செதுக்கிய சிற்ப பாவையே - 22

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Vishakini

Moderator
Staff member
Nov 7, 2025
1,634
6,876
113
சிற்ப பாவை - 22

அந்தப் பெண்ணைப் பார்த்ததும் அவருக்குள் இருந்த தாய்மை கொதித்தெழுந்தது.

"என்ன பொண்ணு இவ? அறிவு வேண்டாமா இவளுக்கு?" என்று தாளாத ஆத்திரத்தோடு ஆதங்கத்தோடு தனக்குள்ளேயே முணுமுணுத்தார்.

"அடியேய், அப்பிடியே கரு உருவாயிருந்தாலும், அதுக்கு உருவம் வாரதுக்கு முன்னாடியே அதைப் பாதுகாப்பா கலைச்சிருக்க வேண்டாமா? இப்படி கை கால் முளைத்த பச்சை உடம்புகளை, பெத்த குழந்தைகளை அநியாயமா அழிச்சிட்டு வராளே! பாவிச் சிறுக்கி!" என்று அவர் கண்கள் கலங்கின.

"உலகத்துல எத்தனையோ பேரு, 'நமக்குன்னு ஒரு வாரிசு கிடைக்காதா, அம்மான்னு கூப்பிட ஒரு உயிர் இருக்காதா'ன்னு ஏங்கி, காடு மேடெல்லாம் அலைஞ்சு, கோவில் கோவிலா ஏறி இறங்கி, சாமி சாமியா வரம் கேட்டு அழுதுட்டு இருக்காங்க.

அவங்களுக்கெல்லாம் இந்தத் தவிப்பு புரியும். ஆனா இவ என்னடான்னா... கிடைச்ச குழந்தைகளை, கண்ணு முன்னாடியே துடிதுடிக்க அழிச்சிட்டுப் போறாளே! ச்சே!" என்று அருவருப்போடு முகத்தைத் திருப்பிக் கொண்டார்.

"ஏண்டி, குழந்தையை பெத்துக்கிறது என்ன அம்புட்டு லேசா? இவ நினைக்கும்போதெல்லாம் இவ்வளவு ஈஸியா குழந்தை பிறந்துருமா என்ன?" என்று வெண்பாவின் மனம் தாங்க முடியாமல், தொண்டை அடைக்கக் கேட்டார்.

ஆனால், வெண்பாவின் இந்த ஆதங்கமும் ஆத்திரமும் அந்தப் பெண்ணுக்குப் புரியவே இல்லை.

பிரனேஷ், சொத்துப்பத்துக்கும் பணத்துக்கும் ஆசைப்பட்டு, பேராசையினால் தன்னோட வாழ்க்கையைத் தானே சூனியமாக்கிக்கிட்டவன்.

அவளைக் கட்டிக்கிறதுக்கு முன்னாடி, கொஞ்சம் படிச்சவனாவது, கொஞ்சமாச்சும் யோசிச்சு இருக்க வேண்டாமா? 'தப்பு நடக்குது'ன்னு தடுத்து இருக்க வேண்டாமா? அறிவே இல்லாம, அந்த மூதேவி அம்மா பேச்சைக் கேட்டு, ஆட்டுக்குட்டி மாதிரிப் போய் நாசமாப் போயிட்டானே! என்று அங்கு கூடியிருந்தவர்கள் ஆளுக்கொன்றாக பேசிக்கொண்டார்கள்.

வந்தவர்கள் ஒவ்வொருவரும் பிரனேஷையும் வாசவியையும் காறித் துப்பாத குறையாக பேசிக்கொண்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

எல்லாரும் போன பிறகு, இறுதியாக அந்த வீட்டில் வெண்பாவும் கவியும் மட்டுமே அங்கே அசையாமல் நின்று கொண்டிருந்தனர். பிரனேஷ், மெதுவாகத் தலைநிமிர்ந்து வெண்பாவைப் பார்த்தான்.

அந்தப் பார்வையில் அத்தனை குற்ற உணர்ச்சி தேங்கிக் கிடந்தது. வெண்பாவின் கண்களை சந்திக்க முடியாமல், உடம்பெல்லாம் நடுங்க, அப்படியே தரையில் அமர்ந்து குற்ற உணர்ச்சியோடு குலுங்கி குலுங்கி அழுதான்.

