• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

செம்புலப் பெயல் நீர் - 13

Vishakini

Moderator
Staff member

செம்புலம் 13

மேதினூர்:

விருந்து முடிந்து உறவினர்கள் அனைவரும் ஹாலில் அமர்ந்து பேசிக்கொண்டிருக்க, பாரி- மலர் மட்டும் தற்செயலாக மொட்டை மாடிக்குச் செல்லும் படிக்கட்டு அருகே சந்தித்தனர். அவளோ கையில் ஒரு ஜூஸ் கிளாஸுடன் நின்றிருக்க, பாரியின் கண்கள் அவளையே மொய்த்துக் கொண்டிருந்தன.

பின்னர் மெல்ல அவளருகில் நெருங்கியவன் "நீ இவ்வளவு சீக்கிரம் வளர்ந்து ஒரு தேவதையா நிப்பன்னு நான் எதிர்பார்க்கல. உன் காலேஜ் படிப்பு உன்னை ரொம்பவே மாத்திருச்சு போல," என்றான் அவளது கண்களை ஆழமாகப் பார்த்தபடி.

அவன் அவ்வளவு நெருக்கமாக நின்று பாராட்டியதும், மலருக்குள் ஒரு சிலிர்ப்பு உண்டானது. கல்லூரித் தோழர்கள் எத்தனையோ பேர் அவளைப் புகழ்ந்திருக்கிறார்கள், ஆனால் தன் அத்தை மகனின் வாயால் "தேவதை" என்ற வார்த்தையைக் கேட்டதும் அவளுக்குள் ஏற்பட்ட அந்தப் பூரிப்புக்கு அளவே இல்லை.

ம்ம்.."படிப்பு என்னை மாத்திருக்கலாம்... ஆனா என் மனசு மாறலையே!" என்று சொல்லிவிட்டு சட்டென வெட்கத்தில் தனது நாக்கைக் கடித்துக் கொண்டாள்.

அவளது அந்தச் சின்னஞ்சிறு செய்கை பாரியை இன்னும் கிறங்கடிக்க, அப்போது கீழே ஹாலில் இருந்த பாரியின் அம்மாவும் மலரின் அப்பாவும் பேசும் குரல் கேட்டது.

"பாரிக்கும் மலருக்கும் பொருத்தம் சொல்ல வேண்டாம்... கண்ணு பட்டுடும்!" என்று அவர்கள் பேசிக் கொண்ட அந்த வார்த்தைகள் அவர்கள் இருவர் காதுகளிலும் விழுந்தன. ஒரு நிமிடம் அங்கே நிசப்தம் நிலவியது. பாரியின் முகம் மலர்ச்சியில் பிரகாசிக்கவும், மலரோ, வெட்கத்தில் சட்டெனத் தலைகுனிந்தாள்.

"கேட்டியா விழி? கீழே என்ன சொல்றாங்கன்னு?" என ரகசியமாகக் கேட்டான். அதற்கு மலர், பதில் சொல்லாமல், ஒரு மின்னல் வேகப் புன்னகையை மட்டும் வீசிவிட்டு அங்கிருந்து ஓடினாள்.

அவள் ஓடும்போது அவளது ஜிமிக்கிகள் தந்த அந்த ஓசை, பாரியின் காதுகளில் ஒரு புதிய சங்கீதமாக ஒலித்தது. அன்று அவனது பிறந்தநாள் பரிசாகக் கிடைத்த அந்த 'உரிமை', அவன் வாழ்நாள் முழுமைக்கும் போதுமானதாக இருந்தது. சிறிது நிமிடத்தில் மலர் வீட்டினர் அங்கிருந்து கிளம்பிவிட்டனர்.

கொண்டாட்டங்கள் எல்லாம் முடிந்து இப்பொழுது வீடு மெல்ல அமைதிக்குத் திரும்பினாலும், பாரியின் மனதுக்குள் மலர்விழியின் அந்தப் புன்னகையும், வீட்டினரின் அந்தப் பேச்சும் ஒரு பெரிய திருவிழாவையே நடத்திக் கொண்டிருந்தன.

