• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

செதுக்கிய சிற்ப பாவையே - 34 ( இறுதி அத்தியாயம் )

Vishakini

Moderator
Staff member
சிற்ப பாவை - 34 (இறுதி அத்தியாயம்)

"பத்திரமா இருங்க..." என்று சொல்லும்போதே அவள் தொண்டை அடைத்தது. முதல்முறை குடும்பத்தைப் பிரிந்து ஆர்மிக்கு போகும்போது கூட அவள் இவ்வளவு அழுததில்லை. ஆனால், இன்று கணவனைப் பிரிந்து போகும் போது மனசு துண்டாக உடைந்தது. அவன் அள்ளிக் கொடுத்த காதலும் அரவணைப்பும் அவளை அப்படிச் செய்துவிட்டது.

"நான் பத்திரமா இருப்பேன்டி... நீ உடம்பைப் பார்த்துக்கோ. நல்லாச் சாப்பிடு, என்னைப் பத்தி யோசிச்சிட்டே இருக்காதே," என்று அவன் தேற்றினான்.

ஆறுதல் சொல்லி அவளை வெளியே அழைத்து வந்தான். "உன்னை விட்டு என்னால இருக்க முடியாது, நீ வேலைக்குப் போகாதே" என்று அவன் சுயநலமாகப் பேசவில்லை. அவளுடைய லட்சியத்திற்கும், அவளுடைய சீருடைக்கும் அவன் மரியாதை கொடுத்தான்.

அவனைப் பார்த்த போது அங்கிருந்தவர்கள் எல்லாரும் பிரமித்துப் போய் நின்றார்கள். எல்லோரிடமும் விடைபெற்று, காரில் அவன் அணைப்புக்குள் அமர்ந்து கொண்டு மீண்டும் தன் தேசத்தைக் காக்கப் புறப்பட்டாள்.

ஏர்போர்ட் வாசலில் அவளை இறக்கிவிட்டவன், அவளுடைய கைகளை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டான்.

"பாப்பு... எந்தக் கவலையும் இல்லாம நிம்மதியா வேலையைப் பாரு. நான் உனக்காக இங்கயே வெயிட் பண்ணுவேன். உன் கூட வாழ்ந்த இந்தச் சில நாட்கள் எனக்கு ஒரு ஜென்மத்துக்குப் போதும். என் மேல ஒரு நாளும் சந்தேகப்படாதே... இந்த உடம்பும் உயிரும் என்னைக்குமே உனக்குச் சொந்தம். சாகுற வரைக்கும் என் வார்த்தை மாறாது," என்றான்.

அந்தக் கூட்டத்தில் அத்தனை பேர் முன்னாடியும் கணவனை அழுத்தமாக அணைத்துக் கொண்டாள்.

"என் மேல இருக்கிற நம்பிக்கையை விட, உங்க மேல எனக்கு அதிக நம்பிக்கை இருக்கு மாமா. நான் போயிட்டு வர்றேன்... இந்த வேலையை விடணும்னு எனக்கு ஒருபோதும் தோணுனது இல்லை."

"யார் சொன்னது வேலையை விடணும்னு? இதே வேலையில நான் இருந்திருந்தா, நான் விட்டுட்டு வந்திருப்பேன். எனக்காக நீ வெயிட் பண்ணிருக்க மாட்ட... அதே மாதிரி நான் உனக்காக காத்திருப்பேன். குடும்பத்தைப் பார்த்துப்பேன். நீ உன் கடமையைச் செய். என் பொண்டாட்டி ஒரு ஆர்மிக் காரின்னு சொல்லிக்கிறதுல எனக்கு அத்தனை பெருமை, அத்தனை சந்தோஷம்! போயிட்டு வா செல்லம்..." என்று அவள் நெற்றியில் ஒரு முத்தமிட்டு, அவள் உள்ளே மறைந்து போகும் வரை அங்கேயே நின்று கையசைத்தான்.

நிறைந்த மனதோடும், அவளுடைய நினைவுகளோடும் அங்கிருந்து கிளம்பினான்.

