• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

செதுக்கிய சிற்ப பாவையே - 6

Vishakini

Moderator
Staff member
சிற்ப பாவை - 6


நீண்ட நாட்களுக்குப் பிறகு, அந்த வீட்டின் சுவர்களில் மகிழ்ச்சியின் சத்தம் எதிரொலித்தது. கவலைகளை மறந்து அனைவரும் ஒன்றாக அமர்ந்து, சிரித்துப் பேசி, திருப்தியாகச் சாப்பிட்டு முடித்தனர். அந்த இரவு அமைதியாகத் தொடங்கியது.

நகை வீட்டின் வெளியே அமர்ந்து செய்தித்தாள் படித்துக் கொண்டிருந்தாள். பக்கங்களைப் புரட்டிக் கொண்டே வந்தவளின் கண்கள் ஓரிடத்தில் நிலைத்து நின்றன. அதில் இந்திய இராணுவத்தில் சேருவதற்கான வேலை வாய்ப்பு குறித்த அறிவிப்பு இருந்தது. அதை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தவள், ஏதோ ஒரு முடிவுக்கு வந்தவள் போல் தெரிந்தாள்.

அப்போது அங்கே வந்த அவளது தந்தை காத்தவராயன், "நகை, இன்னும் தூங்கலையாம்மா?" என்று வாஞ்சையுடன் கேட்டார்.

"இல்லப்பா, ஏனோ இன்னும் தூக்கம் வரல," என்று மெல்லிய குரலில் பதில் சொன்னாள்.

தந்தையின் முகம் சோர்வாக இருப்பதை உணர்ந்தவள், "நீங்க போய் முதல்ல தூங்குங்கப்பா... காலையில இருந்து விடாம வேலை செஞ்சு ரொம்ப டயர்டா இருக்கீங்க," என்றாள் அக்கறையுடன்.

அவர் அங்கேயே அமர்ந்தார். "இருக்கட்டுமா... படிப்புதான் முடிஞ்சுடுச்சுல்ல, அடுத்து மேல என்ன படிக்கலாம்னு இருக்க? மேற்கொண்டு படிக்கிறியாமா?" என்று தயக்கத்துடன் கேட்டார்.

நகை அவரை ஏறிட்டுப் பார்த்தாள். குடும்பச் சூழல் அவளுக்குத் தெரியும். "அப்பா, நான் ஒரு ரெண்டு வருஷம் வேலைக்குப் போறேன். கொஞ்சம் சம்பாதிச்சுட்டு அதுக்கப்புறம் நான் மேல படிக்கிறேன்ப்பா," என்றாள் உறுதியான குரலில்.

அவரால் அவளை மறுத்துப் பேச முடியவில்லை. அந்தச் சூழ்நிலை அப்படி இருந்தது. அவளுக்குப் பின்னால் வளரும் இன்னும் இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். அவர்களைக் கரைசேர்க்க தன் நிலை என்ன ஆகுமோ என்ற பயம் அவர் மனதிற்குள் மெல்ல ஊடுருவியது.

"இல்லம்மா... உனக்கு ஒரு நல்ல இடமா பார்த்து கல்யாணம் பண்ணி வச்சுட்டு..." என்று அவர் இழுக்க, அவள் 'வேண்டாம்' என்றும் சொல்லவில்லை, 'வேண்டும்' என்றும் சொல்லவில்லை. மௌனமாகவே இருந்தாள்.

மகளின் அந்த அமைதி அவருக்குள் ஆயிரம் யோசனைகளைக் கொடுத்தது. 'தன் மகள் திருமணத்தைப் பற்றி யோசிக்கிறாளோ?' என்று அந்தத் தந்தைக்குப் புரியாமல் போகுமா என்ன?

ஆனால், ஒரு திருமணத்தை நடத்தி முடிக்கும் வசதி வாய்ப்புகள் இப்போது அவரிடம் இல்லை. ஒரு பேச்சுக்குத்தான் கேட்டார். ஆனால், வேலைக்குப் போகிறேன் என்று சொன்ன மகளே திருமணத்திற்குத் தயாராக இருக்கும் போது, கையில் ஒன்றும் இல்லாத நிலையில் என்ன செய்வது என்று தெரியாமல் அவர் மனம் பாரமானது.

"சரிம்மா... நீ போய் படு, கோபப்படாத," என்று மகளை அனுப்பி வைத்துவிட்டு, நிலவைப் பார்த்தபடி வெட்டவெளியில் தன் பாரத்தை இறக்கி வைத்தார்.

