• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

செதுக்கிய சிற்ப பாவையே - 4

Vishakini

Moderator
Staff member
சிற்ப பாவை - 4


"அக்கா பயப்படுவாள் என்பது உனக்கே தெரியும் சுடர், நீயே கூட போயிட்டு வா. அப்படி இல்லை என்றால் நான் தங்கச்சியை அனுப்பி வைக்கிறேன்," என்று அன்னை கூறினாள்.

"என்னை விட கவி என்ன பெரிய பயில்வானா? நானே அக்கா கூடப் போறேன்," என்று சற்றே கிண்டலாகக் கூறிவிட்டு, அக்காவை அழைத்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பினாள் சுடர்.

நகை இயற்கையிலேயே கொஞ்சம் பயந்த சுபாவம் கொண்டவள். அதோடு கூச்ச சுபாவமும் அவளிடம் அதிகம் இருந்ததால், புதியவர்களிடமோ அல்லது மற்றவர்களிடமோ அதிகமாகப் பழக மாட்டாள்.

அவளது தோழி ஒருத்தி வந்து வாசலில் நின்று கத்தினாள், "அம்மா தாயே! உன்னை வீட்டுக்கு வந்து வாங்குன்னு கூப்பிட்டா நீ வரவே மாட்டேங்குற. சரி, நானே உன் வீட்டு வாசலுக்குக் கீழே வந்து நிற்கிறேன், வந்து வாங்கிட்டுப் போன்னு சொன்னாலும் அதையும் நீ கேட்க மாட்டேங்குற!" என்று அவள் பிரண்டு கோபமாகப் பேசினாள்.

"சாரிடி, நான் அப்படியே மறந்து போயிட்டேன்," என்று தணிந்த குரலில் நகை கூறினாள்.

"மறந்து போயிட்டியா? இல்லை தனியாக வந்து வாங்குவதற்குப் பயந்து போயிட்டியா? மேல வந்து கொடுன்னு சொல்லியிருந்தா அதையாவது நான் செய்திருப்பேன். எவ்வளவு நேரமாக நான் கீழே கால் வலிக்க நிற்கிறேன் தெரியுமா?"

உடனே சுடர் குறுக்கிட்டு, "உங்களை யார் இங்கே கீழே நிற்கச் சொன்னது? நேரா மேலே வந்து கொடுத்திருக்க வேண்டியதுதானே! நீங்கள் இவ்வளவு நேரம் இங்கே கீழே நின்ற நேரத்திற்கு மேலே வந்திருந்தால், ஒரு வாய் ஏதாவது சாப்பிட்டாவது போயிருக்கலாம்," என்று தன் அக்காவை விட்டுக் கொடுக்காமல் அக்கா தோழியிடம் சண்டை போட்டாள்.

"அம்மா தாயே சுடர்! என்னைத் தயவுசெய்து விட்டுடு. உங்க அக்கா வை நான் எதுவும் சொல்லல. உன் கூட சண்டைக்கு எல்லாம் நான் வரலை. உலகத்திலேயே இல்லாத ஒரு அக்காவைப் பெத்து வச்சிருக்கீங்க நீங்க," என்று அவளும் சலிப்புடன் திட்டுவது போல் பேசி விட்டு அங்கிருந்து நகர்ந்தாள்.

தோழி சென்றதும் சுடர் தன் அக்காவைத் திரும்பிப் பார்த்தாள். "அக்கா, உன்னை நீ கொஞ்சம் மாத்திக்கோ. எப்பப் பார்த்தாலும் அப்பாவும் அம்மாவும் உன் கூடவே இருக்க முடியாது. உனக்கு இன்னும் இரண்டு வருஷத்துல கல்யாணம் பண்ணி வச்சிடுவாங்க. அப்போது புகுந்த வீட்டில் வாழ்க்கை எப்படி இருக்கும்னு யாருக்கும் தெரியாது. இப்பவே இதுல இருந்து மீண்டு வந்து, கொஞ்சம் தைரியமாக இருக்கப் பழகிக்கோ அக்கா," என்று அறிவுரை கூறினாள்.

