கண்ணம்மா.
அத்தியாயம் 19.
விண் தாரகையைத் தூங்கச் சொல்லிவிட்டுக், கதிரவன் இந்த உலகத்தை காவல் காக்கத் துவங்கியக் காலைவேளை.
தனது மார்பில் கிடந்தப் பூக்குவியலை ஆசைத் தீரப் பார்த்துக் கொண்டிருந்தான் நிலவன். அப்பழுக்கற்ற அவளது பளிங்கு வதனத்தை ஒற்றைவிரலால் வருடினான். பெண்ணவளின் நெற்றியில் புரண்ட முடிக்கற்றைகளை அவளது காதோரத்தில்
ஒதுக்கிவிட்டவனின் பார்வை, அவள் அணிந்திருந்த அந்தக் குட்டி ஜிமிக்கியில் பதிந்தது.
ஏனோ ஆடவனின் மனது அந்த ஜிமிக்கியின்பால் பொறாமை கொண்டது. அந்த ஜிமிக்கியாக மனையாளின் காதுகளில் நான் தவழக் கூடாதா என்று ஏக்கம் கொண்டது.
மெல்ல நிலவனின் விரல்கள் செந்தமிழின் செவியுடன் உறவாடிக் கொண்டிருந்த
ஜிமிக்கியுடன் உறவாடின. கணவனின் செய்கைகள் உண்டாக்கியக் குறுகுறுப்பில்
உறக்கம் கலைந்து மெல்லக் கண்களைத் திறந்தாள் செந்தமிழ். அவளது இதழ்கள் தன்னைப்போல் விரிய,
"நிலவன்;" எனக் கணவனின் பெயரை உச்சரித்தவள், கொண்டவனின் முகத்தைப் புன்னகையுடன் அண்ணாந்து பார்த்தாள். ஆணவனும்
நேசம் பொங்கத் தன்னவளைத்தான் விழியகற்றாமல் நோக்கிக்கொண்டிருந்தான்.
கலைந்தத் தலையும், உறக்கத்தை இன்னுமே மிச்சம் வைத்திருந்த மீன் விழிகளும்,
காய்ந்த உதடுகளுமாய் நலுங்கிக் கிடந்தக் காரிகையின் தோற்றம் அப்படியே கணவனின் நெஞ்சை அள்ளியது.
திருமணம் முடிந்த மறுநாளிலிருந்து இப்படித்தான். விடியலில் செந்தமிழின் வாயிலிருந்து முதலில் வெளிவரும் வார்த்தை நிலவன் மட்டுந்தான். நிலவனுக்குமே
அவனுக்கான செந்தமிழின் அழைப்பு மிகவும் பிடித்திருந்தது.
நிலவன் என்ற ஒற்றைப் பெயரைக் குரலில் பலவித பாவனைகளைத் தாங்கி செந்தமிழ் உச்சரிக்கும் சமயங்களில் நிலவனின் வானம் பல வண்ணமத்தாப்புகளா நிரம்பி வழியும்.
நிலவன் என்ற ஒற்றை அழைப்பிலேயே செந்தமிழின் மனநிலை கண்ணாடியாகப் புலப்பட்டுவிடும் கொண்டவனுக்கு.
"என்ன எங்களுக்கெல்லாம் தொர காலை வணக்கம் சொல்லமாட்டீங்களா?"
என அவள் புருவத்தைத் தூக்கிக் கேட்டு அழகில் தடுமாறிய மனதை இழுத்துப் பிடிக்க
மிகவுமே சிரமப்பட்டான் நிலவன்.
"எப்பவுமே முதல் வணக்கத்தை நாங்கதான் சொல்லனுமா? நீங்க சொன்னா ஆகாதா?"
எனக் கேட்டு செந்தமிழின் மூக்கைப் பிடித்து ஆட்டினான் நிலவன்.
"ஆகாது." என்று சிரிப்புடன் சொல்லியவளை முறைத்த நிலவன், தனது முகத்தைப் பக்கவாட்டில் திருப்பிக் கொண்டான்.
