• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

செதுக்கிய சிற்ப பாவையே - 8

Vishakini

Moderator
Staff member
சிற்ப பாவை - 8

ஒரு மாத காலப் போராட்டத்திற்குப் பிறகு, காத்தவராயன் இன்று தன் வீட்டுப் படுக்கையில் அசைவற்றுக் கிடந்தார்.

ஒரு காலத்தில் அந்தப் பகுதியே வியந்து பார்த்த மனிதன், இன்று படுத்த படுக்கையாகி விட்டார்.

"இனி நடக்க முடியாது... காலம் முழுதும் இப்படித்தான் படுத்த படுக்கையாக வாழ வேண்டியதுதான்... அவரால் இனி ஒரு துரும்பை கூட எடுத்துப் போட முடியாது" என்ற மருத்துவர்களின் வார்த்தைகள் அந்த வீட்டையே இடியாக தாக்கியது.

கையில் இருந்த ஒவ்வொரு ரூபாயும் மருத்துவமனை வாசலிலேயே கரைந்து போனது. சேமிப்பு மொத்தமும் செலவானது. நிலைமை மோசமாகத் தொடங்க, வீட்டில் இருந்த நகைகள் ஒவ்வொன்றாக விடைபெற்றனர்.

காலில் கிடந்த கொலுசு முதல், முகத்தில் மினுமினுத்த மூக்குத்தி வரை அனைத்தும் அடகு கடைக்குப் போய்விட்டன. இப்போது அந்த வீட்டில் விற்கவும் எதுவுமில்லை, உருப்படியாக மிஞ்சவும் எதுவுமில்லை.
தந்தையை ஒரு வழியாக வீட்டிற்கு அழைத்து வந்தாகிவிட்டது. ஆனால், உள்ளே நுழைந்த போது தான் அந்த வெற்றிடம் தெரிந்தது.

வீட்டில் ஒரு பிடி அரிசியோ, அன்றாட மளிகைப் பொருட்கள் வாங்க கூட கையில் காசு இல்லை. மகள்களும் வெண்பாவும் செய்வதறியாது தந்தையைச் சுற்றி அமர்ந்திருந்தனர். அந்தக் கண்ணீரில் பசியும் கலந்திருந்தது.

இதற்குள் வட்டிக்குக் கொடுத்தவர்களும், கைமாற்றுக் கடன் கொடுத்தவர்களும் வீட்டு வாசலை மிதிக்க தொடங்கினர்.

"மனுஷன் இப்படிப் படுத்துட்டாரே" என்ற இரக்கத்தை விட, "எங்க காசு என்னாச்சு?" என்ற அக்கறை தான் அவர்களிடம் மேலோங்கி நின்றது.

கவி பசியின் கொடுமையால் கண்கள் சொருகி மயங்கிவிட, அதைப் பார்த்த வெண்பா தேம்பித் தேம்பி அழுதார். தன் தங்கையின் பசியையும் தாயின் கண்ணீரையும் காணச் சகிக்காதவள் நகை சுவரில் தொங்கிய அந்தப் பழைய வெள்ளி விளக்கை மட்டும் எடுத்துக் கொண்டாள்.

அதுதான் அந்த வீட்டில் முன்னோர்கள் கடைசியாக விட்டு இருந்த அடையாளம். அதைத் தூக்கிக்கொண்டு ஊர் வசைபாடினாலும் பரவாயில்லை என்ற வேகத்தில் அடகுக்கடை நோக்கி ஓடினாள்.

அடகுக்கடையில் மெக்கானிக் பரந்தாமன் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தான். உள்ளே நுழையப் போனவள் அவனைப் பார்த்ததும் ஒரு நிமிடம் தயங்கி நின்றாள். அவள் கண்களில் இருந்த அந்தத் தவிப்பையும், கையில் இருந்த விளக்கையும் பார்த்த பரந்தாமனுக்கு விஷயம் புரிந்துவிட்டது.

அவள் பார்வையின் அர்த்தம் உணர்ந்து, அவள் சங்கடப்பட கூடாது என்பதற்காக அங்கிருந்து ஒரு வார்த்தை கூடப் பேசாமல் எழுந்து தள்ளிச் சென்றான்.

