• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

செதுக்கிய சிற்ப பாவையே - 21

Vishakini

Moderator
Staff member
சிற்ப பாவை - 21

"என்ன கண்ணகி... திடீர்னு இந்த பக்கம் வந்திருக்கீங்க? என்ன விசேஷம்?" என்று வெண்பா கனிவோடு கேட்டார்.

"சும்மாதான் வந்தோம்... உங்களைப் பார்த்ததும் அப்படியே ஒரு வார்த்தை பேசலாம்னு தோணுச்சு. ஆனா என்ன வேண்டுதல் இது? முடியாம இருக்கிற நேரத்துல எதுக்கு இவ்வளவு கஷ்டமான வேண்டுதல்?" என்று வெண்பா கவலையுடன் வினவினார்.

கண்ணகி தன் முந்தானையால் முகத்தை துடைத்துக் கொண்டு பெருமூச்சு விட்டார்.

"என்னமா பண்றது? பெத்த மனம் பித்தாய் தவிக்குது. பையனுக்கு வயசாகுது, ஆனா ஒரு நல்ல பொண்ணு அமைய மாட்டேங்குது. கல்யாண வயதை தாண்டி போகுது. ஒரு பொண்ணு கூட கிடைக்கல. 'பையன் படிக்கல, மெக்கானிக்கா இருக்கான், ஆட்டோ ஓட்டுறான் னு சொன்னாலே போதும்... வர்றவங்க எல்லாம் 'வேணாம்னு சொல்லிட்டு போயிடுறாங்க."

அவர் குரல் தழுதழுத்தது. அந்த தாயின் வேதனையை இன்னொரு தாயான வெண்பாவால் முழுமையாக புரிந்து கொள்ள முடிந்தது.

"அவனுக்கு மட்டும் இப்படி ஆகணும்னு ஆசையா என்ன? பெத்த அப்பன், கை குழந்தைகளையும் என்னையும் நடுத்தெருவில விட்டுட்டு ஓடி போனதுக்கப்புறம், சின்ன வயசுல இருந்தே இந்தக் குடும்பத்தைத் தாங்குற தூணா அவன் மாறிட்டான். படிக்கணும்னு அவனுக்கு ஆசை தான், ஆனா தங்கங்களைக் கரை சேர்க்கும் என்கிற வெறியில அவன் ஆசையை அவனே கொன்னுட்டான்.

தன் வாழ்க்கையைத் தொலைத்து, ரெண்டு பெண் பிள்ளைகளையும் படிக்க வச்சு, கல்யாணம் பண்ணிக் கொடுத்தே அவன் காலமெல்லாம் முடிஞ்சு போச்சு."

"இந்த ஆட்டோவும், அவன் வச்சிருக்கிற மெக்கானிக் ஷெட்டும்தான் எங்களுக்கு மூணு வேளை சோறு போட்டது; என் பொண்ணுங்களைக் கரை சேர்த்தது. அதெல்லாம் சொன்னா இப்ப வர்ற பொண்ணுங்களுக்கு புரியுமா? பொறுமையா கேட்க யாருக்கும் விருப்பம் இல்லை. இன்னைக்குப் பொண்ணுங்க எல்லாம் 'ஹை-கிளாஸ்' வாழ்க்கையையும், கை நிறைய சம்பாதிக்கும் படிச்ச பையனையும் தான் எதிர்பார்க்குறாங்க. மனசெல்லாம் ஒரே ரணமா இருக்கு வெண்பா. அதான் அந்தத் அம்மன் என் குறையைச் சொல்லி, மகனுக்கு சீக்கிரம் ஒரு கல்யாணம் ஆகணும்னு இந்த வேண்டுதலை வச்சிருக்கேன்."

அவரின் ஒவ்வொரு சொல்லிலும் இருந்த வேதனையை வெண்பாவால் தன் இதயத்தில் உணர முடிந்தது. ஒரு பக்கம் பரந்தாமன்; படிக்காதவன், கௌரவமான வேலை இல்லை என்பதால் அவனுக்குப் பெண் கிடைக்கவில்லை.

இன்னொரு பக்கம் தன் மகள் நகை; நன்றாகப் படித்தவள், கைநிறையச் சம்பாதிப்பவள்; ஆனால் அதே படிப்பு, வேலை அவளுக்குத் தடையாக மாறி மாப்பிள்ளை கிடைக்காமல் நிற்கிறது.