அவன் அழுவதைப் பார்த்ததும் வெண்பாவிற்கும் நெஞ்சு பொறுக்கவில்லை. அவருக்கு அவனைப் பார்த்து வேதனையாகவும் பாவமாகவும் இருந்தது. என்னதான் இருந்தாலும், அவர் கையில் தூக்கி வளர்த்த பிள்ளை அல்லவா அவன்? அவர் கண் முன்னே ஓடியாடித் திரிந்த பிள்ளை அவன். அப்படிப்பட்டவன் வாழ்வு, இன்று இப்படி மொத்தமும் பாழாய்ப் போய், சூனியமாகிவிட்டதே என்று நினைக்கும்போது அவருக்குத் துக்கம் தொண்டையை அடைத்தது.

அவன் கல்யாணமான அந்தத் துரதிர்ஷ்டவசமான நாளிலிருந்து, ஒரு நாள் கூட நிம்மதியா இருந்ததில்லை. ஏதேனும் சண்டை சச்சரவு, கூச்சல் குழப்பம் என்றுதான் அவன் வாழ்வு நரகமாகச் சென்று கொண்டிருக்கிறது.

ஆனந்தியோ, குற்ற உணர்ச்சியில் அவமானத்திலும் வெண்பாவை நிமிர்ந்து கூடப் பார்க்க முடியாமல், தரையைப் பார்த்தபடி சிலையாக அமர்ந்திருந்தாள்.

அங்கே நின்று அவர்களுக்கு மேல் சங்கடம் கொடுக்க விரும்பாத வெண்பா, பயந்துபோய் நின்றிருந்த தன் மகள் கவியை அணைத்தபடி, "வாடா தங்கம் போலாம்" என்று அழைத்துக் கொண்டு, கனத்த இதயத்தோடு தன் வீட்டிற்குச் சென்றுவிட்டார்.

அவர்கள் சென்றதும், பிரனேஷ் ஒரு தீர்க்கமான முடிவோடு, கண்களைத் துடைத்துக்கொண்டு வீட்டிற்குள் சென்றான்.

வாசவியைப் பார்த்து தீர்க்கமாகச் சொன்னான், "வாசவி! போதும், இதுக்கு மேல இந்த நரகத்தில் என்னால வாழ முடியாது. இனிமேல் தான் நம்ம ரெண்டு பேரும் ஒண்ணா சேர்ந்து வாழ வேண்டாம். முறைப்படி டைவர்ஸ் பண்ணிடலாம்" என்றான்.

வாசவி சற்றும் அசரவில்லை. வறட்டுச் சிரிப்புடன், "எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்லடா. தாராளமா பண்ணிக்கலாம். ஆனா ஒன்னு... என்ன டைவர்ஸ் பண்ணிட்டு, நீ உடனே ஓடிப்போய் அவளை கல்யாணம் பண்ணிக்கலாம்னு மனக்கோட்டை கட்டாதே!" என்று நக்கலாக கூறினாள்.

பிரனேஷுக்குச் சிரிப்புத்தான் வந்தது. "இனிமேல் எவளையும் கல்யாணம் பண்ணிக்கிற எண்ணம் எனக்கு இல்ல வாசவி. என் வாழ்க்கை, இனிமேலாவது எனக்குப் புடிச்ச மாதிரி, நிம்மதியா நான் வாழ்த்துகிறேன். இதுவரைக்கும் வாழ்ந்தது போதும்.

இனிமேல் உனக்கு, உன்னோட ஆசைக்கும் அசிங்கத்துக்கும், சிக்கி சுகம் கொடுக்கிற வெறும் பொம்மையா நான் இருக்க விரும்பல. நான் மனுஷன். எனக்கும் ஆசைகள் இருக்கு!" என்று அவன் பச்சையாக, பட்டவர்த்தனமாக முகத்திலடித்தாற்போல் கூறிவிட்டான்.

அவன் அப்படிப் பச்சையாகக் கூறியதும் வாசவி திடுக்கிட்டுப் போனாள்.

அதிர்ச்சியாகத் தன் கணவனைப் பார்த்தாள். "ஏய்! என்ன பேசுற நீ? அசிங்கமாப் பேசாதே பிரனேஷ்! கணவன் மனைவிக்குள்ள நடக்குற சாதாரண உறவு அது. அதுல என்ன அசிங்கம் வேண்டிக்கிடக்கு?" என்றாள் கோபமாக.

"ஆமா! கணவன் மனைவிக்குள்ள சாதாரணமா நடக்குற உறவுதான். இல்லன்னு சொல்லல. ஆனா, அந்த உறவை கணவனும் விரும்பனும் இல்லையா? இஷ்டப்படணும் இல்லையா? உனக்குத் தேவைப்படுற நேரத்துல எல்லாம், எதையாவது கண்ட கண்ட மருந்து மட்டன்னு வாங்கி வந்து என் கையில கொடுத்து, 'இதைச் சாப்பிட்டுட்டு என் கூட இரு, அப்பத்தான் வீரியமா இருக்கும்' அப்படி இப்படின்னு அசிங்கமா பேசுவியே... அதெல்லாம் இப்போ ஊரு முன்னாடி சொல்லவா? சொல்லட்டுமா?" என்று பிரனேஷ் ஆவேசமாகக் கேட்டான்.

