• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

செதுக்கிய சிற்ப பாவையே - 24

Vishakini

Moderator
Staff member
சிற்ப பாவை - 24

ஒரு தந்தை தன் மகளின் திருமணத்தை எப்படி முன்னின்று நடத்துவாரோ, அப்படியே நகை ஒவ்வொரு வேலையையும் பார்த்துப் பார்த்துச் செய்தாள். சுடரை ஒரு வழியாகக் கரை சேர்த்தாள்.

தாலி கட்டும் அந்த மங்கல ஒலியில், சுடரைப் பெண்ணாகப் பார்த்து நகை கண்கள் குளம் போலத் தேங்கின. ஆனந்தக் கண்ணீரா அல்லது தன் தனிமையின் வலியா என்று தெரியவில்லை.

சுடர் தன் அக்காவையே பார்த்துக் கொண்டிருந்தாள். மனக்கோலத்தில் தன் அக்கா நின்றிருக்க வேண்டிய இடத்தில் தான் நிற்பதை நினைத்து அவள் உள்ளம் குமைந்தது.

'என் அக்கா தந்தை ஸ்தானத்தில் நின்று எனக்குத் தாரைவார்த்துக் கொடுப்பதை நான் எப்படி ஏற்றுக் கொள்வேன்?' என்ற குழப்பத்திலேயே மணமேடையில் அமர்ந்திருந்தாள்.

"சுடர்... என்ன ஆச்சு? ஏன் ஒரு மாதிரி இருக்க?" என்று ராஜேஷ் மெல்லக் கேட்க, அவனது கை விரல்களில் சுடரின் கண்ணீர் துளி விழுந்தது.

ராஜேஷ் பதறிப்போய், "ஏம்மா... உனக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லையா?" என்று கேட்டான்.

"கல்யாணத்துல விருப்பம் இல்லாம இல்லீங்க... உங்களைப் பிடிச்சுதான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன். ஆனா என் அக்கா..." என்று சுடர் சொல்ல முடியாமல் விம்மினாள்.

ராஜேஷ் அவளைப் புரிந்து கொண்டான். "சுடர்... அவங்களை நம்ம அப்படியே விட்டுட மாட்டோம். அவங்களுக்குக் கண்டிப்பா கல்யாணம் நடக்கும். ஆனா ஒன்னு யோசிச்சுப் பாரு... இன்னைக்கு அவங்க நினைக்கிறது உன் அக்காவா இல்ல, உன் அப்பாவா! அவங்களுக்கு முதல்ல கல்யாணம் ஆகி இருந்தா, அவங்க வருமானத்தை உனக்காகவும், கவிகாகவும் செலவு பண்ண முடியுமா? உங்களுக்கு நல்லது கெட்டது பார்க்க முடியுமா? அவங்களால நிம்மதியா வாழத்தான் முடியுமா?"

அவன் தொடர்ந்தான், "உன் அக்கா எல்லாத்தையும் யோசிச்சுதான் இந்த முடிவை எடுத்திருக்காங்க. கவி குட்டியைப் படிக்க வைக்கிறதுல இருந்து இனி எல்லாம் நம்ம பொறுப்பு. உன் அக்காவைச் சம்மதிக்க வைக்க வேண்டியது என் பொறுப்பு. என்னை நம்பு!"

கணவனாகவும், நண்பனாகவும் அன்று ராஜேஷ் நின்ற விதம் சுடரை நெகிழ வைத்தது. அவனது அந்தப் பண்பால் அவள் கவரப்பட்டாள்.

"எல்லாரும் நம்மளையே பார்க்கிறாங்க... கண்ணைத் துடைச்சுக்கோ. ஏதோ நான் உன்னை மிரட்டி கல்யாணம் பண்ணிக்கிட்ட மாதிரி நினைச்சுக்கப் போறாங்க!" என்று ராஜேஷ் கிண்டலாகச் சொல்ல, சுடர் புன்னகையோடு கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள்.

சடங்குகள் முடிந்ததும், சுடர் நேராக வந்து நகையின் காலில் விழுந்து ஆசி பெற்றாள்.

"என்ன சுடர் இது? எழுந்திரு!" என்று சுடரை தூக்கி நிறுத்திய நகை, "நீ எப்பவும் மகாராணி மாதிரி நல்லா இருக்கணும். உன் மனசுக்கு எந்தக் குறையும் வராது" என்று மனதார வாழ்த்தினாள்.

