• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

செதுக்கிய சிற்ப பாவையே - 7

Vishakini

Moderator
Staff member
சிற்ப பாவை - 7

“ஆனந்தி... நீ தெரிஞ்சுதான் பேசுறியா? நான் இப்ப என்ன நிலைமையில இருக்கேன்னு மத்தவங்களுக்குத் தெரியாம இருக்கலாம், ஆனா என் பக்கத்துலயே இருக்கிற உனக்கு அது நல்லாவே தெரியும். இன்னைக்கு நீ கேட்கிறதெல்லாம் நான் செய்யணும்னா, என் தலையை அடமானம் வைச்சாலும் என்னால செய்ய முடியாது. ஆனா, நான் எதுவுமே செய்யலன்னு ஒதுங்கிக்கிறேன்னு சொல்லலையே... என்னால முடிஞ்சதை நான் செய்கிறேன் என்றுதானே சொல்கிறேன்!” என்று ஆற்றாமையுடன் பேசினார் காத்தவராயன்.

“நீ செய்யக் கூடாதுன்னு நினைக்கிற உன் பொண்ணை என் பையனுக்குக் கட்டலைன்னுதானே நீ இந்த மாதிரி பேசுற!” கோபம் தலைக்கேற, ஆனந்தி அங்கிருந்த நாற்காலியை விட்டு சட்டென்று எழுந்து நின்று கத்தத் தொடங்கினாள்.

“நீ என்ன பேசிட்டு இருக்க ஆனந்தி? எனக்கோ, என் மகளுக்கோ அப்படி எந்த ஆசையும் கிடையாது. உன் பையனைக் கட்டிக்கணும்னு என் பொண்ணு என்னைக்குமே ஆசைப்படலை. ஒரு தாய்மாமனா நான் நின்னு செய்ய வேண்டியது என் கடமை, என் பொறுப்பு... அதை நான் செய்வேன். ஆனா இப்ப என்னால முடியல... கடன் சுமை தாங்க முடியல! நான் இவ்வளவு சொல்லியும் நீ அதைப் புரிஞ்சுக்காம கத்துறன்னா, அப்ப உன் அண்ணனை விட உனக்கு வேற என்ன முக்கியம்? நீங்க நாலு பேரும் இன்னைக்குக் கூடிப் பேசிட்டு தான் இங்க வந்திருக்கீங்க... அப்ப இதுக்கு என்ன அர்த்தம்?”
காத்தவராயன் முழு கோபத்தோடு கத்த, அவர் கண்கள் ரத்தம் எனச் சிவந்தன.

அவர் குரலில் இருந்த ஆக்ரோஷத்தில், வாசலில் நின்றிருந்த தங்கைகள் நால்வரும் அப்படியே வாயடைத்துப் போய் நின்றனர்.

இதுவரை காத்தவராயன் தன் தங்கையிடம் இந்த அளவு கோபத்தைக் காட்டியதே இல்லை. எப்போதும் பெண் பிள்ளைகள் என்றால் அவருக்கு ஒரு தனி பாசம், அவர்கள் மீது அவர் சினம் கொண்டு பார்த்ததே இல்லை.

“அண்ணா... அது வந்து... ஏதோ...” என்று பவானி தயங்கித் தயங்கி சமாளிக்க முயன்றாள்.

“நீங்க போங்க... முதல்ல எல்லாரும் இங்கிருந்து கிளம்புங்க! போய் உங்க வேலையைப் பாருங்க. நான் என்ன செய்யணும், இதுவரைக்கும் எல்லாருக்கும் எப்படிச் செஞ்சிருக்கேன்னு எனக்குத் தெரியும். என் குடும்பம் எப்படிப் போனா உங்களுக்கு என்ன? உங்களுக்கு என்ன... ஊர் முன்னாடி நெஞ்சை நிமிர்த்திக்கிட்டு நிக்கணும், ‘என் அண்ணா அதைச் செஞ்சான், இதைச் செஞ்சான்’னு பெருமையா சொல்லிக்கணும்... அவ்வளவுதானே? அதுக்காக என் உசுரை வாங்காதீங்க!” என்று ஆவேசத்துடன் வாசலைக் காட்டினார்.

நால்வரும் அவமானத்தால் முகம் கருக வெளியே வந்தனர். ஆனால் ஆனந்திக்கு மட்டும் ஆத்திரம் அடங்கவே இல்லை.

