கண்ணம்மா.
அத்தியாயம் 12.
சடகோபனுக்குப் பணத்தின்மீது அதீத நாட்டம் உண்டு. பணத்திற்காக எந்த எல்லைக்கும் செல்ல சடகோபன் தயங்குவதே இல்லை. அவரது இந்தத் தீராத பணத்தாசையினை இன்னும் மெருகேற்றிவிட்டது சுடரொளி அறக்கட்டளை. நல்லதொரு வருவாய் ஈட்டவே சடகோபன் இந்த அறக்கட்டளையைத் துவங்கியது. அவரது எண்ணம் பொய்த்துப் போகவில்லை என்பதும் உண்மையே. ஏனெனில் அவர் கையில் எடுத்திருந்த ஆயுதம் கல்வி.
ஒரு மனிதன் தன் வாழ்வில் எதைவேண்டுமானாலும் இழக்கலாம்.அல்லது அவனிடமிருந்து மற்றவர்கள் எதைவேண்டுமானாலும் பறிக்கலாம்.ஆனால் எந்நிலையிலும் வாழ்க்கையின் கடைசி நொடி நேரம் வரை ஒரு மனிதனுடன் பயணித்து அவனைப் பக்குவப்படுத்துவது அவன் கற்கும் கல்விமட்டுமே. கல்வி ஒரு பேராழி.
மானுடனைச் சீர்படுத்தும் ஆழ்கடல். ஆழத்திற்குச் செல்லச் செல்ல அதுவே தன்னைக் கற்றிட முயல்பவர்களைத் தனக்குள் வாரி அனைத்துக் கொள்ளும்.
கற்றல் என்பதை நம்மால் எதற்குள்ளும் அடக்கிவிட இயலாது. ஆகையால் தானே கற்றது கையளவு கல்லாதது உலகளவு என்ற ஔவையாரின் கூற்றினை இத்தனை உலகியல் மாற்றங்களுக்குப் பின்னும் மறுக்காமல் ஏற்றுக் கொள்கிறோம்?அத்தகைய மேன்மை படைத்தக் கல்வி, எல்லோருக்கும் அவ்வளவு எளிதில் கிடைத்துவிடுவதில்லை என்பதே எதார்த்தம். பற்பல கடினமான சூழல்களுக்கு மத்தியில் இந்தக் கல்வியினை வைராக்கியத்தோடுக் கற்றுத் தேர்ந்தவர்கள் சடகோபனின் சூதாட்டத்தில் பகடைக் காயாய் ஆகிப்போனதுதான் விந்தை.
கல்வியின் இன்றியமையாமையை அனுபவத்தால் உணர்ந்த பலர் சுடரொளி அறக்கட்டளையைத் தாங்கிப் பிடிக்க முன்வந்தனர். தங்களால் இயன்றத் தொகையினைக் கொடுத்து ஏழை எளிய குழந்தைகள் எந்தத் தங்குதடையுமின்றிக் கல்வியினைச் சிறப்பாகக் கற்றுத் தேர்ந்திட வழிவகை செய்தவர்களை அறக்கட்டளையின் உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டார் சடகோபன்.
என்றாலும் அறக்கட்டளையின் முக்கியப் பொறுப்புகளையெல்லாம் தன்னைச் சார்ந்தவர்களிடத்திலேயே ஒப்படைத்திருந்தார். அதுதான் அவரது திட்டங்களுக்குச் சிறந்த முடிவும் கூட. வெகு விரைவிலேயே சுடரொளி அறக்கட்டளை சுற்று வட்டாரத்தில் பிரபலமானது.
நிறைய குழந்தைகள் அறக்கட்டளையின் உதவியுடன் கல்வி பயிலத் துவங்கினர். இதன் உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்களின் முழு ஒத்துழைப்புடன் சுடரொள் அறக்கட்டளையின்கீழ் சுடரொளிப் பெண்கள் மேல்நிலைப் பள்ளி நிறுவப்பட்டது. இது எல்லாமே சடகோபன் தீட்டியத் திட்டத்தின் ஒரு பகுதி அவ்வளவே.
வறுமைக் கோட்டிற்குக் கீழ் இருக்கும் குடும்பங்களைச் சேர்ந்தப் பிள்ளைகளைத் தேர்ந்தெடுத்துப் பள்ளியில் சேர்த்துக் கொண்டனர். அதேபோல மலைவாழ் கிராமங்களிலிருந்தும் கல்வி பயில நாட்டம் கொண்டப் பிள்ளைகளைத் தேடித்தேடிச்
சேர்த்துக் கொண்டனர்.