அந்த விளக்கை விற்றதில் கிடைத்த பணத்தில், வீட்டிற்குத் தேவையான அரிசி, பருப்பு எனச் சில பொருட்களை வாங்கிக் கொண்டு வீடு திரும்பினாள். ஆனால், வீட்டு வாசலில் கடன் கொடுத்த இருவர் எமதூதுவர்கள் போல நின்றிருந்தனர்.

"என்னம்மா... வீட்ல வெறும் பொம்பளைங்க தான் இருக்கீங்க, நாங்க எதுவும் தப்பாப் பேசக் கூடாதுன்னு தான் பார்க்கிறோம். ஆனா எங்க நிலைமையும் உங்களுக்குப் புரியும் இல்லையா? உன் அப்பா என்கிட்ட ரெண்டு லட்சம், இவர்கிட்ட ஒரு லட்ச ரூபாய் கடன் வாங்கியிருக்காரு. இப்படியே காலம் தள்ளுனா எப்படி? எப்படிப் பணத்தை அடைக்கப் போறீங்க?" என மிரட்டலாகக் கேட்டனர்.

நகை எதுவும் பேசாமல் தலை குனிந்து நின்றிருந்தாள். யாரிடம் என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை. விளக்கை விற்றதில் கையில் கொஞ்சம் மீதப் பணம் இருந்தது.

"இதுல வட்டி இருக்கு... இப்போதைக்கு இந்த வட்டி மட்டும் வச்சுக்கோங்க. அம்மா கிட்ட பேசிட்டு நான் உங்களுக்கு மத்ததைச் சொல்றேன்," எனத் தற்காலிகமாக அவர்களைச் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தாள்.

உள்ளே படுக்கையில் காத்தவராயன் கண் திறந்தே இருந்தார். ஆனால், யாரிடமும் பேச முடியாத நிலை. மனைவியின் குமுறல் சத்தம், மகள்களின் கண்ணீர், தன் இன்றைய கையறு நிலை என நினைத்து அவர் மனதிற்குள் முற்றிலும் குலைந்து போனார்.

இதுவரை 'என் தங்கைகள்... என் ரத்தங்கள்' என்று யாருக்காகவெல்லாம் ஓடி ஓடி உழைத்தாரோ, அவர்கள் யாரும் இப்போது இல்லை. அன்றுதான் வாழ்வின் உண்மையான முகமூடி கழன்று விழுந்தது.

"அவர்களுக்கென்று செய்ததில் ஒரு பகுதியாவது... தன் பிள்ளைகளுக்காக எடுத்து வைத்திருந்தால், இன்று இந்த வலியும் அவமானமும் அவர்களுக்கு இல்லையே" என்று நினைத்து அந்த மனிதன் கூனிக் குறுகிப் போனார்.

'தங்கைகள், தங்கை பிள்ளைகள்' என்று வாழ்நாள் முழுவதையும் அவர்களுக்காகத் தாரை வார்த்தார். ஆனால் இன்று, தன் அண்ணன் இப்படி ஒரு நிலையில் கிடக்கிறான் என்று தெரிந்தும் கூட அவர்களில் ஒருவர் கூட எட்டிப் பார்க்கவில்லை.

கொடுமையிலும் கொடுமையாக, அதே நேரத்தில் அனைவரும் கூடி பிரனேஷ் திருமணத்திற்குப் பளபளவென பத்திரிகை அடித்திருந்தனர்.

உறவுகள் என்ற சொல்லையே அந்த மொத்தக் குடும்பமும் வெறுத்துப் போனது.
யாரிடமும் சொல்லாமல் நகை ஒரு முடிவெடுத்தாள். அந்த முடிவில் அவள் மிகத் தீர்க்கமாக இருந்தாள். தன் அப்பாவிடமோ, அம்மாவிடமோ, குடும்பத்திலோ கலந்து ஆலோசிக்கவில்லை. யாருடைய அனுமதியையும் எதிர்பார்க்காமல் அதற்கான அடுத்தகட்ட நகர்வுகளில் இறங்கினாள்.

பல நாட்கள் வறுமையும் பசியுமாக அந்தக் குடும்பம் அல்லோலபட்டது. காசு கையில் புழங்கினாலும், அது தந்தையின் மருந்துக்கும், அவருக்குத் தேவையான சத்தான உணவுகளுக்கும், தங்கைகளின் கல்விச் செலவிற்கும் என மிகச் சரியாக இருந்தது.