அப்போது அங்கே வந்த மனைவி வெண்பா, கணவன் கலங்கிப் போய் அமர்ந்திருப்பதை உணர்ந்தாள். அவர் அறியாமலேயே அவர் அருகில் அமர்ந்து, அவர் மடியில் தன் தலை வைத்துப் படுத்துக் கொண்டாள். என்ன பேசுவது என்று தெரியாமல் காத்தவராயன் மௌனமாக இருந்தார்.

அவர் ஏதோ ஒரு தீராத வேதனையில் இருக்கிறார் என்பதைப் புரிந்து கொண்ட வெண்பா, "எதையும் மனசுல போட்டு ரொம்ப ஏத்திக்காதீங்கங்க... எல்லாம் கொஞ்சம் கொஞ்சமா சரியாப் போகும். இத்தனை வருஷத்துல நாம எதையும் பிளான் பண்ணிப் பண்ணதில்லை. ஆனா, அந்தந்த நேரத்துல எல்லாம் நல்லபடியா நடந்தது இல்லையா? அதே மாதிரி இதுவும் நடக்கும்," என்று ஆறுதல் கூறினாள்.

"வெண்பா... நகை கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுறான்னு நினைக்கிறேன்," என்றார் வருத்தத்துடன்.

வெண்பாவுக்கு உள்ளுக்குள் உண்மை தெரிந்திருந்தது. அதனால் அவள் அமைதியாக இருந்தாள்.

"நான் வேணா ஆனந்திகிட்டப் பேசவா வெண்பா? அவ பையன் பிரனேஷுக்கு..." என்று அவர் கேட்க, வெண்பா சற்றுத் தயங்கினாள்.

"இன்னும் கொஞ்ச நாள் போகட்டுங்க, அப்புறம் பேசலாம். இப்போ உடனே ஏதும் பேசத் தேவையில்லை. முதல்ல அவங்க உங்ககிட்டப் பேசட்டும். ஆனந்தியாவே நேர்ல வந்து பொண்ணு கேட்கட்டும். நாம ஏதும் மறுப்புச் சொல்லப் போறதில்லை. ஆனா, நாமளா போய் மாப்பிள்ளை கேட்க வேண்டாம்," என்று கறாராகச் சொன்னாள்.

மனைவி சொன்னது நூறு சதவீதம் உண்மை என்று அவருக்கும் புரிந்தது. என்னதான் கூடப் பிறந்த சொந்தத் தங்கையாக இருந்தாலும், இதுவரை அண்ணன் வீட்டிலிருந்து அவள் எடுத்துச் சென்றதுதான் அதிகம்.

"அண்ணா, இந்தா உனக்கு நான் உதவி செய்றேன்" என்று பிரதிபலன் பாராமல் எந்தத் தங்கையும் அவருக்குக் கொடுத்தது கிடையாது.

மறுநாள் காலை, காத்தவராயன் வேலைக்குக் கிளம்பிக் கொண்டிருக்கும்போது அவர் கைபேசி ஒலித்தது. மூத்த தங்கை பவானி தான் அழைத்திருந்தாள்.

"சொல்லு மா... நீ எப்படி இருக்க?" என்று எடுத்தவுடனேயே கேட்டார்.

"நான் நல்லா இருக்கேனா? என்ன அண்ணா... உங்க குரல்ல ஒரு சந்தோஷத்தையே காணோம்? முன்னாடிலாம் என்கிட்டப் பேசும்போதே உங்க குரல் அவ்வளவு உற்சாகமா இருக்கும். இன்னைக்கு ஏதோ வேண்டா வெறுப்பா பேசுற மாதிரி இருக்கு?" என்று பவானி கேட்டாள்.

காத்தவராயனுக்கு முதல் முறையாகத் தங்கை மீது ஒருவிதச் சலிப்புத் தோன்றியது.

"அப்படியெல்லாம் ஒன்னும் இல்லம்மா... நீங்களா எதையாவது யோசிக்கக் கூடாது. சொல்லு, என்ன விஷயமா போன் பண்ணிருக்க?" என்றார்.

"நாங்க எல்லாரும் இப்போ ஆனந்தி வீட்லதான் இருக்கோம். இன்னைக்கு உங்க வீட்டுக்குத்தான் வரோம். ஒரு நாள் லீவு போட முடியுமா?" என்றாள்.

அவருக்குச் சுருக்கென்று இருந்தது. வெளிநாட்டில் இருக்கும் தங்கை ஊருக்கு வந்துவிட்டுத் தன் வீட்டிற்கு வராமல், ஆனந்தி வீட்டிற்குச் சென்றிருக்கிறாள். அதுவும் நாலு தங்கைகளும் ஒன்றாகச் சேர்ந்து கொண்டு அங்கே இருக்கிறார்கள். ஒரு வலியோடு சிரித்துக்கொண்டவர், "இன்னைக்கு ஒரு முக்கியமான வேலையா வெளிய போகணுமா... ஒரு மணி நேரம் பர்மிஷன் எடுத்துட்டு வர்றேன். நீங்க வாங்க, என்ன விஷயம்னு நேர்ல பேசலாம்," என்றார்.