"நிலவன் கோபமா இருக்கீங்களா என்ன? நம்பமுடியலையேப்பா."என்றவள் அவனது முகத்தைப் பற்றித் தனக்கு வாகாக இழுத்துக் கொண்டவள், கணவனின் நெற்றியில் இதழ்ப் பதித்துவிட்டு,
"இனிய காலை வணக்கம் நிலவன்." என்றாள் கண்களைச் சிமிட்டி.மனைவி தந்த இன்ப அதிர்ச்சியில் கிறங்கினான் நிலவன். செந்தமிழின் நெற்றியில் வழிந்திருந்தச் செந்தூரப் பொட்டுவேறு அவனைத் தடுமாறவைத்தது.
"அடியே செந்து!" எனப் புன்னகையுடன் மனையாளின் வதனத்தை நிமிர்த்தியவன்,
"இனிய காலை வணக்கம் செந்துமா!" எனக்கூறிப் பெண்ணவளின் நெற்றியில்
தன் அச்சாரத்தைப் பதித்தான்.
"இன்னைக்கு நமக்கு ஒரு முக்கியமான வேலயிருக்குடா,அதனால நாம சீக்கிரமாத் தயாராகனும். நீ போய் முதல்ல குளிச்சிட்டு வந்துடு. அதுக்குள்ள நான் கீழ போய் எல்லாரையும் ஒரு பார்வப் பாத்துட்டு வந்துடறேன்." என்று கூறி, தன் நெஞ்சில் தாடைப் பதித்துத் தன்னையே இமைக்காமல் நோக்கி கொண்டிருந்தவளின் நெற்றி முட்டினான் நிலவன்.
"ம்; சரி நிலவன்." என்றுவிட்டுக், கணவனிடமிருந்து விலகிக் குளியலறைக்குள் நுழைந்தாள் செந்தமிழ்.
குளித்துவிட்டு வெளியே வந்த செந்தமிழைக், கட்டிலில் வீற்றிருந்த அழகியப் புடவையொன்று கண்களைச் சிமிட்டி வரவேற்றது.கட்டிலினருகில் சென்று
அந்தச் சேலையைக் கையில் எடுத்துப் பார்த்தாள் பெண்.
அவளுக்குப் பிடித்தவகையில் அதிகக் கனமில்லாமல் மெல்லியக் கரையுடன் கண்ணைப் பறித்தது புடவை. அவளுக்குத் தெரியாதா இது யாருடைய வேலையென்று? உதட்டில் உறைந்தப் புன்னகையோடு நிலவன் தனக்காக வாங்கியிருந்த அந்தச் சேலையை
நேர்த்தியாக உடுத்திக் கொண்டாள் செந்தமிழ்.
அறைக்குள் வந்த நிலவன் ஒருகணம் அப்படியே நின்றான். அன்றலர்ந்த மலராய்
நின்றிருந்தக் காரிகை அவனின் கவனத்தை ஈர்த்தாள். ஒரு தலைக் குலுக்கலோடு தன் உடைகளுடன் குளிக்கச் சென்றான் நிலவன்.
அறையின் மேல்மாடத்துக் கம்பியில் சாய்ந்தவாறு,முகத்தில் வந்து மோதும் பனிக்காற்றின் குளிர்ச்சியில் சிலிர்ப்புடன் லயித்திருந்தாள் செந்தமிழ். அப்போது அவளைத் திருப்பிப், பெண்ணவளின் தோல்களைத் தழுவியிருந்தச் சுருள்முடியில் மலர் சூட்டினான் நிலவன். தன் சட்டைப் பையிலிருந்தக் குப்பியையெடுத்து மங்கையின் பிறைநிலா நெற்றியில், அதிலிருந்தச் செந்தூரப் பொட்டை வைத்துவிட்டான்.
எப்போதும்போல் செந்தூரத்தை இட்டிருந்த செந்துவை மையலுடன் மாம்பழ வண்டாய் நிலவனின் விழிகள் மொய்த்தன.