படுக்கையில் விழுந்தவனுக்குத் தூக்கம் வரவில்லை. எட்டி போனை எடுத்தவன், மலரின் நம்பரைத் தேடினான். அவள் கல்லூரி முடித்த பிறகு அவளிடம் வாங்கிய புதிய எண் அது. இதுவரை தனிப்பட்ட முறையில் அவளிடம் பேசுவதற்கான சூழல் வரவில்லை.

ஆனால் இன்று இருக்கும் அவனது மனநிலைக்கு அவளிடம் பேசியே ஆக வேண்டும் போல தோணவும் உடனே கால் பண்ணினான். மறுமுனையில் 'ரிங்' சென்ற ஒவ்வொரு நொடியும் பாரின் இதயம் வழக்கத்தை விட வேகமாகத் துடித்தது. "தூங்கி இருப்பாளோ? இல்லை, பேசலாமா?" என அவன் யோசிப்பதற்குள், அந்தப் பக்கம் அட்டென் பண்ணியவளோ மெல்லிய குரலில் "ஹலோ..." என்றாள்.

நள்ளிரவு அமைதியில் மாமன் மகளின் இந்த மென்மையான குரல் ஒரு வீணையின் நாதம் போலப் பாரின் காதுகளில் தேனாகப் பாய்ந்தது.

அவளோ.... எதுவும் பேசாமல் இருப்பதை வைத்து ஹலோ... அத்தான் என்கவும், ம்ம் "தூங்கிட்டியா விழி? நான் தான் பேசுறேன்..." என்றான் ஒருவிதத் தயக்கத்துடன்.

"இல்லை... தூக்கம் வரல. இன்னைக்கு நடந்ததையே தான் நினைச்சுட்டு இருந்தேன்," என்றவளின் குரலில் ஒரு மெல்லிய வெட்கம் கலந்திருந்தது.

அதைக் கேட்டவனோ அவளை சீண்டிப் பார்க்க நினைத்து, ஓஓஓ..."எதை நினைச்சுட்டு இருந்த? பங்ஷன்ல சாப்பாடு எப்படி இருந்தது என்றா?, நான் உன்னைப் பார்த்ததையா... இல்ல அத்தை நம்ம கல்யாணத்தைப் பத்திப் பேசினதையா?" என்றான்.

மலர்விழியோ அவனுக்கு எந்த பதிலும் சொல்லாமல் மௌனமானாள். அந்த மௌனமே அவளது சம்மதத்தை பாரிக்கும் சொல்லியது.

இருந்தும் அவள் வாய் வழியாக கேட்க விரும்பியவன் சொல்லுங்க மிஸ் மலர்விழி மாறன். உங்களுக்கு தான் காது வரைக்கும் வாய் இருக்குமே, எல்லாரும் ஒரு வார்த்தை பேசி முடிப்பதற்குள் நீங்கள் பத்து வார்த்தைகள் பேசிடுவீங்களே என்று சிரித்தான்.

ஜன்னல் வழியாக வந்த தென்றலை விட தனது அத்தை மகனின் சிரிப்போ அவளுக்கு குளிர்ச்சியை கொடுக்கவும், "ரெண்டுமே தான். காலேஜ் முடிச்சுட்டு வந்ததும் வாழ்க்கை இப்படி ஒரு அழகான திருப்பத்தை எடுக்கும்னு நான் நினைக்கல. அத்தை- அப்பா இருவருக்குள்ளும் கடந்த ஒரு வருஷமாக இந்த பேச்சு போயிட்டு தான் இருக்கிறது. பெரிய மாமா தான் சொன்னாங்க பாரி வந்த பிறகு பேசலாமென, இவர்கள் பேசியதை கேட்ட போது எனக்குள்ள ஒரு பெரிய பூரிப்பு உண்டானது உண்மைதான். ஆனா... நீங்கள் என்ன நினைப்பீங்கன்னு தான் பயமா இருந்தது."

ம்ம் என்றவாறு மெல்லியதாக சிரித்தவன், "உன்னைப் பள்ளிப் பருவத்துல பார்த்தப்ப இருந்த அந்தச் சின்னப் பொண்ணு இப்போ ஒரு பட்டதாரிப் பெண்ணா என் முன்னாடி வந்து நின்னப்பவே, என் மனசு உன்கிட்ட தோத்துடுச்சு விழி. உன்னை விட ஒரு சிறந்த பரிசு எனக்குக் கிடைக்காது," என்றான்.