"என்னண்ணா இது? முன்னாடிலாம் நாங்க ஊருக்கு வரோம்னு சொன்னா ஒரு வாரம் லீவு போடுவீங்க. இப்ப ஒரு மணி நேரம் பர்மிஷன் சொல்றீங்க?" என்று தங்கை சிணுங்கினாள்.

"முன்னாடிலாம் நீங்க ஊருக்கு வர்றதுக்கு முன்னாடி, 'அண்ணன் வீட்டுக்கு வரட்டுமா?'ன்னு கேட்டுட்டு வருவீங்க. இன்னைக்கு 'ஆனந்தி வீட்ல இருக்கேன்'னு சொல்றீங்க..." என்றார் அமைதியாக. மறுமுனையில் அமைதி நிலவியது.

வெண்பா பதட்டமாகத் தன் கணவனைப் பார்த்தாள். "சரி வாங்க," என்று சொல்லிப் போனை வைத்தார்.

"நல்ல காலம் வெண்பா, பிள்ளைகள் இப்போ வீட்ல இல்லை. இவங்க நாலு பேரும் கூடி ஏதோ முடிவு பண்ணிருக்காங்க. நான் அவசரப்பட்டு ஆனந்திகிட்டப் பொண்ணு கேட்டு மானத்தை விடல. பாப்போம், என்ன பண்றாங்கன்னு," என்றார்.

"சரிங்க... அப்போ போயிட்டு ஒரு கோழி வாங்கிட்டு வாங்க, நான் சமைக்கிறேன்," என்றாள் வெண்பா.

வெண்பாவின் அந்த வெள்ளை மனதை நினைத்துப் பாராட்டிவிட்டு, கவலையுடனேயே வெளியே சென்றார். "அதெல்லாம் வேண்டாம் வெண்பா. இருக்கிறதைச் சமைப்போம். எனக்குத் தெரிஞ்சு அவங்க இன்னைக்குச் சாப்பிட வரமாட்டாங்க. ஏதோ முடிவோடதான் வராங்க," என்றார்.

அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே, தங்கைகள் நால்வரும் தங்கள் குடும்பத்துடன் வீட்டிற்குள் நுழைந்தனர்.

"வாங்கம்மா... வாங்க மாப்பிள்ளைங்களா... உட்காருங்க எல்லாரும். வெண்பா, பாய் எடுத்துப் போடுமா," என்று வரவேற்றார்.

"என்னண்ணா இது... இங்க வெறும் ஹாலா இருக்கு? சோபாவை காணோம்?" என்று மூன்றாவது தங்கை கவிதா நக்கலாக கேட்டாள்.

"சோபா கிழிஞ்சு போச்சுமா, அதான் தூக்கிப் போட்டுட்டேன். புதுசா வாங்கணும்," என்றார் காத்தவராயன்.

"இப்போ அண்ணன் அதெல்லாம் வாங்குற நிலைமையில இல்லை கவிதா, அதான் வாங்கல," என்று கார்த்திகா குத்தலாகப் பேசினாள்.

தன் அண்ணன் தனக்காக எவ்வளவோ செய்திருக்கிறார் என்பதை ஒரு நிமிடம் கூட அவள் நினைக்கவில்லை.

வெண்பாவின் மனதுக்குள் அது முள்ளாய் தைத்தது. ஆனாலும் அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல், "எல்லாரும் உட்காருங்க," என்று உபசரித்துவிட்டுத் தேநீர் தயாரிக்கச் சென்றாள்.

"அண்ணி, டீ எல்லாம் எதுவும் வேண்டாம். வந்து உட்காருங்க. நாங்க ஒரு முக்கியமான விஷயம் பேசத்தான் வந்திருக்கோம்," என்று ஆனந்தி அதிகாரமாகக் கூப்பிட்டாள்.

அப்போது வெளியே போயிருந்த நகை உள்ளே வந்தாள். தன் அத்தைகள் குடும்பத்தோடு வந்திருப்பதைப் பார்த்ததும் அவளுக்குத் தானாகவே மகிழ்ச்சி வந்தது. அவர்களுடன் பிரனேஷ் அமர்ந்திருப்பதைப் பார்த்ததும் அவள் முகம் இன்னும் பிரகாசமானது. ஆனால், அவனோ அவளை ஏறிட்டும் பார்க்காமல் தலைகுனிந்து அமர்ந்திருந்தான்.