"இந்தச் செந்தூரப்பொட்டு என்னோட செந்துவ இன்னும் அழகாக் காட்டுது." என்றான் வழக்கம்போல. கணவனின் கரைகாணா நேசக் கடலில் மனமுவந்து மூழ்கிப் போனாள் செந்தமிழ்.
"சேலை ரொம்ப நல்லாயிருக்கு நிலவன். இதோட நிறம் என்ன?எனக்கேட்டவளை ஒருமுறைச் சுற்றிவந்தவன்,
"சுற்றும் விழி சுடர் தான் கண்ணம்மா சூரியச் சந்திரரோ!
வட்டக் கரியவிழி கண்ணம்மா
வானக் கருமை கொள்ளோ!
பட்டுக் கருணிலப் புடவைப் பதித்த நல் வைரம்.
நட்ட நடுநிசியில் தெரியும் நட்சத்திரங்களடி.
சோலை மலரொளியோ உனது சுந்தரப் புன்னகைதான்.
நீலக் கடலலையே உனது நெஞ்சின் அலைகளடி!
கோலக்குயிலோசை உனது குரலின் இனிமையடி.
வாழைக் குமரியடி கண்ணம்மா மருவ காதல் கொண்டேன்...'
என்றான் அவளது கன்னங்களைத் தாங்கி. காந்தமாய்க் கவர்ந்திழுத்தக் கணவனின் குரலில் செந்தூவின் முகத்தை வெட்கச் செந்தூரங்கள் அவசரகதியில் முற்றுகையிட்டன.
"ஓ! இது கருநீல நிறமா?"செந்தமிழின் வாயிலிருந்து வார்த்தைகள் இயல்பாக வெளியே வர அதிகம் போராடின.
"உனக்கு ரொம்ப எடுப்பான நிறம் இது செந்து. இந்தப் புடவை உனக்குஎப்படியிருக்குன்னு
ஏற்கனவே சொல்லிட்டேனே;உண்மையாவே அப்படியிருக்க நீ." என்றவன் அவளை அழைத்துக் கொண்டு கூடத்திற்கு வந்தான்.
கூடத்தில் மொத்தக் குடும்பமும் குழுமியிருந்தது. "பாக்கவே கண்ணுக்குக் குளிர்ச்சியா இருக்கீங்கத் தங்கங்களா. இதேபோல எப்பவும் ஒத்துமையா இருக்கணும் நீங்க." என்றபடி
தம்பதியினரை அனைத்து விடுவித்தார் தெய்வானை ஆட்சி.
"வாங்க வாங்க நேரத்தக் கடத்தாம எல்லோரும் சீக்கிரம் போகலாம்." என்று சொல்லிக்கொண்டே முன்னேறத் துவங்கினார் பர்வதம் பாட்டி. அனைவரும் அவரைப் பின்தொடர்ந்தனர். ஒன்றும் விளங்காமல் நிலவனுடன் இழுப்பட்டாள் செந்தமிழ்.
மலரில்லத்து வளாகத்திலேயேதான் எல்லோரும் உலாவிக் கொண்டிருந்தனர்.
சுமார் 10 ஏக்கர் நிலப்பறப்பைத் தன்னகத்தே கொண்டிருந்த மலரில்லம், பெரிய வீடு, அகன்றத் தோட்டம், சிறிய நீச்சல் குளம் மற்றும் பெண்கள் மறுவாழ்வு மையத்தை உள்ளடக்கியது. மறுவாழ்வு மையத்தைத் தாண்டியதும், நிலவனின் கைகள் செந்தமிழின் விழிகளை மூடின.
"நிலவன் என்ன? ஏன் என்னோட கண்ணப் பொத்துறீங்க?"எனக் குழப்பம் மேலோங்க வினவினாள் செந்தமிழ்.
"இதோ இப்போ திறந்திடலாம் செந்தூமா." என்று மொழிந்த நிலவன், அவளது கைகளைப்
பலகையொன்றின்மீது வைத்தான்.
