செந்தூரம் தமிழ் நாவல் போட்டி – 2027
இரண்டாவது ஆண்டுப் போட்டிக்கான அறிவிப்பு!
ஹாய் மக்களே!ஒரு வருடம் கடந்துவிட்டதா? நம்பவே முடியவில்லை!
செந்தூரம் தமிழ் நாவல் போட்டி 2026 நடந்து முடிந்து கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகப்போகிறது.
நிறைய அனுபவங்களையும், பல புதிய விடயங்களையும் கற்றுத் தந்த முதலாவது போட்டி, நம் அனைவரின் ஒத்துழைப்புடனும் ஆதரவுடனும் சிறப்பாக நடந்து முடிந்தது.
(இதில் இன்னும் வாசகர்களுக்கான பரிசுகள் அனுப்பிவைக்கப்படவில்லை. தாமதத்திற்கு மன்னிக்கவும். ஆனால், விரைவில் அனுப்பிவைத்துவிட்டுத் தகவல் சொல்கிறேன்.)
இதோ, அதன் தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டில் செந்தூரம் தமிழ் நாவல் போட்டி – 2027 உங்கள் முன்னால்!
முதலாவது போட்டியில் நாம் பின்பற்றிய விதிமுறைகளில் பெரிய மாற்றங்கள் எதுவும் இல்லை.
இந்த ஆண்டும் உங்கள் எழுத்துகளையும் கற்பனைகளையும் அழகான காதல் கதைகளையும் எதிர்பார்த்துக்
காத்திருக்கிறோம்.
🏆 பரிசுத் தொகைகள்
🥇 முதலாம் பரிசு – ₹7,000🥈 இரண்டாம் பரிசு – ₹6,000
🥉 மூன்றாம் பரிசு – ₹5,000
மேலும், போட்டிக்கான விதிமுறைகளுக்கு உட்பட்டு, நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் தங்களுடைய கதைகளை முழுமையாக எழுதி முடிப்பவர்களுக்கு ஊக்குவிப்புப் பரிசாகத் தலா ₹1,000 வழங்கப்படும்.
📅 போட்டிக்கான காலக்கெடு
- போட்டி ஆரம்பம்: 14 ஜனவரி 2027
- போட்டி நிறைவு: 15 மே 2027
- கதைகளைச் சமர்ப்பிப்பதற்கான இறுதித் திகதி: 15 மே 2027
- போட்டியின் முடிவுகள் அறிவிக்கப்படும் திகதி: 15 ஆகஸ்ட் 2027
முக்கிய குறிப்பு: போட்டிக்கான காலக்கெடு எக்காரணம் கொண்டும் நீட்டிக்கப்பட மாட்டாது. எனவே, அதற்கேற்ப உங்கள் எழுத்துப் பணிகளைத் திட்டமிட்டுக்கொள்ளுங்கள்.
போட்டியில் பங்குபற்ற விரும்புபவர்கள் 28 பெப்ரவரி 2027 வரை தங்களுடைய பெயர்களைப் பதிவு செய்துகொள்ளலாம்.
📖 போட்டிக்கான விதிமுறைகள்
- போட்டியில் பங்குபற்றும் கதைகள் 25000 முதல் 35000 சொற்களுக்குள் அமைந்திருக்க வேண்டும்.
- கதைகள் சொந்தப் படைப்புகளாகவும், முதன்முறையாக எழுதப்படுபவையாகவும் இருக்க வேண்டும். வேறு தளங்களில் ஏற்கெனவே வெளியிடப்பட்ட கதைகளாக இருக்கக்கூடாது.
- வேறொரு கதையைத் தழுவி எழுதப்பட்ட கதைகள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.
- ஒருவர் ஒரு கதையை மட்டுமே போட்டிக்கு அனுப்ப முடியும்.
- இந்த முறை புனைபெயரில் மட்டுமே எழுத வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. உங்கள் சொந்தப் பெயரிலேயே எழுதலாம். விருப்பமிருந்தால் புனைபெயரிலும் எழுதலாம். அது முற்றிலும் உங்கள் விருப்பம்.
- போட்டிக்காக அனுப்பப்படும் கதைகள், போட்டியின் முடிவுகள் அறிவிக்கப்படும் வரை நிதனிபிரபு நாவல்கள் தளத்தில் மட்டுமே இருக்க வேண்டும். வேறு எந்தத் தளத்திலும் அல்லது சமூக வலைத்தளங்களிலும் பதிவிடக்கூடாது.