அவன் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் மலர்விழியின் இதயத்தில் ஒரு நந்தவனத்தையே உருவாக்கியது. "எனக்கும் அப்படித்தான் அத்தான்... உங்களைப் பார்த்ததும் ஒரு நிமிஷம் என் உலகமே நின்னுடுச்சு," என்றாள் நெகிழ்ச்சியுடன்.

நேரம் நள்ளிரவைத் தாண்டியும் அவர்கள் பேச்சு ஓயவில்லை. கல்லூரி நினைவுகள், சிறுவயது குறும்புகள், எதிர்காலக் கனவுகள் என அந்த ஒரு போன் கால் இருவருக்குள்ளும் இருந்த தூரத்தை சுத்தமாக நீக்கியது.

"சரி விழி, விடியப்போகுது... இனிமேலாவது தூங்கு. நாளைக்கு உன்னைப் பார்க்க நான் உங்க வீட்டுக்கு வருவேன்," எனப் பாரி சொல்லவும் "நிச்சயமா வாங்க... உங்களுக்காக நான் காத்திருப்பேன்," என்று சொல்லிவிட்டு போனை வைத்தாள்.

அலைபேசியை அணைத்த பிறகும், அவர்கள் இருவர் முகத்திலும் அந்தப் புன்னகை மறையவில்லை. அந்த இரவு, அவர்களின் காதலுக்கான ஒரு புதிய விடியலின் தொடக்கமாக அமைந்தது.

மறுநாளே தனது கம்பெனியின் மொத்த பொறுப்பையும் எடுத்தவனோ முதலில் அவன் சென்றது அவர்களின் டெக்ஸ்டைல் தொழிற்சாலைக்கு...

அங்குச்சென்ற பாரிக்கு ஆரம்பத்தில் எல்லாம் மிரட்சியாக இருந்தது. பழைய முறையிலேயே வேலைகள் நடந்து கொண்டிருந்ததை பார்த்து சில மாற்றங்களைக் கொண்டு வந்தான்.

நாட்களும் யாருக்கும் காத்திருக்காமல் ஓடியது, வேலையில் கவனமாக இருந்தாலும் தனது மாமன் மகளுக்கான நேரத்தை கொடுக்க மட்டும் மறக்கவில்லை.

அவர்களின் காதலும் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமாக யாருக்கும் தெரியாமல் இரகசியமாக சந்தித்துக் கொள்வதிலும் போனில் பேசிக் கொள்வதிலும் செழித்து வளர்ந்து கொண்டு இருந்தது.

அப்பொழுதுதான் ஒரு மிகப்பெரிய ஆர்டர் பற்றி தெரிந்து கொண்டவன் இதில் நிச்சயமாக வெற்றி பெற வேண்டும் என்று கடுமையாக உழைத்தவனோ புதிய ரக துணியை உருவாக்க, இதோ பரிசோதனைக்கான நாளும் வந்துவிட்டது.

ஆர்.வி.ஜவுளி நிறுவனத்தில் வழக்கத்திற்கு மாறான ஒரு நிசப்தம் நிலவியது. ஐரோப்பாவின் மிகப்பெரிய ஆடை நிறுவனமான 'லூமினா' அமைப்பின் பிரதிநிதிகள், பாரி தயாரித்த புதிய ரகத் துணிகளைப் பரிசோதிக்க வந்திருந்தனர்.

மகன் மேல் நம்பிக்கை இருந்தாலும் இது தான் அவனது முதல் முயற்சி என்பதால் அது நல்லவிதமாக முடிய வேண்டும் என்று தனது இஷ்ட தெய்வமான முருகனிடம் வேண்டியவர் "பாரி, இவங்க ரொம்ப கறாரானவங்கப்பா... ஒரு சின்ன தப்பு இருந்தாலும் ரிஜெக்ட் பண்ணிடுவாங்க," என்று மகனின் காதில் முணுமுணுத்தார்.

அதைக்கேட்டவனோ வழமைப் போல மென்மையாகச் சிரித்துவிட்டு, "அமைதியா இருங்கப்பா, நம்ம உழைப்பு மேல எனக்கு நம்பிக்கை இருக்கு," என்றான்.