'தனி மரமாக நிற்கிறோமே' என்ற துளிகூட வருத்தம் நகை கண்களில் இல்லை. மாறாக, ஒரு மகளைக் கட்டிக் கொடுத்த தந்தையின் முகத்தில் இருக்கும் அதே நிம்மதி அவள் விழிகளில் மின்னியது.

அந்த தியாகம் நகையை அனைவரின் பார்வையில் உயரத்தில் கொண்டு போய் நிறுத்தியது.

சுடரைச் சந்தோஷமாக மாமியார் வீட்டிற்கு அனுப்பி வைத்துவிட்டு, அம்மாவையும் கவியையும் அழைத்துக் கொண்டு வீடு வந்து சேர்ந்தாள் நகை.

வீடு வந்ததும் வெண்பாவால் பொறுக்க முடியவில்லை. "என்ன இருந்தாலும் எனக்கு வருத்தம் தான் நகை... உன்னை இந்த மணக்கோலத்துல பார்க்கக் குடுத்து வைக்கலையே!" என்று கதறினார்.

அவளிடம் பேசிப் பயமில்லை என்று தெரிந்ததும், வெண்பா தன் கணவரின் புகைப்படத்தின் முன்னால் போய் நின்று தேம்பித் தேம்பி அழுதார்.

"அவ மனசுல என்ன இருக்குன்னு என்னால புரிஞ்சுக்க முடியலையேங்க... இப்படியே எத்தனை நாளைக்கு இருப்பா? நீங்க இருந்த வரைக்கும் நீங்க எங்களுக்குப் பாரமா இருக்கீங்கன்னு நீங்க நினைச்சீங்க. ஆனா இன்னைக்கு... நாங்க அவளுக்குப் பாரமா ஆகிட்டோமோன்னு பயமா இருக்குங்க!"

அந்த அறையில் வெண்பாவின் அழுகுரல் மட்டும் எதிரொலித்துக் கொண்டிருந்தது. நகை எதையும் காட்டிக் கொள்ளாமல், தன் கடமைகளைச் செய்யத் தொடங்கினாள்.

நகை அதை காதில் வாங்கியும் வாங்காதது போல் தன் உணர்ச்சிகளை கட்டுப் படுத்திக் கொண்டாள். கண்கள் கலங்குவதை மறைக்க, குனிந்த வாறே விறுவிறுவென்று வீட்டைச் சுத்தம் செய்யத் தொடங்கினாள்.

கைகள் வேலை செய்தாலும், உள்ளம் ராஜேஷின் வார்த்தைகளில் சிக்கித் தவித்தது.

"எதுக்குத் தேவை இல்லாம இப்படி கவலைப்பட்டுட்டு இருக்கீங்க அம்மா? கவிக்கு ஒரு நல்ல இடத்துல கல்யாணம் முடிஞ்சதும், அப்புறமா நான் என்னைப் பத்தி யோசிச்சு கல்யாணம் பண்ணிக்கிறேன். அதுவரைக்கும் எதைப் பத்தியும் பேசாதீங்க..." நகையின் குரலில் ஒருவிதமான பிடிவாதம் கலந்திருந்தது.

"என்ன பேசிட்டு இருக்க நகை நீ? அறிவு இருக்கா உனக்கு? கவி இப்பதான் காலேஜ் படிப்பையே ஆரம்பிச்சுருக்கா. அவ படிப்பு முடிச்சு, ஒரு வேலைக்கு போய், அப்புறம் கல்யாணம் நடக்கணும்னா இன்னும் எத்தனை வருஷம் ஆகும்னு நினைக்கிற? அதுக்குள்ள உனக்கு வயசாகிடும். கவியைப் பத்தி நீ கவலைப்படாத, அவளை நான் பார்த்துக்கிறேன்!" என்று ஆதங்கப்பட்டார் அவர்.

"என்னால அவளை நல்லா படிக்க வைக்க முடியும்... ஒரு குறையும் இல்லாம அவளை என்னால வளர்க்க முடியும்!" என்று அவர் கெஞ்சாத குறையாகச் சொல்லியும், நகையின் மனம் இளகவில்லை.