- கதையின் கரு காதலை மையமாகக் கொண்டிருக்க வேண்டும். காதலை அடிப்படையாகக் கொண்டிருந்தாலும், அதற்குள் குடும்பம், உறவுகள், பழிவாங்குதல், மர்மம், திகில் என உங்களுக்குப் பிடித்தமான எந்தக் கருவையும் இணைத்துக் கொள்ளலாம்.
- விரசமான எழுத்துகள், வரம்பு மீறிய வார்த்தைப் பிரயோகங்கள், வாசிப்பவர்களின் முகம் சுளிக்க வைக்கும் காட்சிகள் முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்.
- எழுத்துப் பிழைகளையும் சொற்பிழைகளையும் முற்றிலுமாகத் தவிர்ப்பது சாத்தியமற்றதுதான். இருப்பினும், அளவுக்கு அதிகமான பிழைகள் இருக்கக்கூடாது. வாக்கியங்கள் முறையாக முற்றுப்பெறுதல், சொல்ல வந்த கருத்தைத் தெளிவாகச் சொல்லுதல், கதையின் நேர்த்தி, அத்தியாயங்களின் அமைப்பு போன்றவற்றில் கவனம் செலுத்துவது சிறப்பாகும்.
- மேற்குறிப்பிட்ட விதிமுறைகள் மீறப்படும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட கதைகள் போட்டியிலிருந்து விலக்கப்படும்.
🏅 வெற்றியாளர்கள் தெரிவு
வெற்றியாளர்களைத் தெரிவு செய்யும்போது வாசகர்களின் வரவேற்பு, தளத்தில் கருத்திடுபவர்களின் எண்ணிக்கை, கதைகளைப் பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை ஆகிய அனைத்தும் கவனத்தில் கொள்ளப்படும்.அதேவேளை, இவை மட்டுமே வெற்றியாளர்களைத் தீர்மானிக்கும் காரணிகளாக இருக்காது.
நடுவர்களால் கதைகள் வாசிக்கப்பட்டு மதிப்பீடு செய்யப்படும். அனைத்தையும் கருத்தில் கொண்டு நிதனிபிரபு நாவல்கள் தளத்தின் முடிவே இறுதியானது.
இந்தப் போட்டி செம்மையாகவும் நேர்மையாகவும் நடத்தப்படும் என்பதை உறுதியாகத் தெரிவித்துக் கொள்கிறோம். விதிமுறைகளில் எவ்வித நீக்குப்போக்கும் கடைப்பிடிக்கப்பட மாட்டாது.
📩 கதைகளை அனுப்ப வேண்டிய முறை
போட்டியில் பங்குபற்ற விரும்புபவர்கள் தங்களுடைய கதைகளைப் பின்வரும் மின்னஞ்சல் முகவரிக்கு மட்டுமே அனுப்பி வைக்க வேண்டும்.மின்னஞ்சல் முகவரி: sendhuram26@gmail.com
கதையை அனுப்பும்போது கீழ்க்காணும் நான்கு தகவல்களையும் கட்டாயமாகக் குறிப்பிட வேண்டும்.
- போட்டிக் கதையின் தலைப்பு
- எழுத்தாளரின் பெயர்
- மின்னஞ்சல் முகவரி
- தொடர்புக்கான கைபேசி இலக்கம்
அன்பான எழுத்தாளர்களே!
மீண்டும் ஒருமுறை உங்கள் எழுத்துகளோடு பயணிக்கக் காத்திருக்கிறோம்.
போட்டி என்பது வெற்றியாளர்களைத் தெரிவு செய்வதற்கான ஒரு களமாக மட்டுமல்லாமல், புதிய எழுத்தாளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்வதற்கும், தங்களுடைய எழுத்தாற்றலை வளர்த்துக்கொள்வதற்குமான ஒரு வாய்ப்பாகவும் அமைய வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்.
கடந்த முறை எங்களுடன் பயணித்தவர்களையும், இந்த முறை புதிதாகப் பங்குபற்ற விரும்புபவர்களையும் அன்புடன் வரவேற்கிறோம்.
உங்கள் கற்பனைகளுக்கு உயிர் கொடுங்கள். உங்கள் எழுத்துகளால் வாசகர்களின் மனங்களை வெல்லுங்கள்!
வாழ்த்துகளும் அன்பும்!
என்றென்றும் நட்புடன்
நிதனிபிரபு நாவல்கள் தளம்
Author: நிதனிபிரபு
Article Title: செந்தூரம் தமிழ் நாவல் போட்டி 2027 - அறிவிப்பு
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: செந்தூரம் தமிழ் நாவல் போட்டி 2027 - அறிவிப்பு
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.