“என் பையனுக்கு நீ எதுவுமே செய்ய வேண்டாம். இனி உனக்கும் எனக்கும் எந்த உறவும் கிடையாது! ‘எழுந்து வெளியில போ’ன்னு சொல்லிட்ட இல்ல? எங்கள இனிமேல் இந்த வீட்டுக்குள்ள பார்க்க முடியாது. நாங்களும் வரமாட்டோம்; நீயும் எங்க வீட்டுக்கு வராத. என் பையன் கல்யாணத்துக்கு நீ வந்துடாத! அதையும் மீறி நீ வந்து நான் அசிங்கப்பட்டு போக விரும்பல. என்னதான் நீ ‘இல்ல இல்ல’ன்னு சொன்னாலும், உன் பொண்ணை வச்சு என் பையனை வளைத்துப் போட நீங்க நினைச்சது இந்த ஊருக்கே தெரியும். அஇவனை பார்த்துட்டு வெட்கப்பட்டு சிரிக்கிறதெல்லாம் நான் பார்க்காம இல்ல. ஆனா என் பையனை யாராலும் வளைக்க முடியாது. நான் என் தகுதிக்கு ஏற்ற மாதிரிதான் மாப்பிள்ளை பார்ப்பேன், பொண்ணு பார்ப்பேன். தயவுசெஞ்சு நீயும் உன் குடும்பமும் கல்யாணத்துக்கு வராதீங்க!” என்று நக்கலாகக் கையெடுத்துக் கும்பிட்டு விட்டு செல்ல, அக்கம் பக்கம் இருந்தவர்கள் எல்லாம் வீட்டு வாசலுக்கு வந்து ஒரு மாதிரி எட்டிப் பார்த்தனர்.

காத்தவராயன் அப்படியே நிலைகுலைந்து, மனம் உடைந்து நின்றார்.

அவர் மனைவி வெண்பா, கண்கள் கலங்கச் சிலையென நின்று கொண்டிருந்தார். உள்ளே, அவர் மகள் நகை, தன் கண்ணீரைத் துடைக்கப் பாடுபட்டுக் கொண்டிருந்தாள்.

அவள் எதைச் சொல்லித் தன் மனதைத் தேற்றுவாள்? தன் தாய் தந்தையை முகம் கொடுத்துப் பார்க்கவே அவளுக்கு அவமானமாக இருந்தது.

காதலித்தது அவள் தப்பல்ல, ஆனால் அவள் காதலித்த நபர் தப்பானவர் என்பதை இப்போது உணர்ந்து கொண்டாள். அதிலும் தன்னால் தன் தந்தை ஊர் முன்னாடி அவமானப்பட்டு நிற்பதை அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. ஆறாத ரணமாக அது அவளுக்குள் ஆழமாகப் பதிந்து போனது.

ஏற்கனவே காத்தவராயன் கடன் பிரச்சினையில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்தார். கடன் கொடுத்தவர்கள் எல்லாம் ‘இத்தனை நாட்களுக்குள் கடனைத் திருப்பிக் கொடுக்க வேண்டும்’ என்று நெருக்கடி கொடுத்துக் கொண்டிருந்தார்கள். இதில் தன் மகள் ஆசைப்பட்ட வாழ்க்கையையும் அவளுக்கு அமைத்துக் கொடுக்க முடியவில்லையே என்ற வேதனைதான் அவரை அப்படிக் கத்த வைத்தது.

ஆனால், அவர் ரத்தமான உடன் பிறந்தவர்களோ, சாதாரண சீர்வரிசைக்காக உறவையே முறித்துக் கொண்டு சென்றுவிட்டனர். அவர்களை மீண்டும் தேடிச் செல்லவும் அவரிடம் மனவலிமை இல்லை.

நகை தன் தந்தையின் முகத்தைப் பார்க்க முடியாமல், ஒரு மூலையில் ஒடுங்கிப் போயிருந்தாள்.

“வெண்பா... பொண்ணைப் பார்த்துக்கோ. எது நடக்கணுமோ அது நடக்கட்டும். இனிமேல் என்னால எதுவும் பண்ண முடியாது. கவலைப்படாமல் இரு,” என்று சொல்லித் தன் மனைவியின் கன்னத்தில் மென்மையாகத் தட்டிக் கொடுத்து விட்டு வெளியேறினார்.