அவன் எங்கே எல்லாவற்றையும் உடைத்துச் சொல்லிவிடுவானோ என்ற பயத்தில், வாசவி உடனே முகத்தை மாற்றிக் கொண்டாள்.

"சரி! பேச்சை வளர்க்காதே. நாம டிவோஸ் பண்ணிக்கலாம். ஆனா ஒன்னு, இது என்னுடைய வீடு! என் அப்பா காசுல வாங்குன வீடு. இனி இங்க இருக்க உனக்கு எந்த உரிமையும் இல்லை. உன்னுடைய துணிமணி, பொருள் எல்லாத்தையும் இப்பவே எடுத்துட்டு மூட்டையைக் கட்டு" என்று கத்தினாள்.

"நிச்சயமா! இனி உன் கூட, இந்த வீட்ல ஒரு நிமிஷம் கூட நானும் இருக்க விரும்பல. எப்ப என் குழந்தைகளை வரிசையா, இரக்கமில்லாம அழிச்சியோ... அப்பவே உன்னை எல்லாம் ஒரு பொம்பளையாவே நான் மதிக்கல. நீயெல்லாம் ஒரு மனுஷியே இல்ல!" என்று சீறியவன், அவனுக்குத் தேவையான மிகச் சில முக்கியமான பொருட்களை மட்டும் ஒரு பையில் எடுத்துக் கொண்டு, அந்த வீட்டை விட்டு வெளியேறினான்.

அவன் போவதை வாசவியோ, அவள் குடும்பமோ பெரிதாகக் கண்டு கொள்ளவில்லை. அவர்களுக்கு அவர்களின் எண்ணம் முக்கியமாக இருந்தது. ஆனால், ஆனந்தி மட்டும் தன் மகனின் வாழ்வு இப்படி மொத்தமாக வீணா போனதை நினைத்து, உள்ளுக்குள் நொடிந்து போனார்.

'நான் செஞ்ச தப்புக்கு என் புள்ளை தண்டனை அனுபவிக்கிறானே' என்று புழுங்கினார்.

பிரனேஷின் வாழ்வு மீண்டும் தன் தாய் தந்தையுடனேயே தொடங்கியது. அவர்கள் இன்னும் சட்டப்படி விவாகரத்து செய்து கொள்ளவில்லை; வழக்கு நடந்து கொண்டிருந்தது. ஆனால், இருவரும் சேர்ந்து வாழவும் இல்லை. வாசவி, அவனை ஒரு முறை கூட வந்து பார்க்கவில்லை, பேசவும் முயலவில்லை.

நாட்கள் வேகமாக, சலிப்புடன் நகர்ந்தன. காத்தவராயன் இறந்து ஒரு வருடம் முடிந்து, முதல் திதி கொடுக்கும் தேதியும் வந்தது.
மூத்த மகள் நகை, மணிப்பூரில் வேலை செய்யும் இடத்தில், வீட்டில் யாருக்கும் சொல்லாமல் விடுமுறை எடுத்துக் கொண்டு ஊருக்கு கிளம்பி வந்தாள்.

நேராக வீட்டிற்குச் செல்லாமல், தன் தங்கை சுடர் வேலை செய்யும் அலுவலகத்திற்குச் சென்றாள். அவளுக்காக, அந்த அலுவலக வாசலிலேயே ஆவலுடன் காத்திருந்தாள்.

அலுவலகத் ஊழியர் ஒருவன் உள்ளே சென்று, "சுடர்! உங்களைப் பார்க்க வெளியே யாரோ ஒருத்தங்க வந்து இருக்காங்க" என்று தகவல் கூறினான்.

சுடர் குழப்பமடைந்தாள். "என்னைப் பார்க்கவா? இந்த நேரத்துல யாரா இருக்கும்?" என்று யோசித்தபடியே வெளியே வந்தவள், வாசலில் தன் அக்கா நகையைக் கண்டதும் பேரதிர்ச்சி அடைந்தாள்.

அது அப்படியே ஆனந்த அதிர்ச்சியாக மாறியது. "அக்கா!" என்று கத்தியபடியே ஓடிச் சென்று, அவளை இறுக்கமாக கட்டி அணைத்துக் கொண்டாள்.