காதலிக்கும் சரி, காதலுக்கும் சரி... ஈகோ என்ற உணர்வு ஒருபோதும் தடையாக இருக்கக்கூடாது. இருவரும் சீரான வாழ்வில் சமமாக வாழ்வது ஒருவரை ஒருவர் நம்பி அர்ப்பணிப்போடு வாழ்வதில் தான் காதல் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு சீரான வாழ்வு அவர்களுக்கு அமைந்தது.

அவர்கள் வாழ்வில் எந்தக் குறையும் இல்லை. அதற்குக் காரணம் ஒருவரை ஒருவர் அப்படியே ஏற்றுக்கொண்ட அந்த உண்மையான அன்பு மட்டும்தான்!

நிஜத்தை நிதர்சனத்தை புரிந்து கொண்டனர்.

உடல்கள் பிரிந்து இருந்தாலும் உள்ளம் இணைந்தே இருக்கும். உண்மையான காதலும் காத்திருப்பும் பெண்ணுக்கு மட்டும் உரியது கிடையாது. ஆணுக்கும் உரியது.
அப்படி ஒரு ஆண் மகன் தான் பரமன்.

நிதர்சனத்தை ஏற்று ஒருவரை ஒருவர் மதித்து மதிப்பு கொடுத்து வாழும் இவர்கள் அன்பு குறைய போவதில்லை.

பத்து மாத தவத்தின் பயன்...
காலம் சக்கரம் சுழன்றது... அந்தப் பத்து மாதக் காத்திருப்பு இன்று ஒரு வலியின் உச்சத்தில் வந்து நின்றிருந்தது.

மருத்துவமனையில் அந்தப் பிரசவ வார்டு. காற்றில் கலந்திருக்கும் மருந்தின் வாசனையும், மரண பயம் கலந்த ஒருவித நிசப்தமும் மனதை ஏதோ செய்தது. நகை கட்டிலில் கிடக்க, அவள் அருகே சிதைந்த மனதோடு நின்று கொண்டிருந்தான் பரமு.

"பாப்பு... செல்லம், கொஞ்சம் இந்தப் பொறுத்துக்கோடா. உனக்கு ஒன்னும் ஆகாது. இதோ... இந்த வலி இப்போ சரியாயிடும். உன்னால முடியும்டா," என்று அவளின் வேர்வையில் நனைந்த கூந்தலை வருடிவிட்டபடி, நெற்றியில் முத்தமிட்டு தேற்றிக் கொண்டிருந்தான்.

அவர்களின் காதலுக்குச் சாட்சியாக, திருமண பந்தம் கொடுத்த உன்னதப் பரிசாக, இதோ புது உயிர் இன்னும் சில நிமிடங்களில் பூமிக்கு வரப்போகிறது. அவர்கள் குடும்பமே அந்த வார்டுக்கு வெளியே நகம் கடித்தபடி, இமைக்காமல் வாசலையே பார்த்துக் காத்திருந்தது.

வலி தாங்காமல் நகையின் கண்கள் சொருகியது. தன் வேதனையை யாரிடமும் காட்டாதவள், தன் உயிர் பாதியான கணவனிடம் மட்டும் மெல்லக் கசிந்தாள்.

"பரமு... ரொம்ப வலிக்குதுடா... என்னால முடியல..." என்று அவள் முனகிய போது, அது பரமுவின் இதயத்தை யாரோ கத்தியால் கிழிப்பது போல் இருந்தது.

"கொஞ்சம் பொறுத்துக்கோடா... இதோ இன்னும் கொஞ்ச நேரத்துல நம்ம குட்டி தேவதை வெளிய வந்துருவா. அதுவரைக்கும் மட்டும் தாங்கிக்கோ என் செல்லம்," என்று ஒரு சிறு குழந்தையைச் சமாதானம் செய்வது போல, தன் கண்களில் தேங்கிய கண்ணீரை துடைத்துக் கொண்டு அவளைத் தேற்றினான்.