வாழ்வின் இந்த முரண்பாடான இரு நிலைகளை எண்ணி வெண்பா தனக்குள் ஒரு வலியோடு சிரித்துக் கொண்டார்.

"நகை எப்படி இருக்கா வெண்பா? நல்லா இருக்காளா? போன் பண்ணிப் பேசினாளா?" என்று தன் வேதனை கவலைகளை ஒதுக்கி வைத்த கண்ணகி அக்கறையாகக் கேட்க, வெண்பாவின் முகம் வாடியது.

"நல்லா இருக்கா... ஆனா 'கல்யாணமே வேணாம்'னு பிடிவாதமா இருக்கா.

'தங்கச்சிக்கு முதல்ல பண்ணுங்க ன்னு சொல்றா. எப்படிம்மா முடியும்? மூத்த பொண்ணைத் தனியா விட்டுட்டு, தங்கச்சிக்கு முன்னாடி கல்யாணம் பண்றதுக்கு என் மனசு இடம் கொடுக்கல.

எல்லா பாரத்தையும் என் தலையில சுமத்திட்டு இருக்கா" என்று சொல்லும்போதே வெண்பாவிற்கு தொண்டை அடைத்தது, கண்கள் குளமானது.

கண்ணகி வெண்பாவின் கையைப் பற்றிக் கொண்டார்.

"வெண்பா, புள்ள அப்படித்தான் பேசும். அதுக்காக நாம அப்படியே விட்டுட முடியுமா? அவ மனசுல என்ன ஓடுதுன்னு எனக்குப் புரியுது. தான் கல்யாணம் பண்ணிப் போயிட்டா அம்மாவை யார் பார்த்துபாங்க?, குழந்தையா இருக்குற தங்கச்சியை யாரு கவனிச்சுப்பான்னு நினைச்சுப் பயப்படுறா. உன் குடும்பத்தையும் தன் குடும்பமா நினைச்சுப் பார்த்துக்கிற மாதிரி ஒரு மாப்பிள்ளை கிடைச்சா, கண்டிப்பா நகை கல்யாணம் பண்ணிப்பா.

நீ அந்த மாதிரி ஒரு மாப்பிள்ளையை பாரு. படிப்பு, வசதி, அந்தஸ்துன்னு கனவு கண்டுட்டு இருந்தா சரி வராது."

"அவளோட சூழ்நிலையைப் புரிஞ்சுக்கிற ஒருத்தன் வேணும். நாளைக்குக் குழந்தைங்க பிறந்தாத் தனியா பார்த்துக்கிற தைரியம் இருக்கிற இடமாப் பாரு. அப்பதான் அவ சந்தோஷமா இருக்க முடியும். மன ரீதியா கட்டுபாடா இருக்கவனை கொண்டு வந்து நிறுத்து. வசதி வாய்ப்பெல்லாம் அப்புறம் அவங்களே உருவாக்கிப்பாங்க. நகைக்கு உண்மையா, முழு மனசோட வாழக்கூடிய ஒரு புருஷன் கிடைப்பான் பாரு."

மேலும் தொடர்ந்து, "அவ வேலைக்குப் போற பொண்ணு. அவ வருமானத்தை வச்சுட்டுப் புகுந்த வீட்ல எந்தப் பிரச்சனையும் வராமப் பார்த்துக்கணும். நல்லா யோசிச்சு முடிவு எடு," என்று ஒரு தெளிவான விளக்கத்தைக் கொடுத்துவிட்டு அவர்கள் கிளம்பினர்.

வெண்பா தன் மகளை அழைத்துக் கொண்டு நடக்கையில், அந்தச் சிறுமி அப்பாவியாகக் கேட்டாள், "அம்மா, அக்காவுக்குக் கல்யாணம் பண்ணிட்டா அக்கா நம்மளை விட்டுப் போயிடுமா?"
வெண்பா அவள் தலையைக் கோதி,

"அக்கா நம்மளை விட்டுப் போக மாட்டாடா... நாம தினமும் அக்கா முகத்தைப் பார்க்குற மாதிரி ஒரு இடமாவே அவளுக்குக் கல்யாணம் பண்ணிக் கொடுக்கலாம்னு நினைக்கிறேன். பார்ப்போம்," என்று பேசிக் கொண்டே வந்தபோது, பிரனேஷ் வீட்டின் முன் பெரும் பரபரப்பு.