ஒரு ரூபாயைக் கூட வீணாக்காமல் நகை தன் குடும்பத்தை இறுக்கிப் பிடித்து வாழ்ந்து கொண்டிருந்தாள். ஆனால், வெண்பாவோ தன் கணவரின் நிலையைக் கண்டு முற்றிலும் பித்து பிடித்தவர் போல மாறிப் போனார்.

மெல்ல மெல்ல அந்தக் குடும்பம் முழுவதுமே நகையின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. ஒரு தாயைப் போல அனைவரையும் அரவணைத்து பார்த்துக் கொண்டாள். அந்த வறுமை நிலையிலும் அவள் செய்த ஒரே நல்ல காரியம், தங்கைகளின் படிப்பை மட்டும் பாதியில் நிறுத்தவில்லை. அவர்களைக் கட்டாயப்படுத்தி பள்ளிக்கும் கல்லூரிக்கும் அனுப்பி வைத்தாள்.

அவள் எடுத்த அந்த ரகசிய முடிவின்படி, ஒவ்வொரு படியாக அவள் வாழ்வில் ஏறிக் கொண்டிருந்தாள்.
உறவுகள் கைவிட்டாலும், காத்தவராயனின் பழைய நண்பர்கள் சிலர் அவ்வப்போது உதவி செய்தனர். தங்களால் முடிந்த சிறு சிறு தொகையையோ அல்லது பொருட்களையோ கொண்டு வந்து கொடுத்தனர்.

அன்று காத்தவராயனை மீண்டும் ஒரு முறை மருத்துவப் பரிசோதனைக்கு அழைத்துச் செல்ல வேண்டியிருந்தது. மருத்துவச் செலவிற்காக வீட்டில் கடைசியாக இருந்த ஸ்கூட்டியையும் நகை விற்று விட்டாள். அதை வாங்கிக் கொண்டது அந்த மெக்கானிக் பரந்தாமன் தான்.

முழுமையாக முடங்கி பாதிக்கப்பட்ட தந்தையை எப்படி மாடியிலிருந்து கீழே இறக்குவது என்று தெரியாமல் நகை வாசலில் தவித்துக் கொண்டிருந்தாள். அவளது தவிப்பைக் கவனித்த பரந்தாமன் மெல்ல நெருங்கி வந்தான்.

"நான் ஏதாவது உங்களுக்கு உதவி செய்யவா?" என்று கேட்டான்.

அவனிடம் பேசத் தயங்கினாலும், "இனி இந்தத் தயக்கமும் மானமும் என் வாழ்க்கைக்கு சோறு போடாது" என்று அவள் மனது சொன்னது.

"அப்பாவை கொஞ்சம் கீழே கொண்டு வரணும்... ஹெல்ப் பண்றீங்களா?" என்று கேட்டாள்.

"வாங்க... நான் தூக்கிட்டு வரேன்," எனச் சொல்லிவிட்டு தயக்கமில்லாமல் வீட்டுக்குள் நுழைந்தான். அவன் கண்கள் அந்த வீட்டின் ஏழ்மையை அளவிடவில்லை; அவள் காட்டிய அறைக்குள் மட்டும் நேராகச் சென்றான். ஒரு காலத்தில் கம்பீரமாக வலம் வந்த காத்தவராயன் இன்று சிறு குழந்தையைப் போல படுக்கையில் கிடப்பதைப் பார்த்தான். பரந்தாமன் முகத்தில் நக்கல் இல்லை, நையாண்டி இல்லை. அவரைக் கண்டதும் அவன் உள்ளம் கலங்கியது. ஒரு தனி ஆளாக, மெல்ல அவரைத் தூக்கிக் கொண்டு மாடியிலிருந்து கீழே இறங்கி வந்தான்.

அதே நேரம், இரண்டு கட்டிடம் தள்ளி இருந்த காத்தவராயனின் பழைய நண்பர் ஒருவர் காரை எடுத்துக்கொண்டு வந்தார்…

"தம்பி, நீங்களே இவரை அழைச்சிட்டு போங்க. இன்னைக்கு எனக்கு வேற வேலை இருக்கு. இது டீசலுக்கு காசு," என அவசரமாகப் பணத்தைக் கொடுத்து விட்டுச் சென்றார்.

நகை அவரை நன்றியுடன் பார்த்தபோது, "நான் கஷ்டப்பட்ட காலத்துல காத்தவராயன் எனக்கு ஹெல்ப் பண்ணியிருக்கான். நாங்க எல்லாம் இருக்கோம்" என்று சொல்லிவிட்டு சென்றார்.