"செந்நிலா முற்றம்"; என்று பிரெயில் எழுத்துவடிவில் பொறிக்கப்பட்டிருந்த வார்த்தைகள்", செந்தமிழின் விரல்களை உரசிச் சென்றன.ஒருவிதத் திகைப்புடன்
"நிலவன்;" என்று கணவனை அழைத்தாள் பெண். அந்த ஒற்றை அழைப்பிலேயே அவளின் மனநிலையைப் படித்தவனாக அவளது கண்களிலிருந்து தன் கையை எடுத்தான் நிலவன்.
தன்முன்னால் எழும்பியிருந்த அந்தக் குட்டி வீட்டைக் கண்டு செந்தமிழின் விழிகள் ஆச்சரியத்தில் வட்டமாக விரிந்தன. முகப்புவாயிலில் தமிழெழுத்துக்களால் நிரம்பியிருந்தப் பலகை, தங்களது வீட்டின் பெயரைத்தான் தாங்கியிருக்கிறது எனப் புரிந்துகொண்டாள். மரங்கள் புடைசூழ நடுவில் அமைந்திருந்தது செந்நிலா முற்றம்.
ஒருவித மோனநிலையில் நிலவனின் அசைவிற்கெல்லாம் இசைந்தாள் செந்தமிழ்.
"நமக்கே நமக்கானக் குட்டி உலகம் இது செந்து. முதல் முதல்ல உள்ளப் போகும்போது வலது கால எடுத்துவச்சு போவோம் வா." என்றவாறு அவளுடன் இணைந்து
வலது காலை எடுத்துவைத்துத் தங்களது குட்டி நந்தவனத்தில் நுழைந்தனர் நிலவனும் செந்தமிழும்.
வாயிலின் இருமருங்கிலும் திண்ணைகள் அமைக்கப்பட்டிருக்க,அழகிய வேலைப்பாடுகளைக் கொண்டத் தூண்கள் திண்ணைகளை அலங்கரித்தன. வீட்டினுள்ளே சிறியக் கூடமும், கூடத்தின் இடதுபுறத்தில் சமையலறையும், வலதுபக்கத்தில் படுக்கையறையும் இடம்பெற்றிருந்தன. வீட்டுப் பின் கட்டில் சிறிய மலர்த் தோட்டம் ஒன்றையும் வைத்திருந்தான் நிலவன். காண்பவரின் கண்களைக் குளிர்விக்கும் செந்நிலா முற்றத்தைக் கண்டமாத்திரத்திலிருந்தே செந்தமிழின் மனதிற்கு மிகவும் நெருக்கமாகிப்போனது.
சிறிதுநேரம் உரையாடலுக்குப் பிறகு, பெரியவீட்டிலிருந்து தயாரித்துக் கொண்டுவரப்பட்ட உணவு வகைகளை ஒன்றாக அமர்ந்து ருசித்துவிட்டு, அனைவரும் அங்கிருந்து மெல்ல விடைபெற்றுச் சென்றனர்.
அமுதவல்லிமட்டும் மனம் கேளாமல் செந்தமிழிடம் பேசினார்.
"இங்கப் பாருமா உன் ஒருத்திக்காகத்தான் நிலவன் இத்தனையையும் செஞ்சிருக்கான். இப்பவெல்லாம்அவன் செய்ற ஒவ்வொரு செயல்கள்ளையும் நீதான் நீக்கமற நிறைஞ்சிருக்க. அப்படிப்பட்டவன நீதான் நல்லாக் கவனிச்சுக்கணும்.வாழ்க்க நம்மள எந்த இடத்துக்குக் கொண்டுவந்து நிறுத்தினாலும் எதுக்கும் அசராம எல்லாத்தையும் நமக்கு ஏத்தமாதிரி மாத்திக்கிட்டு நல்லமுறையில வாழனும். என் வாழ்க்கையில நான் இதத்தான் செஞ்சேன். இப்ப உனக்கும் இதையே சொல்றேன் யோசிச்சு நடந்துக்கோ. நிலவனோட சந்தோஷத்தத் தாண்டி எனக்கு வேற எதுவுமே முக்கியமில்ல. நீயும் நல்லாயிரு.