திடீரென கதவு திறக்க, செவிலியர் உள்ளே வந்தார். "சார், நீங்க வெளிய போங்க. இப்ப அவங்களை லேபர் வார்டுக்கு மாத்தப் போறோம். இனிமே நீங்க இங்க இருக்கக் கூடாது," என்று கறாராகச் சொல்லி அவனை வெளியேற்றினார். பரமுவின் கைகளைத் தளர்ந்த நிலையில் விடமாட்டாமல் பற்றி இருந்த நகையின் கைகள், மெல்ல விடுவிக்கப்பட்டன.

பரமு வெளியே வந்து நின்றான். ஒவ்வொரு வினாடியும் ஒரு யுகமாய் நகர்ந்தது. உள்ளே நடக்கும் போராட்டத்தை நினைத்து அவனது இதயம் துடித்த சத்தம் அவனுக்கே கேட்டது.

நீண்ட போராட்டத்திற்குப் பிறகு, அந்த மௌனத்தைக் கிழித்துக் கொண்டு ஒரு பிஞ்சு உயிரின் அழுகுரல் கேட்டது. நகை, அவ்வளவு பெரும்பாடுபட்டு தன் மூத்த மகனைப் பெற்றெடுத்தாள்.

அந்த அழுகுரல் கேட்ட அடுத்த நொடி, அதுவரை அவள் அனுபவித்த அத்தனை நரக வேதனைகளும் பனிப்போல விலகிப் போயின. மகனின் முகம் கண்டதும், தன் உடம்பில் இருந்த வலிகள் எல்லாம் எங்கோ காணாமல் போனது போல உணர்ந்தாள்.

"குழந்தையை முதல்ல என் ஹஸ்பண்ட் கிட்ட குடுங்க," என்று மூச்சிரைக்க தேய்ந்த குரலில் கூறினாள் அந்தத் தாய்.

செவிலியர் குழந்தையை துணியில் சுற்றி எடுத்து வந்து பரமுவிடம் கொடுக்க, அவன் தன் நடுங்கும் கைகளால் அந்தப் புதுயிரை ஏந்திக் கொண்டான். தன் ரத்தமும், நகையின் காதலும் கலந்த அந்த உருவத்தைப் பார்த்ததும், அவன் கண்கள் தானாகக் குளம் கட்டின.

மொத்தக் குடும்பமும் அந்தக் குட்டி உயிரைச் சுற்றி நின்று சந்தோஷத்தில் திக்குமுக்காடிப் போனார்கள். சுடர் தன் சொந்த மகளை ஒரு கையில் அணைத்தபடி, தன் அக்காவுக்குப் பிறந்த இந்தக் குட்டிச் சிங்கத்தை ஆசையோடு வருடி பார்த்தாள்.

அந்த மண்ணில் ஆண், பெண் என்ற பாகுபாடு அவர்களுக்கு இல்லை. எது பிறந்தாலும் அது தெய்வம் கொடுத்த வரம் என்று நினைக்கும் குடும்பம் அது. ஆனாலும், ஆண் குழந்தை பிறந்ததைப் பார்த்ததும், தங்கள் வீட்டுப் பெரியவர் 'காத்தவராயனே' மீண்டும் பிறந்து வந்திருப்பதாக அவர்கள் உள்ளுக்குள் பூரித்துப் போனார்கள்.

கண்ணகி நெகிழ்ச்சியுடன் சொன்னாள், "வெண்பா... உன் புருஷனே உன் பொண்ணுக்கு பிள்ளையாப் பொறந்துட்டாருடி. இனி உனக்கு என்ன கவலை இருக்கு?" வெண்பா கண்கள் கலங்க, தன் கணவனின் மறு உருவத்தை அள்ளி அணைத்துக் கொண்டாள்.

பரமு மெல்ல நகையின் அருகே சென்றான். அவள் அயர்ச்சியாக இருந்தாலும், கணவனைக் கண்டதும் புன்னகைத்தாள். "உங்களைப் பார்த்ததும், குழந்தையைப் பார்த்ததும் என் வலி எல்லாம் எங்க போச்சுன்னே தெரியல பரமு... எல்லாம் மறந்துடுச்சு," என்றாள் நெகிழ்ச்சியாக.