அந்த நண்பனைப் பார்க்கப் பார்க்க அவளுக்கு வேதனையாக இருந்தது.
அவர்கள் காரில் ஒன்றாகப் பயணித்தனர். அப்போது பரந்தாமன் தன் சட்டைப் பையிலிருந்து ஒரு விசிட்டிங் கார்டை எடுத்து நகையிடம் நீட்டினான்.

"இதுல என்னுடைய நம்பர் இருக்கு. உங்களுக்கு ஏதாவது ஒரு உதவி தேவைப்படும்போது தயங்காம என்னைக் கூப்பிடுங்க. கண்டிப்பா நான் செய்வேன். என்னால முடிஞ்ச உதவியை நான் செய்றேன். இந்த உதவி நான் ஏன் செய்றேன்னு உங்களுக்குத் தெரியாது, ஆனா உங்க அப்பாவுக்குத் தெரியும். ஒரு நல்ல மனுஷனுக்காகத்தான் இந்த உதவியைச் செய்றேன்" என்றான்.

நகை அந்த கார்டை வாங்கிப் பார்த்தாள். "பரந்தாமன் - பரந்தாமன் மெக்கானிக் ஷாப்" என்ற முகவரியும் எண்ணும் அதில் இருந்தது. அதைத் தன் கைப்பைக்குள் பத்திரமாக வைத்துக் கொண்டாள்.

மருத்துவமனையில் பரிசோதனைகள் முடியும் வரை அவன் அங்கேயே காத்திருந்தான். வெண்பாவிற்கும் நகைக்கும் தண்ணீர், டீ எனத் தன் சொந்தச் செலவிலேயே அனைத்தையும் கவனித்துக் கொண்டான்.
நாட்கள் நகர்ந்தன.

நகை எக்ஸாம் ரிசல்ட் பார்த்து விட்டு திரும்பி வந்த போது ஆனந்தி வீட்டு முன்பு பிரனேஷ் திருமண கட்டவுட் இருந்தது.

அதை கண்டு சில நொடி மவுனமாக பார்த்து விட்டு தாண்டி வந்தாள்.

பிரனேஷ் திருமணம் மிகவும் ஆடம்பரமாக, அவர்கள் எதிர்பார்த்த அத்தனை சீர்வரிசைகளுடன் நடந்து முடிந்தது. தன் காதலனுக்கு வேறொரு பெண்ணுடன் திருமணம் நடக்கிறது என்ற அந்த வலியை கூட நகையால் முழுமையாக உணர முடியவில்லை.

அவ்வளவு சோதனைகள் அவளைச் சூழ்ந்திருந்தன.
கொடுமையிலும் கொடுமையாக, அவள் இருந்த அதே குடியிருப்பில், அவள் வீட்டிலிருந்து மூன்றாவது கட்டிடத்தில் பிரனேஷ் குடும்பம் குடிவந்தனர்.

ஆனால், அது நகையைப் பாதிக்கவில்லை. தினமும் பிரனேஷைக் கடந்து செல்லும் போதும், அவள் அவனைக் கண்டுகொள்ளவே இல்லை. அவளின் ஒரு ஓரப்பார்வை கூட அவன் மீது விழவில்லை. வாழ்க்கையில் ஏற்படும் அதிரடி மாற்றங்கள் ஒரு மனிதனின் குணத்தையே மாற்றி விடும் என்பதற்கு நகை ஒரு சாட்சியாக நின்றாள்.

ஒரு நாள் காலை, "அம்மா... இன்னைக்கு அப்பாவைப் பார்த்துக்கோங்க. எனக்கு வெளியே கொஞ்சம் வேலை இருக்கு, நான் முடிச்சுட்டு சீக்கிரம் வந்துடுறேன். கையில கொஞ்சம் காசு இருக்கு, ஏதாவது அவசரம்னா பின்னாடி வீட்டுக்காரங்க கிட்ட கேளுங்க," என்றாள் நகை.

"நகை... ஏதாவது அவசரமான வேலையா? நீ எங்க போற? தனியா எங்கும் போகக் கூடாது" என்று தடுத்த காலங்கள் போய், இப்போது "நீ எங்கே போகிறாய்?" என்று கேட்கவே அஞ்சும் தாயை வேதனையுடன் பார்த்தாள்.
 
Top Bottom