"இப்ப ஏன் இதெல்லாம் தேவையில்லாம பேசிக்கிட்டு? நாளைக்கு மறுவீடு விருந்துன்னு எக்கச்சக்கமான சம்பிரதாயம் இருக்கு. அதையெல்லாம் கவனிப்போம். விசேஷ நேரத்துல, வீட்டுக்கு மாப்பிள்ளை வர நேரத்துல இப்படி அழுதுகிட்டு இருந்தா நல்லாவே இருக்காது. அவங்க மனசுக்கும் கஷ்டமா இருக்கும்ல..." என்று பேச்சை லாவகமாக மாற்ற முயன்றாள் நகை.

"ஒரு அம்மாவா நான் ஏன் இதையெல்லாம் பேசறேன்னு உனக்குப் புரியல நகை. நீ இப்போ உன் அப்பா ஸ்தானத்துல நின்னு யோசிக்கிற... அந்தப் பொறுப்பு உன் கண்ணை மறைக்குது. அதனாலதான் என் வலியும் உனக்குத் தெரியல. உன்னைக் கோவமா கூட என்னால பேச முடியலையே..." என்று ஆற்றாமையோடு வேதனையோடு அவர் அப்படியே அந்தப் பழைய கட்டிலில் சரிந்து படுத்துக்கொண்டார்.

"கவி... நீ வாம்மா இங்க. அம்மா அப்படித்தான், காரணம் இல்லாம அழுதுட்டு இருப்பாங்க!" என்று கவியின் கையைப் பிடித்துக் கொண்டு அவசரமாக வெளியே சென்றாள் நகை.

நகை வெளியே சென்ற கொஞ்ச நேரத்தில் . ஆனந்தி உள்ளே வந்து கொண்டிருந்தாள்.

"அண்ணி... அண்ணி..." என்று பழைய பழக்கத்தில் குரல் கொடுத்தாள். அந்தத் திடுக்கிடும் குரல் கேட்டு வெளியே வந்த வெண்பா, அங்கே நின்றிருந்த ஆனந்தியைப் பார்த்ததும் அப்படியே அதிர்ந்து போய் நின்றார்.

"என்ன அண்ணி நீங்க? சுடர் கல்யாணத்துக்கு கூட எங்களுக்கு ஒரு வார்த்தை சொல்லலையே..." என்று அவர் உள்ள குமுறலைக் கொட்ட,

"இப்ப எதுக்கு நீங்க இங்க வந்தீங்க?" என்று வெண்பா வேண்டா வெறுப்பாக முகத்தைத் திருப்பிக் கேட்டார்.

"நீங்களா இப்படிப் பேசுறீங்க அண்ணி?" என்று ஆனந்தி அதிர்ச்சியாகக் கேட்க,

"நகை இப்ப வந்துடப் போறா, நீங்க முதல்ல இங்கிருந்து கிளம்புங்க!" என்று கறாராக வாசலைக் கைகாட்டினாள் வெண்பா.

"அண்ணி, நான் உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேச வந்தேன். நகையோட வாழ்க்கை பத்திதான் பேச வந்தேன்..." என்று ஆனந்தி பீடிகையோடு ஆரம்பிக்க, அதுவரை மழுங்கிக் கிடந்த வெண்பாவின் விழிகள் சட்டென்று கூர்மையாகின.

"என் பொண்ணைப் பத்தி நீங்க என்ன பேசப் போறீங்க?"

"ஏன் அண்ணி இப்படிப் பிரிச்சுப் பேசுறீங்க?"

"நேத்து வரைக்கும் பேசுற அளவுக்கு நமக்குள்ள எந்த உறவும் மிஞ்சல. சொல்ல வந்ததைச் சீக்கிரம் சொல்லிட்டுப் போங்க!"

"அது வந்து... பிரனேஷும் நகையும் ஒரு காலத்துல உயிருக்குயிரா விரும்பினவங்கதான். இன்னைக்குப் பிரனேஷ் வாழ்க்கையும் இப்படிச் சிதறிப் போய் நிக்குது. நகைகக்கும் இன்னும் ஒரு நல்ல மாப்பிள்ளை அமையல. நாம ஏன் இவங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வைக்கக் கூடாது?" என்று தன் மனக்கணக்கைச் சொல்லி முடித்தாள் ஆனந்தி.

வெண்பா அவளை ஒரு ஏளனமான சிரிப்புடன் பார்த்தார். அந்தச் சிரிப்பில் ஆயிரம் அர்த்தங்கள் இருந்தன.