ஆனால், இதுவே அவர்களின் கடைசி ‘உரிமைத் தீண்டலாக’ இருக்கும் என்று அவர்கள் கனவிலும் நினைக்கவில்லை.

தாளாத வேதனையோடு தன் புல்லட்டில் கிளம்பியவர், அந்த வளைவில் திரும்பும் போது வழக்கமாகத் தன் மனைவிக்குச் சொல்லும் அந்த ‘பாய்’ சொல்ல கூட மறந்து விட்டார். அவர் சென்று சரியாக ஒரு மணி நேரம் தான் ஆகியிருக்கும்.

வெண்பாவின் போனுக்கு அவர் கணவர் எண்ணிலிருந்து அழைப்பு வந்தது.
கணவரை அனுப்பிவிட்டு மகளைத் தேடி வெண்பா அறைக்குள் வர, அவளோ தாயை நிமிர்ந்து பார்க்கக் கூட திராணியில்லாமல், தன் காலுக்குள் முகத்தைப் புதைத்துக் கொண்டு முட்டியைப் பிடித்தபடி குலுங்கிக் குலுங்கி அழுது கொண்டிருந்தாள்.

‘இவள் மேல் எந்தத் தப்பும் இல்லையே, இந்த வயதில் உருவாகும் ஆசை இயல்பானது தானே’ என்று வெண்பாவுக்குத் தெரியும்.

அவரும் ஒரு காலத்தில் காதலித்து மணம் புரிந்தவர் தான். ஆனால், அவர் காதல் கைகூடியது; அவர் மகளின் காதலோ ஏமாற்றத்தில் முடிந்தது.

“நகை... அம்மாவைப் பாருடா... உன் மேல எந்தத் தப்பும் இல்லை கண்ணா.”

“அம்மா... சாரிம்மா...” என்றாளே தவிர வேறு எதுவும் பேசவில்லை. அவள் அழுது கொண்டே இருக்க, அவளைத் தேற்ற முடியாமல் வெண்பாவும் தடுமாறினார்.

அப்போதுதான் போன் ஒலிக்க, பதற்றத்துடன் எடுத்து “சொல்லுங்கள்” என்றார்.

ஆனால், எதிர்முனையில் சொல்லப்பட்ட செய்தி அவரைக் கணப்பொழுதில் துடிக்க வைத்தது.

“என்னங்க!” எனக் கண்ணீரோடு அவர் அலற, அழுது கொண்டிருந்த நகையும் ஓடி வந்தாள்.

“அம்மா... என்னம்மா ஆச்சு? ஏன் இப்படி அழறீங்க?” போனில் யாரோ பேசுவதைக் கேட்டு, உடனே போனைப் பிடுங்கி காதில் வைத்தாள்.

“ஹலோ... யார் பேசுறீங்க?”

“அம்மா, இந்த போன் வச்சிருந்தவருக்கு ஆக்சிடென்ட் ஆயிடுச்சுமா. ‘மனைவி’ன்னு இந்த நம்பர் சேவ் ஆகியிருந்தது, அதான் கால் பண்ணேன். தயவுசெஞ்சு ஹாஸ்பிட்டல் வாங்க,” என்று இடத்தைக் கூறிவிட்டு இணைப்பைத் துண்டித்தார்.

நகைக்குத் தலை சுற்றியது.
தாயைத் தாங்கிக்கொண்டு, பக்கத்து வீட்டுக்காரர் உதவியுடன் பதறியடித்து மருத்துவமனைக்கு ஓடினர். அங்கே காத்தவராயன் ஐ.சி.யுவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். நீண்ட காத்திருப்புக்குப் பிறகு மருத்துவர் வெளியே வர, நகையின் கைகள் நடுங்கின.

வெண்பா சுயநினைவை இழந்தவர் போல வெறித்த பார்வையுடன் நாற்காலியில் அமர்ந்திருந்தார்.

“நீங்க யாருமா?” என்று மருத்துவர் கேட்டார்.

“உள்ள இருக்கிறவர் என் அப்பா டாக்டர்.”

அருகில் ஜடம் போல அமர்ந்திருந்த வெண்பாவைக் காட்டி, “இவங்க யாரு?” என்றார்.

