செந்தமிழ் - 13

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Vishakini

Moderator
Staff member
Nov 7, 2025
1,543
6,383
113

கண்ணம்மா.

அத்தியாயம் 13.

அபரஞ்சியைப் போல் குடும்பத்தை எதிர்த்துக் கல்வி கற்கவந்த மாணவியர், தங்களுக்கு விடுக்கப்படும் பாலியல் அச்சுறுத்தல்களைவீட்டினரிடம் சொல்லப் பயந்தனர். கல்வி என்பதுமட்டும் அவர்களுக்கு எட்டாக்கனியாய் இருந்த காலம் மாறி, தங்களின் ஏக்கம் தீர அதனுடைய விழுமியங்களைக் கற்றலின்மூலம் ருசித்துக் கொண்டிருந்தனர். அப்படியிருக்க இதனைப் பாதியிலேயே விட்டுவிடவோ, இதிலிருந்து பின்வாங்கவோ ஒருவரும் தயாரில்லை. வறுமையும், குடும்பச் சூழ்நிலையும் அவர்களுக்கு நிறைய பாடங்களைக் கற்றுத் தந்திருந்தன.

சுடரொளிப் பள்ளியில் இணைந்தப் பல மாணவியரின் ஒரே கனவு
நன்றாகப் படித்துச் சொந்தக்காலில் நின்று குடும்பத்தின் தரத்தினை உயர்த்தவேண்டும் என்பதே.. பள்ளிக்கூடத்தில் பால்மணம் மாறாத மழலையாய்க் கால்பதிக்கும் குழந்தையைத், தனி ஒரு ஆளுமையாகப் பட்டைத் தீட்டுவது கல்வி மட்டுமல்ல,
அதனைக் கற்பிக்கும் ஆசிரியர்களும், அனைவரையும் ஒரே நேர்கோட்டில் சீராக நடத்திச் செல்லும் நிர்வாகமும்தான். அவர்களே ஒரு மனிதனின் அறிவார்ந்த வாழ்வியலில் இன்றியமையாதவர்கள்.அவர்களே எச்சூழ்நிலையிலும் அவனைத் திடமாக நிமிர்ந்து நிற்கச் செய்யும் அஸ்திவாரம்.

ஆகையால்தானே உலகை ஆட்சி செய்யும் இறைவனும் கூட பெற்றவர்களுக்குப் பிறகு
ஒரு குழந்தையின் மீதான பொறுப்பினை ஆசான்களிடம் ஒப்படைத்துவிட்டுத், தான் பின் நின்றுகொண்டார்? வெள்ளைக் காகிதமாகத் தங்களிடம் தங்களை நம்பிவரும் பிள்ளைகளை, உள்ளத்தைக் குளிர்விக்கும் அழகிய சித்திரங்களாக மாற்றாமல் ,
ஒன்றுக்கும் உதவாத அற்ப இச்சைகளுக்கு இறையாக்கிக் கசக்கி எறிவது எங்கனம் நியாயமாகும்?

கல்வியைக் காட்டி எண்ணற்றக் கனவுகளைக் குழிதோண்டிப் புதைக்கும்இவர்களெல்லாம் மனிதர்கள்தானா? ஐந்தறிவு படைத்த மிருகங்கள் கூடத் தங்களை நம்பிவரும் உயிரினத்தைத் தங்களின் ஒருவராக இணைத்துக் கொண்டு பத்திரமாகக் கவனித்துக்கொள்ளும். ஆனால் இவர்கள் உயிரினங்கள் என்ற வரையறைக்குள் அடங்கச் சற்றும் தகுதியற்றவர்கள்.

