• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

செந்தமிழ் - 1

Vishakini

Moderator
Staff member
செந்தமிழ்


கண்ணம்மா.
அத்தியாயம் 1.

தாயே தமிழே தன்னிகரற்றவளே!
நீயே சதம் என்று நின்னைச் சரணடைந்தேன்.
பண்பில் உயர்ந்தவளே! அன்பில் சிறந்தவளே!
மண்ணில் அமுதமென மனமகிழ்ச்சித் தருபவளே!
இயலாய், இசையாய், நாடகமாய் வடிவெடுத்து உயர்வான சிந்தனைகள் உள்ளத்தில் விதைப்பவளே!
கதையாய், கட்டுரையாய், கவிதையாய் உருமாறி
பதமான படிப்பினைகள் பாங்கோடு தருபவளே!
ஆழ்வார்கள் பாடல்களும், அற்புத நாலடியாரும்,
தாழ்வில்லா மதியளிக்கும் தரணிப் புகழ்த் திருக்குறளும்,
ஊழ்வினைகள் களையும் திருமந்திரமும், திருப்புகழும்
வாழ்வாங்கு வாழ்ந்திட நீ வழங்கிய நற்குடைகள் அன்றோ!
பற்பல மொழிகள் கற்ற நற்றமிழ் அறிஞரெல்லாம்
அருந்தமிழ் போல ஓர் மொழி அகிலத்தில் இல்லை என்பார்.
வள்ளுவன், இளங்கோ, கம்பன் வழங்கிய நூல்களெல்லாம்
வையகம் உள்ள மட்டும் வாழ்ந்திடும் மறைகள் அன்றோ?
நீ தந்த வரங்கள் அன்றோ;
வேதத்தின் வித்தாகும் கோதைத் தமிழளித்தாய்.
திருவாசகம் என்னும் திகட்டாத தேனளித்தாய்.
பன்னிரு திருமுறைகள்;
உள்ளத்தைப் பண்படுத்தும் உன்னதக் காப்பியங்கள்;
நன்னெறி நூல்களெல்லாம் நல்கினாய்த் தமிழ்த் தாயே.
உன்னை உணர்ந்தவர்கள் உள்ளத்தில் ஊனமில்லை.
உன் அன்பு வழிநடப்போர் எண்ணத்தில் பாவமில்லை.
உன் மடியில் தவழ்ந்திடவும்,
உன் மகவாய் வளர்ந்திடவும்
என்ன தவம் செய்தேனோ எனதருமைத் தமிழ்த் தாயே!
எத்தனைத் துன்பங்கள் என் மனதை வருத்தியது?
எத்தனைச் சிறுமைகள் இதயத்தை அழுத்தியது?
அத்தனையும் தாண்டிடவும்
அதிலிருந்து மீண்டிடவும்
அருமருந்தாய், ஆறுதலாய், அடைக்கலமாய் நீயிருந்தாய்.
துன்பமெனும் சாகரத்தைக் கடந்திட தோனியாவாய்;
தூய்மையெனும் சிகரத்தை அடைந்திட ஏணியாவாய்.
உன்னில் மனம் கசிந்து, உளம் உருகி நெகிழ்ந்திட நான்
என்ன தவம் செய்தேனோ
இயம்பிடுவாய்த் தமிழ்த் தாயே.
நித்தியப் புகழ் வாழ்க.
நிகரில்லா அன்பு வாழ்க.
நிலவுலகம் உள்ளளவும் நின் மாட்சி வாழ்க வாழ்க;
நிலவுலகம் உள்ளளவும் நின் மாட்சி வாழ்க வாழ்க...
விழி இரண்டும் மூடியிருக்க, மெல்லிய குரலில் என்றாலும் அவள் உச்சரித்துக் கொண்டிருந்த வார்த்தைகளில் அழுத்தம் இருந்தது. அவளது கைகள் தண்ணியல்பாய் தனக்கான தேநீரைத் தயாரித்துக் கொண்டிருந்தது. அவளின் செவிகள் வலுகவனமாய் பாலின் தன்மையை உள்வாங்கிக் கொண்டிருந்தது. அவளது கூர் நாசியும் பதமான தேநீரின் மணத்தை நுகர்ந்திடக் காத்திருந்தது. இப்படி அவளது புலன்கள் அனைத்தும் தத்தமது பணிகளில் மும்முறமாய் ஈடுபட்டுக் கொண்டிருக்க, பெண்ணின் மனம் மட்டும் நிலை கொள்ளாமல் அலைபாய்ந்தது. எண்ண அலைகள் அவளை அப்படியே சுழற்றித் தங்களுக்குள் இழுத்துக் கொள்ள முயன்றன. மனதின் அலைப்புருதல்களோடே தயாராகியிருந்த தேநீரை க்கோப்பையொன்றில் ஊற்றிக்கொண்டு கூடத்தில் வந்து அமர்ந்தாள் செந்தமிழ்.
