செதுக்கிய சிற்ப பாவையே - 25

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Vishakini

Moderator
Staff member
Nov 7, 2025
1,634
6,876
113
சிற்ப பாவை - 25

"சொல்லுங்க ராஜேஷ், எல்லாரும் நல்லா இருக்கீங்களா? தங்கச்சி எப்படி இருக்கா?" என்று ஒரு முதிர்ச்சியான குரலில் நகை கேட்டாள்.

"நாங்க எல்லாரும் நல்லா இருக்கோம் மேடம். ஒரு சந்தோஷமான விஷயத்தைச் சொல்லத்தான் போன் பண்ணினேன். முதல் ஆளா உங்ககிட்டச் சொல்லணும்னு தோணுச்சு... உங்க தங்கச்சி கன்சீவா இருக்காங்க!"

அந்தச் செய்தியைக் கேட்டதும் நகையின் கண்கள் சட்டென்று குளம் போல நிறைந்தன. "ரொம்பச் சந்தோஷம் ராஜேஷ். இவ்வளவு பெரிய செய்தியை நான் இப்போ எதிர்பார்க்கல. நீங்க போன் பண்ணவும் ஏதோ பயமா இருந்தது... நான் சீக்கிரம் ஊருக்கு வர்றேன்!"

"நீங்க சந்தோஷமா இருக்கீங்க... ஆனா நாங்களும் அப்படிச் சந்தோஷமா இருக்க வேண்டாமா?" என்று ராஜேஷ் கேட்க, நகை திடுக்கிட்டுப் போனாள்.

"என்னாச்சு ராஜேஷ்? உங்களுக்குள்ள ஏதாவது பிரச்சனையா?"

"எங்களுக்குள்ள எந்தப் பிரச்சனையும் இல்லை மேடம். ஆனா நீங்க இப்படித் தனி மரமா நிக்கிறதை நினைச்சு எங்களால நிம்மதியா வாழ முடியல. இன்னைக்கு ஒரு உயிர் உருவாகியிருக்கு, ஆனா சுடர் முழு மனசோட சந்தோஷப்பட முடியல. அவளே உங்ககிட்டச் சொல்ல வேண்டிய விஷயத்தைச் சொல்ல முடியாம தவிக்கிறா."

"ஏன் அவ இப்படி இருக்கணும்? என்ன காரணம்?"

"நீங்க இப்படித் தனியா நிக்கிறதுதான் காரணம்!" என்ற அவனது வார்த்தையில் நகை மௌனமானாள்.

"உங்களுக்கு அட்வைஸ் பண்ற அளவுக்கு எனக்குத் தகுதி இல்லை மேடம். ஒரு குடும்பத்தை ஒத்தை ஆளா நின்னு தாங்குற உங்களுக்கே தெரியும்... நீங்க இப்ப வாழுற வாழ்க்கை உண்மையாவே சந்தோஷமா இருக்கா? நீங்க பாட்டுக்குச் சம்பாதிக்கணும்னு ஓடிக்கிட்டே இருக்கீங்க. ஆனா, ஓட முடியாத காலத்துல உங்களுக்குத் துணையா உங்க கணவர் மட்டும்தான் இருக்க முடியும். என் மேல உங்களுக்கு நம்பிக்கை இல்லைன்னா, சுடரை நான் உங்க வீட்லயே விட்டுடுறேன். நான் வேணும்னா வீட்டோட மாப்பிள்ளையா வந்து கவியோட முழுப் பொறுப்பையும் ஏத்துக்கிறேன். நீங்க தயவுசெஞ்சு ஒரு கல்யாணம் பண்ணிக்கோங்க!"

"நீங்க ஊருக்கு வரும்போது நாங்க ஜோடியா உங்க முன்னாடி வந்து நிக்கவே கூச்சமா இருக்கு. அதே உங்களுக்கு ஒரு கல்யாணம் ஆகியிருந்தா, நாங்களும் சந்தோஷமா வந்து நிப்போம்ல..." என்று ராஜேஷ் தழுதழுத்த குரலில் பேசினான்.

அழைப்பு துண்டிக்கப்பட்டது. அவளது மனது எவ்வளவு பாரமாக இருக்கும் என்று அவனுக்குத் தெரியும். அவன் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் அவளுக்குள் ஒரு பெரிய போராட்டத்தை உருவாக்கும் என்பதும் அவனுக்குத் தெரியும்.