மனதை ரணமாக்கும் ஒரு மோதல்
பிரனேஷ் வீட்டின் முன் கூட்டமாக இருந்தது. உள்ளிருந்து ஆனந்தியின் கதறல் சத்தம் நெஞ்சைப் பிழிந்தது.

"இப்படிப் பண்ணிட்டியே படுபாவி! நீ எல்லாம் பொண்ணா இல்ல பேயா? யாராவது தன் குழந்தையை இப்படி ஈவு இரக்கமில்லாமல் கொல்லுவாங்களா? என் பிள்ளை கிட்ட கூட ஒரு வார்த்தை சொல்லாம இப்படி ஒரு காரியத்தைப் பண்ணிட்டியே!"

வெண்பா அதிர்ச்சியில் உறைந்து நின்றார். உள்ளே பிரனேஷ், பேரிடி விழுந்தது போல அப்படியே தரையில் நிலைகுத்திப் போய் அமர்ந்திருந்தான்.

அவன் கண்களில் உயிர் இல்லை, வெறும் வெற்றிடம் மட்டுமே இருந்தது. ஆனால், அந்த வீட்டின் இன்னொரு பக்கம் வாசவியும் அவள் குடும்பமும் எந்தக் கவலையும் இல்லாமல் அமர்ந்து நிதானமாகச் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.

வெளியே தங்களைச் சுற்றி நின்று பேசுவதோ, ஊரே தங்களைத் துப்புவதோ அவர்களுக்கு ஒரு பொருட்டாகவே தெரியவில்லை.

அவர்கள் மேலை நாட்டு கலாச்சாரத்தில் பழகி போனார்கள். அவர்களுக்கு இதெல்லாம் ஒன்றும் இல்லை.

பக்கத்தில் இருந்த ஒரு பெண் வெண்பாவிடம் மெல்லிய குரலில் சொன்னாள், "பிரனேஷ் பொண்டாட்டி வாசவி கருவுற்று இருந்திருக்கா. ஆனா புருஷன் கிட்டயும் அத்தைகிட்டயும் சொல்லாம, ரகசியமா ஆஸ்பத்திரிக்குப் போய் 'அபார்ஷன்' பண்ணிட்டு வந்துட்டா."

வெண்பா தன் நெஞ்சில் கை வைத்து அப்படியே ஸ்தம்பித்துப் போனார்.

"என்ன சொல்றீங்க? எப்படி வாசவி இப்படி ஒரு காரியத்தைத் துணிஞ்சு பண்ணா?"

"இது ஒன்னும் முதல் தடவை இல்லையாம்மா. இதுக்கு முன்னாடியே ரெண்டு தடவை இப்படிப் பண்ணியிருக்கான்னு இன்னைக்குத்தான் டாக்டர் மூலமாத் தெரிஞ்சிருக்கு.

இன்னைக்கு அபார்ஷன் பண்ணிட்டு தன் குடும்பத்தோட ஆஸ்பத்திரியை விட்டு வெளியே வரும்போது, பிரனேஷ் கையும் களவுமா பிடிச்சுட்டான்."

"எதுக்கு? எதுக்காக இப்படிப் பண்ணா? தன் வயித்துல வளர்ந்த உயிருதானே அது?" என்று வெண்பா துடித்தார்.

"அதைத் தான் பிரனேஷும் கேட்டான். அதுக்கு அவ சொன்ன பதிலைக் கேட்டா, நமக்கே அருவருப்பா இருக்கு," என்றாள் அந்தப் பெண்.

உள்ளே பிரனேஷ் தன் முழு ஆத்திரத்தையும் திரட்டிச் சத்தமிட்டான்.

"ஏண்டி... என் குழந்தையை எதுக்காகக் கொன்ன? ஒவ்வொரு முறை 'குழந்தை இல்லையே'ன்னு நான் ஏங்கும்போது, 'நீதான்டா ஆம்பள இல்லை'ன்னு என்னைக் குத்திக் காட்டிப் பேசினியே... கடைசியில என் ரத்தத்துல உருவான குழந்தைகளை ஒவ்வொரு முறையும் நீயே அழிச்சுட்டு இருந்திருக்கே! நீ எல்லாம் ஒரு மனுஷியா?"

