செதுக்கிய சிற்ப பாவையே - 29

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Vishakini

Moderator
Staff member
Nov 7, 2025
1,634
6,876
113
சிற்ப பாவை - 29

"ஏன் மாப்பிள்ளை, இதற்கெல்லாம் போய் இவ்வளவு செலவு பண்ணிக்கிட்டு?" என்று வெண்பா கேட்க,

"இதெல்லாம் ஒரு செலவா அத்தை? பிள்ளைக்குப் பிடிச்சதை வாங்கிட்டு வந்திருக்கேன். போன வாரம் வெளியூர் போனப்போ இதெல்லாம் கண்ணுல பட்டுச்சு. சுடர் அடிக்கடி சொல்லுவா... 'அப்பா இருக்கும்போதெல்லாம் இதெல்லாம் சுடருக்கு வாங்கித் தருவாங்க'ன்னு. அந்த ஏக்கத்தை நான் தீர்க்க வேண்டாமா? அதான் வாங்கிட்டு வந்தேன். கவி, உனக்கு இதெல்லாம் பிடிச்சிருக்கா?" என்றான் பாசத்துடன்.

"ரொம்ப ரொம்பப் பிடிச்சிருக்கு மாமா!" என்று கத்தினாள் கவி.

அந்த டிராலியில் லென்ஸ், பார்பி டால் பொம்மைகள், கலர் பென்சில்கள், கிரையான்ஸ் , குட்டி குட்டி பொம்மைகள் என அனைத்தும் அவளுக்குப் பிடித்ததாகவே இருந்தன.

அவள் ஆசையாக அனைத்தையும் கீழே கொட்டி விளையாடத் தொடங்க, சுடரின் கணவரும் அவளோடு தரையில் அமர்ந்து குழந்தையாக மாறி விளையாடத் தொடங்கினார்.

"உன்னைப் பார்க்கிறதுக்காக நாளைக்கு உங்க வீட்டுக்கு வரலாம்னு தான் இருந்தோம். அதுக்குள்ள நீங்களே வந்துட்டீங்க," என்று அவன் சொல்ல,

"நீங்க நினைச்சது எங்க மனசுக்குக் கேட்டுச்சு, அதான் நாங்களே வந்துட்டோம்," என்று கவியும் அவர்களோடு சகஜமாகப் பேசத் தொடங்கினாள். இதைப் பார்த்துக் கொண்டிருந்த அனைவர் மனதிலும் ஒரு நிம்மதிப் பெருமூச்சு எழுந்தது.

"அண்ணி, உங்க முகத்துல ஏதோ ஒரு புதுத் தெளிவும் தேஜஸும் தெரியுது... ஏதோ ஒரு சந்தோஷமான விஷயம் இருக்கு போலிருக்கே?" என்று சம்மந்தி கேட்க, வெண்பா மலர்ச்சியுடன் பேசினார்.

"ஆமா சம்மந்தி, இத்தனை நாள் மனசுல இருந்த வலிக்கு இன்னைக்குத் தான் ஒரு மருந்தும் ஆறுதலும் கிடைச்சிருக்கு. நகை கல்யாணத்துக்கு ஒரு வழியா சம்மதிச்சுட்டா... மாப்பிள்ளையும் முடிவு பண்ணியாச்சு!"

அனைவரும் ஒரு நிமிடம் பேச்சற்றுப் போய் வெண்பாவையே பார்த்தனர்.

"அம்மா! என்ன சொல்ற? மாப்பிள்ளையை எப்ப பார்த்த? யாரு அது?" என்று சுடர் ஆச்சரியத்துடன் கேட்க,

"நம்ம பரந்தாமன் தான்... அந்த மெக்கானிக் ஷெட்டில் இருக்காரே, அவர்தான்!" என்றார் வெண்பா.

"ஆமா... நமக்கு எந்த ஆபத்துன்னாலும் முன்னாடி வந்து நிக்கிறவர் அவர்தான். ரொம்பத் தங்கமான மனுஷன். கண்டிப்பா அவர் அக்காவை உள்ளங்கையில வச்சுப் பார்த்துப்பார்," என்று சுடரும் நம்பிக்கையுடன் சொன்னாள்.

"என்னங்க, உங்களுக்கும் அவரைத் தெரியுமே?" என்று சுடர் தன் கணவனைப் பார்த்துக் கேட்க,

"தெரியுமே! ரொம்ப நல்ல மனுஷன். நானே பலமுறை அவரைப் பத்தி உங்ககிட்ட பேசணும்னு நினைச்சிருக்கேன். ஆனா, நீங்க அவரை ஏத்துப்பீங்களா ன்னு தெரியாமத்தான் தயங்குனேன். நிஜமாவே அவர் ஒரு நல்ல மனிதர், நகையை அவர் கண்ணு மாதிரிப் பார்த்துப்பார்," என்றான் அவன் உறுதியாக.