நல்லாயிருக்கணும்."என்றுவிட்டுச் சென்றார்.
செந்தமிழும் இதழ்களை நிறைத்தப் புன்னகையோடு செல்லும் அமுதவல்லியையே பார்த்துக் கொண்டிருந்தாள். நிலவன் தன்னவனென்று நினைக்கையிலேபெண்ணவளின் உள்ளம் கர்வம் கொண்டது.
மாலைநேரத்துக்கு ஏதுவாக நிலவனுக்குப் பிடித்தப் பதத்தில் இஞ்சி ஏலக்காய்ச் சேர்த்துத் தேநீரைத் தயாரித்தக் கையோடுபருப்பு வடைகளையும் செய்திருந்தாள் செந்தமிழ்.
அவள் இங்கு வந்து முழுதாக ஒருநாள் கூட நிறைவடையாதபோதிலும், செந்நிலா முற்றத்துடன் அவளுக்கு இறுகியப் பிணைப்பு உருவாகியிருந்தது. இது என் வீடு என்ற உரிமை உணர்வையும் செந்நிலா முற்றம் அவளுக்குள் தோற்றுவித்தது.
இதற்கெல்லாம் காரணமாக இருப்பவனின்பால் நேசம் பெருகியது.
"நிலவன் இந்தாங்கப்பா."எனக் கூறி, கூடத்தில் அமர்ந்து, மேற்கொண்டு வீட்டிற்கு வாங்கவேண்டிய பொருட்களைப் பட்டியலிட்டுக் கொண்டிருந்தவனின்முன் தேநீர்க் கோப்பையையும் உணவுத் தட்டையும் வைத்தாள் செந்தமிழ்.
"என்ன ஒரே பகல்ல சேர்ந்து ஆளே மாறிட்டாளே!"என வியப்புமேலிடக் கேட்ட நிலவன்,, அவளை இழுத்துத் தன் மடியில் அமர்த்திக் கொண்டான்.
"செந்நிலா முற்றம்."என்றாள் முகமலர்ச்சியுடன்.
"ஆனா ஏன் நிலவன் எல்லோருடனும் சேர்ந்து நம்மளும் பெரியவீட்டிலேயே இருந்திருக்கலாமே?"என்று வினவினாள் செந்தமிழ்.
"நீ சொல்றமாதிரி இருந்திருந்தா நான் உன்ன இப்படிப் பார்த்திருக்க முடியாதுல்ல?
அதுக்காகத்தான்."எனக்கூறினான் அவளது ஜிமிக்கியைப் பிடித்து ஆட்டிக்கொண்டே.
"அதோட என்னதான் எல்லாமே அங்க நல்லாயிருந்தாலும் அவங்களோட பொருந்திப் போறதுல நிச்சயம் உனக்குச் சங்கடங்கள் இருக்கும்னு எனக்குத் தோணுச்சு. எப்போ நீ எனக்குள்ள வந்து எனக்கானவளா மாறினியோ அந்தநொடியிலேயே உனக்கு ஏத்தச் சூழலை அமைக்கநினைச்சேன். இதுல என்னோட சுயநலமும் அடங்கியிருக்கு.
எந்த ஒரு தொந்தரவும் இல்லாம என்னோட செந்துவக் கண் சிமிட்டாமப் பார்த்துக்கிட்டேயிருக்கலாமே." என்றான் குறுஞ்சிரிப்போடு.
"நீங்க இத்தன யோசிக்கிற அளவுக்கு உங்க செந்து அப்படி உங்களுக்கு என்னதான் பண்ணிட்டா நிலவன்?"எனக்கேட்ட செந்தமிழின் வாயில் ஒருத் துண்டு வடையை வைத்தவன்,
"நீ கேட்டக் கேள்வியிலேயேதான் அதுக்கான பதிலும் அடங்கியிருக்கு. நீதான சொன்ன உங்களோட செந்துன்னு. அதுபோதாதா ?என்றவன் சொல்லாமல் விட்ட விளக்கங்கள் அனைத்தையும் அவனது இறுகிய அணைப்பு எடுத்து இயம்பியது.