கண்ணம்மா.
அத்தியாயம் 10.
மலரில்லத்தை அடைந்த நிலவன் நேராக செந்தமிழைத் தேடிக்கொண்டு அவர்களது வீட்டிற்குச் சென்றான். கடந்த ஒரு மாதமாகப் பெரியவீட்டிலேயே தங்கிவிட்டதில் வீட்டைச் சுத்தம் செய்து பொருட்களை ஒதுங்கவைக்க மலரில்லத்தில் ஒரு பகுதியில் அமைந்திருந்தத் தங்களது வீட்டிற்கு வந்திருந்தாள் செந்தமிழ்.. செந்தமிழின் உலகமே அவ்வீடுதான். நிலவன் தன் இதய ராணிக்கென அமைத்திருந்தக் குட்டி சுவர்க்கம் அது
நிகழ்ந்துவிட்டப் பேரிழப்பினால் தொய்ந்து கிடந்தப் பெண்ணின் மனது, செந்நிலா முற்றத்தை அடைந்ததும் சற்றே மட்டுப்பட்டது.
நேரத்தை வீணாக்காமல் வீட்டை வேகவேகமாக ஒழுங்குபடுத்தத் துவங்கினாள் அவள்.
இன்னும் கொஞ்சநாட்களுக்குப் பெரியவீட்டிலேயே தங்கி, மீராவுக்கு உறுதுணையாக நிற்க செந்தமிழ் முடிவு செய்திருந்ததால், கிடைத்த நேரத்தில் தனது நந்தவனத்தைப் பார்க்க வந்திருந்தாள். அவள் எதிர்பார்த்ததைப் போலவே, செந்நிலா முற்றத்தின் லாலிதம் பெண்ணை இதமாகத் தழுவிக் கொண்டது. படுக்கையில் அமர்ந்து உடைகளை அடுக்கிக்கொண்டிருந்தவளின் அருகில் சென்று அமர்ந்தான் நிலவன்.
அவனது அரவம் உணர்ந்து அவனை நோக்கித் திரும்பினாள் செந்தமிழ். தன்னை ஏறிட்ட அந்தப் பூமுகத்தைக் கைகளில் ஏந்தினான் நிலவன். நேரமுட்கள் நகர்வதையும் பொருட்படுத்தாமல் அவளையே பார்த்த விழிப் பார்த்தபடி இருந்தான். அழுகைக் குரல் ஒன்று விடாமல் அவனது செவிகளில் ரீங்காரமிட்டது. மெல்ல
செந்தமிழின் நெற்றியில் இதழ்ப் பதித்தான் நிலவன். படபடத்துக் கொண்டிருந்த அவளது கயல் நயனங்களையும் அவனது இதழ் மென்மையாகத் தீண்டியது. ஒற்றைக்கல் மூக்குத்தியைத் தாங்கியிருந்த அவளது கூர்நாசியில் முத்தமிட்டான்.
செந்தமிழின் மென்பஞ்சு கன்னங்களிலும் ஆடவனின் அதரங்கள் புதைந்து மீண்டன.
நொடிநேரம் தன் மனைவியை முற்றும் முழுதாக விழிகளுக்குள் நிரப்பிக் கொண்டவன், தன் அதரங்களால் பெண்ணின் இதழ்களைச் சிறையெடுத்திருந்தான்.
கணவனின் செய்கையில் நெகிழ்வதற்குப் பதிலாக நடுக்கம் கொண்டாள் செந்தமிழ்.
அவளது நடுக்கத்தைக் கூட உணராமலிருந்த நிலவனின் போக்கு, அவளது உள்ளத்தைப் பதைபதைக்கச் செய்தது. அவனது அந்த இதழடைப்பு அவளிடம் எதையோ சொல்ல முயன்றது. எதனையோ உணர்த்திவிடப் போராடியது.கணவனின் ஒவ்வொரு அசைவையும் நன்கு விளங்கியிருந்த செந்தமிழ், எல்லாவற்றையும் தாங்கிக் கொள்ளத் தன் மனதைப் பக்குவப்படுத்தினாள்.
கணக்கில்லா நிமிடங்கள் கறைந்தப் பின்னர், மனையாலின் இதழ்களை விடுவித்தான் துணைவன். ஆனபோதும் அவன் துளியும் அவளிடமிருந்து விலகவில்லை.அதேசமயம் எதையும் வாய்த்திறந்து பேசவில்லை. உண்மையிலேயே நிலவனுக்கு அப்போது என்ன பேசுவது, தன் நிலையை எப்படிக் கொண்டவளுக்கு விளக்கிச் சொல்வது, எப்படித் தன் மன ஓட்டங்களை அச்சுப்பிசறாமல் அவளிடம் கடத்துவது என்று தெரியவேயில்லை.