அபரஞ்சியின் மரணத்திற்குக் பிறகு மாணவியர் பள்ளிக்கு வரவே பயந்தனர். அவர்களுக்குப் பள்ளி நிர்வாகத்தின்மீது இருந்த நம்பிக்கையும் படிப்படியாகக் குறைய ஆரம்பித்தநேரம், தான் கட்டிக் கொண்டிருக்கும் கனவுக் கோட்டை குழையத் துவங்குவதைக் கண்டுகொண்ட சடகோபன், குழந்தைகள் அவர்தம் பெற்றோர் மற்றும்
ஆசிரியர்களுடன் ஒரு கூட்டத்தை ஒழுங்குசெய்து, அவர்களுக்கு உத்வேகமளிக்கும் வகையில் பேசத் துவங்கினார்.

"மதிப்பிற்குரிய ஆசிரியர் பெருமக்களே; போற்றுதலுக்குரியப் பெற்றோர்களே; எனதருமை மாணவக் கண்மணிகளே; உங்கள் அனைவருக்கும் எனது சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.
நிகழ்ந்துவிட்ட அசம்பாவிதங்களுக்கு வருந்துகிறோம். குழந்தை அபரஞ்சியினை இழந்தக் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களை நெஞ்சம் கணக்கத் தெரிவித்துக்கொள்கிறோம்."என்றவர் சிறிது இடைவெளிவிட்டுப் பேசத் துவங்கினார்.
"குழந்தையின் மரணத்திற்கான பின்னணியை நான் திரும்பவும் தோண்ட விரும்பவில்லை. மற்றக் குழந்தைகளின் மனநிலையினைக் கருத்தினில் கொண்டு இவ்வாறு சொல்கிறேன். எது எப்படியிருந்தாலும் எல்லோரினது சந்தேகப் பார்வையும், குற்றச்சாட்டும் தலைமை ஆசிரியர் திரு கணேசன் அவர்களை முற்றுகையிடுவது வருத்தமளிக்கிறது. இருப்பினும் உங்களைத் தாண்டி, உங்களது விருப்பத்தைத் தாண்டி
இங்கு எதுவுமே இல்லை என்பதை உறுதி கூறும்விதமாக கணேசன் அவர்களைப் பதவியிலிருந்து நீக்கிவிட்டு, உங்கள் அனைவரினதும் மனநிம்மதி ஒன்றையே பிரதானமாகக் கொண்டு நானே இந்தப் பொறுப்பில் அமரவிரும்புகிறேன். இனி நீங்கள் எந்தக் கலக்கமும் பயமுமின்றி இப்பள்ளியில் உங்களது பயணத்தைத் தொடரலாம்."
எனக் கூறியவர், இன்னும் பல வாக்குறுதிகளை அவர்களுக்குத் தந்ததோடு,
கூட்டம் நிறைவுபெற்றப் பின்பு தனித்தனியாக ஒவ்வொரு வகுப்பிற்கும் சென்று பிள்ளைகளைத் தேற்றும்வகையில் பேசிவிட்டுவந்தார்.

அவரது தேனொழுகும் பேச்சினை நம்புவதைத் தவிர அங்கிருந்தவர்களுக்கு வேறு வழியுமில்லையே. எனவே நம்பினர். நடந்தவைகளைக் கடந்துவந்து படிப்பில் கவனம் செலுத்தவும் துவங்கினர். பெற்றோர்களிடம் கூட நல்ல மாற்றம் புலப்பட்டது.
ஆசிரியர்களும் தவறாமல் தத்தமது கடமைகளைச் செவ்வனே நிறைவேற்றத் துவங்கினர்.

தான் கூறியதைப் போலவே பள்ளியின் மொத்தக் கட்டுப்பாட்டையும் தனக்குக்கீழ் வைத்துக்கொண்டார் சடகோபன். அனைத்தும் மறுபடியும் பழையநிலைக்குத் திரும்பியதும்தான் அவரால் நிம்மதியாக மூச்சுவிடவே முடிந்தது. அதற்குப் பிறகு
வெகுகவனமாகவே தான் நினைத்தவற்றைச் செயல்படுத்தினார்.

