செதுக்கிய சிற்ப பாவையே - 23

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Vishakini

Moderator
Staff member
Nov 7, 2025
1,634
6,876
113
சிற்ப பாவை - 23

அந்த மழலை வார்த்தைகளைக் கேட்டு நகை மனம் பாரமானது. 'குடும்பத்துக்காகத் தானே இவ்வளவு கஷ்டப்படுறோம்' என்று நினைத்துக்கொண்டாள்.

"ஏய் கவி குட்டி! அப்படிப் பேசக் கூடாதுடா. அக்கா எவ்ளோ பெரிய வேலைல, எவ்ளோ பொறுப்புல இருக்கான்னு உனக்குத் தெரியும்ல?" என்று சுடர் அவளைச் சமாதானப்படுத்தினாள்.

கவி உடனே முகத்தை மாற்றிக்கொண்டு, "எனக்கும் பெருமைதான் அக்கா. நான் எல்லா இடத்திலும் என் அக்கா ஆர்மி ல வேலை பார்க்குறதைச் சொல்லிப் பெருமையா பேசிப்பேன். அக்கா இந்த வேலையில் இருக்கிறதால் ஸ்கூல்ல எல்லாரும் என்னிடம் வந்து ரொம்ப ஃப்ரெண்ட்லியா பேசுவாங்க. அக்காவைப் பத்தி நிறையக் கேப்பாங்க" என்று கவி பெருமையாகப் பேசிக் கொண்டிருந்தாள்.

வெண்பா உள்ளே சத்தம் கேட்டு வெளியே வந்தவர், வாசலில் மூன்று மகள்களும் ஒன்றாக இருப்பதைக் கண்டு ஆனந்த அதிர்ச்சி அடைந்தார். கண்களில் நீர் முட்டியது.

"நகை!" என்று ஓடிவந்து, மூத்த மகளை அணைத்துக் கொண்டு கண்ணீர் விட்டார்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு, குடும்பத்தில் அனைவரும் ஒன்றாக இருப்பது, அந்த வீட்டிற்குப் பெரும் நிம்மதியையும், ஒரு விதமான நிறைவையும் கொடுத்தது.

அடுத்த நாள், காத்தவராயனின் முதலாம் ஆண்டுத் திதி காரியங்கள் நடந்தன. காலை திதியை நகை மகனாக ஆற்றில் கொடுத்துவிட்டு, பிறகு ஒரு அனாதை ஆசிரமத்திற்கு சென்றனர்.

“இந்த மாதிரி பத்து பேருக்கு சாப்பாடு போட்டா கூட நம்ம குடும்பத்துக்கு புண்ணியம் வந்து சேரும்.” என வெண்பா கூறினார்.

நகை ஏற்பாடு செய்திருந்தபடி, அன்று நாள் முழுவதும் அங்கே இருக்கும் அனாதைகளுக்கு அன்னதானம் வழங்கினர். இவர்களே முன்னின்று பரிமாறினார்கள்.

அன்று நாள் முழுவதும் அங்கேயே தங்கியிருந்து, அவர்களோடு நேரம் கழித்தனர்.

தந்தையின் நினைவு நாளில் வீட்டில் இருந்து அழுவதை விட இவர்களுடன் இருப்பது மேல் என்று அவளுக்கு தோன்றியது.


நகை, தான் வேலையில் சிறுகச் சிறுகச் சேர்த்து வைத்திருந்த பணத்திலிருந்து 50,000 ரூபாயை எடுத்து, அந்த அனாதை ஆசிரமத்தின் காப்பாளரிடம் கொடுத்தாள்.

"என்னால முடிஞ்ச சிறு உதவி இது ஐயா. இங்க இருக்கிறவங்களுக்கு வயிறு நிறைய சாப்பாடு போடுங்க. என்னால எப்ப முடியுதோ, அப்ப என்னால முடிஞ்சது உங்களுக்குக் கொடுக்கிறேன். இது என் அப்பாவுக்காக செய்றேன்" என்று அவள் விம்மலுடன் கொடுக்க, அவர் மிகுந்த மனநிறைவுடன் பெற்றுக் கொண்டார்.

"உன் குடும்பம் நல்லா இருக்கும்மா" என்று வாழ்த்தினார்.

அங்கிருந்த முதியவர்களும், குழந்தைகளும் அவர்களை மனமார வாழ்த்தினர். அவர்களின் அன்பான வார்த்தைகளும், உண்மையான வாழ்த்துக்களும், இவர்களைப் பெரிதாக வாழவைத்து விட முடியாது என்றாலும், அவர்களுக்குப் பெரும் மனநிறைவைத் தந்தது.