பிரசவத்திற்காக அவளுக்கு ஒரு வருடம் விடுமுறை கிடைத்திருந்தது. அந்த முழு ஆண்டையும் தன் குடும்பத்தோடும், தன் குழந்தையோடும் மிகச் சந்தோஷமாக செலவிட வேண்டும் என்று அவள் முன்பே கோலமிட்டு வைத்திருந்தாள்.

வீட்டிற்கு வந்த பிறகு, திருவிழா போல இருந்தது அந்த வீடு. வெண்பாவும் கண்ணகியும் குழந்தையை ஒரு நிமிடம் கூட கீழே வைக்காமல் மாறி மாறி பார்த்துக் கொண்டனர். பரமுவோ, தன் மனைவியின் உடல்நிலையைக் கருதி அவளை ஒரு பூவைப் போல் கவனித்துக் கொண்டான். எந்தச் சிறு கஷ்டமும் அவளுக்குத் தெரியாமல் பார்த்துக் கொண்டான்.

கவிக்குட்டி ஒரு பக்கம், பரமுவின் அன்புத் தங்கைகள் ஒரு பக்கம் என அந்தப் பிஞ்சு உயிரைச் சீராட்டி, தாலாட்டி வளர்த்தனர். அந்த வீட்டின் ஒவ்வொரு செங்கல்லும் குழந்தையின் சிரிப்பில் உயிர்பெற்றது.

"பரமு, ஒரு வருஷம் முழுக்க நான் உங்க கூடவே இருக்கப் போறேன். நினைக்கவே அவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா?" என்றாள் நகை உற்சாகமாக.

"உன்னை விட நான் தான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன் பாப்பு. உன்னையும் நம்ம குட்டியையும் கண்ணுக்குள்ள வச்சுப் பார்த்துப்பேன்," என்று அவள் மீதும் வைத்திருக்கும் தீராத அன்பை அவன் கண்களாலேயே வெளிப்படுத்தினான்.

தாய்மார்களின் பாசத்திலும், சித்தியின் அரவணைப்பிலும் அந்தக் குழந்தை மெல்ல மெல்லக் கிளைவிட்டு வளர்ந்தது. "குழந்தைக்கு என்ன பேர் வைக்கலாம்னு இருக்க பரமு?" என்று கண்ணகி ஆசையோடு கேட்க,

"இதுல என்னம்மா சந்தேகம்? மாமாவோட பேரைத் தவிர வேற என்ன இருக்கும்? காத்தவராயன்!" என்று அவன் அழுத்தமாகச் சொன்னான்.

'காத்தவராயன்... காத்தவராயன்... காத்தவராயன்...' என்று மூன்று முறை அந்தப் பிஞ்சு காதில் பரமு ஓத, நகை தன் கணவனின் தோளில் சாய்ந்து கொண்டு, மகிழ்ச்சியில் அவனை இறுக அணைத்துக் கொண்டாள்.

பணக்காரனைத் திருமணம் செய்து, கௌரவம் என்ற பெயரில் நிம்மதியைத் தொலைத்து வாழ்வதை விட, ஒரு ஏழையாய் இருந்தாலும்... மனைவியின் சிறு உணர்வையும் மதிக்கத் தெரிந்த, அவள் உறவுகளுக்கு மரியாதை கொடுக்கத் தெரிந்த ஒருவனைத் துணையாகப் பெறுவது தான் உண்மையான வரம். அப்படிப்பட்டவனுக்கு மனைவியாக வாழ்வது சொர்க்கத்தில் வாழ்வதற்குச் சமம்.

பரமு அப்படி ஒரு மகத்தான கணவனாக இருக்கிறான். அவனை அப்படி இருக்க விடுவது நகையின் பெருந்தன்மை. இவர்களின் இந்த அன்புப் பயணம், குழந்தைகளுடன் இன்னும் பல காலங்கள் சீரும் சிறப்புமாகத் தொடர நாம் அனைவரும் மனதார வாழ்த்துவோம்!
 
Super. Uravugaloda suyanalam eppomum marathu athai alaga solli irunthinga. Nagai paramu kadhal super. Avanga kadhala innum kuda ethirparthen but nenga sikkirame story mudichutinga. Cute and lovable story. Congratulations 💐💐💐💐💐
 
Top Bottom