"எப்படி இருக்கிறாய் சுடர்?" என்று நகை புன்னகையுடன் கேட்டாள்.

"நான் நல்லா இருக்கேன் அக்கா. ஆனா நீ ரொம்ப மோசம். நேத்து நைட்டு கூட போன்ல பேசிட்டு இருந்தோம். நீ ஊருக்கு வரேன்னு ஒரு வார்த்தை சொல்லவே இல்ல என்கிட்ட!" என்று சுடர் உரிமையோடு கோபித்துக் கொண்டாள்.

"உனக்குச் சின்னதா ஒரு சர்ப்ரைஸ் கொடுக்கலாம்னு தான் சொல்லாம வந்தேன்டா" என்று நகை சிரித்தாள்.

"அப்படியே இதே மாதிரி நம்ம வீட்டுக்கு போய், அம்மாவுக்கும் கவிக்கும் சர்ப்ரைஸ் கொடுக்கலாம் அக்கா. ரெண்டு பேரும் ஒண்ணா போலாம்" என்றாள் சுடர் உற்சாகமாக.

"கண்டிப்பாக கொடுக்கலாம்டா. என் தங்கச்சி ஆசைப்பட்டு, அதை நான் செய்யாம இருப்பேனா?" என்று நகை கூற, இருவரும் அங்கிருந்து மகிழ்ச்சியாகக் கிளம்பினர்.

சுடர் பார்ப்பதற்கு அழகாகவும், நல்ல வேலையிலும் இருந்ததால், அவளுக்கு நிறையக் காதல் கடிதங்களும், காதலர்களும் உருவானார்கள். ஆனால் சுடர், அனைத்தையும் 'வேண்டாம்' என்று தன் ஒற்றைப் பார்வையிலேயே தீர்க்கமாக மறுத்து வந்தாள். அவள் மனதில் காதல் என்ற எண்ணமே இல்லை.

ஏனென்றால், அவள் தன் அக்காவையே ரோல் மாடலாக நினைத்து வாழ்பவள். அக்கா பட்ட கஷ்டங்களும், அவள் தியாகமும் கண் முன்னே இருக்கும் போது, காதல் என்ற ஊஞ்சலில் ஆடுவதற்கு அவள் மனமும் உடலும் தயாராக இல்லை.

ஊருக்கு வரும் பேருந்தில் போகும் போது, இருவரும் பழைய நினைவுகளைப் பேசி, நிறைய பேசிக்கொண்டே சென்றனர். தங்கைகளுக்குப் பிடித்தமான நிறையத் தின்பண்டங்களை வாங்கிக் கொண்டு வீட்டிற்கு வந்தனர்.

வீட்டின் காலிங் பெல்லை அடித்துவிட்டு, அம்மா யாருன்னு பார்க்க வரும்போது சர்ப்ரைஸ் கொடுக்க, இருவரும் கதவுக்குப் பக்கவாட்டில் மறைந்து நின்றுகொண்டனர்.

கவிதான் கதவை திறந்தாள். "யார்?" என்று கேட்டபடியே வெளியே எட்டிப் பார்த்தவள், யாரையும் காணோமே என்று திகைத்தாள்.

அப்போது இரு அக்காமாரும் "பூம்!" என்று முன்னால் வந்து நிற்க, அவர்களைக் கண்டதும் கவிக்குச் சந்தோஷம் தாங்கவில்லை.

"அக்கா! அக்கா!" என்று கத்தியபடியே குதித்து ஓடி வந்து, இருவரையும் மாற்றி மாற்றிக் கட்டிக்கொண்டாள்.

நகை, கவியைத் தூக்கிச் சுற்றினாள். அவள் பிஞ்சு கன்னத்தில் முத்தமிட்டு, "எவ்ளோ சந்தோஷம் என் குட்டி முகத்துல!" என்று அவளைப் பார்த்துப் பெருமிதம் கொண்டாள்.

"அம்மாவும் நானும் உங்க ரெண்டு பேரையும் ரொம்ப மிஸ் பண்றோம் அக்கா. அதுலயும் சுடர் அக்காவாவது வாராவாரம் வருது. நீ தான் வேலையை சொல்லியே வரவே மாட்டேங்குற!" என்று கவி ஆதங்கப்பட்டாள்.
 

Author: Vishakini
Article Title: செதுக்கிய சிற்ப பாவையே - 22
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
  • Like
Reactions: Magizh kutty

Gowri Karthikeyan

Well-known member
May 5, 2026
1,290
384
83
Chennai
பிரணேஷ் தப்பு செய்துட்டான் தான்....
ஆன இவளோ பெரிய தண்டனையா இவனுக்கு.....
பாவமா இருக்கு