இரவு அனைவரும் ஒன்றாக, களைப்புடன் ஆனால் மனநிறைவுடனும் வீடு வந்து சேர்ந்தனர்.

தந்தையின் இழப்பு என்பது ஈடு செய்ய முடியாதது தான். ஆனால், ஏதோ ஓரிடத்தில், தங்களோடுதான் காத்தவராயன் இருக்கிறார், தங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறார் என்ற உணர்வை அவர்கள் ஒவ்வொரு நொடியும் அனுபவிக்கின்றனர். அதனால், அவரின் பிரிவை ஒரு வழியாக ஏற்றுக் கொண்டு, அதோடு பழகி வாழப் பழகிக் கொண்டனர்.

இரவு சாப்பிட்டு முடித்ததும், நகை மெதுவாக ஆரம்பித்தார்.

"அம்மா! நாளைக்கு நம்ம நகை கடைக்கு போகலாம். என்கிட்ட கொஞ்சம் சேவிங்ஸ் இருக்கு. அதை வச்சு உனக்கும், தங்கைகளுக்கும் ஏதாவது நகை வாங்கிடலாம்."

வெண்பா சிரித்தார். "இப்போ உன்கிட்ட இருக்கிற காசை நீ பத்திரமா வச்சுரு நகை. நான் ஆல்ரெடி கொஞ்சம் நகங்க வாங்கி வச்சிருக்கேன்" என்று கூறிவிட்டு, அவர் உள்ளே சென்று, பீரோவில் இருந்த நகைகளை வெளியே எடுத்து வந்தார்.

நகை திகைத்துப் போனாள். "ஏது அம்மா இதெல்லாம்? இவ்வளவு நகை?"

"எல்லாம் நீங்க கொடுக்கிற காசுல தான் வாங்கினேன்டா. நீ மாசம் மாசம் செலவுக்குன்னு தாராளமா காசு தர்றே. சுடரும் அவளுடைய சம்பளப் பணத்தை அப்படியே என்கிட்ட கொடுத்துறா. நானும் வேலைக்குப் போறேன். நான் வேலைக்குப் போற காசு எனக்கும் கவிக்கும் செலவுக்குச் கரெக்ட்டா இருக்கு. அப்புறம் எதுக்கு வேஸ்டா பேங்க்ல வச்சிருக்கணும்? வட்டி ஒன்னும் பெருசா வராது. அதான், மாசம் மாசம் சீட்டு போட்டு, என்ன கிடைக்குதோ அதை வச்சு சின்னச் சின்னதா நகை வாங்கிட்டு வந்து வச்சுருவேன். பின்னாடி உங்களுக்குத் தானே வேணும்?" என்றார் வெண்பா நிதானமாக.

அந்த நகைகளை மொத்தமாகப் பார்த்த நகை, ஒரு நிமிடம் ஸ்தம்பித்து நின்றாள். பிறகு மெதுவாக அந்த நகைப் பெட்டியை மூடி வைத்தாள். அதைத் தொட்டுக்கூடப் பார்க்கவில்லை.

ஒரு காலத்தில், 'நகை' என்ற பெயருக்கு ஏத்த மாதிரி, நகை நட்டுக்கு ஆசைப்பட்ட அதே 'நகை' தான் இது. ஆனால், காலம் அவளை எப்படி மாற்றிவிட்டது! இன்று அந்த நகைகளை திரும்பிப் பார்க்கக் கூட அவளுக்கு விருப்பமில்லை.

அவளுக்குத் தேவை குடும்பத்தின் மகிழ்ச்சி மட்டும் தான்.

"சுடர்! ஒரு வாரத்துக்கு ஆபீஸ்ல லீவு சொல்லிடுங்க எல்லாரும். நாம எல்லாரும் கொஞ்சம் வெளியில எங்கேயாவது போயிட்டு வரலாம். எப்பவும் வீட்டுக்குள்ளேயே இருந்திருந்து கவி குட்டிக்கும் போரடிக்கும். கவி குட்டிக்கு இப்ப லீவுல தானே இருக்கா?" என்றாள் நகை, கவியின் தலையை வருடியபடி.