“அவங்க என் அம்மா டாக்டர். அப்பாவுக்கு இப்ப என்ன ஆச்சு? அவர் எப்படி இருக்காரு?” என்று கேட்டு முடிப்பதற்குள் அவள் உயிர் ஒருமுறை போய் வந்தது.

“உங்க அப்பா உயிரோடதான் இருக்காருமா. ஆனா... அவரோட கால் ரொம்பப் பாதிச்சுப் போச்சு. ரெண்டு கையிலயும் பலமான அடி. இனிமேல் அவர் எழுந்து நடப்பாரான்னு தெரியல.”
அந்த வார்த்தைகளைக் கேட்ட அடுத்த நிமிடம் வெண்பா மயங்கி சரிந்தார்.

நகை நிலைகுலைந்து போனாள். அப்பாவை நினைத்து அழுவதா, தாயைப் பார்ப்பதா, இல்லை மருத்துவர் சொன்ன கொடூரமான உண்மையைத் தாங்குவதா? உயிர் ஊசலாடுவது போல மருத்துவரை வெறித்துப் பார்த்தாள்.

“எங்களால முடிஞ்ச வரைக்கும் முயற்சி பண்றோம். ஆனா, இதுக்கு நிறையச் செலவாகும். உங்களால முடியலன்னா நீங்க இவரை கவர்மெண்ட் ஹாஸ்பிட்டலுக்கு கூட்டிட்டுப் போயிடுங்க.”

அவர்களிடம் இருந்ததோ சொற்பமான செல்வம். அவளையும் சேர்த்து மூன்று பெண்களின் காதில் இருக்கும் தோடு, கொலுசு, அப்புறம் அவசரத்திற்கு வைத்திருந்த இரண்டு சவரன் நகை மட்டுமே. அது இருக்கும் வரை கொடுத்து அப்பாவைப் பார்த்துக்கொள்ளலாம் என்று முடிவெடுத்தாள் நகை.

“டாக்டர்... என்னால முடியலன்னு தோணும்போது நானே அப்பாவை கவர்மெண்ட் ஹாஸ்பிடல் கூட்டிட்டுப் போறேன். அதுவரைக்கும் இங்கேயே ட்ரீட்மென்ட் கொடுங்க.”

“இங்க பாருமா... பில் கட்டலைன்னா நாங்க ட்ரீட்மென்ட் பண்ண முடியாது. ஃப்ரியா இங்க எதுவுமே நடக்காது,” என்று அவளை ஒரு ஏளனப் பார்வையுடன் கூறிவிட்டுச் சென்றார் அந்த மருத்துவர்.

எங்கும் பணம்... எதிலும் பணம்! உள்ளுக்குள் கதறியவள், “கரெக்டா பில் கட்டிடுவோம் டாக்டர். ஒருவேளை என்னால முடியலன்னா அப்பாவை டிஸ்சார்ஜ் பண்ணி அழைச்சிட்டுப் போயிடுறேன்,” என்றாள் கண்ணீரை விழுங்கியபடி.

கையில் இருந்த கொஞ்சம் நஞ்சப் பணமும் கரைந்து கொண்டிருந்தது. காத்தவராயன் தங்கைகளுக்கு செய்தி சொல்லப்பட்டது. ஆனால் ஒருவர் கூட திரும்பிப் பார்க்கவில்லை.

அக்கம் பக்கத்தினரும் வரவில்லை. உள்ளுக்குள் உடைந்து போனாள் நகை. கூட்டுக் கிளியாக, மென்மையான சுபாவம் கொண்டவளாக வளர்ந்தவள், இன்று ஆதரவின்றி நின்றாள்.தங்கைகளைப் பார்ப்பதா? தாயைத் தேற்றுவதா? தந்தையைக் காப்பதா? ஒரே நாளில் அவள் வாழ்வே சூனியமானது போலிருந்தது.

யாரோ கண்ணைக் கட்டி நடுக்காட்டில் தவிக்க விட்டது போல அந்த மருத்துவமனை வராண்டாவில் தனித்து நின்றாள் நகை. உள்ளம் பெரும் குரலில் கதறியது சத்தமில்லாமல்.

துவண்டு போகவில்லை. எப்படியாவது தந்தையை காப்பாற்ற வேண்டும் என்று போராடினாள். அனைவரையும் தன் தோளில் தாங்கினாள். மூத்த பொறுப்புள்ள பிள்ளையாக தைரியமாக தந்தைக்காக நின்றாள்.
 
Top Bottom