வெளிநாட்டுப் பிரதிநிதி 'ஜார்ஜ்', பாரி வடிவமைத்த அந்த 'ஆர்கானிக் லினன்' துணியைக் கையில் எடுத்துக்கொண்டு
முதலில் அதன் மென்மையை உணர்ந்து பார்த்தார்.

பின்னர் ஒரு லென்ஸ் மூலமாக அந்தத் துணியின் நூல் இழைகளை மிக நெருக்கமாக ஆராய்ந்துவிட்டு அதன் ஓரத்தில் ஒரு துண்டை வெட்டி எடுத்தவர், அதன் நிறம் பிடிமானத்தை டேபிள் மேலும் இருக்கும் கண்ணாடி குவைளையின் உள்ளே இருந்த ரசாயனக் கலவையில் போட்டுச் சோதித்தார்.

அடுத்த பத்து நிமிடங்கள் அந்த அறையில் ஊசி விழும் சத்தம் கூடக் கேட்கும் அளவுக்கு அவ்வளவு அமைதியாக இருந்தது.

பின்னர், பாரியும் தனது லேப்டாப்பில் அந்தத் துணி தயாரிக்கப்பட்ட விதம், அதற்கு பயன்படுத்தப்பட்ட இயற்கைச் சாயங்கள் மற்றும் அதன் தரக் கட்டுப்பாட்டு அறிக்கைகளைப் பற்றி மிகத் தெளிவாக ஒரு பிரசன்டேஷனாகக் காட்டினான்.

அனைத்தையும் கேட்டு முடித்த ஜார்ஜ் தனது கண்ணாடியைக் கழற்றிவிட்டு பாரியைப் பார்த்துச் சிரித்தவர்,
"அற்புதம் பாரி! இந்தியாவிலேயே இவ்வளவு துல்லியமான 'இத்தாலியன் பினிஷ்' கொண்ட துணியை நான் பார்த்ததில்லை. உங்கள் படிப்பும், உங்கள் தந்தையின் அனுபவமும் சேர்ந்து ஒரு மேஜிக் செய்திருக்கிறது. இதோ உங்கள் முதல் ஆர்டர்!" என்றவாறு, பல கோடி ரூபாய் மதிப்புள்ள அந்த ஒப்பந்தப் பத்திரத்தை நீட்டினார்.

ஒரு நிமிடம் பாரிக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை தேங்க்யூ சோ மச் சார் என்றான். மற்ற பேச்சு வார்த்தைகள் முடித்துவிட்டு அவர்கள் சென்ற பிறகும், சேயோன் அப்படியே திகைத்துதான் நின்றார்.

கடந்த சில வருடங்களாக அவர் பார்த்து வந்த அதே பழைய தறிகள், இன்று பாரியின் ஒரு சில நவீன மாற்றங்களால் உலகத்தரம் வாய்ந்த துணிகளை உற்பத்தி செய்திருப்பதை அவரால் நம்ப முடியவில்லை.

அப்பா என்றவாறு மெதுவாக அவர் அருகில் வந்தவன், கையில் இருந்த பைலை நீட்ட,அந்த ஒப்பந்தப் பத்திரத்தைத் தொட்டுப் பார்த்தவர் "தம்பி, நான் இவ்வளவு காலமா துணியை ஒரு கமிட்டியா தான் வித்துட்டு இருந்தேன். ஆனா நீ அதை ஒரு பிராண்டா மாத்திட்ட.

இதில் எவ்வளவு நஷ்டம் வந்தாலும் அதை நம்முடைய வேறு பிசினஸில் என்னால் சம்பாதிக்க முடியும். ஆனால் என் பையனின் முதல் முயற்சி தோல்வியில் முடிந்து விடக்கூடாது என்று என் மனசு பட்டப் பாடு எனக்கு தான் தெரியும். 'நம்ம பையன் வெளிநாடு போய் என்னத்த படிச்சான்?'னு கேட்டவங்களுக்கெல்லாம் இன்னைக்கு உன்னோட இந்த வெற்றிதான் பதில்," என்று கூறி, நெகிழ்ச்சியில் தனது மகனை இறுகக் கட்டிக்கொண்டார்.

செம்புலம் தொடரும்...

 
Top Bottom