வாட்ஸ்அப்பில் ஒரு மெசேஜ் அனுப்பினான்: 'சாரி மேடம், உங்களைக் காயப்படுத்தணும்னு பேசல. என் மனசுல பட்டதைச் சொன்னேன். நீங்களும் சந்தோஷமா இருக்கணும். இந்த குடும்பத்தோட உயிர்நாடி நீங்கதான். நீங்க மாறினாத்தான் இந்த குடும்பம் முழுசாச் சந்தோஷப்படும். தப்பா இருந்தா மன்னிச்சிடுங்க!' ராஜேஷ் தன் மனைவியைத் தேடிச் சென்று அணைத்துக்கொண்டான்.

"நான் பேசிட்டேன் சுடர். அவங்க கண்டிப்பா ஒரு நல்ல பதில் சொல்லுவாங்க. உங்க அக்காவுக்குக் கல்யாணம் பண்ணிக்க வேணாம்னு எந்த எண்ணமும் இல்லை. கண்டிப்பா ஒத்துப்பாங்க!"

"நீங்க சொல்றது நடக்குமா?" என்று சுடர் ஏக்கமாகக் கேட்க,

"நடத்தியே ஆகணும்!" என்று தனக்குள்ளே உறுதி பூண்டான் ராஜேஷ்.

நகை தனியாக அந்த மைதானத்தில் வந்து அமர்ந்தாள். நிலவின் வெளிச்சத்தில் அவளது கண்ணீர் வைரக்கற்கள் போலக் கீழே விழுந்தன. போன் திரையில் மின்னிக் கொண்டிருந்த தன் தந்தையின் புகைப்படத்தைப் பார்த்தாள்.

"எனக்குக் கல்யாணம் பண்ணிக்கக் கூடாதுன்னு எந்த விருப்பமும் இல்லைப்பா. ஆனா நான் கல்யாணம் பண்ணிட்டுப் போயிட்டா, அம்மாவோட நிலைமை என்ன ஆகும்? கவியோட எதிர்காலம் என்ன ஆகும்?"

"எல்லாவற்றையும் விட, என்னைக் கல்யாணம் பண்ணிக்கிறவன் எனக்கு உண்மையா இருப்பானா? வருஷம் முழுக்க நான் வேலையில இருக்கணும், வருஷத்துல முப்பது நாள் லீவுக்குத் தானே வீட்டுக்கு வர முடியும்? அந்த நேரத்துல தன்னோட சுகத்தையும் சந்தோஷத்தையும் தியாகம் பண்ணிட்டு எனக்காக அவன் காத்திருப்பானா? நாளைக்கு எங்களுக்கு ஒரு குழந்தை பிறந்தா, அதை அவனால தனியா வளர்க்க முடியுமா? அதுக்கு அவன் தயாராக இருப்பானா?"

காற்றின் சத்தத்தைத் தவிர, நகையின் கேள்விகளுக்குப் பதிலாக அங்கே மௌனம் மட்டுமே மிஞ்சியிருந்தது.

ஒருவேளை அவன் என்கிட்ட சும்மா நடிச்சிட்டு, கடைசியில எனக்குப் பெரிய துரோகத்தைப் பண்ணிட்டா நான் என்ன பண்றது? மறுபடியும் ஏமாந்து போய் நடுத்தெருவுலயா நிக்கிறது?"

தன் முன்னே புகைப்படத்தில் உறைந்து போயிருந்த தந்தையின் சிரித்த முகத்தைப் பார்த்துக் குமுறினாள் நகை.

அவளது கண்கள் கண்ணீரால் நிறைந்திருக்க, "கல்யாணம் ஆனதுக்கு அப்புறம் என் அம்மாவையோ, கூடப் பிறந்த தங்கச்சிகளையோ பார்க்க கூடாதுன்னு ஒரு வார்த்தை அவன் சொல்லிட்டா, என் கல்யாண வாழ்க்கையும் போயிடும், எனக்குன்னு இருந்த தாய் வீடும் போயிடுமே! அப்புறம் நிம்மதியே இல்லாம அனாதையா நிக்கணுமே..." என்று தன் அடிமனதில் இத்தனை காலமாய் அழுத்தி வைத்திருந்த பாரங்களை, கண்ணீராக வடித்துக் கொண்டிருந்தாள்.

அவளது பயம் வெறும் கற்பனையல்ல; அது இன்றைய காலத்தின் கசப்பான உண்மை. அவள் தேம்பி அழுது கொண்டிருப்பதை தூரத்திலிருந்து கவனித்துக் கொண்டிருந்த தோழி, மெல்ல அவளருகே வந்தாள்.

"ஹாய் நகை... என்னாச்சு? ஏன் இப்படி அழுதுட்டு இருக்க?"