வெண்பாவிற்கு இப்போதுதான் அந்தப் பெரிய மனக்குறை முழுமையாகத் தீர்ந்தது.

"நாமளே ஒரு முடிவை எடுத்துட்டோமே, மத்தவங்க என்ன நினைப்பாங்களோ" என்று அவர் தயங்கியதற்கு, இப்போது குடும்பமே சந்தோஷமாக ஏற்றுக் கொண்டது அவருக்குப் பெரிய ஆறுதலாக இருந்தது.

சுடர் இப்போது கருவுற்றிருப்பதால் அவளால் திருமண வேலைகளில் அதிகம் ஓடி ஆடி உழைக்க முடியாது. ஆனால், அவளுக்குப் பதிலாக அவள் கணவன் மொத்தப் பொறுப்பையும் தன் தோளில் சுமந்தான். மறுநாள் அவன் நேராக நகையின் வீட்டிற்குச் சென்றான். அங்கிருந்த ஒவ்வொரு வேலையையும் கேட்டுக்கேட்டுச் செய்தான்.

அதுமட்டுமில்லாமல், பரந்தாமனுக்கும் அவனுக்கும் இடையே ஒரு நல்ல நட்பு மலர்ந்தது. இருவரும் ஒன்றாகச் சேர்ந்து திருமணப் பத்திரிகை வைப்பது, திருமண மண்டபம் பார்ப்பது, உணவுக்கு ஆர்டர் கொடுப்பது என எல்லா வேலைகளையும் ஒரு தாய் பிள்ளைகளாகவே செய்தனர்.

அவர்களுக்குள் உருவான அந்த அழகான ஒற்றுமை, நடக்கப்போகும் திருமணம் எந்தக் குறையுமில்லாமல் சிறப்பாக அமையும் என்பதற்குச் சாட்சியாக அமைந்தது.

ராஜேஷ் ஒரு கணம் அப்படியே மெய்சிலிர்த்துப் போய் நின்றான். பரமுவின் உழைப்பையும், அவன் சுமக்கும் பொறுப்பையும் பார்க்கும்போது அவனுக்குள் ஏதோ ஒன்று நெகிழ்ந்தது. சட்டென்று உணர்ச்சிவசப்பட்டு, "பரமு... உண்மையாவே நீங்க ரொம்ப கிரேட்!" என்றான்.

பரமு லேசாகத் திரும்பி, "ஏன் இப்படிச் சொல்றீங்க?" என்று புரியாமல் கேட்டான்.

"தெரியல... ஆனா இதை இப்பவே உங்ககிட்ட சொல்லணும்னு தோணுச்சு" என்று ராஜேஷ் மிகுந்த நெகிழ்வோடு கூறினான்.

கடந்த சில நாட்களாகப் ராஜேஷ் பார்த்துக்கொண்டிருக்கிறான், பரமு ஒரு நொடி கூட ஓய்வெடுப்பதில்லை. தன் வீட்டுத் திருமண வேலைகளை ஒரு பக்கம் இழுத்துப் போட்டுச் செய்கிறான்; இன்னொரு பக்கம் தன் குடும்பத்தையும் கண்ணும் கருத்துமாகப் பார்த்துக்கொள்கிறான்.

அதுமட்டுமா? தனக்கு மனைவியாக வரப்போகிறவள் குடும்பத்தையும், தன் சொந்தக் குடும்பம் போலவே தாங்குகிறான்.

எப்பொழுது நகைக்கும் இவனுக்கும் திருமணம் என்று முடிவானதோ, அன்றிலிருந்து கவியைஒரு தந்தைக்கே உரிய அக்கறையோடு தினமும் கல்லூரிக்கு அழைத்துச் சென்று, மீண்டும் பத்திரமாக அழைத்து வந்து விடுகிறான்.

கையில் இருக்கும் ஒவ்வொரு ரூபாயையும் வீணாக்காமல், தன் வியர்வைத் துளிகளை எண்ணுவது போலப் பார்த்துப் பார்த்துச் செலவு செய்கிறான்.

ராஜேஷ் தன் கடந்த காலத்தை எண்ணிப் பார்த்தான். "நான்... நான் எங்க அப்பா அம்மா கைல ரொம்பச் செல்லமா, எந்தக் குறையும் இல்லாம சொகுசா வளர்ந்தவன் பரமு. எனக்குக் கஷ்டம்னா என்ன, வலி வந்தா எப்படி இருக்கும்னு எதுவுமே தெரியாது. ஒரு நடுத்தரக் குடும்பம் எப்படி எல்லாம் கஷ்டப்படும்னு நான் முதன் முதலில் என் மனைவியோட குடும்பத்தைப் பார்த்துத்தான் தெரிஞ்சுக்கிட்டேன்.

