங்க!" வெண்பாவின் ஆவேசமான குரல் அந்த இடமே அதிரும்படி எதிரொலித்தது.

நகை தலைகுனிந்து சிலையாக அமர்ந்திருக்க, அவளின் காது வரை நீண்டிருந்த முடிகள் ஒவ்வொன்றாக நீக்கப்பட்டன.

அது முடியல்ல, இந்தச் சமூகம் பெண்மையின் மீது சுமத்தி இருந்த பாரம் எனத் தோன்றியது.

"அவங்க சொல்றதுல என்ன தப்பு இருக்கு? ஆம்பளப் புள்ள, பொம்பளப் புள்ளன்னு பார்க்கிற காலமா இது? எதைச் செஞ்சாலும் மனசு நிறைஞ்சு செய்யணும். நகையைத் தவிர்த்து காத்தவராயனுக்குச் செய்ய வேற யாருக்கும் தகுதி இல்லை. அவன் ஆத்மா சாந்தியடையணும்னா அது நகை கையால்தான் நடக்கணும். இனிமேலாவது 'ஆம்பளப் பிள்ளை இல்லையே'ன்னு யாரும் பயந்து வாழக் கூடாது. இது ஒரு புது சரித்திரமா இருக்கட்டும்!" என்று சங்கரும் அவனது கூட்டாளிகளும் வெண்பாவுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தனர்.

அதன் பிறகு எவரும் எதிர்த்து பேசவில்லை. ஆனந்தியின் தங்கைகள் வாயை மூடிக்கொண்டு, சம்பந்தமில்லாத மனிதர்களைப் போல ஒரு ஓரமாக ஒதுங்கி நின்றார்கள்.
சுடரும் நகையும் தங்கள் சொந்த வருமானத்திலேயே தந்தையின் இறுதிச் சடங்குகளை செய்தனர். ஒரு பைசா கூட யாரிடமும் கையேந்தி நிற்கவில்லை; எதற்காகவும் யாரிடமும் குனியவில்லை.

வானவேடிக்கை யில் தொடங்கி, மாலைகள், வந்தவர்களுக்கு கொடுக்கப்பட்ட தேநீர் என ஒவ்வொன்றையும் நகையே முன்னின்று கவனித்தாள்.

தனி ஒரு பெண்ணாக நின்று ஒரு மகனாக மாறினாள்.
பரந்தாமன் ஒரு குடம் தண்ணீரை எடுத்து அவள் மீது ஊற்றினான்.

நனைந்த உடலோடு, கையில் தீச்சட்டி ஏந்தி அவள் நிற்க... அந்தத் தீயை விட அவள் கண்களில் இருந்த வைராக்கியம் பிரகாசமாக இருந்தது.

வாண வேடிக்கைகள் அதிர, காத்தவராயன் உடல் தூக்கிச் செல்லப்பட்டது.

அவரின் பெண் குழந்தைகள் அவரைப் பின் தொடர்ந்து நடந்து வந்தனர். ஊருக்கே இது ஆச்சரியமாகவும் வியப்பாகவும் இருந்தாலும், அங்கிருந்த பலரின் கண்களை கசிய வைத்தது.

"பெத்தா இப்படிப் பிள்ளைகளைப் பெக்கணும்... செத்தா காத்தவராயன் மாதிரி சாகணும்" என்று மக்கள் பேசிக் கொண்டனர்.

சுடுகாட்டில், அந்த இறுதித் தருணத்தில் தந்தையின் முகத்தை மீண்டும் பார்த்தனர். நகை குனிந்து அவர் நெற்றியில் முத்தமிட்டாள்.

"இனிமேலாவது வலி இல்லாம நிம்மதியா இருங்கப்பா... தூங்குங்க. நாங்க உங்களை நினைச்சுக்கிட்டே இருப்போம். நீங்க எப்பவும் எங்களுக்குத் துணையா இருக்கணும்" என்று மெல்லிய குரலில் சொன்னபடி, தன் கையாலேயே அவர் முகத்தை மூடினாள்.

வழியும் கண்ணீரைத் துடைத்துவிட்டு, இரும்பைப் போன்ற மன தைரியத்துடன் தந்தையை வழியனுப்பினாள்.

உண்மைதான்... வேறு யாராவது கொல்லி வைத்திருந்தால் அந்த உடல் அப்படி ஆத்மார்த்தமாக வெந்திருக்காது.

அவரின் மூத்த மகளான நகை கையால் தீ மூட்டிய போதுதான், அந்த உடல் அடங்கியது; அந்த ஆத்மா சாந்தி அடைந்தது.

கனத்தை மனதுடன் இதயத்தை அழுத்தும் மலையளவு பாரதத்துடன் மூவரும் வீடு வந்தனர்.

எல்லாம் முடிந்தது. வீடு திரும்பியவர்கள் ஆளுக்கொரு பக்கமாகச் சோர்ந்து அமர்ந்திருந்தனர். பரந்தாமனின் தாய் உணவுடன் வீட்டிற்குள் நுழைந்தார்.

