• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

செதுக்கிய சிற்ப பாவையே - 27

Vishakini

Moderator
Staff member
சிற்ப பாவை - 27


"மாப்பிள்ளையோட அம்மா உன்கிட்ட பேசணுமாம், பேசு" என்று கண்ணகியிடம் போனை ஒப்படைத்தார் வெண்பா.

கண்ணகி மிகுந்த ஆசையோடும் எதிர்பார்ப்போடும், "நகை நல்லா இருக்கியா?" எனக் கேட்க, எதிர்முனையில் யார் என்று தெரியாத குழப்பத்தோடு அவளும்

"நல்லா இருக்கேன், நீங்க நல்லா இருக்கீங்களா?" என்று சம்பிரதாயமாகப் பேசினாள்.

"நான் யாருன்னு தெரியுதா உனக்கு? நான் உனக்கு ஒரு வகையில தெரிஞ்சவங்கதான். நான் பரந்தாமனோட அம்மா கண்ணகி பேசுறேன்மா. என் பையனை உனக்கு எப்படிச் சொல்லி புரிய வைக்கிறது... என் பையன் பரமு, அந்த மெக்கானிக் ஷெட்..." என்று அவர் முழுமையாகக் கூறி முடிக்கும் முன்னரே, நகை குறுக்கிட்டாள்.

"எனக்கு நல்லாவே தெரியும் அத்தை! அவரைப் பத்தியும் தெரியும், உங்களைப் பத்தியும் எனக்கு நல்லாவே தெரியும்" என்றதும் அங்கிருந்த இருவருக்குமே ஆனந்த அதிர்ச்சி ஏற்பட்டது. அவர்கள் போனை ஸ்பீக்கரில் போட்டுத்தான் பேசிக் கொண்டிருந்தனர்.

"நகை, நீ உண்மையாவே என்னை அத்தைன்னு ஏத்துக்கிட்டியா? என் பையனை கல்யாணம் பண்ணிக்க உனக்குச் சம்மதமா?"

"எனக்குச் சம்மதம்தான் அத்தை, ஆனா அவருக்குச் சம்மதமா?"

"அது அவனையே சொல்லச் சொல்றேன். இப்பவே வீட்டுக்குப் போய் உன் கிட்ட பேசச் சொல்றேன். ரொம்ப சந்தோஷம் நகை. உனக்கு லீவு எப்பன்னு மட்டும் கேட்டுச் சொல்லு, நாங்க எல்லா ஏற்பாட்டையும் பண்ணிடுறோம்."

"இன்னைக்கு ஆபீஸ்ல போய்ப் பேசிட்டு நான் அம்மாகிட்ட சொல்றேன்."

"சரிம்மா, சாப்பிட்டியா?"

"சாப்டாச்சு அத்தை. எனக்கு டியூட்டிக்கு டைம் ஆகுது, நான் அப்புறமா பேசவா?"

"சரிடா நீ கிளம்பு. டியூட்டி பாரு, நம்ம பொறுமையா பேசிக்கலாம். நீ டியூட்டிக்குக் கிளம்பிட்டு இருக்கறது தெரியாமலேயே நாங்க உன்னைத் தொந்தரவு பண்ணிட்டோம்."

"என்ன அத்தை, இதெல்லாம் பெரிய வார்த்தையா? எனக்கு எந்தத் தொந்தரவும் இல்லை. டியூட்டிக்கு நடந்து போய்க்கிட்டே தான் பேசிட்டு இருக்கேன். சரி, நான் டியூட்டி பிளேஸ்க்கு வந்துட்டேன், வைக்கிறேன் அத்தை" என்று கூறி அழைப்பைத் துண்டித்தாள்.

வெண்பா கண்களில் வழியும் ஆனந்தக் கண்ணீருடன் கண்ணகியை அப்படியே கட்டிக்கொண்டார்.

"கல்யாணமே வேண்டாம்னு சொன்ன பொண்ணு இன்னைக்குக் கல்யாணத்துக்குத் தயாராகிட்டா. எல்லாம் மாப்பிள்ளையோட ராசிதான் அண்ணி. எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. என் பொண்ணோட கவலை என்னைக் கொன்னுட்டு இருந்தது, இனிமேல் எனக்கு என்ன கவலை? கல்யாண வேலையை நம்ம சீக்கிரம் ஆரம்பிச்சுடலாம்."