இதமான சூட்டில் தொண்டைக்குள் இறங்கிய தேனீர் சற்றே அவளை இலகுவாக்கி இருந்த போதும், உள்ளத்தின் நமைச்சல் மட்டும் ஓய்ந்த பாடில்லை. நினைவுகளின் கணம் நெஞ்சத்தை ரணமாக்கியது. மணி ஏழு என்ற கடிகாரத்தின் அறிவிப்பில் நிஜ உலகிற்கு வந்தவள், தன்னைச் சமன்படுத்திக் கொள்ள நெஞ்சை நீவிக் கொடுத்தாள்.அக்கணம் பெண்னவளின் விரல்களை பிணைத்தது அவளது நெஞ்சத்தை மஞ்சமாக்கியிருந்த அந்தப் பொன் சங்கிலி. செந்தமிழின் விரல்கள் அந்த சங்கிலியை ஸ்பரிசித்த கணம், அவளது உள்ளமும் உடலும் மெலிதாய் சிலிர்த்து அடங்கிற்று. நேசச் சங்கிலியால் அவளைக் கட்டிப்போட்டிருப்பவனின் நினைவில் அவளின் முகம் கணிந்தது. [நிலவன்] கொண்டவனின் பெயரை உச்சரிக்கையில் தத்தையின் உள்ளம் தழும்பிற்று.
தேநீர் கோப்பையை அருகிலிருந்த மேசையின் மீது வைத்துவிட்டு, சுவரில் மாட்டப்பட்டிருந்த அந்த ஆளுயர புகைப்படத்தின் அருகில் சென்றவளுக்கு அவனது அரவணைப்பு வேண்டுமாய் இருந்தது. [நிலவன்!!!] அந்தப் பெயர் அவளுக்குள் நிகழ்த்திடும் மாயங்கள் இருக்கிறதே! நினைக்க நினைக்க அத்தனைச் சோர்விலும் பாவையின் வதனம் ஒளிர்ந்தது. அந்த நிழற்படச் சட்டத்தில் கைகளைப் பின்னால் கட்டிக்கொண்டு, கண்களைச் சிமிட்டி, பல்வரிசைத் தெரியப் புன்னகைத்துக் கொண்டிருந்தான் செந்தமிழின் நிலவன். அந்தப் புகைப்படத்தைத் தன் கைகளால் மெல்ல வருடியவள், அதில் தன் தலையைச் சாய்த்துக் கொண்டாள். [நிலவன்!!!] மீண்டும் உச்சரித்தால் அந்தப் பெயரை. என்னவோ அவனின் பெயரை உச்சரிப்பதே அவளுக்குப் பெருத்த ஆறுதலைத் தந்தது. சில நிமிடங்கள் அப்படியே இருந்தவள், அவனது பெயரை உச்சரிப்பதை மட்டும் நிறுத்தவில்லை. அவளது அத்தனை அலைப்புருதல்களையும் அகற்றிப் போடும் வல்லமை அவனது பெயருக்கு இருந்தது போலும். மெல்ல மெல்ல திடம் பெற்று நிமிர்ந்தால் செந்தமிழ். நிலவனின் இதழ்களில் குடிகொண்டிருந்த அந்த ஆளை மயக்கும் புன்னகை, அவனது இதய ராணியின் இதழ்களிலும் மென்முறுவளைத் தோற்றுவித்தது. எல்லாத்தையும் சமாளிக்கலாம் நிலவன் எனச் சொல்லவும் வைத்திருந்தது. நேரம் காலை 8-00 மணி எனக் கடிகாரம் இசைத்திடக் கைபேசியில் இசை இயக்கியைச் சொடுக்கிவிட்டு, மலர் இல்லம் செல்ல ஆயத்தமானாள் செந்தமிழ்.