வாசவி மிகச் சாதாரணமாக, ஒரு கையில் உணவை எடுத்துக்கொண்டே சொன்னாள், "இப்ப எதுக்கு பிரனேஷ் இப்படித் தேவையே இல்லாம கத்துற? உனக்கு வயசாயிடுச்சா, இல்ல எனக்கு வயசாயிடுச்சா? இது நாம ஜாலியா சுத்திப் பார்த்து அனுபவிக்க வேண்டிய வயசு. இப்பக் குழந்தை பெத்துக்கிட்டா, என் வாழ்க்கையே அந்தக் குழந்தையைச் சுத்தியே முடிஞ்சு போயிடும். என்னால அப்படிப் பந்தப்பட்டு வாழ முடியாது. ஒரு ஆறேழு வருஷம் நாம நல்லா 'என்ஜாய்' பண்ணுவோம், அப்புறம் பார்த்துக்கலாம். அதுவரைக்கும் குழந்தை பத்தி என்கிட்ட பேசாத. நீ அடிக்கடி குழந்தையைத் தேடி என் உயிரை வாங்குனதால்தான், உன்னை வாயடைக்க வைக்க 'நீ ஆம்பள இல்லை'ன்னு சொன்னேன்."

அந்த வார்த்தைகள் பிரனேஷின் ஆண்மையை சிதைத்தன.

ஆத்திரத்தில் அவன் அவளைத் தாக்கத் தொடங்கினான். ஆனால், வாசவி அந்த அடிகளை ஒரு அசால்ட்டான மனநிலையிலேயே வாங்கிக்கொண்டாள்.

அவள் உடலில் ஏற்பட்ட வலியை விட, அவள் காட்டிய அலட்சியம் அவனை அதிகம் வதைத்தது. அடித்த பிரனேஷுக்குத்தான் கை வலித்தது; மூன்று பிஞ்சுகளைப் பறி கொடுத்த வேதனையில் அவனது இதயம் ரத்தக் கண்ணீர் வடித்தது.

"உன்னால வளர்க்க முடியாதுன்னா... பெத்து என்கிட்ட கொடுத்திருக்கலாம்ல வாசவி... நானே அந்தப் பிள்ளையைத் தூக்கி வளர்த்திருப்பேனே?" என்று அவன் கதறினான்.

"நீ பாட்டுக்குக் குழந்தையை வளர்ப்ப... அப்புறம் நான் யாருகூட வெளிய போறது? என் சந்தோஷம் என்ன ஆகுறது? பிரனேஷ், இதோ பாரு... கடைசியாச் சொல்றேன், இப்ப எனக்குக் குழந்தை பெத்துக்கிற 'இன்ட்ரஸ்ட்' துளிகூட இல்லை. குறைஞ்சது ஒரு ஏழு வருஷம் போகணும். எனக்கு உலகத்தைச் சுத்திப் பாக்கணும்னு ஆசை இருக்கு. இந்த வயசுல அனுபவிக்காம வேற எப்ப அனுபவிக்கிறது? வயசான காலத்துல புள்ளையை வளர்த்துட்டு உட்கார்ந்து இருக்கணுமா? சின்ன விஷயத்துக்காக ஏன் இப்படிச் சீன் கிரியேட் பண்ற?"
அவள் எந்தக் குற்ற உணர்ச்சியும் இல்லாமல் பேசிக் கொண்டிருக்க,

இவளிடம் பேசுவதில் அர்த்தமே இல்லை என்று புரிந்து கொண்ட பிரனேஷ், ஒரு பிணத்தை போல வாசலில் வந்து அமர்ந்து விட்டான். அவன் கனவுகள் எல்லாம் அந்த வீட்டின் வாசலிலேயே சரிந்து கிடந்தன.

துவண்டு போனான். தலை நிமிர முடியாமல் கூனி குறுகி போனான். வாழவே பிடிக்காத வெறுப்பு அவனுக்குள்.

பணம் வேண்டும் என்று முடிவு செய்தாலும் அந்த குடும்பம், அந்த பெண்ணை பற்றி கொஞ்சம் யோசித்து விசாரித்து திருமண செய்து இருக்கலாம் இவன்.

இவனும் ஒன்னும் அவ்வளவு கெட்டவன் இல்லை.. இந்த வலிகளை அனுபவிக்க.

வாசவியின் வீட்டின் அந்தச் கூச்சலுக்கும் குழப்பத்திற்கும் நடுவே, வெண்பாவின் உள்ளம் வேதனையில் விம்மியது. அவர்கள் மீது கோபம் இருந்தாலும் அந்த நிலையில் அவர் ஒரு தாயாக துடித்தார்.
 
Top Bottom