"அன்னைக்கு இதே இடத்துல நின்னுகிட்டுத்தானே என் புருஷனை அசிங்கப்படுத்திட்டுப் போனீங்க? ஞாபகம் இருக்கா உங்களுக்கு? 'என் பொண்ணுக்கு ஒரு குண்டுமணி தங்கம் கூடச் செய்யத் துப்பு இல்லை, பொண்ணை வச்சு மாப்பிள்ளையை வளைக்கப் பார்க்கிறோம்'னு கேவலமா பேசினீங்களே! இன்னைக்கு நீங்களே வந்து என் பொண்ணைக் கேக்குறீங்க? இன்னைக்கு உங்க பையன் என் பொண்ணை வளைக்கப் பார்க்கிறாரா?"

வெண்பாவின் ஒவ்வொரு வார்த்தையும் சவுக்கடி போல ஆனந்தியின் முகத்தில் விழுந்தது. செருப்பால் அடித்தது போலக் கூனிப் போனாள் ஆனந்தி.

"அண்ணி... எங்களை மன்னிச்சிடுங்க. பிரனேஷ் வாழ்க்கையைக் எப்படியாவது காப்பாத்தணும்... எனக்கு வேற வழி தெரியல!" என்று அழத் தொடங்கினாள்.

"உங்க பையனுக்கு வேற ஏதாவது நல்ல பொண்ணா பார்த்து கல்யாணம் பண்ணி வைங்க. இல்லைன்னா அந்த வாசவியையே திருத்தி வாழ வைங்க. ஆனா, இனிமே என் வீட்டுப் படி ஏறி பொண்ணு கேட்டு வராதீங்க. என் நகைக்குக் கல்யாணமே ஆகலனாலும் பரவாயில்லை, அவ கடைசி வரைக்கும் என் கூடவே இருக்கட்டும். ஆனா, பிரனேஷுக்கு மட்டும் அவளைக் கல்யாணம் பண்ணித் தரமாட்டேன். உங்க பண ஆசைக்கும், ஆடம்பர வாழ்க்கைக்கும் என் பொண்ணு செட் ஆகமாட்டாள். தயவுசெஞ்சு கிளம்புங்க!" என்று கையை நீட்டி வழியைக் காட்டினாள்.

ஆனந்தியால் அதற்கு மேல் அங்கே நிற்க முடியவில்லை. வெண்பாவின் கண்ணியமான கோபத்திற்கு முன்னால் அவளால் எதுவும் பேச முடியவில்லை. இவர்கள் பேசியதை எல்லாம் கேட்டுக் கொண்டே நகை கீழிருந்து மேலே வந்தாள்.

"பரவாயில்லை... அம்மா நல்லாத் திருந்திட்டாங்க!" என்று எதார்த்தமாகச் சொன்னவள், ஆனந்தியைத் திரும்பிப் பார்த்தாள்.

"ஒரு காலத்துல உங்க பையனை நான் விரும்பினது உண்மைதான். ஆனா, அப்படி ஒருத்தனை விரும்பினதை நினைச்சு இப்ப நான் ரொம்ப அசிங்கப்படுறேன். இனிமேல் என் வீட்டு வாசப்படியை மிதிக்காதீங்க. மீறி வந்தீங்கன்னா, தனியா இருக்கிற பொம்பளைங்களுக்குத் தொந்தரவு தர்றீங்கன்னு கம்ப்ளைன்ட் கொடுக்க வேண்டியிருக்கும்!" என்று கறாராகச் சொல்ல, ஆனந்தி கண்ணீரோடு அங்கிருந்து வெளியேறினாள்.

காலம் அதன் போக்கில் உருண்டது. சுடரின் திருமண வாழ்க்கை அமைதியாகப் போய்க்கொண்டிருந்தது. புகுந்த வீட்டில் அவளுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. மறுவீடு விருந்து உபசாரங்களை எல்லாம் நகையே முன்னின்று ஒரு குறையும் இல்லாமல் தடபுடலாகச் செய்து முடித்துவிட்டுத் தன் ஊருக்குக் கிளம்பினாள்.

மூன்று மாதங்கள் கடந்த நிலையில், ஒரு நாள் ராஜேஷ் நேரடியாக நகைக்கே போன் செய்தான்.
 
Top Bottom