"ஆமா வெண்பா, எனக்கும் ஒரு மிகப்பெரிய பாரம் குறைஞ்சு போச்சு. நான் இந்தச் சந்தோஷமான விஷயத்தை முதல்ல என் பையன்கிட்ட சொல்லணும். அவனைப் போன் பண்ணி நகைக்கிட்ட பேசச் சொல்றேன்" என்றார் கண்ணகி.

இரு தாய்மார்களுக்கும் சந்தோஷத்தில் கால் தரையில் படவில்லை. அவர்கள் மனமோ சிறகில்லாத பறவையாய் வானில் சிறகடித்தது. நூறு வண்ணத்துப்பூச்சிகளுக்கு நடுவே இதயம் சுற்றுவது போன்ற ஓர் உணர்வு இருவருக்கும் ஏற்பட்டது. அவ்வளவு சந்தோஷம் இருவருக்கும்.

நகை, சீருடை அணிந்து ஷூ தடம் தடதடக்கத் தனது டியூட்டி ஸ்பாட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தாள். நீண்ட மாதங்களுக்குப் பிறகு அவள் முகத்திலும் உதட்டிலும் ஒரு மெல்லிய புன்னகை உயிர்ப்புடன் வலம் வந்தது. பரந்தாமன் தான் மாப்பிள்ளை என்ற விவரம் தெரிந்த பிறகு அவள் மனதில் எந்தப் பயமும் நெருடலும் ஒரு துளி கூட உண்டாகவில்லை. இதற்காக அவனை அவள் காதலித்தாள் என்றெல்லாம் அவளால் உடனே ஒப்புக்கொள்ள முடியவில்லை என்றாலும், அவன் மீது அவளுக்கு எப்போதும் ஒரு தனி மதிப்பு இருந்தது.

அவள் நேரில் கண்ட அவனது நல்ல குணங்கள், பிரதிபலன் பாராத உதவி செய்யும் மனப்பான்மை, யாரிடமும் முகம் நிமிர்ந்து கூடப் பேசாத கண்ணியம், அப்படியே பேசினாலும் கண்களைத் தவிர வேறு எங்கும் பார்க்காத அவனது நேர்மையான பார்வை... இவை அனைத்தும் அவளுக்குப் பிடித்திருந்தது.

அவன் ஒரு சிறந்த உழைப்பாளி; தனி ஒரு மனிதனாக தன் மொத்த குடும்பத்தையும் தாங்கி, இன்று ஒரு கௌரவமான இடத்தில் வாழ வைத்திருப்பவன். தன் தாயையும் தங்கைகளையும் மிகுந்த மரியாதையுடன் நடத்துபவன். அப்படிப்பட்டவன் தன்னையும் தன் குடும்பத்தையும் நிச்சயமாக நன்றாகப் பார்த்துக் கொள்வான் என்கிற அசைக்க முடியாத நம்பிக்கை அவளுக்குள் 200 சதவீதம் உண்டானது.

'என் வருமானத்தைச் சூறையாட நினைக்க மாட்டான்; தனிமையை அவன் ஒருபோதும் தவறாகப் பயன்படுத்த மாட்டான்' என்று அவன் மீது அவளுக்கு முழு நம்பிக்கை உண்டானது. ஆனாலும் அவனிடம் சில விஷயங்களைப் பேசித் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும் என்று அவள் முடிவு செய்தாள். 'டியூட்டி முடியட்டும், அம்மாக்கிட்ட பேசி அவர் நம்பர் வாங்கி நானே அவர்கிட்ட சில விஷயங்கள் பேசணும்' என்று யோசித்தபடியே தன் பணியைத் தொடர்ந்தாள்.

கண்ணகி வேகவேகமாகத் சிறுமியை போலச் சாலை என்று கூட பாராமல் ஓடி வந்தார். "பரமு வீட்ல இருக்கானா இல்லையான்னு தெரியலையே! ஆட்டோவுல ஏதாவது சவாரி போயிருந்தா போன் பண்ணா கூட எடுக்க மாட்டானே. இந்தச் சந்தோஷமான விஷயத்தை அவன்கிட்ட சொல்லியே ஆகணும், இல்லன்னா என் தலை வெடிச்சிடும்" என்று பதற்றத்துடன் வீட்டிற்குள் ஓடி வந்தார். மகன் அங்கு இல்லை.

'ஒருவேளை மெக்கானிக் ஷெட்டில் இருப்பானோ' என்று அங்கு சென்று பார்த்தார்.

நல்ல வேளையாக அவன் அங்கேயே அமர்ந்து ஒரு காரை சரி பார்த்துக் கொண்டிருந்தான்.