அதே மாதிரி, ஒரு மனுஷன் மேல இந்த அளவுக்குப் பாசமா இருக்க முடியுமான்னு அவங்களைப் பார்த்து தான் புரிஞ்சுக்கிட்டேன்.

ஆனா, நான் அதுக்கப்புறம் ரொம்ப வியந்து போன குடும்பம் உங்களுடையதுதான். நீங்களும் உங்க அக்கா தங்கச்சிகளும் இவ்வளவு போராட்டத்துக்கு நடுவுலயும் அவ்வளவு சந்தோஷமா இருக்கீங்க பாருங்க... உண்மையாவே உங்களைப் பாராட்டணும்!"

பரமுவின் முகம் லேசாக வாடியது, பின் ஒரு முதிர்ச்சியான புன்னகை அவன் இதழில் அரும்பியது.

"உங்களுக்கு உங்க அப்பா அம்மா எந்தக் குறையும் தெரியாம வளர்த்துட்டாங்க ராஜேஷ். அதனால்தான் உங்களுக்கு வாழ்க்கை இவ்வளவு சொகுசா இருக்கு. ஆனா, எங்க அப்பா நாங்க சின்ன பிள்ளையா இருக்கும்போது எங்களை நடுரோட்டில் விட்டுட்டு ஓடிப் போயிட்டாரு. அதனால கடவுள் எங்களுக்கு வாழ்க்கையை இப்படித்தான் ஆரம்பிச்சு வச்சாரு.

அவர் ஓடிட்டாரேன்னு நானும் அப்படியே சோர்ந்து போய் உட்கார்ந்துட்டேனா... அப்புறம் வீட்ல இருக்கிற பொம்பளைங்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் போயிருக்குமே?"

ராஜேஷின் கண்கள் கலங்கின. "நிச்சயமா பரமு... நகையும் நீங்களும் ரொம்ப ரொம்ப நல்லா வாழ்வீங்க. அந்த நம்பிக்கை எனக்கு முழுசா இருக்கு" என்று மனப்பூர்வமாக வாழ்த்தினான்.

பரமுவும் நகையும் ஒருவருக்கொருவர் அதிக நேரம் போனில் பேசிக் கொள்வதில்லை. அவளுக்கு டியூட்டி அதிகம் . 'ஒர்க்கிங்' என்று அவள் பிஸியாக ஓடிக் கொண்டே இருப்பாள். அவள் எப்பொழுது கொஞ்சம் ஓய்வாக இருக்கிறாளோ, அந்தச் சில நிமிடங்களை மட்டும் பரமு பொக்கிஷமாகப் பயன்படுத்திக் கொள்வான்.

திருமணத்திற்காக அவர்கள் ஆடம்பரமான பெரிய மண்டபங்களை எல்லாம் தேடி அலையவில்லை. அவர்கள் வசிக்கும் காலனிக்கு அருகிலேயே இருந்த ஒரு சிறிய மண்டபத்திலேயே எளிமையாகத் திருமணத்தை நடத்தலாம் என்று பெரியவர்கள் கூடி முடிவெடுத்திருந்தனர்.

திருமணப் புடவை, தாலி, மண்டபம், சாப்பாடு, ஏன்... தாம்பூலப் பைக்குத் தேவையான தேங்காய் வரை அனைத்தையும் பரமு ஒருவனே நின்று கவனித்துக் கொண்டிருந்தான்.

இதைப் பார்த்த வெண்பா "மாப்ள... நீங்க மட்டும் தனியா இவ்வளவு வேலை செய்றீங்களே, துணைக்கு யாரையாவது வச்சுக்கலாமே?" என்று கவலையோடு கேட்டார்.

"அத்தை... என் பிரண்ட்ஸ் எல்லாம் என் கூடவே இருந்து உதவி செஞ்சுட்டுத்தான் இருக்காங்க. நான் தனியா எதையுமே செய்யல. எல்லாருமே எனக்கு ஓடி ஓடி ஹெல்ப் பண்றாங்க. கேட்டரிங் வேலையை எனக்கு ரொம்ப நெருக்கமான ஒருத்தர் எடுத்துக்கிட்டாரு. பாதி விலையில் தான் செய்றாரு. இந்த மண்டபத்தோட ஓனரும் நமக்கு ரொம்ப வருஷத்துப் பழக்கம். அதனால தயங்காம மண்டபத்தைக் கொடுத்துட்டாரு. தாம்பூலப் பைக்குத் தேவையான தேங்காய் எல்லாம் என் பிரண்டோட தோட்டத்துலயே பறிச்சுக்கிட்டேன். அவங்க அவங்களால என்ன உதவி செய்ய முடியுமோ, அதைச் செஞ்சுக்கிட்டு தான் இருக்காங்க. நீங்க எங்களைப் பத்தி நினைச்சு பீல் பண்ணாதீங்க அத்தை" என்று ஆறுதலாகச் சொன்னான்.