"நானும் முயற்சி பண்றேன் சுடர், ஆனால் என்னால் முடியவே மாட்டேங்குது. யாருக்காவது முன்னாடி போய் நிற்கவோ, யாரிடமாவது பேசவோ எனக்குப் பயமாக இருக்கு. நான் என்ன பண்றது?" என்று நகை கலங்கினாள்.

அவர்கள் இருவரும் பேசிக்கொண்டே நடந்து வரும் பொழுது, ஒரு மெக்கானிக் அவர்களைக் கடந்து சென்றான். அப்போது அவன் நகையைக் கவனிக்காதது போல அவள் மீது சற்றே உரசி விட்டுச் செல்ல, அவள் பயத்தில் துள்ளி குதித்து விலகினாள். முகத்தை சுளித்தபடி அங்கிருந்து சென்றாள்.

அதைக் கண்டதும் அந்த மெக்கானிக்குக்கு ஒரு மாதிரியாகிவிட்டது. அவனும் இதே தெருவில் தான் வசிக்கிறான், ஆனால் வேறு ஒரு பகுதியில் இருக்கிறான். அவர்கள் மிகவும் எளிமையானவர்கள் என்பதால், இவர்கள் இருக்கும் இடத்திலிருந்து கொஞ்சம் தள்ளி வசிக்கிறார்கள்; அவ்வளவுதான் வித்தியாசம்.

"இவன் எல்லாம் யார்? இந்த வழியாக வந்து எதையாவது திருடிக் கொண்டு போய்டப் போறான்," என்று சுடர் அவனை முறைத்துப் பார்த்தபடி கூறினாள்.

"அதெல்லாம் நீ ஏன் யோசிக்கிற சுடர்? அப்படி எல்லாம் இருக்காது," என்று நகை கூற,

"நீ என்னவோ வெளுத்ததெல்லாம் பாலுன்னு நினைக்கிறவ. எல்லாத்தையும் அப்படியே நம்பாதே. யாரிடமும் அதிகமாகப் பேசாதே, வா வீட்டுக்குப் போகலாம்," என்று அக்காவை அழைத்துக் கொண்டு மேலே வந்தாள்.

நகைக்கு இறுதிப் பரீட்சை நெருங்கிவிட்டது. அந்தத் தேர்வில் அவள் மிகவும் கவனம் செலுத்திப் படித்துக் கொண்டிருந்தாள். அவளுக்கு மதிய நேர தேர்வு என்பதால், அவள் காலையிலேயே வீட்டை விட்டு கிளம்புவது கிடையாது. வீட்டில் உள்ள அனைவரும் வேலைக்குக் கிளம்பிச் சென்ற பிறகு, அவள் தன் அம்மாவை அழைத்துக் கொண்டு பஸ் ஏறுவதற்காகக் கீழே வந்தாள்.

அதற்குள் வெண்பாவை அதே பகுதியில் குடியிருந்த ஒருவர் வழிமறித்து பேசத் தொடங்கினார். நகை தயங்கி நிற்பதை கண்ட வெண்பா, "நகை, நீ போய் பஸ் ஏறு, நான் இதோ வந்துடுவேன்," என்றாள்.

அவள் பஸ் ஏறும் இடத்தில் நிறைய ஆண்கள் கூட்டமாக நின்று கொண்டிருந்தனர். அதைக் கண்டதும் நகை அடியெடுத்து வைக்கத் தயங்கி அங்கேயே நின்றாள்.

"நகை, நீ போம்மா. நான் இங்கிருந்து உன்னைப் பார்த்துக்கொண்டு தான் இருக்கேன். பயப்படாதே போ!" என வெண்பா தூரத்தில் இருந்தே தைரியம் கொடுத்தாள். ஆனாலும் ஒருவித நடுக்கத்துடன் அவள் முன்னோக்கி மெதுவாக நடந்து கொண்டிருந்தாள்.

"டேய் உன் ஆள் வருதுடா!" என்று கூட்டத்தில் இருந்த ஒருவன் குரல் கொடுத்தான்.

"என்ன இன்னைக்கு இவ தனியா வர்றா? இவ இப்படி எல்லாம் தனியாக வர மாட்டாளே! எப்பப் பார்த்தாலும் அப்பா, தங்கச்சி, அம்மான்னு யாரையாவது ஒருத்தரைச் எப்போவும், கூடவே வச்சிருப்பா," என்று இன்னொருவன் அவளைக் கிண்டல் செய்தான்.