"பரமு!" அந்த ஒற்றை அழைப்பில் அத்தனை பரவசம். துள்ளிக்குதித்து, சந்தோஷத்தில் உடல் சிலிர்க்க, ஓடி வந்த தன் தாயை அவன் அதிசயத்தோடு பார்த்தான். அந்த வயதான முகத்தில் இத்தனை காலமும் இல்லாத ஒரு புது வெளிச்சம்.

அவர் முகத்தில் வழிந்த அந்தப் பேரானந்தத்தைக் கண்டதும், காரணமே தெரியாமல் இவன் உதடுகளிலும் ஒரு மெல்லிய புன்னகை அரும்பியது. தாயின் மகிழ்ச்சி மகனைத் தொற்றிக்கொண்டது.

"அம்மா... கொஞ்சம் பொறுமையா வாங்க. எதுக்கு இப்படி மூச்சு வாங்க ஓடி வர்றீங்க? அப்படி என்ன அவசரம்?" என்று அவன் பதற்றத்தோடு கேட்டான்.

"எல்லாம் ரொம்ப அவசரமான விஷயம் தான்டா! என்னால எப்படிப் பொறுமையா வர முடியும்?" என்று மூச்சிரைக்க சொன்னவர், வாஞ்சையோடு மகனின் கன்னத்தைப் பிடித்துக் கிள்ளினார்.

"நீ மனசுக்குள்ள ஆசைப்பட்டியே... அந்த வரம் உனக்குக் கிடைச்சிருச்சு பரமா!" என்றார் கண்கள் மின்ன.

"என்னம்மா சொல்றீங்க? நான் என்ன ஆசைப்பட்டேன்? எனக்கு என்ன கிடைச்சிருச்சு?" தனக்குள் இருக்கும் ரகசியக் காதல் யாருக்கும் தெரியாது என்ற எண்ணத்தில், ஆர்வம் இல்லாதவன் போலக் கேட்டான் அவன். ஆனால் உள்ளுக்குள் இதயம் படபடக்கத் தொடங்கியது.

"உனக்கும் நகைக்கும் கூடிய சீக்கிரம் கல்யாணம் நடக்கப்போகுதுடா!" மகனின் முகத்தையே பார்த்தபடி, ஒரு தூது தேவதையைப் போல் கண்ணகி அந்தச் செய்தியைச் சொன்னார்.

அடுத்த நொடி, காலம் அப்படியே உறைந்து போனது போலிருந்தது பரமுவுக்கு. அவன் கையில் பிடித்து வேலை பார்த்துக் கொண்டிருந்த அந்த 'ஸ்குரூ ஸ்பேனர்' பிடி நழுவிக் கீழே விழுந்தது.

'டங்' என்ற அந்தச் சத்தம் அவன் காதுகளில் இடியாக ஒலித்தது. முகம் முழுவதும் சட்டென வெளிறிப்போனது; உடலில் ஓடும் ரத்தம் ஒரு நிமிடம் உறைந்து போனது போன்ற உணர்வு.

"அம்மா... விளையாடாதீங்கம்மா!" - வார்த்தைகள் வராமல் தடுமாறினான். இது கனவா இல்லை நனவா என்கிற தவிப்பில் அவன் கண்கள் நிலை குத்தின.

"எனக்கு இப்பதான் 18 வயசு ஆகுது, உன் கூட ஓடிப் பிடிச்சு விளையாடப் போறேன் ஆசையைப் பாரு!" எனச் செல்லமாக நொடித்துக் கொண்டவர்,
சட்டெனக் கண்கள் கசியத் தொடங்கினார்.

"காலம் முழுக்க இந்தக் குடும்பத்துக்காகவே மெழுகுவர்த்தியா கரைஞ்சு வாழ்ந்த பரமு... இனியாவது நீ உனக்காக வாழணும்டா. நீ ஆசைப்பட்டது கிடைக்கணும்னு தான் நான் போய் வெண்பா கிட்ட கேட்டேன். அவங்க ரொம்ப பெரிய இடத்து மனுஷங்க, என்ன சொல்வாங்கன்னு பயத்தோடுதான் போனேன்.