"அத்தை... எல்லோரும் எப்ப வந்தீங்க? எப்படி இருக்கீங்க?" என்று ஆசையாகக் கேட்டாள் நகை.

"நாங்க நல்லா இருக்கோம்மா... நீ உள்ள போய் உட்காரு. பெரியவங்க நாங்க ஏதோ பேசிட்டு இருக்கோம்ல," என்று ஆனந்தி முகத்தில் அடித்தாற்போல் பேச, நகை அதிர்ச்சியில் தந்தையைப் பார்த்தபடி அறைக்குள் சென்று விட்டாள்.

காத்தவராயன் தன் தங்கைகளைப் பார்க்க, ஆனந்தி நேரடியாக விஷயத்திற்கு வந்தாள். "அண்ணா, சுத்தி வளைச்சு பேச விரும்பல. என் மகனுக்குப் பொண்ணு பார்த்துட்டேன். நல்ல வசதியான இடம். நிறைய நகை போடப் போறாங்க. பொண்ணு வீட்ல பேசி முடிச்சுட்டேன். நம்ம எல்லாருக்கும் தெரிஞ்ச பொண்ணுதான்," என்றாள்.

காத்தவராயனும் வெண்பாவும் அதிர்ச்சியில் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். இதைக் கேட்டுக்கொண்டிருந்த நகை உள்ளுக்குள் அப்படியே உடைந்து போனாள். அவள் கண்கள் கலங்கின.

"யாரு அந்தப் பொண்ணு?" என்று வெண்பா தன் ஏமாற்றத்தை மறைத்துக் கொண்டு கேட்டாள்.

"வாசவி தான்! நல்ல வசதியான குடும்பம். பொண்ணுக்கு நூறு பவுன் நகை போடுறேன்னு சொல்லிருக்காங்க. 20 லட்சம் ரொக்கம் தர்றாங்க. கார், வண்டி, சீர்வரிசைன்னு எல்லாம் அள்ளிக் கொடுக்குறாங்க. இதைவிட ஒரு வசதியான பொண்ணு நமக்கு எங்க கிடைக்கும்? பையனுக்கும் பொண்ணுக்கும் ஒருத்தரை ஒருத்தர் ரொம்பப் பிடிச்சுப் போச்சு. நீங்க பையனுக்குத் தாய்மாமன்... நீங்கதானே முன்னாடி நின்னு எல்லாத்தையும் செஞ்சு முடிக்கணும்," என்றாள் ஆனந்தி.

"நல்லதுதான்... ஆனா இப்போ இதைச் செய்யுற நிலைமையில அண்ணன் இல்லை," என்று ஏக்கமாகக் காத்தவராயன் சொல்ல, தங்கைகள் நால்வரும் அவரை ஒரு மாதிரியாகப் பார்த்தனர்.

"அண்ணா, என்ன சொல்ற நீ?" என்று கார்த்திகா சட்டென்று கேட்டாள்.

"உண்மையாத்தான் சொல்றேன் கார்த்திகா. நான் வந்து எல்லாவற்றையும் முன்ன நின்னு பேசுறேன், கூட இருந்து பார்த்துக்கிறேன். ஆனா, ஒரு தாய்மாமனா என்னால இப்போ பெருசா எதுவும் செய்ய முடியாது. ஏற்கனவே வாங்குன கடனெல்லாம் கழுத்தை நெரிக்குது. இதுல புதுசா செலவு பண்ண என்னால முடியாது. என்னால முடிஞ்சதை மட்டும் நான் செய்றேன்," என்றார்.

"அதெல்லாம் முடியாதுண்ணா! அது அப்புறம் மரியாதையா இருக்காது. நீ அஞ்சு பவுன் நகை பையனுக்கு எடுத்துப் போடணும். கல்யாணத்தை ரொம்ப ஆடம்பரமா நடத்தணும். நான் நிறைய ஆசையோட வந்திருக்கேன். நீ என்னன்னா எதுவுமே முடியாதுன்னு சொல்ற? என் பையன் என்ன அவ்வளவு கீழையா கிடக்கிறான்?" என்று ஆனந்தி கோபமாகக் கேள்வி கேட்டாள்.

காத்தவராயன் அப்படியே நிலைகுலைந்து போனார். தன் கஷ்டங்களை இவ்வளவு சொல்லியும், கூடப் பிறந்தவள் இப்படிப் பேசுகிறாளே என்று அவர் மனது சுக்குநூறாக உடைந்தது.
 
ச்சீ....என்ன இது இப்படி இருக்காங்க😬😬😬😬😬
காத்து நீங்க முடியவே முடியாதுனு சொல்லுங்க
 
Top Bottom