அதைக் கேட்டதும் நகைக்குக் கண்கள் கலங்கி விட்டன. தன் நிலையை எண்ணி தன் தாயைத் திட்டிக் கொண்டே சென்றாள். அந்த நேரம் அந்த மெக்கானிக் மீண்டும் தன் பைக்கில் அங்கே வர, அவளை உரசுவது போல் வேகமாகச் சென்றான். அவளுக்கு அது ஏதோ எதார்த்தமாக நடப்பது போல் தோன்றவில்லை. அவனும் தன்னைத் தொடர்ந்து வருகிறான் என்று அவள் நினைத்துக் கொண்டாள்.

"இவனுங்களுக்கெல்லாம் இதே வேலை; எப்பப் பார்த்தாலும் எப்படி இருக்காங்க பாரு. வீட்ல யாராவது கண்டிக்க மாட்டாங்களா?" என்று மனதிற்குள் திட்டிக் கொண்டே, பயத்தில் தன் துப்பட்டாவைத் திருகிக் கொண்டு பஸ்சுக்காக காத்திருந்தாள். அவளை இன்னும் அதிகமாக அழ விடாமல், நல்லவேளையாக அவளின் கல்லூரி வாகனம் வந்து சேர்ந்தது.

"அப்பாடா, ஒருவழியாக பஸ் வந்துவிட்டது," என்று நிம்மதிப் பெருமூச்சுடன் பஸ்ஸில் ஏறி அமர்ந்தவள், "அம்மா போயிட்டு வரேன், பாய்!" என்று கையசைத்து விட்டுச் சென்றாள்.

உண்மையில் அவளுக்கும் ஆசைதான். எத்தனை பேர் கூட்டமாக இருந்தால் என்ன, நெஞ்சை நிமிர்த்தித் தைரியமாக நடக்க வேண்டும் என்று. ஆனால் ஏனோ அந்தத் தைரியம் அவளுக்கு வரவே இல்லை. பழைய காலத்துப் பெண்கள் போல் குனிந்த தலை நிமிராமல், நீண்ட கூந்தலுடன் தன்னை ஒப்பனை செய்து கொண்டு, ஒருவித பயத்துடனேயே வாழ்ந்து கொண்டிருக்கிறாள்.

ஆனால் அவளது தங்கைகள் இவளைப் போல் கிடையாது; அவர்கள் யார் வந்தாலும் ஒரே அடியாக அடித்துக் கொன்று விடுவார்கள் என்பது போல் அவ்வளவு தைரியமாக இருப்பார்கள்.

இவர்கள் வாழ்க்கை இப்படியே முடிந்துவிடுமா? இல்லை இதில் மாற்றங்கள் ஏற்படுமா? கடவுள் அனைவருக்கும் அவர் நினைப்பதைப் போன்ற வாழ்க்கையை கொடுத்து விடுவதில்லை.

அன்பான மனைவி, அழகான குழந்தைகள், புரிதலான வாழ்க்கை என்று காத்தவராயன் வாழ்க்கை அழகாகச் சென்று கொண்டிருந்தது. ஆனாலும் காலப்போக்கில் அவருக்குக் கடன் சுமை அதிகரித்தது. அந்தச் சுமையிலிருந்து எப்படி மீள்வது என்று தெரியாமல் அவர் விழித்தார்.

பெண்களுக்குப் பிடித்தது போல் ருசியாக வாங்கி சமைக்கக் கூட பணமின்றி சிரமப்பட்டார். முடிந்தவரை கிடைக்கும் காய்கறிகளை வைத்தே குடும்ப வறுமை பிள்ளைகளுக்குத் தெரியாமல் வெண்பா சமாளித்துக் கொண்டிருந்தாள்.

பிள்ளைகளும், "ஏன் மீன் எடுக்கவில்லை? ஏன் இறைச்சி சமைக்கவில்லை?" என்று ஒருபோதும் கேட்டதில்லை. ஆனால் ஆனந்தி தான் அவ்வப்போது வந்து எதையாவது கேட்டு சண்டையிட்டு நச்சரித்துக் கொண்டிருந்தாள். அவ்வளவு வறுமையிலும் தன்னால் முடிந்ததை தன் தங்கைக்காக வாங்கிக் கொடுத்துக் கொண்டிருந்தார் காத்தவராயன்.