இடைப்பட்ட காலத்தில் நட்பு வட்டங்களின் உபயத்தால் வேறு சில பெண்கள் பள்ளிக்கூடங்களின் தொடர்பும், சில கருணையிள்ளங்களின் தொடர்பும் சடகோபனுக்கு இருந்தது. எனவே பள்ளியை விடுத்து வேறு இடங்களில் வெவ்வேறு முறைகளில்
தனது தொழிலைத் தடையின்றிக் கவனித்துவந்தார்.

அதைவிட முக்கியமாக இதற்கெல்லாம் மூலக் காரணமாக இருந்து அனைத்தையும் நிகழ்த்திக் கொண்டிருப்பது தான் என்பதை ஒருவரும் கண்டுகொள்ளவியலாவண்ணம் காய்களை நகர்த்தினார்.

சடகோபன் மரணிப்பதற்கு முந்தைய நாள் இரவு வேளையில் கூடக் கல்லூரியில் பயிலும் மூன்று பெண்களை அண்டைமாநிலத்தைச் சேர்ந்தப் பெரும்புள்ளி ஒருவரிடம்
விற்றிருக்கிறார். கிட்டத்தட்ட இரண்டறைக்கோடி ரூபாய் சடகோபனின் வங்கிக் கணக்கிற்குப் பணப்பரிவர்த்தனை செய்யப்பட்டும் இருக்கிறது.

ஒரேநாளில் சடகோபன் குறித்த இத்தகையத் தகவல்கள் இணையத்தை ஆக்கிரமித்திருந்தன. சடகோபனுக்கு எதிராக ஆதாரங்கள் அனைத்தும் கனக்கச்சிதமாக இடம்பெற்றமையால் மறுபரிசீலனைக்கு இடமின்றி சுடரொளி அறக்கட்டளையின் உரிமம் ரத்து செய்யப்பட்டதோடு, உடனடியாகப்பள்ளிக்கூடத்திற்கு தடை முத்திரையிடவேண்டும் என்று காவல்துறைக்கு உயர்நீதிமன்றத்தால் ஆணைப் பிறப்பிக்கப்பட்டது.

நடந்துகொண்டிருக்கும் எதையும் தடுக்கமுடியாமல் வெறுமனே கையைக் கட்டிக் கொண்டு வேடிக்கை மட்டுமே பார்க்கமுடிந்தது கரிகாலனால்.ஊன் உறக்கத்தைத் தொலைத்து
அவனும் ஓடிக் கொண்டுதான் இருக்கிறான். என்ன செய்தும் சடகோபன் குறித்த ஆதாரங்களை இணையத்தில் வெளியிட்டது யார் என்பதைமட்டும் அவனால் கண்டுபிடிக்கவே முடியவில்லை.

அந்த அளவிற்கு வெளியான ஒவ்வொரு தகவல்களும் மிகமிக வலுவாக இருந்தன.
சடகோபன் தயாரித்துவைத்திருந்த வரவு செலவு கோப்புகள் உட்பட பெண் குழந்தைகளை
விற்கும்போது, பெற்றுக்கொள்பவரிடம் சடகோபன் போட்டுக்கொள்ளும் ஒப்பந்தங்கள், பணப்பரிவர்த்தனை நுணுக்கங்கள், ஏலம் குறித்தத் தகவல்கள், இதுவரை விற்கப்பட்ட மாணவியரின் பட்டியல், விற்கப்பட்டப் பெண் குழந்தைகளின் தற்போதைய நிலை உட்பட சடகோபனின் மொத்த ஜாதகமும் வெட்டவெளிச்சத்தில் அம்பலப்படுத்தப்பட்டது.தவிர சடகோபனுடன் கூட்டணி வைத்துக்கொண்ட அந்தப் பெரும்புள்ளிகள் யார் யார் என்ற விவாதமும் செய்தித் தளங்கள் அனைத்திலும் முன்னெடுக்கப்பட்டது.