பள்ளிக்கூடத்தில் விடுதியில் தங்கிப் படிக்கும் வசதியும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்ததால்
பல பெண் குழந்தைகள் ஆர்வத்துடன் அப்பள்ளியில் இணைந்து கல்வி பயின்றனர்.
சமூக வலைத்தளங்களின் உதவியுடன் வெளிநாடுகளில் வாழும்
தமிழர்களையும் ஒரு குழுவாக இணைத்து அவர்களின் மூலமாக
ஒரு குறிப்பிட்டத் தொகையை நன்கொடையாகப் பெற்றுவந்தார் சடகோபன். எப்போதுமே
அறக்கட்டளையின் வரவு செலவுகளை இரண்டு கோப்புகளில் பதிந்துவைப்பார் சடகோபன். ஒரு கோப்பில் சரியான கணக்கீடுகள் குறிப்பிடப்படும். ஆனால் மற்றொன்று
செலவாகும் தொகையின் எண்ணிக்கை அதிக அளவில் உயர்த்திக் குறிக்கப்படும்.
இந்தக் கோப்புதான் நிர்வாகிகளிடமும் நன்கொடையாளர்களிடமும் சமர்ப்பிக்கப்படும்.
ஒவ்வொரு கணக்கையும் விலைப்பட்டியலையும் மிகத் தெளிவாகச் சந்தேகம் எழாவண்ணம் குறித்துவைப்பார் சடகோபன். கூடவே அறக்கட்டளையின் வருடாந்திர அறிக்கை மின்னகலாக உறுப்பினர்களிடம் சமர்ப்பிக்கப்படும்.
இதுவே ஐயங்களுக்கு இடமின்றி அனைவரையும் தொடர்ந்து அறக்கட்டளைக்கு உதவவைத்தது. எனினும் தான் ஈட்டும் இந்த லாபம் மட்டும் போதவில்லை சடகோபனுக்கு.
என்ன செய்துத் தனக்கான வருவாய்யினை அதிகமாக்கலாம் என மண்டையைப் போட்டுக் குடைந்துகொண்டிருந்தவருக்குக் கிடைத்த யோசனை பல பிஞ்சு சரித்திரங்களைச் சிதிலமடையச் செய்தது.ஆம் சுடரொளிப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கல்வி பயிலும் மாணவியரில் பலர் பழங்குடியினத்தைச் சார்ந்தவர்கள். இன்னும் சிலர் வறிய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். இதில் ஒரு 15 சதவீத மாணவியர் மட்டுமே இயல்பான வாழ்வியலைப் பெற்றவர்கள். எல்லாவற்றையும் தீரக் கணக்கெடுத்த சடகோபன், மெல்ல மெல்லத் தன் ஆட்டத்தைத் துவங்கினார்.
முதலில் பெற்றவர்களை இழந்தக் குழந்தைகள்தான் கயமையின் சோதனை எலியானார்கள். நினைத்ததுபோலவே அனைத்தும் தனக்குச் சாதகமாக நடக்க அகம் மகிழ்ந்தார் சடகோபன். சடகோபனுக்கு ஏற்கனவே அரசியல் பெரும்புள்ளிகள் சிலரிடமும், சில தந்திர நரிகளிடமும் நெருக்கமான உறவு இருந்தது.
அவர்களிடம் தனது யோசனையைக் கூறி, அவர்களது ஒப்புதலைப் பெற்றுச்
சில ஒப்பந்தங்களையும் போட்டுக்கொண்டார். பல மணிநேர கலந்துரையாடலுக்குப் பிறகு திட்டங்கள் அனைத்தும் முறையாக ஆவணப்படுத்தப்பட்டு, யார் பார்வைக்கும் அகப்படாதவண்ணம் அவற்றைப் பத்திரப்படுத்தினர்.