வெண்பா புன்னகைத்தார். "நீங்க ஊருக்கு வந்ததமே, நான் கெஸ் பண்ணிட்டேன்டா. அதான் ஆல்ரெடி வேலைக்கு ஒரு வாரம் லீவு சொல்லிட்டேன். அப்பாவுடைய காரியமும் நல்லபடியா முடிஞ்சுச்சு. மனசுக்கு கொஞ்சம் நிம்மதியா இருக்கும். நாம எங்கேயாவது போயிட்டு வரலாம்" என்று அவர் ஒப்புக்கொண்டார்.

அலைகளின் ஆர்ப்பரிப்பும், அருவியின் இரைச்சலுமே பின்னணி இசையாக ஒலிக்க, அந்தக் குடும்பமே குற்றாலத்தின் மடியில் சங்கமித்திருந்தது.

சில்லென்ற அருவி நீர் உடலைத் தீண்ட, சின்னவள் கவி துள்ளிக் குதித்து விளையாடிக் கொண்டிருந்தான்.

மற்றவர்கள் அந்த மேலிருந்து கொட்டும் நீரின் அழகில் திளைத்திருக்க, நகையால் தான் அவர்களோடு முழுமையாக இணைந்து சிரிக்க முடியவில்லை. அவளுக்குள் ஏதோ ஒரு பாரம். ஆனாலும், அவர்களை விட்டுத் தள்ளிப் போய்விடவும் அவளுக்கு மனமில்லை. தூரத்தில் நின்றபடி, சுடரும் கவியும் குழந்தைகளாக மாறி விளையாடுவதைப் பார்த்தபடி நின்றிருந்தாள்.

அந்தக் காட்சியைப் பார்த்த வெண்பாவின் உள்ளம் விம்மியது. 'இவளும் ஒரு பருவப் பெண்தானே? மற்ற பெண்களைப் போலத் துள்ளித் திரிய வேண்டிய வயதல்லவா இது? ஆனால், தலையில் விழுந்த குடும்பப் பொறுப்பு இவளைச் சின்ன வயதிலேயே ஒரு முதிர்ந்த பெண்ணாக மாற்றிவிட்டதே!' என்று எண்ணி அவர் கண்கள் கசிந்தன.

தன் மகளின் இந்த இறுகிய மனதை எப்படி மாற்றுவது என்ற தவிப்போடு, அவரும் தயங்கித் தயங்கி அவர்களுடன் விளையாட்டில் கலந்து கொண்டார்.

குற்றாலத்தின் ஒவ்வொரு மூலையையும் ஒரு வாரம் முழுக்கச் சுற்றித் திரிந்தார்கள். மனதுக்குத் திருப்தியாக, சந்தோஷமாக அந்த நாட்கள் நகர்ந்தன.

சுடர் தைரியமானவள். தான் சம்பாதிக்கும் பணத்தை எதற்கும் அஞ்சாமல், ஒரு பைசா கூடத் தனக்கென வைத்துக் கொள்ளாமல் அப்படியே தாயின் வங்கிக் கணக்கிற்கு அனுப்பிவிடுவாள்.

ஆனால் நகை அப்படியல்ல; அவள் ஒரு குடும்பத் தலைவனாகவே மாறிவிட்டிருந்தாள். தன் சம்பளத்தில் ஒரு சிறு பகுதியை ரகசியமாகச் சேமித்து வைத்துவிட்டு, மீதியைத்தான் வீட்டிற்குத் தருவாள். அப்படி அவள் சிறுகச் சிறுகச் சேர்த்து வைத்த அந்தப் பணத்தில்தான் இந்த ஒரு வாரச் சுற்றுலாச் செலவுகள் அனைத்தும் செவ்வனே நடந்தேறின.

காலம் சக்கரம் வேகமாக ஓடியது. கவி பள்ளியை முடித்துக் கல்லூரிக்குள் நுழைந்தாள். நான்கு வருடங்கள் மின்னல் வேகத்தில் மறைந்தன. ஆனால், இதுவரை நகைக்குத் திருமணம் மட்டும் கை கூடவில்லை.

இன்றும் அந்த வீட்டில் அதே 'பெண் பார்க்கும் படலம்' தான். ஆனால் ஒரு வித்தியாசம்.

நகை சோபாவில் ஒரு கம்பீரமான அதிகாரத்தோடு அமர்ந்திருக்க, அவளுக்கு எதிரே மாப்பிள்ளை வீட்டார்கள் அமர்ந்திருந்தார்கள். சுடர் அழகாக அலங்கரிக்கப்பட்டு, ஒரு உயிரற்ற பொம்மை போல அங்கே நின்றிருந்தாள்.