"மாறன் அம்புகள் என்மீது வாரி வாரி வீச நீ கண் பாராயோ வந்து சேராயோ கண்ணம்மா"
நிலவனின் குரலில் ஒலித்துக் கொண்டிருந்த அந்தப் பதிவில், இருவருக்குமே மிக மிகப் பிடித்த வரிகள் இவை. முழுக்க முழுக்க தன் ஒட்டுமொத்த காதலையும் குரலில் தேக்கி, பாரதியின் இக்கவிதை அவனது தேவதைப் பெண்ணிற்காக வாசித்துக் கொண்டிருந்தான் நிலவன். இவ்வரிகளை நிலவன் முதல்முறையாக அவளிடம் சொல்லிய தருணம் பெண்ணவளின் நினைவில் ஆட, அவளது வசந்தகாலப் பக்கங்களில் விரும்பித் தொலைந்தாள் செந்தமிழ்.
கண்ணிற்கு எட்டும் தூரம் வரை பச்சைப் பசேலென நிறைந்திருந்த மரங்களும், செடி கொடிகளும் மெல்லத் தலையசைக்க, வண்டுகளின் ரீங்காரம் இனிய கீதமாய்ச் செவிகளைத் தீண்டிச் செல்ல, மலர்களின் மகரந்தம் காற்றில் கலந்து நுரையீரலை நிரப்பத் தன்னிடம் வருபவர்களை எல்லாம் அழகாய்த் தன் சிறகுகளுக்குள் அணைத்துக் கொண்டது மலர் இல்லம் என்று முகப்புச் சுவரில் பெரிய எழுத்துக்களில் பொறிக்கப்பட்டிருந்த அந்த அழகிய சோலை. வழக்கத்திற்குமாறாக அந்த இடமே பரபரப்பில் ஆழ்ந்திருந்தது. ஒட்டுமொத்தச் சோலையும் விழாக்கோலம் பூண்டிருந்தது. அன்று அய்யாதுரை குடும்பத்தின் இரண்டாம் பேரக்குழந்தைக்கு பெயர் சூட்டு விழா. (அத்தை நீங்க இங்கதான் இருக்கீங்களா?) பலாமரத்தடித் திண்டில் அமர்ந்து நடப்பதையெல்லாம் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த செந்தமிழிடம் தனது மழலை மொழியில் வினவியவாறு வந்தாள் நான்கு வயது மலரினி குட்டி. மலரின் அத்தை என்ற அழைப்பில் திகைத்த தமிழ் (என்னடா குட்டி புதுசா அத்தைன்னு எல்லாம் கூப்பிடுறீங்க? இது என்னோட இனி குட்டி கிடையாதே!!) என்று வியப்பு மேலிட விணவினாள் செந்தமிழ். (இஸ் அமைதியா இரு.. இதைப் பத்தி நாம அப்புறம் பேசுவோம். இப்ப நீ, இல்ல இல்ல நீங்க எனக்கு அத்தை சரியா? ஆனா இப்ப மட்டும் தான்.) எனத் தலையசைத்துக் கூறிய மலரினியின் பாவனையில் மென்னகையுடன் சரி என்றால் தமிழ். ஆம். அனைவருக்கும் இவள் தமிழ் தான். அப்படித்தான் எல்லோரும் அவளை அழைப்பார்கள் ஒருவனைத் தவிர. (என்ன விஷயம் டா செல்லம்? எதுக்கு என்னைத் தேடுனிங்கலாம்?)எனக் குழந்தையிடம் கேட்டாள் செந்தமிழ். (இப்படித் திரும்புங்க) என்று தமிழைத் தன் புறமாகத் திரும்பி அமரச் செய்த மலர் குட்டி, தன் கையிலிருந்த குட்டிப் பையைத் திறந்து, அதிலிருந்த கண்ணாடி வளையல்களைத் தனது பிஞ்சுக் கரங்களால் செந்தமிழின் கையில் மெல்ல அணிவித்தாள் மலரினி. (டேய் இனி குட்டி என்ன டா செய்றீங்க?) திகைப்புடன் வினவியை செந்தமிழின் காதருகில் குனிந்து (அமைதியா இரு தமிழு சொல்றத மட்டும் கேளுஉஉ) எனக் கடுகடுத்தாள் சின்னவள்.