ஆனா நான் நினைச்சதுக்கு நேர்மாறானவங்கடா அவங்க! நான் கேட்ட உடனே அத்தனை பெருந்தன்மையா வெண்பா ஒத்துக்கிட்டா. அதுமட்டும் இல்லாம, நகை கிட்டயும் பேச வச்சுட்டா. நகையும் அவளுடைய சம்மதத்தை நேரடியாக என்கிட்டயே சொல்லிட்டா. இப்ப அவங்க வீட்ல எல்லாருக்கும் சம்மதம். ஆனா, நகை உன்கிட்ட ஒரு முறை பேசணும்னு சொன்னா... அவ நம்பர் என்கிட்ட இருக்கு, நீ பேசுடா," என்றார்.

தன் கையில் கொடுக்கப்பட்ட அந்தத் துண்டுச் சீட்டை நம்ப முடியாமல் பார்த்துக் கொண்டிருந்தான் பரமு. அவன் விழிகளில் கண்ணீர் முத்துக்கள் திரண்டு நின்றன. நெஞ்சுக்குள் இத்தனை வருடம் பூட்டி வைத்திருந்த காதல், இன்று அங்கீகாரத்தோடு வெளியே வரத் துடித்தது.

'உண்மையாவே என்னுடைய நகை என்னை கல்யாணம் பண்ணிக்க சம்மதிச்சுட்டாளா? இந்த ஏழைப் பரந்தாமன் தான் மாப்பிள்ளைன்னு தெரிஞ்சே சம்மதிச்சுட்டாளா?' அவனால் நம்பவும் முடியவில்லை, நம்பாமல் இருக்கவும் முடியவில்லை. சந்தோஷத்திற்கும் சந்தேகத்திற்கும் இடையில் மாட்டிக்கொண்டு அவன் இதயம் சின்னாபின்னமானது.

அவள் ஏழாவது படிக்கும் காலத்திலிருந்தே அவளைத் தன் உயிராக காதலித்துக் கொண்டிருக்கிறான் அவன். ஆனால், படிப்பு இல்லாதவன், வசதி இல்லாதவன் எனத் தன்னைத் தானே தாழ்த்திக் கொண்டு,

"தன் காதலைச் சொல்லக்கூடா தகுதியில்லாதவன்" என்று இந்த நிமிடம் வரை ஊமையாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறான்.

அவள் பிரனேஷ் மீது ஒரு காலத்தில் கொண்டிருந்த ஈர்ப்பும் ஆசையும் அவனுக்குத் தெரியும். அந்த வலி அவன் நெஞ்சை ஒரு பக்கம் கசக்கிப் பிழிந்தது.

கண்களிலிருந்து கண்ணீர் வழிந்து கன்னத்தில் இறங்கியது. ஆனாலும் ஒரு பயம்... 'ஒருவேளை பெரியவர்கள் வற்புறுத்தலுக்காகச் சம்மதித்திருப்பாளோ? அவளுடைய உண்மையான விருப்பம் என்ன?' என்பதைப் பேசித் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும் என்று நினைத்தான்.

தன் போனில் அவள் எண்ணை அழுத்தும்போது அவனுக்கு விரல்கள் நடுங்கின. உடல் நடுங்கியது. அவள் எண் ஏற்கனவே அவனிடம் இருந்ததுதான். இருந்தாலும், அது தானா என்று மீண்டும் ஒருமுறை சரி பார்த்துக் கொண்டான்.

'பரமனின் நகை' என்று அவன் ரகசியமாக சேமித்து வைத்திருந்த அந்த எண்களை பார்த்தபடி நின்றவனுக்கு, பயமும் பதற்றமும் ஒன்று சேர்ந்து கொண்டு உயிரை வாட்டியது.

தன் பதற்றத்தைக் கஷ்டப்பட்டுத் ஓரம் கட்டி, வாட்ஸ்அப் ஓப்பன் செய்து அவளுக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பினான்.

"நகை, நான் பரந்தாமன். உங்க கிட்ட கொஞ்சம் பேசணும். நீங்க ஃப்ரீயா இருக்கும்போது சொல்லுங்க, நானே கால் பண்றேன்."

பலமுறை டைப் செய்து, பின் அழித்து, மீண்டும் டைப் செய்து... எப்படியோ இந்த நான்கு வரிகளை அவளுக்கு அனுப்பி விட்டான்.

ரத்தப் பரிசோதனை முடிவுக்காக மருத்துவமனை வாசலில் மரண பயத்தோடு காத்திருக்கும் நோயாளி போல ஆகிவிட்டான் அவன். ஒவ்வொரு விநாடியும் ஒரு யுகமாக நகர, இரண்டு நிமிடங்களில் நூறு முறை அந்த போனை ஆன் செய்து ஆப் செய்து பார்த்துக் கொண்டே இருந்தான்.
 
Top Bottom