பொறுப்பான பிள்ளையாக, ஒரு ஆலமரம் போல வளர்ந்து நிற்கும் அவனைப் பார்த்து வெண்பா மனதுக்குள் பெருமைப்பட்டுக் கொண்டார்.

இருவரும் பேசிக் கொண்டிருந்த போதே, பரமுவின் போன் சிணுங்கியது. திரையில் 'நகை' என்று பெயர் மின்னியது. அவள் அழைப்பு வந்தாலே போதும், பரமுவுக்குள் இருக்கும் அந்தப் முதிர்ச்சியான மனிதன் மறைந்து, ஒரு சின்னக் குழந்தை போல அவன் மனசு தள்ளிக் குதிக்கும்.

"ஹலோ... என்ன பண்ணிட்டு இருக்கீங்க?" நகை அந்தப் பக்கம் இருந்து மெல்லிய இதமான குரலில் கேட்டாள்.

அவளுக்குள் இருந்த அந்த மென்மையான உணர்வுகள் எல்லாம் வாழ்க்கை போராட்டத்தால் அழிந்து போனதாக அவளே நினைத்திருந்தாள். ஆனால், அந்த குணங்கள் எல்லாம் இன்னும் அவளது அடிமனதில் எங்கோ ஆழமாகப் புதைந்துதான் கிடந்தன.

பரமு தன் அன்பால் அவற்றை மெல்ல மெல்ல வெளியே கொண்டு வருகிறான். அவளிடமிருந்த பழைய நகையை அவளுக்கே அடையாளம் காட்டுகிறான்.

"மண்டபத்துக்குப் பணம் கொடுக்கலாம்னு போனேன் நகை... ஆனா அந்த ஓனர் வேணாம்னு சொல்லிட்டாரு."

"எதுக்கு? மண்டபம் கிடைக்கலையா?" என்று பதற்றமாகக் கேட்டாள் நகை.

"மண்டபமெல்லாம் புக் பண்ணிட்டோம்மா. ஆனா என்கிட்ட காசு வாங்க மாட்டேன்னு பிடிவாதமா சொல்லிட்டாரு. அவருக்கும் எனக்கும் ரொம்ப வருஷத்துப் பழக்கம். நான் அவருக்கு முன்னாடி நிறைய உதவி செஞ்சிருக்கேன். அதனால 'உன் கல்யாணத்துக்கு நான் மண்டபக் காசு வாங்க மாட்டேன்'னு சொல்லிட்டாரு."

"அது எப்படி... நாம மட்டும் சும்மா கல்யாணம் பண்ணிக்க முடியுமா?"

பரமு சிரித்துக்கொண்டே சொன்னான், "அதேதான் நானும் கேட்டேன். அதுக்கு அவர், 'நீ ஏன் சும்மா கல்யாணம் பண்ணிக்கிற? மண்டபத்துல தங்குற என் குடும்பத்துக்கே நீ மூணு வேளை சாப்பாடு போட்டுடுற... அதுவே எனக்குப் போதும்'னு சொல்றாரு." பரமு சொன்னதைக் கேட்டு நகை முதல்முறையாக வாய் விட்டுச் சிரித்தாள். தந்தை இறந்த பிறகு, அவள் இப்படி இதயத்திலிருந்து சிரிப்பது இதுவே முதல்முறை.

"உங்களைச் சுத்தி இருக்கிற எல்லாருமே உங்களைப் போலவே ரொம்ப நல்லவங்களா இருக்காங்கப்பா!" என்றாள் நெகிழ்ச்சியுடன்.

"நல்லவங்க கூடச் சேர்ந்தாத்தான் நகை, நல்லவங்க நமக்குப் நண்பர்களா கிடைப்பாங்க. சரி... டியூட்டி முடிஞ்சுதா? இப்ப ஃப்ரீயா இருக்கியா?"

"டியூட்டி முடிஞ்சது. ஆனா இன்னும் அரை மணி நேரத்துல அடுத்த 'ஒர்க்கிங்' இருக்கு. அதுக்குள்ள உங்ககிட்டப் பேசலாம்னுதான் கால் பண்ணேன்."

"தாராளமா பேசலாமே!" என்றான் பரமு. மாப்பிள்ளையும் மகளும் பேசிக் கொண்டிருக்கும் பொழுது, எதற்கு தான் இடையில் 'நந்தியாக' நிற்க வேண்டும் என்று நினைத்து வெண்பா மெல்ல அங்கிருந்து நகர்ந்து சென்றார்.
 

Author: Vishakini
Article Title: செதுக்கிய சிற்ப பாவையே - 29
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
  • Love
Reactions: Magizh kutty