முதலில் ஒருக் குறிப்பிட்டக் குழந்தை இந்தக் கயவர்களால் ஒருமனதாகத் தேர்வு செய்யப்படும். பிறகு அந்தப் பிள்ளையைக் குறித்தத் தகவல்கள் திரட்டப்படும். கிடைக்கும் தகவல்களை மையமாக வைத்தே தங்களது அடுத்த நகர்வினைத் திட்டமிடுவர். அனைத்தும் சரியாக இருக்கும் நேரத்தில் அப்பிள்ளை இவர்களால் கடத்தப்படும். பிறகு குழந்தையினை யார் எந்தவிலைக்கு வாங்கிக் கொள்ளப்போகிறார்கள் என்பதனைத்
தீர்மானிக்க, ஏலம் நடத்தப்படும். குறிப்பிடப்படும் விலைப் பட்டியலை அடிப்படையாக வைத்து, அதிக விலைக்குப் பேசியிருந்த நபரிடமே குழந்தையினைப் பத்திரமாக ஒப்படைத்துவிட்டு உரிய பணத்தைப் பெற்றுக்கொள்வார் சடகோபன். நாளடைவில் இதுவே அவரது முக்கியத் தொழிலாக உருப்பெற்றது. பலர் சடகோபனை நேரிலேயே தொடர்புகொண்டு பெண் குழந்தைகளை நல்ல விலைக்கு வாங்கவும் துவங்கினர்.
மெதுமெதுவாக இந்த விடயம் மாணவியரையும் அவர்தம் பெற்றோரையும் அச்சுறுத்தத் துவங்கியது. அநியாயத்தைத் தட்டிக் கேட்கச் சென்றவர்கள் ஈவு இரக்கமே இல்லாமல் அடித்து விரட்டப்பட்டார்கள்.
இவற்றையெல்லாம் பின்னாலிருந்து செயல்படுத்திக் கொண்டிருப்பது சடகோபன் என்று யாருக்கும் தெரியாது. அனைவரின் சந்தேகப் பார்வையும் பள்ளியின் தலைமையாசிரியராகப் பொருப்புவகிக்கும் கனேசனைத்தான் மொய்த்தது. எந்த மிருகம் தங்களது குழந்தையினை இப்படிச் சீர்குலைத்திருக்கக் கூடும் என்ற அனுமானம்
எவருக்கும் இல்லை.
ஊட்டி மாவட்டத்தில் வசித்துவரும் பர்கோசி பழங்குடியைச் சார்ந்த அபரஞ்சி என்னும் மாணவி, கணேசனால் அவளுக்குத் தொடர்ந்து விடுக்கப்பட்டப் பாலியல் அச்சுறுத்தலின்காரணமாக விடுமுறையின்போது வீட்டிற்குச் சென்றிருந்தச் சமயம்,
அந்த அரக்கர்களின் பிடியிலிருந்து தப்பிக்கும் வகையறியாதுத் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாள்.தனக்கு நேரிடும் துன்பங்களை எந்தவொரு ஒளிவுமறைவுமின்றிப்
பெற்றவர்களிடம் பகிர்ந்துகொள்ள முடியவில்லை அபரஞ்சியால்.
அவர்களது குடும்பத்தில் பெண்கள் கல்வி பயிலும் வழக்கம் கிடையாது. இளைய தலைமுறைப் பெண்களுக்கு மூத்தத் தலைமுறையைச் சேர்ந்தப் பெண்கள் தாங்கள் கற்றுக்கொண்டக் கைவேலைகளைச் சொல்லித் தருவார்கள். அதைத்தவிர கல்வி கற்கவோ, குடும்பத்திடமிருந்து பிரிந்து சென்று தொலைதூரத்தில் வேலை பார்க்கவோ அவர்களுக்கு அனுமதி கிடையாது.