தானே தன் ஆருயிரானவளைஇப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலையில் தள்ள வேண்டியிருப்பதுவேறு நிலவனுக்குள் மெல்லியக் குற்றவுணர்வைத் தோற்றுவித்தது. தனக்காகத் தன்னைமட்டுமே நம்பி வந்தவளுக்குத் தான் கொடுக்கும் பரிசா இது?
அதிலும் இப்போது அவள் தனியொருத்தியன்று. அவனது பிள்ளைகளைத் தனக்குள் வரித்திருக்கிறாள். என்று என்ணுகையிலேயே தன்னைப் போல அவனது கைகள் செந்தமிழின் சேலையை விலக்கி, மேடிட்டிருந்த அவளது வயிற்றை
மெல்ல வருடின. தந்தையின் தொடுகையை உணர்ந்த அவனது அருமை மக்களும்
ஒருசேரத் தாயை உதைத்தனர்.
தனது தொடுகைக்குப் பிள்ளைகள் ஆற்றிய எதிர்வினையின் தாக்கத்தில் சிலிர்த்த நிலவனின் நெஞ்சத்தில் மெதுவாக பாரம் ஏறியது. குனிந்து அவளது வயிற்றிலும் எண்ணற்ற முத்தங்களைப் பதித்தான் நிலவன். அவனது முத்தத்திற்கெல்லாம்
தங்களின் அசைவுகளின்மூலம் பதில் மொழிந்தப் பிள்ளைகளின் ஸ்பரிசத்தை
வெகு பத்திரமாக இதயப் பேழைக்குள் சேமித்துக் கொண்டான்.
அதைத்தவிர அவனாலும் வேறு என்னதான் செய்யமுடியும்? உள்ளுக்குள் பற்றியெரிந்துகொண்டிருக்கும் நெருப்பொன்று அவனை உறங்கவிடாமல் செய்கிறதே?
அந்தத் தீப்பிழம்பினைத் தணிக்கவேனும் அவன் இந்த முடிவினை எடுத்துத்தான் ஆகவேண்டும். இந்தக் கடுமையான சூழலையும் எதிர்த்துத்தான் ஆகவேண்டும்.
இல்லையேல் அவனையே அவனால் ஒருபோதும் மன்னிக்க இயலாது.
எனவே தான் கொண்ட தீர்மானத்தில் எஃகின் உறுதியுடன் இருக்கின்றான்.
அந்த உறுதியே எல்லாவற்றையும் செந்தமிழிடம் பேசிவிடச் சொல்லி நிலவனை ஊக்கியது.
"செந்தூ நான் சொல்லுற விஷயங்களக் கொஞ்சம் நிதானமா கேட்டு என்ன புரிஞ்சிக்க முயற்சி பண்ணுடா."எனப் பெரும் தயக்கத்துடன் திக்கித் திணறி இயம்பினான் நிலவன். அவன் சொன்ன மற்றதையெல்லாம் தாண்டிக்கொண்டு, அவனது செந்து என்ற அழைப்பு செந்தமிழை அசைத்துப் பார்த்தது. கிட்டத்தட்ட ஒருமாதத்திற்குப் பிறகு நிலவனின் அவளுக்கான பிரத்தியேக அழைப்பினை காதாரக் கேட்கிறாள். நினைத்தமாத்திரத்திலேயே என்னவோ ஒன்று மனதைப் பிசைந்தது.எனினும் தன்னை ஒருவாறு சமாளித்துக் கொண்டு, கணவனின் கேசத்தை ஒற்றைக் கையால் கலைத்துவிட்டபடி,
"என்கிட்ட எதுக்கு இத்தனைத் தயக்கம் நிலவன்? எதுவாயிருந்தாலும் சொல்லுங்கப்பா"
என்று வினவினாள் மென்மையாக.
மனைவியின் அருகாமையும், அவளது இதமான வார்த்தைகளும் நிலவனைப் பெரிதும் தேற்றியது.அவனுக்குச் சகலமுமான அவளையே தனது மனக்கிலேசங்களுக்கு
மருந்தெனத் தஞ்சம் கொண்டான். கணவனை அறிந்தவளாக செந்தமிழும் நிலவனைத் தன் மடியில் சாய்த்துக் கொண்டாள்.