"கரிகாலா அங்க உட்கார்ந்து என்னத்தடா கிழிச்சிட்டிருக்க? எவன் அந்த நியூஸை எல்லாம் பரப்புனதுன்னு கண்டுபிடிக்கக் கூடத் துப்பில்லையா உனக்கு? என் முன்னாடி பம்மிக்கிட்டு நின்னவனெல்லாம் இப்ப பாஞ்சிக்கிட்டு வரான். என்னத்தையாவது செஞ்சு நாளைக்குக் காலைலக்குள்ள இதச் செஞ்ச மூதேவி யாரென்று கண்டுபிடிக்கிற. அவனக் கண்டுபிடிச்சுமட்டும் என்கிட்டக் கூட்டிட்டுவா அப்புறம் அவனக் கவனிக்கவேண்டிய வகையில கவனிச்சுச் சாவுய்யென்றால் எப்படியிருக்கும்னு அவனுக்கு லைவா காட்டுறேன்."

கரிகாலனைப் பேசவேவிடாமல் தன்போக்கிற்குக் கத்திவிட்டு அழைப்பைத் துண்டித்தார் மார்த்தாண்டம். முரல்களை நரநரத்த கரிகாலன் மேலெழும்பிய ஆத்திரத்தை அடக்கிக் கொண்டு, மீண்டும் மார்த்தாண்டத்துக்கு அழைப்புவிடுத்தான். நொடியில் அழைப்பையேற்றவர்,

"டேய் டேய் எனக்கு இப்ப இருக்கிற ஆத்திரத்துக்குச் சத்தியமா உன்னக் கெட்டவார்த்தையில திட்டினாலும் திட்டிருவேண்டா. குறுக்கப் பேச நினைக்காம ஒழுங்கு மரியாதையா போய் வேறவேலையப் பாரு. அந்த நாதாரி எங்கயிருக்கான்னு தேடிக் கண்டுபிடிச்சு, அவனக் குண்டுகட்டா தூக்கிட்டு ஆபீஸ்க்கு வா அப்புறம் பேசிக்கலாம் நாம."
எனப் பொறிந்தவர் எடுத்தவேகத்திலேயே அழைப்பைத் துண்டித்திருந்தார்.

மார்த்தாண்டத்தின் பேச்சு கரிகாலனின் காதில் ஒரு அண்டா ஈயத்தைக் காய்ச்சி வார்த்தது. சுறுசுறுவென ஏறியக் கோபத்தில், "இவன்மட்டும் பொறுப்பேயில்லாம அங்க சொகுசா உக்காந்து குடி கூத்துன்னு கொண்டாட, நான் இங்கப் பைத்தியக்காரன்மாதிரி ராப்பகலா அலைஞ்சு திரிஞ்சுத் தப்புச் செஞ்சவனக் கண்டுபிடிக்கணுமா? ஆடு. எவ்வளவு ஆடமுடியுமோ நல்லா ஆடு. ஒரே அடியா உன் ஆட்டத்தை அடக்கத்தானே கண்கொத்திப் பாம்பா காத்துக்கிட்டிருக்கேன் அந்தநாள் சீக்கிரத்துல வராம இருக்கிறது உனக்குத்தான் நல்லது. இல்லன்னா அந்த ஆண்டவனால கூட உன்னக் என்கிட்ட இருந்து காப்பாத்தமுடியாதுடா." என ஒரு கோணல் சிரிப்புடன் வார்த்தைகளை உதிர்த்த கரிகாலனின் முகம் அறையின் மெல்லிய விளக்கொழியில் விகாரமாக மாறியது.