அபரஞ்சியின் உடன்பிறந்தச் சகோதரிவரை குடும்பத்தைச் சார்ந்த அனைத்துப் பெண்களுமே இதைத்தான் பின்பற்றினர் .ஆனால் குடும்பத்தின் கட்டுப்பாடுகளை அறவே வெறுத்தாள் அபரஞ்சி. கிடைக்கும் நேரத்திலெல்லாம் அவர்களின் மீதான தனது அதிருப்தியையும் வெளிப்படுத்த முயற்சி செய்வாள். அதுவுமே தாய் மற்றும் சகோதரியின் கண்டிப்பில் தளரத் துவங்கியிருந்தச் சமயத்தில்தான் சுடரொளி அறக்கட்டளை
அங்குள்ள மலைவாழ் பெண் குழந்தைகளுக்கு இலவசக் கல்வியினை வழங்க முன்வந்தது. கல்வி பயிலும் வாய்ப்பிற்காகத் தவம் கிடந்த அபரஞ்சி, கிடைத்திருக்கும் சந்தர்ப்பத்தினை நழுவவிட விரும்பவில்லை. சற்றுப் பயந்தச் சுபாவமுடைய பெண்தான் அவள் என்றபோதும்,.இந்த வாய்ப்பு அவளைத் தயங்கவிடவில்லை. மாறாகக் குடும்பத்தினரிடம் தனக்கு வேண்டியது என்ன என்பதை அழுத்தம் திருத்தமாகச் சொல்லவைத்தது. எண்ணற்றப் போராட்டங்களுக்குப் பின்பே அபரஞ்சிக்குப் படிக்க அனுமதி வழங்கப்பட்டது. வாழ்வை வண்ணமயமாக்கிவிடும் உறுதியோடும், எண்ணற்றக் கனவுகளோடும், மகிழ்ச்சியோடு சிறகு விரித்துப் பறக்கத் துவங்கியப் பறவையொன்று
நீசர்களின் இறைவரையில் சிக்குண்டு, உயரப் பறக்கும் ஆசையினைத் தொலைத்துத் , தன்னைத்தானே மாய்த்துக் கொண்டது.
மரக்கிளையில் உயிரற்றச் சடலமாய்த் தொங்கிக் கொண்டிருந்த அபரஞ்சியைப் பார்த்துப் பயத்தில் அவளது தாய் போட்டக் கூச்சல் அந்த மலையையே அதிரச்செய்தது. ஒன்றும் புரியாமல் அனைவரும் உறைந்துபோயினர். பள்ளியிலிருந்து வீட்டிற்கு வந்த மறுநாளில் அபரஞ்சி தற்கொலை செய்துகொண்டதால், பள்ளி நிர்வாகத்தின்மேல்தான் சந்தேகம் எழுந்தது அவர்களுக்கு. அபரஞ்சியுடன் அதே பள்ளியில் படிக்கும் அவளது தோழியர் இருவர் சொன்ன விடயங்களும் அவர்களது சந்தேகத்திற்குத் தூபம்போட்டது. கடந்த சில வாரங்களாகவே அபரஞ்சி ஒருவரிடமும் சரியாகப் பேசவில்லை என்றும், பெரும்பாலான நேரங்களில் தனிமையை நாடினாள் என்றும், சமயங்களில் எதையும் வாய்த்திறந்து சொல்லாமல் இவர்களைக் கட்டிக்கொண்டு அழுதிருக்கிறாள் என்றும், தவிர அவள் பள்ளியின் அலுவலக அறைக்கு அழைக்கப்பட்ட நேரங்களில் நடுக்கத்துடன் திரும்ப வருவதும், அதையடுத்துச் சில நிமிடங்களிலேயே வாயைப் பொத்திக்கொண்டு
வேகவேகமாகக் கழிவறைக்கு ஓடிப்போய் வாந்தியெடுத்ததையும் குறித்து இருவரும் விவரிக்க விவரிக்க, அச்சமும் ஆத்திரமும் ஒருங்கி உள்ளத்தை ஆக்கிரமிக்க, அன்று இரவே அபரஞ்சியின் பெற்றோர் பள்ளியை நோக்கிப் பயணிக்கத் துவங்கினர்.
தங்களுடன் வருவதாக ஊரே ஒன்றுதிரண்டு கூறியபோதும், பெண் குழந்தையின் விடயத்தைப் பலரின் மத்தியில்அம்பலப்படுத்த விரும்பாதவர்கள், எல்லோரையும் நாசுக்காக மறுத்துவிட்டுத் தாங்கள்மட்டும் புறப்பட்டனர். இருந்தும் என்ன பயன்? அவர்களால் பள்ளி நிர்வாகத்தினை எதிர்த்து ஒரு சின்னத் துரும்பையும் கூட நகர்த்த முடியவில்லை. தங்களின் மகளது இறப்பிற்காக நியாயம் கேட்டுச் சென்ற அபரஞ்சியின் பெற்றோரைத் தங்களின் அனுமானத்தின்படி சரிக்கட்டத் துவங்கினர் சடகோபனின் அடியாட்கள். அவர்களின் அனுமானமும் பிழைக்கவில்லை.