தமிழும் அமைதியாகக் குழந்தைக்கு இசைந்துக் கொடுத்தாள். செந்தமிழுக்கு வளையல்களை அணிவித்த மலர் பாப்பா, மெல்ல தமிழ் அமர்ந்திருந்த திண்டின் மீது ஏறி, தமிழின் விரிந்திருந்த குழலில் தன் கைகளில் இருந்த முல்லைச் சரத்தைப் பெரியவளின் தலையில் சூட்ட முயற்சித்துக் கொண்டிருந்தாள். (குடுங்க செல்லம் நானே வச்சிக்கிறேன்.) குழந்தையின் தடுமாற்றத்தின் பொருட்டு தானே முல்லைச் சரத்தினைத் தன் தலையில் சூடிக்கொண்டாள் செந்தமிழ். (அச்சோ! அழகா இருக்கீங்க தமிழ் அத்தை!) எனத் தமிழின் கன்னத்தைப் பிடித்துக் கொஞ்சினால் குழந்தை. மலர் பாப்பாவின் இச்செயல் செந்தமிழை நெளியச் செய்தது. (இப்பவாவது சொல்லுங்க குட்டி என்ன இதெல்லாம்?) என்று குழந்தையிடம் செந்தமிழ் வினவ, அவளது கேள்விக்குச் சிரிப்பை உதிர்த்த மலரினி பெரியவளின் கன்னத்தில் அவசர முத்தம் ஒன்றைக் கொடுத்துவிட்டு நொடியில் அங்கிருந்து சிட்டாகப் பறந்திருந்தாள்.
எதுவுமே விளங்காதபோதும், மலரினியின் செயல்கள் ஒவ்வொன்றும் செந்தமிழின் இதழ்களில் புன்னகையை உறையவைத்திருந்தது. தனக்குப் பின்னால் ஆள் வந்து நிற்கும் அரவம் கேட்கத் திரும்பிப் பார்த்தால் பெண்ணவள். கையில் சிறு குப்பியுடன் அவள் முன்னே வந்து நின்ற நிலவன், அதிலிருந்து செந்தூரப் பொட்டை விரல்களில் அளவாய் எடுத்து மங்கையவலின் பிறைநுதலில் இட்டான். அவனது தொடுகையில், அவளது மயிர்கால்கள் கோச்சுரிந்தது.
"மாறன் அம்புகள் என்மீது வாரி வாரி வீச நீ கண் பாராயோ வந்து சேராயோ கண்ணம்மா"
உதட்டில் உறைந்த புன்னகையோடு அவளைப் பார்த்து மொழிந்தான் நிலவன். எதிர்வினை ஆற்றத் தெரியாமல் திணறிப் போனால் செந்தமிழ். நிலவனை ஒரு நல்ல மனிதனாக, உற்ற நண்பனாக அவளுக்கு மிக மிகப் பிடிக்கும். ஆனால், தனது துணையாக வாழ்வின் முழுமைக்கும் அவனைத் தன்னால் ஏற்றுக்கொள்ள முடியுமா? அப்படி ஒரு பிடித்தம் அவளுக்கு அவன் மீது இருக்கிறதா என்று கேட்டால், அது அவளுக்குத் தெரியவில்லை. இருப்பினும், ஏதோ ஒன்று நிலவனின் இணையாக வாழ்க்கை பாதையில் இணைந்து நடக்கப் பெண்ணை உந்திற்று. இவன் ஒருவனிடம் மட்டும் தான் அவள், அவளாக இருப்பதும். இவன்தான் இனி தனது வாழ்வின் மிச்சமென்றால்? அதற்குமேல் யோசிக்க முடியவில்லை தமிழால். இயல்பிலேயே தனிமை விரும்பியான அவளுக்கு, இப்போதும் அவளுக்கான அந்தத் தனிமை தேவைப்பட்டது. திண்டிலிருந்து எழும்போது சற்றே தடுமாறினால் செந்தமிழ். (இந்தக் கையை நம்பிப் பிடிக்கலாம் காலம் முழுசுக்கும்) என்றவாறு தன் கையை அவள் புறம் நீட்டினான் நிலவன். ஏனோ மறுக்கத் தோன்றாமல் அவனது கையுடன் தன் கையைக் கோர்த்துக் கொண்டால் செந்தமிழ்...
 
Top Bottom