மனைவியின் மடியில் தலைசாய்த்தவன், அவளது வயிற்றில் முகம் பதித்தான். நிலவனின் அசைவுகள் ஒவ்வொன்றும் செந்தமிழுக்கு வேறு கதையைச் சொல்லத் துவங்கியிருந்தது. எனவே நிதானத்துடன் அனைத்தையும் கையாள முடிவு செய்தாள்.
தன்னவனை இயல்பாக்கும் பொறுட்டு அவனது நெற்றிப் பொட்டை அழுத்திவிட்டாள். அவனது புறுவ முடிச்சுகளை நீவிச் சரிசெய்தாள். அவனது இதையப் பகுதியைத் தடவிக் கொடுத்தாள்.
"என்னால முடியல செந்தூ." பெரும் இயலாமையுடன் வெளிவந்தன நிலவன் உதிர்த்த வார்த்தைகள்."கண்ணுக்கு முன்னாடி நடக்கிற அநியாயங்களத் தடுத்து நிறுத்தமுடியாம, தப்புச் செஞ்சவனக் கண்டுபிடிச்சுத் தண்டிக்கவும் முடியாமல் , கையாலாகாத தனத்தோட வெறுமனே நின்னு வேடிக்கப் பாத்துட்டிருக்க என்னால முடியல."என்றவன், "நா போறன் செந்து;;இதுக்கெல்லாம் ஒரு முடிவு கட்டியே ஆகணும். அதோட பழைய கணக்கு ஒன்னையும் தீர்க்க வேண்டியிருக்கு. இதுல இருந்துமட்டும் நான் பின்வாங்கிட்டா, இத மட்டும் நான் செய்யத் தவறிட்டா அப்புறம் நான்; உன்னோட நிலவன் உயிரோடு இருந்தும் பிணத்துக்குச் சமானம்தான்.எனக் கூறியவனின் குரலில் அளவிற்கு அதிகமான வெம்மை கொட்டிக் கிடந்தது.
"அம்மாவப் பத்திரமா பாத்துக்கோங்கடா. உங்களை நம்பித்தான் நான் அவளை விட்டுட்டுப் போறேன்."என்று தொண்டை அடைக்கத் தன் பிள்ளைகளிடம் கூறியவன், செந்தமிழின் கைகளை எடுத்துத் தன் கைகளுக்குள் புதைத்துக் கொண்டான். மௌனத்தின் பேரிரைச்சலிலும் தங்களின் துணையிடம் நெஞ்சு முட்டும் உணர்வுகளோடு உரையாடிக் கொண்டிருந்தன நேசம் கொண்ட இதையங்கள் இரண்டும்.நொடிகள் கடந்த பின்னர்
செந்தமிழின் கையைப் பிடித்தவாரே எழுந்து நின்ற நிலவன், அவளையும் எழச்செய்தான்.. எலும்புகள் நொறுங்கிவிடும் அளவிற்கு அவளைப் பின்னோடு கட்டிக் கொண்டான்.
அந்த ஒற்றை அணைப்பு நிலவனின் எண்ண அலைகளை அப்படியே செந்தமிழிடம் கடத்தியது. அவனது அணைப்பின் இறுக்கம் தளரும்வரை காத்திருந்த செந்தமிழ்,
அவனிடம் இளக்கத்தை உணர்ந்ததும், அவனது கைகளுக்குள் திரும்பி, நிலவனை உச்சிமுகர்ந்தாள்.
", போயிட்டு வாங்க நிலவன். நீங்க திரும்பி வரப்போற அந்த ஒருநொடிக்காக நானும் நம்ம பிள்ளைகளும் காத்துகிட்டிருக்கோம்." என்று மொழிந்தவள், அவனிடமிருந்து மெல்ல விலகினாள். தலையினை அழுந்தக் கோதிய நிலவன், வாயிலை நோக்கி நடந்தான்.
செந்தமிழும் அவனைப் பின் தொடர்ந்தாள்.
தன்னுயிரை இப்படித் தனியே தவிக்கவிட்டுச் செல்வதை எண்ணிப் பொங்கிய வேதனையை ஒற்றைத் தலைக் குலுக்கலில் ஒதுக்கியவன், வெண்ணிலா முற்றத்தைவிட்டு வெளியேறினான். அதுவரை
அவனையே பார்த்துக் கொண்டிருந்த செந்தமிழ்,
"நிலவன்;' என்று அவனை அழைத்தாள். அவனும் அவளைத் திரும்பிப் பார்த்தான்.