"இங்கப் பாருங்க: எது எப்படி இருந்தாலும் உங்க ஊர்ல வந்துதான் உங்கப் பொண்ணு தற்கொலை செஞ்சு இறந்துபோயிருக்கா. சும்மா நீங்க சொல்ற கதைகள வச்சுமட்டும் இங்க எதுவும் தீர்மானிக்கப்படாது. எல்லாத்துக்கும் வலுவான ஆதாரங்கள் வேணும். அப்படி ஏதாவது உங்ககிட்ட இருக்கா?"என அவர்களைனோக்கி எள்ளல் பார்வையை வீசியவாறு கேட்டான் கணேசன்.
"அப்படியே ஆதாரங்கள் இருந்தாலும், அத உங்களால உறிய இடத்துலச் சமர்ப்பிக்க முடியாது. நாங்க அதுக்கு விடமாட்டோம். ஒருவேள நாங்க சொல்றதையும்மீறி நீங்க ஏதாவது தந்திரமா செய்ய நினைச்சீங்கன்னா அதோட பின்விளைவுகளும் உங்களையே சேரும். இவ ஒருத்திமட்டுமா உங்களுக்குப் பொண்ணு? அதோட உங்க ஊரு சேர்ந்த இன்னும் ரெண்டு பொண்ணுங்க இங்கதான் படிக்கிறாங்க. அவங்களுக்குமே அக்கா தங்கச்சிங்க எல்லாம் இருப்பார்கன்னு நினைக்கிறோம் .அதனால என்ன செய்றதா இருந்தாலும் ஒருமுறை நல்லா யோசிச்சுட்டுச் செய்யுங்க."என்றான் மற்றொருவன் அழுத்தம் திருத்தமாக.
அவர்களது கண்களில் ஒளிர்ந்த வெஞ்சினம் அபரஞ்சியின் பெற்றோர்களை அச்சத்தில் ஆழ்த்தியது. பெரிதாகச் சமூகத்துடன் தொடர்பில் இல்லாதவர்கள் துணிந்து செயல்படத் தயங்கினர். அபரஞ்சி தாங்கள் பெற்றப் பெண்தான் என்றாலும் இந்த உலகிலேயே இல்லாத ஒருத்திக்கு நியாயம் கேட்பதற்காக வாழவேண்டிய குழந்தைகளின் உயிரைப் பலியாக்குவதா? என்று அகத்தில் உதித்தக் கேள்வியே அவர்களைப் பின்வாங்கவைத்தது. அபரஞ்சியின் பெற்றோரையே இமைக்காமல் உற்று நோக்கிக் கொண்டிருந்த அடியாட்கள், அவர்களது எண்ண ஓட்டங்களைப் படித்தவர்களாக
"இந்தாங்க; இதுல உங்களோடத் தேவைக்கு அதிகமாவே பணம் இருக்கு. இதை எடுத்துக்கிட்டு உங்கக் குடும்பத்தோட எங்கையாவது கண்காணாத ஒரு இடத்துக்குப் போயிடுங்க. இல்லாட்டா நடக்கிற எல்லாத்துக்கும் முழுமுதற் பொறுப்பு நாங்கமட்டும்தான்."என்ற கணேசனின் முகபாவனை அபரஞ்சியின் பெற்றோர்களின் இதயத்தில் கிலியைப் பரப்பியது.
ஒன்றும் சொல்லாமல் கணேசனிடமிருந்து பணப்பெட்டியை வாங்கிக் கொண்டார் அபரஞ்சியின் தந்தை. அங்கு கூடியிருந்த அடியாட்களைப் பார்த்துக் கண்ணீருடன் கை கூப்பினார் அபரஞ்சியின் தாயார். அவரது பார்வையில் "என் பெண்ணிற்கு இழைத்த அநீதியைத் தயவுகூர்ந்து வேறு யாருக்கும் செய்துவிடாதீர்கள்." என்ற இறைஞ்சுதல் இருந்தது.
எதையும் லட்சியம் செய்யாமல் தங்களுக்கு எதிர்த் திசையில் அமைந்திருந்த அறையின் சாளரத்தை நோக்கி அனைவரும் கட்டைவிரலை உயர்த்தினர். அங்கு நின்றபடி அனைத்தையும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த சடகோபனின் முகத்தை வெற்றிபெற்றுவிட்டதற்கான குர்ரூரச் சிரிப்பு அலங்கரித்தது.