"கொள்ளி வச்சிட்டுப் பட்டினி கிடக்கக் கூடாது. என்னால முடிந்ததைச் சமைச்சுட்டு வந்திருக்கேன். உங்க தங்கச்சிங்க செய்ய வேண்டியது இது... அவங்கதான் வரலையே? அதனால நானே அவருக்குத் தங்கச்சியா இருந்து செய்யறேன். ஆளுக்கு ஒரு வாய் சாப்பிடுங்க" என்றார்.

வெண்பா தன் கண்ணீரைத் துடைத்து கொண்டு எழுந்தாள். 'இனி இவர்களுக்கு நான்தான் வேலி; நான்தான் பாதுகாப்பு. நான் முடங்கிப் போனால் என் பிள்ளைகள் என்னாவார்கள்?' என்று மனதைத் தேற்றிக் கொண்டு, முகம் கழுவிவிட்டு வந்தாள்.

"நகை எழுந்து வா... நீ சாப்பிட்டாதான் தங்கச்சிகளும் சாப்பிடுவாங்க" என்று அவளை வலுக்கட்டாயமாக அமர வைத்து தன் கையால் ஊட்டி விட்டாள். கடமைக்காக இரண்டு வாய் சாப்பிட்டு விட்டு அவர்கள் நகர்ந்தனர்.

"ரொம்ப நன்றி அண்ணி" என்று வெண்பா நெகிழ்ச்சியுடன் சொல்ல,

"எனக்கு எதுக்கு நன்றி? மனுஷன் கஷ்டப்படும் போது உதவி செய்வதுதான் மனுஷம். அவர் ரொம்ப நாள் வேதனையில் அல்லாடிட்டாரு... நேரமாவே போயிட்டாரு.

அவர் பட்ட வலியை நினைச்சுப் பாருங்க, இனிமேதான் அவர் நிம்மதியா இருப்பாரு" என்று ஆறுதல் சொல்லிவிட்டு அவர்கள் கிளம்பினர்.

ஆனாலும், அந்த வீட்டிலிருந்து காத்தவராயனின் நிழல் மறையவில்லை. அவர் படுத்திருந்த அந்தக் கட்டில், அவர் பயன்படுத்திய மாத்திரை மருந்துகள், துணிகள் என ஒவ்வொன்றையும் தொட்டுப் பார்த்து அந்தப் பெண்கள் அழுது கொண்டே இருந்தனர்.

ஒரு வாரம் இப்படியே கண்ணீரில் கரைந்தது. தங்கைகளும் தாயும் நிலைகுலைந்து போயிருப்பதை உணர்ந்த நகை, தன்னைத் தானே முதலில் தேற்றிக்கொண்டாள்.

தந்தை இனி வரமாட்டார் என்ற கசப்பான உண்மையை ஏற்றுக் கொண்டாள். இனி இந்தச் சின்னஞ்சிறு குடும்பத்தைத் தாங்கிப் பிடிக்க வேண்டிய அச்சாணி தான் என்பதை அவள் முழுமையாக உணர்ந்தாள்.

இழப்புகளுக்காகவும் கண்ணீருக்காகவும் இந்த உலகம் ஒரு நொடி கூட அப்படியே ஸ்தம்பித்து நின்றுவிடப் போவதில்லை.

காலம் தன் சக்கரத்தைச் சுழற்றிக் கொண்டே தான் இருக்கும்; அந்த வேகத்துக்கு ஈடுகொடுக்க இவர்களும் ஓடித்தான் ஆக வேண்டும்.

"சுடர்... இன்னும் எத்தனை நாளைக்குத்தான் இப்படி அழுதுகிட்டே முடங்கிக் கிடக்கப் போறோம்? பெத்த அம்மாவை நாமதானே பார்த்துக்கணும்? சின்னவ கவி இருக்கா... அவளுக்கு இன்னும் எதுவும் புரியல. நீ இப்படியே அழுதுகிட்டே இருந்தா, உன்னைப் பார்த்து அவங்களும் இன்னும் உடைஞ்சு போவாங்க. நாம கொஞ்சமாவது மனசைத் தேத்திக்கிட்டு தைரியமா நின்னாதான், அவங்களுக்கு ஒரு பிடிமானம் கிடைக்கும். போயிட்ட அப்பா இனி திரும்பி வரப்போறது இல்லை சுடர்... அதுக்காக அவர் நம்மை மொத்தமா விட்டுட்டு போகல. அவர் தெய்வமா மாறி நம்ம கூடவே இருந்து நம்மைப் பார்த்துப்பார். அவர் மேல சத்தியமா சொல்றேன், அவர் நம்மளை விட்டுப் போகல... தைரியமா இரு," என்று தன் தங்கை சுடரை மார்போடு அணைத்துக் கொண்டு, ஒரு தாயின் வாஞ்சையோடு சமாதானம் செய்தாள் நகை.
 

Author: Vishakini
Article Title: செதுக்கிய சிற்ப பாவையே - 19
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
  • Like
Reactions: Magizh kutty