நகை திடுக்கிட்டுப் போய், அவசரம் அவசரமாகத் தன் கன்னத்தில் வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள்.

"ஒன்னும் இல்லையே..." என்று பொய் சொல்லித் தலையைத் திருப்பிக் கொண்டாள்.

இருவருமே தமிழ்நாட்டை விட்டுவிட்டு இந்த அந்நிய மண்ணில் வேலைக்காக வந்திருப்பவர்கள். அந்தத் தனிமைதான் அவர்களை மிக நெருக்கமான நண்பர்களாக்கி இருந்தது.

"என்னதான் நீ வெளியில சிரிச்சிட்டுத் திரிஞ்சாலும், உனக்குள்ள ஏதோ ஒரு பெரிய கஷ்டம் புதைஞ்சு கிடக்கு நகை. அது எனக்கு நல்லாவே தெரியும். நான் உன்னை என்னோட உண்மையான பிரண்டாத்தான் நினைக்கிறேன். நீயும் என்னை அப்படி நினைச்சா என்கிட்ட எல்லாத்தையும் கொட்டு. இப்படி மனசுக்குள்ளயே வச்சு அழுதுட்டு இருந்தா, உன்னால வேலையில எதிலுமே கான்சன்ட்ரேட் பண்ண முடியாது" என்று தோழி ஆறுதலாகத் தோள் தொட்டாள்.

யாரிடமும் சொல்ல முடியாத அந்தத் தனிமைத் துயரத்தை, ஒரு சக மனுஷியிடம் பகிர்ந்து கொள்வதில் தவறில்லை என்று நகைக்கும் தோன்றியது.

"எங்க வீட்ல எனக்குக் கல்யாணம் பண்ணிக்கச் சொல்லி வற்புறுத்துறாங்க..."

"அது நல்ல விஷயம் தானே? சந்தோஷமாப் பண்ணிக்க வேண்டியதுதானே? எத்தனை நாளைக்குத்தான் இப்படியே தனியா இருக்கப் போற?"

"கல்யாணம் பண்ணிக்கலாம் தான்... ஆனா அதுக்குத் தகுந்த மாதிரி ஒரு மனசுக்காரன் வேணுமே! பொண்ணு கேட்டு வர்றவங்க எல்லாம், கூடவே என் தங்கச்சியையும் சேர்த்துப் பெண் கேக்குறாங்க... இல்லன்னா, நல்ல உத்தியோகத்துல இருக்கிற என்னைத் வேலையை விட்டுட்டு வரச் சொல்றாங்க. இதுல எதை நான் ஏத்துக்கிறது?"

அவளது தோழி அமைதியாகச் சிரித்தாள். "நகை, எனக்குக் கல்யாணம் ஆகி இப்போ ரெண்டு குழந்தைங்க இருக்காங்க. ஆனா என் வாழ்க்கையில எந்தக் குறையும் இல்லை. உன்னோட இந்தத் தவிப்பும் பயமும் எனக்குப் புரியுது.

நானும் கல்யாணத்துக்கு முன்னாடி இதே மாதிரிதான் நடுங்கிட்டு இருந்தேன். நாம இவ்வளவு தூரம் வந்து கஷ்டப்பட்டு வேலை செய்யறோம், நமக்கு வரப்போற வாழ்க்கைத்துணை இந்த இடைவெளியில நமக்கு உண்மையா இருப்பாரான்னு யோசிச்சிருக்கேன். அந்தப் பயம் ஒரு பொண்ணா நமக்கு இயல்பா வர்றதுதான். ஆனா கடவுள் புண்ணியத்துல எனக்கு ரொம்ப நல்ல ஹஸ்பண்ட் கிடைச்சுட்டாரு."

"கல்யாணம் ஆகி நான்கு5 வருஷம் ஆகுது. எனக்கு ரெட்டைப் பசங்க... இப்போ ஒரு வயசு ஆகுது. குழந்தைகளை அவரும் அவர் குடும்பமும்தான் கண்ணும் கருத்துமா வளர்க்கிறாங்க. அவர் என் மேல ரொம்ப அன்பா இருப்பாரு. எந்தத் துரோகமும் பண்ணல. அவருக்கு நேரம் கிடைக்கும்போது குழந்தைகளைத் தூக்கிக்கிட்டு இங்கயே வந்துடுவாரு. இங்க இருக்கிற பேமிலி குவார்ட்டர்ஸ்ல அவர் வேலை தொடங்குற மவரைக்கும் நாங்க ஒண்ணா இருப்போம். வாழ்க்கை ரொம்ப சந்தோஷமாப் போயிட்டு இருக்கு. என் வீட்டுக்காரர் அதிகமாப் படிக்கல தான்... பெரிய உத்தியோகத்துலேயும் இல்லை... அவர் விவசாயம் தான் பார்க்கிறார். ஆனா அவர் மனசுக்கு எந்தக் குறையும் இல்லாம எங்களை நல்லா வச்சுக்கிறாரு."