கடைசி பரீட்சை எழுதிவிட்டு நகை பஸ்ஸில் இருந்து இறங்கிய போது, பிரனேஷ் அங்கே தன் பைக்கில் ஸ்டைலாக அமர்ந்திருந்தான். அவனைக் கண்டதும் நகையின் முகம் அந்தச் செவ்வானத்தை போலச் சிவந்துவிட்டது.

அவனை அவள் அங்கே எதிர்பார்க்கவே இல்லை. அந்தச் சந்திப்பு அவளுக்கு ஒரு பெரிய இன்ப அதிர்ச்சியாக அமைந்தது. அவனைக் கண்டதும் அவள் கொண்ட அந்த வெட்கத்தைப் பார்த்து, அந்த ஆணின் மனம் கர்வம் கொண்டது.

அவளின் நளினம், மென்மையான பேச்சு, பாதம் நோகாமல் நடக்கும் அந்தப் பாங்கு, எல்லாவற்றையும் விட அவளது நீண்ட கூந்தல் அவனை மிகவும் கவர்ந்தது. அவளையே பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் போல் அவனுக்குத் தோன்றும். அதற்காகவே இன்று வேலையில் அனுமதி எடுத்துக் கொண்டு அவள் இறங்கும் இடத்தில் வந்து அமர்ந்திருந்தான்.

தன்னைப் பார்த்ததும் அவள் காட்டும் அந்த ரியாக்ஷன் ஆச்சர்யத்தை பார்க்க வேண்டும் என்ற ஆசை அவனுக்கு அன்று முதல் முறையாகத் தோன்றியது. அவள் வெட்கப்படுவதைப் பார்த்து அவன் அதில் கரைந்து போனான். ஆனால் கெட்ட நேரம், ஆண்டவர் அவர்கள் இருவரையும் ஆனந்தியின் கண்களில் சிக்க வைத்துவிட்டார்.

"பிரனேஷ், நீ இங்க என்ன பண்ற?" என்று அவர் அதட்டலாக கேட்டார்.

ஆனந்தியைக் கண்டதும் நகைக்குக் கைகள் நடுங்கத் தொடங்கின. பொதுவாகவே அவளுக்கு ஆனந்தியைப் பிடிக்கவே பிடிக்காது. அதனால் அந்தப் பயத்தில் அங்கிருந்து ஓட்டமும் நடையுமாக வீட்டிற்கு ஓடியே வந்துவிட்டாள்.

அவள் அப்படிப் பயந்து ஓடியதைப் பார்த்ததும் பிரனேஷின் முகம் கோபத்தில் சிவந்தது.

"பச்.. நீ என்னம்மா இங்க பண்ற?" என்று தன் தாயைக் கேட்டவன், அவர் கையில் இருந்த அந்தச் சாப்பாட்டுத் தூக்குவாளியை கண்டதும் இன்னும் கடுப்பானான்.

"வீட்டில் இரண்டு பேர் சம்பாதிக்கிறோம், சமைக்க வேண்டியதுதானே? இப்படி அண்ணன் வீட்டுக்குச் சாகுற வயசு வரைக்கும் சாப்பாடு தூக்கிட்டு அலைவியா நீ?"

"நான் அலையுறது இருக்கட்டும், நீ இங்க என்ன பண்ணிட்டு இருக்க?" என்று அவள் மீண்டும் கேட்டாள்.

"சொல்றேன் வா, வீட்டுக்குப் போய் பேசலாம்," என்று தன் அம்மாவை பைக்கில் அமர வைத்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பினான். அவனுக்கு நகையைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற ஆசை இருந்தது. இன்றுடன் அவளின் தேர்வுகள் முடிந்துவிட்டன என்பதும் அவனுக்குத் தெரியும். அதனால் இதைப் பற்றி வீட்டில் பேசிவிட வேண்டும் என்று முன்பே முடிவு செய்து, அவன் தந்தையையும் அங்கே வரச் சொல்லியிருந்தான்.
 
Top Bottom