நகை மாப்பிள்ளையின் கண்களை நேராகப் பார்த்துப் பேசத் தொடங்கினாள். அவளது குரலில் உறுதி தொனித்தது:

"நீங்க என்ன வேலை செய்றீங்க, என்ன படிச்சிருக்கீங்கன்னு எனக்குத் தேவையில்லை. ஆனா, ஒரு பொண்ணை மதிக்கத் தெரிஞ்சிருக்கணும். அவளுக்கான சுதந்திரத்தை அடிப்படையா தரத் தெரிஞ்சிருக்கணும். முக்கியமா ஒன்னு... கல்யாணத்துக்கு அப்புறம் அம்மா, தங்கை தான் முக்கியம்னு வந்து நின்னீங்கன்னா அதை நான் ஏத்துக்க மாட்டேன்!"

வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்பது போல நகை பேசிக் கொண்டிருக்க, அங்கே ஒரு மெல்லிய அமைதி நிலவியது. உண்மையில் இந்தப் பெண் பார்க்கும் படலம் நகைக்கு அல்ல; அவள் தங்கை சுடருக்காக!

தகப்பனை இழந்த அந்த வீட்டில், ஒரு தந்தை ஸ்தானத்திலிருந்து சுடருக்கு இந்தத் திருமணத்தை நடத்தி வைக்கத் துடித்தாள் நகை.

கிட்டத்தட்ட ஆறு மாதப் போராட்டத்திற்குப் பிறகுதான் சுடரைத் திருமணத்திற்குச் சம்மதிக்க வைத்திருந்தாள்.

சுடரின் சம்மதம் ஒரு தீர்க்கமான கட்டளையோடுதான் வந்தது:

"நான் கல்யாணம் பண்ணிக்கிறேன் அக்கா... ஆனா ஒரு கண்டிஷன். எனக்கு அப்புறம் நீ கண்டிப்பா கல்யாணம் பண்ணிக்கணும். அப்படின்னா மட்டும்தான் நான் தாலி கட்டிக்க சம்மதிப்பேன்!"

அந்தக் கணத்தில், தங்கைக்காக எதையும் செய்யும் நகை, "சரி, முதல்ல உனக்கு ஒரு நல்ல வழியைக் காட்டிட்டேன்னா எனக்குப் பாதி பொறுப்பு முடிஞ்சிடும். அதுக்கப்புறம் கண்டிப்பா நான் கல்யாணம் பண்ணிக்கிறேன்" என்று வாக்குறுதி கொடுத்தாள். அந்தப் பொய்யான வாக்குறுதியை நம்பித்தான் சுடர் சம்மதித்தாள்.

வெண்பாவுக்கு இதில் துளியும் விருப்பமில்லை. 'மூத்தவளை வீட்டில் வைத்துக்கொண்டு இளையவளுக்குக் கல்யாணம் செய்வது பாவம் இல்லையா?' என்ற குற்ற உணர்வு அவரை வாட்டியது. ஆனால் நகையின் பிடிவாதத்திற்கு முன்னால் அவரும் மண்டியிட்டார்.

மாப்பிள்ளை ராஜேஷ் நகையின் கண்களை பார்த்து உறுதியாகச் சொன்னான்,

"எங்க குடும்பத்துல நாத்தனார் கொடுமையோ, மருமகள் கொடுமையோ எதுவுமே கிடையாது மேடம். உங்க தங்கச்சி எங்க வீட்ல மகாராணி மாதிரி இருப்பா. அதுக்கு நாங்க பொறுப்பு!"

விசாரித்த வரை மாப்பிள்ளை நல்லவன் என்பதால், ஊரே பேசும்படி அந்தத் திருமணம் கூடியது.

ஊர் சும்மா இருக்குமா?

"வெண்பா... நீ என்ன காரியம் பண்ற? நகை கல்யாண வயசு தாண்டிப் போயிட்டிருக்கா. அவளுக்கு ஒரு வழி பண்ணாம சின்னவளுக்கு பண்றது அடுக்குமா?" என்று அக்கம் பக்கத்தினர் கேட்டபோது, வெண்பா பதில் சொல்ல முடியாமல் தவித்தார்.

ஆனால் அந்தப் பேச்சுகள் எதையும் நகை காதில் வாங்கிக் கொள்ளவில்லை.
 

Author: Vishakini
Article Title: செதுக்கிய சிற்ப பாவையே - 23
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
  • Like
Reactions: Magizh kutty