தோழி சொன்னதைக் கேட்டதும் நகையின் கண்களில் ஒருவித நம்பிக்கை பிறந்தது. பயத்தில் உறைந்திருந்த அவள் முகத்தில் ஒரு தெளிவு தெரிந்தது.

"எல்லாத்தையும் நூறு சதவீதம் உறுதியாச் சொல்ல முடியாது நகை. ஆனா உனக்கு நம்பிக்கையான ஆளா யாராவது தெரிஞ்சா, அவங்களையே கல்யாணம் பண்ணிக்கோ. ஆடம்பரத்தை விரும்புறவங்க பின்னாடியும், பொய் பித்தலாட்டம் பண்றவங்க பின்னாடியும் போய் உன் வாழ்க்கையைப் பணயம் வைக்காதே. நீ ஏன் இவ்வளவு தூரம் வந்து இங்க நிக்கிறேன்னு எனக்குத் தெரியும்."

"உன் அப்பாவுக்காகத்தான் நீ இங்க வந்திருக்க. அவரோட ஆசையை நீ நிறைவேத்துற. உன் அப்பா உனக்குத் துணையா இருப்பாரு. உன்னைச் சந்தோஷமா வச்சுக்கிற மாதிரி ஒரு லைஃப் பார்ட்னர் உனக்குக் கண்டிப்பா கிடைப்பார். எனக்கு அந்த நம்பிக்கை இருக்கு நகை" என்று தோழி சொல்ல, நகையின் மனதிலிருந்த பயங்கள் மெல்ல ஓரம் தள்ளப்பட்டன.

இருந்தாலும், உடனடியாகத் தாயிடம் பேசுவதற்கு அவளுக்குத் துணிவு வரவில்லை. இரண்டு வாரங்கள் அப்படியே ஓடின. தங்கைகளிடம் மட்டும் போனில் பேசிக் கொண்டிருந்தாள்.

மௌனக் காதலும்... தாயின் தவிப்பும்
அங்கே ஊரில்,

பரமனின் வீட்டில் கண்ணகி தன் மகனின் கட்டிலைச் சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது தற்செயலாகத் தலையணைக்கு அடியில் இருந்த ஒரு புகைப்படத்தைக் கண்டு அவர் கைகள் நடுங்கின.

அது நகையின் புகைப்படம். கல்லூரிக் காலத்தில் தலை நிறையப் பூ வைத்துக்கொண்டு, அந்தப் பழைய பஸ் ஸ்டாண்டில் சிரித்த முகமாகப் பேருந்துக்காகக் காத்திருந்த போது எடுக்கப்பட்ட புகைப்படம்.

அப்போதுதான் காலை உணவைச் சாப்பிடுவதற்காக வீட்டுக்குள் நுழைந்தான் பரமன். தன் தாயின் கையில் இருக்கும் நகையின் புகைப்படத்தைக் கண்டதும் அவன் உடல் ஒரு நிமிடம் சில்லிட்டுப் போனது.

"பரமா... என்னடா இது?" அதிர்ச்சி விலகாத குரலில் கேட்டார் கண்ணகி.

"அம்மா... அது என்கிட்ட குடுங்க" என்று சாதாரணமாக வாங்கிக் கொண்டவன், அதை ஒரு புத்தகத்துக்குள் பத்திரமாக மறைத்து வைத்தான்.

"பசிக்குதுமா... ஏதாவது சமைச்சீங்களா?" என்று பேச்சை மாற்றப் பார்த்தான்.

மகன் பசி என்றதும் தன் அதிர்ச்சியைச் சட்டென அடக்கிக் கொண்ட அந்தத் தாய், கையில் இருந்த துடைப்பத்தை ஓரமாகப் போட்டுவிட்டு, கை கால்களைக் கழுவி விட்டுச் சமையலறைக்குள் ஓடினார்.
 

Author: Vishakini
Article Title: செதுக்கிய சிற்ப பாவையே - 25
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
  • Like
Reactions: Magizh kutty

Gowri Karthikeyan

Well-known member
May 5, 2026
1,290
384
83
Chennai
இதை எதிர்பார்த்தேன்.....பரமன் இப்படி தான் செய்வான்னு