'வாழ்த்துக்கள்." என்று மொழிந்தாள் கீற்றுப்புன்னகையோடு.
பதிலேதும் பேசாமல் அவளைத் திரும்பித் திரும்பிப் பார்த்தவாறு முன்னேறினான் நிலவன். அப்போது திரண்டிருந்த முகிலினங்கள் பெரும் இடி முழக்கத்தோடு மழையைப் பொழியத் துவங்கின. முற்றத்துத் தூணைப் பற்றியவாறு நின்றிருந்த செந்தமிழ்
கொட்டிக் கொண்டிருந்த மழையை வெறிக்கத் தொடங்கினாள்.
ஒருவேளை இந்த இரு இதயங்களின் உணர்வலைகளைத்தான் அந்த இயற்கை பிரதிபலிக்க முனைந்ததோ?
"சோலையிலும் முற்கள் தோன்றும் நானும் நீயும் நீங்கினால்.
பாலையிலும் பூக்கள் பூக்கும் நான் உன் மார்பில் தூங்கினாள்.
மாதங்களும் வாரம் ஆகும் நானும் நீயும் கூடினால்,
வாரங்களும் மாதம் ஆகும் பாதை மாறி ஓடினாள்.
கோடி சுகம் வாராதோ நீ எனைத் தீண்டினாள்?
காயங்களும் ஆறாதோ நீ எதிர் தோன்றினாள்?
உடனே வந்தால் உயிர் வாழும்.
வருவேன் அந்நாள் வரக்கூடும்..."
எங்கிருந்தோ காற்றில் மிதந்துவந்தப் பாடல் வரிகள்,
இருவரின் செவிகளையும் நிறைத்து, அவர்களின் நெஞ்சத்தை ஊடுருவியது.
இவையெல்லாம் நிகழ்ந்து முழுவதுமாக ஐந்து வருடங்கள் கடந்துவிட்டன. அன்று வீட்டை விட்டுச் சென்ற நிலவன் இன்றளவும் திரும்பி வரவில்லை.
அன்று செந்தமிழின் மூலமாக நிலவனின் முடிவை அறிந்துகொண்ட குடும்பத்தினர்
மேலும் சோர்வுற்றனர். அய்யாதுரை தன்னால் முடிந்த அளவில் நிலவனைத் தேட முயன்றார். பலனில்லை எனத் தெரிந்தும் எப்போதும் முயல்கிறார். இதற்கிடையில் ஆணொன்றும், பெண்ணொன்றுமாக இரட்டைக் குழந்தைகளை ஈன்றெடுத்தாள் செந்தமிழ்.
ஏற்கனவே நிலவனும் செந்தமிழும் முடிவு செய்து வைத்திருந்தபடி, ஆண் பிள்ளைக்கு நவிலன் என்றும், பெண் குழந்தைக்கு நற்றமிழ் என்றும் பெயர் சூட்டப்பட்டது.
இந்த இரட்டையர்கள்தான் மலரில்லத்தின் ஜீவசுரபியாகத் திகழ்கிறார்கள். வசந்தன் மீராவின் துயரங்களையும் துடைத்தெறியும் வல்லமைப் பெற்ற மருந்து இந்த மொட்டுக்கள்தான்.
பழைய நினைவுகளிலிருந்து நிகழ் உலகத்திற்க்குத் தங்களை மீட்டுக் கொண்டவர்கள்,
மலரினியின் சமாதியில் மலர்வளையங்களை வைத்துவிட்டுத்,தோட்டத்திலிருந்து வெளியேறத் துவங்கினர். தன் கைகளைப் பற்றியவாறு மலரினியின் நினைவுத்தூபியையே உற்றுநோக்கிக் கொண்டிருந்தத் தனது பிள்ளைகள் இருவரையும் தூக்கிச் சமாதியின்மீது மலர்வளையம் வைக்கச் செய்தவள்,வெறுமனே அந்தக் கல் மேடையை வருடியபடி, "இந்தமுறையும் தமிழ் உனக்கு மலர்வளையத்தை வைக்காமல் போறேன். மன்னிச்சிடுடா தங்கம்." எனத்தன் இனிக் குட்டியிடம் மன்னிப்பை யாசித்துவிட்டுக், குழந்தைகளுடன் மறுவாழ்வு மையத்திற்குச் சென்றாள்…