சுடரொளி அறக்கட்டளை அலுவலகத்திற்கும், பள்ளிக்கூடத்திற்கும் முத்திரை வைத்துப் பூட்டுப் போடும் வேலை எ சி பி பிறைசூடனிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. பிறைசூடனும் தன்னுடன் இரண்டு காவலர்களை அழைத்துக் கொண்டு சுடரொளி நிறுவனத்தை மொத்தமாக முத்திரை வைத்துப் பூட்டினான். கூடவே வெளிநாட்டில் வசிக்கும் நன்கொடையாளர்களுடன் காணொளி அழைப்பின்வாயிலாகச் சில முக்கிய விடயங்களை உரையாடிவிட்டுப், பள்ளி மாணவிகளைப் பாதுகாப்பாக அவர்களது பெற்றோருடன் அனுப்பிவைத்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தான். எதேர்ச்சியாகத் தொலைபேசியைப் பார்க்கும்போதுதான் மணி இரவு பதினொன்று என்பதையும் அறிந்துகொண்டான்.

சடகோபனின் அழுக்குப் பக்கங்களே பிறை சூடனின் சிந்தையை முழுமையாக ஆக்கிரமித்திருந்தன. கணக்கில்லாக் குற்றங்களையாற்றிவிட்டு ஒருவனால் எப்படிக் கூச்சமேயில்லாமல் புன்னகைக்கமுடிகிறது?

இவனும் சடகோபனை ஒருமுறை நேரில் சந்தித்திருக்கிறான். பள்ளி ஆண்டுவிழாவிற்கு
இவனைச் சிறப்பு விருந்தினராக வந்து நிகழ்வில் கலந்துகொண்டு மாணவர்களை ஊக்குவிக்கும்வண்ணம் சிறப்புரையாற்றவேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
அப்போது இவரைப் போலத்தான் ஒவ்வொரு மனிதனும் இருக்கவேண்டும் என்று நினைத்தானே? எண்ணும்போதே அவனது நெஞ்சம் வலித்தது. சடகோபனால் சீரழிக்கப்பட்டப் பெண்களின் புகைப்படங்களைப் பார்த்தானே; அந்த வதனங்களில்
தொக்கினின்றப் பூரிப்பும் புன்னகையும் அவனது அகத்தை ஆட்சி செய்தன.

தனக்குள் உழன்றுகொண்டிருந்தவனின் விழிகள் மகிழுந்தின் பின்புறப் பார்வைக் கண்ணாடியினைச் சந்தித்ததும் குழப்பத்தில் சுருங்கியது. காரணம் இருசக்கர வாகனம் ஒன்று அவனைப் பின்தொடர்ந்துகொண்டிருந்தது. என்னவென்று புரியாமல்
வண்டியை ஓரங்கட்டி நிறுத்திப், பின் கண்ணாடியை உற்றுநோக்கத் துவங்கினான். அந்த இருசக்கரவாகனமும் அவனுக்குப் பின் சற்றுத் தள்ளி ஒதுங்கி நின்றது. சிலநிமிடங்கள் கழித்து யோசனையுடன் வண்டியைக் கிளப்பினான் பிறைசூடன்.

அப்பொழுதும் அந்த இருசக்கரவாகனம் அவனது வாகனத்தை விடாமல் பின்தொடர்ந்தது.
பிறைசூடன் சுதாரிக்கும்முன்பு கணநேரத்தில் அவனது மகிழுந்தை உரசிக்கொண்டு சென்றதோடு சட்டென்று பிறைசூடனின் பார்வையிலிருந்து மறைந்திருந்தது.

அந்தநேரம்பார்த்துச் சம்பந்தமேயில்லாமல் மார்த்தாண்டம் வீட்டுச் சாளரம் பிறைசூடனின் நினைவுகளைக் கவர்ந்தது. எதையோ ஆழ்ந்து சிந்தித்தவன் ஒரு தீர்மானத்தோடு அங்கிருந்து புறப்பட்டான்.
 

Author: Vishakini
Article Title: செந்தமிழ் - 13
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
  • Like
Reactions: Magizh kutty

Gowri Karthikeyan

Well-known member
May 5, 2026
1,289
370
83
Chennai
இந்த மார்த்தாண்டனும் இவங்களுக்கு கூட்டா?????
மலர் படிச்சதும் இந்த ஸ்கூல்லா????
கரிகாலன் நல்லவன் தானா???